குருத்து பதினான்கு

     பார்வதியின் கார், கார்நேஷன் கல்லூரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதைச் செலுத்திக் கொண்டிருந்த பார்வதியின் உள்ளம் தீவிரச் சிந்தனையில் ஈடுபட்டிருந்தது. மேற்படி கல்லூரியின் தலைவர் திருவாளர் வேதாந்தத்தைப் பற்றி எண்ணும்போதே அவளுக்கு ஒருமித அச்சமும், பக்தியும் தோன்றின. அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவளுக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. இதற்குமுன் அவரை இரண்டொரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறாள். ஆயினும், குறைந்த வார்த்தைகளுடனேயே அச்சந்திப்புகள் முடிவடைந்து விட்டன.

     சாரதாமணிக் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தபோது கூடப் பார்வதியால் அவரிடம் பேச முடியவில்லை. அடக்கமே உருவான திருவாளர் வேதாந்தம், அமைதியே வடிவமாய் ஒரு பக்கமாகப் போய் உட்கார்ந்து கொண்டிருந்தார். நிறைகுடம் என்பார்களே, அந்தப் பெயர் திருவாளர் வேதாந்தத்தைப் பார்த்த பிறகே தோன்றியிருக்க வேண்டும்.

     ஆங்கிலம், தமிழ் இவ்விரு மொழிகளிலும் அவருக்கு ஆழ்ந்த புலமையும் சரி சமமான பற்றுதலும், ஞானமும் இருந்தன. கம்பனையும் ஷேக்ஸ்பியரையும் சமநோக்குடன் சம எடையில் வைத்து ஆராய்ந்த அறிவாளர் அவர்.

     நிஜாரும், கோட்டும் போட்டுக்கொண்டு, குடுமியா கிராப்பா என்று தெரியாமல் மறைத்துவிடும் தலைப்பாகையுடன் தான் எந்நேரமும் காட்சியளிப்பார். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் பொதுவாகத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியோ, ஆங்கில நூல்களைப் பற்றியோதான் பேசுவார்.

     எந்த மொழியில் பேசிய போதிலும் அந்த மொழிக்கே உரிய தனித் தூய்மையுடன் தான் பேசுவார். ஒரு மொழி பேசும்போது அத்துடன் இன்னொரு மொழியைக் கலந்து விடக்கூடாது என்பதில் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பவர்.

     திருவாளர் வேதாந்தத்துடன் தமிழில் பேசுவதா, ஆங்கிலத்தில் பேசுவதா என்ற கவலை ஒருபுறமும், தன்னுடைய கல்லூரி மாணவி மீனாவைப்பற்றி அவரிடம் எவ்வாறு பேச்சைத் தொடங்குவது என்ற அச்சம் இன்னொரு புறமும் பார்வதியை வாட்டிக் கொண்டிருந்தன.

     “எங்கே வந்தீர்கள், என்ன விஷயம்” என்று வேதாந்தம் கேட்டால், விஷயத்தை எப்படித் தொடங்குவது?

     ‘தங்கள் கல்லூரி மாணவன் கோபாலனைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன்’ என்று கூறி, மீனாவின் தந்தையிடமிருந்து வந்துள்ள கடிதத்தை அவரிடம் கொடுத்து விடுவதா? அல்லது பொதுவாகச் சில விஷயங்களைப் பற்றி முதலில் பேசிக்கொண்டிருந்த பின்னர், பேச்சுக்கிடையில் தான் வந்த காரியத்தை நாசுக்காக அறிவிப்பதா?

     ‘காதல், கல்யாணம் இவைபற்றி வேதாந்தம் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறார் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். பின்னர்தான் மீனா விஷயத்தைப் பிரஸ்தாபிக்க வேண்டும். கோபாலனைப் பற்றிக் குற்றம் சொல்வதாகவும் இருக்கக் கூடாது. நடந்திருப்பதையும் தெளிவாகச் சொல்லவேண்டும். காதல் விவகாரங்களில் அனுபவம் எதுவுமே இல்லாத பார்வதிக்கு இது ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது.

     திருவாளர் வேதாந்தத்தைச் சந்தித்து உரையாடப் போவது இதுதான் முதல் தடவை. முதல் முறையாக அவரைச் சந்திக்கப் போகும்போது இம்மாதிரியான காதல் விவகாரத்தையா எடுத்துக் கொண்டு போகவேண்டும்?

     இன்னொரு புறம் காதலைப்பற்றிய உணர்வு அவள் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டிருந்தது.

     மீனா - கோபாலன் நட்பில் குற்றம் இருப்பதாக அவளால் ஊகிக்க முடியவில்லை. தவறு ஏதும் நேராத வரையில் மீனாவும் கோபாலனும் நெருங்கிப் பழகுவதை ஏன் ஆட்சேபிக்க வேண்டும்?

     பார்வதி யோசித்தாள். இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு திருவாளர் வேதாந்தத்திடம் போக வேண்டியது அவசியந்தானா என்றுகூடத் தோன்றியது அவளுக்கு. ஆனாலும் வேதாந்தம் இதைப்பற்றி என்ன எண்ணுகிறார்; என்ன சொல்லுகிறார் என்பதை அறிந்து கொள்ளவும் ஆவல் தூண்டியது.

     காலமெல்லாம் கன்னியாகவே வாழ்ந்துவிட்ட பார்வதிக்கு, காதல் கல்யாணம் பற்றிய அனுபவமே இல்லாத பார்வதிக்கு, கல்வியும் கல்லூரியுமே உலகம் என வாழ்நாளை வீணாக்கிவிட்ட பார்வதிக்கு இப்போது ஒரு புதிய உணர்வும் உற்சாகமும் தோன்றியுள்ளன.

     இந்த நிலைக்குக் காரணம் சேதுபதிதான்.

     சேதுபதியின் உறவை அவருடைய நட்பை அவள் விரும்பினாள்; எந்நேரமும் அவர் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று எண்ணினாள். இந்த ஆசைக்கு, விருப்பத்துக்கு, எண்ணத்துக்கு என்ன காரணம் என்பதை அவளால் கூற முடியவில்லை. சேதுபதியிடமே கூடச் சொல்ல முடியாமல் இரகசியத்தில் மௌனமாக இருந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த பார்வதியின் உள்ளப்போக்கில் இப்போது பெரும் மாறுதல் ஏற்பட்டிருந்தது.

     நிறையப் படித்துள்ள பார்வதிக்கு, பல நூல்களை ஆராய்ந்து பட்டங்கள் பெற்றுள்ள பார்வதிக்கு இத்தனை அறிவும், ஆற்றலும் இருந்தும் தன் சொந்த வாழ்க்கையை மலரச் செய்து கொள்ளத் தெரியவில்லை. அனுபவத்தோடு அறிவு சேருகிறபோதுதான் மலர்ச்சியும் ஏற்படுகிறது. இப்போதுதான் அந்த அனுபவம் அவளுக்குக் கிட்டியிருக்கிறது.

     பார்வதி காரைவிட்டு இறங்கும்போதே வாசலில் காத்திருந்த வேதாந்தம் “வாருங்கள் வரவேண்டும்...” என்று அகமும் முகமும் மலரக் கைகூப்பி வரவேற்றார்.

     முதிர்ந்த தோற்றமும் அறிவின் ஒளிவீசும் கண்களும் அடக்கமும் அமைதியும் கலந்த பண்பாடும் ஒருங்கே சேர்ந்த உருவமே வேதாந்தம் என்ற பெயரைப் பெற்றிருந்தனவோ?

     ‘தங்கள் வரவு நல்வரவாகுக’ என்ற உபசரிப்புடன் தம்முடைய அறைக்குப் பார்வதியை அழைத்துச் சென்றார் அவர்.

     புன்சிரிப்பைத் தவிர, பார்வதியின் வாயினின்று எதுவுமே வெளிப்படவில்லை.

     பேச்சை எப்படித் தொடங்குவது என்பதிலேயே அவள் மனம் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.

     கடைசியில், “தங்களைச் சந்தித்துப் பேசும் பேறு எனக்குக் கிட்டியதற்காக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பேச்சைத் தொடங்கினாள்.

     வேதாந்தம் சிரித்தார். கள்ளம், கபடறமற்ற அந்தச் சிரிப்பின் மூலமே தம்முடைய பதிலைக் கூறிவிட்டார் அவர்.

     “தாங்கள் என்னைத் தேடி வந்த காரியம் என்னவோ?”

     ஆங்கிலத்தில் மிக மிகச் சரளமாகப் பேசும் திறமை பெற்றிருந்த போதிலும் வேதாந்தம் தூய தமிழிலேயே பேசினார்.

     கார்நேஷன் கல்லூரி பிரின்ஸிபால் பதவி அவரைத் தேடி வந்ததற்குக் காரணம் அவர் தமிழில் பெரும் புலமை பெற்றவர் என்பதற்காக அல்ல. ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள ஞானமே அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது. ஆயினும், அவர் தம்மை ஒரு தமிழ்ப் புலவர் என்று கூறிக் கொள்வதிலேயே பெருமைப்பட்டார். தம்மைப் பொறுத்த வரையில் தமிழுக்கு உயர்ந்ததொரு ஸ்தானத்தைக் கொடுக்க வேண்டுமென்பதற்காகவே தலைப்பாகையைத் தலையிலே அணிந்து கொண்டிருந்தார்.

     “வள்ளுவரைப்பற்றித் தங்கள் கருத்து என்னவென்பதை நான் அறியலாமா?” பார்வதி மிக மிக விநயமாகக் கேட்டாள்.

     “‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு,’ என்று பாரதி பாடிய பிறகு, நான் கூறுவதற்கு என்ன இருக்கிறது!”

     “மன்னிக்க வேண்டும். இன்னொரு விஷயம் பற்றியும் தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்” என்றாள் பார்வதி.

     “நன்று நன்று! தாராளமாகக் கேளுங்கள்” என்றார் வேதாந்தம்.

     “காதல் என்ற சொல்லுக்குத் தாங்கள் விளக்கம் தர முடியுமா?”

     “காதல் என்ற புனிதமான சொல் ஆண் பெண் உறவு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நான் தமிழ் மொழி மீது காதல் கொண்டுள்ளேன். சிலர் இந்தி மீது காதல் கொண்டுள்ளார்கள். உங்களுக்கு உங்கள் கல்லூரியின் மீது காதல்.”

     “உண்மைக் காதலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...”

     “அதுபற்றித் தனிச் சொற்பொழிவே நிகழ்த்த வேண்டும். ஆனாலும் ஒன்று கூறுவேன். காதல் என்பது ஆண் மகனுடைய வாழ்க்கையில் ஒரு பகுதிதான். ஆனால் அதுவே ஒரு பெண்ணின் முழு வாழ்வுமாகும்.”

     “மிக உயர்ந்த கருத்து...” என்று பாராட்டினாள்.

     “இக்கருத்து என்னுடையதல்ல. பைரனைப் பாராட்டுங்கள்” என்றார் வேதாந்தம்.

     “அப்புறம்?” என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு வேதாந்தத்தையே கூர்ந்து நோக்கினாள் பார்வதி.

     “ஒரு பெண்ணின் உள்ளத்தில் காதல் உணர்ச்சி தோன்றும்போது தான் காதலைப் பற்றிய முழுச் சக்தியையும் அவள் அறிய நேரிடுகிறது” என்றார் வேதாந்தம்.

     “காதலைப் பற்றி வள்ளுவர்?...”

     “நிரம்பச் சொல்லி யிருக்கிறார். அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது,

     ‘காணுங்காற் காணேன் றவராய
     காணாக்காற் காணேன் றவறல்லவை’

     என்ற குறளாகும். காதலனை நேரில் காணும்போது காதலிக்கு அவனுடமுள்ள குற்றங்கள் எதுவுமே தெரிவதில்லையாம். அவனைக் காணாதபோது அவனிடமுள்ள குற்றங்களைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லையாம்!”

     “எவ்வளவு அழகான கருத்து...” என வியந்தாள் பார்வதி.

     “வள்ளுவர் கூறாத கருத்துகளே இல்லை” என்று மகிழ்ந்தார் வேதாந்தம்.

     மெளனத்திலாழ்ந்திருந்த பார்வதி, ஏதோ பேசுவதற்குத் தயங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் குறிப்பால் அறிந்த வேதாந்தம், “ஏதேனும் முக்கிய விஷயமிருந்தால் தயங்காமல் கூறுங்கள்” என்றார்.

     “தாங்கள் இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்கவேண்டும். இந்த அற்ப விஷயத்தில் தங்களுக்குத் தொந்தரவு கொடுப்பதற்காக மன்னிக்க வேண்டும்” என்ற பூர்வ பீடிகையுடன் கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள் பார்வதி.

     அதைப் பிரித்துப் பார்த்த வேதாந்தம், “இதையா அற்ப விஷயம் என்று கூறினீர்கள்? இது நம் இரு கல்லூரியையுமே பாதிக்கும் விஷயமல்லவா? இம்மாதிரி விஷயங்களில் நாம் அலட்சியமாக இருந்துவிட்டால் கடைசியில் அது நம் கல்லூரிகளுக்கே இழுக்கைத் தேடித் தரும். கல்லூரித் தலைவர்களுக்கு இவை சம்பந்தமற்றவை என்று உதாசீனம் செய்துவிடுவது மிகமிகத் தவறான செயல். இது விஷயத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட அக்கறையைப் பாராட்டுகிறேன். இப்போதே கோபாலனை அழைத்துப் பேசி உண்மையை அறிந்து கொண்டு விடுவோம். சற்று நேரம் தாங்கள் இந்த அறையிலேயே உட்கார்ந்திருங்கள். தங்களை நேரில் வைத்துக்கொண்டு அவனை விசாரிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. அவன் என்ன கூறுகிறான் என்பதைத் தாங்களும் கேட்க வேண்டும். ஆகையால், நான் அவனை அடுத்த அறைக்கு வரச்சொல்லி விசாரணை செய்கிறேன். இந்த அறையிலிருந்தபடியே தாங்கள் கேட்டுக் கொள்ளலாம்” என்றார்.

     தலையசைத்தாள் பார்வதி. அடுத்த அறையில் விசாரணை ஆரம்பமாயிற்று.

     “கோபால்! உன்னிடம் இன்று சில கேள்விகள் கேட்கப் போகிறேன். எதையும் மறைக்காமல் பதில் கூறவேண்டும். இப்படி உட்கார்ந்து கொள்” என்றார் வேதாந்தம்.

     கோபாலன் உட்காரவில்லை. ”மன்னிக்க வேண்டும்!” என்று கூறித் தன் பண்பை வெளிப்படுத்தினான்.

     “உனக்கு என்ன வயதாகிறது கோபால்?”

     “இருபத்து மூன்று....?”

     “இந்த ஆண்டுடன் உன் படிப்பு முடிந்து விடுகிற தல்லவா?”

     “ஆம்...”

     “அப்புறம் என்ன செய்யப் போகிறாய்...?”

     “ஏதாவது ஓர் அலுவலகத்தில் சேர்ந்து பணி புரியப் போகிறேன்...”

     “எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறாய்?”

     “என் தந்தை முடிவு செய்யும்போது...”

     “உன் தந்தையாகப் பார்த்து முடிவு செய்யும் பெண்ணை மணந்து கொள்ள போகிறாயா? அல்லது...”

     “அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்...”

     “அப்படியானால்...!”

     “நானாக ஒரு பெண்ணைத் தேர்ந்து மணம் செய்து கொள்வதற்கு அவர் தம்முடைய பூரண சம்மதம் அளிப்பார்...”

     “ஒரு வேளை நீ தேர்ந்தெடுக்கும் பெண்ணை அவர் ஒப்புக் கொள்ளவில்லை யென்றால்?...”

     “ஒப்புக்கொள்ளமாட்டார் என்று ஏன் சந்தேகப்பட வேண்டும்? பொதுவாக உலகத்தில் நம்பிக்கைதான் முக்கியம். ஆயினும், எல்லாவற்றிலுமே நம்பிக்கை வைத்துவிடக் கூடாது தான். அதற்காக எதையுமே நம்பாமலும் இருக்கக் கூடாதல்லவா?”

     “கோபால்! மிக அருமையாகப் பேசுகிறாயே! இதுவரை விளையாட்டிலும் படிப்பிலும் மட்டுமே புத்திசாலி என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன். காதல் விவகாரத்திலும் நீ...” வேதாந்தம் சிரித்தபடியே கூறினார்.

     “காதலா...” கோபாலன் சற்றுத் திகைப்போடு கேட்டான்.

     “காதலிப்பது தவறில்லை கோபால்! இதோ பார் இந்தக் கடிதத்தை...”

     கடிதத்தை வாங்கிப் படித்த கோபாலன், “ஐயா, மீனாவை நான் நேசிப்பது உண்மைதான். ஆனால் எங்கள் நட்பில் முறைகேடு எதுவும் கிடையாது. அவளை நான் என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்.”

     அழுத்தமாகவும் திருத்தமாகவும் பேசினான் கோபால்.

     கோபாலனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதியின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கிற்று. அவனை ஒரு முறை கண்ணால் பார்த்துவிட விரும்பிய பார்வதி, கதவின் வழியாக அவனைப் பார்க்கவும் செய்தாள்.

     சிரித்த முகத்துடன், மிடுக்கான தோற்றத்துடன் அடக்கமாக நின்று கொண்டிருந்த கோபாலனின் உருவத்தைக் கண்ட பார்வதி, ‘மீனாவுக்கு ஏற்ற ஜோடிதான்’ என்று மனத்திற்குள்ளாகவே மகிழ்ந்து கொண்டாள்.

     “சரி, நீ போகலாம்” என்று கோபாலனை அவனுடைய வகுப்புக்கு அனுப்பிவிட்டுத் தம்முடைய அறைக்குத் திரும்பி வந்தார் வேதாந்தம்.

     வேதாந்தத்தைக் கண்டதும் “மிக்க நன்றி. தங்களுடைய நேரத்தை வீணாக்கி விட்டதற்காக மன்னிக்க வேண்டும்” என்று எழுந்து நின்றாள் பார்வதி.

     “வீணாக்கி விட்டதாக எப்படிக் கூற முடியும்? பயனுள்ள ஒரு முக்கிய காரியமல்லவா இது?”

     பார்வதி பதில் கூறாது புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தாள்.

     “ஆமாம்; தாங்கள் தமிழில் இவ்வளவு அழகாகப் பேசுகிறீர்களே, எப்போதுமே இப்படித்தான் பேசுவீர்களா?” வேதாந்தம் விசாரித்தார்.

     “இல்லை; தமிழில் பேசினால் தாங்கள் மகிழ்ச்சியுறுவீர்கள் என்பதால் பேசிப் பார்த்தேன். நான் நன்றாகப் பேசுகிறேன் என்பதைக் கேட்க எனக்குப் பெருமையாக இருக்கிறது...” என்றாள் பார்வதி.

     “மீனாவின் தந்தைக்குக் கடிதம் எழுதி, திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்து விடுங்கள். கல்லூரித் தலைவர்கள், மாணவர்களின் கல்வி விஷயத்தில் மட்டும் கருத்தைச் செலுத்தினால் போதாது. அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும்...” சிரித்தபடியே கூறினார் வேதாந்தம்.

     “வணக்கம்; நான் வருகிறேன்” என்று விடைபெற்றுக் கொண்டாள் பார்வதி.

     அன்று காலையில் தினப்பத்திரிகை வந்ததும் பார்வதி அவசர அவசரமாக அதைப் புரட்டினாள். பத்திரிகையின் ஏதோ ஒரு மூலையில் வழக்கமாக வரும் ஒரு பகுதியில் அவன் கவனம் சென்றது. அந்தப் பகுதியிலிருந்த செய்தியைக் கண்டதும், அவள் பெரும் வேதனைக்குள்ளானாள்.

     ‘நேற்றிரவு சேதுபதி பம்பாய்க்குப் பயணமானார்’ என்பதுதான் அச்செய்தி. ஏற்கெனவே அவள் சேதுபதியைச் சந்தித்து நாலைந்து நாட்களாகியிருந்தன. அந்தப் பிரிவுகூட அவளுக்கு வேதனையைத் தரவில்லை. இப்போது தன்னிடம் கூறிக் கொள்ளாமலே அவர், பம்பாய்க்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார் என்னும் தகவலைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த உலகமே வெறிச்சென்றாகி விட்டதைப்போல் உணர்ந்தாள். அவர் ஊரிலிருந்தபோது சேதுபதி தன் அருகில் இருந்தது போலவும், இப்போது எல்லாமே தன்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டது போலவும் உணர்ந்தாள்.

     சேதுபதியின் மீது அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.

     அடுத்த கணம் ‘நான் ஏன் அவரைக் கோபிக்க வேண்டும்? எதற்காக அவர் என்னிடம் சொல்லிக்கொண்டு போக வேண்டும்? எனக்கும் அவருக்கும் என்ன உறவு? அன்று என்னுடைய சொந்த அண்ணன் என்னைத் தனியாகத் தவிக்கவிட்டுச் சொல்லிக் கொள்ளாமல் போனபோது கூட எனக்குக் கோபம் வரவில்லையே! இப்போது எனக்குச் சம்பந்தமற்ற யாரோ ஒருவர் தன் சொந்தக் காரியமாகப் பம்பாய் போய்விட்டார் என்பதற்காகக் கோபம் வருவானேன்?’ பார்வதிக்கு வேதாந்தம் சொன்ன குறள் நினைவுக்கு வந்தது.

     ‘காணுங்காற் காணேன் றவராய
     காணாக்காற் காணேன் றவறல்லவை.’

     விமானத்தில் போய்க்கொண்டிருந்த சேதுபதியின் உள்ளத்திலும் அமைதியில்லை. ஊரை விட்டுப் புறப்படும் போது அவர் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டுதான் புறப்பட்டார். ஆனாலும் பார்வதியிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தது பெரும் குறையாகத் தோன்றியது அவருக்கு. அடுத்த கணம் ‘பார்வதிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவளிடம் நான் ஏன் சொல்லிக் கொள்ள வேண்டும்?’ என்று தமக்குத் தாமே கேட்டுக்கொண்டார்.

     அவர் உள்ளத்தில் அமைதியில்லை. பார்வதியைப் பற்றியே மீண்டும் மீண்டும் எண்ணமிட்டவராக விமானத்தின் பலகணி வழியாக விண்வெளியை வெறிச்சிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.