உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
12 சகுந்தலா கார் ஏறச் சென்றவள் சற்றுத் தயங்கினாள். சாமண்ணாவிடம் இன்னும் கொஞ்சம் பேச வேண்டும். அவனை மனமாரப் பாராட்ட வேண்டும் போலிருந்தது அவளுக்கு. தயங்கி நின்றவள் வசீகரமான முத்துப் பல் வரிசையில் சிரித்து, "என்ன பிரமாதம் போங்கள். கடைசியில் கண்ணீர் வந்துடுத்து!" என்றாள். "நல்ல வசூல் ஆகும் பாருங்கோ" என்றார் டாக்டர் ராமமூர்த்தி. "எல்லாம் உங்க ஆசீர்வாதம்!" என்று சாமண்ணா கைகூப்பினான். "இன்னொரு தடவை கூடப் பார்க்கணும் போல இருக்கு. வெள்ளிக்கிழமை மறுபடியும் வரலாமா, அப்பா? என்று கேட்டு சாமண்ணாவைத் தன் அழகிய விழிகளால் பார்த்துக் கொண்டே ஸெடானின் பின்புறம் போய் உட்கார்ந்தாள். டாக்டரும் ஏறி அமர்ந்து கையைக் காண்பித்தார். தேவரதம் ஒன்றில் இருவரும் கொலு வீற்றிருப்பது போல் இருந்தது அது. அத்தனை நேரமாக அந்தக் காட்சியைச் சற்று எட்ட இருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்த பாப்பாவுக்கு உள்ளத்தில் ஒரே எரிச்சலாய்ப் புகைந்தது. 'என்னிடம் ஒரு வார்த்தைப் பேசினாரா? நான் இங்கே வந்திருப்பது கூடத் தெரியாதது போல் ஓர் அலட்சியமா? அந்தப் பெண்ணோடு எத்தனை இளிப்பு' என்று பொருமினாள். உள்மனம்: 'நீ நிற்பதை அவர் கவனிக்கவில்லை பாப்பா! ஏன் ஆத்திரப்படுகிறாய்? கவனித்திருந்தால் பேசாமல் இருப்பாரா?' பாசம் வைக்கிறவர்களுக்கு அதன் விளைவாக நேரும் துன்பங்கள் நிறையப் பிடிக்கும். அதுவும் பாசத்துக்கு உரியவரிடமிருந்தே அந்தத் துன்பம் வரும்போது அதை ரசிக்கவே செய்வார்கள். பாப்பா இரவு பூராவும் சாமண்ணாவின் அலட்சியப் போக்கை நினைத்து மருகினாள். "என்னைப் பார்க்கவே இல்லை. என்னிடம் பேசவே இல்லை" என்று தனக்குத் தானே திரும்பத் திரும்பச் சொல்லிப் புலம்பினாள். பொழுது விடிந்ததுதான் தாமதம். குளித்துச் சாப்பிட்டு முடித்தவுடன் அப்பாவிடம் வண்டியைத் தயார் பண்ணச் சொல்லி வக்கீல் வீட்டுக்குப் புறப்பட்டாள். வெயில் சுள்ளென்று உரைத்தது. வரதாச்சாரி மனைவி கோமளம் கையில் ஆரணி குப்புசாமி முதலியார் எழுதிய 'தேவசுந்தரி' கனத்துக் கிடக்க, அதில் வரும் தேவசுந்தரி, தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளும் இக்கட்டு நிலையில் இருந்து கொண்டு, கெட்ட எண்ணத்தோடு வரும் ஜெகந்நாதனிடம், "ஐயா! நீர் உயர் குடியில் பிறந்தவராய் இருந்தும், இம்மாதிரி அனாதையாகிய ஒரு ஸ்திரியை அவமானம் செய்வது நீதியாகுமா? நீர் உடனே என்னைப் போகும்படி விட்டு விடவில்லையெனில் நான் உதவி கோரிக் கூச்சலிடுவேன்" என்று சொல்லிக் கொண்டிருக்க, வாசலில் குதிரை வண்டியிலிருந்து பாப்பாவும் குமாரசாமியும் இறங்குவதைப் பார்த்ததும், படித்த இடத்திற்கு அடையாளக் குறியாய்த் தனது மூக்குக் கண்ணாடிக் கூட்டை வைத்துவிட்டு, "வா, வா" என்று பாப்பாவை வரவேற்றாள். குமாரசாமி பாப்பாவைப் பார்த்து, "நீ உள்ளே போம்மா. நான் அரை மணியில் திரும்பி வந்துடறேன்" என்று சொல்லி வண்டியோடு புறப்பட்டுப் போய்விட்டான். பாப்பா வந்து ஊஞ்சலில் சுவாதீனமாக உட்கார்ந்தாள். "பாப்பா! நீ வருவேன்னு எனக்குத் தெரியும்! எதிர்பார்த்துண்டேதான் இருந்தேன்" என்றாள். "அதெப்படி தெரியும் உங்களுக்கு?" எனக் கேட்டாள் பாப்பா. "எப்படியோ! நேத்தே ஊகிச்சுட்டேன். நான் ஊகிச்சது சரியாப் போச்சா, இல்லையா?" "நேத்திக்கு நடந்ததைப் பார்த்தேளா மாமி?" என்று பாப்பா ஆரம்பிக்க, "அர்ஜுன மகாராஜா தானே! அமர்க்களம். அந்த வேஷத்துல எத்தனை அழகா இருந்தான் பார்த்தாயா அந்த சாமண்ணா!" என்று கோமளம் வியக்க, "என்கிட்டே ஒரு வார்த்தை கூடப் பேசல்லே மாமி" என்று பாப்பா துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்ன போது கோமளத்துக்குப் பரிதாபமாயிருந்தது. "ஏன், என்னாச்சு? எதுக்கு இப்படி வருத்தப்படறே?" என்று அனுதாபத்தோடு கேட்டாள் கோமளம். "டாக்டரையும், அவர் பெண்ணையும் ரொம்ப அக்கறையா கார் வரை போய் வழி அனுப்பி வச்சவருக்கு நான் எதிரிலேயே மலை மாதிரி நிக்கறது கண் தெரியலையாக்கும்! என்னைப் பார்க்கலைன்னாலும் உங்களையாவது வந்து பார்த்திருக்கலாம் இல்லையா?" "இதப் பாரு! பாப்பா! எங்காத்துக்காரர் குணம் தான் உனக்கு நன்னாத் தெரியுமே! வெளியிலே சடசடன்னு வந்து வண்டி ஏறிடுவார். கூட்டத்தில் நிற்கிறதே அவருக்குப் பிடிக்காது. அதனாலே ஒரு வேளை பார்க்க முடியாமல் போயிருக்கலாம். இதையெல்லாம் நாம் பெரிசா நினைச்சு ஒரு குத்தமா எடுத்துக்கக் கூடாதும்மா..." "இருக்கட்டும். நீங்க விடுவிடுன்னு போறதாகவே இருக்கட்டும். அதுக்குள்ளே ஓடி வந்து ஒரு வார்த்தை சொல்லி வழி அனுப்பியிருக்க வேண்டாமோ? நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு முக்கியம்னு கூடத் தெரியாமப் போச்சா? இந்த டிராமா நடக்கறதுக்கே நீங்க தானே மூல காரணம்?" "இந்தா பாப்பா! நாங்க வெறும் மூல காரணம் தான். மூலதனக் காரணம் நீதானே?" என்று சிரித்த கோமளம் மாமி, "சாமண்ணா நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லம்மா. அவன் ரொம்ப நல்ல பையன். அந்த கும்பல்ல அவன் கண்ணிலே நீ பட்டிருக்க மாட்டே. இல்லாட்டா நிச்சயம் உன்னண்டை வந்து பேசியிருப்பான். அதோட அர்ச்சுன வேஷத்துல அப்படியே வெளியே எத்தனை நேரம் நிப்பான்? சந்தர்ப்பம் அப்படி. உன் பேர்லயோ எங்க பேர்லயோ அவனுக்கு விரோதமா, என்ன? அசடாட்டம் பேசாதே! அவன் மனசு எனக்குத் தெரியும். நாடகம் நடக்கிறப்போ கவனிச்சுண்டு தான் இருந்தேன். ஒவ்வொரு பாட்டு ஆரம்பிக்கும் போதும் ஆர்மோனியக்காரர் கிட்ட வந்து நின்னுண்டு அவரைப் பார்க்கிறாப் போல உன்னை ஒரு பார்வை பார்க்கத் தவறலையே!" "என்னைப் பார்த்தாரா? நிச்சயமா என்னைப் பார்த்தாரா? அதென்னவோ நீங்கதான் சொல்றீங்க! எனக்கு அப்படித் தெரியலை" என்று அகமும் முகமும் மலரக் கூறினாள் பாப்பா. "உன்னைப் பார்க்கறதுன்னா அப்படி அப்பட்டமா நேரடியாப் பார்ப்பானா? ஆர்மோனியக்காரரைப் பார்க்கிற மாதிரி நாசூக்கா... நீயும் தான் கவனிச்சயே! நான் அதைப் பார்த்தேன்!" என்று உதடும் மூக்கும் பேசரியும் புன்னகையில் மூழ்கச் சொன்னாள் கோமளம். "எனக்குச் சந்தேகமா இருந்தது மாமி!" என்றாள் பாதி மகிழ்ச்சியை விழுங்கிக் கொண்டு. "போ, இதுக்கெல்லாம் சந்தேகமாக்கும். ஓர் அபிநயத்திலே மனசை முழுக்கக் காட்டறதிலே நீங்கள்ளாம் கெட்டிக்காராளாச்சே! உன்னாலே இதைப் புரிஞ்சுக்க முடியலேன்னா நான் நம்புவேனா? இரு, இதோ காப்பி கொண்டு வர்றேன்." கோமளம் மாமி போவதையே பார்த்துக் கொண்டிருந்த பாப்பாவின் மனம் பரவசமாகிக் கையைத் திருகிக் கொண்டிருக்க, வாசல் பக்கம் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். "மாமி இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே சாமண்ணா உள்ளே வந்து எதிரில் நின்ற போது பாப்பாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. மொழுக்குப் போல எண்ணெய்ப் பசையோடு மினுமினுத்தான். கண்களில் தூக்கம் தெரிந்தது. அவனைத் தொடர்ந்து நாய் ஒன்று வாலைக் குழைத்துக் கொண்டே உள்ளே வர அவன், "சூ சூ!" என்று அதை விரட்டிய வேகத்தில் அவன் விரலிலிருந்த மோதிரம் நழுவித் தரையில் உருண்டு ஓடியது. சட்டென்று அதைக் குனிந்து எடுத்த பாப்பா, "இந்தாங்க" என்று அவனிடம் கொடுத்தாள். அப்படிக் கொடுக்கும் போதே, 'அது முந்தைய இரவு அர்ச்சுன வேடத்தில் அவன் அணிந்த பகட்டு மோதிரம், நிஜ மோதிரம் அல்ல' என்பதைத் தெரிந்து கொண்டான். "சாதாரண மோதிரந்தான்! வேஷம் கலைக்கிறப்போ கழற்றி வைக்க மறந்து போச்சு" என்றான். "உண்மைக்கும் பகட்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும்!" என்றாள். 'பாப்பா ஏன் இப்படிப் பேசுகிறாள்? இதற்கு என்ன அர்த்தம்? இவளுக்கு என் மீது என்ன கோபம்?' என்று குழம்பினான் சாமண்ணா. "ஏன் பாப்பா, ஏன் ஒரு மாதிரி இருக்கே? என் மேலே ஏதாவது கோபமா?" "எனக்கென்ன கோபம்? உங்களுக்கு ஞாபக சக்தி குறைஞ்சிட்டு வர மாதிரித் தோணுது. பாவம், ஏகப்பட்ட கவலை உங்களுக்கு. மோதிரம் கழற்றி வைக்க மறந்துவிட்ட மாதிரி, எல்லாத்தையுமே மறந்துடாதீங்க!" "நான் வேற எதையுமே மறக்கலையே!" "மறக்காமலிருந்தால் சரி!" "ராத்திரி நாடகம் எப்படி இருந்தது? அதைப் பற்றி நீ ஒண்ணுமே சொல்லலையே! நீ இங்கே வந்திருப்பாய். உன்னைப் பார்த்துப் பேசிவிட்டுப் போகலாம்னுதான் அவசரம் அவசரமாகத் தூங்காமக் கூட ஓடி வந்தேன்." "என் அபிப்ராயம் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா என்ன? பெரிய இடத்து ரசிகர்களெல்லாம் உங்களைப் பாராட்டிக் கை குலுக்கறப்போ என் பாராட்டுதானா முக்கியம்?" "சபையிலே பின் வரிசையிலே நீ உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். என் கவனமெல்லாம் உன் மீதேதான் இருந்தது. ஆனா நாடகம் முடிஞ்சு திரும்பிப் போறப்பதான் பார்க்க முடியாமப் போயிட்டுது." "ஆமாம், முக்கியமாப் பேசறவாகிட்ட பேசி முடிச்சிட்டுத் தானே மத்தவங்களைப் பார்க்க முடியும்?" எங்கேயோ வலித்தது சாமண்ணாவுக்கு. "எனக்கு எல்லார் தயவும் வேண்டும். யாரை விட முடியறது?" என்றான் அவன். "உண்மைதான். பாதி ஹீரோ வேஷம் போட்டாச்சு! முழு ஹீரோ ஆயிட வேண்டியதுதானே இனி பாக்கி!" "ஆமாம்; பெரிய்ய ஹீரோ... உடுத்திக்கிறதுக்கு நல்லதா ஒரு வேட்டி கிடையாது. ஹீரோவாம் ஹீரோ!" பாப்பா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் குரலில் தோய்ந்திருந்த வருத்தம் அவளை உலுக்கியது. சற்று மெலிந்து போயிருந்த சாமண்ணா கசங்கிப் போன சட்டையும் அழுக்கு வேட்டியுமாக வந்திருந்தான். முகம் சிறிது ஏழ்மை காட்டியது. கழுத்துக்குக் கீழ் வெறுமையாக வெறிச்சோடிக் கிடந்தது. நேற்று அர்ச்சுன வேடத்தில் பார்த்த ராஜ கம்பீர சாமண்ணா எங்கே? இந்தக் குசேல வறுமையில் வாடும் சாமண்ணா எங்கே? வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். குமாரசாமியும் வக்கீலும் வந்து கொண்டிருந்தனர். "சாமண்ணாவை நேத்து பார்க்கலியே நீங்க?" என்று குமாரசாமியிடம் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் வக்கீல். "இல்லைங்க. நான் தான் அந்த விவகாரமாப் போயிட்டேனே!" என்றான் குமாரசாமி. அந்த விவகாரம் என்ன என்பது வக்கீலுக்குத் தெரியும். "இதோ வந்துடறேன் சாமண்ணா! அஞ்சே நிமிஷம். இவரோடு ஒரு முக்கிய விஷயம் பேசணும்" என்று சொல்லித் தமது ஆபீஸ் அறைக்குள் குமாரசாமியை அழைத்துச் சென்றார். கதவைச் சாத்திக் கொண்டார். தஸ்தாவேஜுகளை எடுத்து குமாரசாமியோடு அந்தரங்கமாகப் பேசத் தொடங்கினார். "அந்தப் பையனிடமிருந்து விடுதலைப் பத்திரம் வாங்கிடலாம். அவனே அதுக்குத் தயாரா இருக்கானே! அதனால் ப்ராப்ளம் இல்லை. அடுத்த வாரத்திலேயே முடிச்சுடலாம்" என்றார். "சீக்கிரமாகவே அதைச் செய்திடுங்க; அப்பத்தான் பாப்பாவுக்கு நிம்மதி" என்று கூறிய குமாரசாமி வக்கீலிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட போது பாப்பாவும் தயாராக எழுந்து நின்றாள். அவர்கள் இருவரும் வண்டி ஏறும் வரை கீழ்ப் பார்வையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சாமண்ணா. "சாமண்ணா! என்ன இது? ராத்திரி நாடகம் முடிஞ்சதுக்கப்புறம் நீ பாப்பாவை வந்து பார்க்கவே இல்லையாமே! அந்த டாக்டருடைய பெண் சகுந்தலாவைப் பார்த்து இளிச்சு இளிச்சு பேசிண்டிருந்தயாம். வழி அனுப்பி வைச்சா எல்லோரையும் சமமாப் பார்க்க வேண்டாமோ? நேற்று வந்த டாக்டர் பெண் அத்தனை ஒசத்தியாயிட்டாளா? 'நான் இருக்கிறதே அவர் கண்ணில படலையா?' என்று அழுது ஆத்திரப்பட்டாள், பாவம்! பாப்பா என்ன உசத்தி இல்லையோ? அவள் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமோ உனக்கு? நினைச்சா, இந்த ஊரையே வாங்கிடலாம்" என்றாள் கோமளம். "தெரியும் மாமி! பணம் இருக்கட்டும் மாமி, அதைக் காட்டிலும் அவளுடைய நல்ல குணம் இருக்கே, அது யாருக்கு வரும்? என் போதாத காலம், இப்படி நடந்து போச்சு. நான் வேணும்னு அப்படிச் செய்யலை. டாக்டர் வந்து விடாப்பிடியாப் பிடிச்சுண்டுட்டார். இல்லாட்டா உங்களை, பாப்பாவை எல்லாரையுமே வழி அனுப்பி வச்சிருப்பேன்" என்று அழமாட்டாத குறையாகச் சொன்னான் சாமண்ணா. "அது போகட்டும். பாப்பா இப்ப இங்கே வந்திருந்தாளே, இப்பவாவது அவளோடு சரியாப் பேசியிருக்கலாமே!" "பேசினேனே!" "எங்கே பேசினே! நான் பார்த்துண்டுதானே இருந்தேன். நீயும் ஒரு நடிகனா இருக்கியே! நடிப்பிலேதான் உன் நேசம், பாசம் எல்லாத்தையும் காட்டுவியா? நிஜ வாழ்க்கையில் மாட்டியா?" "ஏன் மாமி அப்படிச் சொல்றீங்க?" "அந்தப் பெண் உன் மேலே உயிரையே வச்சிருக்கு. நீயானா முன் பின் தெரியாத மாதிரி நடந்துக்கறே. அதுக்கு ஒரு வார்த்தை இதமாச் சொல்ல மாட்டேங்கறே!" "அது பாசந்தானா?" என்று ஒரு கேள்வி கேட்டு சாமண்ணா நிறுத்தியதும் கோமளம் திகைத்துப் போனாள். "ஏன் சாமண்ணா, அதையும் தாண்டி ஒரு படி மேலே போயிட்டாத்தான் என்ன? அதிலே என்ன தப்பு இருக்கு? நீ என்னவோ படிக்கலை. உத்தியோக லைன்லே வரல்லை. கஷ்டத்திலே பிறந்து நாடகத்திலே சேர்ந்திருக்கே. நாடகம் உனக்கு நிரந்தரமா சோறு போடுங்கறது என்ன நிச்சயம்? உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்க வேணாமா?" கேள்வியைக் கேட்டு ஊஞ்சலில் சட்டென்று உட்கார, ஆரணி முதலியார் தொப்பென்று கீழே விழுந்தார். சாமண்ணா வெலவெலத்து நின்றான். உயிர் ஆழத்தில் ஒரு கேள்வி கேட்ட மாதிரி இருந்தது அது. அவனையே கலங்க வைக்கும் கேள்வி. அவன் தவிப்பதைப் பார்த்து, "உட்காரு சாமண்ணா! உட்கார்ந்துக்க!" என்று கோமளம் சொன்னதும் தட்டுத் தடுமாறி உட்கார்ந்தான் சாமண்ணா. "மாமி! வாழ்க்கையிலே எல்லாம் நம்பிக்கைதானே!" என்றான் சுருக்கமாக. "என்ன நம்பிக்கை வச்சிருக்கே, சொல்லு?" என்றாள் கோமளம். "நாடகத்திலே நடிச்சுப் பெரும் புகழ் வாங்கி, பெரிய ஹீரோவாயிடலாம்னுதான்!" "கடவுள் உனக்கு அனுக்கிரகம் செய்யட்டும். ஆனா இந்தத் துறையிலே லேசா யார் அப்படி ஹீரோவாகி, எத்தனை லட்சம் சேர்த்துட்டா சொல்லு." சாமண்ணா திகைத்தான். "சேர்த்திருக்க முடியும் மாமி! ஆனா நாலு காசு வரதுக்குள்ள தான் குடியிலேயும், கூத்தியிலேயும் இறங்கிடறாளே!" "எல்லாத்தையும் இழந்துட்டா இல்லையா?" "ஆமாம்." "சரி! எத்தனை நாடகக் கம்பெனி ஒழுங்கா இருக்கு. அதைச் சொல்லு. ஒரு கம்பெனி எத்தனை காலம் வாழ்ந்திருக்கு?" சாமண்ணா மனக்கண் முன்னால் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகர்கள், நடிகைகள், பாட்டுக்காரர்கள், உரிமையாளர்கள், மானேஜர்கள் எல்லாருமே இன்று அன்னக்காவடிகளாக அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். மாமி சொல்வது எவ்வளவு உண்மை! ஆனாலும் அதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. மழபாடி மகாதேவன் பிரமாதமாக வாழவில்லையா? இன்றைக்கு ஏராளமாய் நிலம் வாங்கி, ஊரையே வளைத்துப் போட்டிருக்கிறானே! சாமண்ணாவுக்கு உதடுகள் துடித்தன. "ஏன் மாமி! என் வாழ்க்கை வித்தியாசமா இருக்காதா? எங்க அம்மா உயிரோடு இருந்தப்ப என் சின்ன வயசிலே எனக்கு ஆயிரம் தடவை ஆசீர்வாதம் பண்ணியிருக்கா. அதெல்லாம் வீண் போகாது. நான் ஒரு நாளைக்கு நிச்சயம் பெரிய நடிகனாகத்தான் போகிறேன். பேரும், புகழும், பணமும் குவிக்கப் போகிறேன். அதையெல்லாம் பார்க்க எங்கம்மாவுக்குத்தான் கொடுத்து வைக்கல்லே. நீங்க அவள் ஸ்தானத்துலே இருந்துண்டு பார்க்கத்தான் போறீங்க." "சரி! அப்படி நீ பேரும், புகழுமாக வளரணும்னா அதுக்கும் யாராவது ஒருத்தருடைய உதவி இருந்தாத்தானே முடியும்?" கோமளம் தன்னை மடக்கிப் பேசிய விதம் அவனுக்குத் திகைப்பாக இருந்தது. ஆப்பிள் பசி : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|