குருத்து பதினாறு

     நீண்ட நேர அலங்காரத்திற்குப் பிறகு, மிகுந்த உற்சாகத்துடன், சேதுபதியைச் சந்திக்கப் போகிறோம் என்னும் குதூகலத்துடன், அவருடைய அந்தரங்கத்தை அறியப் போகும் ஆர்வத்துடன், இரண்டில் ஒன்று தெரிந்து கொண்டு விடுவதென்னும் திடமான தீர்மானத்துடன் அவருடைய வீட்டுக்குப் புறப்பட்ட பார்வதியை, ராஜாவின் பேரிடி போன்ற சொற்கள் நிலைகுலையச் செய்துவிட்டன. ஒரு கணம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

     சேதுபதியிடம் எனக்குள்ள அக்கறையைப் புரிந்து கொண்டே ராஜா இப்படிப் பேசியிருக்கிறான். கடந்த சில நாட்களாக என்னுடைய போக்கில் ஏதோ ஒரு மாறுதல் இருப்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அதனாலேயே இன்று நான் வெளியே போகும் நேரத்தில் என்னைத் தடுத்து நிறுத்தி, ‘பிக்விக் பேபர்ஸ்’ பற்றிப் பிரஸ்தாபித்து, மறைமுகமாக என்னைத் தாக்கியிருக்கிறான் என்று ஊகித்த பார்வதி, அடுத்த கணமே சேதுபதியைச் சந்திக்கும் எண்ணத்தைக் கைவிட்டவளாய் மாடிப்படிகளை நோக்கி நடக்கலானாள்.

     அவள் உள்ளம் குழம்பியது. உடல் பதறியது. கால்கள் தடுமாறின. கண்கள் கலங்கிச் சிவந்தன. தட்டுத் தடுமாறியபடியே மாடியை அடைந்து தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அங்கே கண்ணாடியில் தன் உருவத்தைக் கண்டபோது, தன் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. தன்னுடைய நிலைக்குத் தானே இரங்கினாள் பார்வதி.

     ஆம்; பார்வதிக்காக, அவள் பரிதாப நிலைக்காக இந்த உலகத்தில் வேறு யாருமே இல்லை.

     உடல் சோர்ந்து, உள்ளம் கசந்து, உறுதி தளர்ந்து, திட்டங்கள் தகர்ந்து, தட்டுத் தடுமாறி நிலை குலைந்து போன பார்வதி, நிற்கும் சக்தியற்றவளாகிப் படுக்கையில் சாய்ந்து விட்டாள்.

     இனி அவள் சேதுபதியைச் சந்திக்க விரும்பவில்லை. சில நிமிடங்களுக்கு முன் வரை இருந்த அந்த ஆசையை இப்போது தன் உள்ளத்திலிருந்தே கிள்ளி வீசி எறிந்து விட்டாள்.

     ‘அவர் பதில் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. என்னை நேசிப்பதாகச் சொன்னால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன். அவர் இதயத்தில் எனக்கு இடமே இல்லை என்று கூறினாலும் அந்த அதிர்ச்சியையும் திடமாக ஏற்றுக் கொள்வேன். ஆனால் இரண்டில் ஒன்று முடிவாகத் தெரிந்து விட வேண்டும். மனத்திற்குள்ளாகவே மறைத்து வைத்துக் கொண்டு என்னால் இனி வேதனைப்பட முடியாது. இன்று முடிவு தெரிந்துவிட வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி ஏற்படும்’ என்ற தீர்மானத்துடன் புறப்பட்ட பார்வதிக்கு இந்த இரண்டும் கெட்ட நிலை மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது.

     படுக்கையில் சாய்ந்தபடியே யோசிக்கலானாள். ராஜாவின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் பயங்கரமாக ஒலித்தன.

     ‘கிழவனுக்கும் கிழவிக்கும் காதலாம்!’

     யாரோ ஓர் ஆசாரியர், ஏதோ ஒரு புத்தகத்தில் எப்போதோ எங்கேயோ, தமாஷுக்காக எழுதிய ஒரு சின்ன விஷயத்தையே ராஜாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை யென்றால், தன் சொந்த அத்தை, தாய்போல் இருந்து, தன்னைப் பாசத்துடன் போற்றி வளர்த்த அத்தை, இத்தகைய எண்ணம் கொண்டிருக்கிறாள் என்பதை அறிய நேரிடும்போது எத்தகைய சீற்றம் கொள்வான்? ஐயோ, அதை எண்ணிப் பார்க்கவே பயமாக இருந்தது பார்வதிக்கு. இதுகாறும் தன் மனத்துக்குள் இம்மாதிரி ஓர் எண்ணம் வைத்திருந்ததாகவே ராஜா அறியக் கூடாது. இப்போதே மறந்துவிடுகிறேன். மறந்துவிட்டு எப்போதும்போல் குமாரி பார்வதியாகவே, பிரின்ஸிபால் பார்வதியாகவே வாழ்ந்து விடுகிறேன், உள்ளத்தில் புகுந்து என்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட எண்ணத்தை அவ்வளவு எளிதாகக் களைந்து விடக் கூடியதாயிருந்தால் அது உண்மையான பற்றுதலாயிருக்க முடியுமா?

     ‘ஆமாம், நீ ஏன் ராஜாவுக்காக உன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.’ பார்வதியின் உள் மனம் அவளைக் கேட்டது.

     ‘ராஜாவை நீ உன் சொந்த மகனைப்போல் பாசம் வைத்து வளர்த்தாய். இப்போது அவன் பெரியவனாக வளர்ந்து, உலகம் தெரிந்தவனாக, நல்லது கெட்டது புரிந்தவனாக ஆகியிருக்கிறான். இத்தனை வயது கடந்த பிறகு, நீ ஒருவரின் நட்பை விரும்புகிறாய், உறவை நாடுகிறாய் என்று அவன் அறிய நேரிட்டால், அவன் அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டான், உன் உறவையே முறித்துக்கொண்டு உன்னை அநாதையாக்கிவிட்டு உன் முகத்திலேயே விழிக்க விருப்பமின்றி, உன்னைப் பிரிந்து போய்விடுவான்’ என்றது இன்னொரு குரல்.

     ‘போகட்டுமே; எனக்கென்று ஒரு வாழ்வு கிடையாதா?’

     ‘உண்டு; ஆனால் அதைக் காலம் கடந்து விரும்புகிறாய்! இப்போது ராஜாவைப் புறக்கணித்துவிட்டுச் சேதுபதியை நீ மணந்துகொண்டால் உலகம் உன்னைச் சுயநலக்காரி என்று தூற்றும்.’

     கடைசியில் பார்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். சேதுபதியை அன்றோடு, அந்தக் கணத்தோடு மறந்துவிடுவது என்பதே அந்த முடிவு.

     அப்போது கடிகாரத்தில் மணி ஒன்பது அடிக்கும் ஓசை அவள் காதில் விழுந்தது.

     ‘இன்னும் அரை மணி நேரத்திற்குள் காலேஜுக்குப் புறப்பட வேண்டும்’ என்ற கடமை உணர்ச்சியால் உந்தப்பட்டவள், மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள்.

     அத்தையின் வரவுக்காகத் தினமும் காத்திருக்கும் ராஜாவை இன்று காணவில்லை. அவன் சீக்கிரமே சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுவிட்டான் என்பதைச் சற்று முன்பு கேட்ட ஸ்கூட்டரின் ஒலியிலிருந்தே பார்வதி புரிந்துகொண்டாள். அவனை நிமிர்ந்து நோக்கவும், அவனுடன் பேசவும் கூடக் கூசிக்கொண்டிருந்த பார்வதிக்கு, அவன் அங்கே இல்லாதது ஆறுதலாகவே இருந்தது.

     பார்வதி அதிகம் பேசவில்லை. சாப்பாட்டை முடித்துக் கொண்டு குறித்த நேரத்திலேயே கல்லூரிக்குப் புறப்பட்டு விட்டாள். வழக்கம்போல் செவிட்டுப் பெருமாள் முக்காலியை விட்டு எழுந்து நின்று வணக்கம் செலுத்தினான். கல்லூரிக் காம்பௌண்டுச் சுவர் நெருங்கும்போது காலை விந்தி விந்தி நடந்து வந்துகொண்டிருந்த மிஸஸ் அகாதா ‘ஹலோ குட்மார்னிங்’ என்றாள். அப்போது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்.

     பார்வதி காரைத் தன் அறைக்கு நேராகக் கொண்டு போய் நிறுத்துவதற்குள், அட்டெண்டர் ரங்கசாமி ஓடி வந்து காரின் கதவைத் திறந்தான். இதற்குள் பிரின்ஸிபால் வந்துவிட்டார் என்ற சேதி கல்லூரியெங்கும் பரவிவிடவே, பேச்சுக் குரல் அடங்கி அமைதி நிலவிற்று.

     பார்வதி அமைதியாகத் தன் அறைக்குள் போய் அமர்ந்து கொண்டாள். அவள் கையெழுத்துக்காக மேஜை மீது ஏதேதோ கடிதங்கள் காத்திருந்தன. அவற்றைப் படித்துக் கையெழுத்துப் போட வேண்டும். பகல் ஒரு மணிக்கு வெளி நாட்டிலிருந்து யாரோ கல்வித் துறை நிபுணர்கள் வருகிறார்கள். அவர்களை வரவேற்று உபசரித்துக் கல்லூரியைச் சுற்றிக் காண்பிக்க வேண்டும். உதவிப் பிரின்ஸிபாலுக்கு உடம்பு சரியில்லை. அவளுக்குப் பதிலாக வகுப்புக்குச் சென்று பாடங்கள் நடத்த வேண்டும். மாலை நாலு மணிக்கு அவர்களை வழியனுப்ப விமான நிலையத்துக்கு வேறு சென்றாக வேண்டும். பார்வதிக்கு லேசாகத் தலையை வலித்துக்கொண்டிருந்தது. அதைப் பொறுத்துக் கொண்டவளாய், தன் கடமைகளை முடிந்த வரையில் செய்து முடித்தாள் பார்வதி.

     மணி மூன்று. அவளால் உட்கார்ந்திருக்கவும் முடியாத நிலை. பாரதியை அழைத்து வரச் சொன்னாள்.

     அவள் வந்ததும் “பாரதி! இன்று எனக்கு உடம்பு சரியில்லை. ஆகையால் டியூஷனை நாளைக்கு வைத்துக் கொள்ள வேண்டியதுதான். நான் இப்போது வீட்டுக்குச் செல்கிறேன்” என்று கூறிப் புறப்பட்டாள்.

     பார்வதி, சாரதாமணிக் கல்லூரியின் தலைமைப் பதவியை ஏற்று எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை அவள் தலைவலி என்று சொல்லிக் கல்லூரிக்கு வராத நாளே கிடையாது.

     பார்வதி முக்கிய அலுவல்களை யெல்லாம் ரத்து செய்து விட்டு, கடமைகளை யெல்லாம் மறந்துவிட்டு, கல்லூரியிலிருந்து இரண்டு மணி முன்பாகவே புறப்பட்டுச் சென்றது அன்றுதான் முதல் தடவை.

     மாடியில் போய்ப் படுத்தவள் தான். மாலை ஆறு மணி வரை எழுந்திருக்கவில்லை. கடுமையாகக் காற்று வீசிக் கொண்டிருக்கவே, அவள் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந் தாள். ஏதேதோ எண்ணங்கள் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தன.

     சேதுபதி தன்னைக் காண வந்திருப்பது போல் ஒரு பிரமை. அவரை நினைக்கவே அவளுக்குப் பயமாக இருந்தது. ‘அவரை இனி நான் சந்திக்கவே மாட்டேன். சந்திப்பதால் என் உள்ளத்தில் வளரக்கூடிய எண்ணத்துக்கு இனி இடம் தரமாட்டேன்’ என்று எண்ணுகிறாள்.

     “அத்தை! அத்தை!” என்று அவசர அவசரமாகக் கூப்பிட்டுக்கொண்டு மாடிப்படிகளில் ஏறிவரும் ராஜாவின் பூட்ஸ் ஒலி பார்வதிக்குக் கேட்டது. அவள் மெதுவாகத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். ராஜாவின் முகத்தைப் பார்க்கும் துணிவு அவளுக்கு இல்லை. ராஜாவின் கைகள் தன் நெற்றியைத் தொடுவதை உணர்ந்த பார்வதி, அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

     “என்ன அத்தை! நல்ல ஜூரம் அடிக்கிறதே! உங்களுக்கு என்ன உடம்புக்கு!...” பதறிப்போன ராஜா, கீழே ஓடிச்சென்று தர்மாமீட்டரைக் கொண்டுவந்து பரிசோதித்தான்.

     “101 டிகிரி” என்று அறிந்தபோது, ராஜாவின் கண்கள் கலங்கின.

     “ஒன்றுமில்லை ராஜா! இன்றிரவு பட்டினி போட்டால் நாளைக்குச் சரியாகிவிடும்” என்று பார்வதி ஈன சுரத்தில் கூறினாள்.

     “நீ சாப்பிடவில்லை யென்றால், நானும் சாப்பிடப் போவதில்லை. நான் போய் டாக்டரை அழைத்து வருகிறேன்” என்று கூறிப் புறப்பட்ட ராஜா, சற்று நேரத்துக் கெல்லாம் டாக்டருடன் திரும்பி வந்தான்.

     பார்வதியைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் பாலம்மாள் சிரித்துக்கொண்டே, “நான் டாக்டர் தொழிலை மேற்கொண்டு ஆறு வருடங்கள் ஆகின்றன. இதுவரை உங்களுக்குத் தலைவலி என்று கூடக் கேள்விப்பட்டதில்லை. உங்களுக்குச் சிகிச்சை செய்ய இப்போதாவது எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே!''” என்றாள்.

     “அப்படியானால் எனக்கு ஜூரம் வந்தது பற்றித் தாங்கள் ரொம்ப சந்தோஷப் படுகிறீர்கள், இல்லையா?” என்று கேட்டாள் பார்வதி; பாலம்மாள் சிரித்தாள்.

     “பயப்படக்கூடிய அளவுக்கு ஒன்றும் இல்லை. சாதாரண ஜுரம்தான். நான் மருந்து கொடுத்துவிட்டுப் போகிறேன். சாப்பிடுங்கள். நாளைக்கு ஜூரமே இருக்காது. ஆனால் ஓய்வு ரொம்ப முக்கியம்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள் டாக்டர்.

     “சாப்பிடலாமா?” என்று கேட்டான் ராஜா.

     “ஓ” என்றாள் டாக்டர்.

     “பார்த்தீர்களா அத்தை! டாக்டரே சாப்பிடச் சொல்லி விட்டார்” என்றான் ராஜா.

     டாக்டர் புன்சிரிப்புடன் திரும்பி, “சாப்பிடலாம் என்று நான் கூறியது உன்னைத்தான். உன் அத்தையை அல்ல” என்றாள்.

     “பார்த்தாயா ராஜா! போய்ச் சாப்பிடு” என்றாள் அத்தை.

     அன்றிரவெல்லாம் பார்வதிக்குத் தூக்கமே இல்லை. பழைய சம்பவங்களெல்லாம் துண்டு துண்டாகப் பார்வதியின் நினைவில் தோன்றின. பலவீனம் காரணமாகக் கண்ணெதிரில் மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.

     “என்னுடைய கணவரின் அன்புக்குப் பத்திரமாகப் பார்க்கிறாயா, அம்மா” - சரஸ்வதியின் குரல்.

     காகிதக் குப்பைகளுக்கிடையே பளிச்சிடும் திருமண அழைப்பிதழ், விமானக் கூடத்தில் அவருடைய மூக்குக் கண்ணாடியைக் கொண்டு கொடுத்தபோது அவர் பார்த்த பார்வை - கூறிய வார்த்தை...

     ‘பெண்கள் ஔவையைப் போல் கல்வி அறிவு பெற வேண்டும். ஆனால் ஓளவையைப் போல் திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று கூறிவிடக் கூடாது’ என்று தான் கூறியபோது அவர் சிரித்த சிரிப்பு... ஒருமுறை வியர்த்துக் கொட்டியது. விடியும் நேரத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் பார்வதி. ராஜா வந்து அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். ஜுரம் இப்போது துளிக்கூட இல்லை என்று தெரிந்ததும், அவன் அவளை எழுப்பாமலே போய் விட்டான். பார்வதி கண்விழித்துப் பார்த்தபோது தன் அறைக்குள் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

     கடிகாரத்தில் மணி பத்து அடித்துக் கொண்டிருந்தது.

     “ஓ! மணி பத்தாகி விட்டதா” படுக்கையை விட்டு எழுந்த பார்வதி, அவசர அவசரமாகக் கீழே இறங்கி வந்துவிட்டாள். ஞானம் பதறிப்போய், “நீங்கள் இன்று காலேஜுக்குப் போகக்கூடாது. டாக்டர் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்” என்றாள்.

     “கல்லூரிக்குப் போனால் எனக்கு எல்லாம் சரியாகி விடும். ஜூரம் நேற்றோடு போய்விட்டது. மணி பத்தடித்து விட்டது. நான் போய் வருகிறேன்” என்று ஞானத்திடம் சொல்லிக் கொண்டவள், சாப்பிடாமலேயே புறப்பட்டு விட்டாள்.

     அன்று பார்வதியின் கார் கேட்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. அவன் வழக்கமாக எழுந்து நின்று கும்பிடு போடும் நேரத்தில் போட்டுவிட்டான். இன்றைக்குப் பார்வதி லேட்!

     பார்வதியின் கார் கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கிய போது, அங்கே மிஸஸ் அகாதாவைக் காணவில்லை. அகாதா அன்று கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கிய போது, ‘குட் மார்னிங் பிரின்ஸிபால்’ என்று கூறிக்கொண்டே பார்வதியின் கார் வருகிறதா என்று திரும்பிப் பார்த்தாள். காரைக் காணவில்லை. கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்து அடிக்க ஐந்து நிமிஷம்! ஏமாற்றத்துடன் சென்று விட்டாள் அகாதா.

     வழக்கம்போல் அட்டெண்டர் ரங்கசாமி பத்தடிக்க ஐந்து நிமிஷத்துக்குக் கார்க் கதவைத் திறக்க ஓடிவருகிறான்; காரைக் காணவில்லை. முகத்தில் கேள்விக் குறியுடன் திரும்பிச் செல்கிறான்.

     சரியாகப் பத்தேகால் மணிக்குப் பார்வதியின் கார் கல்லூரிக் காம்பவுண்டுச் சுவரை நெருங்கியபோது எதிரிலிருந்த காலேஜ் புத்தகக் கடைக்கார அம்பாள் கடிகாரத்தைப் பார்க்கிறாள். அது சரியாக ஓடுகிறதா என்ற சந்தேகம் வந்து விடுகிறது அவளுக்கு. பார்வதியின் காரைக் கண்டதும் அவள் கடிகாரத்தின் முள்ளைத் திருப்பிப் பத்தடிக்க ஐந்து நிமிஷத்துக்கு மாற்றி விடுகிறாள். பார்வதியின் கார் வந்தால், மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம் என்பது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை.

     பார்வதி இன்று லேட்டாக வந்தபோது அந்தக் கண்களுக்குப் பார்வதியின் மேல் நம்பிக்கை குறையவில்லை. கடிகாரத்தில் பழுது இருப்பதாகவே தோன்றியது.

     பார்வதி தன் அறைக்குள் சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த டெலிபோன் மணி அடித்துக்கொண்டிருந்தது.

     பார்வதி ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டாள். சேதுபதியின் குரல் என்ன சேதுபதியா! அவளுக்கு வியர்த்துப் போயிற்று.

     “ஓ, நீங்களா? என்ன வேண்டும்?” பற்றுதல் எதுவுமின்றி உணர்ச்சியற்ற குரலில் பேசினாள் பார்வதி.

     “பாரதி சொன்னாள், தங்களுக்கு உடம்பு சரியில்லை யென்று... இப்போது எப்படி இருக்கிறது?”

     “இப்போது ஒன்றுமில்லை... தாங்க்ஸ்...” சட்டென ரிஸீவரை வைத்துவிட்டாள் பார்வதி.

     அவள் இதயம் படபடத்தது. ‘இவர் எதற்காக என்னைப்பற்றி விசாரிக்க வேண்டும்? இவரை நான் மறக்க முயன்றாலும் முடியவில்லையே? ஒருவேளை இவர் என்னை நேசிக்கிறாரோ? அவர் உள்ளத்தில் எனக்கு இடமளித்திருக்கிறாரோ? அவரை நான் மறந்துவிடப் போகிறேன்; அதைப் போல் அவரும் என்னை மறந்துவிட வேண்டும். அப்போது தான் நான் நிம்மதியுடன் வாழமுடியும்.’ திடமான, தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தாள் பார்வதி.

     மணி மூன்று இருக்கும். பி.எஸ்ஸி. வகுப்புக்கு ஜாக்ரபி போதிக்கும் கடமை அவளை அழைத்தது.

     பார்வதி, தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் தன் கடமையைச் செய்யப் புறப்பட்டாள். மெதுவாக நடந்து வகுப்புக்குள் நுழைந்தபோது, அவளுக்குத் தலை சுற்றியது. அதையும் பொறுத்துக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்து மேடைமீது ஏறினாள். கால்கள் தடுமாறின. மயக்கமுற்றுக் கீழே சாய்ந்துவிட்டாள்.