உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
24 ஷூட்டிங் முடிந்ததும் சாமண்ணா சோர்வுடன் ஸெட்டுக்கு வெளியே வந்தபோது, அங்கே இன்னும் சகுந்தலா காத்திருப்பதைப் பார்த்தான். கண்கள் சற்று இடுங்கின. "இங்கேயா இருக்கீங்க?" என்றான். "ஆமாம் சாமு! உங்களுக்காகக் காத்துக்கிட்டு" என்றாள். "எனக்கா! எனக்கு எங்கேஜ்மெண்ட் இருக்கே!" சகுந்தலா முகம் சுண்டியது. "இன்னிக்குத் தவிர்க்க முடியாத வேலை இருக்கு. இன்னொரு நாள் பார்ப்போமே!" "ஊஹூம், இன்னிக்கு இப்போ என் கூடத்தான் வரணும்." அவள் கண்கள் கொஞ்சுதலாய்க் கெஞ்சி நின்றன. "இல்லை, சகுந்தலா! இப்போ நான் நிச்சயம் ஒரு முக்கியஸ்தர் வீட்டுக்குப் போகணும். ரொம்ப எதிர்பார்த்துக்கிட்டிருக்காங்க. இன்னொரு சினிமா பற்றிப் பேசப் போறோம். நான் வரேன்! அப்புறம் சந்திக்கலாம்." கையை இரண்டு ஆட்டு ஆட்டிவிட்டு அடுத்த வாசலை நோக்கி விரைந்தான். சகுந்தலா வெளியேறினாள். வாசலில் முன் இரவுக் காற்று குளுமையாக அவளைக் கோதியது. சற்று நேரம் காற்று வாங்கி நின்றாள். பிறகு சற்று நடந்து டாக்ஸி தேடினாள். பின்னால் ஒரு கார் வந்து கொண்டிருப்பதை வெளிச்சம் அறிவித்தது. சகுந்தலா ஒதுங்கி நின்றாள். கார் அவள் அருகே சற்று மெதுவாகிப் போக, சாமண்ணா அதில் உட்கார்ந்திருப்பதை அரைக் கண்ணால் கவனித்துக் கொண்டாள். சகுந்தலாவின் கண்கள் சாமண்ணா அருகில் இருந்த இரண்டாவது நபரையும் கவனிக்கத் தவறவில்லை. அது சுபத்ரா முகர்ஜி என்று தெரிந்ததும் மனத்தில் சுருக்கென்று முள் தைத்தது. குனிந்து கொண்டே நடந்தாள். காலையில் டாக்டர் ராமமூர்த்தி தங்கியிருந்த பார்க் ஹோட்டலுக்கு சேட் வந்து சேர்ந்தார். "நாளை ராத்திரி ஒரு டின்னர் அரேஞ்ச் பண்ணியிருக்கேன். நீங்க அவசியம் வரணும்!" என்றார். ராமமூர்த்தி, "எதுக்கு இதெல்லாம்? வேணாம்!" என்று மறுக்க, சேட் வற்புறுத்த, ராமமூர்த்தி கடைசியில் ஒத்துக் கொண்டார். நகர்ப்புறத்தில் 'டோவா காஸில்' என்ற பெரிய பங்களாவில் அந்த விருந்து நடந்தது. தோட்டம் சூழ்ந்த மாளிகை, அன்றிரவு அதில் மின்சாரப் பூக்களாகச் சொரிந்தன. காஸ் விளக்குகள் மின்ன, தோட்டத்துப் புல் வெளியில் துணி போர்த்திய மேஜையில் விருந்து. இரு வரிசைகளில் பிரமுகர்கள் உட்கார்ந்து அறிமுகம் எல்லாம் ஆகிவிட்ட நிலையில் சற்று உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். சாமண்ணாவுக்குப் பக்கத்தில் டாக்டர் ராமமூர்த்தி டை கட்டி அசல் ஐரோப்பிய நாகரிகத்தில் உட்கார்ந்திருந்தார். அவரை அடுத்து சகுந்தலா, அழகான மெஜன்டா நிறத்துகிலில் அப்சரஸ் போல மின்னிக் கொண்டிருந்தாள். டாக்டர் ராமமூர்த்தி, "என்ன சாமண்ணா, பேசாமல் இருக்கே?" என்று கேட்டதும், "அன்னிக்குப் பார்த்தீங்களே ஷூட்டிங், எப்படி இருந்தது? அப்பாகிட்டே சொல்லுங்க" என்றான் சகுந்தலாவைப் பார்த்து ஒப்புக்காக. "பிரமாதம் அந்த ஸெட் அப்படியே தத்ரூபமாக காடு போல இருந்தது." சகுந்தலா ஓரமாகக் கண்ணை ஒதுக்கி அவனைப் பார்க்க, அவன் புன்னகை மாறாமல் அவளைப் பார்ப்பது இன்னும் கொஞ்சம் ஆச்சரியத்தை விளைவித்தது. சுபத்ரா முகர்ஜி ஒரு ஸீட் தள்ளி அமர்ந்திருந்தாள். பாஷை தெரியாததால் இடைஇடையே செயற்கையாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாள். "டாக்டர் ஸார், உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். நீங்க மட்டும் சாமண்ணாவை எங்களுக்கு அனுப்பி வைக்கலேன்னா இவ்வளவு பெரிய நடிகர் எங்களுக்கு வேறே யார் கிடைச்சிருக்கப் போறாங்க? அவர் நடிப்பைக் கண்டு எல்லோரும் மலைச்சுப் போறாங்க" என்று பரவசமாகக் கூறினார் சேட். "ஸெட்டுலே வந்து நின்னார்னா எல்லார் பார்வையும் அவர் பேரிலேதான்" என்றார் துணை டைரக்டர். சாமண்ணா எல்லோரையும் பார்த்துவிட்டு சகுந்தலா பக்கம் திரும்பினான். "சாமண்ணா பற்றி ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! ஊரிலே போய்ச் சொல்றேன்" என்றார் ராமமூர்த்தி. "நிச்சயம் சொல்லணும். அதுக்கு முன்னாடி நீங்க ஒருமுறை ஸெட்டுக்கு வரணும். ராஜ தர்பார் போட்டிருக்கோம். அதை அவசியம் வந்து பார்க்கணும். காலையிலே கார் அனுப்பறேன்" என்றார் சேட். சாமண்ணா அன்று படுக்கைக்குச் செல்லும்போது மணி பதினொன்று, உறக்கம் வரவில்லை. அந்த பாண்டு இசையும், சிரிப்பும், பாட்டும், பேச்சும், பார்ட்டியின் அத்தனை ஜொலிப்புகளுமே அவன் உணர்வில் ஊடுருவியிருந்தன. இத்தனை களிப்புகளுக்கும் மூல புருஷன் தான் தான் என்று எண்ணும்போது சாமண்ணாவின் மனம் சிறகடித்தது. சில மாதங்களுக்கு முன் தனது வாழ்க்கை எப்படி இருந்தது என்று எண்ணிப் பார்த்தான். துவைத்த சட்டை மீது அழுக்குத் துண்டைப் போர்த்திக் கொண்டு தெருக்களில் அலைந்தது, மிளகாய்க் காரத்துடன் ஓட்டலில் சாப்பிட்டது, எல்லாரும் 'டா' போட்டுப் பேசியது, குழைந்து பதில் சொன்னது, ராத்திரி வெறும் கட்டையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துறங்கியது... அந்த சாமண்ணாவா நான்? இப்போது எப்படி மாறிவிட்டேன்! என்னை வாட்டிய வறுமையும் அதை ஒட்டிய துன்பங்களும் இப்போது எங்கே போயின? இன்று இந்த கல்கத்தாவின் பிரபுக்களும் பிரமுகர்களும் என் நட்பைத் தேடி வருகிறார்கள்! என்னோடு சிநேகமாயிருப்பதை ஒரு சமூக அந்தஸ்தாகக் கருதுகிறார்கள். அவனது மற்றொரு மனம் அப்போது குறுக்கிட்டுப் பேசியது. 'சாமு! இதெல்லாம் உனக்கு என்ன சும்மா கிடைக்கின்றனவா! உன்னிடம் திறமை இருக்கிறது. வித்தை இருக்கிறது. அதை ரசித்துத்தான் உன்னிடம் எல்லோரும் பணத்தைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்! இதோ இந்த டாக்டர் ராமமூர்த்தியே உனக்கு எவ்வளவு எட்டாத உயரத்தில் தெரிந்தார்! இந்த சகுந்தலாவே... ஆமாம், இவளே எத்தகைய தேவலோக அந்தஸ்தில் தெரிந்தாள்!' ஸெட்டில் ராஜ தர்பார் ஜொலித்துக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த ராமமூர்த்தி பிரமிப்பில் மூழ்கினார். உயரமும் விசாலமும் நிறைந்த தர்பார். தங்க முலாம் பூசிய விதானங்கள். சாமண்ணாவும் சபா பிரமுகர்களும் அசல் சரித்திர கால புருஷர்களாகத் தெரிந்தார்கள். 'ஜய விஜயீ பவ' கோஷங்களுக்கு இடையே சாமண்ணா தர்பாருக்குள் நடந்து வந்தான். 'அடே சாமண்ணா! உன்னிடம் இவ்வளவு திறமை இருக்கா?' என்று நினைத்தார் ராமமூர்த்தி. சகுந்தலாவுக்குக் கண்களில் ஈரம் பனித்தது. தாள வரிசைகள் முழங்க, இரு மின்னல் பெண்கள் நீள சடையும், சலங்கையுமாய் ராஜசபை நடுவில் பளீர் பளீர் என்று ஒளிப் பின்னலாக ஆடி வர அதைப் படமாக்கினார்கள். குறுநகை, உவகை, பரவசம, ஆனந்தம், புன்சிரிப்பு, முறுவல், மந்தகாசம் இதெல்லாம் ஒரே உணர்ச்சி அல்ல. அவற்றுக்குத் தனித்தனித் துல்யங்கள் உண்டு என்று காட்டியது அவன் நடிப்பு. "பிச்சு உதர்றான்" என்றார் ராமமூர்த்தி பரவசமாகி. "ஆமாப்பா! இவ்வளவு பிரமாதமா நடிப்பார்னு யாருமே எதிர்பார்க்கலை" என்றாள் சகுந்தலா ஆச்சரியக் குரலில். "பெண்ணே, நீ யார்?" என்று துஷ்யந்த சாமண்ணா எதிரில், நின்ற பெண்ணைக் கேட்க, சுபத்ரா முகர்ஜி திடுக்கிடுகிறாள். "மகாராஜா என்னைத் தெரியவில்லை? நான் தான் சகுந்தலை" என்று பதில் சொல்லுகிறாள். "யாரம்மா நீ? புதிர் போடுகிறாயே!" என்று துஷ்யந்தன் வினவுகிறான். "முன்பு ஒரு நாள் தாங்கள் அரண்யத்தில் வேட்டையாட வந்த போது கண்வரிஷி ஆசிரமத்தில் என்னைச் சந்திக்கவில்லையா?" சுபத்ராவின் கண்களும் வார்த்தைகளும் கவலையைத் தெரிவிக்கின்றன. "கண்வ ரிஷி ஆசிரமமா? ஆமாம், வந்தேன். ஆனால் உன்னைப் பார்த்த நினைவு இல்லையே!" "நான் அவரது வளர்ப்புப் பெண்!" "சரி, அதனால் என்ன?" மிகச் சாதாரணமாகக் கேட்டான் துஷ்யந்தன். "தாங்கள் என் காலிலிருந்து முள்ளை எடுக்கவில்லை?" "முள் எடுத்தேனா!" "கண்வ ரிஷி ஆசிரமத்தில் தங்கி என்னோடு பழகினீர்களே அதை கூடவா மறந்துவிட்டீர்கள்?" சாமண்ணாவின் பார்வையே சந்தேகம் காட்டியது. "பழக மட்டும் செய்யவில்லை. என் மீது நேசம் வைத்தீர்கள். 'உன்னை விரும்புகிறேன். உன் மீது பிரேமை கொண்டிருக்கிறேன்' என்றெல்லாம் சொன்னீர்கள்." "என்ன?" சாமண்ணாவின் முகத்தில் ஒரு பழியை ஏற்க மறுக்கும் துடிப்பு தெறித்து வந்தது. "நான் உன்னை நேசித்தேனா? ஏதாவது கனவு கண்டாயா, பெண்ணே?" "இல்லை. என் மீது பிரேமை வைத்தீர்கள். என்னுடன் உல்லாசமாகத் திரிந்தீர்கள். சல்லாபம் செய்தீர்கள்." "என்ன!" என்று சாமண்ணா கேட்ட போது முகத்தில் ஒரு கோபக் கீற்று ஜ்வாலையிடுவது தெரிந்தது. 'ஆ! அற்புதம்' என்கிற பாவனையில் பலர் கையைத் தூக்கினார்கள். ராமமூர்த்தி சகுந்தலா கையை அழுத்தினார். "பெண்ணே! உனக்கு புத்தி பேதலித்துவிட்டதா? பார்! என்னைச் சரியாகப் பார்! கவனித்துப் பார்! வீணாக என் மீது பழி போடாதே!" டக்கென்று ஆத்திர மிகுதியில் சாமண்ணா எழுந்த போது குலுங்கிய அவனது அணிமணிகளில் கூடப் பதற்றம் தெரிந்தது. "இல்லை மகாராஜா! நிஜம்! நிஜம்!" "நிஜம் என்பதற்கு சாட்சி?" "என் தோழி அனுசூயா! இதோ இருக்கிறாள்." "மன்னர் மன்னா! தாங்கள் என்னையும் மறந்துவிட்டீர்களா! என்னைத் தூது அனுப்பித்தானே சகுந்தலையைத் தங்கள் பக்கம் வரவழைத்தீர்கள்!" "பொய், பொய். எல்லாம் பொய்! வீணாக ஒரு மன்னன் மீது பழி சுமத்துகிறீர்கள். நான் நம்பமாட்டேன்." "மகாராஜா! தாங்கள் என்னை காந்தர்வ விவாகம் செய்து கொண்ட போது அடியாளுக்குப் போட்ட மோதிரம் என்னிடம் உள்ளது!" "நான் மோதிரம் போட்டேனா? ஹா ஹா! எங்கே அதைக் காட்டுங்கள்." சுபத்ரா, தன் விரலிலிருந்த மோதிரத்தைக் கழற்றப் பார்க்கிறாள். விரலில் மோதிரம் இல்லை! "ஐயோ! அனுசூயா! மோதிரம் எங்கே? எங்கே அந்த மோதிரம்?" "ஹூம்! கொடுத்திருந்தால் தானே இருக்கும்!" "ஆஹ்ஹாஹ்ஹா..." துஷ்யந்தன் சிரிப்பு ஏளனத்தோடு மிதந்தது. சகுந்தலை மூர்ச்சையாகிக் கீழே விழுகிறாள். சுற்றி நின்றவர்கள் வெறும் நடிப்பென்று எண்ணினர். மூர்ச்சை கலைந்து இதோ எழுந்திருப்பாள் என்று எதிர்பார்த்தனர். வெகு நேரமாகியும் சகுந்தலையாக நடித்த சுபத்ரா முகர்ஜி எழுந்திருக்கவில்லை. திடுக்கிட்ட டைரக்டர் அவளை நோக்கி விரைந்தார். ஆப்பிள் பசி : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|