உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
26 மழையில் நனைந்தவண்ணம், கனிகளும் கிழங்குகளும் சேகரித்து வந்து பிள்ளைகள்; குடிலில் வைப்பதைப் பூமகள் எடுத்துச் சீராக்கிப் பதனமாக வைக்கிறாள். நெருப்பு... அதைக் காத்து வைப்பது மிகக் கடினமாக இருக்கிறது. பசுக்களும் காளைகளும் அழிந்து போன நிலையில் சாண எரி முட்டைகள் சேமிக்கப்படவில்லை. கிழட்டுக் காத்யாயனிப் பசு மட்டுமே ஓர் ஓரம் ஒண்டி இருக்கிறது. காட்டு நாய்கள், மரக்கிளைகளில் தங்கி இருக்கும் பறவைகள் அவ்வப்போது தங்கள் மீதுள்ள நீரை விசிறியடிக்கும் போது மேனிகளை ஆட்டி அசைக்கும் ஓசைதான், மழையின் இசைக்குத் தாளமாக இருக்கிறது. கல்திரிகையில் அவந்திகாவும் ரீமுவும் தானியம் அரைக்கிறார்கள். "குழந்தாய்..." என்று குரல் எழுப்பும் போதே அவந்திகாவுக்கு உணர்வுகள் மேலோங்கித் தழுதழுக்கிறது. அந்த மாவில் சிறிது தேனை ஊற்றிப் பிசைந்து, கரைத்துப் பிள்ளைகளுக்கு ஊட்டமாகக் கொடுக்கிறார்கள். பெரிய கொட்டிலில் அமர்ந்து முனிவர் அவர்களுக்கெல்லாம் பாடல்களாகக் கல்வி கற்பிப்பார். அவர்களும் சேர்ந்திசைப்பார்கள். பூமகள், அவர்கள் அருகில் இருப்பதால், 'மழையே, நீ வாழ்க! எங்கள் இன்னல்களை நீயே இப்போதைக்குத் துடைக்கிறாய்!' என்று வாழ்த்துகிறாள். வீட்டைச் சுற்றி நச்சமைந்த நாகங்களும், கொடிய விலங்குகளும் சூழ்ந்தாலும் அச்சமில்லை. ஆனால், அக்கரையில் உள்ள படைகள் இங்கே வரலாகாது. இத்துணை குழப்பங்களுக்கும் தானே காரணம் என்பதை உணர்ந்திராத அந்த வெள்ளைக் குதிரையும் அவர்கள் வளைவில் மரத்தடியில் வந்து ஒதுங்குகிறது. "அம்மா, குதிரை வந்திருக்கிறது!" என்று அவந்திகா கத்துகிறாள். "அடித்து விரட்டு!" என்று கடித்துத் துப்புகிறாள் கேகய அன்னை. "குதிரை என்ன செய்யும்? அது காட்டில் திரிந்த பிராணி தானே? நாடு பிடிக்க ஓடி வா என்று மனிதர் சொன்னதைக் கேட்காதது அதன் உரிமை இல்லையா?" "தாயே, நீங்கள் யார் என்று தெரியவில்லை, சத்திய முனிவர் யாவாலி அன்னை பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். நந்தமுனியும் பூமையும் இளம்பருவத்தில் இருந்தே அறிமுகமானவர். ஆனால் தாங்கள்...?" "நானும் நல்லது செய்கிறேன் என்று ஒரு பாவத்தைச் செய்தேன். எதற்காக இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்றே புரியவில்லை சகோதரி!" "காரணம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. இந்தப் பன்னிரண்டாண்டுகள், இந்த அவந்திகாவும் நானும், நினைத்து நினைத்து வெதும்பிக் கொண்டிருந்தோம். கோத்திரம் அறியாதவர், கோத்திரம் அறிந்தவர் எல்லோருக்கும் நியாயங்கள் ஒரே மாதிரி என்று நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். கேகய மன்னனின் புதல்வி நான். ஆனால் என்னை வளர்த்தவள் என் அன்னை அல்ல. அந்த அன்னை, என் தந்தையிடம், அவளுக்குத் தெரிவிக்காத இரகசியம் ஒன்றைச் சொல்லும்படி வற்புறுத்தினாள். காரணம் ஒன்றுமில்லை. அவருக்கு ஈ, எறும்பு, பறவை மொழிகள் எல்லாம் தெரியுமாம். அவை ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தன. இவர் சிரித்தார்; அருகில் இருந்த என் அன்னை ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டாள். 'உனக்குச் சொல்ல முடியாது' என்று மறுத்தார். ஏன், ஏன்... என்று அவள் கேட்ட போது, அதைச் சொல்ல முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். இந்த அரசர்கள் நாளொரு மங்கையரை விரும்பி மாளிகைக்கு கொண்டு வரும் வழக்கம் தானே. என் தாய் சந்தேகப்பட்டுச் சொல்லியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தார். 'சொன்னால் தலை வெடித்துவிடும்' என்று எந்த முனிவனோ அச்சுறுத்தினானாம். அதற்காகப் பிடிவாதம் பிடித்த என் அன்னையை, என் தந்தை அங்கேயே பாழுங்கிணறொன்றில் தள்ளிவிட்டார் என்ற செய்தியை நான் எப்படி அறிவேன்? அன்னைக்காக நள்ளிரவிலும், பகலிலும் கூவி அழுவேன். மந்தராதான் என்னை அரவணைத்து வளர்த்தவள். அரசகுலத்தின் துரோகங்களை அறியாத பணிப் பெண்டிர் யார்?... அப்போது, இந்தப் பூமகளைக் கானகத்துக்கு அனுப்ப அவளே கருவியானாள். ஆனால் சகோதரி, பெற்ற மகனாலும் வெறுத் தொதுக்கப்பட்ட பாவி நான். இந்த சீதேவியை, கருப்பிணியாகக் கானகத்தில் விட்டு வா என்று சொன்னவனின் குடையின் கீழ் நான் முள்ளில் இருப்பது போல் இருந்தேன். சகோதரி உங்கள் வரலாற்றை அறிவதில் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. இந்த பூமகளை, அந்த நிலையில் அரவணைத்து அன்புடன் பேணி வாழ வைத்திருக்கிறீர்கள். இதுவே என் வாழ்வில் நான் அடையும் அமைதி..." மழை பயிர்களை, உயிர்களைத் தழைக்கச் செய்கிறது. குளம், குட்டைகள், ஆறுகளில் மீன்கள் களித்துப் பெருகுகின்றன. நெருப்புக் காத்துப் பக்குவப்படுத்தி, பிள்ளைகளுக்காக மாதுலன் மீனுணவு கொண்டு வருகிறான். பெரியன்னை உணவே கொள்வதில்லை. நாளுக்கு நாள் நலிந்து, பேசுவதும் நூலிழையாக நைந்து போகிறது. "தாயே, சிறிது கூழ் அருந்துங்கள். ஏதேனும் உட்கொண்டு மூன்று நாட்களாகின்றன." பூமகளின் முகத்தை நலிந்த கரங்களினால் தடவுகிறாள். "பிள்ளைகள் எங்கே?..." பூமகள் குடிலின் வெளியே வந்து பிள்ளைகளைக் கூப்பிடுகிறாள். அந்த முற்பகல் நேரத்தில் சுற்றுச் சூழல் தோட்டம் சீரமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். மழைக்காலம் ஓய்ந்ததற் கடையாளமாக, வானவன் வயிரச் சுடர் பொலிகிறான். அமுதம் அருந்திய தாவரங்கள் எத்துணை வண்ணங்களில் அவனுக்கு நன்றி சொல்கின்றன? ரீமுவின் செவலைப் பசு கன்றை ஈன்றிருக்கிறது. அது நிலை கொள்ளாமல் துள்ளி விளையாடுகிறது. யாகக் குதிரை... அதுவும் சற்று எட்ட, இந்த வானகத்திலேயே புல் மேய்ந்து கொண்டிருக்கிறது. தாறு மாறாக வளர்ந்திருக்கும் பசுமைகளைச் சீராக வெட்டிக் கழிக்கிறான் விஜயன். அஜயன் அவற்றை ஓரமாக அப்புறப்படுத்துகிறான். "அஜயா, விஜயா, நாநியம்மா கூப்பிடுகிறார். வாருங்கள்!" அவர்கள் உடனே கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு வருகிறார்கள். வரும் போது அழகிய மலர்க்கொத்துகளைக் கொய்து கொண்டு வருகிறார்கள். "நாநியம்மா, அஜயனும் விஜயனும் வணங்குகிறோம்..." பூங்கொத்துக்களை அவள் நலிந்த கரங்களில் வைக்கின்றனர். வெண்மையாக மலர்ந்த அடுக்கு நந்தியாவட்டை, அரளி ஆகிய மலர்கள். முதியவளுக்குப் பார்வை துள்ளியமில்லை. இருந்தாலும் அவள் காட்டிக் கொள்வதில்லை. மலர்களைக் கண்களில் ஒத்திக் கொள்கிறாள். "குழந்தைகளா, அம்மா சொல்லித்தான் நாநியம்மாவை வந்து பார்ப்பீர்களா?" அவர்களை அருகில் வைத்து, தழுவி உச்சி மோந்து கண்ணீர் சொரிகிறாள் பெரியன்னை. சூடு செய்த நீர் சிறிது கொண்டு வந்து பிள்ளைகளிடம் தருகிறாள் பூமை. மிதுனபுரியில் இருந்து நந்தசுவாமி வாங்கி வந்த மரக்குடுவையில் வெதுவெதுப்பான நீரை, பிள்ளைகள் வாங்கி, அவளை அருந்தச் செய்கின்றனர். ஓமப்புல்லின் வாசனை... நிறைவுணர்வுடன் அருந்துகிறாள். "குழந்தைகளா?... நீங்கள்... இந்தக் காட்டிலேயே இருப்பதை விரும்புகிறீர்களா?" அவர்கள் வியப்புடன் அவளை நோக்குகின்றனர். "இந்த இடம் எங்கள் இடம்; எங்கள் அன்னையின் இடம்; நாங்கள் இங்கே இருப்பதை விரும்பாமல் எப்படி இருப்போம்...?" குடிலின் இன்னொரு புறத்தில் இதுகாறும் அமைதியாக இருந்த கேகய அன்னை, உடனே, "குழந்தைகளா, உங்கள் தந்தை மாமன்னர் என்பது தெரியுமோ உங்களுக்கு?" என்று பருத்தி வெடித்தாற் போல் உண்மையைச் சிதற விடுகிறாள். அவர்கள் சட்டென்று திரும்பிப் பார்க்கின்றனர். "ராஜமாதா, என்ன சொல்கிறார்?..." "குழந்தைகளா, நான் உங்களுக்கு ராஜமாதா இல்லை; உங்கள் பாட்டி... நீங்கள் ஆசையோடு 'நாநியம்மா' என்றழைக்க வேண்டியவள்... இங்கே வாருங்கள்..." அவர்கள் திகைத்து நிற்கையில் பூமகள் தலைகுனிந்து மவுனம் சாதிக்கிறாள். "பூமகளே, ஏன் மவுனம் சாதிக்கிறாய்? எத்தனை நாட்களுக்கு இப்படி ஒருவரை ஒருவர் அறியாத வண்ணம் கண்ணாமூச்சி ஆட முடியும்? ஊர் அபவாதம் என்று உனக்குப் பெரும்பாதகம் செய்து விட்ட உன் நாயகனைப் பற்றிய உண்மையை இந்தப் பிள்ளைகளும் தெரிந்து கொள்ளட்டும்! பாவத்தின் கருநிழல் எங்கே தொடங்கியது என்று புரிந்து கொள்ளட்டும்!" "அம்மா...!" என்று நடுங்கும் குரலுடன் அவள் காலில் வீழ்ந்து பணிகிறாள். "அதெல்லாம் தெரியாத உண்மைகளாக மேடிட்ட குவியல்களுள் இருக்கட்டும் தாயே!..." அந்த அன்னை, அன்புடன் அவள் முகத்தில் விழுந்தலையும் கூந்தலை ஒதுக்குகிறாள். "வாழ்நாளெல்லாம் தவக்கோலத்தில் கழியும் உன்னால் இந்த மனித குலமும் பாவனமாகிறதம்மா! குமரப்பருவத்தின் தலை வாயிலில் நிற்கும் பிள்ளைகள் தம் தந்தையின் செய்கை பற்றி அறியட்டும்! அசுவமேதக் குதிரை, அவர்களுக்கு உயிர்கொடுத்த தந்தையின் அரசிலிருந்து ஏவி விடப் பட்டதென்று அறியட்டும்! உயிர் விளக்கை இருட்கானகத்துக்கு அனுப்பிவிட்டு உயிரில்லாப் பொற்பதுமையை வைத்து வேள்வி செய்யும் பொய்மையை உணரட்டும்!... குழந்தாய், உனக்கிழைக்கப்பட்ட இந்த அநீதி உலகறிய வேண்டும்!..." கிளர்ந்தெழுந்த சொற்கள் எதிரொலியில்லாமல் நிற்கின்றன. அன்னைக்கு மூச்சு வாங்குகிறது. மரக்குவளையில் நீர் கேட்டு வாங்கி அருந்துகிறாள். சத்திய முனியும் அங்கே நிற்கிறார். "மகளே, உன் மைந்தர்களின் எதிர்காலம் பற்றி நீ எதுவும் சிந்திக்கவில்லையா?..." அவள் தரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். "தாங்கள் போர் மூளக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களிடம் தூது சென்றீர்கள். ஆனால் தூது செல்லக்கூடிய தகுதியே இல்லை என்பது போல் இங்கே வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன. க்ஷத்திரிய வம்சத்தின் பராக்கிரமங்கள், வில்-வாள், தோள் வலியில் தான் இருப்பதாக நிரூபித்து வருகிறார்கள். என் மைந்தர்களுக்கு அவர்கள் யார் என்று தெரிந்து விட்டது. இனி முடிவெடுக்க வேண்டியது அவர்களே!..." "போர் இப்போதும் தொடர்ந்திருக்கிறது. ஒரே ஆறுதல் ஆறு தாண்டி வரவில்லை. மிதுனபுரியையே அழிக்க முனைந்திருக்கிறார்கள். யாருடைய வெற்றி, எதற்கு வெற்றி என்று புலப்படவில்லை. குதிரை இங்கே இருக்கிறது. அது இப்போது யாகக் குதிரை இல்லை..." "யாகம் செய்யும் ஆசான்களுக்கு, இப்படிக் குதிரை கட்டறுத்துக் கொண்டு ஏவியவரை உதைத்தால் என்ன செய்வது என்ற சிக்கலில் இருந்து மீளத் தெரியவில்லை போலும்!..." இப்போது யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி?... நந்தமுனியைக் கொன்ற காரணத்தால், மிதுனபுரியே போர்க்கோலம் கொண்டு இவர்கள் படையை அழிக்க முன்வந்து விட்டது... மாதுலன் வருகிறான்... அவன் ஏதோ செய்தி கொண்டு வந்திருக்கிறான் என்று புரிகிறது. "என்னப்பா?..." "ராஜா!... சேனை... குடை" என்று சைகை செய்கிறான். முனிவர் வெளியே செல்கிறார். பையன்களும் வெளியே தயக்கத்துடன் நின்று பார்க்கின்றனர். "வரவேண்டும் மாமன்னா?... வாருங்கள்..." உள்ளே வந்து, அவர்களை உபசரிக்க, நீர், இருக்கை எல்லாம் எடுத்துச் செல்கின்றனர். "அஜயா, விஜயா, பாட்டனை வந்து வணங்குங்கள்! குழந்தாய், மகளே, வேதபுரி மன்னர்..." வேதபுரி மன்னர்... அந்நாள் அரக்கமன்னன் அவரை வெட்டிவிட்டதாக அவள் முன் தலையைக் கொண்டு வந்து காட்டச் செய்த போது அவள் சுருண்ட அடிவயிறு தொய்ய அழுது துடித்தாளே, அது நினைவுக்கு வருகிறது. அந்த உணர்வுகள் அனைத்தும் இப்போது இறுகி விட, அவள் கல்லாகி விட்டாள். மகிமை பொருந்திய, மாமன்னர், தருமபரிபாலனம் செய்யும் கோசல நாட்டுப் பிரான், அந்தத் திருமகனின் பக்கம் தானே இவருடைய வெண்கொற்றக் குடையும் சாயும்? அத்துணை இடைஞ்சலிலும் கடல் தாண்டித் தூது வந்த வானர வம்சத்தினனும் இவள் பக்கம் இளகவில்லையே? நியாயங்கள் மண்ணையாளும் வேந்தர் பக்கமே! நியாயங்கள் எல்லாம் மேற்குல ஆதிக்கங்களுக்கே... "கண்ணம்மா..." நைந்த குரல் அவளை உலுக்குகிறது. பெரியன்னைக்கு மூச்சுத் திணறுகிறது. "அவரைப் பணிந்து கொள்ளம்மா! நீயும் உன் மக்களும் இந்தக் கானகத்தில் உணவுக்கும் உடைக்கும் இருப்புக்கும் நெருப்புக்கும் பொழுதெல்லாம் போராடும் வாழ்வுக்கோ உனை விதித்தது? மேலும் இந்தப் போர் முடிவு பெற வேண்டும். அவரே நடுநிலையில் நிற்கக் கூடியவர்..." பூமகள் அவள் கையை அழுந்தப் பற்றுகிறாள். அவள் எழும்பும் மார்பை மடியில் சாத்திக் கொண்டு நீவி விடுகிறாள். "குழந்தாய், நாம் எதிர்த்துக் கேட்க இயலாத அபலைகளாகிப் போனோம். அதனால் இலகுவில் தியாகிகள் என்ற பெயரை வாங்கிக் கொள்ள வருத்திக் கொள்கிறோம். நீ தியாகியாகி இந்த மண்ணில் மடிய வேண்டாம். உன் தந்தை உன்னை மீண்டும் ஏற்க வந்துள்ளார்..." "இல்லை தாயே, நான் இப்போது சுதந்தரமானவளாக இருக்கிறேன். என் மைந்தர்களுக்கும் தம் ஆதிக்க குலம் பற்றிய தன்னுணர்வு வரவேண்டாம். இந்தக் கானகத்தில் மனிதர்களோடும் விலங்குகளோடும், இயற்கையோடும் வாழும் வாழ்வே எங்களுக்கு ஏற்புடையது!" "மகளே, உன் மீது அபாண்டப் பழி சுமத்தியவர்களுக்கு உன் நியாயத்தை நிரூபிக்க வேண்டாமா?..." கேகய அன்னைக்கு அவள் தலையசைக்கிறாள். "யாருக்கு யாரும் நிரூபிக்க வேண்டாம்; அவரவர் உள்ளங்களில் விழுந்துவிட்ட நிழலே வதைக்கும். அதையும் நான் விரும்பவில்லை. தேவி, அந்த அரண்மனை வாழ்வு நான் ஏற்க முடியாமல் விட்ட வாழ்வு..." அப்போது வேதபுரி மன்னரின் நெடிய உருவம், குடிலுக்குள் தலை வணங்கி நுழைவதைப் பூமகள் காண்கிறாள். அவள் முன் தலை மீது கைவைத்து ஆசி மொழிகிறார். "மகளே, என் மீது உன் மனத்தாங்கல் புரிகிறது. என்னால் எதையும் செய்ய முடியவில்லை. உன் மகத்துவத்தை நீ உன் மவுனத்தினாலேயே புரிய வைத்துவிட்டாய். இந்த சத்திய முனிவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்..." என்று தழுதழுக்கிறார். "அதற்காகத் தங்கக் கொப்பி போட்ட மாடுகளும் அடிமைகளும் பரிசாக வழங்குவீர்களா என்று கேளுங்கள் முனிவரே!..." இந்தக் காரமான குரல் எங்கிருந்து வருகிறது என்று திடுக்கிட்டாற் போல் பூமகள் திரும்பிப் பார்க்கிறாள். மன்னர் தலை குனிந்து நிற்கிறார். "எந்தையே, மகளைப் பார்த்துவிட்டீர்கள்; போய் வாருங்கள். நான் தங்களை வருத்தத்துடன் போகச் சொல்லவில்லை. எனக்கு இனி எந்த அரண்மனையிலும் இடமில்லை. தேடித் தேடி வில்லை வளைத்தொடித்த வெற்றி வீரர் என்று கோத்திரம் தெரியாத மகளைத் தாரை வார்த்துக் கொடுத்தீர்கள். இத்துணை அவலங்களுக்கும் நானே காரணமாயிருக்கிறேன். முதலில் பதினான்காண்டுகள்; இப்போது பன்னிரண்டாண்டுகள்... எனக்கு உகந்த இடம் இதுவே..." "மகளே, சக்கரவர்த்தித் திருமகனின் உள்ளத்தை நான் அறிவேன். ஒவ்வொரு கணமும் நெக்குருகிக் கொண்டு இந்த வேள்வியைத் தொடங்கினார். இது நிமித்தமாக, பிள்ளைகள் தந்தையைக் கண்டு சேர வேண்டும், நீங்கள் உரிய வாழ்வுக்கு வர வேண்டும் என்பது என் அவா... இந்த வேள்வி இப்படி இரணகளத்தில் முடியாமல் நிற்கலாமா, மகளே?" கேகய மாதா வெடிக்கிறாள். இது பூகர்ப்பத்தில் இருந்து பிறக்கும் அனல் பொறிகளைப் போல் சிதறுகின்றன. "வேள்வி! ஆயிரம் பதினாயிரங்களாகப் பொன்னை இறைத்து யாகசாலை அமைக்கும் போது, குடியிருந்த வேடுவ மக்கள் நிலைகுலைகிறார்களே, அது வேள்வியா? திரவியங்கள் சேகரிப்பதும் மந்திரங்கள் சொல்பவரைக் கூப்பிடுவதும், மேற்குலத்தாருக்கே தானங்கள் என்று வாரி வழங்கி அகந்தைக் கிழங்கை ஆழ இறக்குவதும், பிறர் மண்ணை ஆக்கிரமிக்கக் குதிரையை விரட்டுவதும், பிறகு அதையே பலியிடுவதும் வேள்வியா? அதைப் புரிந்து கொண்ட அந்த உத்தமப் பிராணி, காவலரை உதைத்துத் தள்ளி இங்கே அடைக்கலம் புகுந்திருக்கிறது. எனக்குப் பட்டும் பொன்னும் அலங்காரமும் வேண்டாம் என்று சுதந்தரமாகத் திரிகிறது. கண்டீரா? உமது மகள் தியாகம் என்ற அக்கினி வேள்வியில் இருபத்தெட்டு ஆண்டுகளாகக் குளித்துப் பொன்னாய் ஒளிருகிறாளே, அந்த வேள்வி எப்போது, யாரால் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதற்கு மறுமொழி கூறுங்கள்!" இந்த வேள்விக் குண்டத்தில், யாருடைய சுகங்களை, யாருடைய தருமங்களை ஆஹூதியாக்கியிருக்கிறார்கள்? காலம் காலமாக ஒவ்வொரு தாயின் கருப்பைச் சுவர்களையும் உதைந்து கொண்டு வளர்ந்து முழுமையும் அறிவும் ஆண்மையும் பெறும் வருக்கம், யாருடைய நலன்களை வேள்விக் குண்டத்தில் ஆஹூதியாக்கிக் கொண்டிருக்கிறது?... தாயையும் பிள்ளைகளையும் ஒதுக்கிவிட்டு வேள்வியாம். பரிபூரணமம்? பொற் பிரதிமை... ஆஹாஹா என்று அந்த அன்னை சிரித்த சிரிப்பு, ஏதோ ஊழித்தாண்டவத்துக்கான முன்னுரை போல் பூமகளுக்கு விதிர்விதிர்ப்பைத் தோற்றுவிக்கிறது. குனிந்து அந்த அம்மையின் தோள்களைப் பற்றித் தழுவுகிறாள். வனதேவியின் மைந்தர்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|