உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
8 இவன் மனம் அமைதியிழக்கிறது. இந்த வீட்டைக் கட்டிக் காத்துக் கொண்டு இவள் எதற்காக இருக்க வேண்டும்?... ஆனால் எங்கே போவது? நிழலிலேயே இருந்து பழகிவிட்டால் என்ன? சொந்த நிழல் என்றோ, சொந்தமில்லாத நிழல் என்றோ ஒன்று கிடையாது. எல்லாம் மனசைப் பொறுத்தது. அவள் ‘மகன்’ அன்று வந்து கெஞ்சினான். போகப் பிடிக்கவில்லை. ஏன்? ஏன்? வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது. காந்தி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போன போது கூட அந்த வீட்டில் அப்படி ஒரு துயரம் வந்து கவ்வவில்லை. ஊர் உலகமே அழுதது. ரகுபதிராகவ ராஜாராம், ஈசுவர அல்லா தேரே நாம் என்று, ஆங்காங்கு பிரார்த்தனைக் கூட்டம் கூடினார்கள். உண்ணாவிரதம் இருந்து துக்கம் காத்தார்கள். ஆனால் துக்கம் என்பது, அப்படிப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இல்லாமல், குறிபார்த்துச் சேதப்படுத்தும் அம்பாக, இம்சையாக வந்து விடிந்தது. சுதந்தரம் வந்த பிறகு, எஸ்.கே.ஆர். தேர்தலில் நிற்க வேண்டும், கட்சித் தலைவர்கள் பலரும் அவரைக் குருகுலம் வீட்டில் வந்து பார்த்தார்கள்; வற்புறுத்தினார்கள். அவருக்குத் தொகுதி ஒதுக்கினார்கள். “பதவி இல்லாத மக்கள் சேவையே இதுவரையிலும் நான் செய்தது. இனியும் எனக்குப் பதவி வேண்டாம்...” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். அவள் புருசனுக்குத்தான் மிகுந்த ஏமாற்றம். “என்ன ஆளு இவுரு? நேரு ஐயா தூதனுப்பிக் கூட வானாம்ன்னு சொல்றாரு?” என்று முணமுணப்பான். “பொழுதுக்கும் இந்தத் தோட்ட வேலை எடுபிடி வேலைன்னு பவுசில்லாம கிடக்கிறதுக்கு, நம்ம ஊரு நாட்டுல போயி பிழைச்சிக்கலாம்...” என்பான். அப்படியும் போகவில்லை. அந்த வளைவில் தான், மூன்று குழந்தைகளையும் அவளையும் விட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தான். குடித்துவிட்டு இசைகேடாக விழுந்து மண்டையில் அடிபட்டுப் போனான். நேரு இறந்து போவதற்கு முன்பு கூட அவரை எல்லோரும் வந்து கேட்டார்கள். சீனாவோடு போர் வந்தது. ராதாம்மா கூட வளையல்களைக் கழற்றித் தங்கம் கொடுத்தார்கள். தங்கத்துக்கு மாற்றுக் குறைந்தது. காங்கிரசுக்காரன், தமிழ்ப் பெண்ணின் ‘தாலியை’ப் பற்றி இழுப்பது போல் நோட்டீஸ் அச்சடித்து ஒட்டினார்கள்... ஆனால் இது, நடந்த நாள் குடியரசு தினம். வித்யாலயத்துச் சுவர்களில் இந்தி ஒலிக, தமிழ் வால்க என்று எழுதியிருந்ததைப் பார்த்து விட்டு உள்ளே வந்து சுப்பய்யா, பராங்குசம் எல்லோரிடமும் வந்து சொன்னார். ‘இதைக்கூட ஒழுங்காக எழுதத் தெரியவில்லை!’ என்று சுப்பய்யா, மையை எடுத்துக் கொண்டு போய்த் திருத்தினான். “‘ஒலிக’ன்னா, நேர் மாறாகப் பொருள்...” என்று சிரித்தது அவளுக்கு நினைவு இருக்கிறது. கொடியேற்றிவிட்டு, வேறு பல பள்ளிக்கூடங்களில் அவர் கொடியேற்றிக் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளப் போனார். அப்போது ராதாம்மா அங்கு இருந்தாள். குழந்தை ‘விக்ரம்’ மூணு நாலு வயசிருக்கும். பள்ளிக்கூட வளாகத்தில், பாட்டு, பேச்சு, நாடகம் என்று தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அப்போதுதான் போலீசு வண்டியும் கூட்டமுமாக உள்ளே நுழைந்தது. அம்மாவும் சுசீலா டீச்சரும் திடுக்கிட்டு ஓடினார்கள். இந்தி கலவரம் அப்போதெல்லாம் அதிகமாகவே இருந்தது. இந்தி பிரசார சபாவில் நுழைந்து, புத்தகங்களை நாசம் செய்தது. தீ வைத்து, உள்ளிருந்தவர் சட்டையைக் கிழித்தார்கள் என்றெல்லாம் செய்தி கேள்விப்பட்டார்கள். ஆனால் அது இந்த அய்யாவுக்கே வரும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. குருகுலம் வீடு, பள்ளிக் கொட்டகைகள், மரங்கள் ஆகிய சூழலில், தனியாக, பழைய கால மச்சுவீடாகத் தெரியும். முன்புறம் ஒரு பெரிய வேப்பமரம் கிளைகளை விரித்து நிழல் பரப்பும். வாயில் வராந்தாவின் குட்டைச் சுவரில் ராதாம்மா உட்கார்ந்து புத்தகம் படிப்பாள். வராந்தாவைக் கடந்த பெரிய கூடத்தில் தான் தேசத் தலைவர்களின் படங்கள் இருந்தன. கீழே அமர்ந்து தான் பேசுவதோ, நூற்பதோ, பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவதோ செய்வார்கள். அங்கே தான் அவரை வண்டியிலிருந்து இறங்கிக் கூட்டி வந்தார்கள். முதன் முதலில் உள்ளிருந்த அவள் தான் விரைந்து வந்தாள். “தாயம்மா, பேசினில் தண்ணீர் கொண்டு வா!” என்று சொல்லி அம்மா, அவர் காயங்களைத் துடைக்கப் பஞ்சும் துண்டும் கொண்டு வந்தார். ஒரு சாய்மான திண்டைக் கொடுத்து உட்கார வைத்தார்கள். கதர்ச்சட்டை தாராகக் கிழிந்து தொங்க, உள்ளே இரத்தக் காயம்... சமையல் செய்து கொண்டிருந்த ருக்குமணி, இவள் மருமகன் பாப்பு, பஞ்சமி புருசன்... அவனை ஏனோ பாப்பு என்று கூப்பிடுவார்கள். கந்தசாமி ‘எலக்ட்ரிக்’ வேலை தெரிந்தவன். எந்த தீபாலங்காரமும் ஒயர் இழுத்து அவன் செய்வான். அவன் தான் கூட்டத்தில் விலக்கி, டாக்டரை வர வழி செய்து, மருந்து வாங்கி வந்து, உதவினான். அன்று அவன் குடியரசு நாளை முன்னிட்டு, கூடத்தில் இருந்த படங்களுக்கு ஸீரியல் பல்ப் வேலையில் இருந்தான். ஸ்டூலில் அவன் நின்ற போதுதான் எதிர்பாராதது நடந்திருக்கிறது. “அய்யா, ஒரு ஈ குஞ்சுக்குக் கூடத் தீம்பு பண்ண மாட்டாரே? அவருக்கு இது எப்படி நடந்தது? இப்ப சுயராச்சிய ஆட்சிதான நடக்குது?...” என்று புலம்பினான். “ஸார், கம்ப்ளெயின்ட் புக் பண்ணி, எஃப்.ஐ.ஆர். போட்டுடறோம்” என்று போலீசு அதிகாரியே சொன்னது கேட்டது. “அப்பா, நீங்கதா இந்த அரசியலும் வோணாம் மண்ணாங்கட்டியும் வாணாம்னு ஒதுங்கியிருக்கிறீங்களே? இப்படி எதுக்கு அக்கிரமம் பண்ணாங்க?” என்று ராதாம்மா ஆற்றாமைப்பட்டாள். “நாட்டுக்கு சுதந்தரம்னு உங்க காலத்தில் கனவு கண்டது நடந்தாச்சு. இங்கேயே கொண்டாடிய குடியரசு தின விழா இல்லாமல் வேறெ இடங்களுக்குப் போக வேணுமா?...” “பிரிட்டிஷ் ஆட்சியில் கூட, உங்களுக்கு இப்படி எதுவும் நேரல. காலில் தான் சாட்டையடி விழுந்தது. சட்டையைக் கிழித்து, கீறி கல்லடி கொடுத்து... இந்தி படிக்காட்டி போகட்டும். இப்படி ஒரு வன்முறையில் ஈடுபடணுமா?... இன்னும் கேஸ், கீஸென்று போனால் என்னென்ன நடக்குமோ தெரியலியே?...” என்று அம்மா புலம்பினார். “இல்லீங்கம்மா, இந்தக் கும்பல் கொள்ளி எடுத்திட்டு திரிவது, வெறும் ஸ்கூல் பிள்ளைகளின் எதிர்ப்பு இல்ல. திட்டமிட்டு பிள்ளைகள் மனசில் விஷம் விதைச்சு, இந்த சந்தர்ப்பத்தை நெருக்கடியாக்கியிருக்காங்க. நேத்து தெற்கே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை அடித்துப் போட்டு எரிக்க முயற்சி நடந்திருக்கு. அய்யா உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிருக்கலாம். இத இப்படி சும்மா விடக்கூடாது. கேஸ் புக் பண்ணி...” என்று போலீசுக்காரர் சொன்ன போது, அய்யா அவர் கையைப் பற்றிக் கொண்டார். “கேசும் வாணாம், ஒண்ணும் வாணாம். இந்த நாட்டு அரசியல் இப்படித் தாறுமாறாக் குழம்பும்னு நான் நினைக்கல. எல்லாரும் துடிப்புடைய பள்ளிப் பிள்ளைகள். குமரப்பருவத்து வேகம். அவர்களுடைய எதிர்காலம் கெடக்கூடாது. கொள்ளி எடுத்தவன், கொளுத்தியவன், கொலை செய்ய வன்முறையில இறங்கியவன்னு நம் கண்களிலேயே நாம் திராவகம் ஊத்திக் கொள்ளுற செய்கை - எதிர்வினை வேணாம். அவர்கள் அமைதி வழியில் செல்லாததற்கு நாமே காரணம்னு உறுதிபடுத்தக் கூடாது. குழந்தை தீயின் பக்கம் உட்கார்ந்து குச்சி கொளுத்துகிறது. அம்மா அதை வாங்கித் திருப்பிச் சூடு போடுவாளா? விடுங்கள். நாம் தான் இப்ப பாடம் கற்றுக் கொள்ள வேணும். எப்படி இந்த எழுச்சியைச் சமாளிக்கலாம்னு பார்க்கணும்...” “இது எழுச்சி இல்லை ஐயா. இது ஓர் அரசியல் கட்சியின் சூழ்ச்சி. பிள்ளைகளைத் துருப்புச் சீட்டாக்குகிறார்கள்.” “இருக்கட்டும். எப்படியும் வன்முறைக்கு வன்முறை தீர்வு அல்ல.” கூட்டம் கலைந்து போயிற்று. அந்தப் போலீசு அதிகாரி இப்போது ஓய்வு பெற்றிருப்பார். எங்கிருக்கிறாரோ, என்னமோ? அந்த இரத்தக்கரை படிந்த வேட்டி, கிழிந்த சட்டை எல்லாவற்றையும் அவள் தான் சோப்புப் போட்டுத் துவைத்து உலர்த்தினாள். அய்யா அன்று முழுதும் பச்சைத் தண்ணீர் அருந்தவில்லை. “யாரும் என்னை வந்து பார்க்க வேண்டாம் என்று சொல்லம்மா...” அலுவலக அறையில் தொலைபேசியின் பக்கம் சுப்பய்யா தான் உட்கார்ந்திருந்தான். எதிரே, காந்தி படம், கஸ்தூரிபா அம்மையின் படம்... பக்கச் சுவர்களில் அப்போதைய தேசத்தலைவர்களின் படங்கள். ஸீரியல் பல்ப் எரிய இணைப்புக் கொடுக்கவில்லை. கண்களில் நீர் வழிய விம்மினார். அப்படி அவர் துயரத்தை வெளிப்படுத்தி அவர்கள் கண்டதில்லை. “அப்பா, வெறுமே பட்டினி இருக்கக் கூடாது. கொஞ்சம் கஞ்சி குடியுங்கள்...” “வேண்டாம்மா...” என்று சைகை காட்டினார். “ராதா, நீ வேணா, தம்புரா வச்சிட்டு ஹரிதுமஹரோ பாடு!” என்றார் அம்மா. அவள் தம்புரை எடுத்து வந்து உட்கார்ந்ததும் விக்ரம் ஓடி வந்து விட்டது. “நானும்... நானும்...” தம்புரை அவள் மீட்ட முடியாமல் தொந்தரவு செய்யவே “தாயம்மா, குழந்தையை மரத்தடிப் பக்கமோ தோட்டத்துக்கோ கொண்டு போய் விளையாட்டுக் காட்டு!” என்றார் அம்மா. குழந்தை கையையும் காலையும் உதறிக் கொண்டு முரண்டு பிடித்தான். அவள் அவனைப் பற்றி வளாகத்தில் கொண்டு சென்றாள். பசு, கன்று, மற்ற பிள்ளைகளின் கொஞ்சல், எதுவுமே அவனை மாற்றவில்லை. அவள் பின்னாலிருந்த தங்கள் குடிலுக்குத் தூக்கிச் சென்றாள். கிணறு, துளசி மாடம், மல்லிகைக் கொடி என்ற பசுமையான சூழல். பஞ்சமி அப்போது கடலூர் பக்கம் கிராம சேவிகாவாக இருந்தாள். பாப்பு வந்து வந்து போவான். சந்திரி எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்து, ஆஸ்பத்திரி பயிற்சிக்குச் சேர்ந்திருந்தாள். குருவிகளைக் காட்டிக் கொண்டு, அரிசி நொய்யை முற்றத்தில் இறைத்தாள். “அய்யாவுக்கு இப்படிச் செஞ்சவுங்க யாரு தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே பாப்பு நின்றான். மனதில் சந்தேகம் குத்திட, அவள் விழித்துப் பார்த்தாள். “அவங்க ஸ்கூல்தா...” அவள் திகைத்துப் போனாள். ஒன்பது, பத்து என்று தேறாமல் அரசியல் பேசிக் கொண்டு திரிந்தது அவள் உணர்வில் படிந்தது. அடுக்குத் தமிழ் பேச்சு, பாட்டு, நாடகம், சினிமா என்று பாதி நாட்கள் வீட்டுக்கே வருவதில்லை. வந்தாலும் சோத்தைப் போடு என்ற அதட்டல்தான். சந்திரி டிரெயினிங் சேர்ந்த பிறகு வாரத்தில் ஒரு நாள் தான் வருவாள். பஞ்சமியும் இல்லை. இவள் அநேகமாக சாப்பாட்டுக் கூடத்தில் இருப்பாள். இவன் ஒருத்தனுக்கு சில நாட்களில் அந்தச் சாப்பாடே கொண்டு வந்து வைத்திருப்பாள். வெறுமே தான் வாயிற்கதவைச் சாத்தியிருப்பாள். “இதென்னம்மா சோறு?” எனக்கு வாணாம் போ!” என்று கோபித்துக் கொண்டு போவான். தட்டைத் தள்ளியிருப்பான். சந்திரி பூப்போட்ட சில்குச் சேலை உடுத்திக் கொண்டு எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான் அன்று. “எங்கடீ?” “ஆஸ்பத்திரிக்குத்தா. இன்னிக்கு நைட். தெரியுமில்ல?” “அதுக்கு ரெண்டு மணிக்கே சீவிச்சிங்காரிச்சிக்கிட்டுக் கிளம்புற?” “ஃபிரன்ட்ஸ்கூட சினிமாக்குப் போறோம்மா, அஞ்சறைக்கு முடிஞ்சதும் ஏழுமணி ட்யூட்டிக்கு அப்படியே போயிடுவேன். மிட்லன்ட்...” “நீ காலைல கூடச் சொல்லாம, இன்னிக்குப் பாத்து என்ன சினிமா? ஊரே அல்லோலமாயிருக்குது?...” “என் ஃபிரன்ட் டிக்கெட் வாங்கி வச்சிருக்காம்மா. காலையில இங்க கொடியேத்தம், பிறகு கலவரம், பேச முடியல. கலவரம்னா, நேர ஆஸ்டலுக்குத்தா போவே...” என்று கூறிவிட்டுப் போகிறாள். குழந்தை பாப்புவிடம் விளையாடிக் கொண்டிருந்தான். இவளுக்கு மனம் கொள்ளவில்லை. அனுசுயாவும் சுசீலா டீச்சரும் விழா நடந்த இடத்தில் போடப்பட்ட விரிப்புகளைச் சுருட்டிக் கொண்டிருந்தார்கள். “தாயம்மா, பாப்பு எங்கே? இங்கே அஞ்சாறு பிள்ளங்க வெளில போகவே பயப்படுதுங்க. லஸ், குளத்தங்கரைப் பக்கம் தான் வீடாம். அவனக் கொண்டு விட்டுட்டு வரச் சொல்லு...” “ஏம்மா? அவ்வளவுக்கு கலவரமா?” “இல்ல ஆயா, வெளியே சில பாய்ஸ், வந்து நாங்க இந்தி படிக்கிற ஸ்கூல்ன்னு, தாலியக் கட்டிடுவோம்னு மஞ்சக்கயிறு வச்சிட்டு நிக்கிறாங்க. இந்தி நோட்டெல்லாம் வாங்கிக் கிழிக்கிறாங்க...” “அட பாவிகளா? எவன்டாவன்? குலைய உருவிப் போடுறே? இவனுவ வாணா படிக்க வானாம்? அதுக்குன்னு ஏ, ஊரைக் கொளுத்தறானுவ? நீங்க வாங்கம்மா, உங்க வீடுகள்ள நான் பத்திரமா சேக்குறேன்? ஏன் பயப்படுறீங்க?... தாலியா கட்டுறானுவ?” - அடிவயிற்றிலிருந்து கிளர்ந்து வந்தது. அந்தக் குழந்தைகளை அவள் அன்று நடத்திக் கொண்டு வீடுகளில் கொண்டு சேர்த்தாள். ஆங்காங்கு போக்கற்ற விடலைகள் நின்று கொண்டிருந்தார்கள். எங்கே பார்த்தாலும், சுவர்களில் தட்டிகளில் கரிக்கோட்டால் இந்தி அரக்கி போட்டு அடிப்பது போல் படம். திரும்பி வரும் போது, கொடும்பாவி கட்டி இழுத்துக் கொண்டு, தேனாம்பேட்டைச் சந்தொன்றில் கோசம் போட்டுக் கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும், இந்திக்குப் பாடை; தமிழுக்கு மேடை; தமிழுக்கு உயிர்; இந்திக்கு மயிர் என்பது போல் கொச்சையான வசவுகளும், எதிர்ப்பதங்களுமாகச் சுவர்கள் அசிங்கப்படுத்தப்பட்டிருந்தன. தேசியக் கொடிகளும் கூட கவுரவம் பெற்றிருக்கவில்லை. கப்பலே கவிழ்ந்த துயரத்துடன் திரும்பி வந்தாள். அடுத்த வாரம் பஞ்சமி வந்த போது, இவள் கண்ணீர் வடித்தாள். இந்தித் தீ, மாநில மெங்கும் பற்றி எரிந்தது. “எம்மா, உங்கப்பாரு, திருட்டுச் சாராயத்தக் குடிச்சிட்டு இப்பிடிப் பின்பக்கமா நுழைவாரு. ‘இப்பிடி பால் வாத்த இடத்துல நஞ்சக் குடிச்சிட்டு வரீங்களே’ன்னு அடிச்சிப்பேன். போலீசு புடிச்சிட்டுப் போயிடும். ‘தாயம்மா, போ, ஜாமின் கட்டிட்டுக் கூட்டியா’ம்பாரு. கடசில அஞ்சும் குஞ்சுமா விட்டுட்டுச் செத்தாரு. உங்க மூணு பேரையும் இந்த நிழல்லதா வளர்த்தேன். அவன் எப்படி இப்படியானான்?” இங்க வந்தா, “இதென்ன சோறு, மனிசன் திம்பானா? இந்த வீட்டுல, ஒரு பண்டம் ருசியா கிடையாது. சாதில பெரிய... அய்யிருன்னு நெனப்பு. இங்க யாரும் உசந்ததில்ல. எல்லாம் கோழியடிச்சி, ஆடடிச்சிக் கறி தின்னவங்க. வேசம் போடுறாங்க. எங்கப்பாரே உன்னாலதா செத்தாருன்னு எல்லாரும் சொல்றாங்க” என்று கத்திக் கச்சை கட்டினான். மீசை அரும்பித் துளிர்க்க, அடங்காத காளையாக கைமாறிப் போனான். மெல்ல மெல்ல அவனாகவே துண்டித்துக் கொண்டான். அந்த அடியில் இருந்து அய்யா தேறவேயில்லை. அன்றாடம் கத்தலும் கோசமும், பள்ளிக் கூடங்களை அடைக்கச் சொல்லி, கறுப்புக் கொடிகாட்டுதலும் அங்கே அரங்கேறின. அவள் மைந்தன் தலைமையிலேயே காலிக் கும்பல் வித்யாலத்துள் நுழைந்தது. உள்ளேயே இருந்த விடுதிச் சிறுவர் சிறுமியர் பலரும் பெற்றோரற்றவர்கள். சுப்பய்யாவும் மருதமுத்துவும் வன்முறையைச் சந்தித்தார்கள். பள்ளி மூடப்பட்டது. அந்த வருசம் பாடங்கள் சரியாக நடக்கவில்லை. கோடை விடுமுறையோடு, அய்யா குடும்பம், பெயர்ந்து இந்த இடத்துக்கு வந்தது. பராங்குசம், நிர்வாகியானான். அவர் வைத்திருந்த காரை அன்றே காலிக் கும்பல் நசுக்கி உடைத்துவிட்டது. அதற்குப் பிறகு அவர் கார் எதுவும் வாங்கவில்லை. இங்கே வந்த பிறகு, சைக்கிள் ரிக்சாவில், தாம்பரம் ரயில் நிலையம் சென்று, மாம்பலத்தில் இறங்கிப் பள்ளியைப் பார்வையிட நடந்தே செல்வார். சில நாட்களில் வெளியூர் பஸ்களில் ஏறிச் சென்றும் இறங்கிக் கொள்வார். அப்போது, யார் யாரெல்லாமோ அந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்போது... ராதாம்மா குழந்தையுடன் பம்பாயில் இருந்ததாக நினைவு. அவள் பையன் அந்த வீட்டுக்குள் வந்தான். உத்தர காண்டம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10 11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|