உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
32 “வாங்க வாங்க... நீங்க இங்க சாப்பிட வருவீங்கன்னு மத்தியானமே சொன்னேன். இந்நேரமாச்சி?” என்று இராமலிங்கம் வரவேற்கிறார். “எப்படிங்க? வீட்டிலேந்து அவங்கல்லாம் போன பிறகு, கழுவி கிழுவி எல்லாம் சுத்தம் பண்ணினம். போட்டது போட்டபடி கெடக்கு. ஓடியிருக்காங்க. அந்த ரெண்டு வீட்டிலும் ஆரும் இல்ல. எதோ திட்டத்துல கட்டின வீடாம். அரசு, ஆட்சி மாறிட்டதாம், குடி இருக்க வுடலயாம்... போலிசுக்காரத் தம்பி நல்லவரு...” “இந்த வூர்ப்பையன் தாம்மா, கருப்புசாமிப் பூசாரி மக, சிவசாமி தெரியுமா? அவம் பையன். கடேசிப் பையன். போலிசுன்னு சொல்றம், பந்தோபஸ்து காவல்னு உசிரைப் பணயம் வச்சிட்டு ட்யூட்டி பண்றானுவ. எதேனும் அங்கொண்ணு இங்கொண்ணு அடாவடி இருக்கும். ஆனா, மொத்தக் கட்சிகளும் ஆட்சியும் லஞ்சப் பணத்துல அமையும் கலாசாரத்துல என்ன நடக்கும்?...” “உக்காரம்மா, ஏன் நிக்கிற? என்ன சாப்புட்டீங்க?” அவள் சொல்கிறாள். பெரிய கூடம். மேலே உயர்ந்த கட்டுமானம். குழல் விளக்கை உள்ளிருந்து வரும் பணியாளன் பொருத்துகிறான். “ட்யுப் வாங்கிட்டு வந்து பொருத்தினியா? எப்ப?” என்று அவர் கேட்கிறார். “மத்தியானம் சைக்கிள்ள புதுக்குடி போயி வந்தேன்” என்று அவன் சொல்கிறான். உயர, காந்தி படம். அய்யா படம், அவருடைய தாயார், தகப்பனார் படங்கள் இருக்கின்றன. “நாமட்டும் இந்த வூட்டுல அதே குடும்பத்தின் தலை முறையாக இருக்கிறேன்...” “அப்ப பொம்புளங்க யாரும், இல்லய்யாய்யா?” “பொம்புள ஆம்புள ஆரும் இல்ல. சம்சாரம் போயிட்டா. மூணு புள்ள, ஒரு பொண்ணு. பொண்ணும் போன வருசம் தவறிப்போயிட்டா. ஒரு புள்ள டெல்லில இருக்கிறான். ரெண்டுபேர் யு.எஸ்.ல இருக்காங்க பேத்தி, மகவயித்துப் பேத்தி வந்திருக்கா. விவசாய, விதை வீரிய விதைன்னு ஆராய்ச்சி பண்ணி அமெரிக்கால பட்டம் வாங்கியிருக்கா. இப்ப இங்கே வந்திருக்கிறா. ஹைதராபாத்ல வேலை எடுத்திட்டிருக்கா...” “கலியாணம் கட்டலியா?...” “இந்தக் காலத்துல, அவங்கவங்க சொதந்தரம். தவுர, கலியாணம் பண்ணி நகை நட்டப் போட்டுக்கிட்டு, புருசன் கூட ஜாலியா இருக்கணுன்னுற ஆசையவுட, இந்த மாதிரி இளந் தலைமுறைகள், புதுசான சமூக உணர்வோட செயல் படுறாங்க. எல்லாரும் புதிசா விஞ்ஞானம் படிச்சாலும், ஆகாசத்துல பறக்கிறதோ, அணு யுத்தம் பண்ணுறதோ பெரிசுன்னு நினக்கல. இந்த நாட்டு வறுமைகள் ஏன் தொலையல, ஏன் வெட்டு குத்துன்னு வாராங்க? ஏன் இந்தப் பன்னாட்டு முதலைகளுக்கு இரையாறாங்கன்னு சிந்திக்கத் தொடங்கிட்டாங்க. இன்னிக்கு இந்த கிராமங்கள் தேடி வந்திருக்கு ஒரு கூட்டம். நீங்க பாத்திருப்பீங்களே? அங்கே சம்பாதிச்சி, நிதி திரட்டி, தாய் நாட்டு சமூக சேவைக்கு வந்து செயல்படுறாங்க.” மனசு பொல்லென்று பூக்கிறது. “நம்ம பேரப் பொண்ணு எதுங்க? ஒரே சைசில அஞ்சாறு பொண்ணுங்க இருக்காங்க...” “சாதி இனம், மதம் இல்ல, முஸ்லிம் கிறிஸ்தவர் இருக்காங்க. கறுப்பா ஒரு பொண்ணு எடுப்பான பல்லோட முடியக் கட்டிட்டுப் பாத்திருப்பிங்களே?...” “ஆமா, அதான் பேத்தியா?” “அது மத்ய பிரதேசத்து ஆதிவாசிப் பொண்ணு. ஃபோட்டோ கிராஃபராம். நம்ப முடியல. சுதந்தர பாரதத்தில கண் முன்ன நிறைய அழிவுகளைத்தான் பார்க்கிறோம்னு எனக்கு மனசு ரொம்பத் தாங்கலா இருந்தது. நீங்க பாத்திருப்பீங்க, அழகாபுரி நிசமாவே அழகாபுரியாத் தான் இருந்திச்சி. சாராய கலாசாரம், டி.வி. சீரழிவு, வந்து தா முன்னேறப் பாக்குறவங்களையும் காலவாரி இழுக்குது... நீங்க வரப்ப, பன ஒலக்குடிசைப் பாத்திருப்பீங்களே? அதெல்லாம் சம்பாதிச்சும் சாராயத்திலும் லாட்டரிச்சீட்டிலும் சீரழியும் சனங்கள்...” இவர்கள் பேசும் போதே அவர்கள் எல்லோரும் வரும் அரவம் கேட்கிறது. “அழகாயி கோயில்ல மண்டபம் கட்டிருக்காங்க, புதுசா வர்ணம் எல்லாம் அடிச்சிருக்காங்க. ஆனா, ஒரு பெரிய வேப்பமரம் உண்டு. பெரிய எடத்த அடச்சி, புள்ளயாரை வெளியே தள்ளி, எதுக்கு மதில் எழுப்பி கேட்டுப் போட்டு, பூட்டுப் போட்டிருக்காங்க அய்யா? கெணறு கூட உள்ள அம்புட்டுக்கிச்சி, பொங்கல் வைக்கிறது, கூத்துக்கட்டுற தெல்லாம் இல்லியா?...” “உள்ளுக்குள்ள பலிபீடம், சூலம் எல்லாம் இருந்திச்சி. இருக்கும். பெரிய உண்டியல் பொட்டி இருக்கு. முன்னெல்லாம் அழகாயி ஏழையா இருந்தாம்மா. மிஞ்சிமிஞ்சி வெள்ளில கண் மலர்தாம் போடுவாங்க. சுத்தி நந்தவனமா இருந்திச்சி. வாய்க்கால்கரை பூர அடுக்கரளி பூத்திருக்கும் கலர்கலரா, வள்ளை ரோசு, சேப்புன்னு. இப்ப இருக்கா?” “இல்லீங்கையா...” “ஊத்தங்கரக்காரர் தா இப்ப கோயில் நிர்வாகம் முழுசும். கறுப்பு துட்டு சேத்தவனெல்லாம், அம்மனுக்கு திருவாசி, அது இதுன்னு வெள்ளி தங்கம் போட்டாங்க. திருவிழாவுக்கு எங்கேந்தோ, ரிகார்ட் டான்ஸ் போல பொம்புளகளக் கூட்டி வந்தாங்க. சாராயம் சண்டைன்னு ஆயி ஒரு வருசம் வெட்டு குத்துல திருவிழாவே நடக்கல. சின்ன காம்பவுண்ட பெரிசாக்கி பெரிய கதவு போட்டுட்டுப் பூட்டிட்டாங்க. நம்ம தெரு கோயில் விசயத்தில் எதுவும் காதுல போட்டுக்கிறதில்ல. இங்கே நாலாவது வூடு... மின்ன, உங்களுக்குத் தெரியாது, நம்ம ஒறவுதா. உம் புருசனுக்குக் கூட சொந்தம் உண்டு. அவங்கல்லாம் அப்பவே ஊரை வுட்டுப் போயி, பூட்டியே கெடந்திச்சி. அத்த வெலக்கி வாங்கிட்டு, இப்ப கூட குடை - ஆன்டெனா இருக்கும். கேபிள் டி.வி வச்சான். அவன்தான் எதே ஒரு கழகக்கட்சி. இப்ப எதுன்னு தெரியாது. ஒருநா ராவுல புள்ளாரப் பேத்து, வாய்க்காக்கரை மரத்தடில வச்சிட்டானுவ. உண்டிப் பொட்டி உடச்சிருக்கு. டாய், டுய்னு சண்ட நாறிச்சி. கோர்ட்டு கேசுன்னு போனானுவ. முன்ன, அழகாபுரத்து ஆளுதா, வள்ளுவகுலம், நல்லபையன், தமிழ் படிச்சவன், அவந்தா தமிழ்ல பூசை பண்ணுவா. அவனை வேணான்னு பழிபோட்டுட்டு, மல்லிகா புரத்திலேந்து ஒரு அய்யர் பய்யனைக் கொண்டாந்து வச்சாங்க. அவன் சைக்கிள்ள வந்து, அங்கியே ஒரு பொங்கலப் பொங்கி, பூசை பண்ணுவான்னு சொன்னாங்க. இப்ப, அந்த திருட்டுக் கல்யாணத்துக்கு அவன் உடந்தை. துபாய்ப் பையன் துலுக்கனாயிட்டான். அவனை இந்த அய்யர் பையன், ஒரு ஸ்கூல்ல படிச்ச சிநேகம்னு ஒரு பட்டாச யாரோ கொளுத்திப் போட, அந்தப் பய்யன் எந்த திக்கில ஓடினான்னு தெரியல...” அவள் மவுனமாக இருக்கிறாள். எல்லோரும் உள்ளே வருகிறார்கள். ஒரு பெஞ்சும் ஒரு பழைய கால பிரம்பு பின்னிய சாய்வு நாற்காலியும், இரண்டு மர நாற்காலிகளும் இருக்கின்றன. ராமலிங்கம் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கிறார். தாயம்மா பெஞ்சில் அமர்ந்திருக்க, கன்னியம்மா, ஒட்டி நிற்கிறாள். அவர்கள் எல்லோரும் பெஞ்சிலும் தரையிலுமாக உட்காருகின்றனர். “எல்லாம் பாத்தீங்களா?” “பார்த்தோம். மூணு அரிவாள், குத்துகம்பு... என்ன அது?” என்று அந்தப் பெண், தமிழில் பேசியவள் கேட்கிறாள். “இவதா, எம்பேத்தி. செங்கமலம்... இதா... விக்ரம்... உங்க வீட்டுப் பேரன், ஒரே வாரிசு.” “இது சூஜி... மத்யப்பிரசேத்திலேந்து வந்திருக்கு இது, லீலா, ஒரிசா, இவன் தினு... வங்காளம், இது, மாயா... மணிபுரி... இதோ இந்த வீட்டு சிங்காரம்... உசரமா பாக்குறாரே? அவரு காலித்...” எல்லாரும் அவள் காலைத் தொட்டு, வணங்குகிறார்கள். எல்லாரையும் முகத்தை வழித்து திருஷ்டிகழிக்க நெஞ்சு குழைகிறது. “நீங்க எல்லாரும் எங்கேந்து வரீங்கய்யா?” “காலித், தினு, லீலா, இவங்கல்லாம் ஏற்கெனவே இங்க பிராஜக்ட்ல பங்கெடுத்துக்கிட்டிருக்கிறாங்க. நீர் பராமரிப்பு, தூருவாருதல், இறால் பண்ணை எதிர்ப்புன்னு இயக்கங்கள்ள சம்பந்தப்பட்டிருக்கிறாங்க. அடிப்படையில், நமக்கு ஜனநாயக உரிமை இருக்கு. எங்க தாத்தா பாட்டி காலத்திலேயே வந்தாச்சி. அப்ப ஏன் வறுமை தொலையல? இந்தக் கட்சிகளெல்லாம் ஏன் எல்லாப் பிரச்னைகளுக்கும், சரியா தீர்வு காணாமல், இருக்கு. மக்களெல்லாம் நாம சரியான ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருக்கிறோம்னு உணரல? ஏன் இவ்வளவு லஞ்சம்? சாராயம்... எங்க அமைப்பு, ஒரு கிராமத்துல சாராயமே இல்லாம மாத்தி முழு வெற்றி பெற்று இருக்கு அது மாதிரி பெண்களுக்கு, விழிப்புணர்வு கொண்டு வந்து மாத்தற திட்டம். முதல்ல, வன்முறைய மாத்தணும்... இங்க தமிழ்நாட்டில் இருபத்தஞ்சு வருசம் போல மதுவிலக்கு நடைமுறையில் இருந்ததாம்...? தாத்தா சொல்றாரு...” “ஆமாம்மா, இருந்திச்சி. எங்கோ சில மீறல்கள் இருந்தது. பள்ளிகள், கல்லூரிகள், ஆபீசுகள்னு, குடி ஒழிஞ்சிருந்தது. திருட்டை ஒழிக்க முடியல. அந்த புத்தி எப்பிடியோ வருது. அதுக்காக காவல் துறையே வேணாம்னு சொல்றாப்புல, மதுவிலக்க எடுத்தாங்க...” “ஆமா, இப்ப அதைவிட்டுடுங்க. தாத்தா, ஊத்தங்கரைக்காரங்களும் அழகாபுரிக்காரங்களும், வெட்டிக்கிட்டாங்க. யாருக்கு நஷ்டம்? இதை உணரச் செய்யணும். இந்த ஊரு ஆளுக, அந்த ஊரு ஆளுகள சேத்து வச்சி. என்னென்ன குறைன்னு புரிஞ்சிட்டு, நல்ல குடியாட்சி மக்களாக உரிமையுடன் செயல் படச் செய்வோம்...” “அப்ப நீங்கல்லாம் வெவ்வேறு இடத்திலேந்துதா வந்திருக்கீங்களா?” “எல்லாரும், இந்த நாட்டுல பிறந்தவங்கதா பாட்டி. ஆனா, இந்த விக்ரம், தினு இரண்டு பேரும் அமெரிக்காவில் இருந்து வந்திருக்காங்க. அநேகமாக எல்லாரும் படிக்கணும், ஆராய்ச்சின்னு போனோம். ஆனா இப்ப, எங்க பிறந்த நாட்டுக்கு எதானும் பண்ணனும்னு வந்திருக்கிறோம், ஆயா...” அவளுக்கு எதுவும் பேச முடியாத நிறைவில் மனம் துளும்புகிறது. “விக்ரம் தம்பி, என்ன உங்களுக்கு நெனப்பிருக்கா?... இத்தினி நாளா நா உங்களப் பாப்பனான்னு கெடந்தே. உங்க தாத்தா வச்ச சொத்து... அது அழியிது. மரத்த வெட்டி னாங்க.” துக்கம் தொண்டையை அடைக்கிறது. “தாயம்மா, அவங்க வச்ச சொத்து என்னிக்குமே அழியாது. ஆராலும் அழிக்க முடியாது, நம்ம காலத்துல அது நிரூபணமாகுது. இம்சையில் இருந்து அஹிம்சைதான் வர முடியும். இருட்டுக்குப்பின் உதயம்தான்னு இந்தப் பிள்ளைங்க நிரூபிக்கிறாங்க.” “கோயில் கதவு சாத்திருக்கு. சூலத்தை கேட்டுக்கு முன்னாடி நட்டு வச்சிருக்காங்க. எதோ, பயங்கரமா...” “இவுரு அத்தையும் ஆட்டிப் படுக்க வச்சாரு. ஆக, பூட்டின கதவுக்கு முன்ன எங்களுக்குப் புதரிலும் அங்கும் இங்கும் கிடச்ச ஆயுதங்கள கோயிலுக்கு முன்ன போட்டு நாங்க சரணடஞ்சிட்டோம்... தாத்தா!” விக்ரம் சொல்கிறான். “அதுவும் சரிதான். இப்ப காந்தி இல்ல; வினோபா இல்ல; ஐய பிரகாஷ் நாராயணனும் இல்ல...” விக்ரம் அவளையே பார்த்துப் புன்னகை செய்கிறான். அவளுக்கு அசைப்பில், ராதாம்மா மாதிரி, அவள் தந்தை மாதிரி, தாய் மாதிரி தோன்றுகிறது. “முன்ன, உங்களுக்கு நினப்பிருக்கா?. நான் குழந்தையா இருக்கையிலே, அம்மா, ரயில்வே ஸ்டேஷன்ல, ஒரு கலைடாஸ்கோப். வாங்கிக்குடுத்தா. கண்ணுல வச்சி திருப்பித் திருப்பிப் பாத்திட்டிருந்தேன். இங்கே, எல்லாரிட்டயும் காட்டினேன். நீங்க எனக்கு சோறுட்டினிங்க. அதை வச்சிப் பாத்திங்க. பிறகு, அத உக்காந்து நானே ஒட்டின காகிதம், போக தண்ணில போட்டு வெளயாடி எல்லாம் பிரிச்சிட்டேன். கண்ணாடித்துண்டெல்லாம் கொட்டிப் போச்சு. உங்ககிட்ட ஒட்டித்தா ஒட்டித்தான்னு அழுதேன்.” அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். அவன் அதே சம்பவத்தை இந்தியில் சொல்கிறான். புரியாதவர்கள் இப்போது சிரிக்கிறார்கள். ஆனால் தாத்தா இந்தக் கலகலப்பில் கலந்து கொள்ள வில்லை. “நம்ம கலாசாரம், அஹிம்சை, எளிமை, ஒழுக்கம் எல்லாம் இப்படித்தான் பிடிப்பு விட்ட கண்ணாடித் துண்டுகளாயிட்டன. ஆனா இளைய வாரிசுகள் அன்னிக்கு வெள்ளைக்காரனை எதிர்த்து, எல்லாரும் ஒரே இலட்சியத்தில் கூடினாப்பில வந்திருக்கிறீங்க. அதுதான் ஆறுதல்...” என்று ஆழ்ந்த குரலில் பேசுகிறார். “அன்றைய மாதிரி இல்லை” என்று காலித் சொல்லும் போது, செங்கமலம் ஆமோதிக்கிறாள். “நம் வரலாற்று ஆராய்ச்சி அண்ணன் சொல்வது சரி. சுதந்தரப் போராட்டத்தில் வெள்ளையனை வீழ்த்தனும் என்ற குறிதான் பொது. முதல்ல, அது துப்பாக்கி கலாசாரத் தில்தான் வெளிப்பட்டது. ஹிட்லர், ஜப்பான்னு, நேதாஜி யின் ஐ.என்.ஏ. வரை போச்சு. காந்தியின் அஹிம்சையின் இலக்கு பிரிட்டிஷ்காரனை மட்டும் அப்புறப்படுத்தியது. இது அப்படியில்லை. “சரியாச் சொல்லணும்னா பெரும்பான்மையான பேருக்கு அப்பவும் சுதந்தரத்தப் பத்தி எந்தத் தெளிவும் திட்டவட்டமான கருத்தும் இல்லன்னு தோணுது. அப்படி இருந்தால், இப்பவும், சுதந்தரம்னா என்ன, மனிதருடைய அடிப்படை உரிமைகள் என்னன்னெல்லாம் எதுவுமே தெரியாத அதே பெரும்பான்மையை வச்சி குடியாட்சிங்கற பேரில, ஒரே குப்பை கூள மக்களாச் சிதறவிட்டிருக்காது... இப்ப எனக்கெல்லாம் இந்தப் பராம்பரியம் பற்றி, உணர்வு பூர்வமா ஒண்ணுமே தெரியாது. ஆனா, நான் ஒம்பது வருசமா வெளிநாட்டில இருக்கிறேன். அப்பப்ப வருவேன். அப்பாகூட ஒருவாரம், அங்கே இங்கேன்னு வரப்பதான் பிரச்னைகள் புரியிது. காவேரி, வாய்க்கால், கோயில், நம் கொள்கைகள், மனிதநேய உறவுகள் எல்லாம் சிதைந்து போன பிறகுதான் அருமையாகத் தெரியிது...” “சிதையாது... கொண்டு வருவோம்... மீட்போம்” என்ற தொனியில் சூஜி - கையை உயர்த்திக் காட்டுகிறாள். “எதை, சாதி, மதம், தீண்டாமை, பெண் ஒடுக்கல், இதெல்லாமா? இவை யெல்லாமும் இங்கே இந்திய கலாசாரப் பண்பா இருந்திருக்கு, மறக்காதே!” சிரிப்பு, கூடவே கடுமையான முகங்கள். “அதாவது, பழையன சிலது கழித்து, புதியது புகுத்தி...” இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கையில், கன்னியம்மா, சிங்காரம், காலித், லீலா ஆகியோர் பின்புறம் நழுவி விட்டதைக் கவனிக்கவில்லை. “தம்பி, நீங்க...” என்று தாயம்மா துவங்குமுன் அவன் அருகில் வந்து கைபற்றிக் கொள்கிறான். “என்னப் போயி நீங்க நாங்கன்னு? நா உங்க பேரன்...” “சரி, சரி... ராசா... நீங்க...” “இதானே, ராசாவும் வாணாம். நீங்க போன வாரம், அநு ஆன்டியப் பாத்தீங்களாம். உங்க வீட்ட எதோ மல்டி நேஷனல் நிறுவனத்துக்கு வுடறாங்க, மரத்த வெட்டினாங் கன்னு சொன்னிங்களாம்.” “நீ வூட்டுக்குப் போனியாப்பா? குருகுலத்துல உங்க தாத்தா வாழ்ந்த காலம் நினைப்பு இருக்குன்ன. இப்ப பாத்தியா?” “நான் போகல. நான் நேர ராஜாப்பூர் போன. பஹ்ரி கட்வால பக்கம், அப்பா அங்கதா, சிப்கோ மூவ்மென்ட்ல ஆக்டிவா போராடிட்டிருக்காரு. பிளாஸ்டிக்குப் பைய சுத்தப்படுத்துவது, விழிப்புணர்வூட்டுவதுன்னு, அவரோட நிறையப் பேர் இருக்காங்க. சுப்பய்யான்னு ஒருத்தரப் பார்த்தேன். அவுரு உங்ககூட ஏதோ கோயிலுக்கு வந்தாராம். வெறி நாயி கடிச்சிச்சாம்...” “அப்பா, எல்லாம் சொல்லிட்டானா?...” “ஆமா, தம்பி, அங்க நீங்க போய், ஒரு வெறி நாய் ஒழிப்பு மூவ் மென்ட் செயல் படுத்துங்கன்னாரு எதோ மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்தார்...” “நீ வீட்டுக்குப் போகலியா?” “செங்கமலமும் நானும் வாசலோடு போனோம். சாமானெல்லாம் லாரில ஏத்திருந்தாங்க. நேரா அநு ஆண்டியப் பார்த்தோம்.” “அவங்க உங்களுக்குத் தெரியுமா... இல்ல, உனக்குத் தெரியுமா?” “நிசாவும், வினோதும் எனக்கு ரொம்பப் பழக்கம். நிசா ஸ்டேட்ஸ்ல, ‘தியேட்டர்’ ஸ்டடீஸ்க்கு வந்திருந்தா, எதோ ஸ்காலர்ஷிப்ல. வினோத் அருமையான ஆக்டர். ரெண்டு பேரும் டெடிகேஷனோட ஈடுபட்டவங்க. ஸஃப்தர் ஆஷ்மியக் கொன்னாப்புல அவனக் கொன்னிட்டாங்க... இந்த நிறுவனங்களுக்கு எதிரா, தட்டிக்கேட்டா, உடனே தீவிரவாத முத்திரை விழுந்திருது. அதுவும் செப்டம்பர் 11க்குப் பிறகு, இந்த பயம், நிரபராதிகளையே தீவிரவாத விலங்குக்குள் தள்ளுது. அதா, ரொம்ப கவனமாச் செய்ய வேண்டியிருக்கு. அப்ப எனக்கு, ஐ மீன், அநு ஆண்டியோட பேசுறப்ப, நீங்க இங்க வந்திருப்பீங்கன்னு தெரியாது. உங்க மகன் வீட்டுக்கு அனுப்பிட்டதாகவும் மயங்கி விழுந்ததாகவும், அம்ருத்சிங் அங்கில் விசாரிச்சிட்டு வந்து சொன்னாராம். அது கூட, உங்க மகன் இறந்த சேதி சொன்னப்ப நீங்கதா இறந்திட்டீங்களோன்னு குழம்பி ஃபோன் போட்டாங்களாம். ரெஸ்பான்ஸே இல்லைன்னாங்க...” “நாங்க போனதுல, அந்த ஆன்டிக்கு ரொம்ப சந்தோசம். இப்ப நிசாகூட எங்க ப்ராஜக்ட் எதுலானும் ஆக்டிவா செயல் படுறேன்னிருக்கா. அவங்களுக்குப் பூவனூர் போகணும்னு ஆசை. தாத்தா, அங்கே அவங்க அத்தை அந்த காலத்து ஃப்ரிடம் ஃபைட்டராமே? டி.பி வந்து இறந்து போனாங்களாம். ரொம்ப ‘டேர் டேவில்’னு சொன்னாங்க. ட்வென் டீஸ்ல, வீட்டுக்குள்ள ஒரு தாழ்த்தப்பட்ட அரிசனப் பெண் குழந்தைய எல்லோருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாம கொண்டு வந்து வளர்த்தாளாம்... எங்க சம்பு அத்தைய நான் படத்துலதான் பார்த்திருக்கிறேன். எங்கம்மா வும் அவளும் ஒண்ணா சாப்பிட்டுப் படுத்து, படிச்சி... அந்த காலத்துல தாலுகாபீசு முன்ன போயி, ‘மகாத்மா காந்தி ஜே’ன்னு கத்தினாளாம்?” பூஞ்சாரல் விசிறி அடிக்கிறது. “அநும்மா, கமலி மகளா நீ?...” “ஏம் பாட்டி அழுறிங்க...?” “ஒண்ணுமில்ல தாயி, அந்த தயிரியம், நேர்மை, துணிச்சல், எல்லாம் உங்களுக்கு வரும். வந்திருக்கு...” “என்ன, எல்லாம் பேசிட்டிருக்கீங்க? வாங்க, வாங்க. சுடச்சுட சப்பாத்தி... சப்ஜி, ரெடி... வாங்க, வாங்க தாத்தா, பாட்டி, ஹேய்...” காலித் கையில் இலைகளுடன் அழைக்கிறான். தலை எண்ணி இலை போடப் படுகிறது. “எல்லாரும் உட்கார்ந்தால் எப்பிடி? ரொட்டி யார் பண்ணுவாங்க?” “நாங்க பண்ணிப் போடுவோம். கரம், கரம்.” “கரமா கரம் வேண்டாம். எல்லாம் பண்ணி முடியுங்க. நாங்க சாப்பிட்டுட்டுப் போடுறோம்.” மதியம் சமைத்து வைத்த சோறு, குழம்பு சப்பாத்தி, பொரியல், இப்போது செய்த காய்-சப்ஜி என்று கலந்து பரிமாறி, கலந்து பேசி... அவளை உட்கார வைத்துப் போடுகிறார்கள். “அடாடா, வாங்க தம்பி?... என்ன கையில?” “இது, அவங்க, பெரியம்மாவுடைய பை. அதைக் குடுத்திட்டுப் போகலான்னு வந்தேன். அவங்களுக்கும் அவங்க பேத்திக்கும் நன்றி சொல்லணும்...” போலீஸ்காரத் தம்பி... எஸ்.ஐ... “அடாடா...” கைகழுவித் துடைத்துக் கொண்டு வருகிறாள். “நீங்களும் உக்காந்து சாப்பிட்டுப் போங்க தம்பி!” என்று ராமலிங்கம் உபசரிக்கிறார். “இல்லீங்க. பிறகு ஒரு நாள் பார்க்கலாம். நான் வீட்டுக்குப் போய் ஆறு நாளாவுது. குழந்தையும் அவளும் என்ன ஆச்சோன்னு கவலப்பட்டுட்டிருப்பாங்க. இப்ப மாசம் வேற. ஆயா, உங்க சேலை, எல்லாம் பத்திரம். பாத்துக்குங்க...” “ஐயா. என் வெள்ள சீல, அந்தப் பொண்ணு குடுத்தது, சத்தியம், அதக் கற படாம... கொண்டு வந்திட்டீங்க... நன்றி, நன்றி ஐயா!” (முற்றும்) உத்தர காண்டம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10 11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|