குருத்து பத்து

     பகலின் ஒளி மங்கி, அந்தியின் இருள் மயங்கும் சந்தி நேரத்தில் வானத்தில் கண் சிமிட்டும் வைர மலர்களைக் கடற்கரையில் உட்கார்ந்தபடியே கண்டு களித்துக் கொண்டிருந்தான் ராஜா. அவனருகில் அமர்ந்திருந்த பாரதி, கடல் அலைகளையும். அவற்றுக்குப் பின்னால் உயர்ந்தும் தாழ்ந்தும் மிதந்து கொண்டிருந்த நிழல் சித்திரம் போன்ற படகுகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

     ஜன சந்தடி அதிகமில்லாத இடமாகப் பார்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்று, அவர்களுக்குப் பின்னணியாக அமைந்திருந்தது.

     “படகிலே ஒரு முறை பிரயாணம் செய்ய வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது” என்றாள் பாரதி.

     “எனக்கும் கூடத்தான்; ஆனால் அதற்கு விஸாவும் பாஸ் போர்ட்டும் வாங்க வேண்டும்?” என்றான் ராஜா.

     “கப்பலில் வெளி நாட்டுக்குப் பயணம் செய்வதாயிருந்தால் தானே அதெல்லாம் வாங்க வேண்டும்.” பாரதி கேட்டாள்.

     “இல்லை, படகிலே போவதாயிருந்தாலும் வேண்டும். நீயும் நானும் வாழ்க்கைப் படகில் பயணம் செய்ய வேண்டுமானால், அதற்கு என் அத்தையிடமும், உன் தந்தையிடமும் ‘பாஸ் போர்ட்’ வாங்கியாக வேண்டும்” என்றான் ராஜா.

     பாரதி சிரித்துவிட்டாள்.

     “சினிமாவிலே காதலர்கள் டூயட் பாடிக்கொண்டு படகில் போவார்களே, அது எனக்குக் கட்டோடு பிடிக்காது” என்றான் ராஜா.

     “ஏன்?” என்று கேட்டாள் பாரதி.

     “அந்தக் காதலர்கள் நாமாக இல்லையே என்றுதான்!” என்றான் ராஜா.

     கரையை நோக்கி வந்து கொண்டிருந்த படகுகளைப் பார்த்தபடியே, “முதன் முதல் இந்தப் படகைக் கண்டு பிடித்தது யார்?” என்று கேட்டாள் பாரதி.

     “நான் தான்” என்றான் ராஜா.

     “நீங்களா?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் பாரதி.

     “ஆமாம், இப்போது நாம் சாய்ந்து கொண்டிருக்கிறோமே இந்தப் படகையும், இந்த இடத்தையும் கண்டு பிடித்தது நான் தானே!” என்றான் ராஜா.

     “ரேடியோ குவிஸ் புரோகிராமில் ‘படகைக் கண்டு பிடித்தது யார்?’ என்று கேட்டால், இந்த மாதிரிப் பதில் சொல்லி வைக்காதீர்கள்! உங்கள் என்ஜினீரிங் காலேஜுக்கே அவமானம்!” என்றாள் பாரதி.

     “எங்கள் என்ஜினீரிங் காலேஜ் அதற்காக ரொம்பப் பெருமைப்படும். படகைக் கண்டுபிடித்த அறிவாளியை இந்த உலகத்துக்கு அளித்த பெருமை எங்கள் கல்லூரிக்குக் கிட்டுமல்லவா...”

     “போதும் உங்கள் தமாஷெல்லாம். நான் இப்போது ஒரு முக்கியமான கேள்வி கேட்கப் போகிறேன். அதற்குக் கொஞ்சம் ஒழுங்காகப் பதில் சொல்ல வேண்டும்... தெரியுமா?”

     “அதோ பட்டாணி சுண்டல்காரப் பையன் வருகிறான். முதலில் இரண்டு பொட்டலம் சுண்டல் வாங்கிக் கொண்டு விடுகிறேன். அப்புறம் பேசலாம்...” என்றான் ராஜா.

     “உங்களுக்குச் சுண்டல் என்றால் ரொம்பப் பிடிக்குமா?”

     “அதெல்லாம் ஒன்றுமில்லை. சுண்டல் வாங்கவில்லை யென்றால், அந்தப் பையன் திரும்பத் திரும்ப இந்தப் பக்கம் வந்து, நம்மையே சுற்றிக் கொண்டிருப்பான்...” என்று கூறிய ராஜா, அந்தச் சுண்டல்காரப் பையனை அருகில் அழைத்து இரண்டு பொட்டலம் சுண்டலை வாங்கிக் கொண்டான். அந்தப் பையன் அப்பால் போனதும், “...ம் ...இப்போது கேள்விக்கு பதில் சொல்கிறேன்” என்றான் ராஜா.

     பாரதி கேட்டாள்! “இத்தனைப் பெரிய கடலைப் படைத்த கடவுள் எதற்காக இந்தக் கடல் நீரை உப்பாகப் படைத்தார். இவ்வளவு உப்புத் தேவையா?”

     “கொஞ்சம் அதிகம்தான்” என்று கூறிய ராஜா, சுண்டலில் கரித்த உப்பைச் சகித்துக் கொள்வது போல் முகத்தைச் சுளித்துக்கொண்டான்.

     பொத்துக் கொண்டு வந்த சிரிப்பைக் ‘கலீர்’ என்று கொட்டி விட்டாள் பாரதி.

     பின்னர், “நான் கேட்கிற கேள்விக்குச் சரியாகப் பதில் கூறப் போகிறீர்களா, இல்லையா?” என்று சற்றுக் கோபமாகக் கேட்டாள்.

     “அந்தச் சுண்டல்காரப் பையன் இந்தப் பக்கம் வந்தால் அவனுக்கு நன்றி கூற வேண்டும்” என்றான் ராஜா.

     “ஏன்?”

     “‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. இந்தப் பையனோ சுண்டலில் ‘டபிள்’ உப்புப் போட்டிருக்கிறான். நம் நன்றியை அவனுக்குத் தெரிவிக்க வேண்டாமா?”

     “உங்களால் தாமாஷாகப் பேசாமல் இருக்க முடியாது; என்னால் சிரிக்காமலும் இருக்க முடியாது.”

     “நீ சொல்ல நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும். நான் பேசும் பேச்சுக்கெல்லாம் நீ சிரிக்க வேண்டும்...” என்று அப்போதே ஒரு சினிமாப் பாட்டைக் கொஞ்சம் மாற்றிப் பாடினான் ராஜா.

     “ரொம்ப நன்றாகப் பாடுகிறீர்களே!”

     “இப்போது நாம் இரண்டு பேரும் படகில் பயணம் செய்தால் ஒரு டூயட்டே பாடலாம்” என்றான் ராஜா.

     “கடவுள் கடல் நீரை உப்பாகப் படைத்ததற்குக் காரணம் சொல்லாவிட்டால் நான் உங்களுடன் டூ” என்றாள் பாரதி.

     “இரண்டு பேர் சேர்ந்தால் நீ தான். தனியாக இருந்தால் ஒன்...” என்று கூறிய ராஜா, "நாமெல்லாம் ஆண்டவனிடம் நன்றியோடு இருக்க வேண்டும் என்பதற்குத்தான். ஒரு வேளை உணவு படைப்பவர்களை உப்பிட்டவர்கள் என்று கூறி அவர்களை உள்ளளவும் நினை என்கிறோம். கடவுள் இந்த உலகத்து மக்களுக்கெல்லாம் உணவைப் படைத்து வைத்திருக்கிறார். அந்த உணவுக்கு வேண்டிய உப்பையும் படைத்து வைத்திருக்கிறார். உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் உப்பிட்டு வரும் அந்தக் கடவுள், கடல் நீரில் கலந்திருக்கும் உப்பைப் போலவே நம் கண்ணுக்குப் புலனாகாத சூட்சும வடிவத்தில் இருந்து வருகிறார்” என்றான்.

     பாரதி ராஜாவையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

     “என்ன பாரதி! அப்படிப் பார்க்கிறாய்? எனக்கு இவ்வளவு ஞானம் எப்போது வந்துவிட்டது என்றுதானே? இன்று காலையில் தான்... என் அத்தையின் மேஜை மீது கிடந்த ஒரு புத்தகத்தில் இந்த விஷயத்தை இன்று காலையில் தான் படித்தேன்...” என்றான் ராஜா.

     கையினால் மணலைக் கீறியபடியே, ராஜா கூறிய உயர்ந்த தத்துவத்தை எண்ணி வியந்து கொண்டிருந்த பாரதி சட்டென, “ஐயோ!” என்று அலறியபடி கையை உதறிக் கொண்டாள்.

     அவள் வலது கை ஆள்காட்டி விரலில் இரத்தம் பெருகி வழிவதைக் கண்டு பதறிப்போன ராஜா, “என்ன பாரதி, கையை ஏதாவது கீறிவிட்டதா என்ன?” என்று கேட்டான்.

     “ஆமாம், கண்ணாடித் துண்டு”' என்று மணலில் புதைந்து கிடந்த ஒரு பெரிய கண்ணாடித் துண்டை எடுத்து ராஜாவிடம் கொடுத்தாள் பாரதி.

     “இந்தக் கண்ணாடித் துண்டு உன் கையைக் கீறியதா, அல்லது உன்னுடைய கை கண்ணாடித் துண்டைக் கீறியதா?” என்று கேட்டான் ராஜா.

     சினிமாக்களில் கதாநாயகிக்கு ஏதாவது ஆபத்து நேரும் போது (அது தான் நேருமே), கதாநாயகன் அவளைக் காப்பாற்ற ஓடி வருவான். அச்சமயம், வில்லனுக்கும் அவனுக்கும் சண்டை நடக்கும். அந்தச் சண்டையில் கதாநாயகன் வெற்றி பெறுவான். உடனே கதாநாயகி, கதாநாயகனைக் காதலிக்கத் தொடங்கி விடுவாள்.

     ராஜா தன்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை யென்றாலும், அந்தக் கண்ணாடியை ஒரு வில்லனாகவே மதித்து அதைக் கடலில் வீசியெறிந்தான். உடனே எழுந்து சென்று தன்னிடமிருந்த கைக்குட்டையைக் கடல் நீரில் நனைத்து வந்து அவள் கைவிரலைச் சுற்றிக் கட்டினான். இரத்தப் பெருக்கு நின்றது.

     “மணலில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அஜாக்கிரதையாகக் கீறினால், இப்படித்தான் நேரும்” என்றான் ராஜா.

     “ஆமாம்; சுவரில் ஆணி அடிக்கும்போதுகூட ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்” என்றாள் பாரதி.

     அன்றொரு நாள், கல்லூரி ஆண்டு விழாவின் போது சுத்தியலால் தன் கைவிரலை நசுக்கிக் கொண்டதையும், பாரதி அப்போது தன் கைக்குட்டையால் கட்டுப் போட்டதையும் பாரதி சுட்டிக் காட்டுகிறாள் என்பதை ராஜா புரிந்துகொண்டான்.

     “நீ ரொம்பப் பொல்லாதவள்!” என்று பாரதியின் கன்னத்தை லேசாகக் கிள்ளினான் ராஜா. தன் கரங்களால் அவன் கைகளைத் தடுத்தபடியே ராஜாவையே கண் கொட்டாமல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் பாரதி. திடீரென ஏதோ நினைத்துக் கொண்டவள் போல், “இப்போது நான் என் கைவிரலைக் கீறிக் கொண்டது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்” என்றாள்.

     அவள் அப்படிக் கூறியபோது ராஜாவுக்குப் பெருமை தாங்கவில்லை. பாரதி தன் மீது கொண்டுள்ள அன்பைத் தான் இப்படி மறைமுகமாகச் சொல்லுகிறாள் என்று எண்ணி மகிழ்ந்தான் அவன்.

     அவன் அவ்வாறு மகிழ்ந்துகொண்டிருந்தபோதே, “என் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா? இந்தக் கைக்குட்டைதான். இது என்னுடைய கைக்குட்டை. அன்று கல்லூரியில், நீங்கள் கையை நசுக்கிக் கொண்டபோது, இந்தக்கைக் குட்டையால் தானே கட்டுப்போட்டேன். அப்புறம் இதைத் தாங்கள் திருப்பிக் கொடுக்கவேயில்லை. நல்ல வேளை இப்போது திரும்பி வந்துவிட்டது” என்று சிரித்துக் கொண்டே கூறினாள் பாரதி.

     “...நீ ரொம்ப ரொம்ப...” என்று கூறத் தொடங்கிய ராஜாவின் வார்த்தையை, “பொல்லாத பெண். ஆகையால் ரொம்ப ரொம்ப உஷாராயிருங்கள்” என்று முடித்துவிட்டு எழுந்திருந்தாள் பாரதி.

     “இதற்குள் ஏன் எழுந்துவிட்டாய், பாரதி?”

     “இப்போது மணி என்ன தெரியுமா... எட்டரை!” என்று கூறிக்கொண்டே புறப்பட்டாள் பாரதி.

     ராஜா வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது, மணி ஒன்பது. டாக்ஸி ஒன்றைப் பிடித்துப் பாரதியை அவள் வீட்டில் கொண்டுவிட்டு வருவதற்குள் அவனுக்கு நல்ல பசி எடுத்துவிட்டது. வீட்டுக்குள் நுழையும்போதே ‘பசி பசி’ என்று அலறிக் கொண்டு சமையலறையை நோக்கி விரைந் தான். அங்கு ஞானம் கையில் திருப்புகழை வைத்துக் கொண்டு தன்னுடைய வசத்துக்கு உட்படாத குரலில் பாடிக் கொண்டிருந்தாள்.

     “பசி உயிர் போகிறது; என்ன பாட்டு வேண்டியிருக்கிறது?” என்று கேட்டுக் கொண்டே வந்த ராஜா, “அத்தை! சாப்பிட்டாச்சா?” என்று கத்தினான்.

     “அத்தை இங்கே இல்லை; மாடியிலே படித்துக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ?''” என்றாள்.

     “அத்தை, அத்தை!” என்று அழைத்தான் ராஜா. பதில் இல்லாமல் போகவே மாடிக்குப் போய்ப் பார்த்தான். அத்தை அங்கே மேஜை மீது தலையைக் கவிழ்த்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

     “அத்தை! சாப்பிட வரவில்லையா?” என்ற ராஜாவின் குரல் கேட்டதும், அவள் தலையை நிமிர்த்தி, “எனக்கு வேண்டாம், ராஜா! பசியே இல்லை. நீ சாப்பிடு போ” என்று கூறி அனுப்பிவிட்டு அப்படியே எழுந்து போய்ப் படுக்கையில் சாய்ந்து கொண்டாள்.

     ‘இத்தனை நேரம் நீ எங்கே போயிருந்தாய்?’ என்று அத்தை கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று அஞ்சிக் கொண்டே வந்த ராஜாவுக்கு அவளுடைய பதில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

     “சரி, அத்தை! நான் போய்ச் சாப்பிடுகிறேன்” என்று கூறிக்கொண்டே கீழே இறங்கிப் போய்விட்டான் ராஜா.

     சீக்கிரமே சாப்பாட்டை முடித்துக்கொண்ட ராஜாவும் அன்று அதிக நேரம் கண் விழித்துக் கொண்டிருக்கவில்லை. அவனுடைய நினைவெல்லாம் பாரதியைப் பற்றியதாகவே இருந்தது. அவளுடன் கடற்கரையில் உட்கார்ந்து உல்லாசமாக உரையாடிக் கொண்டிருந்த இன்ப நினைவுகளிலேயே அவன் எண்ணம் லயித்திருந்தது.

     ரேடியோவைத் திருகிச் சற்று நேரம் இங்கிலீஷ் பாட்டுகளைக் கேட்டுவிட்டு உறங்கப் போய்விட்டான்.

     மணி பன்னிரண்டுக்கு மேல் இருக்கலாம். பார்வதி படுக்கையில் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டேயிருந்தாள். எந்த நாளிலும் அவளுக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டதில்லை.

     சேதுபதியின் நினைவு மயக்கம் அவள் உறக்கத்தை விழுங்கிவிட்டிருந்தது. மயக்கமும் உறக்கமும் கலந்த கனவு நிலையில் புரண்டு கொண்டிருந்த பார்வதியின் இதழ்கள் அவளையும் அறியாமல் புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தன. அந்தக் கனவிலே அவள் சேதுபதியின் புறத் தோற்றத்தைக் கண்டுவிட்டுச் சிரிக்கவில்லை.

     அன்று மாலை அவர் கூறிய உயர்ந்த கருத்துகள், எந்த விஷயத்திலும், அவருக்குள்ள ஆழ்ந்த ஞானம், உதாரணங்களின் மூலம் விஷயத்தைத் தெளிவாக்கித் தரும் ஆற்றல் இவ்வளவும் அவள் உள்ளத்தில் பதிந்து போயிருந்தன. இன்ஷூரன்ஸ் கம்பெனி பற்றி அவர் கூறிய கருத்தும், ஒரு வழிப்பாதை உதாரணமும் அவள் நினைவில் தோன்றின.

     அந்தப் புதுமையான கருத்தையும் உதாரணத்தையும் சேதுபதி மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லுவது போல் தோன்றியது. சேதுபதியின் அறிவுக் கூர்மையை நினைத்து நினைத்து வியந்தது அவள் உள்ளம். அந்தக் கனவு மயக்கத்தில் அவள் உள்ளத்தில் தேங்கிய மகிழ்ச்சியை, வியப்பை, ரசிப்பை அவள் உதடுகள் புன்சிரிப்பின் மூலமாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

     அதே சமயத்தில் ராஜாவின் உறக்கத்தில் பாரதி தோன்றியிருந்தாள். அவள் சிரிப்பிலே, உற்சாகத்திலே, போலியான கோபத்திலே, அவள் தளிர்க் கரத்தின் மென்மையிலே லயித்திருந்தான் ராஜா. அந்த லயத்தின் பிரதிபலிப்பாக அவன் முகம் மகிழ்ச்சியாய் அடிக்கடி மலர்ந்து கொண்டிருந்தது.