(தமிழ்நாடு அரசு பரிசுபெற்ற சமூக நாவல்)

2

     வேலைக்காரி மணி அடிக்கிறாள். எல்லா வீடுகளிலும் பாத்திரம் துலக்கும் தொட்டி, சமையலறையில் தான் இருக்கும். இந்த வீட்டிலும் சமையலறையில் இருந்தாலும், கேட்டுக் கொண்டதன் பேரில் வெளியே ஒரு தொட்டியும் குழாயும் பின் பக்க வராந்தா போன்ற சிறு பகுதியில் வைத்துக் கொடுத்து விட்டு மூவாயிரத்தை மூவாயிரத்தைந்நூறாக மாற்றினான் வீட்டுக்காரன்.

     வேலைக்காரி துலக்கிய பாத்திரங்களை மீண்டும் நீரூற்றிக் கழுவிக் கவிழ்த்து வடிந்த பிறகே உள்ளே எடுத்துச் செல்லலாம். சிறுவர் உடைகளை அவள் துவைத்துப் பிழிந்து மொட்டை மாடியில் உலர்த்தினால், அவளே மாலை நான்கு மணிக்கு வந்து எடுத்து மடித்து வைப்பாள். பள்ளிச் சீருடைகளே அவளே எடுத்துச் சென்று மாலை வரும் போது பெட்டி போட்டுக் கொண்டு வருவாள்.

     தலை போனாலும், கிரிஜா, குழந்தைகளின் துணிகளையோ, வேறு மடியில்லாத திரைச் சீலை போன்ற துணிகளையோ தொடலாகாது. மாமியார் இரவு ‘ஆகாரம்’ பண்ணி முடியும் வரையிலும், இவள் பெண்களின் மேல் பட்டுக் கொள்ளவும் கூடாது. பரத்துக்கு மட்டும் விலக்கு. துணி படாமல் தொடலாம். ‘பொன் முடிந்த’ துணிக்கும், புத்திரனுக்கும் தீட்டு இல்லை!

     “தீதிஜி இன்று சாயங்காலம் நான் வர மாட்டேன்!”

     பாத்திரங்களைச் சுத்தமாக கழுவி துடைத்துக் கவிழ்த்த வண்ணம் வேலைக்காரி மாயா சொல்கிறாள்.

     “ஏன்?”

     “குழந்தைக்கு உடம்பு சரியில்லை தீதிஜி. டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போகணும்!”

     “என்ன உடம்பு? நேத்துத் தெரு நாயைத் தொட்டு விளையாடிட்டிருந்தான். உனக்கு எத்தனை நாள் அந்த நாயைத் தொட விடாதேன்னு சொல்றேன், மாயா? அது சொறி நாய்!”

     “ஹா, சொன்னா கேக்கறதில்ல தீதிஜி. ராத்திரியெல்லாம் காச்சல்... சீட்டு வாங்க ஒரு ரூபா தரணும் தீதிஜி!”

     ஒரு ரூபாய் பாரமில்லை. மதியம் துணி மடிக்க அவள் வரவில்லையென்றால், இவளே இப்போது அவற்றைப் பிழிந்து உலர்த்த வேண்டும்!

     மாயாவுக்குக் கதவைச் சாத்திவிட்டு, மடியாகச் சாதம் பருப்பு குக்கரில் வைத்துச் சமையலைத் தொடங்குகிறாள். பாயாசம் வைக்கச் சொல்லி உத்தரவாகி இருக்கிறது. இவள் துணிகளைப் பிழிந்து உலர்த்தி விட்டு, நிவேதனத்துக்குச் சித்தமாகப் பாயாசத்தையும் முடிக்கிறாள்.

     ஜபம், பாராயணங்கள் எல்லாம் முடிந்து தெய்வங்களுக்கு நிவேதனமும் ஆகும் நேரத்தில் வாசலில் மணி அடிக்கிறது.

     இந்நேரத்தில் யார்... வருகிறார்கள்?

     கிரிஜா வாசற் கதவைத் திறக்கிறாள். பம்மென்று கூந்தல் எழும்ப அலங்காரக் கோலத்தில், கிள்ளி எடுக்கச் சதையில்லாமல் வெடவெட என்று உயர்ந்து...

     “என்ன கிரி? என்னைத் தெரியலையா?... கல்பனாவின் தங்கை ரத்னா. உங்க மாமியாரின் பேத்தி!”

     கிரிஜா ஒரு சிரிப்பை நெளிய விடுகிறாள். “ஓ... அடையாளமே தெரியாமே இளச்சிப் போயிட்டே... தலையை வேற எப்படியோ பண்ணிட்டிருக்கே... வா வா...”

     “நீ வராதேன்னாலும் வரத்தான் போகிறேன், வந்துட்டேன்...”

     தோளில் கையைப் போட்டுக் கொள்கிறாள். கிரிஜா கூசி உதறும் வகையில் குறுக்கிக் கொள்கிறாள். “ஏய், என்ன மாமியார் மடியா? எப்படி இருக்கா பாட்டி?”

     கைப்பெட்டியை முன் அறையில் வைக்கிறாள். முன் அறையின் கம்பளங்களையும் மூலை அலங்காரங்களையும் சுவரில் தொங்கிய ‘பதிக்’ ஓவியங்களையும் நடுவில் தொங்கிய படிக விளக்குகளையும் பார்த்து பிரமிக்கிறாள்!

     “வாவ்...! ஃபன்டாஸ்டிக்! கல்பனா தான் அட்ரஸ் குடுத்தா. அவ ரெண்டு மாசம் முன்ன ஆபீஸ் வேலையா வந்திருந்தாளாமே...?”

     “ஆமாம் ஒரு நாள் ஃபோன் பண்ணினா... பிள்ளை, அவன் அப்பா, ரெண்டு பேரையும் உன் மாமா சொன்னார்னு ராத்திரிச் சாப்பிடக் கூட்டிட்டு வந்தா. அவன் சவூதிலேந்து வந்து இங்கே ஏதோ இன்டஸ்ட்ரீஸ் ஆரம்பிக்கணும்னு வந்தாப்ல...”

     “இப்ப குடும்பமே சரியில்லே. அவன் தீடீர்னு நீ பொட்டு வச்சிக்கற, கோயிலுக்குப் போற, நாளைக்கு என் பையனுக்கு கல்யாணம் பண்ணணும்னா நீ இப்படி இருந்தா எப்படின்’னு வம்பு பண்றான் போல. இவளோ நல்ல வேலை, பதவி. ‘போடா போ, உன் பணமும் வேண்டாம். குடும்பமும் வேண்டாம்’னு வர வேண்டியது தானே? வெளில சொல்லிக்கல... வேதனை... எல்லாரும் ரோக்ஸ், ராஸ்கல்ஸ்... பதினைஞ்சு வருஷத்துக்குப் பிறகு, இப்ப ப்ளேட்ட, மாத்திப் போடறான், பணத்திமிர் இவளவ்வளவு படிப்புக்கூட அவனுக்குக் கிடையாது, வெறும் மெக்கானிக்காத்தான் இருந்தான். ஏதோ போனான் நல்ல பணம் வந்திருக்கு. இப்ப, நீ தலையில துணியப் போட்டுக்க, பேரை மாத்திக்கன்னு நிர்ப்பந்தம் பண்றான்...”

     கிரி பேசவில்லை. கல்பனா கல்லூரியில் அவளுக்கு ஒரு வருடம் இளையவள். அவள் கல்லூரி நாட்களில் வீட்டுக்கு வருவாள். இவளுக்கும் தந்தையில்லை; அவளுக்கும் தாய் மட்டுமே இருந்தாள். அந்த சிநேகத்தில், நாலைந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு இரு தாய்மாரும் எங்கோ கோவிலில் சந்திக்கையில் தான் கிரிஜாவுக்கு இந்த வரனைக் கொண்டு வந்தார்கள்.

     கல்பனாவின் தந்தை, பாட்டியின் முதல் தாரத்தின் மகன். தகப்பனார் உயிருள்ள போதே சொத்தைப் பிரித்துக் கொண்டு சென்று, குடித்துக் குடித்துத் தீர்த்து விட்டான். பிறகு நோய்வாய்ப்பட்டுச் செத்தான். தந்தை இருந்த நாட்களிலேயே இவர்கள் குடும்பம் தொடர்பில்லாமல் பங்களூரோடு போய் இருந்தது. பின்னரே கல்பனாவின் தாய், தன் சகோதரன் குடும்பத்துடன் அண்டி வந்து, தையல் தைத்துக் கொடுத்து, குழந்தைகளைப் படிக்க வைத்தாள். இரண்டு பேரும் பெண்கள்!

     “நீ... என்ன பண்ணிட்டிருக்கேம்மா, இப்ப?”

     “நான் எம்.ஏ. ஸோஷியாலஜி பண்ணினேன். இப்ப பி.எச்.டி. பண்ணிட்டிருக்கிறேன். இங்க யுனிவர்சிட்டில என் கைட் இருக்காரு. கொஞ்ச நாள் தங்கி ஃபீல்ட் வொர்க் பண்ணனும், வந்திருக்கிறேன்... சாமு, ஆபீசுக்குப் போயாச்சாக்கும்?”

     “ஜப்பான் போயிருக்கிறார். வர புதன்கிழமை வரார்.”

     “நான் நேத்தே வந்துட்டேன். எங்கம்மாவோட கஸின் ஒருத்தர் இங்கே கரோல்பாக்ல இருக்கார். அந்த அட்ரஸ் குடுத்து அங்க தான் அம்மா போகச் சொன்னா, பாவம், அவங்களே ‘பர்சாதில்’ இருக்காங்க. ரொம்ப சின்ன போர்ஷன். சரின்னு - காலம இந்த அட்ரஸத் தேடிட்டு வந்துட்டேன்...”

     “உள்ள வா, குழந்தைகள் ரூமில தங்கிக்கோ...”

     கிரிஜா அந்த அறைப் பக்கம் இந்த ‘மடி’ நிலையில் போக மாட்டாள். குளிப்பதற்கு முன் துணிகளை வாரிவந்து ஒழுங்கு செய்வாள். விசாலமான அறையில் மூன்று கட்டில்கள் இருக்கின்றன. திறந்த புத்தக அலமாரிகள், பெரிய படிப்பு மேசை, காஸெட்கள் மேசை மீதும், கட்டில் மீதும் இரைந்து கிடக்கின்றன. ரேடியோ கிராம் தூசி படிந்து மேலே கண்ட கண்ட பொருட்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறது.

     சாந்துக் குப்பி, புத்தகம், குரோஷே ஊசி எல்லாம்...

     “பாட்டிக்குச் சாதம் போடணும் ரத்னா. நீ குளிக்கணுமானால் பாத்ரூம் இங்கேயே இருக்கு. குளிச்சிக்க.”

     “ஹாய்... நீ இப்பவும் நடுங்கிட்டிருக்கியா? பாட்டி மடிமடின்னு இன்னும் உயிரை வாங்குறாளா?”

     “அதெல்லாம் கேட்காதே. நான் இங்க வந்து இப்ப நிக்கிறது தெரிஞ்சா, சாப்பிட மாட்டாள்!”

     “பட்டினி கிடக்கட்டும்! நீ ஏன் பயந்து சாகணும்?”

     கிரியின் அடி நெஞ்சில் எங்கோ போய் அந்த வினா நெம்புகோல் போடுகிறது.

     “மாமா ஒண்ணும் சொல்ல மாட்டாரா?”

     “ஹ்ம்... அதானே முக்கியமான ‘பாயிண்டா’ இருக்கு!”

     “ம்... மேல் சாவுனிஸம்! கிரி. நீங்க இப்படிக் கோழையா இருப்பதால தான் அவங்க மேலேயே இருக்காங்க...” கிரி பேசாமல் திரும்புகிறாள்.

     பூசை வழிபாடு முடித்து, விழிகளை உறுத்துப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறாள் மாமியார். இலை போட்டு சாப்பாடெடுத்து வைக்க வேண்டும்.

     “யார் வந்திருக்கா?”

     “ரத்னா!”

     வெறுப்பை உமிழும் பார்வையுடன் தலைத்துணியை இழுத்து இறுக்கிக் கொள்கிறாள். இது ஒரு கோபத்தை வெளியிடும் செயல்.

     “வந்தா, அவளோட பேசிண்டு நின்னயாக்கும்! இங்க எதுக்கு வந்திருக்கு? சாதியில்லை சனமில்லைன்னு எவனையோ கூட்டிண்டு அக்கா வந்தது; இப்ப தங்கை எவனைக் கூட்டிண்டு வந்திருக்கு? அசத்துக்கள். நம்ம வீட்டுல ரெண்டு பொண்களை வச்சிட்டிருக்கிறோம். இதுக சகவாசம் என்னத்துக்கு? தாலியில்லை, மூக்குத்தியில்லை...?”

     அவள் இங்கே தங்க வந்திருக்கிறாள் என்று தெரிந்தால் என்ன சொல்வாளோ? எல்லாம் போக இவள் எதற்கு அஞ்சுகிறாள்? இந்த வீட்டில் கிரிக்கு உரிமை இல்லையா?

     பதில் பேசாமல் இலையைக் கொண்டு வந்து போடுகிறாள்.

     கிருத்திகை. பாயாசம், சாதம், பருப்பு, நெய், தயிர், கத்தரிக்காய் துவையல், ரசம், வாழைக்காய் கறி எல்லாம் கொண்டு வந்து பரிமாறுகிறாள். குடிக்க இளஞ்சூடாக வெந்நீர்...

     ரத்னா குளியலறையில் நன்றாகக் குளித்து, துணி துவைத்து, ரயிலழுக்கு, மேலழுக்கெல்லாம் போக்கிக் கொண்டு அலசிப் பிழிந்த உடைகளுடன் வெளியே வருகிறாள். பூப் போட்ட வீட்டங்கி அணிந்திருக்கிறாள்.

     மொட்டை மாடிக் கம்பியில், தனது சால்வார் கமீஸ், பாவாடை மற்றும் உள்ளாடைகள், ஒரு சேலை எல்லாவற்றையும் உலர்த்துகிறாள். முடியைக் கட்டிய துணியால் துவட்டி, குட்டை முடியை ஷாம்பு மணம் காற்றில் கலக்க ஒன்றோடொன்று இழை ஒட்டாமல் தட்டி ஈரம் உலரச் செய்கிறாள்.

     “இந்த வீடு சொந்தமா கிரி?”

     “ஹ்ம். வாடகை... மூவாயிரத்தைந்நூறு!”

     “ஹாவ்! கம்பெனி குடுக்கும்! பாட்டி சாப்பிட்டாச்சா?”

     “ஆமாம். வா, உனக்கும் சாப்பாடு வைக்கிறேன்...”

     சாப்பாட்டறை மேசையின் மீது, விருந்தினர் பீங்கான் தட்டுக்களில் ஒன்றை எடுத்துவ் ஐத்து கிரி பரிமாற முன் வருகிறாள்.

     “வாட் அபௌட் யூ?”

     “நீ சாப்பிடு, உனக்கு போட்ட பின் சாப்பிடுவேன்...”

     “ஏன் சாதம் பத்தாமல் குக்கர் வச்சிருக்கியா? அப்ப ஆகட்டும், சேர்ந்து சாப்பிடுவோம்?”

     “ஓ... இல்லடீ!”

     கிரி சொல்லு முன் ரத்னா சமையலறைக்குச் சென்று பார்க்கிறாள். மடிச் சமையல், பாத்திரங்கள், குழம்பு, ரசம், எல்லாவற்றையும் திறந்து பார்க்கிறாள். பிறகு அவளே ஏதோ ஒரு தட்டைக் கொண்டு வந்து வைக்கிறாள். அந்தக் கையுடன் குளிரலமாரியைத் திறந்து, குளிர்ந்த நீர்ப் பாட்டிலை எடுத்து மேசை மீது வைக்கிறாள். ஊறுகாய்கள்... தயிர்...

     “ஹாய், இது என்ன ஊறுகாய் கிரி?”

     “ஸ்வீட் நெல்லிக்காய். நீ உட்காரு. நான் பரிமாறுவேன்.”

     “நத்திங் டூயிங். ஏன் என்னுடன் சாப்பிடக் கூடாதா? இவக்கா எவனையோ கட்டிண்டா, நீ சாப்பிடக் கூடாதுன்னு மாமியார் சொன்னாளா?”

     உண்மையில் இவள் வருகையில் தனது பல நாளைய வெறுப்பும் பொருந்தாமையும் ஓர் எல்லைக்கு வந்து விடுமோ என்று கிரி இப்போது அஞ்சுகிறாள்.

     “உனக்கென்ன பிடிவாதம்?... அந்த அழுக்குச் சமையல் அறையில் கீழே உட்கார்ந்து, எல்லோருக்கும் எல்லாம் வைத்து விட்டு மிச்சம் மீதியைக் கொட்டிக் கொண்டு சாப்பிட, நீ நாலு கால் இனமா? நீ எதற்காக எம்.ஏ., பி.எட்., பண்ணி, எட்டு வருஷம் வேலையும் பண்ணினே? அந்த கிரிஜா எங்கே போனாள்? இந்த மொட்டைக் கிழத்துக்கு ஏன் இப்படிப் பயப்படணும்? உனக்குச் சிந்திக்கும் அறிவு இல்லே? ஓ... கமான் கிரி...?”

     இப்படி இவளிடம் யாராவது ஒரு நாள் பரிவு காட்டி இருக்கிறார்களா? பெற்ற பெண் குழந்தைகள், கணவன், மாமியார்?

     எல்லோருக்கும் அவள் கடமைப்பட்டவள். பிரசவ காலத்தில் கூடத் தாயார் வந்து இருபத்திரண்டு நாட்கள் மட்டுமே இருந்திருக்கிறாள். பிறகு மெள்ள மெள்ள அவள் தன் வேலை, குழந்தை வேலை என்று கவனித்துக் கொள்வாள். இரண்டு மாசங்களில் முழு ‘சார்ஜை’யும் ஏற்றுக் கொள்ள வேண்டும்!

     அந்தக் காலத்தில் அவள் கணவனுக்குச் சென்னையில் தான் அலுவலகம் இருந்தது. இரண்டு பெண் குழந்தைகளும் சேரிக் குழந்தைகள் போல் உடம்பில் துணியில்லாமல் இருக்கும். கிரிஜாவுக்குத் தன் சிநேகிதிகளோ, மாணவிகளோ எவரேனும் வந்துவிட்டால் வெட்கம் பிடுங்கித் தின்னும்!

     பிறகு குழந்தைகளைக் கண்டித்துத் தன்னைத் தொடக் கூடாது என்று பழக்கப் படுத்தினாள். பெண் குழந்தைகள்... அவர்களுக்கு இளமையில் தாயின் அன்பான அரவணைப்பும் தொட்டுணரும் மகிழ்ச்சிகளும் அந்த இளம் பருவத்தில் மறுக்கப்பட்டன! இப்போது ஆண் குழந்தை என்று ‘பரத்’துக்கு அந்தக் கண்டிப்பு இல்லை! துணி படாமல் தொடலாம். தொட்டாலும் பிள்ளைக் குழந்தை!

     “ஸ்வீட் நெல்லிக்காய் வொண்டர்ஃபுல்... கிரி! என்ன சும்மா ஷ்... என்ன இது? எதுக்கு கண்ணீர் விடறீங்க? இதுதான் எனக்குப் பிடிக்கல...”

     கிரி வெட்கத்துடன் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். தட்டை இழுத்துக் கொண்டு பரிமாறிக் கொள்கிறாள்.

     “... நீங்க எக்ஸலண்ட் குக் கிரி. சாம்பாரும், இந்த சீஸ் கறியும் பிரமாதமாயிருக்கு. இதுல என்ன போட்டிருக்கிறீங்க?”

     “வெறும் வெங்காயமும் பட்டாணியுந்தான்.”

     மேசையில் இவளுடன் அமர்ந்து, எச்சிலுமில்லை, பத்துமில்லை என்று எல்லாவற்றையும் ஒரே கையினால் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதை மாமியார் எழுந்து வந்து பார்த்து விடுவாளோ என்ற குற்ற உணர்வு முள்ளாகப் பிடுங்குகிறது.

     ரத்னா ஒரு கையால் தட்டைப் பிடித்துக் கொண்டு சோற்றைத் துவையலுடன் கலந்து கொண்டு, அதே கையினால் சாம்பாரையும் எடுத்து ஊற்றிக் கொள்கிறாள். ரசித்துச் சாப்பிடுகிறாள்.

     “இப்படிச் சாப்பிட்டு... வருஷங்கள் இருக்கும்... ரொம்ப நல்ல காம்பினேஷன் இந்த சாம்பாரும் துவையலும்!”

     பாராட்டுக்களை அள்ளிச் சொரிகிறாள். கிரி தனது சாப்பாட்டை ஐந்தே நிமிடங்களில் முடித்துக் கொள்கிறாள். ஆனால் அவள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு, கபடமற்ற அவள் தன்மையினால் கவரப்பட்டவளாக அமர்ந்திருக்கிறாள். வாழ்க்கையை நேராக நின்று அறைகூவல்களைச் சமாளிக்கும் துணிவு அவளிடம் இருக்கிறது. தான் மட்டும் ஏனிப்படி அஞ்சிக் குறுகிக் கூனிப் போக வேண்டும்...?

     தட்டைச் சுத்தமாகத் துடைத்துவிட்டுக் கை விரல்களையும் நாக்கால் நக்கிக் கொண்டு ரசிக்கிறாள் ரத்னா.

     “கொஞ்சம் தயிரும் சாதமும் போடட்டுமா?”

     “ஓ... நோ... வயிறு ஃபுல் கிரி. இனிமேல் இடமில்லை...”

     “பாயசம் சாப்பிடு...!”

     “ஓ! அது வேற இருக்கா? சரி கிண்ணத்தில் கொஞ்சமாக விடுங்க!”

     கிரியும் சிறிது கிண்ணத்தில் ஊற்றிக் கொள்கிறாள்.

     நௌ... டெல் மீ கிரி. உங்க அறிவு, உங்க திறமை எல்லாம் இந்தச் சமையலறைச் சேவகத்தில் முடங்கி இருக்கே. கிரி, ஆர் யூ ஹேப்பி வித் திஸ் லைஃப்?”

     கிரிக்கு மீண்டும் கண்ணீர் கொப்புளிக்கிறது. வேதனையுள்ள இடத்தை நேரடியாகக் குத்திக் கொண்டு வருகிறாள் ரத்னா.

     “... இந்தக் கிழத்தை, மொட்டைத் தலையைக் கண்டால் எப்படி ஆத்திரம் வருதுங்கிறீங்க? இதுவே போயி தலைய மொட்டையடிச்சிட்டு வந்திருக்கு. சாமிகளைப் பார்க்கணும்னு. கிரி எனக்கு இதுக ஸைக்காலஜியே புரியல. அப்பெல்லாம் அந்தக் காலத்தில தாத்தா செத்துப் போனப்ப, இவளுக்கு அதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு காவலா நின்னாராம். நான் சின்னவ, எனக்கு அவ்வளவா விவரம் தெரியல. உண்மையில எங்கப்பா அம்மாவை தாத்தாவை விட்டுப் பிரிச்சு, அடிச்சி விரட்டியதே இவ தான். அப்பா பேரிலே தப்பு இருந்திருக்கும். இல்லேங்கல; ஆனாலும் இவளுக்கு என்னிக்குமே குடிலமான எண்ணந்தான். சிரிச்சே பார்த்ததில்ல... பாட்டின்னா, கிட்ட வராதே தொடாதேன்னு பயந்தான்...”

     “இப்ப இதெல்லாம் எதுக்கு ரத்னா? நீ எழுந்து கையலம்பு...!”

     “கை கழுவுறது கிடக்கட்டும். உங்களைப் போல எம்.ஏ. பி.எட். படிச்சி சுயமா எட்டு வருஷம் வேலை செய்யிறவ இவளுடைய முட்டாள்தனமான ஆசாரத்துக்கு உட்படுவாளா? இது என்ன மடி. ஆட்களை வதைச்சிட்டு? இவ பிள்ளை, அங்கே இங்க போறானே, மாட்டுக் கறியும், பன்னிக் கறியும் சாப்பிடாமலா இருப்பான்? உங்களை இப்படி வதைக்கிறது மட்டும் என்ன நியாயம்?”

     “அடீ, ரத்னா... கத்தாதே. அவ காதுல விழுந்துடப் போகுது... இப்ப எதுக்கு ரகளை வீணா?”

     இனிப்பும் கரிப்புமாகக் கண்ணீர் பொங்கச் சுண்டி எறிகிறாள். ரத்னாவைத் தழுவிக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. இந்த ஈரமற்ற மடிக் கூட்டில் மனித சிநேகமில்லாமல் தவிக்கும் அவளுக்கு, சிநேகத்தின் இழைகள் இன்னும் தாபத்தைக் கிளர்த்துகின்றன.

     “கேட்கட்டுமே...? அப்படியானால் இந்த மாமியார், பெரிய அறிவாளி இண்டலக்சுவல், ஏகப்பட்ட சமூக - பதவிப் பொறுப்புக்களை ஏற்றவர். அவருக்கு ஊழியம் செய்வது ஒரு கடமை என்றிருந்தாலாவது, நாம் ஒப்பலாம். அதுவும் கூட நாம் தன்மானத்தைக் கொல்ல வேண்டியதில்லை. ஆனா... இங்க என்ன? நீங்க எவர் வீட்டுப் பெண்ணோ? இவ பையன் தாலிக் கட்டியதால அடிமை... அம்மா முன்ன ஒருக்க மட்ராசில வந்தப்ப பார்த்தாளாம். ‘கவிதாவும் சாருவும் பாவம், உடம்பிலே துணியில்லாமே மழைத் தண்ணியிலே அலைஞ்சு நெஞ்சு கட்டியிருக்கு. ஒரு கம்பளிச் சட்டையை பாந்தமில்லாம போட்டி வச்சிருக்கா’ன்னு வேதனைப்பட்டாள்... இந்த யுகத்தில் எந்தப் பொண்ணானும் உங்களைப் போல் இருப்பாளா?”

     “டெல்லிக்கு வந்தப்புறம் கொஞ்சம் மட்டு. பரத்துக்கு ஒண்ணுமே கட்டுப்பாடு இல்லை.”

     “புள்ள சாதிக்கப் போறான். இவ புள்ள ஒரு பெண்ணைக் கட்டி அவளை வதைக்க முழு அதிகாரமும் குடுத்திருக்கான்ல? கிரி, சாமு ஒண்ணுமே சொல்ல மாட்டானா?”

     “...ஐயோ! எங்கம்மா வயசானவ. அவ இருக்கிற கொஞ்ச வருஷம் நாம் அவ இஷ்டப்படி தான் நடக்கணும்னு கல்யாணம் ஆன அன்னிக்கே சொல்லிட்டார்...”

     “கொஞ்ச காலம்னு நூறு வயசு அவ ஜம்முனு கொடுங்கோல் ராணியா இருப்பா. நீங்க இருக்க மாட்டீங்க! அற்பாயுசில தேஞ்சு போயிடுவீங்க! அவ புள்ள தெரிஞ்சுப்பானா! நான் இப்ப வந்து கேக்காமயா இருப்பேன்?”

     “ரத்னா, ப்ளீஸ், நீ பாட்டில எதையானும் சொல்லிட்டுப் போயிடாதேடீ! குடும்ப ‘ஹார்மனி’ முக்கியம்...”

     “அந்த ‘ஹார்மனி’ நீங்க வெறும் பூச்சியா, மெஷினா உழைக்கிறதில தான் இருக்குன்னா, அது கேவலம். எல்லா சுரங்களும் ஒத்து இணைஞ்சாத்தான் ‘ஹார்மனி’ங்கற அம்சம் வரும். ஒரே பார்வையில் ‘ஹார்மனி’ கிடையாது!”

     ஒரே போடாகப் போட்டு விட்டு ரத்னா எழுந்து செல்கிறாள்.



சுழலில் மிதக்கும் தீபங்கள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15