உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
21 பூமகளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. "வாருங்கள். நாம் சத்திய முனியிடம் போய்ச் சொல்வோம். அஜயன், விஜயன், நீலன் எல்லோரும் அங்குதான் போயிருக்கிறார்கள்..." அவர்கள் செல்கிறார்கள். வாழை வனத்தின் குறுக்கே நடந்து செல்கின்றனர். உச்சிக்கு வந்த பகலவன் மேற்கே சாயும் தருணம். கானகத்தின் ஆரவாரங்கள் இனிமையான சில ஓசைகளுள் அடங்கும் நேரம். ஆசிரமத்தில் பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்கள். நந்தமுனி மட்டுமே அவர்களுக்கு ஏதோ ஓர் ஆட்டம் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். மரங்களின் மேலிருந்து பிள்ளைகள் பறவை போலும், விலங்குகள் போலவும் ஓசை எழுப்புகிறார்கள். எந்தப் பறவை எந்த மரத்தில் இருந்து ஓசை எழுப்புகிறது என்று கீழிருக்கும் பிள்ளை சொல்ல வேண்டும். அவன் பார்வை மறைக்கப் பட்டிருக்கிறது. ஒரே காலத்தில், பல்வேறு பறவைக் குரல்கள் ஒலிக்கின்றன. பையன் இங்கும் அங்கும் ஓடுகிறான். அஜயன் தான். இதோ நாகண வாய்ப்புள்... இதோ, நீலகண்டப் பறவை. இதோ... இதோ இதுதான் செம்போத்து... "ஹி ஹி... ஹி... ஈ... ஈ..." என்ற ஒலி விசித்திரமாகக் கேட்கிறது. மகிழமரக் கிளையில் அவள் பார்க்கிறாள். விஜயன். "இது ஒன்றும் பறவை இல்லை!" "பொய்... பறப்பது எதுவும் பறவை தானே?" "ஒத்துக் கொள்ள முடியாது. ஈ... ஈ... என்ற ஒலி, குதிரைக் கனைப்பு" என்று அஜயன் கண் கட்டை அவிழ்த்துப் போடுகிறான். "குதிரை பறக்குமோ?..." "ஏன் பறக்காது? அந்த அசுவமேதக் குதிரை பறந்துதானே நம் வனத்துக்கு வந்து இறங்கி இருக்கிறது?" பூமகள் அடுத்த அடியை எடுத்து வைக்காமல் மரத்தோடு சாய்ந்து நிற்கிறாள். "குதிரை பறப்பது என்பது புரளி. அப்படியே பறந்தாலும் ஈ... ஈ... என்று கனைக்காது, விர் விர்ரென்று பெரிய சிறகுகளை அடித்துக் கொண்டு நீண்ட ஒலி எழுப்புமாக இருக்கும்!" "சரி அப்படியே வைத்துக் கொள்வோம். அது எப்படி ஆறு தாண்டி, நமது வனத்துக்குள் வந்தது?" "நீந்தி வந்திருக்கும்!..." "அதன் மேலுள்ள பட்டுப் போர்வை, நனையவில்லை, கலையவில்லை, உடம்பு நனைந்திருக்கவில்லை..." "சூரியனின் ஒளியில் ஈரம் காணாமல் போகும் என்பது கூடவா தெரியாது?" "அஜயா, விஜயா, அந்தப் பக்கம் இருந்து ஓடத்தில் ஏற்றி, இங்கே கொண்டு விட்டிருக்கலாம் இல்லையா?" என்று நீலன் கூறுகிறான். "எதற்கு அப்படி விட வேண்டும்? யார் விட்டிருப்பார்கள்?" "மிதுனபுரிக்கப்பால் ராசா படை வந்திருக்குதாம். நேத்தே எங்க அப்பன் பார்த்துச் சொன்னார். மிதுனபுரி போய், தோல் கொடுத்து விட்டு, பெரிய பானை வாங்கிட்டு வரப் போனார். அப்ப குதிரை, யானை, கொடி, குடை, எல்லாம் பார்த்தாராம். கோட்டைக்கு வெளியே, பெரிய மரத்தடியில் கூரை கட்டி அங்கு ராசா இருந்தாராம்!" "மிதனபுரிக் கோட்டைக்குள் போக அங்கே இடமே இல்லையாம். 'தோலை எல்லாம் ராசாவின் ஆளுங்களே வாங்கிட்டு, தங்கக்காசு குடுத்தாங்களாம். எங்காயா சண்டை போட்டுது. தோலைக் கொண்டு குடுத்திரே, பானையிலே கூழு பண்ணுவோம், புளிக்க வைப்போம். இந்தக் காசில என்ன பண்ண? வேதவதியில் கொண்டு வீசு'ன்னு கத்தினாங்க..." "ராசன்னா தங்கக் காசுங்கதா சாப்புடுவாங்களா?" ஒரு பொடிப்பயல் மென்று 'அம் அம்' என்று உண்பதைப் போல் கேலி செய்கிறான். எல்லோரும் அதையே செய்து சிரிக்கிறார்கள். "அப்பாடா..." என்று விஜயன் வயிற்றைத் தடவி ஏப்பம் விடுகிறான். அப்போதுதான் அவள் அங்கு இருப்பதைப் பிள்ளைகள் பார்க்கிறார்கள். மரங்களில் உள்ள பிள்ளைகள் அவளை வந்து சூழ்கிறார்கள். "அம்மா...! நாங்கள் அந்தக் குதிரையைப் பார்க்கப் போகிறோம்! இதோ இந்த மாயன் பார்த்து விட்டானாம். கதை கதையாகச் சொல்கிறான். வெண்மையாகப் பால் நுரை போல் இருக்கிறதாம். கறுப்பு மூக்காம். பச்சைப் பசேலென்று மொத்தை மொத்தையாகச் சாணி போடுகிறதாம்!" என்று விஜயன் இரு கைகளாலும் அதன் அளவைக் காட்ட கொல்லென்று எல்லோரும் சிரிக்கிறார்கள். "எங்கே இருக்கிறதாம், அது?" "வேம்பு வனத்து அருகில் புல் தரையில் மேய்கிறதாம்..." "அதன் பின் யாரும் உரியவர்கள் வரவில்லையா?" "யாரும் இல்லை வனதேவி. அவர்கள் அந்தக் குதிரையை அதன் கால் போன போக்கில் மேய விடுவார்களாம். அது தடம்பதித்த இடமெல்லாம் அரசருக்குச் சொந்தமாம்?" "அதெப்படி நாம் நடக்கும் இடத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்? நாம் இங்கே நடமாடுகிறோம்; உணவு சேகரிக்கிறோம்; படுத்து உறங்குகிறோம். இது வனதேவிக்கு உரிய இடம். அந்த வனதேவிதான் இவர்கள் என்று எங்கள் குடியில் எல்லோரும் சொல்கிறார்கள். நாம் எல்லோரும் வனதேவியின் பிள்ளைகள். அவர்கள் இங்கு வந்தால் நம்மை மகிழ்ச்சியாக இருக்க விடமாட்டார்கள்!" "அதெப்படி குதிரையை விரட்டிவிட்டு ஒன்றுமறியாத நம் இடத்தை ராசா பறிப்பது?" "மந்திரம் போட்டிருக்கிறார்கள் சடா முடி முனிவர்கள்... மந்திர சக்தியில் நெருப்பு எரியும்; வெள்ளம் வரும்; காற்று அடிக்கும்." "...முன்னே சம்பூகன் இறந்தது நினைவிருக்கா?" என்று பூவன் கேட்கிறான். சம்பூகன் பெயர் கேட்டதுமே அவள் நடுநடுங்கிப் போகிறாள். "அம்மா நாம் எல்லோரும் அங்கே போய்ப் பார்க்கிறோம்! பூவன், காட்டுகிறாயா?" விஜயனுக்குத்தான் துருதுருப்பு. நந்தமுனி ஒற்றை யாழின் சுருதி இல்லாமலே வருகிறார். அது மவுனமாகத் தொங்குகிறது. பிள்ளைகள் அவரைச் சூழ்ந்து கொள்கிறார்கள். "குருசுவாமி, யாகக்குதிரை வந்திருக்கிறது! நாங்கள் போய்ப் பார்க்க வேண்டும்!" "பார்க்கலாமே? அதைச் சுற்றி நின்று கொண்டு பாட்டுப் பாடுவோம். அது வந்த வழியே போகிறதா என்று பார்ப்போம்!" இது நல்ல முடிவாக அவளுக்குத் தோன்றுகிறது... பிள்ளைகள் கூறிய இடத்தைக் குறிப்பாக நோக்கி அவர்கள் நடக்கிறார்கள். அவர்களுக்கு நன்கு பரிசயமான தாவரங்கள்; பறவைகள்; சிறு விலங்குகள்; நீர் நிலைகள்... வேம்பு வனத்தில் புதிய சாணம் இருக்கிறது. "ஓ! இங்குதான் அது வந்திருக்கிறது! இது அதன் சாணம் தான்!" என்று அதன் மேலேறிக் குதிக்கிறான் மாயன். "இல்லை... இது போன்ற சாணம் இதுவரையில் இந்தக் காட்டில் நான் பார்த்ததில்லை..." என்று உடன் வந்த இளம் பெண் கும்பி கூறுகிறாள். புற்றரை பசுமையாக ஆற்றுக்கரை வரை விரிந்து கிடக்கிறது. ஆனால் அங்கு எந்தக் குதிரையும் மேயவில்லை. இவர்கள் ஆற்றுக்கரையின் ஓரம் அடர்ந்த கோரைப் புற்கள், புதர்கள் இடையிலெல்லாம் குதிரைக்காகத் தேடுகிறார்கள். அது தென்படவில்லை. காட்டுப் பன்றிகள், எருமைகள், மான்கள் கூடத் தென்படுகின்றன. தேடி வந்த குதிரை இல்லை. "நான் அந்தக் குதிரையைப் பிடித்து அதன் முதுகில் ஏறிச் சவாரி செய்ய ஆசைப்பட்டேன்..." "அது பின்னங்காலால் உதைக்க முடியாதபடி நாங்கள் பிடித்துக் கொள்வோம்!" "இந்தக் காட்டில் எத்தனையோ மிருகங்கள் இருக்கின்றன. குதிரைகள்... அதுவும் வெள்ளைக் குதிரைகள் தென்படவே இல்லையே?..." "முன்பே வந்து ராசாவின் ஆட்கள் வலை வைத்துப் பிடித்துப் போயிருப்பார்கள்!" "அந்த வெள்ளைக் குதிரை, சூரிய ராசாவின் தேரில் பூட்டிய குதிரை போல் இருந்தது!" ஆற்றோரமாக அவர்கள் நடந்து வருகிறார்கள். மாதுலன் குழலிசைக்க, நாதமுனி ஒற்றை நாணை மீட்ட அவர்கள் குதிரையை வரவேற்கச் செல்வது போல் நடப்பதாக அவளுக்குப் படுகிறது. "எனக்கு அந்தக் குதிரையில் ஏறி இந்தப் பூமண்டலம் முழுதும் ஒரு சுற்று வர வேண்டும் என்று தோன்றுகிறது..." என்று விஜயன் வழியில் பட்ட கருப்பந்தடிகளை உடைத்துக் கொண்டு கூறுகிறான். கரும்புத் துண்டுகள் கடிபடுவது போல், குதிரை பற்றிய கற்பனைகளும் சுவைக்கப்படுகின்றன. "ஒரு கால் மாயன் சொன்னாற் போல் அது பறந்து அக்கரை போய்விட்டிருக்கும்!" "அதெல்லாமில்லை, இவர்கள் அப்படியே தூங்கி, கனவு கண்டிருப்பார்கள். குதிரை துரத்தி வருவதாக நினைத்துத் தேனெடுக்காமல் ஓடி வந்திருப்பார்கள்!" "இல்லை அஜயா? நாங்கள் இரண்டு கண்களாலும் பார்த்தோம்! அது உதைத்ததில் எனக்குப் பாரும், காயத்தை!" "ஒரு கால் இங்கே வரவேற்பு இருக்காது என்று ஆற்றின் மேல் பறந்து அது மிதுனபுரிப் பக்கம் போயிருக்கும்!" "அங்கே தமனகனோ, சரபனோ உள்ளே விடாமல் கோட்டைக் கதவுகளை அடைத்திருப்பார்கள். அது அவ்வளவு உயரக் கோட்டைச் சுவர் மேல் பறக்க முடியுமா?... அப்படி உள்ளே போனால், தேவதைக்குப் பலியாகும்!" நந்தமுனி ஒற்றை நாண் அதிரும்படி மீட்டுகிறார். "பிள்ளைகளே, இந்தக் குதிரைப் பேச்சை விட்டு இப்போது எல்லோரும் பாடிக் கொண்டே நம் இருப்பிடம் போகலாம்! இந்தக் காட்டுக்கு எத்தனையோ பேர் நமக்கு நண்பர்களாக வருகிறார்கள். அப்படி அதுவும் வந்து விட்டுப் போகட்டுமே?... பாடுங்கள்..." அவர் ஒற்றை நாணை மீட்டுகிறார்.
"வனதேவி பெற்ற மைந்தர்கள் யாம்... அவள் மடியில் நாங்கள் வாழ்கின்றோம்" ஏற்றமும் இறக்கமுமாகக் குரல்கள் ஒலிக்கின்றன.
"தன தானியங்கள் அவள் தருவாள்! தளரா உழைப்பை யாம் தருவோம்! அத்திர சாத்திரம் அறிந்தாலும், ஆருக்கும் தீம்புகள் செய்யோம் யாம்! கோத்திர குலங்கள் எமக்கில்லை. குண தேவி பெற்ற மைந்தர்கள் யாம்..." மனசுக்கு இதமாக இருக்கிறது. திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டே அவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு வருகிறார்கள். அங்கே இலுப்பை மரத்தின் அடியில்... வெண்மையாக, பசுவோ? காத்யாயனிப் பசுவுக்கு இப்படி வாலில்லை. அஜயனும் விஜயனும் பிள்ளைகளும் கூச்சல் போட்டு ஆரவாரம் செய்கிறார்கள்... "அதோ... நம் குடிலுக்குப் பக்கத்தில், குதிரை, நம்மைத் தேடி வந்திருக்கிறது. நாம் அதைத் தேடிப் போயிருக்கிறோம்!" ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் அச்சம் மறந்து அஜயன் ஓடுகிறான். விஜயன் அவனை முந்திக் கொண்டு அதன் முதுகில் கை வைக்கிறான். அது உடலை ஒரு குலுக்குக் குலுக்குகிறது. வண்ணப் பட்டுத்துண்டு போர்த்து, தோல் வாரால் பிணித்திருக்கும் முதுகு வானவில்லின் ஏழு நிறங்கள் கொண்டாற் போன்று கண்களைக் கவருவதுடன், 'அருகே வந்து தொடாதீர்கள், நான் எட்டி உதைப்பேன்' என்று அச்சுறுத்துவது போலும் இருக்கிறது. இவர்கள் பின்னே நகர, பூமகள் எச்சரிக்கை செய்கிறாள். "பிள்ளைகளே, நீங்கள் யாரும் அருகிலே போகாதீர்கள். சத்திய முனிவர் யோசனையின்படி நாம் நடப்போம்..." "குருசாமி மூலிகை தேடி மலைப்பக்கம் போனார். நத்தியின் குழந்தைக்கு இரண்டு கால்களும் பின்னினாற் போல் நிற்க முடியவில்லை. அதற்காக ஒரு மூலிகை கொண்டு வரச் சென்று நான்கு நாட்களாகின்றன. கூடவே சிங்கனும் போயிருக்கிறான்..." என்று அவர் செய்தி தெரிவிக்கிறார். இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, குதிரை பொன்மின்ன, பின் கால்களால் பூமியைச் சீய்க்கிறது. "குளம்புக்குப் பூண் கட்டியிருக்கிறார்களா?" விஜயன் கேட்கிறான். "அறியேன், குழந்தாய்... நீ அருகில் போகாதே!" "இதை நமக்கே வைத்துக் கொண்டால் என்ன?... இப்போது கூட இதன் முதுகில் நான் தாவி ஏறி அமர்ந்து விடுவேன்..." அவன் இளமுகத்தில் ஆவல் மின்னுகிறது. "குழந்தைகளே, இது யாகக் குதிரை. இதை ஏவியவர்கள் எங்கேனும் மறைந்து இருப்பார்கள். அவர்களால் நமக்கு வீணான சங்கடம் உண்டாகும். இதை மெள்ள அப்பால் துரத்தி விடுவோம். நீங்கள்... ஒரு கூடையில் தானியமோ, புல்லோ காட்டுங்கள். அது அந்தப் பக்கம் நகரும்..." என்று அப்போது மெல்ல பெரியன்னை வருகிறாள். "நீங்கள் எல்லோரும் எதற்கு இப்படி அதைச் சூழ்ந்து ஆரவாரம் செய்கிறீர்கள்? இருந்து விட்டுப் போகட்டும்! கண்ணம்மா, பொழுது சாய்ந்து அந்தி வேளையாகிறது. அவரவர் வீண் விவாதம் செய்யாமல் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். அந்தி வந்தனம் செய்து விட்டு, இருப்பதை உண்டு, உறங்குமுன் உட்கார்ந்து யோசனை செய்யுங்கள்... போங்கள்!" அவள் குரலுக்கு அனைவரும் கட்டுப்பட்டாலும், அஜயன் மட்டும் அன்னையின் காதோடு, "அதற்கு அடைக்கலம் என்று பெரியன்னை ஏன் சொன்னார்? அதை யார் கொல்ல வந்தார்கள்?" என்று வினவுகிறான். "மேதாவி அண்ணா, மிதுனபுரிக்காரியின் கோபத்துக்குத் தப்பி இங்கே வந்திருக்கிறது! புரிகிறதா? இதை எந்த தேசத்து மன்னர் ஏவி விட்டிருந்தாலும், அவர்கள் எவ்வளவு பராக்கிரமசாலிகளானாலும், மிதுனபுரி எப்போதும் தலை வணங்காது. அவர்கள் சுதந்திரமானவர்கள்; நண்பருக்கு நண்பர்கள்!" விஜயன் இவ்வாறு கூறுவது அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது. வனதேவியின் மைந்தர்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|