உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
19 பாப்பா அவனை உன்னிப்புடன் பார்த்த போது உலகெங்கும் கண்கள் தோன்றி சாமண்ணாவைப் பார்ப்பது போல் இருந்தது. மனசுக்குள் ஓர் அதிர்ச்சி ஓடியது. கண்கள் இமைக்கவில்லை. சைக்கிளை விட்டு இறங்கினான். "என்ன?" என்றான், என்ன பேசுவதென்று தெரியாமல். பாப்பா தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சங்கள் விம்மி அமிழ்ந்தன. லேசாக வாடிப் போயிருந்த அவள் உடலில் ஒரு நடுக்கம் ஓடியது. சாமண்ணா சற்று அருகில் போனான். ஒரு மாட்டைத் தட்டி நின்றான். அது சிலிர்த்துச் சலங்கைகளை ஆட்டியது. "உங்க வீட்டுக்குத்தான் போய்ட்டு வரேன்" என்றான் சாமண்ணா மெதுவாக. தொண்டையில் வார்த்தைகள் சிக்கி வந்தன. விழிகளைத் தூக்கி, "தெரியும்" என்றாள். "தெரியுமா?" "ஆமாம்!" "நான் வந்தப்போ வீட்டில் இருந்தாயா?" "ஆமாம். பின் கட்டில் படுத்துட்டிருந்தேன்!" "இன்னுமா உடம்பு சரியாகலை?" "ஆமாம். தேறல்லையே!" "இப்ப உடம்பு முடியாம இருக்கறப்போ எதுக்கு வெளியே வந்தே?" "என்ன செய்ய? விருந்து போல வந்துட்டீங்க! அப்பா வெறும் கையா அனுப்பறதைப் பார்த்துட்டேன். நேரே பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு வந்துட்டேன். மனசு கேட்கல்லே. அப்பா பேசினதெல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்." கண் கலங்கி நின்றான். "வீட்டிலே, இருக்கும் போது நீங்க வருவீங்கன்னு எதிர் பார்த்தேன்." "எதிர்பார்த்தாயா?" அந்த ஒரு கேள்விக்கு மட்டும் அவனது ஆவலான பழைய குரல் திரும்பி வந்தது. "ஆமாம்!" என்றாள் அவள். பாப்பாவின் கண்கள் பலமுறை கொட்டின. உடம்பு வாடியிருந்தாலும், முகம் சந்திர ஒளி அடித்தது. "உங்கப்பா என்ன துச்சமாப் பேசிட்டார் பார்த்தாயா? மனசு துவண்டு போச்சு" என்றான் அவன். நெற்றியைத் துடைத்துவிட்டு கொண்டான். "என்னைப் பற்றியே நொந்துக்கிட்டேன். பிறந்தா வசதியோடு பிறந்திருக்கணும். இல்லாட்டி பிறக்கக் கூடாது. கையேந்தி நாலு பேர்கிட்டே உதவிக்குப் போனா, இப்படித்தான் அவமானப் படணும்." பாப்பாவின் கண்களில் அநேகமாக நீர் ததும்பி விட்டது. "என்னவோ தெரியலை! என் புகழே எனக்கு எதிரே வேலை செய்யறதாத் தோணுது! உங்கப்பா என்னை இவ்வளவு கேவலமா நடத்துவார்னு நான் எதிர்பார்க்கலை. என் தலைவிதி" என்று தலைகுனிந்து கொண்டான் சாமண்ணா. "நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். உடம்பு இன்னும் சரியாகல்லை எனக்கு! தொய்ஞ்சு போய்ப் படுத்துடறேன். நீங்க வந்து பேசிக்கிட்டிருக்கிங்களா? அப்பா வேறே கூப்பாடு போட்டுட்டிருக்காரா? எனக்கானா மனம் கிடைந்து அடிச்சுக்குது. எழுந்துக்கணும்னு பார்க்கிறேன். முடியல்லே. மனசை திடப்படுத்திட்டு நான் எழுந்திருக்கிறதுக்குள்ளே நீங்க போயிட்டீங்க. பதறிட்டேன். உங்க மனசு என்ன பாடுபடுதோன்னு தவிச்சுப் போயிட்டேன். அப்பா இருந்த நிலையிலே உங்களைத் திரும்ப அழைக்க மாட்டார்னு தெரிஞ்சுப் போச்சு. நானும் அவர் முன்னாடி வந்து உங்களைக் கைதட்டிக் கூப்பிட முடியல்லே. பார்த்தேன். வண்டியைக் கட்டித் தோட்டப் பக்கமா குறுக்கு வழியிலே வந்துட்டேன்." பாப்பாவுக்கு மூச்சு இழைத்தது. நுகத்தடியில் ஒரு கையை ஊன்றிக் கொண்டாள். "நீ வந்ததுக்கு சந்தோஷம். நீ தேவதை மாதிரி எதிரில் வந்து நிற்கிறதைப் பார்க்கிறப்போ, மனசிலே என்னென்னவோ தோணுது. ஏதேதோ பேசணும் போல இருக்கு. ஆனா உன்னோட மனம் விட்டுப் பேச முடியாமல் தவிக்கிறேன். என்னை மன்னிச்சிடு பாப்பா!" "இப்போ நீங்க சினிமாவிலே நடிக்கப் போறீங்களா?" "ஆமாம். எனக்கு அதிலே நிறையப் பணம் வரும். இந்த நாடகத்திலே நான் ஆயுசு பூரா நடிச்சாலும் என் தரித்திரம் போகாது. கல்கத்தா போனா பண வசதி பெருகும். ஆனா எனக்கு உதவி செய்ய ஒருத்தரும் தயாராயில்லையே! நான் என்ன செய்ய?" "டாக்டர்கிட்டே கேட்டீங்களா?" "எல்லாம் கேட்டேன். அந்தப் பேச்சே எடுக்காதேன்னுட்டார்!" "வக்கீல் கிட்டே?" "வக்கீலா? அவர்தான் ரொம்பவும் சோதிக்கிறார்." ஒரு கணம் நிசப்தம் விழ, சாமண்ணா வெறுமையாக தூரத்தில் பார்த்தான். பிறகு தணிந்த குரலில், "பாப்பா, எல்லோரும் என்னைக் கைக்கு அடக்கமா வச்சுக்க நினைக்கிறா! நான் என்ன செய்ய முடியும்? இந்தப் பாழாப் போன கொலைக் கேஸ் எனக்கு இப்படிச் சத்துருவா வருமா? இந்த கண்டத்திலிருந்து எப்படித் தப்பிக்கிறது? எப்படி முன்னுக்கு வறதுன்னே தெரியல்லே." "நான் ஒண்ணு சொல்றேன்..." என்றாள் பாப்பா. சாமண்ணா ஆவலோடு அவளைப் பார்த்து, "என்னது?" என்றான். "வக்கீலை நாளைக்குப் பாருங்கோ!" "திரும்பவுமா?" "ஆமாம்! நான் சொல்றதைக் கேளுங்க. அவசியம் போய்ப் பாருங்க." அவன் நம்பிக்கையில்லாமல், "சரி" என்றான். பிறகு, "வரேன்" என்று சொல்லி சைக்கிளில் ஏறினான். 'வக்கீல்கிட்டே திரும்பிப் போகணுமா?' மனசு ஒன்று வக்கரித்துக் கேட்டது. அதற்கு மற்றொரு மனம் பதில் சொல்லவில்லை. அவனுக்கு வக்கீலைச் சந்திக்க விருப்பமில்லை. அவர் முகமே இப்போது முள் குத்துவது போல இருந்தது. 'ஹூம் அவர்கிட்டே போனால், 'அந்தச் சின்னப் பெண்ணை ஏமாத்தினியா?'ன்னு கேட்பார். இன்னும் ரெண்டு டோஸ் கொடுப்பார். அத்தனையும் வாங்கி மடியிலே கட்டிக்கிட்டு வரணும். இதுதான் நடக்கும். ஊஹூம். நான் போகப் போறதில்லை' என்று உறுதி செய்து கொண்டான். வெளியில் எங்கும் போக விருப்பமில்லை. அந்தப் பெரிய வீட்டுக்குள் வெறுமையாக நடமாடினான். 'தாசில்தார் வீட்டை வாங்கியாச்சு. இது நிரந்தரமா இருக்கப் போகிறதா அல்லது...' மூன்றாம் நாள் காலையில், "சாமண்ணா சாமண்ணா" என்று யாரோ அழைக்க, வாசலுக்கு வந்தான். சிங்காரப் பொட்டு வெற்றிலைக் காவிச் சிரிப்போடு கைகூப்பினான். "வீடு ஜோராப் போச்சு! இன்னும் வண்டி ஒண்ணு வாங்கிடணும். அப்புறம் எனக்கு ஒரு அண்ணியும் வந்துட்டாப் போதும். வாழ்க்கையிலே வேறே சொர்க்கம் என்ன இருக்கு?" என்று உற்சாகமாய்ப் பேசினான். பிறகு, "அப்போ எந்த வண்டியிலே போறீங்க! எத்தனை மணிக்குப் புறப்படறீங்க? தகவல் எதுவும் தெரியலியே! அவங்க என்னடான்னா நோட்டீஸ் அடிக்கச் சொல்லிப்போட்டு அதை நிறுத்திட்டாங்க" என்றான். "சிங்காரப் பொட்டு. நீங்க என் சகோதரன் மாதிரி. உங்களை ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்க. இப்போ இந்த பம்பாய் சேட் உங்ககிட்டே வர்றார். ஐயாயிரம் கொடுக்கறார்! உடனே வந்து நடிக்கச் சொல்றார். நீங்க என்ன செய்வீங்க?" "இதென்ன கேள்விங்க? உடனே ரயில் ஏறிடுவேன்! கிடைக்கிற சந்தர்ப்பத்தை விடலாமா?" "இதைத்தானே நானும் செஞ்சிருக்கேன்!" "சொல்றவன் சொல்லிட்டுப் போறான். அவங்க பெரிய மனுஷங்க! அவங்களுக்கு என்ன? அவங்க தொழிலுக்கு கலெக்டர் தயவு வேணும். கலெக்டர் பார்வையில் இருக்கணும். இதுக்காக இவரைப் போய்ப் பார்த்துத் தேதி முடிவு பண்ணித் தலைமை தாங்க ஒப்புக்க வெச்சுட்டாங்க. இப்போ நீங்க அதுக்கு முட்டுக்கட்டை போடவே உங்க மேலே சாடறாங்க! நான் சொல்றேன் சாமண்ணா! இந்தப் பெரிய மனுஷங்க எல்லாருமே சுயநலக்காரங்க!" "நீங்க சொல்றது என்னைப் பரவசமாக்குது சிங்காரம்!" "கவலையே படாதீங்க சாமண்ணா! நீங்க செஞ்சது சரி. இந்த நாடகத்திலே நடிச்சுக்கிட்டே இருந்தா இந்த வீடு கிடைச்சிருக்குமா? ஒரு அஞ்சு ரூபா உங்களுக்கு அதிகம் கிடைக்குமா? செய்வாங்களா? பேச்சுப் பேசறாங்களாம். நீங்க போகலைன்னா..." சாமண்ணா யோசித்து நிமிர்ந்தான். "இருந்தாலும் சிங்காரம், நம்ப குடுமி இந்தப் பெரிய மனுஷங்க கையிலே அகப்பட்டுப் போச்சு! இனிமேல் எதுவும் செய்யறதுக்கில்லை. நான் பயாஸ்கோப்ல நடிக்கிறதை மறந்துட வேண்டியதுதான். எனக்கு இந்த ஊரை விட்டுப் போறதுக்கு வழியில்லே. அதனாலே தீர்மானிச்சுட்டேன். இங்கேயே டிராமாவிலே நடிக்கிறதுன்னு. அடுத்தவாரம் இன்னொரு பவுடர் ஒத்திகை போட்டுடுவோம். எல்லோரையும் தயார் பண்ணுங்க!" "சாமண்ணா இதென்ன விபரீதம்?" "இல்லை சிங்காரம். இதிலே வேறே வழியில்லை. விட்டுடுங்க." சாமண்ணாவுக்கு ஒரு தற்காலிக அமைதி வந்திருந்தது. சாயங்காலம் கோவிலுக்குக் கிளம்பினான். துர்க்கைச் சந்நிதியில் மனம் உருகப் பிரார்த்தனை செய்தான். வெளியே வந்து சந்நிதித் தெருவில் நடக்கும் போது, "என்ன சாமண்ணா!" என்று ஒரு பழக்கப்பட்ட குரல் கேட்டுத் திரும்பினான். பேஸரி டால் அடிக்க, கோமளம் மாமி பூஜைத் தட்டுடன் நின்று கொண்டிருந்தாள். "என்ன சாமண்ணா கண்லயே காணோம்? உனக்கு விஷயம் தெரியுமோ?" என்று கேட்டு, கன்னமெல்லாம் குதூகலத்தில் பூரிக்க அவனைப் பார்த்தாள். "என்ன மாமி?" "வீட்டுக்கு வா, அவசரம்." மௌனமாய் பதில் சொல்லாமல் நின்றான். "என்ன பேசாம இருக்கே? நீ வா. சீக்கிரம் வந்துடு. ரொம்ப ரொம்ப முக்கியம்." கோமளம் இருளில் மறைந்தாள். சாமண்ணா கடையை நோக்கிப் போவது போல் போனான். மனம் சலித்தது. ஏன் அவளைச் சந்தித்தோம் என்று நினைத்தான். போகாமலிருந்தால் அதுவும் தப்பாகிவிடும். மனம் சம்மதிக்கவில்லை. தயங்கியபடியே ஓட்டலுக்குப் போய் காப்பி குடித்துவிட்டு வக்கீல் வீட்டுக்கு நடந்தான். வக்கீல் வீட்டை நெருங்க நெருங்க கலக்கமாக இருந்தது. நல்லவேளை வரதாச்சாரி அறையில் வெளிச்சம் இல்லை. இதற்குள் வீடு திரும்பியிருந்த கோமளம் மாமி, "வா! வா! வா!" என்று ஆவலாய் அழைத்தாள். "உனக்கு யோகம் போ! ஜாமீன் கிடைச்சாச்சு!" "என்ன மாமி சொல்றீங்க, நிஜமாவா!" என்று வியப்பில் வாய் பிளக்கக் கேட்டான் சாமண்ணா. ஆப்பிள் பசி : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|