(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)

16

     “குடிப்பதற்கு நீர் வேண்டும்!
     குடியிருக்க இடம் வேண்டும்!
     புதைப்பதற்கு சுடுகாடு வேண்டும்!”

     ஆயிரம் பதினாயிரமாக இந்தக் கோஷம் வானைச் சென்று முட்டுகிறது.

     சம்முகம் இதற்கு முன் பல பேரணிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இந்தப் பேரணியில் அவருடைய தலைமுறையைச் சேர்ந்தவர்களே அதிகமாகத் தெரிகின்றனர். முதன்முதலில் அவர்கள் கிராமத்திலிருந்து ஆட்சியாளரின் துணையோடு அவர்களை அடக்க முயன்ற அமைப்பை எதிர்த்துப் பத்து மைல் தொலைவு ஆண்களும் பெண்களுமாக டவுனுக்குப் பேரணி வந்த நாள் அவருக்கு நினைவு இருக்கிறது. அப்போது அரசியல் விடுதலை பெற்றிராத நாட்டின் குடிமக்கள் அவர்கள். அவருக்குப் பதினெட்டு வயசு, மீசை அரும்பும் கிளர்ச்சி மிகுந்த பருவம். ‘அடிமையாக இருப்பதுதான் நம் விதி’ என்று அழுந்திக் கிடந்த மக்களை ஊரூராகச் சென்று, “தாத்தா வாங்க, மாமா வாங்க, மாமி நீங்களும் வாங்க, அண்ணே, அக்கா எல்லாரும் கலந்துக்குங்க!” என்று உற்சாகத்துடன் திரட்டினான். எந்த இருட்டானாலும் பகையானாலும் உயிர் அச்சம் உறைத்ததில்லை. வாலிபத் தோழர்களின் அணியே வெளியிருந்து வந்த தலைவர்களைப் பூரிக்கச் செய்திருந்தது அந்நாளில்,

     “நாளை எண்ணி வட்டி வாங்கும் நமன்களை ஒழிப்போம்!”
     “உழுபவனுக்கு உரிய பங்கை அமுல் படுத்துங்கள்!”
     “புரட்சி ஒங்குக... இன்குலாப் ஜிந்தாபாத்!”

     என்றெல்லாம் இவர்கள் முறை வைத்துக் கோஷமிட்டுக் கொண்டு வெள்ளமாய்ப் பெருகி வந்தார்கள். ‘இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது’ என்ற வகையில் அந்த எழுச்சி அப்போது பொங்கி வந்திருந்தது. இப்போது அவருக்குக் கோஷமிடவே வாய் அவ்வாறெழவில்லை. அப்போதிருந்த நம்பிக்கை ஒளி இப்போது குறைந்து விட்டது.

     “அமுல்படுத்து! அமுல்படுத்து!”

     “சட்டக் கூலியை அமுல் படுத்து!”

     சட்டம் போட அப்போது போராட்டம்; இப்போது சட்டம் போட்டும் அமுல்படுத்தப் போராட்டம்!

     தங்கள் அணியில் மூன்றே மூன்று பெண்களில் கிட்டம்மாள் கட்டிக் கொண்ட தொண்டையைக் கிழித்துக்கொண்டு கூவுகிறாள்.

     “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்...”

     “தாக்காதே, தாக்காதே! அரிசன மக்களைத் தாக்காதே!”

     சுதந்திரம் வந்து முப்பத்து மூன்று ஆண்டுகளாகியும் அரிசனங்களுக்குத் தனித் தொகுதிகள், தனி அமைச்சகங்கள் என்று சிறப்புக் கண்காணிப்பு என்று ஆடம்பரம் காட்டியிருப்பது தான் பெரிதாக இருக்கிறது.

     வெயில் மிக உக்கிரமாகத் தலையில் படிந்து, நெற்றியில் வியர்வை வழிகிறது. துண்டைத் தலையில் போட்டுக் கொள்கிறார்.

     “விவசாயத் தொழிலாளிகளுக்கு ஒருங்கிணைந்த சட்டம் கொண்டு வா!”
     “பென்ஷன் வழங்கு! பென்ஷன் வழங்கு!”
     “கூலியோடு வார விடுமுறை, மருத்துவ வசதி எல்லாம் வழங்கு!”
     சாலையோரங்களில் கடைகளில் வணிக நிறுவனங்களில் உள்ள மனிதர்கள், நடைபாதைகளில் நடப்பவர்கள் இதைச் சிறப்பாகக் கவனித்ததாகவே தெரியவில்லை. நேப்பியர் பூங்காவிலிருந்து ஊர்வலம் தொடர்ந்து வருகையில் போக்குவரத்து ஊர்திகளுக்குத்தான் பாதிப்பாக இருக்கிறது.

     “என்ன ஊர்வலம்?... விலைவாசியாக இருக்கும்! வேறென்ன? தினம் ஒரு பேரணி ஊர்வலம்!”

     “இல்லப்பா விவசாயத் தொழிலாளர் சங்கம்!”

     “அது பச்சைக் கொடியில்ல? இது சிவப்புக் கொடியாக இருக்கு?”

     “எல்லாத் தொழிலாளர் சங்கத்திலும் எல்லா வர்ணக் கொடியும் இருக்கு இப்ப!...”

     “எல்லாரும் சேந்து எதானும் செஞ்சாலும் பலனிருக்கும். ஒருத்தன மத்தவன் கழுத்தப் புடிக்கிறதிலியே இருந்தா என்னத்த நடக்கும்? இத்தயே சாதகமாக்கிட்டு மேலே போறவன் போயிட்டே இருக்கிறான்...”

     நடைபாதையில் இந்தப் பேச்சுக்களைச் செவியுறுகிறார் சம்முகம், உறைக்கிறது.

     ஓரிடத்தில் குளிக்க இறங்கும் கோலத்தில் தனது இளமைப் பூரிப்புக்களைக் காட்டிக்கொண்டு ஒரு சினிமா நடிகையின் ‘கட் அவுட்’ கண் சிமிட்டிப் புன்னகை காட்டி ‘நீங்கல்லாம் எங்க போறீங்க? இப்படி வாங்க!’ என்று அழைக்கிறது.

     “உரவிலை குறையுங்கள்! உற்பத்தி செய்த நெல்லுக்குக் கட்டுப்படியாகும் விலை கொடுங்கள்!”

     கோஷமே இடறி விழுவதுபோல் இருக்கிறது.

     “என்ன எளவுக்கு இப்பிடிப் பொம்பிள பொம்மய வச்சித் தொலைச்சிருக்கானுவ தூத்தேறி!” கிட்டம்மா காறித் துப்புகிறாள்.

     பழக்கப்பட்டுப் பழக்கப்பட்டுக் காய்த்துப் போன சாலைகளில் அத்தனை கால்களின் அத்தனை மக்களின் செருப்பில்லா அடிகளின் உயிர்த் துடிப்பேறியும் உணர்ச்சிப்பொடி பறக்கவில்லை. “எனக்கு உணர்ச்சியே கிடையாது” என்று கிடக்கிறது. இந்தப் பேரணிச் செலவு, உடல்பாடு இவற்றால் முன்னே நின்று வாழ்வின் முண்டு முடிச்சுக்களாய் அச்சுறுத்தும் பிரச்னைகளைக் கரைக்க முடியப் போகிறதோ?

     மழைச்சாரல் ஓய்வதும் திடீரென்று வலுக்கத் தொடர்வதும் போன்று குரல்கள் தளர்ந்து ஓயும் சமயம் எங்கோ ஒரு தனிக்குரல் எழும்பப் பலரும் அதைத் தொற்றுவதுமாக தமிழகத்தின் மூலைமுடுக்குக் கிராமங்களிலிருந்து வந்த மண்ணின் மைந்தர்களின் பேரணி சாலையில் வருகிறது. உயர்நீதிமன்றம் வரும்போதே காவல் துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். தலைவர்கள் மட்டுமே அமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கைப் பத்திரங்களை அளிக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

     பேரணி, சென்னைப்பட்டினம் போகிறோம், நான்கு நாள் சம்பாத்தியம் போகும் என்று மிகப் பெரியதோர் உச்சகட்டத்தை எட்டியாயிற்று. அதிகாலையில் அவர்கள் கூடுவாஞ்சேரிக்கு அருகில் வண்டியை நிறுத்திக் காலைக்கடன்கள் முடித்து வந்தனர். இனி பகலுணவுப் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டு பசியாறிய பின், ஒரு சுற்று ஊரைப் பார்த்து விட்டு இரவு பத்து மணியளவில் கிளம்ப வேண்டியதுதான்.

     “நான் கோபுக்குக் கடிதாசி எழுதியிருக்கிறேன். இப்ப கிளம்பட்டுமா?” விடைபெற நிற்கும் சம்முகத்தைப் பொன்னடியான் நிறுத்துகிறான்.

     “ஏன் காம்ரேட்? இப்பதா ஃபுட் பாக்கெட் ஏற்பாடு பண்ணிருக்காங்க, சாப்பிட்டுவிட்டு வண்டில இவங்க எல்லாருடனும் ஒரு சுத்து நீங்களும் பார்க்க வாங்க. சாங்காலம் அஞ்சு மணிக்குத்தா ஆபீசில இருந்து மகன் வருவாரு. வண்டி அநேகமா விடிகாலமதான் கெளம்பும். நீங்க எடம் சொல்லுங்க. வந்து பிக்கப் பண்ணிக்கிறம்!”

     சம்முகத்துக்கு இது உவப்பாக இருக்கிறது.

     மகன் ஆயிரம் விளக்குக்குப் பின்னே ஒரு குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் இருப்பதாக முகவரி கொடுத்திருக்கிறான்.

     மாலை ஐந்து மணி சுமாருக்கு அங்கு வந்து இறங்கும் சம்முகம் முடிந்தால் இரவே சங்கத் தலைமை அலுவலகத்தில் வந்து சேர்ந்து விடுவதாகச் சொல்லி விடைபெறுகிறார்.

     அடுக்கு வீடுகளைச் சுற்றிக் கசகசவென்று இரைச்சல்; அழுக்கும் புழுதியுமாகச் சிறுவர் சிறுமியர், இளைஞர், ஆடவர், பெண்டிர் தரையோடு இருக்கும் குழாயைச் சுற்றிய மேடை பெயர்ந்து பொக்கையும் பொள்ளையும் நாற்றமும் பாசியுமாக பெண்டிர் கூச்சலும் வசையுமாக இருக்கிறது. கிராமத்திலும் இவை இருக்கின்றன. ஆனால். அங்கு இல்லாத கபடம் இங்கே வேரோடிப் போயிருக்கிறது. படி ஏறி மூன்றாம் மாடிக்குச் செல்லவேண்டும் என்று கண்டு கொள்கிறார். படியேறும் போதே புதிய ஆள் என்பதை அவர் துண்டும் முகமும் காட்டி விடுகின்றன.

     தலையைச் சொறிந்துகொண்டு அழுக்குப் பனியனுடன் வரும் ஒரு பரட்டை இன்னொரு கையில் பிடித்த புகையும் துண்டு பீடியுடன், “ஆரு நயினா? ஆரப் பாக்க வந்த?” என்று விசாரிக்கிறான்.

     “கோபால்னு... கைத்தறி ஆபீசில வேல பண்றாரு...”

     “ஐயிரு பொண்ணக் கட்டிருக்கே...”

     “ஆமா...”

     “அவுரு எட்டு மணிக்கு மேலில்ல வருவாரு?... வூட்ட அது வந்திருக்குதோ இன்னாமோ, போயி பாரு நயினா!”

     இந்தக் கோட்டைக்குள் எவன் வந்தாலும் போனாலும் எனக்குத் தெரிந்துதான் ஆகவேண்டும் என்பது போலிருக்கிறது, அவன் அனுமதி வழங்கும் பேச்சு!

     அவனுக்கு வேலையான பின் அவர் ஒரே ஒருமுறை தான் சென்னையில் அவனை வந்து பார்த்திருக்கிறார். அப்போது சங்கக் கூட்டத்துக்காக வந்தார். அவனைப் பத்து நிமிசம் பார்க்க முடிந்தது. புதிய மெருகும் களையுமாக இருந்தான். அவருக்குப் பெருமையாக இருந்தது. பி.ஏ.யில் ஒரு பகுதி அவன் தேறியிருக்கவில்லை. “முடிஞ்சா அத்தை முடிச்சிடுரா!” என்றார். வேலை செய்து சம்பாதிப்பவன் என்று பணம் எதுவும் அவனாகவும் கொடுக்கவில்லை. இவருக்கும் கேட்கக் கூச்சமாக இருந்தது. பையனானாலும் அவன் தோளுக்குமேல் வளர்ந்து படித்துவிட்டதால் சட்டென்று அந்நியமாகிவிட்டாற் போன்ற பாவம் இவருள் ஓங்கியிருந்ததுதான் காரணம். ஆனால் அவன் இவர் ஊர் திரும்புகையில் ஓட்டலுக்குக் கூட்டிச் சென்று உபசாரம் செய்து, பிஸ்கோத்து கேக்கும் கொடி முந்திரிப் பழமும், அம்சுவுக்கும் காந்திக்கும், கழுத்து மணி மாலையும், முடியில் வைத்துக்கொள்ளும் அலங்கார ஊசிகளும் வாங்கிக் கொடுத்தான்.

     அதைத் தொடர்ந்து வந்ததுதான் திருமணச் செய்தி. தாம் அங்கே சென்றிருக்கையில் அவன் அவளைச் சந்திக்கச் செய்து தம்மிடம் கேட்டிருக்கவில்லை என்ற மரியாதைக் குறைவு அவருள் புழுவாகக் குடையாமலில்லை. நான் வேறாகிவிட்டவன், என் வாழ்க்கைப் பற்றிய முடிவுகளை நானே எடுப்பேன் என்று சொல்வது போலிருந்தது. பிறகு அவன் ஒரு மாசத்துக்கு முன்பு திடுமென்று புறப்பட்டு வந்து சண்டைக் கொடி ஏற்றிவிட்டுச் சென்றிருக்கிறான். இவர் முன்னதாகக் கடிதம் எழுதிப் போட்டிருக்கிறார். அவன் வீட்டுக்கு முன்னதாகவே வந்திருக்கலாம்; அல்லது வந்துவிடுவான். இவர் கதவு எண்ணைப் பார்த்துக் கொண்டே வந்து தட்டுகிறார்.

     அடுத்த பகுதியில் ஒரு பெண் வாயிற் படியில் டிரான்ஸிஸ்டரைப் பெரிதாக வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். அதிலிருந்து வரும் பாட்டு ஒரே கத்தலாக இருக்கிறது.

     தனது தட்டல் உள்ளே இருக்கும் மருமகளுக்குச் செவியில் விழுமா என்ற ஐயத்துடன் சற்றே ரேடியாவை நிறுத்து என்று சொல்லும் பாவனையில் பார்க்கிறார். ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தாமல் வெளியே கைபிடிச் சுவரில் வைத்துவிட்டுச் சாய்ந்து நிற்கிறாள்.

     சினிமாப்பாட்டு புரியத் தொடங்குகிறது. விரசமான சொற்களில் காதல் பாட்டு.

     அவர் பலமாக அழுத்திக் குத்துவதுபோல் கதவைத் தட்டுகிறார்.

     கதவு திறக்கப்படவில்லை. ஆனால் உள்ளிருந்து குரல் வருகிறது.

     “ஆரு?”

     “நா... சம்முகம், ஊரிலேந்து வந்திருக்கிறேன். கிளியந்துறை.” கதவு மறுகணம் தாழ்ப்பாள் விடுபட்டுத் திறந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார். பொய்யாகிறது.

     “...அவுரு இன்னிக்கு வர நேரமாகும். பிறகு வாங்க?” அவருக்கு நா ஈரம் வற்றி உலர்ந்து போகிறது.

     “நா. கோபுவின் அப்பாதான். கதவு திறங்க...”

     “ஆராயிருந்தாலும் அப்புறம் வாங்க...”

     மனதோடு ஒரு வசை தெறித்து விழுகிறது.

     நல்லவேளையாக நாவில் குதிக்கவில்லை.

     விழுங்கிக்கொள்கிறார். உடல் முழுவதும் ஒரு சூடு பரவிக் குழம்புகிறது.

     “ஆராயிருந்தாலும்... அப்புறம் வாங்க?”

     அவர் பெரிதாகக் கருதி, பெருமை பொங்க, தன் வியர்வையைத் தேய்த்து அவனுடைய ஏற்றம் கண்டார். தாம் வருவதாகக் கடிதம் எழுதியிருந்தும் இவ்வாறு அவமானம் செய்திருக்கிறான். அந்தப் பெண் என்ன, படித்தவளா? நாகரிகம் தெரிந்தவளா? வந்தவர், புருஷனின் தகப்பன் என்பதை அறிவித்த பின்னரும் கதவு திறந்து பார்த்துப் பேச மாட்டாளா?

     வெளியில் டிரான்சிஸ்டரை வைத்துக்கொண்டு நோட்டம் பார்க்கும் பெண் ஒரு சொல் உதிர்க்கவில்லை.

     அவள் மீதும் கோபம் வருகிறது. பொட்டைச் சிறுக்கிகள்! பல்லை இளித்து மயக்கி, பெற்றவர்கள் பாசத்தையே துடைத்துவிடச் செய்யும் சிறுக்கிகள்! வாசலில் நிற்க வைத்து, கதவடைக்கச் சொல்லி அவமானம் செய்கிறான் துரோகி!

     கட்சி மாறலைக் காட்டிலும் படுபாதகமான துரோகம்!

     பையில் இருக்கும் கதம்பமும், பழமும் அவரைப் பார்த்து நகைக்கின்றன. தாயிடம் ஐம்பது ரூபாய் வாங்கிச் சென்றிருக்கிறான்.

     இவர் கையில் பத்தே ரூபாய்தான் இருக்கிறது. போகும்போது பத்து இருபது வாங்கிச் செல்லவேண்டும் என்று நினைத்திருந்தார்.

     சொந்த மகனிடமே அவமானப்பட்டுத் திரும்பி நடக்கையில் நெஞ்சு குலுங்குகிறது. வழி நிச்சயமாகத் தெரியாது. இருள் பரவிவிட்ட நேரம். எல்லாச் சாலைகளும், குறுக்குத் தெருக்களும் ஒரே மாதிரித் தெரிகின்றன. எட்டுப் பேரிடம் வழிகேட்டு அவர்களுடைய வண்டியும் தோழர்களும் தங்கிய இடத்தை வந்தடைகிறார்.

     “அதுக்குள்ள மகனப் பாத்திட்டு வந்திட்டியா?...”

     தங்கசாமி பீடிக்கங்கைத் தட்டிக்கொண்டு கேட்கிறான்.

     “இல்லீங்க, இந்த ஊருல கேட்டா எவனாலும் வழி வெவரம் சொல்றாங்களா? அடுத்தாப்பில கொலவுழுந்தாக்கூடப் பாக்க மாட்டாங்கறது சரியாத்தானிருக்கு. அதுவும் இந்த ஊருப் பொம்பிளங்க, என்னமோ நாம வெளியூரு ஆளுன்னா அவங்களக் கடிச்சி முழுங்கிடுவம்போல கேட்டாக்கூட பதில் சொல்ல மாட்டேங்கறாளுவ. காலம ஆபீசு பக்கம்தான் பாக்கணும். பாக்காம போகக்கூடாது. வண்டி காலம எத்தினி மணிக்குக் கெளம்பும்...”

     “அதா இப்ப சிலபேரு சினிமாக்குப் போயிட்டாங்க, காலம விடியறப்பதா கெளம்பனும்?...”

     “கொஞ்சம் நின்னிங்கன்னா அந்தப்பய ஒம்பதுக்கு ஆபீசுக்கு வந்திடுவான். பாத்துட்டு வரேன். இல்ல, வண்டி நிருபுடியாப் போவணும்னாதா என்ன பண்ணுறதுன்னுறேன்...”

     “ஒரு அரை மணி போதுமில்லை, அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாப் போச்சு...”

     சம்முகம் எட்டுமணிக்கு முன்பாகவே அவனுடைய அலுவலகத்தின் முன் வந்து காத்திருக்கிறார். இரவு முழுவதும் உறங்கியிராத முகம் சோர்வில் அயர்ந்திருக்கிறது. அவன் பஸ்ஸைவிட்டு, இறங்கி வருவதை அவர் பார்த்துவிடுகிறார். அவரை அங்கு அவன் எதிர்பார்த்திருக்கவில்லை போலும்?

     திடுக்கிட்டுப் பின் சமாளித்துக் கொள்கிறான்.

     “என்னப்பா? ராத்திரி. திலகம் சொல்லிச்சி. நாந்தா, காலம் கெட்டுக்கிடக்கு தெரிஞ்சி வச்சிட்டு உறவு அது இதுன்னு சொல்லிக் கதவைத் தட்டினாத் திறக்காதன்னு சொல்லிருந்தேன். இப்படித்தானே சொல்லிட்டுக் கொலையே பண்ணிடறாங்க இங்க?... ஓ, பேரணிக்கு வந்திருந்தீங்களாப்பா? நேத்து ஸ்டாக் டேக்கிங். ஒரே வேல, அப்புறந்தான் பேரணின்னு எனக்கே தெரிஞ்சிச்சி. திலகம் சொன்னதும் அவளைக் கோவிச்சிட்டேன். ரொம்ப வருத்தப்பட்டேன்...”

     “அப்படியா? நான் உனக்கு லெட்டர் போட்டிருந்தேனே, வரல?”

     “லெட்டரா? ஒண்ணும் வரலியே? நானே நேத்து வாரப்ப, பேரணிக்கு வர்றவர் இங்க வந்து தங்கிட்டுப் போகக்கூடாதா, வித்தியாசமாகவே நினைச்சுக்கிறாங்களேன்னு வருத்தப் பட்டேன்...”

     “நீ ஆபீசிலியா இருந்தே?... சரி, உன் தங்கச்சி, வீட்டவிட்டு ஓடிட்டா. தெரியுமாடா?... அன்னிக்கு நீதான கூட்டிட்டு வந்த துரோகிப் பயல, இவ, காலம பொய்யச் சொல்லிட்டு ஒடிப்போனா. வெளில தலகாட்ட முடியல. உனக்குத் தெரியுமாடா?”

     அவன் திடுக்கிட்டு விடவில்லை. எங்கோ பார்க்கிறான்.

     “எனக்கெப்பிடித் தெரியும்? அவனாக உதவி செய்யிறேன்னு வந்தான். சும்மா துரோகி துரோகின்னு சொல்றதுல என்னப்பா லாபம்? இஷ்டப்பட்டுப் போயிருந்திச்சின்னா நல்லதுதான். சுகமாயிருக்கும்...”

     “சுகமாயிருக்கும்! அப்பன் ஊருப் பொம்பளை எல்லாம் அழிச்சவன். அவன் மகன் எப்படியிருப்பான்? அவன் ஒழுங்கா வச்சிருப்பானோ, கூட்டிவிட்டுச் சம்பாதிப்பானோ? ரத்தம் கொதிக்கிது...!”

     “அப்பா, அப்பா... என்ன இது, இதெல்லாம் இங்கே வச்சிப் பேசாதீங்க! மானேசர் வருவார் இப்ப. நீங்க அப்புறம் வாங்க!”

     “அப்புறம் வேற வந்து உன் வீட்டு வாசல்ல மானங்கெடனுமா? அப்புறமும் இப்புறமும் வானாம். நீ இப்ப பணத்தைக் குடு. நான் போறேன்.”

     “ஏது பணம்?”

     “என்னடா ஏதுன்னு கேக்கிற? உங்கம்மாட்ட குழயடிச்சி வாங்கிட்டுப் போனியே அம்பது ரூபா?...”

     “அம்மாட்டியா? நானா? அம்பது ரூபா நா வாங்கிட்டு வந்தனா? அவங்க கூலிப்பணம் குடுத்தாங்க. வடிவுகிட்ட அப்பவே குடுத்திட்டேன். அவன் கண்டமானிக்கும் பேசினான். அதனாலதா நீங்க வரவரைக்கும்கூட நிக்காம வந்தேன்... இப்ப நீங்க இப்படி ஒரு பழியைப் போடுறீங்க? சீச்சீ!...”

     “அட... பாவி, உங்கம்மா, பெத்த தாயப் பொய் பேசுறவளாக்கிட்டியே...”

     “என்னப்பா, கொஞ்சம்கூட ஒரு டீஸன்ஸி இல்லாம இங்க நின்னிட்டுக் கத்துறீங்க? நா வாரேன்! வீட்ல வந்து பேசிக்கலாம், போங்க!”

     அவன் விர்ரென்று உள்ளே சென்றுவிடுகிறான்.

     எரிமலை புகையாகக் குழம்புகிறது; கண்கள் சிவக்கின்றன.

     மிகப் பெரிய சென்னைப் பட்டினமும் அதன் இயக்கமும் அவருடைய உணர்வை விட்டு நழுவிப் போகின்றன.

     சொந்த மகனே இப்படிப் போனானே?

     தன் மகன் காலில் சேறுபடலாகாது, பிறந்த குடியை உயர்த்திப் பெருமை சேர்ப்பான் என்று கனவு கண்டார். ஈர மண் ஒட்டக்கூடாது என்று நினைத்ததற்கு ஈரத்தையே துடைத்து விட்டார்கள். பெற்றவனும் பெற்றவளும் அழுக்கென்று துடைத்து விட்டார்கள்.

     உணர்ச்சியை விழுங்கிக்கொண்டு துண்டைத் தலையில் போட்டுக்கொண்டு நடக்கிறார்.