உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
8 காலை இருள் பனிமூட்டத்தினால் தான் விலக்கப்படுகிறது. சடயம்மா எப்போது விழித்தாள் என்பது தெரியவில்லை. கட்டிலுள்ள அறையில் கட்டிலில் முருகேசுவும், சடயம்மாவின் பையனும் படுத்திருக்கிறார்கள். கீழே, ஒரு மூலையில் தகப்பன் பரமு; அடுத்து மாமுண்டி, சடயம்மா, அவள் இரு குழந்தைகள்... பெண்கள் மூவரும் சமையலறையை ஒட்டிய தடுப்பில் முடங்குகின்றனர். “...ந்தா, செல்லி... புள்ள தூங்குறா எந்திரிச்சா, அடுப்பில டீத்தண்ணி வச்சிருக்கே, புரைய நனச்சிக்குடு... அல்லாம் பதனமா இருங்க. சண்டபோடாதீங்க...!” அந்தப் பெண்குழந்தைக்கு நான்கு வயசுதானிருக்கும். இது புதிதில்லை. சேலைக் கொங்காட்டுடன் அவள் மெல்ல வெளியேறுகிறாள். மாமுண்டி வெளியே பீடி குடிக்கிறான் போலிருக்கிறது. புகையிலை மணம் வருகிறது. முருகேசுவுக்கு நெஞ்சில், இழையாகச் சோகம் எழும்பி வருகிறது. இங்கே வந்து ஏறக்குறையப் பதினைந்து நாட்களாகி விட்டன. அவனுடைய கைப்பணம் வெகுவாகக் கரைந்து, சுகந்திக்குக் கல்யாணம் செய்து விடவேண்டும் என்ற புள்ளியையும் அழித்து விடும்போல் இருக்கிறது. பெண்கள் மூவரும் ஓரளவு வசதியாக - உழைத்தாலும் நன்றாக உண்டு வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். மரச்சீனிக்கிழங்கைத் தின்று விட்டு இருக்கத் தெரியாதவர்கள். எனவே, அதே வீட்டில் சடயம்மா, தனிச்சமையல் என்று பிரிந்து கொண்டு விட்டாள். ஒரு வாரமாக அவளும் புருஷனும் எங்கெங்கோ அலைந்து திரிந்த பிறகு, நாலைந்து மைலுக்கப்பால், சாலை மராமத்து வேலைக்குப் போகிறார்கள். இருவருக்குமாகப் பத்துப் பன்னிரண்டு கூலி கிடைக்கிறது. அதிலும் குடிக்க எடுத்தது போக மிகுதியில், ஏதோ வாங்கி வருகிறாள் சடயம்மா. இரவு வந்த பின்னரே அவள் சமையல் செய்ய வேண்டி இருக்கிறது; தண்ணீர் மிகப் பெரிய பிரச்னை. பகலெல்லாம் பரமு குந்திக்குந்தி இருமுகிறான். குழந்தைகள் அழுக்கும் கந்தலுமாக அநாதைகள் போல் திரிகின்றன. முருகேசு அவனையுமறியாமல், அருகில் படுத்திருக்கும் பயலை அணைத்துக் கொள்கிறான். சடயம்மா சென்று சிறிது நேரம் சென்ற பின்னரே சரோசா எழுந்து போகிறாள். இந்த வீடுகளுக்குக் கழிப்பறைகள் என்று மறைவிடங்களும் இல்லை. பள்ளத்தில் நெருங்கி இருக்கும் புதர்க்காடுகளே மறைவிடங்கள். இந்தப் புதர்க்காடுகள் மறைவிடங்களாக மட்டும் பயன்படவில்லை, காய்ந்த சுள்ளி, சருகு என்று அடுப்பெரிக்கும் சாதனங்களை நல்குகின்றன. புதர்களில் எங்கேனும் காட்டுமுள் செடிகளில் உண்ணும் பழங்கள் கனிந்திருக்கும். எனவே பிள்ளைகள் அங்கெல்லாம் திரிகிறார்கள்... முருகேசு எழுந்து ஒரு வாளியை எடுத்துக் கொண்டு நீர் கொண்டு வரப் போகிறான். தண்ணீர்த் தொட்டி மேலே கட்டிக் குழாய் போடுவதாக எழுதிப் போனார்களாம்; ஆறு மாசங்களாகிவிட்டனவாம். “அங்கங்க ஆளுகளுக்கு வெட்டணும், எவன் கேக்குறான்?” கோழிகளைத் திறந்து விட்டிருக்கிறார்கள்... ஆங்காங்கு புள்ளி புள்ளியாய் இரை தேட வீட்டு முற்றங்களில், குறுகிய சந்துகளில் உயிர்ப்பூட்டுகின்றன. சாரி சாரியாக வேலைக்குச் செல்லும் ஆண், பெண்கள் ஒற்றைப் பாதைகளில் தென்படுகின்றனர். அருவி நீர் தேனாகக் கொட்டுகிறது. மழைபெய்தால் பெருகி வருமாம். இப்போது பாதாள கங்கையாக இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கே துணி கசக்குபவர்களின் அடிபிடி நெருக்கமாக இருக்கும். வசைகள், ஏச்சுப் பேச்சுக்கள் மேலிருந்து கேட்க எட்டாமல் காடு அமுக்கிக் கொள்ளும். முருகேசு காலைக்கடன் முடித்து, வாளி நீருடன் மேலே வருகையில் சுகந்தி அடுப்புப் புகைய விட்டிருக்கிறாள். குழந்தை அழுது கொண்டிருக்க ஆறிய தேத்தண்ணீர்க் குவளையையும் வருக்கியையும் கையில் வைத்துக் கொண்டு செல்லி, “அழாதே ராசா, கண்ணில்ல...” என்று கெஞ்சுகிறது... பையன் எழுந்து பரிதாபமாக வாயிலில் விரலை வாயில் போட்டுக் கொண்டு பாட்டனின் அருகில் குந்தியிருக்கிறான். வெயில் வரவில்லை. சுகந்தி, அடுப்பைப் புகைய விட்டிருக்கிறாள். நீலப்புகை கூரையின் புகைப்போக்கியில் போவது, அழகாக இருக்கிறது. வீட்டில் நெருப்பு அடுப்புப் புகைவது அழகு; குடிசையானாலும் இந்தப் புகைக் கொடிகள், வயிற்றுத் தீ அவிக்கும் கொடிகள். அநேகமாக உழைப்பாளர் குடில்களில் மாலையில் தான் ஆரவாரங்கள் இருக்கும். இப்போதும் கூட எல்லா வீடுகளிலும் புகை இல்லை. உள்ளே சுகந்தி கோதுமை மாவு பிசைகிறாள். அடுப்பில் தேநீருக்கு நீர் வைத்து இருக்கிறாள், அலுமினியம் வட்டையில். அவள் மாவு பிசைவதை ஆவலுடன் பார்த்துக் கொண்டே செல்லி, “ராசா, கண்ணில்ல” என்று கெஞ்சுகிறது. குழந்தை கையை வீசியபடி, மூக்கு ஒழுக, முன்பல்லில் நனைய அழுகிறது. “ஏட்டி, புள்ளய வெளில தூக்கிட்டுப் போறதில்ல? இங்கயே சுத்திச் சுத்தி வார?” என்று அதட்டிக் கொண்டே மாவை உருட்டி அடிக்கிறாள் சுகந்தி. இந்தப் பெண்ணின் உள் இயல்பு, இவ்வாறு சொத்தைக் கடலையைக் கடித்தாற் போன்று வெளியாகும் என்று முருகேசு எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ராமாயி எவ்வளவு நல்லவள்?... இதே பரமுவின் குழந்தைகள் பாதிநாட்களிலும் வந்து உட்கார்ந்து கொள்ளும். ஒரு கடினமான சொல்லும் வந்தது கிடையாது. முருகேசு வாளியைக் கீழே வைத்துவிட்டு, குழந்தையின் மூக்கைக் கண்களைத் துடைக்கிறான். “ஏம்மா சுகந்தி, மாவு அம்புட்டுதா இருக்கா, நாலு உருண்டை உருட்டி வச்சிருக்கிய? கூடக் கொஞ்சம் போட்டுப் பெனஞ்சி உருட்டு. கோதம்பு, தா கெடக்கிதே! வாங்கியார?...” அவளுக்கு இஷ்டமில்லை என்று முகத்திலேயே புரிகிறது. “நீங்கதா புள்ளிய புள்ளியன்றிய. தாயி புள்ளயானாலும் வா வவுறு வேற. நேத்து, முந்தாநா, நெதம் வாரப்ப, பொரியுருண்டயும் கடலையும் வாங்கிட்டு வந்து அவிய மட்டும் ரூம்புல உக்காந்து திங்கிறா. எங்கக்கு என்ன வாங்கியாந்து குடுக்கிறா?...” இது மிகவும் சின்னத்தனமாகப் படுகிறது. “அரிசி வெறவு, அவியளுக்கு ரேசன் கார்டு இருக்குன்னு மாத்திக்கிட்டு வாங்கிட்டு வந்திட்டா. நமக்கு இன்னும் கார்டில்ல கோதம்பு மாவவச்சிப் பினஞ்சிட்டும் சுட்டுட்டும் திங்கிறம். க்லோ நாலும் அஞ்சிம் குடுத்துத்தான அரிசி வாங்குறம் நாம? ஒங்கக்கு வயிசாப்போச்சி. ஒரு கோளி வாங்கி வச்சிட்டோ, ஆடுவாங்கி வச்சிட்டோ, புழக்கிலாம்னாக் கூட ஒண்ணும் ஏலாது போல இருக்கு... எங்கக்கு ரோட்டு வேலைக்கும் கல்லுவேலைக்கும் போயியும் பழக்கமில்ல... மக்க மனுசா இருக்காவன்னு வந்திட்டம். இப்ப ஏந்தா வந்தமின்னு இருக்கு!...” இத்தனையும் பொருமிவிட்டு முழங்காலில் முகம்கவிய விம்மல் வெடிக்க அழத் தொடங்குகிறாள். “ந்தா... சுகந்தி...? என்னாம்மா இது? நீ ஏ இப்படில்லாம் நெனக்கிற? கூட்டிட்டு வந்தவன் கைவிட்டுடுவனா? உன்ன, நல்லபடியாப் பார்த்துக் கலியாணம் கட்டிக் குடுக்கத்தா போற. அதுக்கு வேணுங்கற காசு வச்சிருக்கே. நேத்துக்கூட, அங்கே விசாரிச்சுட்டிருந்தே, கிறிஸ்தவ கன்யாஸ்தீரிங்க, இப்படிப் புள்ளகளுக்குக் கைத்தொழில்னு சொல்லிக் குடுக்கறாவளாம். நல்லபடியா உங்களை செட்டில் பண்ணுறது ஏம் பொறுப்பு. நீங்க ரோட்டு வேலையும் செய்ய வாணாம், காட்டு வேலைக்கும் போக வாணாம்!” மனசு நோகிறது. “நீங்க எப்பிடிக் கலியாணம் கட்டுவிய? கையில கெடந்த வளவிய போட்டுக்குக் குடுத்துப் போட்டு வந்தம். சர்க்காரு குடுத்த காசை வச்சிட்டு இப்ப குடும்பம் நடக்குது...” அவள், இந்தச் சிறு பெண், தன்னை வேண்டுமென்றே நோகப் பேசுகிறாள். அவனுக்குப் பேத்தியாகும் மூன்றாம் தலைமுறை. இவள் அப்பனையும் தாயையும் அவனுக்குத் தெரியாது. ஆழம் தெரியாமல் காலை விட்டுக் கொண்டானோ? “அம்மா, சுகந்தி, நீ சின்னப் பொண்ணு. மனசில எதும் வச்சுக்கக் கூடாது. நல்லபடியா நடக்கும். நா எப்பாடு பட்டுன்னாலும் காப்பாத்துவேன். சந்தோசமா இருக்கணும் ந்தா...” முழங்காலில் கவிழ்ந்த உச்சியில் இதமாகக் கை வைத்துச் சமாதானம் செய்கிறான். ஆனாலும் அவள் சமாதானமாகவில்லை. மாவை விட்டு விட்டு எழுந்து போகிறாள். சரோசா உட்கார்ந்து ரொட்டியைத் தட்டுகிறாள். முருகேசு குழந்தை கையில் ஒரு சிறு கறுப்பு வெல்லக் கட்டியைக் கொடுத்து சமாதானம் செய்கிறான். அவனே ரொட்டிகளை அடுப்பை ஊதிச் சுட்டு எடுக்கிறான். வறமிளகாயையும் சிறிதளவே இருக்கும் தேங்காய்ச் சில்லையும் வைத்து அறைத்து வைக்கிறாள் சரோசா. வட்டை நீரில் தேத்தூளைப் போட்டிருக்கிறார்கள். குழந்தைகள் மூவருக்கும் அந்தக் கனத்த ரொட்டியைப் புட்டு ஆளுக்கு ஒரு துண்டு கொடுக்கிறான். பிறகு வாயில் பக்கம் கூட்டித் தள்ளிக் கொண்டிருக்கும் சுகந்தியை வந்து கூப்பிடுகிறான். அப்போது, குறுக்கே இறங்கி, தலைக்கட்டின் வண்ணம் தெரிய, பச்சைவேலு வருகிறான். உல்லாசமாகச் சீட்டியடித்துக் கொண்டு வருகிறான். கையில் உள்ள துணிப்பையில் இருந்து ஒரு வாழைச் சருகுப் பொட்டலம் வெளியாகிறது. “ஓ... கருவாடு...” சுகந்தியின் முகம் மலருவதை அவன் கவனிக்கிறான். “எங்கேந்து வாரிய?...” “கோழிக்கோடு...” “வா... வா... உன்ன இப்பதா நனைச்சிட்டேனப்பா...” “அப்ப இத்தினி நாளா நெனக்கவே இல்லியாக்கும்? குன் சோலைப் பக்கம் போனியளா?” முருகேசு சென்று வந்த கதை எல்லாம் விவரிக்கிறான். “...அப்படியா சமாசாரம்?... அப்ப விட்டுத் தள்ளுங்க, மாமா, அங்க தோட்டத்தில இருந்த அதே ஆளுவ, அதே உறமுறை இங்க வந்த பெறகு ரொம்ப மாறிப் போச்சி. நாங்க இதே மாதிரி அப்பமே கயிஷ்டப்பட்டோம். அதுனாலியே நம்மப் போல வாரவங்களுக்கு நாம நம்மாலான ஒத்தாச செய்யணும்னு ஒரு இது நமுக்கு... என்ன சுகந்தி?...” கண்கள் பூப்பூவாய் ஒளி சிதறுகின்றன. அரும்புமீசைக்குக் கீழ் பளிச்சென்ற பல்வரிசை... சுகந்தி நாணத்துடன் அவனுக்கு ரொட்டியும் காரத் துவையலையும் வைக்கிறாள்; தேநீர்... “அத்தக் கொஞ்சம் இதோடு சேத்து நுணுக்கி வையி, நெல்லாயிருக்கும்...” “சுட்டசம்பல் ருசிய நெனச்சுக்கினாருபோல...” என்று அவள் சிணுங்கிச் சிரிக்கிறாள். முறமுறத்த வறட்டு ரொட்டியும் துவையலும் தேநீரும் காலை உணவாக விரிகிறது. “ரேசன் கார்டுக்காக தாசில்தாராபீசில போயி நின்னு, ஃபாரம் வாங்கி, குடுத்திருக்கிற. தம்பி ஒங்கிட்ட ஒண்ணு கேக்கிற தப்பா நினச்சிக்காத...” “என்ன மாமா தப்பு? நீ கலியாணம் கட்டிருக்கியான்னு கேக்குறீங்க இல்ல?...” மீசை மோவாயை வளைத்துக் கடித்துக் கொண்டு நமட்டலாகச் சிரிக்கிறான். சுகந்தி தலையைக் குனிந்து கொண்டு சுவரில் கோலம் இடுகிறாள். அப்பிடியா விசயம் என்று மனசுக்குள் சந்தனம் மணப்பது போல் இருக்கிறது. “இப்ப என்ன சங்கட்டமின்னா, அந்தப் புள்ளயும் ரொம்ப வேண்டிய பொண்ணு. காலக்கொடும அவுங்களுக்கு ஒரு கஷ்டம் - நமக்கும் கஷ்டம்தா. மனிசாளுக்கு மனிசான்னு இருக்கில்ல...? அதா, இந்தப் புள்ளய நெல்லபடியா கலியாணம்னு கட்டி ஒருத்தன் கையில ஒப்படச்சிட்டா அவ பேருக்கு ரெண்டாயிரம் டிராபிட்டு எடுக்காம போட்டு வச்சிருக்கிற. வங்கில ராமேஸ்வரத்தில, என் சொந்தப் பணந்தா மாத்திக் கிட்டே. அது தவிர, ...ஒரு உருப்படியும், சவரன் தாலியும் இருக்கு. நல்ல ரோக்கியமான பய்யனா, பொண்டாட்டிய அடிக்காதவனா உதய்க்காதவனா, நாலுகாசு சம்பாரிச்சிக் கூழுன்னாலும் குடிக்க இன்பமா வச்சிக்கிறவனா இருக்கணும்னு பாக்கேன்...” “மாமா, அந்தக் கவல உங்களுக்கு வாணா. உங்ககிட்ட உஜாரா சில விசயம் சொல்லணும்னு இருக்கிறே. வெளிய வாங்களேன்? அப்படியே பொட்டம்மாளப் பார்த்து வரளாம்?” பரமுவுக்குத் தேத்தண்ணியைச் செல்லி கொண்டு வந்து வைக்கிறது. “அம்மாடி, நா போயிட்டு வார, அல்லாம் பதனமா இரிங்க...” குளிர் குறைந்து வருகிறது. சோகையாக வானில் சூரியன் சிரிக்க முற்படுகிறான். பனிமூட்டம் விலகுகிறது. அவர்கள் இருவரும் நடக்கிறார்கள். “மாமா, அவுசரமாப் போயிட்ட... லாரி லோடாயிட்டதா, நிக்க நேரம் இல்ல. இப்ப, நீங்க நீலகிரி முச்சூடும் சும்மா நம்ம சனம் அம்பதாயிரத்துக்கும் மேல வந்திருக்கா. சர்க்காரே, இங்க மறுவாழ்வுக்கு ஏற்பாடு பண்ணணும்னு சொல்லி மிச்சம் பேருக்கு வேலை குடுத்தாலும் கட்டுபடி யாவல. இப்ப இங்கியே, சர்க்காரோட அனுமதியின் பேரில சில பெரிய மனிசங்க, சிரிலங்கா பினான்ஸ் கார்ப்பரேசன்னு வச்சிருக்கா. அதுல எப்பிடின்னா, இப்ப, வங்கில பணத்தப் போட்டா, நூத்துக்குப் பத்துகூடத் தேர்றதில்ல. இவங்க என்னான்னா, நம்மப்போல இருக்கிறவனுக்கு ஒத்தாசை செய்யணும்னு பணத்தை வச்சி தொழில் பண்ண திட்டம் வச்சிருக்கா. இங்க பழம் எல்லாம் கெடக்கிறது. ஜாம் ஃபாட்டரி, பின்னால, கப்பூரத் தைலம் பண்ற பாட்டரின்னு நிறைய எல்லாம் தொறந்து, வர்ற பொம்புளப் புள்ளியளுக்கு வேலையும் பழக்கிக் குடுக்கத் தோது பண்றா. இப்ப நீங்க ஆயிரம் ஆயிரம்னு கட்டினா உங்க புள்ளியளுக்கு மூணு பேருக்கும் வேலை கிடைக்கும். இப்ப, இவங்க இதாரம்பிச்சி, ஒரு மூணு மாசமா ஜில்லா பூராச் சுத்தி ஆளுகளுக்கு நோட்டிஸ் போட்டு எல்லாம் நாமுந்தி நீமுந்தின்னு கூடலூரு, தேவாலா, முச்சூடும் பணம் கட்டிட்டாவ. இப்ப நமுக்கு எடம் இருக்குதோ என்னமோன்னு கூடத் தெரியல...” “முருகா...!” என்று முருகேசு மனசோடு கூவிக் கொள்கிறான். “அப்ப நம்ம பணம் முதலாயிருக்கும்னு சொல்றியா? வட்டி வாசி வருமா?” “அதென்ன மாமா அப்பிடி சுலுவா கேட்டுட்டிய? இப்ப ஆயிரம் போட்டா வருச முடிவில அது நாலாயிரம் ஆவுது. தொழில்ல போட்டா விருத்தியில்ல?” “அப்ப, இந்த மூவாயிரத்த இப்ப கட்டினா, வருச முடிவில பன்னண்டாயிரம் ஆவுமா?” “ஆமா!... பின்ன? நம்ம சனங்க சும்மா, அந்தப் பக்கத்துல, தாலியக் கூட வித்து ஷேரு வாங்கிட்டா. இது வேலைக்கு வேலை பணத்துக்குப் பணமும் விருத்தியாவுது இல்ல?” “அப்ப...” முருகேசு யோசனை செய்கிறான். “அந்தப் பெண்ணுக்கு ஒரு கல்யாணத்தைக் கட்டிடலாம்னு இருந்தே. பணத்தை முடக்கி, எதுனாலும் தொழில்ல, ஃபாக்டரில வேலைக்குச் சேர்த்துடலாம்னு சொல்ற?” “மாமு, வருசமுடிவில, கலியாணம் கட்டிக்கிறது... உங்கக்கும் ஒரு வூடுன்னு ஊருச்சிதமாவணும் இல்ல...?” “அதும் சரிதா. சடயம்மா, இப்ப அஞ்சு நாளா எங்கியோ புருசன்கூட, தார்ச்சட்டி சொமக்குற ரோட்டு வேலைக்குப் போறா. நமக்கு அத்தயும் வுட முடியல. இந்தப் புள்ளகள ஒரு மாதுரி சமாளிச்சிட்டா, நா எங்கியோ கூலி வேலை செஞ்சி புழைச்சிக்குவே...” “அப்ப, இப்ப வாங்க, பொட்டம்மா வூட்டுக்கு மேல நா அந்த ஏசண்டு இருக்கா. விசாரிப்பம்...” துன்பமும் நெருக்கடியும் வரும்போதெல்லாம் முருகன் கை கொடுத்துக் காப்பாத்துகிறான் என்று நெஞ்சம் கசிகிறது. ஏறி இறங்கி, மேலே கண்ணாடிக்கதவில் சூரிய வெளிச்சம் பட்டுப் பிரதிபலிக்கும் ஒளியை நம்பிக்கையாக எண்ணி உற்சாக மடைகிறாள். வாசலில் இங்கிலீசு எழுத்துக்களில் பலகை தொங்குகிறது. “அதா போட்டிருக்கு, பாருங்க. சிரிலங்கா பினான்ஸ்னு... இவரு பேரு பழனியப்பா... இவுருதா ஏசண்டு இங்கத்திக்கு...” என்று பச்சைவேலு விளக்குகிறான். வாசல் மணியை அமுக்குகிறான் அவன். சற்றைக்கெல்லாம் கதவு திறக்கப்படுகிறது. ஓர் அம்மாள் கதவைத் திறந்துவிட்டு, சகஜமான தன்மையுடன், ‘இருங்க’ என்று சொல்வது போல் தலையசைத்தவாறு உள்ளே செல்கிறாள். சற்றைக்கெல்லாம் தலையில் சுற்றிய மஃப்ளரும், ஸ்வெட்டருமாகக் கண்ணாடி போட்டுக் கொண்டு ஒருவர் வருகிறார். “வணக்கம் சார்... இவரு நம்ம ஆளு... வந்து பத்து நாளாச்சி. அப்பவே வந்து கண்டுக்கணும்னு... லோடு கொண்டு போயிட்டே...” “உள்ளே வாங்க...” முன்னறை. கீழே கயிற்றுப் பாய் பரப்பியிருக்கிறது. துரை பங்களாவைப் போல் சோபா செட்டு. நாற்காலிகள்... மூலையில் ஒரு டைப்ரைட்டர் மேசை. மிசின் மூடப்பட்டிருக்கிறது. சுவரில் தேயிலைத் தோட்டத்துப் பெண்களின் வண்ணப்படம். கொங்காடும் கூடையுமாக... பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால் அந்த அழகுக்குப் பின்னால் உள்ள ‘நொம்பரங்’களைப் பற்றி இவர்களுக்குத் தெரியுமா? இதுபோல் ஒரு வீடு வைத்துக் கொள்வதைப் பற்றிக் கனவிலும் நினைக்க முடியுமா? “அநேகமாக இப்ப எல்லாம் ‘குளோஸ்’ ஆகிட்டிருக்கிற சமயம். ஃபாக்டரிக்கு மேலேந்து இடமெல்லாம் பார்த்து எக்ஸ்பர்ட்ஸ் பிளானெல்லாம் அப்ரூவ் பண்ணியாச்சு. ஆச்சு, இப்ப பிப்ரவரியா? அதாம் போயிட்டுதே? ஏப்ரல் ஒண்ணாந்தேதி துவக்க விழாவுக்கு, மினிஸ்டரைக் கூப்பிட்டிருக்கிறோம்...” “என்ன ஃபாக்டரிங்க வருது?” “இப்ப, நிட்டட் கார்மென்ட்ஸ் - கம்பளிவுல்லன் நூல் உடுப்பு - ஜாம் ஃபாக்டரி ரெண்டும் வருது. ப்ரூக்லின் எஸ்டேட் இல்ல, அத்தத் தொட்டு வருது... எடம்... இப்ப... அப்ளிகேசன் ஃபார்ம் வேணுமா?” “ஆமாங்க...” “...வேலை... பொம்பிளப்புள்ளங்க, மூணுபேரும்...” அவர் உள்ளே செல்ல அடி வைத்தவர் திரும்புகிறார். “இந்த ஸ்கீமே, பெண் பிள்ளைகளுக்குக் கௌரவமா வேலை குடுக்கணும்னு தா. அவங்க அப்படி இப்படி வச்ச பணத்தைத் தொழிலில் முடக்கணும்னு, டெல்லி வரையிலும் போயி, இத்த ஆரம்பிக்கப் பாடுபட்டிருக்கு. இதுவரைக்கும் ஒரு பதினையாயிரம் பேர் இதுல பங்கு வாங்கி, வேலைக்கும் ஒரு அஞ்சாயிரம் பேர் ரிஜிஸ்தர் பண்ணிட்டிருக்காங்க...” “அப்ப, பங்கு வாங்கினவங்க அல்லாருக்கும் வேலை கிடைக்காதா?” “அதெப்படிங்க? அஞ்சாயிரம் வாங்கினால், நிச்சயம் வேலைக்குச் சேர்த்துக் கொள்வோம். பணத்துக்கு வட்டி, ரிடர்ன் அது பாட்டில வரும். ஆயிரம் ஆயிரம்னு... ஒரு லிஸ்ட் வச்சிட்டிருக்கிறோம். இது எக்ஸ்பாண்ட் ஆகிற தொழில். இன்னும் வெவ்வேறு தொழில் தொடங்க ஸ்கீம் இருக்கு. அப்ப நிறையப் பேருக்கு வேலையும் பிழைப்பும் குடுப்பதுதான் எங்க லட்சியம்.” அவர் மேலே மாட்டியிருக்கும் புகைப்படம் ஒன்றைக் கழற்றிக் காட்டுகிறார். “இத பாருங்க, ஜனவரில தான் துவக்கவிழா. மினிஸ்டர், எம்.எல்.ஏ எல்லாரும் வந்து ஆரம்பிச்சது. எதிர்பார்த்ததுக்கு மேல ஜனங்க ஆர்வம் காட்டுகிறதால தான், இங்கயும் நாலு இடத்தில ஃபாக்டரி திறக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்... பாங்க்ல பாருங்க, உங்களுக்கு பத்து சதம் வட்டி கிடச்சா பெரிசு. இங்க, இரு நூறு சதத்துக்கே விருத்தி யாவுது...” முருகேசு, பிரமித்துப் போகிறான். நூறு நூறாக விருத்தியாக்கிக் கொண்டு, பணம் குட்டி போட, சொகுசாக வாழ்க்கையை அநுபவிக்கும் தந்திரம் இதுதானா? “இப்ப நா மூவாயிரத்தை இதுல போட்டு வச்சா, மூணு புள்ளகளுக்கு வேலை கிடைக்குமாங்க? ஒரு பொண்ணு பதினெட்டு, இன்னொண்ணு பன்னண்டு, பின்ன பத்து வயசுப்புள்ள... கைவேலை எதுனாலும் செய்யும்...” “ஒருத்தருக்கு நிச்சயமாகக் கொடுக்கிறோம். நிட்டட் கார்மன்ட்ஸ்னா, பெண்பிள்ளைகள் சுலபமாக் கத்துக்கிடலாம். அது பிரச்னையில்ல... அப்ப... பாரம்... தரட்டுமா?...” பசுமையான காட்சிகள் எதிர்காலக் கனவுகளை நிறைக்கின்றன. ஃபாரத்தை அவரே படித்துக் காட்டுகிறார். இலங்கையில் இருந்த இடம், தொழில், வந்த தேதி, இவன் அப்பா பெயர், தாத்தா பெயர், இப்போது இருக்கும் இடம், வேலைக்கு இருக்கும் பெண்களின் விவரங்கள், எல்லாமே எழுதிக் கொள்கிறார். அவனே மை தோய்த்துக் கட்டை விரலைப் பதிக்கிறான். வங்கி டிராஃப்டாக இருந்த மூவாயிரமும், மூன்றாம் பேர் அறியாமல் ஒரே வாரத்தில் பச்சைவேலின் உதவியுடன் கைமாறிப் போகிறது. |