உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
3 மணியைக் கேட்பவளாக வைத்துக் கொண்டு அத்தை, பேசிக் கொண்டு போகிறாள். "பாவம், நேத்திக்குத் தைலாம்பா விழுந்தடிச்சிண்டு போயிருக்கா. அவதான் என்ன பண்ணுவ? ஏதோ கல்யாணம் பண்ணிக்குடுத்து வேண சீரும் செனத்தியும் பண்ணினா. இது, அவன் கூட்டாப் போகாம திரும்பிண்டு முரண்டும் புடிவாதமுமா இருந்தா என்ன பண்ணுவ? மூணுதரம் கூட்டிண்டு வந்து புத்தி சொல்லி, அனுப்பிச்சா. ஆனா, பெரியவாளைப் பார்த்து தீர்த்தம் வாங்கிண்டு வரலாம்னா வரவேமாட்டேன்னுத்து. இருளடஞ்சாப்பல ஒரு கோலம். முட்டக்குத்திண்டு மூஞ்சிய வச்சிண்டு உக்காந்திருக்கும். காத்து கருப்புன்னு தோஷ சாந்தி பண்ணினா. நாலு வருஷமாச்சு. அவன் தான் என்ன பண்ணுவன்?... 'பீமசே'னனாட்டம் இருப்பன். போய் இன்னொண்ணு பண்ணிண்டு வந்துட்டான். பதினாறு வயசு. தெரண்ட பொண். வச்ச பாரம் தாங்கற ஆகிருதி. யாரோ ஜோசியனாம் அவன் பொண். மதுரையிலேந்து பண்ணிண்டு வந்துட்டான். வந்த ஒடனே வயித்தில வந்தாச்சு. இவ அலறிப்புடச்சிண்டு இதை எப்படியோ சமாளிச்சு, பெரியவாகிட்ட கூட்டிண்டு போயி, கும்மாணத்துல, தீர்த்தம் வாங்கிக் குடுத்தா. அவர் ஆசீர்வாதம் பண்ணிக் குங்குமம் குடுத்தாராம். அவன் நல்லவன். கொண்டு விடுங்கோ, வச்சுக்கறேன்னு சொன்னான்னு... திரட்டுப்பால் காச்சிண்டு, தேங்குழல் புழிஞ்சிண்டு பொண்ணையும் ஆயிரம் புத்திமதி சொல்லிக் கூட்டிண்டு போய் பட்டணத்தில விட்டுட்டு வந்தா. பத்து நாத்தான் ஆச்சாம். தந்தி வந்திருக்கு. ஏதோ கோளாறு, அம்மா புறப்பட்டுப் போலான்னு புள்ளை மன்னார்குடிலேந்து கூப்பிட வந்துடுத்து. அப்படியே கைக்காரியத்தைப் போட்டுட்டு ஓடினா..." இந்தக் கதையின் நாயகியான பெண் யாரோ, மணிக்குத் தெரியாது. உறவுத் தொடர்புகளில், ஏழை, இல்லாமை, அண்டியது என்று எத்தனையோ வகை. அதில் தைலாம்பா ஒரு வகை. அடுப்படியில் சமைப்பாள். மடிப்புடவை உலர்த்தி எடுப்பாள். பரிமாறுவாள். புருஷன் தள்ளி வைத்த வகை. மஞ்சளும் குங்குமமும் உண்டு. அதனால் வாழமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பெண்ணை நசுக்க வேண்டும் என்று கோபப்படுகிறார்கள். பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கும் போது, அவள் மனசு, உடம்பு, இதெல்லாம் யோசித்தார்களா? வாழ்க்கை என்பது என்னவென்று அவளுக்குத் தெரியுமா என்று பார்த்தார்களா? ஆயிரத்தில் தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பதும், பொம்மைக் கல்யாணம்தான். அவன் பொம்மையை வைத்து விளையாடலாம், கோபம் கொண்டு அடிக்கலாம், கையைப் பிய்த்து எறியலாம். குப்பையில் வீசிவிட்டு வேறொரு புதிய பொம்மையை நாடலாம். ஆயிரத்தில் ஒன்று இவ்வாறு முரண்டும் போது, பூசை, மந்திரம் என்று பேய் பிடிக்க வைக்கிறார்கள். அந்தச் சிறுமிப் பருவத்தில், பெண்மையின் உட்பொருள், உடல் பாரமாகக் கூடத் தெரிந்திருக்காத பருவத்தில் அவளைக் கட்டிவைத்தார்களே? பருவ மலர்ச்சியே அவளுக்கு மருட்சியாக இருந்தது. அந்த மருட்சி அகலுமுன், பதினாறு நாட்களுக்குள் 'சாந்தி' என்று ஒரு சடங்கை செய்து, நாகப்பட்டினத்துப் பங்களாவின் ஆளுயரக் கண்ணாடிகள் உள்ள படுக்கையறைக்குள் விடப்பட்டதும்... அவளுக்கு இப்போது நினைத்தாலும் வெறுப்பு திரண்டு வருகிறது. இவளுடைய முரண்டுகளும், கோபங்களும் இலகுவில் வளைய வைக்கவில்லை. ஆனால் அவன் தேர்ந்த தந்திரசாலி. அவளை உடலளவில் வசப்படுத்தினான் என்றாலும், அவன் எதிர்பார்ப்புகளுக்கு அவள் ஈடு கொடுப்பவளாக இல்லை. துவக்க கால முரண்டுகளுக்கு அவன் அவளுக்குக் கொடுத்த நயமான பரிசுதான், ஒரு வெள்ளைக்காரியை ஏற்பாடு செய்து ஆங்கிலம் கற்பித்த நன்மை. ஆம், கற்பிக்க வந்தவள், அவன் புகழைப் பாடுபவளாக இல்லாமல், அவனை ஆய்ந்து வெறுக்கக் கூடிய ஒரு நிலைக்கு அறிவூட்டி வைத்தாள். அது அவளுக்கு நன்மைதானே? அந்த வெள்ளைக்காரி சிறிது வயதானவள். கருமை பாயாத விழிகளில் ஓர் இரக்கம் கசியும். செம்பட்டை முடியில் அடர்த்தி இருக்காது. பின்னே சிறு முடிச்சாகக் குவித்திருப்பாள். ஒரு வளைந்த தொப்பியும், பாதம் வரை தொங்கும் அங்கியுமாக இருப்பாள். ஏசுவின் பணியாட்டியாக திருமணமே செய்து கொள்ளாமல் தொண்டு செய்வதே மேலாம் பணி என்று கடல் கடந்து வந்திருந்தாள். அவள் கொஞ்சிக் கொஞ்சி, நிறுத்தி மெதுவாகத் தமிழ் பேசுவது, வேடிக்கையாக இருக்கும். அவளுடைய தாய் காட்டாத பரிவை அந்த அம்மை காட்டினாள். எப்படி? 'யூ ஆர் எ சைல்ட்' என்பாள் (நீ ஒரு குழந்தை) ஐ டோன்ட் அப்ரூவ் திஸ் கஸ்டம்ஸ் ஆஃப் ஹிந்தூஸ்... (ஹிந்துக்களின் இந்த வழக்கங்களை என்னால் ஒப்ப முடியவில்லை) என்ற மாதிரியான சம்பாஷணைகளே அவர்கள் பேசியவை. டூ யூ லைக்...? (உனக்குப் பிடிக்கிறதா?) இந்தப் பேச்சுவார்த்தை ஆங்கிலத்துக்கென்றே (ஸ்போக்கன் இங்கிலீஷ்) என்ற வகை 'ரீடர்' புத்தகங்கள் கொண்டு கொடுத்திருந்தாள். இடை இடையே ஏசுவின் மகிமைகளளயும் போதனை செய்தாள். பல வரலாறுகளைக் கூறினாள். மரியா மக்தலேனா என்ற பெண், பாவியாக இருந்து, தேவனின் அருள் பெற்று அவர் குரல் கேட்ட விவரம் கதையாகச் சொன்னாள். உங்கள் புராணங்களில், உங்கள் சுவாமி இப்படி மன்னிப்புக் காட்டி இருக்கிறாரா என்று கேட்டாள். 'உங்கள் சாஸ்திரங்கள் இளம் பெண்களை மனமில்லாமல் திருமணம் செய்து கொடுக்கும்படி கட்டாயப்படுத்துகின்றன. அவர்கள் விதவைகளாகிறார்கள். பிறகு பல கொடுமைகளுக்காளாகிறார்களா இல்லையா?' என்று கேட்டாள். மணியின் இளம் உள்ளத்தில் அன்று பதிந்த அந்த வினாக்களுக்கு இன்னும் விடைகள் தெரியவில்லை. மணி வெகு விரைவில் அந்த மொழியில் பேசிப் பழகக் கற்றுக் கொண்டாள். ஆனால் கணவனிடம் பேச நா எழவில்லை. அவனைக் காணும் போதே வெறுப்பு திரண்டு வந்தது. வெளிப்பார்வையில் அவர்கள் கணவன் மனைவியாகப் பழகினார்கள். அவன் தன் ஆசை தீர்த்துக் கொள்ள வேறு வழி தேடிக் கொண்டான். நாகப்பட்டினத்தில் கிடைக்காத சமாசாரமா? அவளுக்கும் நகைகள் செய்து போட்டான். வெள்ளைக்காரர் விருந்துகள் பார்ட்டிகளுக்கு அழைத்துச் சென்றான். அத்தனை பெரிய பங்களாவில் அவன் உலகம் தனி; இவள் தனி என்றாயிற்று. இவளால் தான் அவன் வேறு தொடர்பு கொள்ளும்படி ஆயிற்றென்று, அவனைச் சார்ந்த மனிதர்களுக்கு ஆத்திரம் உண்டாயிற்று. அவன் இறந்ததுமே அந்த வெறுப்பை அவளிடம் கக்கினார்கள். சீ! இந்த நகைகளும் பிற சாமான்களும் தூசுக்குச் சமம் எனக்கு! என்று உதறிவிட்டு வந்தாள். தன்னிடம் தவறுதலாக ஒட்டி வந்துவிட்ட புழுதியைக் கூட அந்த வீட்டில் சென்று உதறிவிடச் சொன்னாள். அந்தப் புருஷனின் 'நாமா'வை பாததூளியை ஸ்மரிச்சிண்டு... ஏன்? ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் அக்கினி முளைகளாய் இன்று எழுகின்றன. முளை... முளை என்ற பசுமையான நம்பிக்கைக்குரிய பதம், இவர்களுடைய தீச்சொல் வழக்கில் 'முளையிலே அறுத்து' என்ற வழக்கில் அக்கினிபட்டாற் போல் கருகிப் போயிற்று. அந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் தான், திறப்பார் இல்லாமல் தூசி படிந்து கிடந்த அந்தப் பிதுரார்ஜிதமான சுவாமி பெட்டியைத் திறந்து, கதியற்றுப் போன தன்னை ஓர் ஒழுங்கில் சரணடையப் புகுத்திக் கொண்டாள் மணி. பாரம்பரியமான நிலபுலங்கள், ஏகபோகங்களாக இருந்த நான்கு கிராம மண்ணும், 'சுகஜீவன'ங்களின் வெட்டி வாழ்க்கையில் எப்படி எப்படியோ சிதைந்து, துண்டாகி வளங்கள் வறண்டாலும், இந்தச் சுவாமி பெட்டி சீந்துவாரில்லாத சொத்தாகவே இருந்தது. எங்கெங்கோ, பிழைப்புத் தேடிச் சென்ற ஆண் வாரிசு இதை எதற்கு நினைக்கப் போகிறான்? மணி பெட்டியைத் திறந்து, புழுதி துடைத்து நியமமாகப் பூஜை செய்யலானாள். பழுப்பேறிப் போன புத்தகங்களைத் திறந்து பூஜை நியமங்களைத் தானே மேற்கொண்டாள். சின்னஞ்சிறு வயசில் தந்தை ருத்திராட்ச மாலையுடன், அந்த லிங்க வடிவங்களை எடுத்து, முதல் நாள் அப்பிய சந்தனங்களைப் பக்தியுடன் எடுத்து ஒரு செப்புத் தட்டில் வைத்துவிட்டு, ஒரு பெரிய தாம்பாளத்தில் வைப்பார். அந்தச் சிறு பூஜா பாத்திரங்களே சிறு வயதில் அவள் விளையாடிய பித்தளைச் செப்புகளைப் போன்றவைதாம். அந்தப் பெட்டிக்குள் இருந்த வடிவங்கள்... எத்தனை வகைகள்? மூதாதையர் அவற்றை எங்கிருந்து எப்படிப் பெற்றனர்? சொத்து என்ற உரிமைகள் தூலமாக மண்ணாக, பொன்னாக, (ஏன் பெண்ணாகக் கூட) இருப்பதைத்தான் கணக்கிடுகிறார்கள். இந்தப் பிதுரார்ஜிதங்களுக்கு யாரும் வழக்கிட்டுக் கொள்வதில்லை; கோர்ட்டுக்குப் போவதில்லை. அந்தச் சுவாமி படிகங்களில் சில தேன் வண்ணத்தில் இருக்கின்றன. கருஞ்சிவப்பில், பச்சையில், நீலம் பாய்ந்த கருமையில்... உருளையாக, நீண்ட குழவி போன்ற வடிவில்... அது நிற்க சிறுவெள்ளி உருளைக் குழாய் போன்ற பூணில் செருகப்பட்டிருக்கிறது... எல்லாம் அடங்கிய செப்பு சம்புடம்... முதல் நாள் சம்புடத்தில் போட்ட வஸ்திரத்தை எடுத்து வைத்து, சந்தனம் நீக்கி, தட்டில் வைத்து, நன்னீரும் பாலும் சந்தனமுமாக அபிஷேகம் செய்வாள். பிறகு அவற்றைச் சிரத்தையாகத் துடைத்து, அதில் சந்தனம் இட்டு வஸ்திரம் சாத்தி அட்சதையுடன் காலையில் பறித்த புது மலர்களால் சிவதோத்திரம் சொல்லிப் பூசனை செய்வாள். தீபம், தூபம், நிவேதனம், கற்பூரம் என்று வழிபாடுகள் முடிய இரண்டு மணி நேரமாகும். அந்தச் சுவாமி சந்தனத்தைக் குழைத்துத்தான் அவள் தந்தை நெற்றியில் நீண்ட குறுக்கிட்டுக் கொண்டு பூணூல் முனையினால் மூன்று வரிகளை ஒழுங்குபடுத்திக் கொள்வார். இவள்... வாழ்க்கை 'பஸ்மமாகிப் போனதன்' அடையாளமாக அந்த நீறுதான் தரிக்கலாம். சந்தனத்துக்கு இடமில்லை. அதனால் ஸ்திரீயாகிய இவள் பூஜை செய்யலாகாது. ஆம், இவள் அப்பாவின் அந்தப் பழைய புத்தகம் பிரித்து, புருஷ ஸுத்தம் படித்தாள். அது தடை செய்யப்பட்ட எல்லைக்குள் பிரவேசித்து விட்ட குற்றமாகும். ஏன்...? ஏன்...? பெண்ணாய்ப் பிறந்தால், இவ்வளவு கழுமுனைகளா? குடியானவப் பெண்மணிகள், இடையர் பெண்கள் புருஷன் இறந்தாலும் தலை மழிப்பதில்லை; வெற்றிலை போடலாம். இத்தனை கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் இந்த உயர் வர்க்கம்...? இது உயர் வர்க்கமா? என்ன உயர்வுகள் தனியாக இருக்கின்றன? பெண்ணாய்ப் பிறந்ததற்காக, ஈசுவர பூஜை கூடச் செய்யலாகாது. ஏன்? ஏன்? எங்கள் கேள்விக்குப் பதில் சொல்வீர்களா? தன்னை அறியாப் பருவத்தில், பொருத்தமில்லா ஒருவனுக்குப் பிணைத்தார்கள். அவள் புத்தியுடன் தன்னை விடுவித்துக் கொண்டாள். ஆனால் இந்த மீட்சி, அவளைக் குச்சியால் குத்தி எண்ணெய்ச் சட்டியில் போட்டாற் போன்று இந்த முடங்கிய கும்பாவுக்குள் புகுத்தியிருக்கிறது. இதிலிருந்து அவள் எழும்பியாக வேண்டும். மறுநாள் அதிகாலையிலேயே மணி கிராமத்துக்குக் கிளம்பிவிடுகிறாள். பூஜைப் பெட்டியின் நினைவேயில்லை. எதிர்வீட்டு அலமேலு ஆச்சி கேட்கிறாள். "என்ன மணி? புசுக்குனு போன சுருக்கில வந்துட்டீங்க? என்ன சமாசாரம்?" மணி பதில் கூறவில்லை. கொல்லைத் தோப்பில் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறாள்... கல்லில் உட்கார்ந்து, மாடுகளைப் பார்க்கிறாள். அம்மா, பூஜைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வண்டியில் வந்து இறங்குகிறாள். சுதேசமித்திரன் பத்திரிகை திறந்து கிடக்கிறது. சிமிளியில் இருந்து தங்கையும் அவள் கணவரும் வரும் போது கொண்டு வந்து போடும் பத்திரிகைகள். மணி, பூஜை புனஸ்காரம் முடித்து, ஒரு வேளை உணவும் கொண்ட பின் சாவகாசமாகத்தான் அவற்றைப் பிரித்துப் பார்ப்பாள். படிப்பில், செய்திகளில் பரபரப்பு இருந்ததில்லை. இன்று நடுப்பகல் சென்ற பின்னரும், இவள் இன்னும் குளிக்கவில்லை... ஏன்? "மணி, என்னம்மா? யார் என்ன சொன்னா? காபி குடிச்சுட்டுக் கொல்லைப் பக்கம் குளிக்கப் போயிருக்கேன்னு நினைச்சுண்டிருக்கேன்... நீ கிராமத்துக்குப் போனேன்னு சுந்தர் சொல்லித்து. சரி, நீங்க சாப்பிட்டப்புறம் வண்டி கட்டிண்டு போகலாம் கொண்டு விடச் சொல்றேன்னா. ஏம்மா? உடம்பு சரியில்லையா?" இவளுக்குக் குமுறி வருகிறது. ஈசுவர பூஜை, ஆணுக்குத் தான் உரிமை; அது பெண்ணுக்கு இல்லை. "ஏம்மா? நீ இன்னிக்குப் பூஜை பண்ணலியா? காலமேந்து பட்டினியா இப்படி உக்காந்திருக்கே? யார் என்ன சொன்னா? ரவிக்கை போட்டுண்டிருக்கான்னு, அந்த அத்தைக்கிழம் சொல்லித்தா?..." "பூஜை எல்லாம் இனிமே எந்தப் பிராமணனையேனும் பண்ணச் சொல்லு, இல்லாட்டா, தூக்கிக் கிணத்தில போடு..." கிணற்றில் இருந்து நீரை இறைத்துத் தடதடவென்று தலையில் கொட்டிக் கொள்கிறாள். இந்தப் பூசை உணர்வுக்கு முழுக்கு, முழுக்கு என்று ஒரு வெறியே வந்தாற் போல் நீராடி முடிந்ததும், உள்ளே சலவை செய்த மடிப்போடு கூடிய புடவையையும் ரவிக்கையையும் போட்டுக் கொண்டு அம்மா கனிவுடன் தூக்கில் வைத்துக் கொண்டு வந்த உணவை கொள்கிறாள். பிறகு அந்தப் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு வந்து பெஞ்சில் உட்கார்ந்து பிரிக்கிறாள். மகாத்மா காந்தியின் தென்னாட்டுப் பிரயாணம் கொட்டை எழுத்துக்களில் கண்களைக் கவருகின்றது. சட்டென்று ஓர் ஒளிக்கீற்று தோன்றினாற் போன்று நம்பிக்கை. பரபரப்புடன் வரிகளைப் படிக்கிறாள். காந்திஜி, செப்டம்பர் 13, 14, 15, 16 தேதிகளில் நாகப்பட்டினம், மன்னார்குடி, தஞ்சை ஆகிய ஊர்களில் சுற்றுப் பிரயாணம் வருகிறார். மக்களிடையே சேவை செய்வதே மகேசன் சேவை என்று கருதும் மகாத்மா காந்தி வருகிறார். அவர் காங்கிரஸ் என்ற அமைப்பின் பெரிய மகான். ஸ்திரீகள் பூஜை செய்யக்கூடாது என்று சொல்லக் கூடியவரல்ல. அத்திம்பேர் விசுவநாதன் அந்நாளிலிருந்து காங்கிரஸ்காரர். இந்தத் தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி ஊர்களில் உள்ள பெரிய மிராசுகளான அவளுடைய சொந்தக்காரர்கள் எல்லாமே 'காங்கிரஸ்' தான். குன்னியூர், மூலங்குடிச் சித்தப்பா, ஆகிய அனைவருமே காந்தியின் கட்சிக்காரர்கள். காங்கிரஸில் சேருவது என்பது, ஓர் அரசியல் தேசீய கௌரவமாக இந்தப் பெரிய மிராசுதாரர்கள் கருதியிருக்கிறார்கள். ஏன் இவளும் இப்போது காங்கிரசில் சேரக்கூடாது? காங்கிரஸ் என்றால், முன் நிற்பது கதர்ப் பிரசாரம் தான். அத்திம்பேர் கதர்ப்பிரசாரம் செய்வார்; கதர்க்கடையே கூட வைத்து இருந்தார். சிறுவன் மோகனுக்குத் திருவாரூரில் படிக்கையில் கதர்ச் சட்டைதான் அப்பா தைத்துக் கொடுத்திருந்தார். பள்ளிக்கூடத்து வாத்தியார், அதைத் தொட்டுப் பார்ப்பாராம். கதர் என்றால் கோணிச்சாக்கு என்ற எண்ணம் பொதுவாக இருந்த காலம் அது. இந்த கிளாஸ்கோ மல்லைத் துறந்து அவளும் கதர் உடுத்துவாள். இன்னும் சேவை செய்வாள். அதற்கு முன் அந்த மகாத்மாவைச் சென்று பார்ப்பாள். ஓர் இலக்குக் கிடைத்த ஆறுதலில் மணி சற்றே அமைதி பெறுகிறாள். பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|