குருத்து பதினொன்று

     ராஜாவின் உறக்கத்தை, முழுமையான மெய்ம்மறந்த உறக்கம் என்று கூறமுடியாது. விழிப்பும் உறக்கமும் கலந்து கிடந்த ஒரு மயக்கம் அவனை அணைத்துப் பிணைத்துக் கொண்டிருந்தது. விடியற்காலைக்குரிய இருளோடு லேசாக ஓர் ஒளி யும் கலந்து கிடக்குமே, அந்த மாதிரி.

     அந்த அரை குறையான உறக்கத்தில் ராஜாவின் முன் பாரதி தோன்றுவதும் மறைவதுமாக மாயாஜாலம் புரிந்து கொண்டிருந்தாள். சொப்பன உலகத்தின் விசித்திரங்களெல்லாம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தன.

     சினிமாக்களில் வரும் பூர்வ ஜன்மக் காதலியைப்போல் அவள், ‘கல கல’ வென்று சிரித்த வண்ணம் மெல்லிய துகிலுடன் காற்றிலே மிதந்து வந்தாள். அடுத்த கணம் காற்றிலேயே கரைந்து மறைந்தாள். உறங்கிய நிலையிலேயே, கனவின் மயக்கத்திலேயே ராஜா அந்தச் சொப்பன இன்பத்தை அனுபவித்தவனாய் அவளுடைய அங்க அசைவு ஒவ்வொன்றையும் ரசித்துப் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தான்.

     அவள் ‘கல கல’ வென்று சிரித்தபோது பாரிஜாத மலர்கள் குயிலின் குரல் பெற்று உதிர்வன போன்ற பிரமை உண்டாயிற்று. மறுகணம் அவள் சிவந்த இதழ்கள் முறுவலிக்க, நீண்ட விழிகள் அலைய, கால் சதங்கைகள் ‘கலீர் கலீர்’ என ஒலிக்க ஒரு நடனப்பெண் வடிவத்தில் தோன்றித் தன் மெல்லிய கரங்களால் ராஜாவைப் பற்றி இழுத்தாள்.

     இந்த இன்ப அனுபவம் வெகு நேரம் நீடித்திருக்கவில்லை. இதற்குள் அவன் தூக்கம் கலைந்துவிடவே இடையே அறுபட்ட பிலிம் சுருள் மாதிரி, அந்தச் சொப்பனக் காட்சி தடைப்பட்டுப் போயிற்று.

     பாரதியின் அழகு வடிவத்தை, ஸ்பரிச இன்பத்தைத் தொடர்ந்து அனுபவிக்க முடியாமற்போன ராஜா, கலைந்து போன தன் துயிலை மீண்டும் தன் வசமாக்கிக் கொண்டு அந்தச் சொப்பன நிகழ்ச்சியின் தொடர்ச்சியில், பாரதியின் மலர்ந்த விழிகளை, சிவந்த இதழ்களை, பூக்கும் முறுவலை மீண்டும் மீண்டும் கண்டு ரசிக்க விரும்பினான்.

     காதல் வயப்பட்டவர்கள் எல்லோருக்குமே இந்தச் சொப்பன அவஸ்தை உண்டு போலும்! ஆமாம்; அங்கே மாடியில் படுத்திருந்த டாக்டர் குமாரி பார்வதி, சேதுபதியின் உருவத்தைத் தன் கண்ணெதிரில் கொண்டு நிறுத்த வெகு பாடுபட்டுக் கொண்டிருந்தாள்; அவளால் இயலவில்லை. உண்மையில் அவளுக்குச் சேதுபதியின்பால் ஏற்பட்டிருந்தது உடல் பூர்வமான காதல் அல்லவே! அவரை அவள் நேசிப்பது, அவர் அன்பை வேண்டுவது, அவர் துணையை நாடுவது, அவருடனேயே பேசிக் கொண்டிருப்பது, அவரைப் பிரிந்திருக்கும் நேரங்களில் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆயினும், பார்வதியின் இந்த ஆசைகளுக்கெல்லாம் காரணம் காதல் அல்ல; கேவலம் உடலாசையைப் பின்னணியாகக் கொண்ட, உடலாசை தீர்ந்ததும் அழிந்து போகிற அற்பமான காதல் அல்ல. சேதுபதியிடம் இவள் கொண்டுள்ள நேசத்துக்கும் பாசத்துக்கும், அன்புக்கும் அக்கறைக்கும் முன்னால், வயதும் புறத் தோற்றமும் மிக மிக அற்பமானவை. வயதின் கவர்ச்சியும் அழகின் வசீகரமும் மங்கிப்போன பிறகு, வலிவிழந்து விட்ட பின்னர், காலம் கடந்த காலத்தில் தோன்றியுள்ள காதல் இது. அதனால்தான் சேதுபதியின் தோற்றத்தை அவளால் உருவகப்படுத்திப் பார்க்க இயலவில்லை.

     ராஜாவைப் போலவே பார்வதியின் உறக்கமும் அடிக்கடி தடைப்பட்டுக் கொண்டிருந்தது. தூக்கம் கலைந்த போதெல்லாம் அவள் உறங்க முயன்று கொண்டிருந்தாள்.

     உறங்கிய போதெல்லாம் சேதுபதியின் தோற்றத்தை உருவகப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்; உறக்கம் வந்தது. ஆயினும் அவளால் சேதுபதியின் உருவத்தைக் காண முடியவில்லை.

     அன்று மாலை அவர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவள் நெஞ்சத்தில் பதிந்து கிடந்தன. இன்ஷூரன்ஸ் பற்றிய தன்னுடைய அறியாமையை அறிய நேர்ந்த சேதுபதி என்ன எண்ணியிருப்பார் என்பதை நினைத்தபோது அவளுக்கு வெட்கமாயிருந்தது. ‘நஷ்டம் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குத்தானே?’ என்று அதிமேதாவியைப் போல் தான் கூறியபோது, அவர் அலட்சியமாகச் சிரித்த சிரிப்பில் எத்தனைப் பொருள் பொதிந்து கிடந்தன!

     ‘நீ மெத்த படித்தவளாயிருக்கலாம்; பட்டங்கள் பெற்றிருக்கலாம்; அறிஞர்கள் பலரோடு வாதாடி வெற்றி பெற்றிருக்கலாம், கல்வி கேள்விகளில் வல்லவளா யிருக்கலாம். ஆனாலும் இந்தச் சின்ன விஷயம் உனக்குத் தெரியவில்லையே’ என்று அவர்தம் சிரிப்பின் மூலம் கூறாமல் கூறி விட்டாரே! இப்போது அதை எண்ணிய பார்வதிக்கு வெட்கமாயிருந்த போதிலும், கூடவே இன்பமாகவும் இருந்தது!

     ‘என்னுடைய பெரு மதிப்புக்கும், நேசத்துக்கும் பாத்திரமாகியுள்ள சேதுபதி தானே சிரித்தார்? அந்தச் சிரிப்பு என்னுடைய அறியாமையைப் பற்றியதுதானே? என் அறியாமையை எள்ளி நகையாடும் அளவுக்கு என்னிடம் அவர் உரிமை எடுத்துக் கொண்டதால் அல்லவா அவர் அவ்வாறு சிரித்தார்? அப்படியானால் அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறது; அக்கறை இருக்கிறது; ஆசை இருக்கிறது; பாசமும், பரிவும் இருக்கின்றன. அந்தச் சிரிப்புக்கு இதெல்லாம்தான் பொருள். சேதுபதியின் சிரிப்பு அவள் காதுகளில் ரீங்காரமிட்டது. அந்தச் சிரிப்பின் இனிமையிலே, பாசத்திலே, பரிவிலே என்றுமே அனுபவித்தறியாத சுகம் இருப்பதை அவள் உணர்ந்தாள். அந்த உணர்ச்சிகளை யெல்லாம் ஒன்றாகத் திரட்டிப் புன்முறுவலாக வெளியிட்டுக் கொண்டிருந்தன அவளுடைய இதழ்கள்.

     மணி ஒன்பது இருக்கும். ராஜாவுடன் டாக்ஸியில் வந்து இறங்கிய பாரதி, நெஞ்சு படபடக்க மெதுவாக அடிமேல் அடி வைத்தவளாய், தன் தந்தைக்குத் தெரியாமல் வீட்டுக்குள் சென்றுவிட எண்ணினாள். நடு ஹாலில் படுத்திருக்கும் சேதுபதியைக் கண்டதும் திடுக்கிட்டுப்போன பாரதி, முன்னொரு நாள் தான் நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது “இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?” என்று தந்தை கேட்டதும், தான் அதற்குக் கல்லூரி ஹாஸ்டல் மாணவியுடன் கணக்குப் பாடம் கற்றுக் கொண்டிருந்ததாகப் பொய் சொன்னதும், தான் கூறிய அதைப் பொய்யென்று புரிந்து கொண்ட அப்பா, அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் வார்த்தைகளை நிஜமென்று நம்புவது போல் நடந்து கொண்டதும் அவள் நினைவுக்கு வந்தன.

     அப்பா தூங்குகிறாரா என்று கடைக் கண்ணால் கவனித்துக்கொண்டாள். சேதுபதிக்குக் காது ரொம்பக் கூர்மை. தூங்கிக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் நிழலாடினாலும் அறிந்து கொண்டுவிடுகிற சூட்சுமமான அறிவு அவருக்கு உண்டு. இன்று பாரதி வரும்போது அவர் விழித்துக் கொண்டுதான் படுத்திருந்தார். மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது என்பதையும், பாரதி லேட்டாக வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்பதையும் அவர் உணராமலில்லை. ஆயினும் பயந்தபடியே உள்ளே வந்து கொண்டிருந்த பாரதியை அவர் கண்டிக்க விரும்பவில்லை. எந்தவித உணர்ச்சியையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் மாலை ஐந்து மணிக்குக் கல்லூரியிலிருந்து வரும் பாரதியை எப்படி வரவேற்பாரோ அவ்வாறே வரவேற்றார்.

     “என்ன பாரதி. யாரோ ஒரு பிரண்டைப் பார்க்கப் போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றாயே, பார்த்து விட்டாயா?” என்று சகஜமாக விசாரித்தார்.

     “ஆமாம்” என்று மெல்லிய குரலில் பதில் கூறினாள் பாரதி.

     “இத்தனை நேரம் சாப்பிடாமலா பேசிக்கொண்டிருந்தாய் வா, வா, உள்ளே போய்ச் சாப்பிடலாம். உனக்காக நானும் சாப்பிடாமல் காத்திருக்கிறேன்” என்று அன்பும் பரிவும் கலந்த குரலில் வரவேற்றார். தந்தையின் அன்பு மொழிகளில் பாரதி மெய் சிலிர்த்துப்போனாள். அப்பாவா இப்படிப் பேசுகிறார்? நிஜமாகவேதான் இப்படிக் கூறுகிறாரா? அல்லது கோபத்தை விழுங்கிவிட்டு மேலாக அன்பொழுகப் பேசுகிறாரா?

     “ஏன் லேட்?” என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே! நிஜமாகவே என் மீது கோபமில்லையா? அவருடைய சாந்தமான பேச்சும், அன்பும் வரவேற்பும் பாரதிக்குப் பெரும் வேதனையை அளித்தன.

     “அப்பா! நான் நேரம் கழித்து வீட்டுக்கு வந்திருக்கிறேன். இப்போது மணி ஒன்பது; தயவு செய்து என்னைக் கொஞ்சம் கோபித்துக் கொள்ளுங்கள் அப்பா!” என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்ள வேண்டும் போலிருந்தது. தன்னை அவர் கோபமாக நாலு வார்த்தை திட்டி அனுப்பினால்தான் உள்ளம் அமைதியுறும் போல் தோன்றியது. ஆனாலும் தன் வேதனையை அடக்கிக் கொண்டவளாய் மெளனமாகச் சமையலறையை நோக்கி நடந்தாள் பாரதி.

     சேதுபதிக்கும் பாரதிக்கும் மேஜை மீது உணவு தயாராகக் காத்திருந்தது. தந்தையும் மகளும் அருகருகே அமர்ந்ததும், சேதுபதியின் சகோதரி உணவு வகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பரிமாறினாள். சேதுபதி எதுவும் பேசாமல் மெளனமாகவே சாப்பிடத் தொடங்கினார். அவர் முகத்தில் மகிழ்ச்சியில்லை. பேசிய இரண்டொரு வார்த்தைகளிலும் உற்சாகமில்லை.

     ‘ஒருவன் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தபோதிலும் கவலைகள் பட்டபோதிலும் சாப்பிடும் நேரங்களில் மட்டும் எல்லாவற்றையும் மறந்து நிம்மதியுடன் சாப்பிட வேண்டும்’ என்று சேதுபதி அடிக்கடி கூறுவது வழக்கம். தம்முடைய அனுபவத்திலும் அவர் இந்தக் கொள்கையைக் கடை பிடிக்கத் தவறியதில்லை. வியாபாரத்தில் பல லட்சம் ரூபாய் நஷ்டமாகியிருந்தாலும் லாபமாகியிருந்தாலும் இரண்டையும் சமநிலையில் ஜீரணம் செய்துகொள்ளும் சக்தி அவருக்கு உண்டு. அவர் முகபாவத்திலிருந்து, லாபம் நஷ்டம் எதையும் கண்டுபிடித்துவிட முடியாது. அத்தகைய திடசித்தம் வாய்ந்தவர் முகத்தில் இன்று மட்டும் ஏன் இத்தனைக் கவலை? அமைதியின்மை?

     ‘அப்பாவின் கவலைக்கு என்ன காரணம்?’ என்று யோசித்தாள் பாரதி. தன் அண்ணனின் முகத்தில் என்றுமில்லாத வருத்தம் சூழ்ந்திருப்பதன் காரணம் என்னவென்று புரியாமல் தவித்தாள் சேதுபதியின் தங்கை.

     சேதுபதியின் கை விரல்கள் சாப்பாட்டை அளைந்து கொண்டிருந்தன. அவர் உள்ளம் எங்கேயோ அலைந்து கொண்டிருந்தது.

     மெளனமாக. இதைக் கவனித்துக் கொண்டிருந்த பாரதியும் அத்தையும் ஒருவருக்கொருவர் ஜாடைகளாலேயே பேசிக் கொண்டனர்.

     ‘அப்பாவின் வருத்தத்துக்கு என்ன காரணம்? ஏன் சோற்றை அளைந்து கொண்டிருக்கிறார்?’ என்று பாரதி கேட்டாள். இல்லை, அவள் முகபாவமும் கைஜாடைகளும் அப்படிக் கேட்டன்.

     ‘எனக்கென்ன தெரியும், உன் அப்பா சங்கதி? ஒரு வேளை பஞ்சுமில் தீப்பற்றி எரிந்து விட்டதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?’ சேதுபதியின் சகோதரி பதில் கூறினாள். இல்லை அவளுடைய கண்களும் அபிநயங்களும் அவ்வாறு பதில் கூறின.

     மகளும் சகோதரியும் மெளன மொழியில், அபிநயங்களின் மூலமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்த சேதுபதி லேசாகச் சிரித்துக் கொண்டே, “என்ன பாரதி ! அத்தையும் மருமகளும் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நான் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறேன் என்றுதானே? பஞ்சு மில் எரிந்து போயிற்றே என்று நான் வருத்தப்படுவதாக எண்ணுகிறீர்களா? வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் போது கவலைப்படுவது என்பது எனக்குத் தெரியாத விஷயம். பணம் வந்து போவது பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை; கவலைப்படவும் கூடாது. ஆனால் படக்கூடாத ஆசைகளைப் பட்டுவிட்டு, அது நிறைவேறாமல் போகும்போது வருந்த நேரிடுகிறதல்லவா? என் வருத்தத்திற்குக் காரணம் ஆசை நிறைவேறவில்லையே என்பதால் அல்ல. நிறை வேறாத ஆசையை ஏன் பட்டோம் என்றுதான் வருந்துகிறேன்” என்றார்.

     ‘அப்படிப்பட்ட அந்த ஆசை என்ன?’ வென்று சேதுபதியைக் கேட்கும் தீரம் பாரதிக்கோ, அவள் அத்தைக்கோ இருக்கவில்லை.

     ஆனால் பாரதி மட்டும் தன் தந்தையைப் பார்த்து, “அப்படியானால் அந்த ஆசையை விட்டு விடுங்களேன்” என்றாள். அது கேட்ட சேதுபதி தமக்குள்ளாகவே சிரித்துக் கொண்டார். அவருடைய உள்ளத்தின் அடிவாரத்தில் ஆழ்ந்து கிடக்கும் ரகசியம், இதுவரை பார்வதியேகூட அறியாத அந்த ரகசியம், மகளிடமோ தங்கையிடமோ சொல்லி ஆறுதல் பெறக் கூடியதல்லவே!

     சாப்பாட்டை அரை குறையாக முடித்துக் கொண்ட சேதுபதி, சட்டென்று நாற்காலியைவிட்டு எழுந்து நின்றவராய், “சரி, பாரதி! நேரமாகிறது. நீ போய்ப் படிக்கலாம்” என்று கூறிவிட்டுத் தமது அறையை நோக்கிச் சென்றார்.

     ‘ஆசையை விட்டுவிடும்படி அப்பாவுக்குச் சுலபமாகச் சொல்லி விட்டேன். என் மனத்திலுள்ள ஆசையை என்னால் விடமுடியவில்லையே! ராஜாவைப்பற்றி என் அந்தரங்கத்தில் கொண்டுள்ள எண்ணங்களை அகற்றிவிட முடிய வில்லையே!’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளாய்த் தன்னுடைய அறையை நோக்கி நடந்தாள் பாரதி.

     தம்முடைய அறைக்குள் பிரவேசித்த சேதுபதியின் உள்ளம் பார்வதியைப் பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அவளுடன் அன்று மாலை விவாதித்துக் கொண்டிருந்த விஷயங்களெல்லாம் அவர் நினைவுக்கு வந்தன. பார்வதியிடம் எனக்கு ஏன் இத்தனை அக்கறை! எந்நேரமும் என் மனம் ஏன் அவளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறது?

     அவள் எப்போதும் என் அருகிலேயே இருக்க வேண்டும் என்று என் உள்ளம் விரும்புவது எதனால்? அவளைப் பிரிய நேரும் போதெல்லாம் ஏதோ ஒரு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதைப் போன்ற வருத்தம் ஏற்படுவானேன்? இதற்கெல்லாம் என்ன காரணம்?

     சேதுபதியின் பார்வை தற்செயலாகச் சுவரில் மாட்டப்பட்டிருந்த அவருடைய மனைவியின் படத்தின் மீது சென்றது. அந்தப் படத்திலுள்ள சரஸ்வதியின் உருவம் சேதுபதியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தது. அந்தக் காட்சி, ‘எனக்குத் துரோகம் செய்யலாமா?’ என்று, தன் குற்றத்தை எடுத்துக் காட்டிச் சிரிப்பது போல் தோன்றியது சேதுபதிக்கு.

     ‘சரஸ்வதிக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? பார்வதியை நான் விரும்புகிறேன்; அவள் துணையை நாடுகிறேன்; அவளிடம் பேசிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்; அவளைப் பிரிய நேரும்போது வருத்தமடைகிறேன்; உண்மைதான். இதனாலெல்லாம் சரஸ்வதிக்கு நான் எவ்விதத் துரோகமும் செய்துவிடவில்லையே! சரஸ்வதியைப் பிரிந்தது முதல் இத்தனை ஆண்டுக் காலமும் வேறு எவளையும் சரஸ்வதியின் ஸ்தானத்தில் வைத்துப் பார்த்ததில்லை. விரும்பியதுமில்லை... பார்வதியிடம் நான் கொண்டுள்ள அன்புக்கு, ஆசைக்கு என்னால் விளக்கம் கூறமுடிய வில்லைதான். ஆனால் அது கேவலம் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் உடலாசையைப் பின்னணியாகக் கொண்ட காதல் அல்ல. அவளை நான் விரும்புகிறேன்... அவ்வளவுதான்...’

     விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் சாய்ந்து கொண்ட சேதுபதியின் உள்ளத்தில் அலை அலையாக எழுந்த எண்ணங்களும் கேள்விகளும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு, ஒன்றுக் கொன்று பதில் கூறிக்கொண்டு அவரைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தன. குழம்பிய உள்ளத்துடன் அவர் விழித்துக் கொண்டிருந்தார்.

     மணி பன்னிரண்டுக்கு மேல் இருக்கும். சேதுபதி அயர்ந்து தூங்கத் தொடங்கினார். தூக்கத்தில் ஏதேதோ குழப்பமான கனவுகள். எல்லாம் பார்வதியைப் பற்றியவையே.

     அந்தக் குழப்பத்திலும் அவர் முகம் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். அதற்கு என்ன காரணமோ? கனவிலே கொடிய நோய், பட்டம் படிக்க வைத்து தாய் பட்ட கஷ்டங்கள், வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளோ என்னவோ?

     தாம் ஏழைச் சிறுவனாக இருந்தபோது பட்ட துன்பங்கள், தன்னை வளர்க்கவும் படிக்க வைக்கவும் தன்னைப் பெற்ற தாய் பட்ட கஷ்டங்கள், வறுமையின் கொடிய பிடியில் சிக்கிக்கொண்டு தானும் தன் தாயும் அனுபவித்த இன்னல்கள், அப்போது உயர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், தான் முன்னுக்கு வந்து பெரும் பணத்தைத் திரட்டிக் குவித்தபோது படிப்படியாக மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்குத் தாழ்ந்து போனது, சமூகத்தில் தனக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்து ஏற்பட்டபோது, தன்னைவிட உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களில் பலர் கீழ்ப்படிக்கு இறங்கியது - இவ்வளவும் அவர் கனவில் தோன்றின.

     கடைசியாக அன்று கல்லூரி விழாவில் தன்னை அறிமுகப் படுத்திய பார்வதி, அவர் முன்னால் தோன்றிப் பேசத் தொடங்கினாள்.

     “திருவாளர் சேதுபதியைப்பற்றி நான் புகழப் போவதில்லை. காரணம் ஏற்கெனவே அவரைப்பற்றி அறிந்து கொண்டுள்ள நமக்கு, அவர் அளித்த நன்கொடை ஒரு பெரிய விஷயமாகத் தோன்றாது. அத்துடன் இப்போது அவரைப் புகழ்ந்தால் அவர் கொடுத்த நன்கொடைக்காகப் புகழ்வதாகத்தான் தோன்றும். ஒருவன் தன் தாயாரை, தன்னைப் பெற்றவள் என்பதற்காக மதிப்புக் கொடுக்காமல், அவள் லேடீஸ் கிளப் பிரஸிடெண்டானவுடன் புகழ்வதைப் போலாகும்.”

     இந்த அறிமுகப் பேச்சின் மூலம் சேதுபதியின் உள்ளத்தில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட்ட பார்வதியை அவர் வெறும் கல்லூரி பிரின்ஸிபாலாக மட்டும் மதிக்கவில்லை. அவளை ஓர் உயர்ந்த பீடத்தில் ஏற்றித் தம்முடைய அந்தஸ்து, கௌரவம், அறிவு, ஆற்றல் இவ்வளவுக்கும் ஈடு கொடுக்கக்கூடிய பெருமை வாய்ந்தவளாகக் கருதினார். அன்று பார்வதி அவரை விமான நிலையத்துக்குத் தேடிச் சென்று மூக்குக் கண்ணாடியைக் கொடுத்தபோது, ஏற்கெனவே அவளைப்பற்றி அவர் கொண்டிருந்த எண்ணம் மேலும் ஒரு படி உயர்ந்துவிட்டது. அவருடைய அந்த மதிப்பீட்டில் பார்வதி உயர்ந்தது மட்டுமல்ல, சேதுபதி தம்மைத்தாமே ஒரு படி தாழ்த்திக்கொண்டார்.

     “மூக்குக் கண்ணாடியை மறந்து வந்துவிட்டீர்களே, இது ரொம்ப அவசியமல்லவா? வெளியூருக்குப் போகுமிடத்தில் இது இல்லை யென்றால், முக்கிய காரியம் கெட்டுப் போகுமே. வேறு எதை மறந்தாலும் பரவாயில்லை. வேறொன்று உடனே வாங்கி விடலாம். மூக்குக் கண்ணாடியை நினைத்த நேரத்தில் வாங்கிவிட முடியாதே!” என்று கூறி, அவள் அந்தக் கண்ணாடியை எடுத்து வெகு அலட்சியமாகக் கொடுத்தபோது அவள் முன் நான் எவ்வளவு சிறியவனாகி விட்டேன்? அவள் அந்த நேரத்தில் எவ்வளவு பொறுப்புடன், கண்ணியத்துடன் நடந்து கொண்டாள். நானோ இன்று இன்ஷூரன்ஸ் பற்றிய பேச்சு எழுந்தபோது அவள் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு நஷ்டம் என்று கூறிய தவறைச் சுட்டிக்காட்டி, அவள் குற்றத்தை எடுத்துக்காட்டி அவளைத் திருத்த முற்பட்டேன். அவள் அறியாமையைச் சுட்டிக் காட்டியதும், அவள் தவறைத் திருத்தியதும் சரியாயிருக்கலாம். ஆனால் அவளைத் தாழ்த்தி விட்ட குற்றம் என்னுடையதல்லவா? தெரியாமல் அவள் நஷ்டம் என்று கூறியபோது நான் சிரித்திருக்கக் கூடாதல்லவா? தம்முடைய குணத்தையும் அவளுடைய பண்பையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்ட சேதுபதியின் எண்ணத்தில் பார்வதி மேலும் உயர்ந்து காட்சி அளித்தாள். அவளுக்கு முன்னால் தான் மேலும் ஒரு படி தாழ்ந்து விட்ட தாகக் கருதினார்.

     ‘இனி இம்மாதிரிக் குற்றத்தை ஒரு நாளும் செய்யமாட் டேன். யாரையும் குறை கூறி, அவர்கள் குற்றத்தை உணரச் செய்து, நம்மைக் காட்டிலும் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்க மாட்டேன். குறையை நாசூக்காகச் சொல்லித் திருத்தவேண்டும். அதுதான் பண்பு. ஒருவருடைய குறையை எடுத்துக் கூறும்போது, அவர்களைவிட நாம் அறிவாளி என்ற அகம்பாவம் நம் உள்ளத்தில் ஏற்படக்கூடாது. நம்மைவிடச் சிறந்த அறிவாளிகள் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் நாம் ஒரு சிறு துரும்பு...” சேதுபதி ஒரு முடிவுக்கு வந்தார். அந்த முடிவில் அவருக்கு ஒரு நிம்மதி பிறந்தது. அப்படியே தூங்கிப்போனார்.