உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
குருத்து பதினைந்து “பாரதி! பரீட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் கணக்கில் நீ அவ்வளவு ‘வீக்’ இல்லை. ஆகையால் இன்றுமுதல் உனக்கு ஸயன்ஸ் பாடம் சொல்லித் தரப் போகிறேன். எங்கே, ஸயன்ஸ் புஸ்தகம் கொண்டு வந்திருக்கிறாயா? அதிலிருந்து சில கேள்விகள் கேட்கப் போகிறேன்” என்றாள் பார்வதி. ஸயன்ஸ் என்றதுமே பாரதியின் வயிற்றில் ‘பகீர்’ என்றது. கணக்குக்கு அடுத்தபடியாக அவளுக்குப் பிடிக்காத ‘சப்ஜெக்ட்’ அதுதான். அன்று பாரதி ராஜாவுடன் சினிமாவுக்குப் போகத் திட்டம் போட்டு வைத்திருந்தாள். அந்த நேரத்திலா ஸயன்ஸ் பாடம் படிக்கத் தோன்றும்? படு ‘போர்’ ஆயிற்றே! “காலையிலிருந்தே எனக்குத் தலைவலி தாங்கவில்லை அம்மா! அத்துடன் இன்று நான் ஸயன்ஸ் புத்தகமும் கொண்டுவர மறந்து போனேன்” என்றாள் பாரதி. “மாத்திரை கொடுக்கிறேன் அதைச் சாப்பிட்டுவிட்டு இப்படிக் கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டிரு. ராஜா வந்ததும் உன்னைக் கொண்டுபோய் வீட்டில் விட்டு வரச் சொல்கிறேன்...” “கல்லூரியிலிருந்து புறப்படும்போதே சொல்வதற்கென்ன? உன்னை அப்போதே வீட்டில் கொண்டுபோய் விட்டிருப்பேனே” என்றாள் பார்வதி. “அப்போது ராஜாவைச் சந்திக்க முடியாதே!” என்று பாரதி கூறவில்லை. எண்ணிக் கொண்டாள். ஸயன்ஸ் புத்தகம் கொண்டு வராததற்காகத் தன்னை பிரின்ஸிபால் கோபிப்பான் என எதிர்பார்த்த பாரதிக்கு பார்வதியின் உபசரணைகளும், அன்பு மொழிகளும் வியப்பை அளித்தன. சேதுபதி பம்பாயிலிருந்து எப்போது திரும்பி வருவார் என்பதை அறிந்து கொள்ளவே பார்வதி அவ்வாறு அன்பு பாராட்டினாள். ஆனாலும் பாரதியிடம் அதைக் கேட்டுவிடும் துணிவு அவளுக்கு ஏற்படவில்லை. சகஜமாகக் கேட்பதுபோல் கேட்டுப் பார்க்கலாமா? ஊஹும் கூடாது. ‘அப்பா, நீங்கள் எப்போது வருவீர்கள் என்று பிரின்ஸிபால் விசாரித்தார்’ என்று பாரதி தன் தந்தையிடம் கூறினால் அவர் என்ன எண்ணிக் கொள்வார்? அவர் வருகையில் நான் அக்கறை கொண்டிருப்பதாக அல்லவா நினைப்பார். ‘போய் வருகிறேன்’ என்று ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு போகாதவரைப்பற்றி நான் ஏன் விசாரிக்க வேண்டும்? அவரிடம் எனக்கு அக்கறை இருப்பதாக ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்? ஆனாலும் அவளால் சேதுபதியைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை. வெகு நேரம் தனக்குத்தானே குழம்பிக் கொண்டிருந்த பார்வதி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாள். பாரதியை மெதுவாக விசாரிக்கத் தொடங்கினாள். “பாரதி! உனக்கு அடிக்கடி தலைவலி வருவது உண்டா?” “இல்லை அம்மா! கொஞ்ச நாட்களாகத்தான்... இப்படி...?” “யாராவது டாக்டரிடம் சிகிச்சை செய்து கொள்வது தானே? ஆமாம்... உன்னுடைய அப்பாகூட ஊரில் இல்லை போலிருக்கிறதே எப்போது வருகிறார்?... நான் வேண்டுமானால் டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போகட்டுமா?” என்று பேச்சுக்கிடையில் தான் கேட்கவேண்டிய கேள்வியை வெகு சாமர்த்தியமாகத் திணித்துவிட்டாள் பார்வதி. “ஞாயிற்றுக்கிழமை மாலை வருகிறார். இப்போது எனக்கு முன்னளவு தலைவலி இல்லை. வீட்டுக்குப் போய்ச் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்” என்றாள் பாரதி. “ராஜா வரட்டும்; உன்னைக் காரில் கொண்டு விடச் சொல்லுகிறேன்” என்று பார்வதி சொல்லி வாய் மூடவில்லை. வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. அதை அடுத்து ஒரு சீட்டிக் குரல், தொடர்ந்து வருவது ராஜாதான் என்பதை அறிந்து கொண்ட பாரதியின் உள்ளத்தில் குதூகலம் பொங் கியது. “ராஜா! உனக்கு ஆயுசு நூறுடா” என்றாள் பார்வதி. “என்ன அத்தை! நான் வாலிபனாக இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா? என்னை குடு குடு கிழவனாக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறதா?” பார்வதி சிரித்துக் கொண்டே “ஆமாம்; நீ கிழவனாக ஆனால் வேடிக்கையாகத்தான் இருக்கும். சரி; பாரதிக்குத் தலை வலிக்கிறதாம். அவளைக் கொண்டுபோய் வீட்டில் விட்டு வா...” “சரி, அத்தை!” என்று சந்தோஷமாகத்தான் பதில் கூற வாயெடுத்தான் ராஜா. ஆனால் தனக்கு அந்த வேலையைச் செய்வதில் இஷ்டமில்லாதது போல் அத்தையிடம் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, “இதுவே எனக்குப் பெரிய வேலையாகப் போய்விட்டது. பாரதி வீட்டு டிரைவராகவே ஆகிவிட்டேன்” என்று முணுமுணுத்த படியே பாரதியைக் கடைக் கண்ணால் கவனித்தான். வானத்தில் வீட்டுக் கூரைக்கு மேலே அப்போதுதான் ஒரு விமானம் பறந்து கொண்டிருந்தது. அந்தச் சத்தத்தில் ராஜா கூறிய வார்த்தைகள் பார்வதியின் காதில் விழவில்லை. “என்னடா சொல்கிறாய்?” என்று கேட்டாள் அத்தை. “ரேடியோவில் இன்று எனக்குக் ‘குவிஸ் புரோகிராம்’ இருக்கிறது அத்தை! ஆகையால் நான் திரும்புவதற்கு லேட்டாகும்” என்றான் ராஜா. “சரி சரி, சீக்கிரம் வந்துவிடு” என்று சொல்லி அனுப்பினாள் பார்வதி. பார்வதிக்கு இருப்புக் கொள்ளவில்லை. அமைதியின்றித் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். சேதுபதியின் நினைவு முகத்தை அவளால் மறக்க முடியவில்லை. குருவி ஒன்று இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தது. தன் கூட்டுக்குள் போய் உட்காருவதும், பிறகு துணைவனைக் காணாமல் தேடி அலைவதுமாக இருந்த அந்தக் குருவியையே சற்று நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி, அந்தக் குருவி முதன்முதல் தனியாக அங்கு வந்து கூடு கட்டிக் குடியேறியபோது பார்வதி அதைக் கவனித்திருக்கிறாள். இப்போது சில நாட்களாக அது வேறொரு குருவியுடன் சிநேகம் பூண்டு சுற்றிக் கொண்டிருப்பதையும் கவனித்திருக்கிறாள். இன்று அந்த ஆண் குருவியைக் காணாமல், பெண் சிட்டுக்கு ஆண் சிட்டு எங்கே போயிற்றோ! எப்போது போயிற்றோ! பெண் சிட்டிடம் சொல்லிக்கொண்டு போயிற்றோ! சொல்லிக் கொள்ளாமலேயே போய், அலைய வைத்துக் கொண்டிருக்கிறதோ? பார்வதிக்கு அந்தக் குருவியின் நிலை மிகுந்த வேதனையைத் தந்தது. பார்வதிக்கு மீண்டும் சேதுபதியின் நினைவு தோன்றவே அதை மறக்க விரும்பினாள். மீனாவின் தந்தை தனக்கு எழுதிய கடிதமும் அவருக்குத் தான் எழுதிப்போட்ட பதில் கடிதமும் ஞாபகத்துக்கு வந்தது. நேராக மாடி அறைக்குச் சென்றாள். போகும்போது அந்த விசிறி வாழை அவளைப் பார்த்துச் சலசலப்பதுபோல் தோன்றியது. கீழே கிளைத்திருந்த முதிர்ந்த இலை ஒன்று மெளனமாக அவளை விசாரிப்பது போலவும் தோன்றியது. ‘சே! இதெல்லாம் வீண் பிரமை!’ என்று எண்ணிக்கொண்டவளாய், படிகளைக் கடந்து அறைக்குள் பிரவேசித்தாள். மேஜை டிராயரைத் திறந்து மீனாவின் தந்தைக்குத் தான் எழுதிய கடிதத்தின் பிரதியை எடுத்துப் படித்தாள்... “ஐயா, தங்கள் கடிதம் கிடைத்தது. மீனா மிக நல்ல பெண். படிப்பிலும், விளையாட்டிலும் முதன்மையாக இருந்து இந்தக் கல்லூரிக்கே நல்ல பெயர் வாங்கித் தந்திருக்கிறாள்... தாங்கள் எழுதியுள்ளபடி வேறொரு கல்லூரி மாணவனுடன் அவள் நட்பு பூண்டிருக்கிறாள் என்பது உண்மைதான். ஆனால் அந்த நட்பில் குற்றம் எதுவும் இல்லை. மீனாவைத் தனிமையில் அழைத்து விசாரித்தேன். அவள் எதையும் மறைக்காமல், என்னிடம் உண்மையைக் கூறிவிட்டாள். கார்னேஷன் கல்லூரி மாணவனாகிய கோபாலன் என்பவனை டென்னிஸ் விளையாட்டின்போது அடிக்கடி சந்தித்திருக்கிறாள். ஒருவருக்கொருவர் நட்புப் பூண்டிருக்கின்றனர். இது விஷயமாக அந்தக் கல்லூரி பிரின்ஸிபால் திருவாளர் வேதாந்தத்தையும் நேரில் சந்தித்துப் பேசினேன். நான் அறிந்த வரையில் கோபாலன் மீனாவுக்கு ஏற்ற ஜோடியாக இருக்கிறான். கண்டிக்கத் தக்க முறையில் ஏதும் நடந்துவிடவில்லை. அவர்கள், இருவரையும் சந்தோஷமாக வாழவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கோபாலனுடைய தந்தைக்குக் கடிதம் எழுதி அவர் சம்மதத்தைப் பெற்றுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இதற்கு என்னுடைய மனப்பூர்வமான ஆசிகள். மீனாவின் எதிர்காலம் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கல்லூரித் தலைவி என்ற முறையில் என்னுடைய கடமை இத்துடன் முடிவடைகிறது. பார்வதி.” கடிதத்தைப் படித்து முடித்ததும் பார்வதியின் முகத்தில் பெருமிதம் நிலவியது. மறுநாள் காலை. வழக்கத்தைக் காட்டிலும் கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து காலைப் பத்திரிகையின் வரவுக்காகக் காத்திருந்தாள் பார்வதி. காரணம் அன்று திங்கட்கிழமை. ஞாயிற்றுக்கிழமையே அவர் வரப்போவதாகப் பாரதி கூறினாளே! நேற்று அவர் வந்துவிட்டிருப்பாரோ? ‘திருவாளர் சேதுபதி பம்பாயிலிருந்து திரும்பினார்’ என்ற செய்தி பத்திரிகையில் வெளியாகியிருக்குமல்லவா? பத்திரிகை வந்தது. அவள் எதிர்பார்த்த செய்தியும் அதில் இருந்தது! அந்தச் செய்தியைக் கண்டதும், பார்வதியின் உடலெங்கும் இதற்கு முன் அனுபவித்தறியாத உணர்ச்சி அலை பரவியது. ‘அவர் வந்துவிட்டார் என்பதில், எனக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி? அவரைச் சந்தித்து ஒரு யுகமே ஆகிவிட்டது போல் அல்லவா தோன்றுகிறது? அவரைப் பார்க்கச் செல்லலாமா?’ எந்தக் காரணத்தை வைத்துக்கொண்டு மீண்டும் அவர் வீட்டுக்குச் செல்வேன்? ‘அதிக வேலை இருக்கிறது. மாலை வேளைகளில் இனி வரமுடியாது’ என்று கடிதம் எழுதி அனுப்பிவிட்டு இப்போது அவர் வீட்டுக்குப் போய் நின்றால் என்னைப்பற்றி என்ன எண்ணிக்கொள்வார்? எது வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும். என்னால் இனி ஒரு கணமும் அவரைப் பாராமல் இருக்க முடியாது. பார்வதி உறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள். அன்று மாலை கல்லூரி முடிந்ததுதான் தாமதம். வழக்கமாக வீடு நோக்கிச் செல்லும் பார்வதியின் கார், அன்று சேதுபதியின் வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. “எங்க வீட்டுக்காக போறீங்க மேடம்?” என்று கேட்டாள் காரில் உட்கார்ந்திருந்த பாரதி. “ஆமாம்” உறுதியாக வெளி வந்தது பார்வதியின் பதில். காரணம் கேட்கும் அளவுக்குத் துணிவு இல்லாத பாரதி மெளனமாகி விட்டாள். ராஜாவைச் சந்திக்க முடியாதே என்று எண்ணியபோது அவளுக்கு வருத்தமாக இருந்தது. பார்வதியின் கார் உள்ளே நுழைந்த சமயம், சேதுபதி தற்செயலாக வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். ‘ஒரு வேளை இன்று பார்வதி வந்தாலும் வரக்கூடும்’ என்று அவருடைய உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது. சரியாகவே போய்விட்டது. காரிலிருந்து இறங்கிய பார்வதியை முக மலர்ச்சியுடன் வரவேற்ற சேதுபதி, “வாருங்கள்... வாருங்கள்... பாரதி எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறாள்...” என்று விசாரித்தார். ‘அதிக வேலை இருப்பதால் இனி மாலை வேளைகளில் வரமுடியாதென்று கூறினீர்களே, இப்போது வேலையெல்லாம் தீர்ந்துவிட்டதா?’ என்று கேட்பார் என்று எதிர்பார்த்த பார்வதிக்குச் சேதுபதியின் வினா வியப்பூட்டியது. ‘எவ்வளவு பெருந்தன்மையான போக்கு! எவ்வளவு உயர்ந்த புண்பு!’ - பார்வதி எண்ணிக் கொண்டாள். “பாரதி நன்றாகவே படித்து வருகிறாள். ஞாபக மறதி தான் கொஞ்சம் அதிகமாயிருக்கிறது. எந்தப் புத்தகம் கேட்டாலும் அந்தப் புத்தகத்தை மறந்து வந்துவிட்டதாகச் சொல்கிறாள். ஆகவேதான் புத்தகங்கள் இருக்கும் இடத்திலேயே பாடத்தை நடத்துவதென்று வந்துவிட்டேன்...” “எனக்கும் கூட இனி அவ்வளவு வேலை இருக்காது. என் அலுவல்களை யெல்லாம் கவனித்துக் கொள்ளப் பொறுப்பான ஒருவரை நியமித்துவிட்டேன். மாலை வேலைகளில் இனி எனக்கும் ஓய்வுதான்... தினமும் ஒரு மணி நேரமாவது நிம்மதியாகப் பொழுதைக் கழிக்கப் போகிறேன். பொருளாலும் புகழாலும் மட்டும் ஒருவன் அமைதியைக் கண்டு விடமுடியாது. ‘கம்பானியன்’ என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்களே, அது ரொம்ப ரொம்ப முக்கியம்...” பாரதி இருவருக்கும் காபி கொண்டுவந்து வைத்தாள். “சிற்சில சமயங்களில் நமக்குத் தனிமை வேண்டியிருக்கிறது. சிற்சில சமயங்களில் தனிமை அலுத்துப் போய், யாராவது வரமாட்டார்களா? என்று தோன்றி விடுகிறது.” பார்வதி பதில் ஏதும் கூறாமல் சேதுபதியையே பார்த்துக் கொண்டிருந்தாள். “சரி... நீங்கள் டியூஷனை ஆரம்பியுங்கள்... எனக்கும் கொஞ்சம் அவசர ஜோலியிருக்கிறது. அரை மணியில் திரும்பி வந்துவிடுகிறேன்” என்று கூறிப் புறப்பட்டார் சேதுபதி. அன்றிரவு பார்வதி வெகு நேரம் தூங்காமல், தூக்கமும் வராமல், அமைதியின்றிப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். சேதுதிபதி கூறிய வார்த்தைகளை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்திப் பார்த்து ‘எதற்காக இப்படிப் பேசினார். அதன் இரகசியம் என்ன?’ ‘கம்பானியன்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள்? இவைபற்றியே அவன் எண்ணம் சுழன்று கொண்டிருந்தது. என்னுடைய துணையை மனத்தில் எண்ணியே அப்படிப் பேசியிருக்கிறார். அவருடைய உள்ளத்தில் எனக்கு இடமிருக்கிறது. அவர் என்னை விரும்புகிறார். என் உறவை நாடுகிறார். அவருக்கு என்மீது நாட்டமிருக்கிறது. இல்லையென்றால் இம்மாதிரி அவர் பேசியிருக்க மாட்டார். சொற்களைத் தராசில் நிறுத்திப் போட்டு மிதமாகப் பேசக் கூடியவராயிற்றே! என் உள்ளமும் அவரையே எண்ணி எண்ணி ஏங்குகிறது. அவரை நான் சந்திக்க வேண்டும். சந்தித்து என் உள்ளத்தை அவரிடம் சொல்ல வேண்டும். ஆம்; நாளை காலையே அவரைச் சந்தித்து என் அந்தரங்கத்தை அவரிடம் கூறி விடுகிறேன். மனம் விட்டுப் பேசி விடுகிறேன். நீண்ட நாட்களாக என் மனத்தில் சுமந்து கொண்டிருக்கும் பாரத்தை இறக்கி விடுகிறேன். அப்போது தான் எனக்கு நிம்மதி பிறக்கும். நெஞ்சுக்குள் புகுந்து அனைத்துக் கொண்டிருக்கும் வேதனை நீங்கும். இந்த முடிவு அவளுக்குச் சற்று நிம்மதியைத் தந்தது. மறுநாள் விடியற்காலையிலேயே எழுந்துவிட்ட பார்வதி குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு தேவியின் படத்துக்கு முன்னால் போய் நின்று வணங்கினாள். “தாயே! எனக்கு மனச் சாந்தியைக் கொடு. அவரிடம் என் உள்ளத்தை எடுத்துச் சொல்லும் துணிவைக் கொடு” என்று வேண்டிக் கொண்டாள். பின்னர், மாடி அறைக்குப் போய்க் கண்ணாடி முன் நின்று, அலங்காரத்தில் ஈடுபட்டாள். தலையைச் சீவிப் பலவிதமான கொண்டைகள் போட்டுப் பார்த்துக் கடைசியில் எதுவுமே திருப்தியளிக்காததால் வழக்கமாகப் போடும் கொண்டையையே போட்டுக் கொண்டாள். புடவைகளை மாற்றி மாற்றி உடுத்திப் பார்த்தாள். நகைகளை அணிந்து கொண்டு பார்த்தபோது ‘சே! இவ்வளவு படாடோபம் கூடாது. அடக்கமாக, அழகாக, எளிய முறையில் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதுதான் அவருக்குப் பிடிக்கும்’ என்று தீர்மானித்தாள். கண்ணாடியில் கடைசி முறையாகப் பார்த்துக் கொண்டபோது, மூக்குக்கண்ணாடி அவள் வயதைச் சற்று அதிகமாக எடுத்துக் காட்டுவதுபோல் தோன்றியது. ‘சே! அப்படி எனக்கு என்ன வயதாகி விட்டது?’ என்று எண்ணியவள், அந்தச் சந்திப்பு எப்படி இருக்கும் என்பதைத் தனக்குள்ளாகவே கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள். வெட்கத்துடன் தலை கவிழ்ந்த வண்ணம் தான் அவர் எதிரில் நிற்பது போலவும், தான் கூறுவதைக் கேட்டு அவர் முகம் மலர்வது போலவும் அவள் மனக்கண் முன் தோன்றியது. அவள் மெய்சிலிர்த்துப் போனாள். அந்த இன்ப நினைவோடு, துணிவான தீர்மானத்தோடு சேதுபதியைச் சந்திக்கும் நோக்கத்தோடு மாடியிலிருந்து அவசரம் அவசரமாகக் கீழே இறங்கி வந்தாள் பார்வதி. அச்சமயம் நடு ஹாலில் படித்துக் கொண்டிருந்த ராஜா “அத்தை!” என்று அழைக்கவே, பார்வதி திரும்பி அவன் அருகே சென்று, “என்ன ராஜா?” என்று விசாரித்தாள். “ஒன்றும் இல்லை அத்தை! இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டான் ராஜா. “என்ன புத்தகம்?” என்று கேட்டபடியே அந்தப் புத்தகத்தைக் கையில் வாங்கிப் பார்த்த பார்வதி, “பிக்விக் பேப்பர்ஸா?” என்று லேசாகச் சிரித்துக் கொண்டாள். “ஏன் சிரிக்கிறீர்கள் அத்தை?” “பதினைந்து வருஷமாக இதைத் தானே திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் இது தானே பாடப்புத்தகம்! இதன் ஆசிரியர் சார்லஸ் டிக்கன்ஸன் ஒரு பெரிய அறிவாளி” என்றாள். “ஆமாம். மகா மேதை!” என்று கேலியாகக் கூறினான் ராஜா. “என்னடா உளறுகிறாய்?” “நான் உளறவில்லை. டிக்கன்ஸ்தான் உளறியிருக்கிறான். பெரிய அறிவாளியாம்! மேதையாம்! உலகப்புகழ் பெற்ற ஆசிரியராம்! இந்தப் புத்தகத்தில் அவன் எழுதி யிருப்பதைப் பார்த்தீர்களா; கற்பனை யென்ற பெயரில் கண்டதை யெல்லால் எழுதலாம் போலிருக்கிறது. ஐம்பது வயசுக் கிழவன் ஒருவனைக் காதலிக்கிறாளாம். ரொம்ப நன்றாயிருக்கிறதல்லவா? இதை பெரிய நகைச்சுவை என்று எழுதியிருக்கிறாராம். இல்லை, இயற்கை என்று எழுதியிருக்கிறாரா? வாழ்க்கையில் நடக்கக் கூடியதா இது? இதற்குக் காதல் என்ற புனிதமான சொல் ஒரு கேடா? சே! புத்தகமா இது? எழுத்தா இது? கிழவிக்கும் கிழவனுக்கும் காதலாம்! வெட்கக் கேடு தூ...” என்று அந்தப் புத்தகத்தைக் கோபமாக அப்பால் வீசி எறிந்தான் ராஜா. ராஜாவின் வார்த்தைகள் பார்வதியின் உள்ளத்தில் ஈட்டிகளாகப் பாய்ந்தன. ‘தன்னையே குற்றம் சாட்டிப் பேசுகிறானோ?’ என்று கூட அவள் நெஞ்சம் குறுகுறுத்தது. அவளால் அவனுக்குப் பதில் கூற முடியவில்லை. தானே அந்தக் குற்றவாளியாக மாறி அவன் எதிரில் நிற்பது போன்ற ஒரு மயக்கம்! மெளனமாகத் திரும்பிய பார்வதி மெதுவாக அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள். அவள் கால்கள் வாசல் பக்கம் செல்லவில்லை. அதற்குப் பதிலாக மாடிப்படிகளை நோக்கி நடந்தான். |