உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
6 காலையில் சாணி கரைத்து வாசலைத் தெளித்துப் பெருக்கிக் கொண்டிருக்கையில், ‘விடாதே, பிடிபிடி...’ என்ற கூச்சலும், ஓலமுமாக ஒரு கூட்டம் தெருவில் புகுந்து வருகிறது. இந்தத் தெருவில் ஒரு காலத்தில் இந்த பங்களாவே பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. பின் பக்கம் மட்டும் குளம் இல்லை, எதிரிலும் பெரிய நீர் நிலை இருந்தது; மரங்கள் இருந்தன; பன மரங்கள் உண்டு. பெரிய சாலையைத் தொடும் இடத்தில் ஜட்ஜ் பங்களா இருந்தது. ஜட்ஜ் யாரென்று தெரியாது. வில் வண்டி இருந்தது. கடுக்கண் போட்டுக் கொண்டு சிவப்பாக ஒரு ஐயர் வருவார். அவருடைய தாயார் பத்மாசனி அங்கே இருந்தார். அந்த அம்மை இறந்த பிறகு அவர்கள் யாரும் வரவில்லை. அதை அடகுக் கடைக்கார சேட் வாங்கி, முழுதுமாகத் தகர்த்து, வீடுகள் கட்டினார். அதே போல் எதிர்ச்சாரியிலும் வீடுகள்... குளம் தூர்ந்து குப்பை மேடான போது, சீராக்கி, மறுபடி மரங்கள் வைத்தார். சிவப்புப்பூக்கள் பூக்கும் மரங்கள், வேம்பு, எல்லாம் நட்டார். இடது கைப்பக்கம் தள்ளி, பொட்டலாக இருந்த இடங்களில் கற்கள் நட்டு, பிளாட் போட்டுவிட்டார்கள். ஒவ்வொரு ஊராக முளைத்துக் கொண்டிருக்கிறது... அந்தப் பக்கம் தான் குஞ்சும் குழந்தையும் குடும்பமுமாக எங்கிருந்தோ பெயர்ந்து வந்து பிழைக்கிறது. பழைய காலங்களில் வெள்ளைக்கார துரை கட்டிய பங்களா என்று ஒன்று இருந்தது. இப்போது அதையும் இடிக்கிறார்கள். அங்கு யாரோ சாமியார் மண்டபம் கட்டப் போகிறாராம். பின்புறம் வேலிப் பக்கம் நின்று மாம்பிஞ்சு கேட்ட குழந்தைகள் அந்தக் கும்பலில் இருந்துதான் வந்தார்கள்... “யம்மா, இப்பிடி ஒரு பய கருப்புக் கட்டம் சட்டை பேன்ட் போட்டுட்டு தொப்பி வச்சிட்டு ஓடினானா?” என்று விர்ரென்று வந்து நிற்கும் மோட்டார் சைகிள்காரன் கேட்கிறான். அவன் பின் உட்கார்ந்து வந்த பெண், “பாவி, சங்கிலிய அத்திட்டுப் போயிட்டான், டாலர் தாலியோட ஏழு சவரன் மா? வூட்டு வாசல்ல கோலம் போட குனிஞ்சிருந்தேன், ஒரு நிமிசமா வந்தது தெரியாம அத்திட்டுப் போயிட்டா. அவன் கையில புத்து வைக்க, வெளங்காம போக...” மோட்டார் சைகிள் பாய்ந்தோடுகிறது. “நெதமும் நடக்குறது தா, இவளுவ, சயினும் டாலரும் தெரியும்படி எதுக்குப் போட்டுக்கணும்?” “வாயக்கட்டி வயித்தக் கட்டி சீட்டு நாட்டுப் போட்டு குருவி சேர்க்கிறாப்பல பணம் சேத்து நகை வாங்குறத இப்படிக் கொள்ளை கொடுக்கணும்னா வயிறு எரியாதா?...” “பவுன் வெல ஆகசத்துக்குப் போவுது, ரெண்டு வேள சோத்துக்கு உத்தரவாதமில்ல. எப்பிடியோ வாங்கிப் போட்டுக்கிறாளுவ...” ஆளாளுக்குப் பேசிக் கொண்டு போகிறார்கள். “தங்கம் தங்கம்” என்று ஒரு வெறியே எல்லோரையும் பிடித்து ஆட்டுவதாகப் படுகிறது. மோட்டார் சைகிள்காரனை எங்கோ பார்த்த நினைவு வருகிறது. ரங்கசாமி வருகிறான். “மைனாவதி ஆசுபத்திரிப் பக்கம் இவ புருசன் இளநீரு விக்கிறான். அன்னாடம் குடிச்சிட்டு வருவான். இவ தம்பிக்காரன் தான் கழட்டிட்டு ஓடிருக்கிறா...” என்று விவரம் சொல்கிறான். மேலே கேட்கவில்லை அவள். துடைப்பத்தைத் தட்டி விட்டு சுவர் பக்கமாகப் பின் பக்கம் செல்கிறாள். சாணம் ஒட்டியிருந்த வாளியைக் கழுவி வைக்கிறாள். கொட்டிலில் ஒரே ஒரு கிடாரிக்கன்று தான் இருக்கிறது. பதத்துக்கு வரவில்லை. இதன் தாய் சென்ற வருசம் கழிச்சல் கண்டு இறந்து போயிற்று. இப்போதெல்லாம் ஊசிக்கரு செலுத்தித்தான் கருவடையச் செய்கிறார்கள். இதன் அம்மா லட்சுமி குருட்டுக் கன்றை ஈன்றது. அது தடுக்கித் தடுக்கி விழும் போது இவள் வயிறு துடிக்கும். தாயிடம் பால் குடிக்கக் கூட விட வேண்டும். மழை பெய்து, எதிரே, பசுமையாக இருந்தது. பசுவையும் கன்றையும் காலாற மேய விடுவதாக நினைத்து நின்று கொண்டிருந்தாள். அப்போ பார்த்து, மோட்டார் சைகிளில் சிவலிங்கம் குறுக்கே வர, கன்று பயந்து மிரண்டு தடுக்கித்தாவ, அது சக்கரத்தில் அடிபட்டுச் செத்தது. “அடாடா... ஸாரி, ஸாரிம்மா...” என்று வண்டியை நிறுத்தி இறங்கினான், சிவலிங்கம்... சிவலிங்கம் தான் இப்போது சென்றவன். சட்டென்று நினைவு வருகிறது. அன்று கன்றை நசுக்கிய போது இப்படித்தான்... அவன் கோலத்தைப் பார்த்த போது ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அய்யா படுத்திருந்த நாட்களில், ஒரு வெள்ளிக்கிழமை பஜனையின் போது வந்தமர்ந்தான். அந்த சிவலிங்கம், மாறி மாறித் தோன்றுகிறான். “பையன் யாரு? ஏம்ப்பா? எங்க படிக்கிற?” “இங்கதான் ஸார், நகராட்சி ஸ்கூலில. அப்பா அம்மா யாருமில்ல. பாத்திரக் கடையில வேலைக்குன்னு வந்தேன். அவங்க வீட்டு மாடில தான் கடைப் பையன்களுக்கு சமையல் சாப்பாடெல்லாம். ஊரில நைன்த் படிச்சிட்டிருந்தேன். அப்பதா எங்க பாட்டியும் செத்துப் போச்சி. இங்க வேலைன்னு தான் அழச்சிட்டு வந்தாங்க. ஆனா எனக்குப் படிக்கணும்னு இருக்கு... ஹெல்ப் பண்ணுங்க ஸார்!” என்று அப்படியே காலில் விழுந்து, காலைப் பற்றிக் கொண்டான். “டேய், எழுந்திரு, இங்க வீட்ல இருந்திக்க! தாயம்மா, இவ இங்கியே இருக்கட்டும். வீடு எவ்வளவு பெரிசு? உனக்கு இடமிருக்கு. நல்லா படி!” என்று தட்டிக் கொடுத்தார். அந்த வருசம் முடிந்து பத்தில் எட்டு முன் அவர் இறந்து போனார். அய்யா, அய்யா என்று விழுந்து புரண்டான். “பையன் இங்கேயே இருக்கட்டும் தாயம்மா? உனக்கு ஒரு ஊன்று கோலா இறைவன் அனுப்பி இருக்கிறான். “தம்பி, அப்பா அம்மா இல்லேன்னு நினைக்காதே. நீ நல்லாபடியா, புதிப் பயிரா வளரணும். இந்த அரசியல் சேற்றிலும் நல்ல பயிர் வரும் என்று நம்புகிறேன். உழைச்சுப் பிழைக்கணும்; பொய், சூது எதுவும் ஒட்டக் கூடாது...” என்று அவன் தலையில் கை வைத்து, ஏதோ ஓர் அமைதி வந்தாற் போல் பேசுவார். அவன் வந்த பிறகு அவனே மலசலப் பீங்கான்களைக் கொண்டு கொட்டிக் கழுவுவான். ஒரு நாள் பாத்திரக் கடை நாடார் இவரை விசாரிக்க வருவது போல் வந்து, பெருத்த குரலெடுத்துக் கடிந்தார். “ஏலே, நீ பாட்டுக்குச் சொல்லாம கொள்ளாம வந்திட்டா என்ன அருத்தம்? கடையில ஆளில்லாம சங்கட்டமா இருக்கு...? ஸார், இவன நாங்க படிக்க வைக்கிறோம்னுதான் சொல்லிக் கூட்டி வந்தோம். இவனுக்குத் துட்டு வேணும். படிப்பு வாணாம், கடையில வேலைக்கிருக்கிறேன்னா. இப்ப... நிங்கல்லாம் என்ன நினப்பீங்க ஸார்...?” “அப்படி ஒண்ணுமில்லிங்க. நீங்க தப்பா நினைக்காதீங்க. வேலை செய்துக்கிட்டுப் படிக்கிறத வாணான்னு சொல்ல மாட்டேன். காலம எட்டு மணிக்கு ஸ்கூல் போய்விட்டு, ஒருமணியோடு முடிந்து, பையன்கள் வேலையும் செய்யவேணும்ங்கறது என் கருத்து...” என்றார். “எலேய், சாயங்காலம் வூட்டுக்கு வந்திடு. அங்கேயே சாப்பிட்டுட்டு ஸ்கூல் போகலாம்!” என்று சொல்லிவிட்டுப் போனார். பையன் அவர் காலகளைப் பிடித்துக் கொண்டு அழுதான். “அம்மா, அவங்க வீட்டுக்கு அனுப்பிச்சிடாதீங்க! நான் அத்தினி பேருக்கும் சமையல் செய்து, பாத்திரம் கழுவி வீடு துடைச்சி... ரா படுக்குமுன்ன பன்னண்டாயிடும். காலம நாலு மணிக்கு எழுப்பிடுவாங்க. இவங்க பெரியாத்தா அடிக்கும். அம்மா, நா இங்கியே இருக்கிறேன், அனுப்பிடாதீங்க. உங்க மகன் போல நினைச்சிக்குங்க. நான் பெத்த தாயப் பாத்ததில்ல, நீங்க தாயி...” இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தான். அய்யா இறந்த பிறகு, அவனைக் கையோடு அழைத்துச் சென்றுவிட்டார்கள். நாலைந்து வருடங்கள் அவனைப் பார்க்கவில்லை. பிறகு ஒருநாள் தேர்தல் களேவரத்தில், கூட்டம் கூட்டமாக வாக்காளரைச் சந்திக்க வந்த கரை வேட்டிக் கூட்டத்தில் இவன் தென்பட்டான். இவள் மகன் எம்.எல்.ஏ.வாக இருந்த நாட்கள். தடாலென்று இவள் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக வந்து விழுந்தான். இவள் துணுக்குற்று நின்றாள். “ஏம்ப்பா? சிவலிங்கமா? அரசியலுக்கு வந்திட்டியா?... நீ நல்லா படிச்சி, உழைச்சி வாழணும்னு அய்யா சொன்னாரே? கடையில வேலை செய்திட்டு... கடேசில அரசியல்...?” “ஆமாம்மா, அரசியல் நல்லதில்லையா? முழுநேர தொண்டனாயிட்டே - உங்க... மக புரவலர்கட்சில தாங்க தொண்டனாயிருக்கிற. ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா?” என்றான். அவள் வாயடைத்துப் போனாள். பிறகு அவன் கல்யாணம் செய்து கொண்டதாகச் சொல்லி ஒரு பெண்ணை அழைத்து வந்தான். “காலில வுழுந்து கும்பிடு, சுந்தரி. நம்ம தலைவர் முன்னிலையில்தான் கட்டிக்கிட்டேன்...” என்றான். “உங்க ஆசீர்வாதத்துல நல்லா இருக்கிறேன். ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணுறேன்...” என்றான். அதற்குப் பிறகு கன்றை நசுக்கிவிட்டு, “ஸாரி” சொல்லும் போது தான் தட்டுப் பட்டிருக்கிறான். சலவை வேட்டி, வெள்ளைச் சட்டையில் இரத்தத் துளிகள் தெளித்த கோலத்துடன் தலைகுனிந்தவாறு, “தெரியாம நடந்திட்டதும்மா...” என்றான். “மன்னிச்சிடுங்க...” என்றவன் ரங்கனைப் பார்த்து, “அண்ணே, பார்க் பக்கம் மண்ணாங்கட்டி அண்ணே இருப்பாரு. அவுரக் கூட்டிட்டு வந்து, இதை அப்புறப்படுத்தி சுத்தம் செய்திடச் சொல்லுங்க. நா அவுசரமாப் போயிட்டு இருக்கிற. இல்லாட்டி...” அவள் அவன் வேட்டி மடிப்பில் இருந்து அவனிடம் ரூபாய் நோட்டுக் கொடுப்பதைக் கண்டும் காணாதவளாகி, லட்சுமியையும், இந்த முதற்கன்றையும் ஓட்டிக் கொண்டு கொல்லைப்புறம் சென்றாள். ‘ரியல் எஸ்டேட் பிஸினஸ்’ என்பது, புறம்போக்கு நிலங்களை வளைத்து, ஆட்சியாளரின் பைகளுக்குக் காசு சேர்க்கும் தொழில் என்று சாயபு சொல்வான். அவன் பெண்சாதியைத்தான் அன்று சாயபு மரணத்துக்குச் சென்ற அன்று பார்த்தாள். ஆனால் அவன் பின் நகையைப் பறி கொடுத்துப் பிரலாபித்துக் கொண்டு சென்ற பெண், அன்று பார்த்த அவன் மனைவியாகத் தெரியவில்லையே?... ஒன்றும் புரியவில்லை. இதுவும்... அரசியல் கட்சித் தலைவரின் ‘அடி’யைப் பின்பற்றும் தொண்டோ? பின்பக்கமா பெருத்தாலும் காம்பு பழுத்து வளைந்தும் நெளிந்தும் உதிர்ந்திருக்கின்றன. சருகுகளில் நெருப்பு வைத்துப் புகை காட்டியதாலோ?... பூச்சிக்கு மருந்தடிக்க வேண்டும் என்று ரங்கனிடம் தான் சொல்ல வேண்டும். அவனுக்கு இவள் நடப்பு, போக்கு ஒன்றுமே புரியவில்லை. “இத்தே பெரிய வூட்ட சும்மா போட்டு வச்சிருக்கிறீங்க. மூவாயிரம் போல வாடகை வரும்...” என்று அடிக்கடி ஒல்கிறான். அந்த வீட்டில் அவள் இருக்க உரிமை இல்லை என்பதை உணர்த்துவது போல் தோன்றுகிறது. இருக்கட்டும், இவன் யார்? நாளைக்கு இதில் ஒரு ஓட்டல், சாராயக்கடை என்று திறந்து விட்டால்? பெண்களை வைத்துச் சம்பாதிக்க ‘லாட்ஜ்’ கட்டினால்? அவள் அய்யா அம்மாவின் நிழலில் இருந்து, அவர்கள் உப்பை உட்கொண்ட நன்றிக்கு, நீசத்தனமான காரியங்களுக்கு இடம் கொடுக்கலாகாது. ராதாம்மாவின் பையன் அமெரிக்காவில் இருப்பதாக நிகொலஸ் பையன் ஜார்ஜ் சொன்னதாக சாயபுவே சொல்லி இருக்கிறார். மருமகனும் வேலையில் இருந்து ஓய்வு பெற்று, எங்கோ இமாலயத்தில் இருப்பதாகச் சொன்னார். அவர்களில் யாரேனும் இந்த வீட்டுப் பக்கம் நிச்சயமாக வருவார்கள் என்று நம்புகிறாள். குருகுல வித்யாலயம் தொடங்கி ஐம்பது வருசம் கொண்டாடினார்கள். பெரிய விழா நடந்தது. அதற்கு ராஷ்டிரபதி வந்தார், அவர் வந்தார், இவர் வந்தாரென்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் இந்தப் பராங்குசம் அவளுக்கு ஓர் அழைப்பிதழ் கூட வைக்கவில்லை. அவளும் அப்போது சோகமாக இருந்தாள். பக்கத்தில், அந்த மிலிடரிக்காரத் தம்பி காம்பு ஒடிந்து சாய்ந்தாற்போல் திடுமென்று போய்விட்ட புதிசு. அவளால் ஏற்றுக் கொள்ளவே முடிந்திருக்கவில்லை... எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். இந்தத் தோட்டத்தை எவ்வளவு அழகாக வைத்திருந்தாள்! சனி ஞாயிறு நாட்களில் அந்தப் பஞ்சாபி சிநேகிதர் சம்சாரமும், இரண்டு குழந்தைகளும் வருவார்கள். வரிசையாகப் பல நிறங்களில் பூத்திருந்த அடுக்குக்காசித்தும்பைப் பூவை அழகாக வாழை நாரில் தொடுத்து, பெண் குழந்தைக்குக் கொடுப்பார். இவள் இந்தப் பக்கத்தில் நின்று அதிஅ அவர் தொடுக்கும் அதிசயத்தைப் பார்ப்பாள். ஒருநாள் காசித்தும்பை மலர்களை இந்த வீட்டில் படத்தின் முன் அழகாக ஒரு கிண்ணத்தில் நீரூற்றி அதில் பரப்பிக் கொண்டிருக்கையில், “ஏன் தம்பி? இந்தப் பூக்களை எப்படி நீங்க இவ்வளவு அழகாகத் தொடுக்கறீங்க? ஜாதிமல்லி, முல்லை, அரளி எல்லாம் தொடுக்கலாம். அதுகூட முல்லையும் மல்லியும் காம்பு நீளமில்ல. இதில காம்பே தெரியாது. தொடறப்பவே உதிந்து போயிடுது. அந்தப் புள்ளங்க ரெண்டு சடையிலும் வச்சிட்டிருந்தாங்க. நானே கண்ணு போடக் கூடாது. நீங்க நல்லாயிருக்கணும் தம்பி...” என்றாள் மனம் துளும்ப. மீசையைக் கடித்துக் கொண்டு ஒரு சிரிப்பைச் சிந்தியது இப்போது போல் இருக்கிறது. ரங்கனுக்கு அவர் ஒரு முள் போல இருந்தார். “அந்த ஆள் மிலிடரி இல்ல, குடிக்கிறாரு! ராத்திரி வாசப்புறம் ஈசிசேரில சாஞ்சிட்டு அவரு குடிச்சத நான் பார்த்தேன்...” என்றான் ஒருநாள். “சும்மா பழி சொல்லாத. யார் மேல வாணாலும் எதுவும் சொல்லுறதா?” என்று அவள் கடிந்தாள். இரவில் நட்சத்திரங்களைப் பார்த்த வண்ணம் அவர் அப்படி உட்கார்ந்திருந்த நாட்கள் உண்டு. வேலியில் மயில் மாணிக்கக் கொடி தாறுமாறாகப் படர்ந்திருந்ததை ஒருநாள் இரவு ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். குடிசைக்கு வெளியே ஒரு மின்விளக்கு உண்டு. இவரை நாம் எதற்காகக் கண்காணிக்கிறோம் என்று தெரியாமலே அவள் பார்த்தாள். ஒருநாள் இரவு ரங்கன் கூறியதுபோல் அவர் பட்டையான சிறு பாட்டிலில் இருந்து குடிப்பதைக் கவனித்தாள். என்றாலும் அவளுள் அவர் மீது இருந்த மரியாதை போகவில்லை. ஒரு வருசமோ என்னமோ அவர் இருந்த காலத்தில், முன்னும் பின்னும் இருந்திராதபடி, பஜனை நிகழ்ந்தது. முடிவில் அவர் தாம் ஓம்... சாந்தி... சாந்தி... என்று பாடுவார். அனைவரும் கண்களை மூடி இலயித்திருப்பார்கள். அதில் சில வார்த்தைகள் இன்னும் அவள் நினைவில் மின்னுகின்றன. பிருதிவி சாந்தி... ஆப... சாந்தி... அந்தரிக்ஷம் சாந்தி... இந்தப் பாட்டைச் சொல்லுமுன் இதன் பொருளை அவர் எடுத்துச் சொன்னார். “எல்லாம் உலகத்தில் சாந்தியடையணும். நீர் நிலைகள், கடல் மரங்கள், வளங்கள், மூலிகைகள் ஆகாசம், எல்லாமே அமைதியாக இருக்க வேணும். பசு, பட்சி மட்டுமில்லாமல்... இதற்கெல்லாமும் உயிர், துடிப்பு, உணர்வு எல்லாம் இருக்கு. மனிதனுக்கு ஆண்டவன் பகுத்தறிவு கொடுத்திருக்கிறான். நாம் இணக்கமாக வாழ்ந்து, அமைதியாக, யாருக்கும் தீமை கொடுக்காமல் இயற்கையை நேசிக்க வேணும். ஒரு போர் ஏன் வருகிறது?... மனிதன் இந்த விதியை பகுத்தறிவினால் மீறி, இம்சை செய்கிறான்...” அவர் சொற்கள் இனிய நாதம் போல் விழுகின்றன. ‘தம்பி? உன்னை ஏன் அந்த ஆண்டவன் இப்படி எடுத்துக் கொண்டான்? நிர்வாண தேசத்தில் ஒரு கையகலத் துணி கொண்டு மானம் மறைத்தவன் பைத்தியக்காரனா? நீ அப்படித்தான் யமனுக்குப் பிடித்தவனானாயா? அவளாகக் காலையில் அவர் எழுந்திருப்பதற்கு முன் அந்த முன் வாயிலில் சாண நீர் தெளித்துப் பெருக்க முனைந்த போது அவர் வெளியே வந்து, “அம்மா, இருங்க; நீங்க என்ன இதெல்லாம் செய்ய?...” என்று துடைப்பத்தைப் பிடுங்கினார். “விடுங்கையா, அந்த முன் வாசல் தெளிச்சுப் பெருக்குறேன், அதோடு இதையும்...” “வாணாம், விடுங்க. நீங்க தாய். நான் இங்க வெட்டியா இருக்கிறேன்.” அன்று அது போராட்டமாக இருந்தது. அவள் வென்றாள் என்றாலும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். “அம்மா, நீங்க முன் வாசல்ல அழகாகக் கோலம் போடுறீங்க. எனக்கு அந்த மாதிரி இழை, சன்ன இரட்டை இழை வர்றதில்ல. இங்க கோலம் போடுங்க...” என்று ஒத்துக் கொண்டார். அவளுக்குப் புள்ளி சுற்றும் சுழிக்கோலங்கள் நிறையத் தெரியும். ராதாம்மா முதலில் இவளிடம் கற்றுக் கொண்டு, அவளுடைய கல்வியறிவு கொண்டு அந்தக் கோலங்களில் பல்வேறு வடிவங்களும் மாதிரிகளும், புள்ளிகளின் எண்ணிக்கைகளைச் சொல்லிக் கொடுத்தாள். குருகுலத்துப் பிரார்த்தனை மண்டபத்தில், அவை அழகுற வடிவம் பெறும். மார்கழி மாதம் வந்தால், புதிய புதிய கோலங்கள் வகுப்பறை முற்றங்களிலேயே விரியும். பஞ்சமிக்குக் கொஞ்சம் ஆர்வம் உண்டு. அடுத்தவளுக்குச் சுத்தமாக இதில் ஈடுபாடு இல்லை. ஒருநாள் பஞ்சாபி நண்பர்கள் கோலத்தைப் பார்த்து விட்டு, அவளிடம் வந்தார்கள்... “மாதாஜி, அந்தக் கோலம் போடக் கத்துக் குடுங்க?” என்றாள். “அட என்னம்மா? அந்தத் தம்பி சொன்னாரா?...” அவள் கணவன் உடனே கொச்சைத் தமிழில் “தேவாவுக்கு ஆகாசத்தில் தான் கோலம் போடத் தெரியும், இங்க தெரியாது, பூமிலன்னேன். இவ நம்பல... பிறகுதான் கேட்டோம், நீங்க ரொம்ப நல்ல வரஞ்சிருக்கிறீங்க...” என்றான். அந்தத் தம்பி வழக்கம் போல் மீசையைக் கடித்துக் கொண்டு சிரித்தார். “ஆகாசத்துக் கோலம், அழிவு... நாசம். இது அழகு. சுபம். அமைதி. அதை இவங்க செய்யிறாங்க!” அது என்ன பேச்சுத் திறமை? அதனால் குடிக்கிறாரோ என்ற குறுகுறுக்கும் உறுத்தல், நெஞ்சில் தோன்றியிருந்தது. ஒருநாள் கிணற்றடியில் ஒரு நாய்க்குட்டி வந்திருந்தது. ஒரு மாசமான தெருநாய்க்குட்டி, அதன் கழுத்திலே காயம் இருந்தது. “அடாடா?...” என்று அதைத் தூக்கிக் கொண்டு போய் மருந்து போட்டு, வைத்தியம் செய்தார். அதற்கு நாள் தோறும் பால் ஊற்றுவார்; ரொட்டி, பிஸ்கோத்து என்று கொடுத்தார். பஞ்சாபி சிநேகிதர் குழந்தைகள் வந்து விளையாடும். பந்து போட்டால் கவ்வி வரும். அதற்கு ‘சக்தி’ என்று பெயர். “சக்திமான்! டேய் சக்தி! பேப்பர்காரன் வரான், வாங்கிட்டு வா. கோலத்தை அழிக்கக் கூடாது!” என்றெல்லாம் பேசுவது காதில் விழும். பஜனையின் போது உள்ளே வந்து ஓரமாக இருக்கும். ஓம் சக்தி, சாந்தி சொல்லும் போது எழுந்து அசையாமல் நிற்கும். அதை அழைத்துக் கொண்டு காலையிலும் மாலையிலும், நடக்கப் போவார். பகலுணவுக்குச் செல்லும் போதும் செல்லும். ஒருநாள் அதிகாலையில் எப்போதும் போல் அவர் நடக்கச் சென்றிருந்தார். நாயும் கூடச் சென்றிருக்கிறது. அப்போதெல்லாம் கிழக்குப் பக்கம் வீடுகள் எழும்பி இருக்கவில்லை. ஏரிக்கரை வரையிலும் செல்வார் என்று நினைப்பாள். அவர் ஓடி வரும் போது அதுவும் தாவித்தாவி ஓடி வரும். ‘இவளுக்கு இதெல்லாம் ரசிக்கும்படி இருக்கும். இவர்கள் முன்பாக சாணமிட்டுப் பெருக்கிக் கொண்டிருப்பாள். இப்போதெல்லாம் அவர் குடிசை வாசலுக்கும் அவளே நீர் தெளித்துப் பெருக்கிவிடுகிறாள். வீடு திரும்பும் போது கிழக்கில் ஒளி உதயமாயிருக்கும். சிறிது நேரம் இளைப்பாறுவார். நாய்க்குப் பாலும் ரொட்டியும் கொடுப்பார். அவரும் கிணற்றடியில் நீராடித் துணி தோய்த்து உலர்த்திவிட்டு, வெளியேறி கிளம்புவார். நாலைந்து மாதங்களில் நாய் நன்றாக வளர்ந்து, குரல் அச்சுறுத்துமளவுக்குக் குலைக்கத் தொடங்கிவிட்டது. தெருமுனையில் யாரேனும் பழக்கமில்லாதவர் தென்பட்டாலே அதன் குரல் வித்தியாசமாகக் கேட்கும். “ம்... சக்தி... உறுமாதே!... யார் அங்கே?” என்று அவருடைய குரலும் தொடரும். அவளும் வெளியே வந்து பார்ப்பாள். அன்று அவர் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார். கடைப்பையனாக இருந்து, படிக்க வேண்டும் என்று ஒதுங்கிய பின் மீண்டும் கடைக்குச் சென்ற சிவலிங்கம் அந்த வளைவில் வந்திருந்தான். அவனுடைய உடல் வளர்த்தி, அவனை அடையாளம் தெரிந்து கொள்ள முடியாமல் மாற்றியிருந்தது. “சிவலிங்கமாப்பா? அடையாளமே தெரியல? எங்கே இந்தப் பக்கம்?” “எங்க முதலாளி இவங்களப் பாக்க அனுப்பிச்சாங்க...” நாய் விடாமல் குலைத்தது. “குலைக்காதே சக்தி. நம்ம பைய, தெரிஞ்சவதா” என்று சொல்லிவிட்டு, “இன்னும் அதே கடையில் தானிருக்கிறியா?” என்றாள். “இல்லீங்க. இது வேற கடையிங்க...” என்றான். அதற்குள் அவர் வந்து விட்டார். அங்கு நின்று கேட்பது நாகரிகம் இல்லை என்றுணர்ந்தவளாக வீட்டுப் பக்கம் வந்து விட்டாள். அன்று அவள் ஒயர்பை போட, அளவெடுத்துக் கத்திரிக்கும் போது ரங்கன் வந்தான். “புரிஞ்சிட்டிங்கல்ல? அந்தப் பயல், ஒயின் ஷாப்லதான் வேலை செய்யிறான். இவுரு மிலிட்டரி கான்டீன்லேந்து வாங்கித் தாராரு. சல்லிசு வெலக்கி...” உண்மையில் அவளுக்குக் குத்துப்பட்ட வேதனை உண்டாயிற்று. அப்படியும் இருக்குமோ? இந்த வேதனை, அவருடைய நடத்தையில் ஒரு குத்து உறுதியானதால் ஏற்பட்டதா? அல்லது, கவடறியாத பிள்ளை, படித்து ஒழுக்கப் பாதையில் முன்னேற முடியாதபடி ‘ஒயின்’ கடைக்கு வந்து, கள்ள வாணிபம் பழகுவதால் ஏற்பட்டதா என்று வரையறுக்க முடியவில்லை. அவர் வழக்கம் போல் பஜனைக்கு வந்தார்; எல்லோரும் வந்தார்கள்; பாடினார்கள்; பழகினார்கள். ஆனாலும் கருநீலம் படிந்தாற் போல்தான் இருந்தது. இதனால் அவள் வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்ட பிறகு அதிகமாக அந்தப் பக்கம் கவனிப்பதில் ஆர்வமும் சந்தோஷமும் கொள்ளவில்லை. எப்போதேனும் தட்டுப்பட்டால், உதிர்க்கும் இரண்டொரு சொற்களைத் தவிரப் பேசுவதில்லை. வைகாசிக் கடைசியில், கோடையின் வறட்சி புழுக்கமாக இரவுகளில் தூக்கம் பிடிக்காமல் வதைத்த ஒரு நாளில், விடியற்காலையில் அவள் அயர்ந்து வெளித்திண்ணையில் உறங்கியிருந்தாள். ‘ஊ’ என்று நாயின் அழுகை அவள் புலன்களை புலர்ந்தது தெரிந்தது. அவசரமாகச் சாவி எடுத்து, வாயில் கம்பிக் கதவைப் பூட்டைத் திறந்து கொண்டு போனால், நாய் தான் அழுகிறது என்று புரிந்தது. “டேய், சக்தி ஏண்டா? ஏனழுற?...” மூங்கில் பிளாச்சுக் கதவைக் கொக்கியை அகற்றித் திறந்து கொண்டு அவள் சென்ற போது, அது அவளுக்கு முன் சென்று வீட்டுக்குள் நுழைந்தது. உயரக்கதவு தான் என்றாலும், திறந்தே இருந்தது; சாய்வு நாற்காலியில் அவர் படுத்திருந்தார். விளக்கு, மேசை விளக்கு எரிந்தது. அதுவரையிலும் அவள் உள்ளே சென்று பார்த்ததில்லை. வெள்ளையடித்த சுவரில் ஒரு மாசுமருவில்லை. மடக்கக்கூடிய கட்டிலில், படுக்கைவிரிப்பு, தலையணை கசங்கவில்லை. மடக்கு மேசையில், புத்தகங்கள் நாலைந்து ஒழுங்காக மடக்குப் பலகையில் வைக்கப்பட்டிருந்தன. துணி வைத்துக் கொள்ளும் அலமாரியும் மூடியில்லாததுதான். அதன்மேல் சிறு கைப் பெட்டி; அவர் குடை அவர் தாளம் வாசிக்கும் பானை கவிழ்த்தியிருக்கிறது... பழைய பேப்பர் அடுக்கு... ரேடியோ... “ஐயா... ஐயா?...” அவள் குரலில் அழுகை தழுதழுத்தது... நாய் சுற்றிச் சுற்றி வந்து குலைத்தது. அவள் சேலையைப் பற்றி இழுத்தது. “ஐயா, தம்பி...?” தோளைப் பற்றி உலுக்கினாள். எப்போதும் போன்ற ஓர் அரைக்கை பனியன்; வேட்டி. தூங்குவது போல் இருந்தார். அவள் அலறிக் கொண்டே வந்தாள். அப்போதுதான் ரங்கன் வந்து கொண்டிருந்தான். “ரங்கா, ரங்கா... என்ன ஆச்சுன்னு தெரியலப்பா, அவுரு அந்தத் தம்பி...” அவன் சலனமில்லாமல் உள்ளே வந்து பார்த்து விட்டுப் போனான். இடி இறங்கின மாதிரி இருந்தது. பத்து மணிக்குள் எல்லோரும் கூடிவிட்டார்கள். பராங்குசம் காரைப் போட்டுக் கொண்டு வந்தான். நிக்கொலசு, சாயபு, ஜானகியம்மா, கடைக்கார நாடார், இன்னும் யார் யாரோ, பெருங்கூட்டம் கூடிவிட்டது. யார் யாரோ ராணுவத்தினர் கூட வந்திருந்தனர். துரும்பாக அவள் அலைபாய்ந்தாள். மாலைக்குள் எல்லாம் அடங்கிப் போயிற்று. பஞ்சாபி நண்பர்கள், நாயை அழைத்துச் சென்றனர். அவருடைய கட்டில், அலமாரி, புத்தகங்கள் எல்லாமே கொண்டு போனார்கள். சடங்கு என்று புரோகிதர் யாருமே வரவில்லை. வண்டி வந்து உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்றது. நிக்கொலசுதான் கொள்ளி வைத்ததாகச் சொன்னார். அடுத்த நாள் பெரிய பிரார்த்தனை கூட்டம் எப்போதும் போல் அவர்கள் வீட்டுக் கூடத்தில் நடந்தது. அப்போது, அவருக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த அலமேலும்மா வந்து கதறி அழுதாள். ஒரு வண்டியில், பொங்கல், வடை, சுண்டல் எல்லாம் வந்து இறங்கியது. வீடு காலி பண்ணுமுன், ஒரு பக்கம் பழைய பேப்பர் கட்டுடன், இரண்டு சிறிய பிராந்தி பாட்டில்களோ எதுவோ இருந்ததாம். ரங்கன் வெந்த புண்ணில் வேல் செருகும் நியாயத்தைச் சொன்னான். “என்னமோ, இல்ல இல்லன்னீங்களே? குடி... அதான் மாரடச்சி உசிர் போயிடிச்சி, மக்க மனிசங்க யாரும் வரவில்ல...” அவனை எரித்து விடுபவள் போல் பார்த்தாள். “இப்ப என்னத்துக்கு இந்த நியாயம்? அவுரு எப்படிப் போனா என்ன? போயிட்டாரு...” என்றாள். அன்றைய பஜனையில், அவரைப் பற்றி பஞ்சாபிக்காரர், நிக்கொலசு, சாயபு எல்லோருமே பேசினார்கள். “சுதந்தர நாட்டின் உண்மையான தேசியவாதி. பலவகையான ஆற்றல், திறமை, வீரம், துணிவு எல்லாம் கூறிய அற்புத மனிதர். உயிர்களைக் கொல்லும் ஒரு சேவையில் - தாய்நாட்டுக்குச் சேவையில் இருந்து, வீரம் காட்டி வென்றும் பணியைத் தொடராமல், அஹிம்சை வழி வந்தவர். உலகம் முழுவதும், போர்ப்படைகள் இல்லாமல் ஒருவருக்கொருவர் என்று வாழணும்னு சொல்வார்” என்றெல்லாம் நிக்கொலஸ் பேசினார். அவரும் இராணுவத்தில் இருந்தவர். அவர் பையன் டாக்டராகத் தொழில் செய்பவன். அவன் கூடப் பேசினான். “அங்கிள், நீங்கள் அதிகமாக ஃபிஸிகல் ஸ்ட்ரெயின் பண்ணிக்கக் கூடாதுன்னு சொன்னேன். அவர் எதையும் பொருட்படுத்தியதில்லை. “இதப்பாரு ஜார்ஜ், நான் நினைக்காமலே எனக்கு மரணம் ஒரு இனிமையான முடிவாக இருக்கணும். கர்நாடக சங்கீதத்தில் - மும்மணிகள்னு சொல்லுவாங்க. அதில் ஒருத்தர் முத்துசுவாமி தீட்சிதர். அவர் எட்டையபுரத்தில் தான் அமரரானதாகச் சொல்றாங்க. பாரதியின் ஜன்ம பூமி. அவர், தமக்கு முடிவு வரும்னு முன்னமேயே அறிந்திருந்தார்னு சொல்றாங்க. சீடர்களெல்லாம் இருக்க, பாடிட்டே இருந்தாராம். ‘மீனாட்சிமேமுதம்னு’ பாட்டு, ‘மீனலோசனி, பாசமோசனி...’ன்னு குரலெழுப்பிப் பாடறப்ப, சமாதியாயிட்டாராம். ‘பாசம்’ விடுபட்டு, அம்பிகையின் மடிக்குப் போயிட்டார்னு சொன்னாரு ஒருநாள். அவர் கண்களில் அப்படியே தண்ணி வழிஞ்சிருச்சி...” என்று கூறும்போதே கண்ணீர் தழுதழுக்க நின்றான். “அங்கிள் வந்தா, அவர் பேசறதக் கேட்டுக்கிட்டே இருக்கணும்னு தோணும். “டெய்ஸி, இப்ப ஒரு ஆர்க்கெஸ்ட்ரான்னா எத்தினி வாத்தியம் இருக்கு? காத்து வாத்தியம், தோல் வாத்தியம், கம்பி வாத்தியம்னு எத்தினி இருக்கு. அதெல்லாமும் சேர்ந்துதானே ‘ஹார்மனி’ உண்டாகுது? அதுபோல உலகத்து மனிசங்களெல்லாம் ஒண்ணா, குத்து வெட்டு, பகை இல்லாம, ‘ஹார்மனி’ங்கறது வராதா என்ன? இப்ப மேல் நாட்டு சங்கீதம், இந்துஸ்தானி, கர்நாடகம்னு எல்லாத்தையும் சேத்து... ஒரு தனி இசை வரல?”ம்பாரு. அத்தை எதானும் பேசி, நான் வாட்டமா இருந்தா உடனே கண்டு பிடிச்சிடுவாரு. ரெண்டு பேரையும் சேத்துவச்சி... ‘ஹார்மனி’ம்பாரு...” என்று நிக்கொலசின் மருமகள் அழுதாள். ‘ஹார்மனி’ என்றால் என்னவென்று பொருள் தெரியவில்லை அவளுக்கு. ஆனால் மனசுக்குப் புரிந்தது. பின்னால் வாழைகள் செழித்திருந்தன. இலை அறுத்துக் கொண்டு அலமேலு செல்கையில், இவளுக்கு அந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளக் குடைந்தது. அவளே புரிந்து கொண்டாற்போல், “சாயபு சாரும், சந்தானம் சாரும் வந்து, இந்த ஏற்பாட்டைச் செய்யச் சொன்னாங்க. பணம் குடுத்தாங்க. எனக்குக் கூடப் பிறந்து, ஒட்டுறவெல்லாம் முள்ளுகதா. ஆனா... இப்படி ஒரு மனுசர். ஞானி. அதிர்ந்து பேசாமல் ஒரு சிரிப்பு. மீசை வச்சிண்ட மிலிடரிக்காரன், குடிப்பனோ என்னமோன்னு, ரொம்ப பயப்பட்டேன். உருத்திராட்சம் சந்தனக்கீத்தெல்லாம் போட்டுண்டு, ஒரு கடன் வரும். மருந்துக் கடைக்காரன். பார்வையே நன்னாருக்காது. கிட்டப் போனாலே அந்த வாடை வரும். அவனை வராதென்னு சொல்ல முடியாது. ஏன்னா, அந்தக் கட்டிடத்துச் சொந்தக்காரன். குடும்பம் செங்கல்பட்டாம். ஞாயித்துக்கிழமை கடைய மூடிட்டுப் போவான். “ஏமாமி, சாம்பாரா இது? பாலாத்துத் தண்ணின்னாலும் தாகம் அடங்கும்... கத்திரிக்காப் பொறியல் கசக்குது... நீ எப்ப ருசியா எல்லாம் போடப்போற?”ம்பான், கடங்காரன். “அப்ப இவர்தான் ஒரு சிரிப்புச் சிரிச்சிட்டே, ‘சுவாமி, நீங்க சாப்பாடு நல்லாயில்லன்னா, இங்கேயே ஏன் வரீங்க? பேசாம, அட்சயா ஓட்டல்ல சாப்பாட்ட வச்சிக்கிறது?...’ம்பாரு. அந்தாள் சிரிச்சிட்டே, இல்லே... என்னன்னாலும் ஐயர் மாமி சமையல் பண்ணிப்போடுதுன்னா... அது ஒரு... இது தானே?”ன்னாரு. “அதென்ன சுவாமி, இது?...”ன்னு எந்திரிச்சி அவன் உருத்திராட்சத்தைப் புடிச்சி இழுத்தாரு. வெலவெலத்துப் போயிட்டான். அவர் வந்து சாப்பிட உக்காந்தார்னா ஒரு பய பேசமாட்டான்... “ராத்திரில சாப்பாட்டுக்கு உக்கார மாட்டார். வந்து ரண்டு இட்டிலியோ, ஒரு சப்பாத்தியோ வாங்கிட்டுப் போவார். அங்கே எதிரே படுபாவிங்க ஒயின் கடையத் திறந்து வச்சிருப்பாங்க. கூட்டமா இருக்கும். ராத்திரி சாப்பாடுன்னு வர பாவி ஒருத்தன் பாட்டிலெடுத்திட்டே வந்தான். அந்தக் கடைய அங்கேந்து எடுக்கணும்னு முனிசிபாலிட்டிக்குப் போயி எழுதிக்குடுத்தாரு... அவருக்கு மிளகு சீரகம் பூண்டு தட்டிப் போட்டு ரசம்னா புடிக்கும்... டிஃப்னோடு ரசமும் பாட்டில்ல ஊத்திக் குடுப்பேன். பிளாஸ்டிக் பை புடிக்காது. சின்ன சம்புடம் - அதை ஒரு துணிப் பையில் போட்டுட்டு போவார். நாய்க்கும் ரெண்டு இட்டிலி இருக்கும்...” “அப்ப... பாட்டில்ல ரசம்தா குடுப்பீங்களாம்மா?” “ஆமாம்...? அவர் வரதுக்கு மின்ன சில தடியங்க பாட்டிலப் பதுக்கிட்டே வருவாங்க - ஒண்ணுக்கும் விளங்காத புருசனையும், ஸ்கூலில் படிக்கும் குழந்தைகளையும் காப்பாத்த நான் பிழைக்கணுமேம்மா? பாட்டில் கடக்கும் மூலையில்... அப்படி ஒண்ணைக் கழுவி, சின்னதா பட்டையா இருக்குன்னு ரசம் ஊத்திக் குடுத்தப்ப, சிரிச்சாரு, பிறகு போயிட்டாரு. ராத்திரி நான் சூடா டிபன் போடும் வரை இருப்பார். எவனாலும் குடிச்சிட்டு வரான்னு தெரிஞ்சா சட்டையப் புடிச்சி இழுத்துத் தள்ளிடுவார். எனக்கு அது பெரிய பலமா இருந்தது. இப்படிப் போயிட்டாரே?...” அந்த சந்தேகக் கரும்புள்ளிகளை அவளுடைய ஒவ்வொரு சொல்லும் அறைந்து கலைத்தன. உத்தர காண்டம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10 11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|