உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
குருத்து பன்னிரண்டு பக்கத்து வீட்டுப் பசு மாட்டின் கனிந்த குரல், காலை பத்திரிகை வந்து விழும் சலசலப்பு, பால் டிப்போ சைக்கிள் மணியோசை இவையாவும் பார்வதிக்கு விடியற்காலை வேளையில் வழக்கமாகக் கேட்டுப் பழக்கமாகிவிட்ட ஒலிகள். ‘இன்று இன்னும் அந்த ஒலிகளைக் கேட்க முடிய வில்லையே, ஏன்?’ என்று யோசித்தவளாய்க் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். அதில் மணி ஐந்தரைதான் ஆகியிருந்தது. ‘ஒரு வேளை இந்தக் கடிகாரம் மெதுவாக ஓடுகிறதோ?’ என்று எண்ணியவளாய், “ராஜா! ராஜா!” என்று அழைத்தாள். அவன் உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தான். கீழே இறங்கிச் சென்று ஹாலில் மாட்டப்பட்டிருந்த அந்த பிரெஞ்சு நாட்டுக் கடிகாரத்தைப் பார்த்தபோது, அதுவும் ஐந்தரை மணியையே காட்டியது. அந்தக் கடிகாரத்தின் மீது அவளுக்கு அதிக நம்பிக்கை! “மணி ஐந்தரைதான் ஆகிறதா?... அப்படியானால், நான் இன்று வழக்கத்தைக் காட்டிலும் சீக்கிரமே எழுந்து விட்டிருக்கிறேன்...” என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள். உண்மையில், பார்வதி அன்று உறக்கத்தைவிட்டு எழுந்திருக்கவே இல்லை. இரவெல்லாம் தூங்கியும் தூங்காமலும் படுக்கையில் புரண்டவாறு சேதுபதியைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருந்தவளுக்கு, ‘எப்போது தூங்கினோம், எப்போது விழித்துக் கொண்டோம்?’ என்ற உணர்வே துளியும் இல்லை. படுக்கையினின்றும் வெகு சீக்கிரமே எழுந்து விட்டவள், உள்ளத்தில் அமைதியோ உற்சாகமோ இன்றி இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தாள். புத்தகங்களை எடுத்துப் புரட்டினாள். பலகணியின் வழியாகக் கீழ்த்திசையில் நிகழ்ந்து கொண்டிருந்த விடியற்காலை ஜாலங்களைப் பார்க்கலானாள். எதிலும் மனம் லயிக்காமற் போகவே, கீழே இறங்கிச் சென்று குளிர்ந்த நீரில் உடல் குளிரக் குளித்துப் பின்னர், உடை மாற்றிக் கொண்டு கண்ணாடியின் முன் சென்று தன் உருவத்தையே சற்றுநேரம் பார்த்துக்கொண்டாள். கூந்தலை அழகாகச் சீவி, கொண்டை போட்டு, ஊசிகளால் அவற்றைக் கட்டுப்படுத்திய பின்னர், நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு ஒருமுறை தலையைச் சாய்த்துப் பார்த்தவளாய், ‘அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை நாற்பதுக்கும் ஒன்றிரண்டு வயது குறைவாகவேதான் மதிப்பிடலாம்’ என்று சமாதானம் சொல்வது போல் எண்ணிக் கொண் டாள். மேஜை மீது கிடந்த மூக்குக் கண்ணாடியை எடுத்துச் சீலையின் தலைப்பால் அதைத் துடைத்து அணிந்துகொண்ட பிறகு மீண்டும் ஒரு முறை, நிலைக்கண்ணாடியின் முன் போய் நின்று தன் உருவத்தைப் பார்த்தாள். இப்போது இரண்டு வயது அதிகமாகி விட்டது போல் தோன்றியது. ‘பரவாயில்லை; வயது சற்று அதிகமாகத் தோன்றினாலும், இந்தக் கண்ணாடி அணிந்த பிறகே முகத்தில் அறிவின் களை வீசுகிறது’ என்று தனக்குத்தானே திருப்தி அடைந்தாள். அடுத்த கணமே அவளுக்கு இன்னொரு எண்ணமும் உண்டாயிற்று. ‘வயதைப்பற்றியோ, வசீகரத்தைப் பற்றியோ, இத்தனைக் காலமும் ஏற்படாத கவலைகள் இப்போது மட்டும் தோன்றுவானேன்? என் உள்ளத்தில் எழுந்துள்ள பலவீனமான எண்ணங்களுக்கு இதுவே அறிகுறியாக இருக்கலாமோ?’ என்று யோசித்துப் பார்த்தாள். இதற்கெல்லாம் என்ன காரணம்? யார் காரணம்? ஆம்; சேதுபதியேதான். அவருடைய அறிவை, உறவை, பரிவை, அன்பு மொழிகளை என் உள்ளம் நாடுகிறது. என் எண்ணத்தை வெளிப்படையாகக் கூறவும் முடியவில்லை; மனத்திற்குள்ளே மறைத்து வைக்கவும் இயலவில்லை. சோடாபுட்டியின் நெஞ்சுக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கும் கண்ணாடிக் குண்டு போல், சேதுபதி பற்றிய எண்ணம் என் நெஞ்சுக்குள் புகுந்து அலைந்து கொண்டிருக்கிறது. ‘என் உள்ளத்தை, உள்ளத்தில் புகுந்துகொண்டிருக்கும் இரகசியத்தை அவர் புரிந்து கொண்டிருக்கிறாரா? புரிந்து கொண்டுதான் பேசாமல் மௌனம் சாதிக்கிறாரா? நான் படும் வேதனைகளை அவர் அறிந்து கொண்டிருக்கிறாரா? அல்லது அறிந்து கொண்டுதான் அறியாதவர் போல் நடித்துக் கொண்டிருக்கிறாரா?’ ‘அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறது, அவர் என்னை நேசிக்கிறார். என் உள்ளத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்! ஆமாம்; அதனாலேயே மாலை வேளைகளில் நான் அவர் வீட்டுக்குச் செல்லும் நேரங்களில் எனக்காகக் காத்திருக்கிறார். பாரதியே சொல்கிறாளே, ‘கொஞ்ச நாட்களாகத் தான் அப்பா மாலை நேரங்களில் வீட்டில் தங்கியிருக்கிறார்’ என்று. ‘அதற்கு என்ன காரணம்?’ எப்படி யெல்லாமோ பற்பல கோணங்களில் சிந்தித்துப் பார்த்தும், பார்வதியால், நிச்சயமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சேதுபதி உண்மையிலேயே அவளை நேசிக்கிறாரா இல்லையா என்பதை அவளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தன் எண்ணத்தை, ஆசையை வெளிப்படுத்த முடியாத நிலைமை ஒரு புறம், அவராகவே தன் நிலையைப் புரிந்து கொண்டும் மௌனம் சாதிக்கிறாரா என்ற சந்தேகம் இன்னொரு புறம். அவருக்குத் தன்னிடம் அன்பு இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொண்டுவிட வேண்டுமென்ற துடிப்போடு இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள் பார்வதி. அப்போது மணி ஐந்தரைகூட ஆகவில்லை. ‘இந்த நிலையை நீடிக்க விடக்கூடாது. மனத்திற்குள்ளாகவே வைத்துப் புழுங்கவும் கூடாது. இன்று இதற்கு ஒரு முடிவு கண்டுவிட வேண்டும், ஒரு சிறு சோதனையின் மூலம் அவர் எண்ணத்தைப் புரிந்து கொண்டு விட வேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டான். மணி ஒன்பதரைக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, வாசல் ஹாலுக்கு வந்து நின்றாள் பார்வதி. அங்கே பகவான் பரமஹம்சரும், தேவியாரும் சாந்தமாக, அமைதியாகக் காட்சி அளித்தனர். ‘தேவி! என் மனத்துக்கு அமைதியைக் கொடு’ என்று வேண்டிக் கொண்டவளாய், அந்த இரு உருவங்களுக்கும் தலை குனிந்து வணங்கிவிட்டு காரில் போய் ஏறிக் கொண்டாள். கார் வாசல் காம்பவுண்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினான். கார் கல்லூரிக் காம்பவுண்ட் சுவரை நெருங்கித் திரும்பிய நேரத்தில் மிஸஸ் அகாதா குடையைப் பிடித்தவண்ணம் காலை விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். “குட்மார்னிங் மேடம்” என்று அவள் சற்று உடலைத் தாழ்த்திக் கூறியபோது, பார்வதியும் பதில் வணக்கம் தெரிவித்தாள். அப்போது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம். போர்ட்டிகோவில் போய் கார் நின்றது. அட்டெண்டர் ஆறுமுகம் வழக்கம்போல் காரின் கதவைத் திறக்க ஓடி வந்தான். பிரின்ஸிபால் பார்வதி காரைவிட்டு இறங்கித் தன்னுடைய அறைக்குள் போய் அமர்ந்து கொண்டாள். மின்சார விசிறி சுழலத் தொடங்கியது. மேஜையின் மீது ஏதேதோ பைல்கள் அவள் கையெழுத்துக்காகக் காத்துக் கிடந்தன. அவள் அவற்றைப் படித்தாள். சிலவற்றைப் புரிந்து கொண்டும், சிலவற்றைப் புரிந்து கொள்ளாமலும் கையெழுத்துகளை ஏனோதானோ வென்று போட்டுத் தீர்த்தாள். இரண்டில் ஒன்று தெரிந்து கொண்டு விட வேண்டும் என்ற துடிப்பில் உள்ளம் ஊசலாடிக் கொண்டிருந்தது. அவள் அறிவுக்குப் புலப்பட்ட ஒரே வழி அந்தச் சோதனைதான். அவருக்கு உண்மையில் தன்னிடம் அன்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு விடுவதற்கு அது ஒன்றுதான் வழி. “இனி மாலை வேலைகளில் தங்கள் பங்களாவுக்கு என்னால் வரமுடியாது. அந்த நேரத்தில் எனக்குக் கல்லூரியில் நிறையப் பணிகள் இருப்பதால் பாரதியை இன்று முதல் என் வீட்டுக்கே அழைத்துச் சென்று டியூஷன் சொல்லித்தரப் போகிறேன்” என்று ஒரு கடிதம் எழுதி ஆறுமுகத்திடம் சேதுபதியின் வீட்டிற்கு அதைக் கொடுத்தனுப்புவது என்பதே அதன் முடிவு. காகிதத்தை எடுத்து மிகச் சுருக்கமாகக் கடிதத்தை எழுதி முடித்தவள், ஒரு முறை அதைத் திரும்பப் படித்தும் பார்த்தாள். அந்தக் கணம், அந்தக் கடிதத்தை அவன் படித்துக் கொண்டிருந்த சமயம் அவள் தன்னையே சேதுபதியாகவே எண்ணிப் படிக்கும்போது, அவர் என்ன நினைப்பார் என்பதைக் கற்பனையில் ஊகித்துப் பார்த்தாள். ‘பாவம்! திடீரென்று இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்கும்போது அவருக்கு மிகவும் ஏமாற்றமாயிருக்கும்! என் மீது நிஜமாகவே அவருக்கு அன்பு இருந்தால், இனி என்னைச் சந்திக்க முடியாதே என்பதை எண்ணி வருத்தப்படுவார். என்னைக் காண்பதிலும் என்னுடன் உரையாடிக் கொண்டிருப்பதிலும் விருப்பம் இருந்தால், அதற்கு இனி சந்தர்ப்பம் இல்லாமற் போய்விடுமே என்பதை நினைத்து ஏங்கிப் போவார். சாக்குப் போக்குச் சொல்லி டியூஷனைத் தம் வீட்டிலேயே வைத்துக் கொள்ளும்படி பாரதியிடம் சொல்லி அனுப்புவார். அல்லது தம் கையாலேயே கடிதம் எழுதி அனுப்புவார். அப்போது, அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்கும்போது என் உள்ளம் பரவசப்படும். சேதுபதி தன்னிடம் கொண்டுள்ள அந்தரங்கமான ஆசையை அறிந்து பெருமகிழ்ச்சி அடைவேன்.’ ‘ஆறுமுகம்!’ என்று மணியடித்து அழைத்த பார்வதியின் குரலில் ஏதோ ஒரு புதுமை தொனித்தது. ஆறுமுகம் உடனே எதிரில் வந்து நின்றான். “இந்தா, இந்தக் கடிதத்தைக் கொண்டுபோய் சேதுபதி யின் வீட்டில் கொடுத்துவிட்டு வா” என்று உறையிட்டு முடிய அக்கடிதத்தை அவனிடம் கொடுத்தனுப்பினாள். ஆறுமுகம் திரும்பி வந்தபோது, மணி பன்னிரண்டு. “என்ன ஆறுமுகம் கடிதத்தைக் கொடுத்துவிட்டாயா?... சேதுபதி படித்துப் பார்த்தாரா?...” என்று ஆவல் தூண்டும் பரபரப்போடு விசாரித்தாள் பார்வதி. “அவர் வீட்டிலே இல்லீங்க. பத்து மணிக்கே ஆபீசுக்குப் போய்விட்டாராம். அந்த வீட்டிலே ஒரு அம்மா இருந்தாங்க. அவங்ககிட்டே கொடுத்துட்டு வந்துட்டேன்” என்றான் அவன். பார்வதியின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சேதுபதிக்கு அலுவலகத்தில் எந்த வேலையும் ஓடவில்லை. பார்வதியைச் சந்திக்கும் நேரங்களில் நேரில் கேட்டுவிடுவது என்று எத்தனையோ முறை முடிவு செய்தும் முடியாமற் போய்விட்டது. நேரில் காணும்போது என்ன காரணத்தாலோ பேச முடிவதில்லை. எப்படிப் பேசுவது? என்னவென்று பேசுவது? தன்மீது பார்வதிக்கு உண்மையிலேயே ஆசையிருக்கு மானால், அதை அறிந்து கொள்வதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. இன்று முதல், மாலை நேரங்களில் தன்னால் வீட்டுக்கு வரமுடியாதென்றும் புதிய தொழிற்சாலை ஒன்று தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் இன்னும் சில மாதங்களுக்குத் தனக்கு ஓய்வே இருக்காதென்றும் பார்வதியிடம் கூறவேண்டும். அப்போது அவள் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாவாள். தன்னுடன் இனி பேசமுடியாது, தன்னைச் சந்திக்க முடியாது என்று அறிய நேரும்போது மிகவும் வருத்தப்படுவாள். டெலிபோனில் இதை நான் கூறும்போது அவள் ஏதேனும் பதில் கூறுவாள். அப்போது அவள் குரல் உற்சாகம் இழந்து தொனிக்கும். அந்தக் குரலில் ஏமாற்றமும், வருத்தமும் கலந்து பிரதிபலிக்கும். அதிலிருந்து அவள் என் மீது கொண்டுள்ள ஆசையும் அக்கறையும் புலப்படும். இந்த முடிவுடன் டெலிபோனைக் கையில் எடுத்து பிரின்ஸிபால் பார்வதியுடன் பேசத் தொடங்கினார். “ஹல்லோ!” சேதுபதியின் கம்பீரமான குரல் டெலிபோன் குழலில் ஒலித்தபோது பார்வதியின் உடல் ஒருமுறை சிலிர்த்தது. “சேதுபதி பேசுகிறேன்” என்று அவர் மேலும் தொடர்ந்தபோது, யாரை நினைத்து நினைத்து இதுகாறும் உருகிக் கொண்டிருந்தாளோ, யாருக்காக என்னென்ன எண்ணமிட்டுக் கொண்டிருந்தாளோ, யாருடைய குரலைக் கேட்க ஏங்கிக் கொண்டிருந்தாளோ, யாருடன் உரையாட ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாளோ, யாருடைய அந்தரங்கத்தை அறியக் காத்துக் கொண்டிருந்தாளோ அந்தக் குரலைக் கேட்டபோது, அவளுடைய உள்ளம் படபடவென்று அடித்துக்கொண்டது. தான் எழுதிய கடிதத்தைப் பார்த்து விட்டுத்தான், அதைப் பார்க்காதவர்போல் டெலிபோன் செய்திருக்கிறார் என்று எண்ணியவளாய்த் தன் உணர்ச் சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மிக அமைதியாக, “நான் தான் பார்வதி பேசுகிறேன். வணக்கம்” என்றாள். “வணக்கம்” என்று பதிலுக்குக் கூறிய சேதுபதி. “ஒன்று மில்லை; இன்றுமுதல் எனக்கு அதிக வேலை இருக்கிறது. புதிய தொழிற்சாலை ஒன்று தொடங்கப் போகிறேன். ஆகையால், மாலை வேளைகளில் இனி ஓய்வு இருக்காது. வீட்டுக்குத் திரும்பி வர ஒன்பதாகிவிடும். பாரதியைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது. இதைச் சொல்வதற்குத்தான் கூப்பிட்டேன்.” “அப்படியா! ஆகட்டும்” பார்வதியின் குரலிலிருந்து சேதுபதியால் எதையும் ஊகிக்க முடியவில்லை. சேதுபதி அன்று மாலை வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மேஜையின் மீது பார்வதியின் கடிதம் அவருக்காகக் காத்திருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தவர், ‘பார்வதி என்னிடம் டெலிபோனில் பேசிய பிறகே, எனக்கு இக்கடிதத்தை எழுதியிருக்க வேண்டும். என்னிடம் அவளுக்குள்ள அன்பு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே டெலிபோனில் பேசுவதற்கு முன்பே கடிதம் எழுதியிருப்பது போல் எழுதியிருக்கிறாள்’ என்று எண்ணிக் கொண்டார். சேதுபதி தன் கடிதத்தைக் கண்டுவிட்டே டெலிபோனில் பேசியிருக்கிறார் என்று பார்வதி எண்ணிக் கொண்டதைப் போலவே, பார்வதியிடம் தான் டெலிபோனில் பேசிய பிறகே அவள் கடிதம் எழுதியிருக்கிறாள் என்று சேதுபதி எண்ணிக் கொண்டார். அன்று மாலை கல்லூரி விட்டதும், பார்வதி சேதுபதியின் வீட்டுக்குச் செல்லவில்லை. “பாரதி! இன்று முதல் உனக்கு என் வீட்டில்தான் டியூஷன். ஏறிக்கொள் வண்டியில்” என்றாள். ஒன்றுமே அறியாத பாரதி, மகிழ்ச்சியோடு காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். பிரின்ஸிபால் வீட்டில் தான் இனி டியூஷன் என்னும் சேதி பாரதிக்கு அளவிலாத மகிழ்ச்சியை அளித்தது. காரணம், ராஜாவை அங்கே தினமும் சந்திக்கலாம் அல்லவா? அன்று மணி ஏழரை வரை டியூஷன் நடந்தது. அந்த நேரத்தில் ராஜா குறுக்கும் நெடுக்குமாகப் பலமுறை அலைந்து கொண்டிருந்தான். பார்வதியின் மனத்தில் அமைதியில்லை. அவசரப்பட்டு சேதுபதிக்குக் கடிதம் எழுதிவிட்டேனே; தினம் தினம் அவரைச் சந்திப்பதில், அவருடன் பேசுவதில், அடைந்த இன்பமும் ஆறுதலும் இனிக் கிட்டாதே! என்ன அசட்டுத் தனம்! எதற்காகக் கடிதம் எழுதினேன்? அவரை இனி எந்தக் காரணத்தை வைத்துக்கொண்டு சந்திப்பேன்? சேதுபதி தன்னைவிட்டே நழுவிச் சென்றுவிட்டது போலவும் வெகு தூரத்துக்கு அப்பால், இன்னும் அப்பால் அடிவானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கும் எல்லை விரிப்பில் ஒரு சிறு புள்ளியைப்போல் அவர் நகர்ந்து கொண்டிருப்பது போலவும் தோன்றியது பார்வதிக்கு. ‘டெலிபோனில் எதற்காகப் பேசினேன்? தினம் தினம் அவளைச் சந்தித்து உரையாடி மகிழும் இன்பத்தை நழுவ விட்டுவிட்டேனே! என்ன அசட்டுத்தனம்!’ தம் செய்கையை எண்ணித் தாமே வருத்தப்பட்ட சேதுபதிக்குப் பார்வதி தன்னைவிட்டு நழுவி விட்டது போலவும், தன்னால் நெருங்க முடியாத தொலைவில், அதற்கும் அப்பால் வான முகட்டின் எல்லையில் ஒரு சிறு புள்ளியாக மாறி நிற்பதைப் போலவும் தோன்றியது. மணி எட்டு இருக்கும். “பாரதி நீ வீட்டுக்குப் போகலாம். எனக்கு உடம்பு சரியில்லை. மற்ற பாடங்களை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்... ராஜா! பாரதியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வா” என்றாள் பார்வதி. அந்த வார்த்தையை எதிர்பார்த்துக் காத்திருந்த ராஜாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சினிமா டியூன் ஒன்றைச் சீட்டியடித்துத் தன் உற்சாகத்தை வெளிப்படுத்த எண்ணினான். ஆயினும் உற்சாகத்தை அடக்கிக்கொண்டு, ஓடிப்போய்க் காரின் கதவைத் திறந்து பாரதியை அதில் ஏறிக்கொள்ளச் சொன்னான். கார் நகர்ந்து, வாசல் காம்பவுண்டைத் தாண்டி வலது பக்கம் திரும்பியது. அந்தப் பக்கம் தான் சேதுபதியின் வீடு இருந்தது. கடற்கரை இருந்த திசையும் அதுதான். |