உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்) 22 நவராத்திரி விழா தொடங்கப் போகிறது. பெருமாள் கோயில், சிவன் கோயில் இரண்டிலும் வழக்கத்துக்கு அதிகப்படியான பூஜைகளில் குருக்கள் பரபரப்பாக இருக்கிறார். மாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. சுதைச் சிற்பக் கோபுரம் கோபி வண்ணப் பின்புலத்தில் சிற்பங்கள் புதிய பொலிவு கொண்டு விளங்குகின்றன. சுற்றுக்குள் முன் மண்டபம் மொட்டையாக இருந்தது. அதற்குச் சிமந்துக் கூரை போட்டிருக்கிறார்கள். வெளிச்சுவரில் வெண்மையும் சிவப்புமாகப் பட்டை தீட்டித் துலங்குகிறது. குடிசைகள் இருந்த இடம் துப்புரவாகச் சமமாக்கப் பட்டிருக்கிறது. பெண்கள் பொங்கலிடக் ‘கோடு’ கிழித்திருக்கிறார்கள். கடை கண்ணிகள் வரப்போவதற்கு முன்னோடி ஒரு தொட்டி ராட்டினம் வந்திருக்கிறது. சேரிப் பிள்ளைகள் ஏக்கத்துடன் எட்ட நின்று பார்த்துக் கொண்டிருக்கையில், மற்ற சிறுவர் சிறுமியர் பத்துபைசாவும் இருபது பைசாவும் கொடுத்து அதில் சுழன்று களிக்கிறார்கள். ஆங்காங்கு வயல்களின் இடையே, கிராமங்களின் வெளியே ஒதுக்குப்புறங்களில் முட்டு முட்டாய் வைக்கோல் வேய்ந்ததும், வெறும் கூரையாகவும் மண் சுவர்களாகவும் விளங்கும் குடில்களில் ஒரு புதிய கிளர்ச்சி உருவாவதைத் தோற்று விக்கும் எந்த அடையாளமும் இந்தப் பகுதிகளில் தெரியவில்லை. குருக்கள் மலர் கொய்கிறார். குளத்தில் ஏட்டையாவின் வீட்டுக்குச் சொந்தமான நான்கு வாத்துக்களும், தன் உடமையாளரை விளக்கும் கம்பீரத்துடன் அன்னங்களைப்போல் உலவுகின்றன. மாட்டு வாகடம் செய்யும் ஆசுபத்திரிக் கிழவன் இருமிக் கொண்டு ஆற்றுப் படித்துறையில் பல் துலக்குகிறான். மழை பெய்து சகதியாயிருப்பதால் ஆற்றோர மேட்டுப் பாதை வழுக்குமென்று பஸ்ஸை ஊருக்குள் நுழைய விடாமலே திருப்பிவிட்டான். சம்முகம் நடந்து வருகிறார். வெயில் சுள்ளென்று விழுகிறது. இந்த வெயிலில் முதிர்ந்த மணிகள் குப்பென்று பழுக்கும். அறுவடைக்குத் தயாராகும். சனி, ஞாயிறு வந்துவிடுகிறது. திங்கட் கிழமைதான் சென்று வீரபுத்திரனை விடுவித்து வர முயற்சி செய்யவேண்டும். அதற்குள் பணம்... பணம் திரட்டவேண்டும். வடிவு... தடியை ஊன்றிக் கொண்டு ஆற்றுப் பாலம் கடந்து ஓடுவது தெரிகிறது. சம்முகம் எதிர் வெயிலுக்குக் கண்களை சரித்துக் கொண்டு கூவுகிறார். “வடிவோய்...!... வடி...வோய்...?” அவன் திரும்பிப் பார்க்கவில்லை. இரவு முழுவதும் உறங்கவில்லை. அவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்று கூடிப்பேசி முடிவு எடுக்கவே நேரமாகிவிட்டது. படுத்த இடத்தில் மூட்டைப்பூச்சிகள், மண்டையைக் கொத்தும் பிரச்னைகள். பொன்னடியான் காந்தியைக் கட்டுவான் என்று தோன்றவில்லை. ஐயரைப் பார்க்க இப்போது நேரமில்லாமலாகிவிட்டது. வீட்டுப்பக்கம் திரும்புமுன் ஆற்றுக்கரை மேட்டில் அம்சு நிற்பதைப் பார்க்கிறார். “ஏண்டி, அங்கே போயி நிற்கற?...” வடிவு... அவனுக்காகவா? “என்னாடி?” “ஒண்ணில்லப்பா... நாவு... நாவு ஓடிட்டான்...” “எங்க?” “அம்மாளும் அக்காளும் போனாங்க. இவனும் கூடப் போறன்னு ஓடினா. ரூமில் போட்டுட்டுப் போனாங்க. ரொம்பக் கத்துனான் தொறந்துவுட்டேன்.” “அம்மாளும் அக்காளும் எங்க போயிட்டாங்க?” எப்படிச் சொல்வது? “என்னாடி நிக்கற? எங்க போயிட்டாங்க?” “கிட்டம்மா மாமி வந்து ராத்திரி அழுதிச்சி. ரெண்டு பேரும் காலம எல்லாப் பெண்டுவளயும் சேத்துட்டு, அஸ்தமங்கலம் போலீசு டேசன்ல போயி ஆர்ப்பாட்டம் செய்யப் போறாங்க...” சம்முகம் திகைக்கிறார். “பாட்டியெங்க?” “இங்கதா இந்தப் பொம்புளகளெல்லாம் சேத்துக்கிட்டுப் போகப் போவுது...” “அட? இவளுவளுக்கு இம்புட்டுத் தயிரியம் வந்திடிச்சா? ஆம்புளக எல்லாம் தொலஞ்சிட்டாங்கன்னு இவளுவ கெளம்பிட்டாளுங்களா?” “வேற ஆரு இங்க வந்தது! தேவு வந்தானா?” அம்சு இல்லை என்று தலையை ஆட்டுகிறாள். “இதென்னடா இது!...” அவர் வாயில் முற்றத்தில் வந்து நிற்கிறார். தண்ணிர் கொண்டுவரும் ருக்மணி பார்த்து விடுகிறாள். “அண்ணன் இத வந்திட்டாரு. என்னாங்க!... நாங்க பொண்டுவள்ளாம் போலீஸ் டேசனுக்குப் போறதுன்னா முடிவெடுத்திருக்கு. தண்ணி கொண்டாந்து வெச்சிட்டு, அல்லாம் போறம். நீங்க புள்ள குட்டியப் பாத்திட்டு வூட்ட பொறுப்பா இருங்க!” “அட... அம்புட்டுத் தயிரியம் வந்திடுச்சா? இதெல்லாம் ஆரு கெளப்பி வுட்டது?” “ஆரு கெளப்பி வுடணும்?... யாருன்னாலும் கெளப்பி வுடணும்னா வருமா! எப்பயும் நீங்கதா போவிய? இப்ப நாங்க போறம். பதினோரு மணி வாக்குல அல்லாம் அஸ்தமங்கலம் ரோட்டில வந்திடுங்கன்னு லட்சுமியக்கா, சொல்லிட்டுப் போச்சி. தலவரு பெஞ்சாதியாச்சே, சொன்னா கேக்கவானாம்?” சம்முகம் உணர்ச்சியை விழுங்கிக் கொள்கிறார். செவத்தையனும் கோடியான் வீட்டுத் தாத்தாவும் வெயிலில் நிற்கின்றனர். “இப்பத்தா வரீங்களா, மொதலாளி... அல்லாம் போலீஸ் டேஷன் வளச்சிக்கப் போறாங்களாம்? நம்ம பொம்பிளகளுக்கு எம்மாந் தெகிரியம் பாருங்க!” “வளச்சிக்கிடட்டம், ஆனா நாம இங்க உக்காந்திருக்கிறதா?...” அம்மா வருகிறாள். கண்களைச் சரித்துக் கொண்டு. “அல்லாரும் ரோட்டாண்ட போறாவ. சேத்துரு மதகுக்கப்பால ஒடயாரு வூட்ட போயிச் சொல்லிட்டு வாரக் காலமேயே குப்பன் சாம்பார அனுப்பிச்சிருக்கு. இவளுவல்லாம் போனா ஒரு தவ தண்ணிவோணுமில்ல?...” “அது சரி, ஆரு இதெல்லாம் இப்ப திடீர்னு கெளப்பி விட்டது அம்மா?” “ஏண்டா... ஆருன்னாலும் கெளப்பணுமா? வகுத்துப்புள்ள அந்த நேரம் வந்ததும் வாராப்புலதா. என்னா அக்குரவம்; பொம்பிள எத்தினிக்குப் பொறுப்பா? காந்தி திடீர்னு ராத்திரி எந்திரிச்சிப் போலாம்னா. பொம்பிளயப் போலீஸ் டேசன்ல வைக்க அதிகாரம் இல்ல. போயி வுடச் சொல்லுவம்னா. கெளம்பிட்டாளுவ போவட்டும்னு நானுந்தா சொன்னே. தா, ஆத்துக்கப்பால மேக்கால கெளக்கால எல்லாச் சேரி சனமும் பொம்பிளயும் போங்கடான்னு சொல்லச் சொன்னே. இந்தக் கெளவனும் கொமரிப் பெண்ணும் இல்லன்னா நானுந்தா போயிருப்பேன். வந்தது வாரது, துணிஞ்சடிச்சுப் போவம்! இனிமே என்னாத்துக்குடி பயப்படணும்? இனிமே எழக்கப் போறது ஒண்ணில்லன்னு போகச் சொன்னே...” சம்முகம் சட்டைப் பையில் கடனாகப் பெற்று வந்த ஐம்பது ரூபாயை நெருடிக் கொள்கிறார். போகாதீர்கள் என்று தடுக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், காந்தியா இவ்வளவு புகை எழும்பப் பொறி இட்டிருக்கிறாள்? வீரமங்கலத்தில் ஒரு பொதுக் கூட்டம் போட்டிருக்கிறார்கள் என்ற நினைவு வருகிறது. ஊனமுற்றோருக்கு உதவியளிக்கும் வங்கி விழா. எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய விளம்பரங்கள் தொங்கின. பெரிய சாலையில் புதுக்குடியில் ஆட்சியாளர்களை, அதிபர்களை வாழ்த்தும் வளைவுகளும் தோரணங்களும் அமர்க்களமாக இருந்தன. காவல்துறை மிகக் கெடுபிடியாக இருக்கும் இந்த நேரத்தில், இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யப் புகுந்தால் என்ன நடக்கும்? சம்முகம் வீட்டுக்குள் அடி வைக்காமலே குளத்தைச் சுற்றிக்கொண்டு வயல்களினூடே செல்கிறார். ஒரு ஈ காக்கை தென்படவில்லை. அந்த நேரத்துக்கு வெயிலும், கதிர் வந்து தலையசைக்கும் பயிரின் மென்மையான வாசனையும் அவருக்கு உறுத்தவில்லை. அம்மன் கோயில் சேரியின் முன் வண்ணார் குளத்தின் பக்கம் புதியதொரு சுவரொட்டி குடிசைச் சுவரொன்றில் தெரிகிறது. ‘ஊனமுற்றோருக்கு நல்வாழ்வு சைக்கிள் வழங்கும் திட்டம்!...’ ‘விதவையருக்கு மறுவாழ்வு - உதவித் தொகையளிக்கும் திட்டம்!...’ ‘தொழிலாளிகளுக்குச் சாதனங்கள் அளிக்கும் திட்டம்.’ அந்தச் சுவரொட்டியைத் தவிர, வேறு எதுவும் சேரியில் புதுமையாகத் தெரியவில்லை. வண்ணார் குளம் நாகரிகக்காரியின் அற்ப உடைபோல் பாசியாடை உடுத்துத் தன் வறட்சியை மறைத்துக் கொண்டிருக்கிறது. மேல் சாதியார் அங்கு வரமாட்டார்கள். அழுக்கு வண்டுகளைப் போல் சில குழந்தைகளும் சிறுவர் சிறுமியரும் பாதையில் நடந்துவரும் அவரை முறைத்துப் பார்க்கின்றனர். மற்றபடி எந்த உற்சாக உயிர்ப்பும் இல்லை. வீடுகளெல்லாம் வறுமையினால் தன் மேனி மறைக்க இயலாத குமரி, கந்தல் கொண்டு மூடி நாணிக் கண் புதைப்பதைப் போல் கண் புதைத்துக் கிடக்கின்றன. ஒன்றில் ஒரு கிழவி, மேல் சீலைக் கிழிசலுடன் இனிமேல் எனக்கென்ன என்று உட்கார்ந்து கிடக்கிறாள். “ஆயா, தேவு வூடு எங்க இருக்கு?” ஆயாவுக்குக் குரல் காட்டக்கூடச் சக்தியில்லை போலும்! கையை மட்டும் அந்தத் திசையில் அசைக்கிறாள். இதென்ன, ஊரே சுடுகாடா போயிட்டாப்புல ஆரயும் காணோம்...! படலைக்குள் சில குடிசைகள், சொறி நாய்கள். ஆட்டுப் புழுக்கைகள் நிறைந்த திண்ணையில் இன்னொரு கிழம். பிறந்த மேனியில் ஒரு பயல் அழுதுகொண்டு நிற்கிறான். “ஏண்டா அழுவுற? அம்மால்லாம் எங்க?" பையன் விசித்து விசித்து அழுவதிலேயே இருக்கிறான். நடவு, அறுவடை என்று வேலை நெருக்கும் காலங்களில் தான் குடிசைகள் இவ்வாறு வெறுமையாகக் காட்சியளிக்கும். இந்த நிலை இப்போது அசாதாரணம். மூங்கிற் பிளாச்சி போட்ட குடிசை ஒன்று நாகரிகமாகத் தெரிகிறது. பிளாச்சுக் கதவு பூட்டியிருக்கிறது. “ஏ பயலே? இந்த வூட்டுக்காரங்கல்லாம் எங்க?” யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. வெயில் உச்சிக்கு ஏறுகிறது. அதற்குள் எல்லாரும் கிளம்பி இருப்பார்களா என்ன? உள்ளுற ஒரு தோல்வி உணர்வும் எரிச்சலும் மண்டுகின்றன. சாலையைத் தொடும் இடத்தில் சாக்கால் மூடிக்கொண்டு ஒரு சிறு கடை. அங்கும் விளம்பரத்தில் ஊனமுற்றோர் உதவி, சலவைத் தொழிலாளருக்கு அமைச்சர் இஸ்திரிப் பெட்டி வழங்குகிறார். ஒருகால் மாலைக் கூட்டத்துக்கு இப்போதே எல்லோரும் போயிருப்பார்களா! சாலையில் கண்களைக் கொண்டு பார்க்கையில் சங்கக் கொடியைத் தூக்கிக்கொண்டு, நாலைந்து பேர் வருவது தெரிகிறது. இரண்டு பெண்பிள்ளைகள், மூன்று ஆண்கள். குழந்தையைத் தூக்கிக்கொண்டு வருகிறாள் ஒரு பெண். “வணக்கம் அண்ணே! நாங்க குமட்டூரிலேந்து வாரம்.” “ஆரு சொல்லியனுப்பிச்சது?” “செத்தமின்னதா, பளனி, குப்பன் சாம்பாரு மவ சைக்கிள்ள வந்து சொன்னா. அல்லா வாங்க அத்தமங்கலம் போலீசு டேசனாண்ட, தலவரப் புடிச்சி வச்சிருக்காவன்னா, ஒடனே ஓடியாரம்...” ஓரத்துக் கடையில் வெற்றிலை புகையிலை வாங்கிக் கொண்டு நடக்கின்றனர். “நாஞ் சொன்ன, தலவர இல்ல. பொம்பிளயத்தா புடிச்சி வச்சிருக்குன்னு சொன்னான்னு, நீ இல்லன்னே!... சம்சாரத்தத்தா புடிச்சிருக்காவளா, இல்ல...” “கிஷ்டா, மாரியம்மங் கோயில் நகையத் திருடிட்டான்னு அநியாயமா பழிபோட்டு வீரபுத்திரன்ங்கற தோழரையும், குஞ்சிதம்மாங்கற பொம்பிளயயும் நேத்துப் புடிச்சி வச்சிருக்கா. இந்த அநியாயத்தைக் கண்டிக்கத்தாம் போறோம் இப்ப.” குருதிச் சிவப்பான கொடி ஒன்றுதான் அவர்களுடைய வித்தியாசமான தன்மையை எடுத்துரைக்கிறது. சாலையில் செல்லச் செல்ல, ஆங்காங்கு வயற்கரைகளில் ஒற்றையும் இரட்டையும் ஆணும் பெண்ணுமாக வருகின்றனர். இவர்கள் நடவுக்கோ, உழவுக்கோ செல்லவில்லை என்பதைக் கொடிகள் இனம் காட்டுகின்றன. வீரமங்கலம் சாலை முகப்பில் மோரும் நீருமாகக் கரைத்து வைத்துக்கொண்டு கந்தசாமி வழங்குகிறான். குருவிச் சிவப்பு வெற்றிலை வாயும் நரைத்த முடியுமாக உடையார் நிற்கிறார். “வணக்கம் சாமி...” “லே, சம்முகமா, பாத்தியாட பொம்பிளகள? அப்ப முதமுதல்ல நாம புதுக்குடிக்குக் கிளம்பினமே, நாப்பத்துமுணுல? அப்பிடி இருக்கு! முழுகம் பொம்பிளகதா. காந்தி காலம வந்திச்சி, ஆறுமணி இருக்கும். குப்பங்கூட, மாமா இப்பிடி சமாசாரம். நாங்க போகப் போறம்னிச்சி. அதுக்குள்ள இவ்வளவு கூட்டம் கூட்டணும்னா அவிங்களுக்கு எத்தினி ஆக்ரோசம் இருக்கணும்?” “மந்திரி வந்து விழாவில்ல இன்னிக்கு?... இப்ப போலீசு வந்திடாது...?” “விழா முந்தாநாள்ள?... அது ஒரு சாங்கியம். கட்சிக்காரன் நாலு பேருக்கு வழங்கி எல்லாம் ஆயிப்போச்சே!...” “நா தேதியக் கவனிக்கலியா? இன்னிக்கு இருபத்தெட்டில்ல, அது இருவத்தாறு...” இவர் காந்தியையும் லட்சுமியையும் பார்க்கவில்லை. கிட்டம்மாவின் முகத்தில் சலனமில்லை. இவரைப் பார்த்து “வணக்கம் அண்ணே” என்று தெரிவிக்கிறாள். அவள் மனசுக்கு குஞ்சிதத்துக்காக இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம் செய்வது பொறுக்கவில்லை போலும்! “எத்தினி மணிக்குக் கிளம்புறாங்களாம்?” ஓரத்தில் அமர்ந்து ஒரு பெண் குழந்தைக்குப் பால் கொடுக்கிறாள். “அதா போயிருக்காவ, மின்னாடி கொஞ்சம் பேரு. பொம்புள வச்சிருக்கக் கூடாதாமில்ல! நமக்கென்ன எளவு தெரியிது!” “இதா எங்க கொழுந்தியா மவள இட்டுட்டுப் போயி கண்டமானியும் பேசினானுவ... எத்தினியோ!” ஆல மரத்துக் குருவிகள் இரைவதுபோல் ஒரு கலகலப்பு. பொழுது சாயத் தொடங்கும் நேரத்தில் இவர்கள் அணி கிளம்புகிறது. “மாதர் ஒற்றுமை, ஒங்குக!” “பெண்ணை இழிவு செய்யும் பேய்களே, ஒடிப்போங்கள்!” தேவுவின் குரல் தனித்து ஒலிக்க, பல குரல்களும் முறை வைக்கின்றன. “நிரபராதிகளை விடுதலை செய்!” “குஞ்சிதத்தை விடுதலை செய்! காவல் நிலையங்களைக் கற்பழிப்பு நிலையங்களாக்காதீர்! மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!” காந்திக்கு எங்கிருந்து இத்தனை ஆவேசம் வருகிறது? லட்சுமி பழி தீர்க்க வந்திருக்கிறாளா? நெல் அறைவை ஆலையும், பெரிய பள்ளிக்கூடமும் இடம்பெற்ற அஸ்தமங்கலத்துக் கடை வீதியில் அண்மைக் காலங்களில் கண்டறியாத பெண்கள் கூட்டம். அந்தக் காவல் நிலையம் உயர் மதிப்புப் பெற புறக்காவல் நிலையத்திலிருந்து ஏற்றம் கண்ட பின் இத்தகைய கெளரவத்துக்கு ஆளாவது இதுவே முதல் தடவை. கூட்டத்தில், ஐந்துக்கொரு விகிதமே ஆண்கள் கலந்திருக்கின்றனர். அவர்களும் விளிம்பு கட்டிக்கொண்டு நிற்கின்றனர். இவர்கள் காவல் நிலையத்தை நெருங்கு முன்பே நிலையத்திலிருந்து காவலர் மறிக்கின்றனர். “குஞ்சிதத்தை விடுதலை செய்! காவல் நிலையம் கற்பழிப்பு நிலையமல்ல!” சம்முகம் முன் பக்கம் செல்ல விரும்பவில்லை. கூட்டத்தின் பின்னே அவரும், வீரமங்கலத்து ராசுவும், சின்னையாவும், சேர்ந்தாற்போல் நிற்கின்றனர். வடிவு தடியுடன் நடுவில் மீசையை முறுக்கிக்கொண்டு நிற்கிறான். மாலை வெயில் இறங்கும் நேரம். “எல்லாம் திரும்பிப் போங்க! போயிடுங்க! இங்க ஒரு பொம்பிளயும் காவல் நிலையத்தில் கிடையாது!” “பொய்! குஞ்சிதத்தையும் வீர புத்திரனையும் இங்கு கொண்டுவந்தீர்கள், குஞ்சிதத்தை விடுதலை செய்யுங்கள்?” “இதா... ஸ்டேஷன்ல யாரும் கெடையாது. பொம்பிளய நேத்து ராவே விட்டுவிட்டோம். என்னத்துக்கு வீணா ஆர்ப்பாட்டம் பண்ணுறிங்க?” இது ஒரு சூழ்ச்சியா? நிசமா? “இங்கே பெண் யாரும் இல்லை. வீணாக ஆர்ப்பாட்டம் செஞ்சு கலவரம் பண்ணாதீங்க. போங்க!” “குஞ்சிதம் இல்லை என்பதை எப்படி நம்புவது?” “நீவாணா உள்ளாற வா...! பாரு?” “சீ!” என்று காறி உமிழ்கிறாள் லட்சுமி. “நாங்க அத்தினி பேரும் உள்ளாற வந்து பார்ப்போம்!” “இதம்மா, வீண் வம்பு பண்ணாம மரியாதயாப் போயிடுங்க. பெண் பிள்ளைகளை இரவுக்கு வைப்பதில்லை. விட்டுவிடுகிறோம். காலம ஸ்டேஷன்ல வந்து அவங்க பதிவு செஞ்சிட்டுப் போயிடுவாங்க!” “அப்ப. அந்தம்மா எங்க இருக்காங்கன்னாலும் துப்பு சொல்லணுமல்ல?” லட்சுமியும் காந்தியுமே பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். “அது நாங்க சொல்றதில்ல. வாணா காலம எட்டுமணிக்கு வருவா. வந்து பார்த்துக்குங்க!” இவர்கள் என்ன செய்வதென்று திகைக்கையில் படார் படாரென்று அதிர்வேட்டுக்களைப் போன்று ஓசை கேட்க, கூட்டத்தினிடையே இருந்து பானைத் துண்டுகள் காகிதங்கள் வெடித்துச் சிதற, “ஐயோ, சுடுறான், சுடுறான்” என்று பெண்கள் அல்லோகல்லோலமாக அந்தக் குறுகிய கடைத்தெருவின் ஓரங்களில் சிதறிப் போகின்றனர். வெளியிருந்து காலிக்கும்பல் புகுந்து தள்ளுவதைப் புரிந்து கொண்ட வடிவும், பெண்களுக்குக் காவலாக வந்த வேறு சில ஆடவர்களும் கைத்தடிகளாலும், கொடிக் கம்புகளாலும் தாக்கத் தொடங்குகின்றனர். “சட்டிக்குள்ள பட்டாசு வெடிய வச்சிக் கொளுத்திருக்கிறானுவ... நம்ம ஆளுவ அமைதியா இருங்க. தோழரெல்லாம் அமைதியாக இருங்க!” கற்கள் வந்து விழுகின்றன. சம்முகத்தின் நெற்றியை ஒரு கூரான கல் பதம் பார்க்கிறது. லட்சுமிக்குத் தோளில் அடி விழுகிறது. ஒரு நடுத்தர வயசுக்காரி மோதப்பட்டுக் கீழே விழுகிறாள். காவலரின் குண்டாந்தடி சுழன்று குழப்பத்தை அடக்க அகப்பட்டவர் மண்டையை உடைத்து விடுகிறது. ஒன்றிரண்டு வேடிக்கை பார்த்தவர்கள்கூட அவசரமாகக் கடைகளை மூடிவிட்டனர். வடிவுவின் தோள்பட்டையில் விழுந்த அடி, அவனைத் தரையில் வீழ்த்தி விடுகிறது. மீண்டும் எழுந்து பெண்பிள்ளைகள் தலைகளில் அடி விழக்கூடாதென்று தடுக்கிறான். கைகளில் ஓங்கி அடி விழுகிறது. காந்தி இத்தகைய கலவரத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. சிறுபிள்ளை உற்சாகத்துடன் முன் வரிசையில் நின்ற அவளுக்கு நெஞ்சு பதைக்கிறது. தேவு வடிவுவைத் தூக்கி நிறுத்தித் தோளில் கை கொடுத்துச் செல்கிறான். கீழே விழுந்த பெண்ணின் முகத்தில் தண்ணிரைத் தெளித்து முதலுதவி செய்யச் சிலர் விரைகின்றனர். அந்திநேரத்தில் பொல்லென்று மலர்ந்த புதரனைத்தும் மிதிபட்டுச் சிதைந்து மண்ணோடு புரண்டாற்போன்று அவர்களுடைய நம்பிக்கை உற்சாகங்கள் சிதைந்து போகின்றன. |