உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
குருத்து பதின்மூன்று உயரமான மேடை. அதன் மீது ஒரு பெரிய பாறாங்கல், நாலைந்து தொழிலாளர்கள் அந்தப் பாறையைக் கடப்பாரையால் கீழே தள்ளுவதற்குத் தங்கள் பலம் கொண்ட மட்டும் முயன்று பார்க்கிறார்கள். தொழிலாளர்கள். நரம்புகள் புடைக்கப் பாறையைத் தள்ளும் காட்சியைக் கற்சிலையாக வடித்துக் கடற்கரையில் வைத்துள்ளான் சிற்பி ஒருவன். பாரதியைக் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ராஜாவுக்கு அவளை உடனே வீட்டில் கொண்டு விட்டுவிட மனமில்லாததால், சற்று நேரம் கடற்கரையிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். எங்கெங்கோ சுற்றிய பின்னர் கடைசியாக அந்தக் கற்சிலையின் அருகில் போய்க் காரை நிறுத்திவிட்டு “பாரதி! இந்தச் சிலை எவ்வளவு அழகாயிருக்கிறது. பார்த்தாயா?” என்று கேட்டான். “எனக்கு இதைப் பார்க்கவே சங்கடமாயிருக்கிறது” என்றாள் பாரதி. “ஏன்?” “அந்த மேடைமீது இன்னும் கூட இரண்டு தொழிலாளர்கள் நிற்பதற்கு இடமிருக்கிறதே, அப்படியிருக்கப் பாறையை ஏழெட்டுப்பேர் தள்ளுவது போல் செய்திருக்கலாமே” என்றாள் பாரதி. “செய்திருக்கலாம்; ஏழெட்டுப்பேர் சேர்ந்து தள்ளினால் பாறை கீழே விழுந்துவிடுமே!” என்றான் ராஜா. பாரதி சிரித்துக்கொண்டே, “மிஸ்டர் டிரைவர்! நேரமாகிறது. காரை எடுங்கள். வீட்டுக்குப் போகவேண்டும்” என்றாள். “மிஸஸ் டிரைவர்! இப்படி முன் சீட்டில் வந்து அமருங்கள். இல்லையென்றால் கார் இந்த இடத்தைவிட்டு நகராது” என்றான் ராஜா. “முடியாது; நம் இருவருக்கும் மணமாகும்வரை நான் முன் சீட்டில் உட்காரமாட்டேன்” என்றான் பாரதி. “நான் பின் சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டால் கார் ஒட்ட முடியாதே” என்றான் ராஜா. பாரதி மீண்டும் சிரித்துக்கொண்டே, “மிஸ்டர் டிரைவர்! காரை எடுக்கப் போகிறீர்களா, இல்லையா?” என்று அதிகாரம் செய்தாள். “மேடம்! நீங்கள் முன் சீட்டில் வந்து உட்காரப் போகிறீர்களா, இல்லையா?” என்று பாரதியின் காதைப் பிடித்து முன் வீட்டுக்கு இழுத்துச் சென்றான் ராஜா. பாரதிக்கு ராஜாவின் அருகில் அமர உள்ளுற ஆசைதான் என்றாலும் மேலுக்கு விருப்பமில்லாதவள் போல் முகத்தை வைத்துக்கொண்டாள். காரை மெதுவாகச் செலுத்தத் தொடங்கினான் ராஜா. இருவருக்கும் இடையே நிலவிய மெளனத்தைக் கலைப்பது போல், “என்ஜினீரிங் படிப்பு முடிந்ததும் என்ன செய்யப் போகிறீர்கள் ராஜா?” என்று கேட்டாள் பாரதி. “என்ஜினீராகப் போகிறேன், ஏன், எதற்காக” என்றான் ராஜா. “அப்படியா! நான் நினைத்தேன்... என்ஜினீரிங் படித்து விட்டு வக்கீல் தொழில் செய்வார்கள் என்று” என்றாள் பாரதி. “பி.எஸ்ஸி. படித்து முடித்ததும் நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று ராஜா கேட்டான். “யாரோ ஒருவரை கார் டிரைவாக அமர்த்திக்கொண்டு அந்த டிரைவரின் மிஸஸ் ஆகிவிடப் போகிறேன்” என்று கூறிக் ‘கல கல’ வெனச் சிரித்தாள் பாரதி. “அந்த யாராவது ஒருவர் யாரோ?” என்று ஆவலோடு கேட்டான் ராஜா. “கரா... கஜா!” என்றாள் பாரதி. “கச... கபா... கஷ்!” என்றான் ராஜா. கார் எங்கெங்கோ வளைந்து திரும்பிக் கடைசியில் பாரதியின் வீட்டை நெருங்கிய சமயம் ராஜா காரை வேகமாகச் செலுத்த முற்பட்டான். அதைக்கண்ட பாரதி, “மெதுவாகப் போங்கள். வீடு நெருங்கிவிட்டதே, தெரியவில்லையா?” என்றாள். “தெரிகிறது; அதனால் தான் வேகமாகப் போகிறேன். இன்னொரு முறை சுற்றிவிட்டு வரலாமே” என்றான் ராஜா. “ஊஹும். கூடாது; நாம் இருவரும் இப்படியே சுற்றிக் கொண்டிருந்தால் கடைசியில் என் அப்பாவுக்கும் உங்கள் அத்தைக்கும் விஷயம் தெரிந்துவிடும்” என்றாள் பாரதி. “தெரியட்டுமே; நம் திருமணத்தைப்பற்றி அவர்களிடம் கூறுவதற்கு நம் இரண்டு பேருக்குமே தைரியம் கிடையாது. அவர்களாகவாவது தெரிந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாமே!” என்றான் ராஜா. பாரதி வீட்டுக்குத் திரும்பியபோது மணி ஒன்பதாகி விட்டது. தம்முடைய அறையில் தனியாக உட்கார்ந்து சிந்தனையில் ஈடுபட்டிருந்த சேதுபதிக்கு நேரம் போனதே தெரியவில்லை. சேதுபதியின் சகோதரி காமாட்சி அவரைச் சாப்பிட அழைத்தபோது, “பாரதி டியூஷனிலிருந்து வந்து விடட்டுமே!” என்றார். சேதுபதியின் கவலை தோய்ந்த முகத்தைக் கவனித்த காமாட்சி, ‘அண்ணாவுக்கு என்ன கவலை? மலையே புரண்டாலும் நிலை கலங்க மாட்டாரே! அவரா இப்படிக் கவலையே உருவாக உட்கார்ந்திருக்கிறார்?’ என்று வேதனைப்பட்டாள். “என்ன அண்ணா உனக்கு? ஏன் ஒரு மாதிரியாக உட்கார்ந்திருக்கிறாய்?” என்று காமாட்சி கேட்டதற்கு, “ஒன்றுமில்லையே, ஏதோ யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சகஜமாகப் பதில் கூறி அனுப்பிவிட்டார் அவர். சற்று நேரத்துக்கெல்லாம் பாரதியும் வந்துவிட்டாள். ‘அப்பா என்ன சொல்வாரோ?’ என்ற திகிலுடன் உள்ளே வந்து கொண்டிருந்த பாரதியைப் பார்த்துச் சேதுபதி, “என்னம்மா இவ்வளவு நேரம்? டியூஷனுக்கு நேரமாகி விட்டதா! வா சாப்பிடலாம்” என்று அழைத்ததும் தான் பாரதிக்கு நிம்மதி ஏற்பட்டது. “இதோ வந்துவிட்டேன் அப்பா!” என்று குதித்துக் கொண்டே ஓடினாள். பாரதியும் சேதுபதியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சேதுபதி எதுவுமே பேசவில்லை. காமாட்சி கேட்ட கேள்வி அவர் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்தது. ‘“என்ன அண்ணா உனக்கு?” என்று கேட்டபோது ‘ஒன்றுமில்லை’ என்று அவளிடம் மழுப்பி விட்டேன். ஆனால் உண்மையாகவே எனக்கு ஒன்றுமில்லையா? என் உள்ளத்தில் உறுத்திக் கொண்டிருக்கும் எண்ணத்தை அவளிடம் விளையாட்டாகச் சொல்லிப் பார்க்கலாமே’ என்று தோன்றியது. மெளனமாகவே சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஹாலில் போய் அமர்ந்தவர் சாவகாசமாகத் தட்டிலிருந்த பாக்கையும் வெற்றிலையையும் எடுத்துப் போட்டபடியே “காமாட்சி!...” என்று அழைத்தார். காமாட்சி எதிரில் வந்து நின்றதும், “இப்படி உட்கார்ந்து கொள். சற்று நேரம் உன்னிடம் தாமாஷாகப் பேசிக் கொண்டிருக்கப் போகிறேன்...” என்று எதிரிலிருந்த சோபாவைச் சுட்டிக் காட்டினார். சேதுபதியின் பேச்சும் போக்கும் காமாட்சிக்கு வியப்பை அளித்தன. ‘அண்ணாவா இப்படிப் பேசுகிறார்?’ என்று எண்ணிக் கொண்டவள் “தமாஷாக்கும் வேடிக்கைக்கும் கூட உனக்கு அவகாசம் இருக்கிறதா, அண்ணா!” என்று கேட்டபடியே நாற்காலியில் அமர்ந்தாள். சோபாவில் உட்கார்ந்திருந்த காமாட்சியைப் பார்த்து சேதுபதி திடீரென்று கேட்டார். “காமாட்சி! இப்போது எனக்கு என்ன வயசிருக்கும்?” “என்னைவிட நாலு வயசுகூட இருக்கும். ஏன் அண்ணா திடீரென்று இப்போது வயசைப்பற்றி என்ன கவலை வந்து விட்டது உனக்கு?” “ஒன்றுமில்லை; சும்மாத்தான் கேட்டேன். இப்போது உனக்கு என்ன வயசு?” “நாற்பத்தெட்டு.” “உன்னைவிட நாலு வயசு கூட என்றால்... எனக்கு இப்போ ஐம்பத்திரண்டு தானே?” “ஆமாம்...” “எனக்கு ரொம்ப வயசாகிவிட்டது. இல்லையா?” “சீ சீ ! இது ஒரு வயசா, என்ன? அறுபதாம் கலியாணத்துக்கே இன்னும் ஏழு வருஷம் இருக்கே?...'' “சரி, காமாட்சி! இப்போது நான் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று வைத்துக்கொள். நீ என்ன செய்வே?” காமாட்சி சிரித்துக்கொண்டே, “உனக்கு மனைவியாக வருகிறவளை ‘அண்ணி’ என்று கூப்பிடுவேன்” என்றாள். காமாட்சியின் பதில் சேதுபதிக்குச் சற்று நிம்மதி அளித்தது. விளையாட்டாகக் கேட்பது போலவே தன் உள்ளத்திலுள்ள சந்தேகங்களை யெல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்கலானார். “ம்... சரி; நீ அண்ணின்னு கூப்பிடுவே, பாரதி என்ன செய்வாள்?” “அம்மா என்று கூப்பிடுவாள்.” சேதுபதி சிரித்தார். சிரித்துக்கொண்டே, “என் கேள்வி யெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது இல்லையா, உனக்கு!” என்று கேட்டார். “வேடிக்கையாகத்தானே நீ கேட்கிறாய்?” என்றாள் காமாட்சி. “நீ எப்படி நினைக்கிறே? நிஜமாகவே கேட்பதாக எண்ணிவிட்டாயா? அதுசரி, இன்னொரு முக்கியமான கேள்வியையும் கேட்டு விடுகிறேன். இப்போது நான் கல்யாணம் செய்துகொண்டால் உலகம் அதைப்பற்றி என்ன நினைக்கும்?” “ஒன்றும் நினைக்காது கை கொட்டிச் சிரிக்கும்; அவ்வளவுதான். பாரதி குழந்தையாயிருக்கும் போதே நான் படித்துப் படித்துச் சொன்னேன். அப்போது நீ கேட்கவில்லை. சரஸ்வதியை மறக்க முடியாது. அவளுடைய ஸ்தானத்தில் இன்னொருத்திக்கு இடமளிக்க மாட்டேன் என்று சீறி விழுந்தாய். இப்போது இத்தனை வயதான பிறகு, திருமணத்தைப் பற்றி நீயாகவே பேசுகிறாய். உலகம் என்ன நினைக்கும் என்று கேட்கிறாய். விளையாட்டாகக் கேட்பதாகச் சொல்கிறாய். உலகம் என்ன நினைக்கும் தெரியுமா? ‘குடுகுடு கிழவருக்குக் கலியாணம் டும் டும் கொட்டித் தாலி கட்டினார்’ என்று கேலி செய்யும்.” “காமாட்சி! இந்த உலகத்தையே எதிர்த்துத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வைத்துக்கொள். அப்போது?...” “செய்து கொள்ளலாம்; ஆனால், நீ இந்த உலகத்தில் வாழவேண்டுமே...” இதைக் கேட்ட சேதுபதி ‘ஓ’ என்று எக்காளமிட்டுச் சிரித்தார், சிரித்துக்கொண்டே “அசடே! சுத்தப் பயித்தியமாயிருக்கிறாயே! நான் விளையாட்டாகச் சொன்னதை யெல்லாம் உண்மையென்று நம்பிவிட்டாயா? பாரதிக்குக் கலியாணம் செய்யவேண்டிய வயசிலே நான் திருமணம் செய்து கொள்வேனா? நிஜமாகவே நம்பிவிட்டாயா?” சேதுபதி கூறியது உண்மைதான். அந்த நிஜத்தை வாழ்க்கையோடு விளையாடிப் பார்க்க எண்ணினார். அந்த எண்ணத்தைத்தான் சகோதரியிடம் வேடிக்கையாகக் கூறிப் பார்த்தார். காமாட்சியின் பதில் அவருக்கு வேதனையை அளிக்கவே, தன் வார்த்தைகளை வேடிக்கை என்று கூறி மழுப்பி விட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து போய்விட்டார். படுக்கையில் போய் சாய்ந்து கொண்டவருக்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை. இரண்டு கேள்விகள் அவர் உள்ளத்தில் புகுந்து மாறி மாறிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு குரலும் தனித் தனியாகப் பேசும் போது அதனதன் கட்சியை வலிவாக வாதாடியது! “உலகத்தை எதிர்த்துத் தைரியமாக மணம் புரிந்து கொள்! துணிந்து நிற்பதுதான் ஆண்மைத்தனம்” என்றது ஒரு குரல். “உலகத்துக்குத் தாழ்ந்துப் போய்விடு. அது தான் அடக்கம். அப்போதுதான் உலகோடு ஒட்டி வாழமுடியும்” என்றது இன்னொரு குரல். இரு குரல்களும் மாறி மாறி எழுந்து முழுச் சக்தியுடன் அவருடன் போர் புரிந்தன. இரு எண்ணங்களுமே சரி சமமான பலத்தில் எதிர்த்து நின்றதால், அவற்றில் எது சரி எது தப்பு என்பதை அவரால் முடிவு கட்ட முடியவில்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது. கடைசியில் எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த சேதுபதியை உறக்கம் ஆட்கொண்டது. கல்லூரி அலுவலக அறையில் உட்கார்ந்திருந்த பிரின்ஸிபால் பார்வதி, அன்று வந்த கடிதங்களைப் படித்துக்கொண்டிருந்தாள். அவற்றில் ஒன்று மீனாவைப் பற்றியது. ஹாஸ்டலில் தங்கி பி. ஏ. இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருத்தியின் பெயர்தான் அது. கல்லூரியிலேயே மிக அழகி என்று பெயரெடுத்தவள் அவள். ஆடம்பரமான ஆடை, பகட்டான ஆபரணங்கள் ஏதுமின்றியே எளிமையான உடையணிந்து காண்போரைக் கவர்ந்துவிடும் வசீகரக் கவர்ச்சி அவளிடமிருந்தது. இடைவேளையிலோ அல்லது வேறு வேளையிலோ கல்லூரி மாணவிகள் அத்தனை பேரும் தினமும் அவளை ஒரு முறை பார்க்காமல் போக மாட்டார்கள். அவள் ஆடை அலங்காரத்தைப் பற்றியும் தினுசு தினுசாகப் போட்டுக் கொள்ளும் கொண்டைகளைப் பற்றியும் பேசாமல் இருக்கமாட்டார்கள். நாகரிகம் என்ற பெயரில் கூந்தலைக் கந்தரித்துக் கொண்டும், குதிரைவால் முடி போட்டுக்கொண்டும் அலங்கோலமாகச் சிங்காரித்துக் கொண்டும் வரும் மாணவிகளைப் பார்வதிக்குக் கட்டோடு பிடிக்காது. அத்தகைய மாணவிகளை அழைத்துக் கண்டிக்கவும் தவற மாட்டாள். ஆயினும் பார்வதிக்கு மீனாவின் அடக்கமான ஆடை அலங்காரத்தில் குற்றம் காண முடியவில்லை. டென்னிஸ் முதலிய விளையாட்டுப் போட்டிகளில் பல கல்லூரி மாணவ மாணவிகளை வென்று சாரதாமணிக் கல்லூரிக்குப் பெருமையும் புகழும் தேடித் தந்துள்ள பெருமையும் மீனாவுக்கு உண்டு. கடிதம் மீனாவைப் பற்றியது என்பதை அறிந்த பார்வதி, மிக அக்கறையுடனேயே அதைப் படித்து முடித்தாள். அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. வேறொரு சமயமாயிருந்தால் கடிதத்தில் இருந்த விஷயம் இதற்குள் பார்வதியை வேங்கையாக மாற்றிச் சீறச் செய்திருக்கும். தன் கல்லூரி கெளரவமே பாழாகி விட்டதாக எண்ணிக் கொந்தளித்திருப்பாள். அந்தக் கணமே மீனாவைத் தன் அறைக்கு அழைத்து வரச்சொல்லி, ஒழுக்கம் கெட்ட பெண்களுக்குத் தன் கல்லூரியில் இடமில்லை என்று ஏசி டிஸ்மிஸ் செய்து ஹாஸ்டலிலிருந்தும் வெளியேற்றியிருப்பாள். இப்போது அவள் பழைய பார்வதி அல்ல. முற்றிலும் மாறிவிட்ட ஒரு புதுமைப் பெண்மணி. மீனாவின் தந்தை எழுதியிருந்த அக்கடிதத்தை எடுத்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தாள். அப்போதும் அவளுக்குக் கோபம் வரவில்லை. “தங்கள் கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் பெண்கள் தகுந்த பாதுகாப்பின் கீழ் பத்திரமாகப் படித்து வருவார்கள். அவர்களுடைய ஒழுக்கம் கெட்டுப்போகாத முறையில் தாங்கள் கவனித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையும் நல்ல பெயரும் தங்கள் கல்லூரிக்கு எப்போதுமே உண்டு. அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் என் மகள் மீனாவைத் தங்கள் கல்லூரி ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தேன். இப்போது நான் கேள்விப்படும் செய்தி என்னைத் திடுக்கிடச் செய்துள்ளது. “மீனா வேறொரு கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவனை அடிக்கடி சந்திப்பதாகவும், அவனுடன் நட்பு கொண்டிருப்பதாகவும் எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது. இது உண்மையானால் இதைவிட அவக்கேடான செய்தி வேறொன்றும் இருக்க முடியாது. இது பற்றித் தாங்கள் உடனே தீர விசாரித்து எனக்கு உண்மையைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” பார்வதிக்கு வியப்பாக இருந்தது.‘இதில் உண்மை யிருக்குமா?’ என்று யோசித்துப் பார்த்தாள். ‘மீனா மிக நல்ல பெண். அப்படியெல்லாம் பண்பு கெட்டு நடக்கக் கூடியவள் அல்ல’ என்றே கூறியது அவள் உள் மனம். மீனாவையே நேரில் அழைத்துக் கேட்டுவிடலாம் என்ற முடிவுடன் ஆறுமுகத்தை அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னாள். மீனா எதிரில் வந்து நின்றபோது பார்வதி சற்று நேரம் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பெண்ணுக்குப் பெண்ணே பார்த்து வியக்கும் அளவுக்கு அத்தனை அழகு! பார்வதியால் சட்டென்று விஷயத்தைப் பிரஸ்தாபிக்க முடியவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ கேள்விகளை யெல்லாம் கேட்டுவிட்டுக் கடைசியில் “ஸ்போர்ட்ஸெல்லாம் இப்போது எந்த மட்டில் இருக்கிறது, மீனா?” என்று கேட்டாள். “பரீட்சை முடிகிற வரையில் அதைப்பற்றி நினைக்கவே நேரம் கிடையாது மேடம்” என்றாள் மீனா. “பேஷ்! அப்படித்தான் படிக்கவேண்டும். அது சரி; பீ.ஏ.வை முடித்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்?” “அப்பா என்ன சொல்கிறாரோ, அதன்படி நடந்து கொள்வேன்...” “அப்பா கல்யாணம் செய்து கொள்ளச் சொன்னால்...” “அவர் இஷ்டப்படியே நடப்பேன்.” “அவர் தேர்ந்தெடுத்துச் சொல்லும் பையனை மணந்து கொள்வாயல்லவா?...” “அது தான் முடியாது; அந்த ஒரு விஷயத்தில் மட்டும் எனக்குச் சுதந்திரம் வேண்டும்.” “அப்படியென்றால் நீயாகவே ஒருவனைத் தேர்ந்தெடுக்கப் போகிறாயா?” “ஆமாம்...” என்று கூறியவள், வெட்கத்துடன் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். “மீனா அந்தப் பையன் யாரென்று என்னிடம் சொல்லலாமோ?” மெளனமாக நின்றாள் மீனா. “என்னிடம் வெட்கப்படாமல் சொல், பார்க்கலாம். இது விஷயத்தில் உனக்கு என்னாலான உதவியைச் செய்கிறேன். உன் அப்பாவுக்கு நானே கடிதம் எழுதி, உன் திருமணத்தை முடிந்து வைக்கிறேன்...” “எனக்கு வெட்கமாக இருக்கிறது மேடம்...” “மீனா! என்னிடம் சொல்லுவதற்கு வெட்கப்படலாமா? எங்கே சொல்லு பார்க்கலாம்...” தலையை நிமிர்த்திச் சொல்லுவதற்கு ஆயத்தமான மீனாவை மீண்டும் வெட்கம் சூழ்ந்துகொண்டது. “யார் அவன்? எங்கே இருக்கிறான்? பெயர்?...” தூண்டிக்கேட்டாள் பார்வதி. “டென்னிஸ் ப்ளேயர் கோபாலன்.” “யார் அது? கார்நேஷன் கல்லூரியில் படிக்கும் டென் னிஸ் சாம்பியன் கோபாலனா? அவனுடன் உனக்கு எப்படிப் பழக்கம் ஏற்பட்டது?” “டென்னிஸ் மாட்ச் நடைபெற்றபோது...” “சரி; நீ வகுப்புக்குப் போகலாம்.” மீனா திரும்பி வகுப்பை நோக்கி நடந்தாள். அவள் நடையழகையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பார்வதிக்கு மீனாவின் மீது துளியும் கோபம் வரவில்லை. மீனாவின் மீது குற்றம் இருப்பதாகவும் தோன்றவில்லை. அதற்குப் பதிலாக அவள்மீது அனுதாபமே பிறந்தது. டெலிபோனை எடுத்துக் கார்நேஷன் கல்லூரியின் எண்களைச் சுழலவிட்டாள். அடுத்த கணமே அந்தக் கல்லூரியின் பிரின்ஸிபால் திருவாளர் வேதாந்தம் பேசத் தொடங்கினார். “நான்தான் சாரதாமணிக் கல்லூரி பிரின்ஸிபால் பேசுகிறேன். தங்களிடம் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும். இப்போது வந்தால் சந்திக்க முடியுமா?” என்று கேட்டாள் பார்வதி. “தாங்களா இங்கே வருவதா? தங்களுக்குச் சிரமம் வேண்டாம். அரை மணிக்குள் நானே அங்கு வந்துவிடுகிறேன்” என்றார் வேதாந்தம். “தயவு செய்து மன்னிக்க வேண்டும். என்னுடைய காரியமாகவே தங்களைப் பார்க்க வரப்போகிறேன். ஆகையால் நான் அங்கே வருவதுதான் முறை. இதோ இப்போதே புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியபடி நாற்காலியை விட்டு எழுந்தாள் பார்வதி. |