உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
5 மதுரை சந்திப்பு...! உச்சிப் பொழுது தாண்டி, பகலவன் மக்களை உணவு கொண்டு சற்றே இளைப்பாறுங்கள் என்று இதமாக இரக்கம் காட்டுகிறான். கலகலவென்று ஒரு கல்யாண கோலாகலத்துடன் அந்த ரயில் நிலையம் முருகேசுவுக்கு இந்த நாட்களில் என்றுமிலாததொரு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் கூட்டுகிறது. சாப்பாடுப் பொட்டலம் விற்பவர்கள், காபி, வடை என்று உண்டு விற்பவர்கள், அந்தச் சொற்களே மணக்கும் போது உண்டி வகைகள் பசியைக் கிண்டி விடாதா? பூக்களின் நறுமணம்; வண்ண வண்ணங்களாலான அறிவிப்பு, விளம்பரங்கள், ஒலி பெருக்கிக் குரல்,... அடுக்கடுக்கான கனி வகைகள்... தனது உள்ளச் சிலிர்ப்பின் பூரிப்புடன் “மீனாட்சி தாயே!” என்று நாவில் உச்சரித்துக் கொண்டு ரயிலடி மேடையில், தங்கள் சாமான்கள் எல்லாம் சரியாக இறக்கியிருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்கிறார்கள். விடியற்காலையில் எழுந்து, மண்டபத்தில் வண்டி பிடித்து இடம் இல்லாமல் நெருக்கிக் கொண்டு தான் வந்திருக்கிறார்கள். ஆனால், பயமில்லாமல் ரயில் வண்டியில், கையில் ஆயிரக்கணக்கில் பணம் வைத்துக் கொண்டு எப்போது அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள்? அதுவும் புதிய ஊர்கள்... பாட்டன் பூட்டன் பேசிப் பெருமூச்செறிந்த தாய் நாட்டு மண்ணின் புதுமைகளைக் கண்கள் விரியப் பார்க்கிறார்கள். “தாத்தா, இனி எப்ப ரயில்ல ஏறுவோம்...” கடைசிப் பெண் சரோஜாவுக்கு முகமெல்லாம் பூரிப்பு. தூத்துக்குடியில் வாங்கிய ஒட்டுப் பொட்டும் ஸ்லைடும் பூரிப்பின் காரணத்தையும் விள்ளுகின்றன. மூவரில் இந்தப் பத்து வயசுப் பெண் தான் கலகலப்பும் கவடறியாத மலர்ச்சியுமாக விளங்குபவள். சுறுசுறுப்பாகக் காலையில் எழுந்ததுமே பல்துலக்கி, தண்ணீர் கொண்டு வந்து, அடுப்புக்குச் சுள்ளி ஒடித்து, பரபரப்பாக எதையேனும் செய்யும் இயல்புடையவள். தனத்தின் இயல்பு அப்படியில்லை. தாயையும் தம்பிகளையும் உயிரோடு எரியப் பார்த்து விட்டாற் போன்ற சோகம் முகத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கிறது. குட்டையான, அகலப் பூப்போட்ட பாவாடையும், நீலச் சட்டையும், தருமமாகக் கிடைத்தவை. ஏறக்குறைய இரு சகோதரிகளும் ஒரே உயரம் தான். எவள் பெரியவள், எவள் சிறியவள் என்று சொல்வதற்கில்லை. கலகலப்பான முக இயல்பு காரணமாக, சரோசாதான் பெரியவளோ என்று நினைக்கும்படி இருக்கிறது. “நாம, ஊருக்குள்ளாற போயி, மீனாச்சிய, தரிசனம் பண்ணிட்டு வருவோம்... சாமானங்கள சத்திரம் எங்கனாலும் விசாரிச்சி வச்சிட்டு போலாம் தாத்தா!...” பாயோடு கட்டிய மூட்டையைத் தூக்கிக் கொள்ளத் தயாராக நிற்கிறாள். முருகேசு சுற்றுமுற்றும் பார்க்கிறான். திக்குத் தெரியாத சந்தடி. மாடிப் படிகளில் ஏறிச் செல்பவர்களும், வாயில்களில் வருபவர்களுமாக இரயில் நிலையம். முருகேசு விசாரித்துக் கொண்டு, வெளிப்பக்கம் பயணிகள் தங்கும் கூடத்துக்கு அவர்களைக் கூட்டி வருகிறான். அங்கே, படுத்த நிலையிலும் உட்கார்ந்த நிலையிலும் பல பயணிகள், மூட்டையும் முடிச்சுமாக இருக்கின்றனர். அவனைப் போன்ற வறியவர்களே அதிகமாக இருக்கின்றனர். இவர்களும் ஒருபுறம் அந்த சாமான்களை வைக்கின்றனர். “தாத்தா, பசியாயிருக்கு, நாம தண்ணி புடிச்சிட்டு வந்து சோறுண்ணலாம்...” என்று சரோசா நிற்கிறாள். உண்மையில் அருகில் ஒரு சிலர் புளிச்சோற்றைப் பிரித்து உண்ணுகின்றனர். “நா... தண்ணி புடிச்சிட்டு வார... அதா குழாய்...” மூட்டையை அவிழ்த்து, ஒரு அலுமினியம் குண்டானை எடுத்துக் கொண்டு அவன் போகையில்... “மாமோ... ந்தா... முருகேசு மாம... அப்பச்சி? முருகேசு மாமா, அதா...” முருகேசு குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்புகிறான். பஞ்சம் பரதேசிகளைப் போல் அந்தக் கூட்டத்தின் இன்னொரு மூலையில், சடயம்மா, அவள் குழந்தைகள்... புருசன் மாமுண்டு... பரமு... பரமுவா அது?... இவர்களை விட்டு வந்து இரண்டு வருசம் தானே ஆயிற்று?... “அம்மானம்...? நீங்க எப்ப வந்திய?...” கூட்டத்தைத் தாண்டி முருகேசுதான் போகிறான். பரமு, தலை முடியெல்லாம் உதிர்ந்து முழு வழுக்கையாக, எலும்புக் கூட்டு உடலில் ஒரு சட்டை துருத்திக் கொண்டு விளங்க, கண்கள் ஒளியிழந்து பள்ளத்தில் தங்க, மூச்சிறைத்துக் கொண்டு... “ஏம்மா? எப்ப வந்திய? உங்கம்மா எங்க...?” “அம்மா போயி வருசமாச்சி...” “ஆ... எங்க வந்திய? எப்ப வந்திய?...” “ஒண்ணும் வாகில்ல மாமா. நீங்க லயத்த வுட்டுப் போனப்பறம் மிச்சம் குழப்பமாயிட்டது. அம்மா சறுக்கி வுழுந்து, மூட்டெலும்பு முறிஞ்சு போச்சி. பொறவு, கானளந்து நாட்டுக்காரங்களுக்குக் குடுக்காவன்னு சொல்ல, நம்மவங்க தடுத்து மிச்சம். குழப்பம், வெட்டுகுத்துண்ணு. பொறவு நாங்க இந்தியா போறம்னு எளுதிக்குடுத்து, போன வருசம் அதா எம்பத்து மூணு வன் செயலுக்கு அப்புறமா இங்க வந்தம். மண்டபத்துல ஒரு மாசம் போல இருந்தம். பொறவு திருச்சிக்கு அனுப்பினாவ. இங்க புதுசா ஃபாக்டரி திறக்குறமின்னு,... தாயகம் திரும்பினவங்களுக்கு வேலை குடுக்கறதுக்காகவேன்னு சொல்லி அனுப்பிச்சாவ. ஆனா, அஞ்சு மாசமாச்சி. இவங்க போயிட்டுப் போயிட்டு வாரதுதான். வூட்ட தென்னம்புள்ளக்கித் தண்ணி ஊத்து, செம தூக்கிட்டுவா, அப்படி இப்படீன்னு ஏதானும் வேலை, மாசத்துல பத்து நா குடுத்திருக்கா. ஆறு ரூவா கூலி. இல்லாட்டி அதிகபட்சம் ஆறு மணி வரய்க்கும் இருந்தா எட்டு ரூவா. நம்மாளு பத்து பேரு அவங்க ஃபக்டரிக்குன்னு சொல்லி அனுப்பிச்சாவ. ரெண்டு மாசம் இப்படி போக்குக் காட்டிட்டு நிப்பாட்டிட்டாவ. நா அங்க இங்க கூலி வேலை செஞ்சே, இந்த மாதிரி பெரிய பட்டணத்துல, எப்படிங்க பொழக்கிறது? நமக்கு ஒரு வெவரமும் புரியல. “அப்பச்சிக்கு ஒண்ணுமே ஏலாம இப்பிடித்தான் எழப்பும், இருமலுமா இருக்காவ. அங்க ஒரு மேஸ்திரி சொன்னாவ, தெலுங்கு தேசப்பக்கம் ஸ்லோன் ஆளுவளை எடுக்காவ, நாளக்கிப் பன்னண்டுக்குக் குறயாம சம்பளம், புழைக்க முடியும்னு... மூணு நாளா இங்க கெடக்கிறம், இவவ போயி இப்பதா விசாரிச்சிட்டுவாரா. கொண்டு வந்த பொட்டு பொடிசு அல்லாம் வித்துத் தின்னாச்சி...” முருகேசு உறைந்து போகிறான். பரமு... பரமுவின் குடும்பம், சொந்த சகோதரனைப் போல் காலம் காலமாகப் பழகிய குடும்பம்... ராமாயி ஒவ்வொரு முறை குறைப் பிள்ளையப் பெற்றுப் படுக்கையில் வீழ்ந்த போதும், அருகிருந்து மருத்துவம் செய்த அவன் பெண்சாதி தேவானை, மூத்த பெண் ருக்கு... குமருவைப் பிள்ளைக்காம்பிராவில விடாமல், இந்த மூத்த பெண் ருக்கு பார்த்துக் கொள்வாள்... ருக்குவுக்கு ஐந்து வயசுதானிருக்கும். ருக்குவுக்குப் பிறகு... முருகன், அடுத்து தங்கம்... தங்கத்துக்கும் அடுத்தவன் சடயம்மா... தங்கத்தை பதுளையில் கட்டிக் கொடுத்தான்... “நீ மட்டும் தான் - உன் குடும்பம் மட்டும்தான் தாயகம் வந்தீங்களா?” “தம்பி மாணிக்கம் குடும்பம் வந்திருக்கு. நூலாபீசில வேலைக்கு எடுத்திருக்கா. கோயில்பட்டில இருக்கு. எல்லாம் கஸ்டந்தா. எத்தினி கஸ்டம்னாலும் இங்க வந்திருக்க வேணாம்னு தோணுது. அங்கேயே பொறந்தும், வளந்தும், இங்க வந்தது தப்புதான்னு தெனமும் அழுவுற. செம தூக்கப் போனாக் கூட, இங்க எங்க பொழப்பில மண்ணப்போட ஏ வந்தியன்னு கேக்கிறா...” “அழுவாத புள்ள... என்ன செய்ய, சீம முச்சூடும் இப்ப பெரட்டப் பெரட்டிட்டிருக்கு...” திரும்பிப் பார்க்கிறான், சரோஜா தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து விட்டாள். முருகேசு, தன் விவரங்களைச் சுருக்கமாகச் சொல்கிறான். வாய் பேசுகிறதே ஒழிய, அவன் மனதில் ஒரு போராட்டம் மூண்டிருக்கிறது. இந்தக் குடும்பத்தினரை இப்படியே கண்டு கொள்ளாமல் அவன் போவதா? நீங்கள் வந்த வழி உங்களுக்கு, நாங்கள் போகும் வழி எங்களுக்கு என்று கண்டு கொள்ளாமல் போகலாமா? சடயம்மாவின் இடுப்பில் இருக்கும் ஒரு வயசுக் குழந்தை மூக்கொழுக அவனையே பார்க்கிறது. அந்தக் குழந்தை அவன் தோட்டம் விட்ட பிறகு பிறந்திருக்கிறது. முந்தின குழந்தை பெண்... நான்கு பிராயம் இருக்கும். பெரியவன் பையன். ஆறு வயசு இருக்கலாம். குழந்தைகள் சோர்ந்து வாயில் விரலைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. “ஏலே, வால... சோறுண்ணலாம். செல்லி...!” என்று பெண்ணையும் கொஞ்சிய வண்ணம் கூட்டி வருகிறான். குண்டானில் நிறையவே சோறு வடித்துப் புளி காய்ச்சிக் கலந்திருக்கிறார்கள். மானாமதுரையில் வசால் வடை வாங்கி வைத்திருந்தார்கள். சுகந்தி சிறுசிறு சருகிலையில் சோற்றை வைத்து, வடையையும் புட்டு வைத்துக் கொடுக்கிறாள். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், முருகேசு மாமுண்டியுடன் பேசிக் கொண்டு நிற்கிறான். இடுப்புக் குழந்தைத் தனக்கும் சோறு வேண்டும் என்று தாவுகிறது. “தா, அதுக்குப் பாலு எதுனாலும் வாங்கி ஊத்தறது தானே?...” அப்பன் பையிலிருந்து ஒரு ரூபாய்த் தாளை எடுத்து நீட்டுகிறான்... “வயித்தால ஊத்துது. சோறொண்ணும் வாணாம்... தே” என்று குழந்தையை அவள் அடக்குகிறாள். “என்னம்மா!... நாங்க இப்ப நீலகிரிப் பக்கம் போறம்... இந்தப் பிள்ளைங்களோட பெரியப்பன் சித்தப்பன் குடும்பமெல்லாம் போயிருக்கு. அங்க நமக்கு தேயிலைத் தோட்டத்தில எதானும் வேலை கெடய்க்கும். தெரிஞ்ச பொழப்பு. மின்னமே, நம்ம மாணிக்கத்தின் மச்சான் குடும்பம் போயி, காயிதம் கூடப் போட்டா. எல்லாம் நம்ம ஊரு மாதிரியே இருக்குன்னு... உனக்குதா தெரியுமே? குமருகூட வந்து, அப்பா போயிடுங்க, இங்கே எழுதிக் குடுத்தா அங்க வேலை குடுப்பாங்கன்னான். நாந்தானே முறச்சுக்கிட்டு வெரட்டி விட்டே? இப்ப கிளம்பிட்டோம். இந்தப் பிள்ளையள அவக கிட்டச் சேர்த்திட்டா, எம்பொறுப்பு வுட்டுது. எனக்கு எங்கேனும் செம தூக்கியோ, எப்படியோ ஒரு நேரம் கஞ்சி குடிச்சிப் பிழைச்சிப்பே... என்னா சொல்றிய?...” இவன் சொற்களில் தொங்கி நிற்கும் ஆசைக்கனி கவர்ச்சியாகத் தான் இருக்கிறது. மொழி புரியும் ஊரிலேயே ஏமாற்றுகிறார்கள். மொழி புரியாத ஊரில், யாரோ சொன்னான் என்று நம்பி எங்கே போய் நிற்பார்கள்? அங்கும் கல் கட்டிட வேலை என்று தான் சொல்கிறார்கள். ஏற்கெனவே ஏழெட்டுக் குடும்பம் எழுதிக் கொடுத்துப் போயிருக்கிறார்கள். அதை நம்பி அவ்வளவு தொலைவு செல்வதற்கும் கூட, வண்டிக் கூலிக்கான முழுப்பணம் இல்லை. சென்னை வரையிலும் டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்ற பின், அங்கேயிருந்து பார்க்க வேண்டும்... “ன்னாங்க, அப்ப நாமும் நீலகிரிப் பக்கமே போயிருவமா?” “அப்பச்சிக்கிட்ட கேளு” என்று கூறுகிறான் கணவன். “யம்மா, உங்கள் இந்த நிலமயில வுட்டுட்டுப் போக எனக்கும் மனசில்ல. தாயா புள்ளயா வாழ்ந்தோம். இப்ப நா இங்க எறங்கறப்ப, மீனாச்சி கோயிலப் பாக்கணுமேன்னு ஆசப்பட்டுக்கிட்டே எறங்கின. இந்த சாமான் சட்டத் தூக்கிட்டு எப்பிடிப் போவ. எங்கிட்டு வைக்கன்னு நினைச்சிட்டே தா வந்தே. மீனாட்சி தா இப்பிடி உங்களக் கொண்டு வுட்டிருக்கா. பேசாம நீங்களும் அங்க வாங்க. எப்பிடியோ பொழச்சிப்போம். பாசை தெரியாத தேசத்தக் காட்டிலும் அது மேலு...” முருகேசு தீர்த்துவிட்டான். பாரத்தின் அழுத்தம் உறைக்கும் நேரமில்லை அது. அவர்களின் கண்காணிப்பில் சாமான்களை வைத்துவிட்டு, வழி கேட்டுக் கொண்டு நடக்கிறார்கள். பெரிய கோயில்... பெரி...ய்ய கோயில்! முருகேசு தலைத்துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு, பெண்களுடன் உள்ளே நுழைகிறான். “மீனாட்சி, தாயே! கும்புடறோம். எங்களுக்கு நல்ல வழி காட்டம்மா!” “பிரிஞ்ச சன மெல்லாம் மோதிட்டிருக்கிறோம்... நல்ல வழி காட்டம்மா?” ஐந்து ரூபாய் செலவழித்து, அருச்சனைத் தட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்கிறான்... அன்று வியாழக்கிழமை. அம்பிகை அதிகமான அலங்கார விசேடமின்றி, ஒற்றை ரோஜா மாலையுடன், திலகம் சுடர் தெறிக்க, அபயக் கரம் நீட்டி அருள் பாலிக்கிறாள். முருகேசுவுக்குத் தோத்திரப் பாடல்கள் ஒன்றும் நினைவு வரவில்லை. ‘தாயே மீனாட்சி, அம்பிகே பரமேஸ்வரி...’ என்று கண்ணீர் மல்கக் கரைகிறான். கன்னத்தில் போட்டுக் கொள்கிறான். பெண்களை விழுந்து கும்பிடச் சொல்கிறான். அருச்சனைத் தட்டைக் கொடுத்து, “எங்க சனங்க க்ஷேமமா இருக்கணும் சாமி! நாங்க லங்கையிலேந்து வந்திருக்கிறோம்” என்று மனம் கரைந்து முறையிடுகிறான். கடுக்கனும் உருத்திராட்சமும் செம்பொன் மேனியுமாக வந்த குருக்கள் இவனை ஒருகணம் நின்று பார்த்துவிட்டு மந்திரங்களை முணமுணத்துக் கொண்டு திரும்புகிறார். கோயிலாவது கோயில்! இராமேஸ்வரம் கோயிலக் காட்டிலும் பெரிய கோயில். இதையெல்லாம் பார்க்காத சீவியம் ஒரு சீவியமா? மனநிறைவுடன் குழந்தைகள் ஆசைப்பட்ட மணிமாலை வளையல்கள் - என்று பத்து ரூபாய்க்குப் பொருள் வாங்குகிறான். சடயம்மாளின் கைக் குழந்தைக்கு இரண்டு ரூபாயில் ஒரு பிளாஸ்டிக் பொம்மை... கோயில் வாசலில் ஓட்டலில் ஏறி இட்டிலி சாப்பிட்டு, மிட்டாயும் பக்கடாவும் வாங்கிக் கொண்டு அவர்கள் இருட்டோடு ஸ்டேஷனுக்குத் திரும்புகிறார்கள். இரவு பத்து மணிக்குத்தான் வண்டியாம். மாமுண்டு கணக்குப்பண்ணி, பயணச் சீட்டு வாங்கி வருகிறான். எல்லோருமாக வண்டி கிளம்பும் வரையிலும் பழைய கதைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். பிறகு வண்டி வருகிறது. முருகேசு, ஒரு குடும்பத்துடன் இன்னொரு குடும்பச் சுமையையும் சுமந்து கொண்டு மலையேறுகிறான். பரமுவை விட அவன் இரண்டொரு வயசு இளையவனாக இருப்பானாக இருக்கும். ஆனால், பரமு, பெரிய சம்சாரியாக இருந்தும், காற்று வாக்கில் அடித்துச் செல்லப்படட்டும் என்ற மாதிரியில் அந்தப் பிள்ளைகளைப் பற்றிய பொறுப்பு எதையும் தீவிரமாக ஏற்கவில்லை. மாசம் முழுதுமாக வேலை செய்து கூலி பெற்றாலும், பெறாவிட்டாலும், அவன் குடித்தான். ஆண்டுக்காண்டு சராசரித் தொழிலாளியைப் போல் குடும்பமும் பெருக்கியிருக்கிறான். பெண் மக்கள் கொழுந்து கிள்ளினார்கள்; அந்த மலைக் காட்டிலேயே... ‘ஆளாய்’ ஒரு தொழிலாளிக்கு வாழ்க்கைப் பட்டார்கள். பிள்ளைகள் புல்லரிந்தார்கள். படிப்படியாக முன்னேறி, கான்வழிக்கவும் கவாத்து வெட்டவும் எல்லாச் செய்நேர்த்திகளையும் செய்ய வல்லவர்களாகத் தோட்டங்களில் ஊறிப் போனார்கள். பரமு இப்போது இந்த அவல நிலைக்காகக் கஷ்டப்படுகிறானா? அவன் பேசவேயில்லை. அவனால் இனி உழைக்க முடியாது. உட்காரச் சொன்னால் உட்காருகிறான். காபியோ சாப்பாடோ கொடுத்தால் சாப்பிடுகிறான். அதிகாலையில் கோயமுத்தூர் சந்திப்பை அடைந்து, பின்னர் மேட்டுப்பாளையம் வண்டியைப் பிடிக்கிறார்கள். உயர்ந்த மலைகள் அருகே வருகின்றன. மேட்டுப்பாளையத்தில் குழாயடியில் முகம் கழுவிக் கொண்டு மீதமிருக்கும் புளிச்சோற்றை எல்லாரும் உண்ணுகிறார்கள். குழந்தைக்கு முருகேசு ரொட்டி வாங்கிக் கொடுக்கிறான். நீலகிரியில் கையிலிருக்கும் விலாசத்தைக் காட்டிச் சரியான பஸ் ஏறத் தெரியாமல், கூனூர் வந்து அலைந்து திரிந்த பின், கோத்தை பஸ்ஸைப் பிடிக்கிறார்கள். சில்லென்று குளிர் வந்து படிகிறது. பெரிய பெரிய மரங்கள்... தேயிலை நிரைகள்... ஆகா... இது எங்கள் இராச்சியம்... இடைஇடையே கண்ணாடிச் சுவர்களும் கூரைகளுமாக ஃபக்டரிகள்... வெட்டுவதும் கிள்ளுவதும், ஃபாட்டரியில் வாட்டுவதும் சலிப்பதும் பிரிப்பதும் உயிரோடு ஊறிப்போன பழகிய காட்சிகள். பஸ் வளைந்து செல்கையில் தேயிலையின் மணம் உள்ளங்களில் நம்பிக்கைப் பால் வார்க்கின்றன... மாலை ஐந்தரை மணிக்குள் இருட்டினாற் போலிருக்கிறது. குறுகிய சாலை. மக்கள் மஃப்ளரும், கோட்டுமாக நிற்கும் இடம் ஒன்றில் பஸ் அவர்களைக் கொண்டு விடுவிக்கிறது. |