உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
1
ரோதை உருண்டு வர, ரத்தம் தெறிச்சுவர, பாதையெல்லாம் செங்குழம்பு, பதிஞ்ச அடி செம்பருத்தி... "அஞ்சலை! அம்மாவும் வந்துடட்டும், சித்த நில்லு!" மணிக்கே செருப்பில்லாத கால்களை அறுவடையான நிலத்தில் வைத்து நடப்பது கடினமாக இருக்கிறது. அவளை விட முதிர்ந்த தாய் இன்னும் தானே சிரமப்படுவாள்? தலையில் கம்பளி சுற்றப்பட்ட பிரம்புப் பெட்டியை வைத்துக் கொண்டு குடியானவப் பெண் அஞ்சலை, வரப்பிலேறி நிற்கிறாள். "செருப்புப் போட்டுக் கொண்டால் என்ன? கதிர்கள் அறுத்த பின்னான வேர்முனைகள் குச்சி குச்சியாகக் காலைக் குத்துகின்றன. கல்லும் முள்ளும் வேறு பதம் பார்க்க...!" மணி மனதோடு முணமுணத்துக் கொண்டு, அம்மாவுக்காக நடுவில் நிற்கிறாள். "ஏம்மா? செருப்புப் போட்டுண்டு நடந்தா என்ன ஆயிடும்?" "என்ன ஆயிடும்? என்னமோ வச்சிருக்கே! இந்த பிராமண ஜாதில பொம்மணாட்டி செருப்புப் போட்டுக்கப் படாது. அதுவும் வீணாப் போனவா போட்டுக்கலாமாம்மா?" மணி பேசவில்லை. நாகப்பட்டினத்துப் பெரிய வக்கீலின் மனைவியாகப் பத்து வருஷங்களுக்குக் கொடி கட்டிப் பறந்த வாழ்க்கையில் செருப்பு மட்டும் இல்லை; வெள்ளைக்காரி வந்து 'இங்கிலீஷ்' கற்றுக் கொடுத்ததும், 'கான்வஸ்' 'ஷூ' போட்டுக் கொண்டு உலாவியதும் பொருத்தமாக இருந்தன. இப்போதோ, இவள் வாழ்விழந்து மூலையில் முடக்கப்பட்டவள். முடியிழந்த தலையும், வெள்ளைச் சேலையும் சனாதனத்தின் பரிமாணங்களில் அவளை மேவியிருக்கின்றன. "ஏம்மா? செருப்புப் போட்டுண்டா என்ன ஆயிடப் போறது? ஆமாம்... சித்தாகிட்டச் சொல்லி உனக்கும் எனக்குமா ரெண்டு ஜோடி செருப்புத் தச்சுத் தரச் சொல்றேன்..." "நீ போட்டுக்கலாம் அம்மா, விடிய விடிய இருபத்தேழு வயசாகல. அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போயாச்சு. எனக்கென்னம்மா! மலை போல புள்ளைய முழுங்கிட்டு ராஜாத்தி போல பொண்ணும் இப்படிப் போனப்புறம், கல்லும் முள்ளும் குத்தினா என்ன?..." என்று அந்த மூதாட்டி கண்ணீரை விழுங்கிக் கொள்கிறாள். குடியானவப் பெண் அஞ்சலைக்கு இந்த நடை ஒரு பொருட்டா? வயலும் வரப்பும், முள்ளும் கல்லும், களியும் சேறும் அவளுக்கு வாழ்வாகப் பழகியவை. மணலூரில் இருந்து செல்லும் இந்தக் குறுக்கு வழி, அடுத்த கிராமமான ஆந்தக்குடியைச் சென்றடைகிறது. வைகாசிக் கடைசி நாட்கள். குடமுருட்டிக் கால்வாயில் தண்ணீர் இன்னும் வரவில்லை. சாரல் காற்றும் தூற்றலும் விழுந்து, தண்ணீர் வந்து விட்டால் இந்த விளை நிலங்களில் உழவு, நடவு என்று கலகலப்பு களை கட்டி விடும். பகலுணவு முடிந்த பிற்பகல் நேரம். வெயிலின் கடுமை இப்போதுதான் அதிகமாக உறைப்பது போல் இருக்கிறது. மணி கையில் மடித்து வைத்திருக்கும் சிறு துண்டினால் முகத்தைத் துடைத்தாற் போல் ஒத்திக் கொள்கிறாள். நெற்றியில் பட்டையான 'விபூதி'த் தடம் அழிந்து, நீண்ட பச்சைக்கோடு பற்றிய உணர்வோடு நடக்கிறாள். வெள்ளை வெளேரென்ற ஒரு சிவப்பு நிறம் கொண்டவள். ஒன்பது வயசுப் பிராயத்தில், சோழியும் பாண்டியும் ஆடிக்கொண்டு கள்ளங்கவடு பாயாச் சிரிப்புடன் வளைய வந்த சிறுமியை, அத்தைதான் 'கல்யாணம்' என்று சொல்லி மனதில் குழப்பத்தை ஏற்றி வைத்தாள். அவளுக்குத்தான் 'நாகப்பட்டினம் வக்கீல்' ஏதோ புக்ககத்து உறவு. "மணியின் நிறத்துக்கும் அழகுக்கும் சமத்துக்கும் ஏத்த இடம். வக்கீல்னு சொன்னாப் போருமா? முனிசிபல் சேர்மன் வேற. வெளிப் பாளையத்தில, சுயம்பு அய்யர் பங்களாவை வாங்கிப் போட்டிருக்கான். அதென்ன விமரிசை! அரமணை தோத்துப் போகும்! கோச் வண்டியென்ன, ஆள் அம்பு, சமையக்காரன்னு, படையென்ன! அந்த இடத்துக்கு மணிதான் ஆளப் போகணும்..." என்றாள். "ஏண்டிம்மா? என்ன இருந்தாலும் இளையாளில்லையோ?" அம்மா சொல்லாமலில்லை. "இளையாள்னா என்ன கசக்கிறதா? அந்தச் சொத்துக்கும் சுகத்துக்கும் ஈடேது? அவனுக்கு விடிய விடிய முப்பத்தஞ்சு வயசாகல. இது ஒரு வயசா? ரெண்டு பிள்ளை. பொண்ணு சின்னது. அதைப்பத்தி இவளுக்கென்ன? நம் குழந்தைக்கு ராஜ யோகம்னா, ராஜயோகமான இடம். தங்கமும், வயிரமுமா இழைச்சுடுவன். நீங்க கல்யாணம் பண்ணிக் குடுக்கலன்னா, அவன் தூக்கிண்டு போய்க் கல்யாணம் பண்ணிண்டுடுவன்!" அப்போது இந்தப் பேச்சுக்களின் பொருள் ஏதும் விளங்காத பருவம். இருபது வயசுக்கு மேல் வித்தியாசம் உள்ள ஒருவருக்கு, நிலபுலன் என்று செல்வாக்காய் இருந்த ஒரு 'மிராசு'க் குடும்பத்தில் இரண்டாம் பெண்ணாய்ப் பிறந்த மணி வாழ்க்கைப்பட்டாள். பெண் என்பவள் ஓர் ஆணின் சொத்து சுகங்கள், பதவி, போகங்கள் ஆகிய செல்வாக்குகளில் அடங்கிய, அவனுடைய 'சுக ஜீவனத்'தை மேன்மைப்படுத்தும் ஒரு சின்னம். இப்போது கல்லும் முள்ளும் குத்தும் காய்ந்த வயலில் நடக்கையில் மணி நினைத்துப் பார்க்கிறாள். அவள் தந்தை என்ன செய்வார்? மூன்று மனைவிகளைக் கொண்டார். முதல் தாரம் இறந்து போனாள். இரண்டாம் மனைவியும் அவள் பெண் குழந்தையும் இருக்கையிலேயே இவள் தாயைக் கட்டினார். அம்மா... இவளுக்கு என்ன வாழ்க்கைச் சுகம் இருந்தது? மூன்று பிள்ளைகளையும் நான்கு பெண்களையும் பெற்றிருக்கிறாள். தலைப்பிள்ளை தங்கவில்லை. அடுத்தவள் குஞ்சம்மாள். மணி மூன்றாமவள். கிளி நான்காவது பெண். மதுரையில் பணக்காரக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். ஐந்தாவதுதான் தம்பி வெங்குசாமி. துரையப்பன் என்பது சொல்லிக் கூப்பிடும் பெயர். அவன் சென்னையில் வக்கீலாக இருக்கிறான். அடுத்த தம்பிதான் கல்யாணம் பண்ணிச் சில வருஷங்களில் அம்மை போட்டுக் குளிர்ந்து போனான். கடைக்குட்டி மோகம் சிமிளி கிராமத்தில் இருக்கிறாள். அந்த மாப்பிள்ளைக்கும் நிலம் நீச்சென்று கிராம வாழ்க்கைதான். இவர்களுக்குப் பூர்வீகம், அகரம் குளப்பாடு கிராமம். இவளைக் கல்யாணம் செய்து கொடுத்ததும், அந்தக் கிராமத்தை விட்டுப் பெயர்ந்து, மணலூருக்கு வந்தார் தந்தை. இங்கே கிராமம் முழுவதற்கும் உள்ளே ஒரே பிராமணக் குடும்பம் இவர்களுடையதுதான். குளப்பாட்டை விட்டு ஏன் பெயர்ந்து வந்தார்? அக்கிரகாரமாக வாழ்ந்த பின் இங்கே தனிமைப்பட்டு நிற்க வந்த காரணம் என்ன? 'சுகஜீவனம்' என்ற பெருமைக்குள் மூழ்கி, திண்ணையில் சீட்டாடிக் கொண்டு வெற்றிலை புகையிலை, கும்பகோணம் சீவலுடன் தாசிகள் சமாசாரங்கள், அவர்களைச் சார்ந்த சங்கீத, நாட்டியப் பெருமைகள் என்று பேசிக் கொண்டு பொழுதைக் கழிக்கும் வாழ்க்கையில் குன்றான செல்வமும் குறையாமலிருக்குமா...? அங்கே இருக்கும் நிலங்களில் மண்ணடித்துப் போக, தரிசாகப் போட்டுவிட்டு, இந்தக் கால்வாய்ப் பாசன நில விளைவை நம்பிக் குடியேற வந்தார். இங்கும் பன்னிரண்டு வேலி நிலம் அதற்கு இதற்கு என்று பிய்ந்த பின், இப்போது பாதியாகக் குறுகியிருக்கிறது. அவரும் இறந்து பதினேழாண்டுகளாகிவிட்டன. அம்மாவுக்கு காலில் முள் குத்திவிட்டது போலும்! "மணி... இதைச் சித்த எடுத்துடும்மா?..." காய்ந்து கிடக்கும் வரப்பில் உட்கார வைத்து, மணி பக்குவமாக, தைத்திருக்கும் நெருஞ்சி முள்ளை எடுக்கிறாள். "இதுக்குத்தான் அந்த ராமசாமிய சித்த வண்டியக் கட்டிண்டு வாடான்னேன். எதயோ சொல்லிட்டுப் போயிட்டான்." "இதோ எட்டிப் புடிக்கிறாப்பல இருக்கிற ஊருக்குச் சுத்தியடிச்சிண்டு வண்டிகட்டச் சோம்பல் அவனுக்கு!..." மணி நினைத்துக் கொள்கிறாள். சுபத்திரை தேர் ஓட்டினாளாம்; கைகேயி இதற்காகவே தசரதன் கிட்ட வரம் கேட்டாள்... ஏன், ராமசாமியையும் வீராசாமியையும் எதிர்பார்க்க வேண்டும்? பசுமாட்டைக் கட்டிக் கறக்கிறவளுக்குக் காளை மாடுகளை ஓட்ட முடியாதோ? ஆந்தக்குடி மணலூரைப் போன்ற ஊரில்லை. அக்கிரகாரம் முழுவதும் இவர்களுக்குத் தொட்டுத் தொட்டு உறவு முறைதான். மணியின் தந்தை வழித் தாயாதி பங்காளிகள், பெண்கள் பிள்ளைகள் என்று உறவுகள். கல்யாணம், கிரகப்பிரவேசம், வளைகாப்பு, சீமந்தம், ஆண்டு நிறைவு, முதியவர்கள் விரதங்கள், கோயில் உற்சவம், கதாகாலட்சேபம் என்று உறவு கூடி மகிழ்ந்து கொண்டாடப் பல சந்தர்ப்பங்கள். அப்படி ஒரு புதிய மருமகள் பிள்ளை பெற்று வந்திருப்பதைச் சாக்காகக் கொண்டு தாயும் மகளும் வருகிறார்கள். தெருக்கோடிக் கோயிலில் ஒரு புகழ் பெற்ற பாகவதர் சப்தாஹம் சொல்லுகிறாராம். துருவ சரித்திரம் அன்று சொல்லப் போகிறாராம். அஞ்சலை கிராமத்தின் எல்லைக்குள் நுழைந்து அக்கிரகாரக் கோடியில் நிற்கிறாள். இங்கு மணி, கம்பளி சுற்றிய பூசைப் பெட்டியைப் பெற்றுக் கொள்கிறாள். பெட்டிக்குள் லிங்கங்கள், சாளக்கிராம வடிவங்கள் இருக்கின்றன. பிரம்புப் பெட்டிக்கு மேல் குடியானவப் பெண்ணின் சாதித் தீட்டுப் பற்றாமல் இருக்கக் கம்பளித் துண்டு சுற்றியிருக்கிறாள். இந்தத் தெய்வச் சின்னங்கள் வழிவழியாக மூதாதையர் காலத்திலிருந்து வரும் சொத்து. இவளுடைய தந்தை இறந்த பின்னர், யாருமே அவற்றைப் பூசை செய்வதற்கில்லாமல் பெட்டிக்குள் கிடந்தன. அம்மா, அலமாரியில் விளக்கேற்றி வைத்து, நிவேதனம் என்று அன்னமும், பருப்பும் வைத்துக் கைகாட்டிக் கொண்டிருந்தாள். மணி, கைம்மைக் கோலம் எய்தி, இந்த வீட்டுக்கு வந்ததும், இந்தப் பூசனையை மிகவும் சிரத்தை கொண்டு செய்யலானாள். சிவபூசை நியமம், ஒருநாள் கூடத் தவறாது. எனவே, இவள் இரண்டு நாட்கள் உறவினர் கலகலப்பில் இருந்து, சப்தாஹ உபன்யாசம் கேட்டு மகிழ வரும்போது, அந்தப் பெட்டியும் கூட வருகிறது. "நீ போம்மா, அஞ்சலை! ராத்திரி தோட்டத்துக் கதவைச் சாத்தி வை. மாட்டுக்கு வைக்கோல் போட மறக்காதே!" வயசுப் பெண்ணான அஞ்சலை, சின்னானின் மகள். பக்கத்தில் பஞ்சாண்டார் கோயிலில்தான் வாழ்க்கைப் பட்டிருக்கிறாள். அம்மாளின் சாமியைப் பக்தியுடன் தூக்கி வந்த பெருமை மின்ன அவள் திரும்பிச் செல்கிறாள். தெருவில் வெயில் இறங்கும் ஆசுவாசம். கீற்றுவரித் தட்டி கட்டிய திண்ணை ஒன்றில் இருந்து சீட்டாட்ட அரவங்கள் கேட்கின்றன. சிறுவர்கள் சிலர் வெயிலாவது இன்னொன்றாவது என்று கிட்டிப்புள் ஆடிக் கொண்டிருக்கின்றனர். வாயிலில் ஆரத்தி கொட்டிய சிவப்புத் தடம் தெரியும் வீட்டுக்குள் இவர்கள் நுழைகிறார்கள். திண்ணையில் யாரோ இருவர், உண்ட மயக்கமாகப் படுத்து உறங்குகிறார்கள். ஒரு முதியவர் கை விசிறியைச் சுழற்றிக் கொண்டிருக்கிறார். "வாம்மா, மணி! வாங்கோ மன்னி! காலம வருவேள்ன்னிருந்தேன்..." "வண்டி கட்டிண்டு வரதுக்காகக் காத்துண்டிருந்தோம். அவன் நேத்தே போனான், கோவில் திருவிழான்னு... அம்மாக்குத்தான் சிரமம்..." மணி உள்ளே சென்று, சுவாமி பெட்டியைச் சித்தியிடம் கொடுத்து விட்டு, முற்றத்தில் நின்று கால்களைக் கழுவிக் கொள்கிறாள். வாசலில் பெரியவர் பேசும் குரல் கேட்கிறது. "நாகப்பட்டணம் வக்கீலுக்குக் குடுத்திருந்தாளே, அவதானே இவ? வாலாம்பாளில்லையோ இவ பேர்?" "ஆமாமாம். வாலாம்பான்னு யாருக்குமே பேர் தெரியாது. மணியாட்டமா இருக்கான்னு அப்படியே கூப்பிட்டுக் கூப்பிட்டு மணின்னு பேர் நிலச்சுப் போச்சு!" "ஆமாம், இவா திருவாலூர் நவக்ரஹத் தெருவில் ஜாகை வச்சிண்டிருக்கலியோ? பெரியவள் அகமுடையான் தானே காங்கிரஸ் காங்கிரஸ்னு கதர் கட்டிண்டு, அங்கே இங்கெல்லாம் போறவன்?" "ஆமாம். அவா புள்ளையைப் படிக்கவச்சிண்டு, அதுக்காகத்தான் ஜாகை போட்டிருந்தா. அவன் திருவாலூர் படிப்பு முடிச்சு டாக்டருக்குப் படிக்கப் போயிட்டான். அந்த ஜாகையைக் கலைச்சிட்டு இங்க வந்து மூணு வருஷமாச்சு..." "இவளக் கல்யாணத்தும்போது பாத்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. பத்து வயசு இருக்குமா, அப்ப?... அப்பவே, கல்லிழைச்ச வங்கியும் ஒட்டியானமும் போட்டான்னு சொன்னா. அப்புறம் நாகப்பட்டணத்தில, இவர் மூத்தா பொண் குப்புக்குக் கல்யாணம் பண்ணாளே? அடேயப்பா! பங்களா எத்தனை பெரிசு? வெள்ளக்காராளைக் காட்டிலும் அவனுக்கு அப்படி ஒரு கீர்த்தி, செல்வாக்கு. அவா அகத்தோட இருந்து, ஒரு மாசம் எங்க மாமா... ஓமம் பண்ணிருக்கார். நானும் போவேன். அப்பவும் இவளப் பாத்திருக்கேன். வயிரமா இழச்சிருந்தார். காதுத்தோடு ப்ளூஜாகர் கன்னத்திலே டாலடிக்கும். லஸ்தர் குளோப் விளக்குகளும், அந்த பீரோக்களும், அலமாரிகளும், கண்ணாடிகளும்... என்னமோ, குடுத்து வைக்கல... இப்ப... அவர் மூத்தா பிள்ளைகள்... போக்குவரத்தெல்லாம்... இருக்கோ?" "எரஞ்சு பேசாதேயும்? இவளே ஒண்ணும் வேண்டாம்னு அத்தனையும் கழட்டி எறிஞ்சிட்டுத்தான் வந்தா... என்னமோ அப்படி வரப்ப கூட ஸேஃப் சாவி இவகிட்டத் தங்கிடுத்தாம் அதையும் குஞ்சம்மா அகமுடையான் விசுவநாதன் கிட்டக்குடுத்து விட்டெறிஞ்சிட்டு வரச் சொன்னாளாம். அவன் போய் ஏதோ பேசி ஒரு எட்டோ பத்தோ இவளுக்குன்னு கேட்டு வாங்கினாம் போல இருக்கு. அதுக்கும் கூட அவளுக்கு இஷ்டமில்ல. அத்தனைக்குத் தன்மானம்... மான் ஜாதி!" மணி மேலும் கேட்கப் பிடிக்காமல் சரக்கென்று பின் கட்டுக்குச் செல்கிறாள். பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|