7

     அவர் போன பின் அந்தக் குடிலும், தோட்டமும் பராமரிப்பார் இல்லாமல் பாழாயின. கரையான் புற்றும் காடாய் மண்டிய செடிகளுமாக ஆயின. சில நாட்களில் அவள், அதெல்லாம் சுத்தம் செய்து அவர் நினைவாக விளக்கேற்றி வைக்கலாம் என்று நினைப்பாள். வெள்ளிக்கிழமை காந்திபஜனை அவருக்குப் பின் களை கட்டவேயில்லை. பிறகு ஒருநாள் பராங்குசமே வந்தான். அவன் வந்தால் பேச்சு ரங்கனுடன் தான். அவளை முறைத்துப் பார்த்துவிட்டு மாடிக்குப் போவான். “தாயி!” என்று அதட்டலாகக் கூப்பிடுவான். ‘தாயம்மா’ கூடக் கிடையாது. “மாடிப்படியெல்லாம் சுத்தமாப் பெருக்கித் துடைக்கிறதில்ல?... வா, மாடியெல்லாம் பெருக்கித் துடை” என்பான். அவள் தெய்வமாகக் கருதிய அந்த ஆண்டை கூட அவளை அப்படி ஏவியதில்லை. அவள் முத்துதிர்க்காமல், அலமாரி, புத்தகங்கள், பத்திரிகைக்கட்டுகள் புகைப்படங்கள் எல்லாம் வைத்திருந்த அடுக்குத் தட்டுகள், எல்லாவற்றையும் தட்டிப் பெருக்குவாள். இரண்டு மணி நேரமேனும் ஆகும். அதுவரையிலும் அவன் அலமாரியைத் திறந்து காகிதங்கள், ஃபைல்கள் என்று பார்ப்பான். அவளுக்கு, ஏதோ ஓர் அரிய புதையலை அவன் களவாடிச் செல்வது போல் தோன்றும்.

     அந்தத் தடவை அவனை வெகுநாட்களுக்குப் பிறகு பார்த்தால் போலும், ஆள் மாறி இருந்தான். மினுமினுவென்று சதைபிடிக்க, வெள்ளையும் கருப்புமாகத் தாடியும், தங்க பிரேம் கண்ணாடியுமாகக் காட்சி அளித்தான். முடி மட்டும் கரேலென்று பிடரியில் தொங்கியது. ஒரு பழுப்பு நிற கதர் ஜிப்பா போட்டிருந்தான். அதன்மேல் ஒரு உருத்திராட்ச மாலை தெரிந்தது. ஆட்களைக் கூட்டி வந்து பக்கத்துக் குடில் தோட்டமெல்லாம் சுத்தம் செய்யப் பணித்தான். தலைமறையச் சுற்றுச்சுவர் எழும்பியது. உள்ளே ஒரு கொட்டகை போட்டர்கள். பெரிய சாலையில், ‘ஹார்ட்வேர்’ கடை வைத்திருந்தவர்களுக்கு அது கிடங்கறையாக இருந்தது. ஏதோ தகராறு வந்து, அதுவும் காலியாகிவிட்டது. வெளிப்பூட்டுத் துருப்பிடித்து, கதவும் துருப்பிடிக்க, கொடிகளும் புல்புதர்களும் மண்ட, சுவரேறிக் குதித்து சீட்டாடுபவர்களுக்கும், குடிப்பவர்களுக்கும், தப்புக்காரியங்கள் செய்பவர்களுக்கும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வீட்டு எல்லையில் இருக்கும் மாமரம், அந்த உறவை விடவில்லை. கிளைகளைச் சுவருக்கு மேல் பரப்பி, உரிமை கொண்டாடுகிறது. ரங்கன் மரத்தின் மேலேறி, அந்தப் பக்கம் இறங்குகிறான்.

     “நாரத்தை மரம் ஒண்ணு பெரி...சா வளந்து காச்சுத் தொங்குது?” என்று பறித்து வருகிறான். அந்தப் பக்கம் ஓர் ஏணியே சாத்தி இருக்கிறான். இவளுக்கு எந்த உரிமையும் இல்லை. ரங்கனை அவள் எதுவுமே கேட்பதில்லை. அவன் எஜமான நிலையில் இருந்து அவளை அதிகாரம் செய்வதில்லை. ஆனால், அந்த வீட்டில் அவள் வாழ்கிறாள். ஒயர்பை பின்னுகிறாள். அவளுக்கென்று ஒரு தொகை வங்கியில் அய்யா கட்டியிருக்கிறார். அதன் வட்டி மாசத்தில் ஆயிரம் ரூபாய் போல் வரும். அவள் தனக்கென்று எந்தச் செலவும் செய்ய வேண்டி இருக்கவில்லை. மெயின் ரோடில் நெருக்கடியான சந்தைப் பகுதியில் மாடியில் வங்கி இருக்கிறது. முன்பு அவளுக்குப் பரிசயமாக இருந்த ஆட்கள் யாருமே இப்போது இல்லை. மாசம் பிறந்தால் பணம் செலவுக்கு எடுத்துக் கொண்டு, கேழ்வரகு, அரிசி, பருப்பு, காய் என்று வாங்கி வந்து விடுகிறாள். அய்யா, அம்மா எல்லோரும் இருந்த காலத்தில், கிணற்றில் இருந்து நீர் இறைக்கும் பம்புசெட் - குழாய் எல்லாம் இருந்தன. மாடியில் உள்ள குளியலறைக்கும் நீர் போகும். முதன் முதலாக இந்த வீட்டில் தான் அந்தக் காலத்திலேயே பின்புறம் ‘செப்டிக் டாங்க்’ கட்டி, இது போன்ற கழிவறை கட்டினார்கள். அவளுக்குத் தெரிந்து சுமார், பத்து வருசங்கள் போல் அந்த மலக்குழி நிரம்பியதாகத் தெரியவில்லை. அதுவும் வீட்டை விட்டு அப்பால் பின் பக்கம் கொட்டில் தாண்டி, இருந்தது. அதிலிருந்து நீர் வெளியேறும் குழாயும், அது மண்ணுக்கடியில் வடியும் புதை குழியும் அமைந்திருந்தார்கள்.

     ராதாம்மா இறந்து போவதற்கு முன், வீட்டில் வந்து தங்கியிருந்த கோவாலு, “தாயம்மா, செப்டிக்டாங்க் நிரம்பி மேலே ஈரம் வருது. எப்ப எடுத்தாங்க?” என்று கேட்டான். அவன் மதுரை காந்தி கிராமத்தில் இருந்து வந்திருந்தான்.

     “எனக்குத் தெரியலியேப்பா? அப்பிடிக்கூட ஆகுமா?”

     “ஆமா, இங்கே ஏது பாதாள சாக்கடை? அது பட்டணத்துலதானிருக்கு...”

     அவளும் பார்த்தாள். கோவாலு மண்ணைத் தள்ளி, சிமிட்டிப் பலகை மூடலைக் கண்டு பிடித்தான். நிரம்பித் துளும்பி அழுக்குக் கசிந்தது...

     “அய்யே! இது ரொம்ப மோசமில்ல? அன்னன்னைக்கு எடுத்திட்டுப் போறது கொடுமையின்னா, அத்தவிட இது பெரிய கொடுமையா இருக்குமே? இந்தக் குழிய, பத்து வருசக் கசடுகளை எப்படி எடுப்பாங்க?...”

     அவள் கேட்கவில்லை. தோட்டம் துரவு என்றூ போவார்கள். மலம் அள்ளும் கொடுமையே, டவுன் நாகரிக வசதிகளை அனுபவிப்பவர் பெருகிய பிறகுதான் வந்திருக்கிறது. கோவாலுவே, அப்போதைய பஞ்சாயத்தில் சொல்லி, சாக்கடைக் கழிவு நீர் வண்டியும் ஆட்களுமாகக் கொண்டு வந்தான். இரண்டு ஆட்களும் நன்றாகக் குடித்துவிட்டு வந்திருந்தார்கள். ஒரு அரை டின் கிரஸீனை அந்தக் குழியில் ஊற்றிக் கலக்கி, கம்பி வேலிக்கப்பால் வண்டியை நிறுத்தி ஒருவன் வாளிவாளியாக எடுத்துக் கொடுக்க, மற்றவன் வண்டியிலுள்ள பீப்பாயில் ஊற்றினான்.

     “தாயம்மா, கதவ சாத்திக்குங்க, நீங்க வராதீங்க?” என்று கோவாலு கத்தினாலும் அவளால் உள்ளே இருக்க முடியவில்லை. அப்போதெல்லாம் இந்தப் பக்கம் பொட்டலாக இருந்ததால் எங்கோ பள்ளத்தில் வண்டி வண்டியாகக் கொட்டிவிட்டு வந்தார்கள். சாயங்காலம் ஐந்து மணியுடன் துப்புரவு செய்து, பழைய சாக்குக் கந்தல்களால் துடைத்து ஏழெட்டடி ஆழமுள்ள குழிக்குள் நின்றவனைப் பார்த்து தாயம்மாளுக்கு அன்று இரவெல்லாம் உறக்கம் வரவில்லை. அங்கே வந்த பிறகு, குப்பை கூட்டுபவர்களையும், வாளிகளில் மலம் சுமந்து வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்லும் தொழிலாளரையும் பார்த்திருக்கிறாள். நானும் இந்த சாதிதான் என்ற உணர்வு முட்டும்.

     நாகரிகம் பெருகப் பெருக, டவுன்கூட்டம் நெருங்க நெருங்க, வெளிமலக்குழிகளுடன், சமுதாயத்தின் உள் மலக்குழிகளும் பெருகிவிட்டன.

     கழிவறையைத் தேய்த்துக் கழுவுகையில் அங்கு கிடந்த பீடித்துண்டுகள் அவளைப் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. இதற்கு முன் இங்கு புகை பிடிப்பவர்களே வந்ததில்லை என்று சொல்ல முடியாது. வெற்றிலை பாக்கு புகையிலை போடுபவர்கள், புகை குடிப்பவர்கள் எல்லாருமே வந்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் கூடம் அவளுக்குத் தெரிந்து புனிதமானதாகவே இருந்திருக்கிறது. அந்த நிழலே அவளுக்கு மற்றவர்களிடம் ஒரு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

     சொர்ணம் குரல் கொடுத்துக் கொண்டே வருகிறாள்.

     “என்னம்மா, வூடு திறந்து ஜிலோன்னிருக்கு, நீங்க இங்க இருக்கீங்க?”

     “வாம்மா, என்ன விசயம்? குடமும் கையுமா வந்திருக்க?”

     “ஒரு குடம் தண்ணி எடுத்திட்டுப் போறம்மா? பாவம், நா, வேல செய்யிற வூட்டுல கெணறு வத்திப் போயிடிச்சி. அய்யா வேற துபாயிலிருந்து வராங்க. இந்த வருசம் புதுசாக் கட்டின வூடெல்லாம் கெணறு வத்தி தண்ணியில்லாம போச்சு. ஒரு மழ பெய்யல. தூரு வாருனா தண்ணி ஊறும்னு, சுகுணா ஸ்டோர்ஸ்காரங்க வூட்டுல வாருணாங்க. உள்ளதும் போயிட்டது. போர் போடுறாங்க. லாரி தண்ணி தா ஒரு வாரமா வாங்குறாங்க. குடிக்க ஒதவாது...”

     “யாரு, அன்னக்கு, புள்ளய ஸ்கூல்லேந்து அழச்சிட்டுப் போனியே அந்த வூடா?”

     “ஆமாம்மா... பங்களாவூட்டுக் கெணறு, எப்பவும் வத்தாது. தோட்டக்கெணறு. அத்த இடிச்சி ஃபிளாட் கட்டுறாங்க. அந்தப் பக்கம் காஞ்சிபுரம் ரோடு வருதாம். இடிச்சவங்க, முதல்ல கேணில கண்டதையும் போட்டுத் துத்துட்டாங்க... கொடும...”

     “சரி, சரி, நீ தண்ணி எடுத்திட்டுப் போ?”

     ராட்டினம் கிரீச் கிரீச் சென்று சத்தமிடுகிறது.

     “சொர்ணம், எண்ணெய்த் துணி கொண்டாரேன். கொஞ்சம் போடு. கேணிச் சுவரில் ஏறிப் போட பயமாயிருக்கு. நின்ன வாக்குல எட்டல...”

     உள்ளே சென்று, விளக்கெண்ணெய்க்குப்பியை எடுத்து ஒரு கிழிந்த துணியில் ஊற்றிக் கொண்டு வருகிறாள். சொர்ணம் தண்ணீரைக் குடத்தில் ஊற்றி, அதில் ஒரு மூடியைப் போட்டு அப்பால் வைத்துவிட்டு ஏறி நின்று எண்ணெய் போடுகிறாள்.

     “பத்திரம்மா, பத்திரம்...”

     கீழே இறங்கி, சோப்புத்துண்டைத் தடவிக் கையைக் கழுவிக் கொள்கிறாள்.

     “அவுரு... இல்லையா?...”

     “யாரு?...”

     “அதா, காரியக்காரரு... நார்த்தங்கா வோணுமான்னு கேட்டாரு. அம்மா என்ன வெலன்னு கேட்டுட்டு வரச் சொன்னாங்க. பத்து ரூபாக்கு ஆறு கான்னு மார்க்கெட்டில வச்சிருக்கா. இது புதிசா இருக்கும், வாங்கியான்னு அம்மா சொன்னாங்க. அதா கேட்டே... இங்கே எங்க நார்த்த மரம் இருக்கு?”

     “அவுரு வருவாரு, அவருகிட்டயே கேளு” என்று சொல்லி அனுப்புகிறாள். சற்றைக்கெல்லாம் ரங்கன் வருகிறான்.

     “ஏம்மா, அந்தப் பொம்புள இங்கேருந்தா தண்ணி எடுத்திட்டுப் போவுது?”

     “ஆமா, புதுசா வந்திருக்கிற காலனில ஒரு வீட்ல வேலை செய்யிறா. குடிக்கத் தண்ணி இல்ல, ஒரு குடம் எடுத்திட்டுப் போறேன்னா...”

     “அப்படீன்னா, விட்டுடறதா?...” விழிகள் உருள அவன் குரலின் ஏற்றம் ஒரு எசமானனுக்குரிய தோரணை காட்டுகிறது.

     “ஏம்ப்பா, இந்த வீட்டு நிழல்ல ஒதுங்கி, கேணி நிறைய ஆண்டவனருளால நல்ல தண்ணி இருக்கறப்ப தாகத்துக்குக் குடிக்கப் பிச்சை கேட்டாப்பல வரவங்ககிட்ட இல்லேன்னு சொல்லச் சொல்லுறியா? அது என்னால முடியாது.”

     “அந்தப் பொம்புள அதைப் பாக்கெட் போட்டு விக்குது, பெரிய பஸ் ஸ்டாப்புல, ஒரு குடத்துக்கு இருநூறு முந்நூறு சம்பாதிக்கும்?”

     இவளுக்குப் புரிகிறது. திரும்பிப் பார்த்துக் கொண்டு “நீயும் வாணா, எடுத்து வித்துக்க. நான் தடையா இருக்கல.”

     அவன் எதுவும் பேசவில்லை.