உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
குருத்து பதினேழு பார்வதி கண் விழித்துப் பார்த்தபோது தன் வீட்டு மாடி அறையில் உள்ள கட்டிலில் தான் படுத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். கல்லூரியில் மயக்கமுற்றுக் கீழே விழுந்துவிட்ட பின்னர் நடந்தது எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லை. ராஜா, பாரதி, ஞானம், கல்லூரி மாணவிகள் சிலர், மிஸஸ் அகாதா, இன்னும் சில புரொபஸர்கள் அத்தனைப் பேரும் அந்த அறைக்குள் கவலை தோய்ந்த முகத்துடன் பார்வதியையே பார்த்த வண்ணம் நின்றுகொண்டிருந்தனர். அப்போது இரவு பதினோரு மணி இருக்கலாம். பார்வதி, அவர்கள் எல்லோரையும் ஒரு முறை கண்ணோட்டமிட்டு “நீங்களெல்லோரும் எத்தனை நேரமாக இங்கே காத்திருக்கிறீர்கள்? பாவம்! சாப்பிட்டீர்களா, இல்லையா? ராஜா! இவர்களை யெல்லாம் கீழே அழைத்துக்கொண்டு சென்று சாப்பிடச் சொல்லு...” என்று ஈனஸ்வரத்தில் பேச முடியாமல் பேசினாள். “முதலில் நீங்கள் சாப்பிடுங்க” என்று கூறி, பக்கத்திலிருந்த ஹார்லிக்ஸை எடுத்துத் தன் கையாலேயே கலந்து கொடுத்தாள் மிளஸ் அகாதா. அந்த பிரெஞ்சு ஆசிரியையின் அன்பு, பார்வதியின் கண்களைப் பனிக்கச் செய்து விட்டது. “பாவம்! நீங்கள் கூடவா மாடிப்படி ஏறி என்னைப் பார்க்க வந்திருக்கீங்க! கல்லூரியில் கூட மாடியில் நடக்கும் வகுப்பாயிருந்தால் பாடம் நடத்தப் போக முடியாதென்று கூறுவீர்களே!” என்றாள் பார்வதி. “நான் என்ன! கல்லூரி முழுதுமே இங்கேதான் இருக்குது...” என்றாள் அகாதா. திருவாளர் சேதுபதியும், பாலம்மாளும் அப்போது அறைக்குள் பிரவேசிக்கவே, சுற்றியிருந்தவர்கள் சற்று விலகி மரியாதையுடன் நின்றார்கள். சேதுபதியைக் கண்டதும் பார்வதியின் இதயம் படபடத்தது. ‘ஐயோ இவர் எதற்காக இங்கே வந்தார்? இவரை நான் மறக்க முயன்றாலும் இவர் என்னை மறக்கவிட மாட்டாரோ? இவரை இனிக் கண்ணால் காணக்கூடாது; மனத்தாலும் நினைக்கக் கூடாது என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது இவரே என் எதிரில் வந்து நிற்கிறாரே!’ டாக்டர் பாலம்மாள், பார்வதியின் கை நாடிகளைச் சற்று நேரம் உணர்ந்து பார்த்துவிட்டுப் பின்னர் காது குழலை வைத்துப் பரிசோதித்தாள். “கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம். நான் நேற்றுச் சொல்லிவிட்டுப் போனேன். கல்லூரிக்குப் போகக் கூடாது என்று” என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள் டாக்டர். டாக்டருடனேயே கீழே இறங்கிச் சென்ற ராஜா “அத்தைக்கு என்ன ஆகாரம் கொடுக்கலாம் டாக்டர்?” என்று விசாரித்தான். “மில்க்கும், ப்ரூட் ஜூஸம் நிறையச் சாப்பிடனும்...” என்றாள் டாக்டர். “என்ன ப்ரூட்ஸ் கொடுக்கலாம் டாக்டர்? மாதுளம் பழம் கொடுக்கலாமா? அத்தைக்கு மாதுளம்பழம் ரொம்பப் பிடிக்கும்...” “பிடிச்சால் ஜூஸாகவே பிழிந்து கொடேன்... ரெஸ்ட் ரொம்ப முக்கியம்” என்று கூறிக்கொண்டே காரில் போய் ஏறிக்கொண்டாள் டாக்டர். அறைக்கு வெளியே வராந்தாவிலேயே நின்று கொண்டிருந்த சேதுபதி, ராஜா வந்ததும், “டாக்டர் என்ன சொல்கிறார் ராஜா!” என்று விசாரித்தார். “அத்தைக்கு ரெஸ்ட்தான் ரொம்ப முக்கியம் என்கிறார்.” “டாக்டர் அப்படிச் சொல்லி யிருக்கும்போது அத்தையை நீ நேற்றுக் கல்லூரிக்குப் போக விட்டிருக்கக் கூடாது!” சேதுபதியின் குரலில் குற்றச்சாட்டு தொனித்தது. “நான் காலை ஒன்பது மணிக்கே காலேஜுக்குப் போய் விட்டேன். அத்தை யார் பேச்சையும் கேட்க மாட்டாள். வழக்கம்போல் அவள் காலேஜுக்குப் போய் மூணு மணி வரை ஓய்வின்றி உழைத்திருக்கிறாள். மாலையில் ஜாக்ரபி வகுப்பு நடத்தச் சென்றபோது தான் மயக்கமாகக் கீழே விழுந்திருக்கிறாள். நல்ல வேளையாக அங்கிருந்த மாணவிகள் ஓடிச்சென்று தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். செய்தி தெரிந்தது தான் தாமதம், அத்தனைப் பேரும் ஓடிச்சென்று அத்தையைக் காரிலே ஏற்றி இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்... பாரதி போன் செய்த பிறகுதான் எனக்கே விஷயம் தெரிந்து ஓடி வந்தேன்” என்றான் ராஜா. வராந்தாவில் நின்ற வண்ணம் சேதுபதியும் ராஜாவும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்வதி சற்றுக் கவனமாகவே கேட்டுக் கொண்டாள். அந்தப் பேச்சில், சேதுபதி அவள் மீது கொண்டிருந்த அன்பு வெளிப்பட்டது. ‘எவ்வளவு உரிமையோடு ராஜாவைக் கோபித்துக் கொள்கிறார்? அந்தக் கோபத்தில் எவ்வளவு பரிவும் பாசமும் புதைந்து கிடக்கின்றன? என்மீது இவருக்கேன் இத்தனை அக்கறை? தம்முடைய பொன்னான நேரத்தை யெல்லாம் வீணாக்கிக்கொண்டு இங்கே எத்தனை நேரமாகக் காத்திருக்கிறாரோ?’ “பாரதி! உன் அப்பாவை உட்காரச் சொல்லம்மா” என்று கூற வாயெடுத்தவள், சட்டென மெளனியாகி விட்டாள். காரணம், அவரைக் காணவே அவள் கண்கள் கூசின. அவரை உட்காரச் சொல்லவோ, அவரிடம் பேசவோ, அன்பு பாராட்டவோ மறுத்தது உள்ளம். உள்ளத்தை உறுதியாக்கிக்கொண்டு அவர் வந்திருப்பதையே மறந்தவளாய், மறக்க முயன்றவளாய், மறக்க முடியாதவளாய் - ஒரு பெரும் சோதனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. அறைக்கு வெளியிலேயே நின்றுகொண்டிருந்த சேதுபதி, பார்வதியைப் பார்க்கவே விரும்பவில்லை. காரணம் தன்னைக் கண்டதும் அவளால் படுத்திருக்க இயலாது. எழுந்து உட்கார்ந்து விடுவாள். அந்தச் சிரமத்தை அவளுக்குக் கொடுக்கக்கூடாது என்று அவர் எண்ணியது தான். ஒவ்வொருவராக வந்து பார்வதியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர். கடைசியில் மிஸஸ் அகாதா விடைபெற்றுக்கொள்ள வந்தபோது பார்வதியின் கண்கள் கலங்கி விட்டன. காலை விந்தி விந்தி நடக்கும் அகாதாவிடம் பார்வதிக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு. வானமே இடிந்தாலும் பூமியே பிளந்தாலும் அகாதா கல்லூரிக்கு வரத் தவறியதில்லை. “ராஜா! இந்த பிரெஞ்சு லேடியைக் காரிலே கொண்டு போய் விட்டுவிட்டு வா'' என்று பார்வதி கூறியபோது, “இவர்களை நானே கொண்டு போய் விட்டுவிடுகிறேன். ராஜாவை எங்கும் அனுப்ப வேண்டாம். ராஜா நீ இங்கேயே இருந்து அத்தையைக் கவனித்துக்கொள். ஏதாவது முக்கியமாயிருந்தால் எனக்கு உடனே டெலிபோன் செய்” என்றார் சேதுபதி, வராந்தாவில் நின்றபடியே. “தோங்க் யூ” என்று கூறிப் புறப்பட்டாள் அகாதா. “அப்பா! நான் இங்கேயே இருக்கட்டுமா?” என்று கேட்டாள் பாரதி. “வேண்டாம்; நீ என்னோடு வந்துவிடு. நாம் வீட்டுக்குப் போனதும் உன் அத்தையை இங்கே அனுப்பி வைக்கலாம். நம்மைக் காட்டிலும் அவள் இங்கே இருந்தால் உன்னுடைய பிரின்ஸிபாலுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொண்டிருப்பாள்” என்றார் சேதுபதி. சேதுபதியின் அன்பு மொழி ஒவ்வொன்றும் பார்வதியின் நெஞ்சத்தைச் சஞ்சலத்திலாழ்த்தின. நேற்று முன் தினமாயிருந்தால் அந்த மொழிகள் அவளுக்கு இனித்திருக்கும். இப்போது அவற்றை அவள் கசப்பு மாத்திரைகளாக்கி விழுங்கிக் கொண்டிருந்தாள். ‘இவர் எதற்காக என்மீது அன்பு பாராட்ட வேண்டும்? அளவுக்கு மீறிய அன்பைப் பொழிந்து என்னைச் சித்திர வதைக்குள்ளாக்க வேண்டும்? நான் மயக்கமுற்று விழுந்ததற்கு இவரல்லவா காரணம்? இவரிடம் நான் கொண்டிருந்த அன்பல்லவா காரணம்! இதுகாறும் இவரையே நினைத்து நினைத்து, இவருடைய அன்புக்காகவே ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன். என்னுடைய எண்ணத்தை இப்போது மாற்றிக்கொண்டு விட்டேன். இவரை மறந்து வாழ முடிவு செய்துவிட்டேன். இப்போது நான் வேண்டுவதெல்லாம் இவர் என்னிடம் அன்பு பாராட்டாமல் இருக்க வேண்டும் என்பதுதான். தேவி! இந்தச் சோதனையிலிருந்து நீயே என்னைக் காக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டாள். வாசலில் சேதுபதியின் கார் புறப்படும் ஓசை கேட்ட போது பார்வதி அந்த ஓசையை உற்றுக் கவனித்தாள். தன் கண்களில் பெருகி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட பார்வதி, “என்னால் அவரை மறக்க முடிய வில்லை...” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டாள். மறுநாள் காலை. மணி எட்டுகூட அடித்திருக்காது. பாரதியையும், தங்கை காமாட்சியையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் சேதுபதி. காரிலிருந்து இறங்கியவர் நேராக மாடிக்குச் சென்று பார்வதி படுத்திருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தார். பார்வதி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். மெதுவாக அந்த அறைக்குள் சென்ற சேதுபதி, தன் கையோடு கொண்டு வந்திருந்த பழங்களை எடுத்துப் பக்கத்திலிருந்த மேஜை மீது வைத்தார். அவ்வளவும் மாதுளம் கனிகள்! ‘அத்தைக்கு மாதுளம் பழம் என்றால் ரொம்பவும் பிடிக்கும்’ என்று முதல் நாள் இரவு ராஜா டாக்டரிடம் கூறியதும், ‘பழத்தை ஜூஸாகப் பிழிந்து கொடேன்’ என்று டாக்டர் பதில் கூறியதும் சேதுபதியின் காதில் விழுந்திருக்க வேண்டும். அவர் சந்தடியின்றிப் பழங்களை வைத்துவிட்டுப் புறப்பட்டபோது பார்வதி சட்டென்று கண் விழித்துக் கொண்டு “நீங்களா? இப்போது எதற்கு வந்தீர்கள்? மாதுளம் பழங்களெல்லாம் ஏது?...” என்று கேட்டாள். “என் தங்கையை அழைத்து வந்தேன். அவள் தங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வாள். எனக்குக் கொஞ்சம் அவசர வேலை யிருக்கிறது! நான் மறுபடியும் மாலையில் வந்து பார்க்கிறேன். நீங்கள் அதிகம் பேசக்கூடாது. மனசுக்கு அமைதியும் உடலுக்கு ஓய்வும் மிக முக்கியமாம். டாக்டர் கூறியிருக்கிறார்.” மேலே எதுவுமே சொல்லாமல் புறப்பட்டு விட்டார் சேதுபதி. ‘இவர் யாரோ? நான் யாரோ? இவர் எதற்காக எனக்கு இத்தனை உபசாரம் செய்ய வேண்டும்? நான் இவரை மறக்க நினைக்கும்போது இவர் ஏன் என் மீது அளவற்ற அன்பைப் பொழிகிறார்? எனக்கு மாதுளம் பழத்தின் மீது ஆசை என்பது இவருக்கு எப்படித் தெரிந்தது! ராஜா கூறியிருப்பானோ?’ “ராஜா!” என்று அழைத்தாள். “கூப்பிட்டீர்களா அத்தை?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் ராஜா. “ஆமாம்; மாதுளம்பழம் இங்கே எப்படி வந்தது?” “தெரியாதே! ஒருவேளை சேதுபதி கொண்டு வந்திருப்பார்” “அவருக்கு யார் சொன்னது? டாக்டர் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒருவேளை அது அவர் காதில் விழுந்திருக்கலாம்...” “ஓ!...” “ஏன் அத்தை சாப்பிடறீங்களா, ஜூஸ் பிழிஞ்சுக் கொடுக்கிறேன்...” ஆர்வத்துடன் கேட்டான் ராஜா... “வேண்டாம்...” அலட்சியத்துடன் சாரமற்ற குரலில் பதில் கூறினாள் பார்வதி. அதில் வெறுப்பும் இழையோடி இருந்தது. சேதுபதியின் அன்பு அவள் இதயத்தை நெகிழ வைத்தது. ஆனால் அதை அவள் பாராட்டவில்லை. அவர் காட்டும் அன்பை ஏற்றுக் கொள்ளவும் தயாராயில்லை. அந்த அன்பை அவள் பொருட்படுத்தவும் இல்லை. அலட்சியம் செய்யவும் இல்லை. அவர் தன்னிடம் அன்பு கொண்டிருப்பதை அவள் உணர்ந்ததாகவே காட்டிக் கொள்ளாமல், அவர் வருகிறபோதும், பேசுகிறபோதும், உணர்ச்சியற்து மரக்கட்டையாக இருந்து சர்வ சாதாரணமாகப் பதில் கூறிக்கொண்டிருந்தாள். இப்போது? அவர் ஆசையோடு கொண்டுவந்து வைத்து விட்டுப் போயிருக்கிற மாதுளம் பழங்களைச் சாப்பிடுவதா, வேண்டாமா? ‘கூடாது; இதைச் சாப்பிட்டால் அவர் என்மீது கொண்டுள்ள அன்பை நான் ஏற்றுக் கொள்வதாகும். இந்தப் பழங்களை நான் கையினாலும் தொடமாட்டேன். இன்று மாலை அவர் இங்கே வருவார். வந்ததும் வராததும் மாதுளம் பழங்களை நான் சாப்பிட்டு விட்டேனா என்று கவனிப்பார். பழங்கள் அப்படியே கிடப்பதைக் கண்டதும் என் மீது அவருக்குக் கோபம் கோபமாக வரும். என்னிடம் வெறுப்புத் தோன்றும். பிறகு அவர் என்னிடம் வைத்துள்ள பாசத்தை, நேசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட எண்ணுவார். அதைத்தான் நானும் எதிர் பார்க்கிறேன்.' அவள் அந்தப் பழங்களைத் தொடவே இல்லை. மாலை ஐந்து மணி. சேதுபதியின் கார் வரும் ஓசை கேட்டுப் பார்வதியின் இதயம் அடித்துக் கொண்டது. “தாங்கள் வைத்து விட்டுச் சென்ற மாதுளங்கனிகள் அமுதமாக இனித்தன” என்று பார்வதி கூறுவாள். அந்தப் பதிலைக் கேட்டதும் என் முகத்தில் எந்தவித மாறுதலும் தோன்றக் கூடாது. இவ்வாறு எண்ணியபடியே படிகளைக் கடந்து பார்வதியின் அறையை அடைந்தார் சேதுபதி. பார்வதி அவரை ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பார்வையில் எந்த உணர்ச்சியுமே இல்லை. “நன்றாகத் தூங்கினீர்களா?” சேதுபதி ஆவலுடன் கேட்டார். “தூங்கினேன்...” பார்வதியின் பதிலில் அத்தனை உற்சாகமில்லை. சேதுபதியின் பார்வை பழங்கள் மீது பதிந்தது, காலையில் வைத்து விட்டுப்போன அத்தனைப் பழங்களும் அப்படியே அநாதைபோல் கிடந்தன. அந்தக் காட்சி அவருக்கு வேதனையை அளித்தது. வேதனைகளெல்லாம் ஓர் உருண்டையாக மாறி நெஞ்சுக்குள் அடைத்துக் கொண்டது போல் ஓர் உணர்ச்சி. அதை விழுங்கி ஜீரணித்துக் கொள்ள முயன்றார். முடியவில்லை. ஒரு நிமிஷம் அந்த அறைக்குள் மெளனம் நீடித்தது. அந்த ஒரு நிமிஷத்துக்குள் பார்வதிக்கு இதயமே வெடித்து விடும் போல் தோன்றியது. வேதனையைச் சகித்துக் கொண்டு மௌனத்தைக் கலைத்துக்கொண்டு அவர்தான் பேசினார். “சாப்பிட்டீர்களா?” அந்தக் கேள்வியில் எல்லா வேதனைகளும் அடங்கிக் கிடந்தன. “உங்கள் கையால் அதை எடுத்துக் கொடுங்கள்” என்று சொல்லத் துடித்தது அவள் இதயம். ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்ள, கையை நீட்டினாள் பார்வதி. ‘மாதுளம்பழம் எனக்குப் பிடிக்கும் என்னும் ரகசியத்தை எப்படியோ அறிந்துகொண்டு இந்தப் பழங்களை எனக்காக ஆசையோடு வாங்கி வைத்திருக்கிறார். நான் இவற்றைச் சாப்பிட்டால் அவர் அன்பை ஏற்றுக்கொண்டதாக ஆகும். அவரை நான் மறந்து வாழ விரும்புகிறேன்; அதைப்போல் அவரும் என்னை மறந்து வாழ வேண்டுமென்று எண்ணு கிறேன். அவர் செலுத்தும் அன்பை நான் அங்கீகரித்தால் அது பெரும் விபரீதத்தில் கொண்டு போய்விடும். ஆகவே இந்தப் பழங்களை நான் தொட மாட்டேன். தொடவே மாட்டேன்.’ பார்வதியின் வைராக்கியம், திடசித்தம், தீர்மானம் எல்லாம் சேதுபதியைக் கண்டபோது தவிடு பொடியாகத் தகர்ந்து போயின. பார்வதி கை நீட்டிக் கேட்டபோது சேதுபதியின் முகம் மலர்ந்தது. சட்டென அவர் அந்தப் பழங்களில் ஒன்றை எடுத்துத் தோலை அகற்றி அதனுள் புதைந்து கிடந்த கெம்புக் கற்கள் போன்ற முத்துகளை எடுத்து அவளிடம் கொடுத்தார். ‘இத்தனை நாளும் இவர் அன்புக்காக நான் காத்திருந்தேன். இப்போது நானே இவருடைய அன்பை ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன்.’ இவ்வாறு எண்ணிய பார்வதிக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது. மீண்டும் சேதுபதி முத்துகளை எடுத்துக் கொடுத்த போது ‘போதும்’ என்று கையசைத்தாள் பார்வதி. “ஏன்? பழத்தில் ருசி இல்லையா?” “ருசி இருக்கிறது, பசி இல்லை.” பார்வதியின் பதிலில் வழக்கமாக உள்ள உற்சாகம் இல்லை. “ஏன் இப்படிப் பேசுகிறாள்? ஒருவேளை உடல் நிலை சரியில்லாதது காரணமாயிருக்குமோ?” சேதுபதி ஒரு கணம் சிந்தித்தார். பிறகு சட்டென ஒரு முடிவுக்கு வந்தவர்போல், “சரி; நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் அப்புறம் வந்து பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். பார்வதி அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவருடைய கம்பீரமான தோற்றமும், பெருந்தன்மை மிக்க பேச்சு, பேச்சிலே கனிந்த அன்பு எல்லாவற்றையும் ஒருமுறை எண்ணிப் பார்த்தாள். அவர் மாடிப்படிகளில் நடக்கும்போது, ஒவ்வொரு படியாகக் காலடி எடுத்து வைக்கும் ஓசையைக் கவனமாகக் கேட்கலானாள். ‘அவரை நேரில் காணும்போது ஆசை, அன்பு, பாசம், பரிவு எதுவுமே இல்லாதவள் போல் வெறுப்பாகப் பேசுகிறேன். அவர் கண்களிலிருந்து மறைந்ததும் அவரைக் காணத் துடிக்கிறது என் உள்ளம். ஐயோ, இதென்ன விசித்திரம்? இந்த வேதனையிலிருந்து எனக்கு விடுதலையே கிடையாதா?’ அவள் துக்கமெல்லாம் கண்ணீராகப் பெருகிக்கொண்டிருந்தது. கீழே, சேதுபதி யாருடனோ பேசிக்கொண்டிருப்பது கேட்கவே அதை உற்றுக் கவனித்தாள். “காமாட்சி! நான் அப்புறம் வருகிறேன். பார்வதியின் உடம்பு குணமாகிறவரை, நீ இங்கேயே இருந்து கவனித்துக் கொள். அவர் மனத்தில் எதையோ வைத்துக் கொண்டு வெளியே சொல்ல முடியாமல் சஞ்சலப்படுவதுபோல் தோன்றுகிறது. அவர் படித்தவர். அத்துடன் சிறந்த அறிவாளி...” சேதுபதியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பார்வதியின் நெஞ்சத்துக்குள் புகுந்து மாதுளை முத்துகளாய் இனித்தன. “என்னிடம் இவர் எத்தனை மதிப்பு வைத்திருக்கிறார்? எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார்? என் உள்ளத்தை எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.” மீண்டும் அவருடைய குரல் கேட்கிறது. “பாரதி! நான் வீட்டுக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா என்னுடன்...” “நான் இங்கேயே இருக்கிறேன், அப்பா! அத்தை இங்கே இருக்கும்போது எனக்கு மட்டும் அங்கே என்ன வேலை? பிரின்ஸிபாலுக்கு உடம்பு குணமாகிறவரை நானும் அத்தையோடுதான் இருக்கப் போகிறேன்” என்றாள் பாரதி. “பேஷ்! அதுதான் சரி; உன் இஷ்டப்படியே செய்; ஆனால் உன் பிரின்ஸிபாலுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. நீயாகவே படித்துப் பாஸ் செய்ய வேண்டும். தெரிந்ததா?” கார் புறப்பட்டு வாசல் காம்பவுண்டைத் தாண்டிச் செல்லுகிறது. பார்வதி அந்த மாதுளங் கனிகளைக் கவனித்தாள். அந்தச் சிவந்த முத்துகள் அவளைப் பார்த்துச் சிரித்தன. ‘பயித்தியமே! உன்மீது இவ்வளவு அன்பும் அக்கறையும் கொண்டிருக்கும் சேதுபதியையா அலட்சியம் செய்கிறாய்?’ என்பதுபோல் தோன்றுகிறது. ஹார்லிக்ஸுடன் வந்து நின்ற காமாட்சியைக் கண்டதும் “இப்படி உட்காருங்கள்'' என்று கை காட்டினாள் பார்வதி. “கொஞ்சம் ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு உடம்பு குணமாகும் வரை என்னை இங்கேயே இருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறான், என் அண்ணா...” என்றாள் காமாட்சி. “ஓ! அப்படியானால் அவரை யார் கவனித்துக் கொள் வார்கள்?” - பார்வதி கேட்டாள். “வீட்டிலே சமையல்காரன் இருக்கிறான். பார்த்துக் கொள்கிறான். நான் அங்கே இருந்தாலும் என்னை ஒரு வேலையும் செய்ய விடமாட்டான். ‘நீ பேசாமல் உட்கார்ந்து கொண்டிரு. வேலைக்காரர்கள் கவனித்துக் கொள்வார்கள்?’ என்பான். பிறர் துன்பப்படுவதை அவன் சகிக்கவே மாட்டான், இளகிய மனசு அவனுக்கு. இதுவரை என்னை அவன் யார் வீட்டிலும் தங்க அனுமதித்ததில்லை. அப்படிப்பட்டவன் என்னை இங்கே அனுப்பி உங்களைக் கவனித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறான் என்றால் அது தங்கள் மீது அவனுக்குள்ள அக்கறையையே காட்டுகிறது” என்றாள் காமாட்சி. சேதுபதியைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினாள் பார்வதி. ஆயினும் அந்த விருப்பத்தை அவள் வெளிப் படையாகக் காட்டிக் கொள்ளாமல் மறைமுகமாகச் சில கேள்விகள் கேட்டாள். “உங்க அண்ணா ரெம்பப் பிடிவாதக்காரரோ?” பார்வதி குழந்தை போல் கபடமின்றிச் சிரித்தபடியே கேட்டாள். “அதை ஏன் கேட்கிறீர்கள்? சின்ன வயசிலிருந்தே பிடிவாதக் குணம் அதிகம். அவன் அப்பா ஒரு நாள் ஏதோ கோபமாகச் சொல்லி விட்டார் என்பதற்காக வீட்டை விட்டே வெளியேறி விட்டான். அப்புறம் எப்படியோ கஷ்டப்பட்டுப் படித்துத் தானே விழுந்து எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தான். இப்போது லட்சக் கணக்கில் பணத்தைக் குவிக்கிறான். ம்... என்ன குவித்து என்ன பிரயோஜனம்” பெருமூச்சுவிட்டாள் காமாட்சி. “ஏன் இப்போது அவருக்கு என்ன குறைவு?” “ஒரு குறைவுமில்லை. சரஸ்வதியோடு வாழக் கொடுத்து வைக்காத குறைதான்.... பாரதியைப் பெற்றெடுத்த சில வருடங்களுக்குள்ளாகவே அவள் இறந்து விட்டாள். பாவம் சரஸ்வதியின் மீது அவன் உயிரையே வைத்திருந்தான். அவள் மறைந்த பிறகு, ஆறு மாதம் சரியாகக் கூடச் சாப்பிடவில்லை. எந்நேரமும் பித்துப்பிடித்த மாதிரி கலங்கி நிற்பான். அப்போதுதான் அந்த வீட்டின் முழுப் பொறுப்பையும் நான் வந்து ஏற்றுக்கொண்டேன். அண்ணாவின் நிலை எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. ஒரு நாள் அவன் தனியாக உட்கார்ந்திருந்த சமயம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். “‘நீ ஏன் அண்ணா இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது?’ என்று கேட்டேன். அதற்கு அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா? இன்னொரு கல்யாணமா? சரஸ்வதியின் ஸ்தானத்தில் வேறொருத்திக்கு இடமா என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டே எழுந்து போய்விட்டான்... ம்... இதெல்லாம் பழைய கதை... ஹார்லிக்ஸ் ஆறிப் போகிறது. சாப்பிடுங்கள்” என்றாள் காமாட்சி. ஹார்லிக்ஸை அருத்தியபடியே பார்வதி யோசித்தாள். அவ்வளவு வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் சேதுபதியைப் பற்றியா நான் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்? என் அந்தரங்கத்தில் நான் அவர்மீது கொண்டுள்ள அன்பே என் கண்களை மறைத்து அவரும் என்னை நேசிப்பதாக எண்ணத் தூண்டுகிறதோ? எல்லோரையும் போல் அவரும் என்னிடம் சாதாரணமாகவே பழகியிருக்கலாம். நானாகவே அவருடைய செய்கைக்கும் பேச்சுசுக்கும் தவறான நோக்கங்களைக் கற்பித்துக் கொண்டு வீண் பிரமை கொள்கிறேனா? அவர் சாதாரணமாகத்தான் பழகுகிறார் என்று எண்ணியபோது அவளுக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது. அடுத்தகணமே, அவர் தன் மீது அன்பு செலுத்தவில்லை என்கிற எண்ணம் அவளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தியது. காரணம் அவள் உள்ளம் இயற்கையாகவே அவர் அன்புக்கு ஏங்கியிருக்கிறது. இப்போது அவர் அன்பு செலுத்தவில்லை என்று தெரிந்ததும் அவள் போலியாகச் சந்தோஷப்பட்ட போதிலும் இயற்கையில் அவள் மனம் சொல்லொணாத வேதனையையே அனுபவித்தது. ஹார்லிக்ஸுடன் அந்த வேதனையையும் சேர்த்து விழுங்கிய பார்வதி, “...ம்... அப்புறம்?” என்று கேட்டாள். “அப்புறம் என்ன, அதற்குப் பிறகு நான் அவன் திருமணத்தைப் பற்றியே பேச்செடுப்பதில்லை. இப்போது கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு நாள் என்னிடம் அவனாகவே பேச்செடுத்தான். ‘நான் மறுமணம் செய்து கொண்டால் உலகம் என்ன நினைக்கும் காமாட்சி!’ என்று கேட்டான்.” “நீங்க என்ன பதில் சொன்னீங்க?” “என்ன சொல்வேன்? ‘உலகம் சிரிக்கும். இத்தனை வயசு கழித்துக் கல்யாணமாம்!’என்றேன்.” “அதற்கு அவர் என்ன சொன்னார்?” “‘அசடே சுத்தப் பயித்தியமாயிருக்கிறாயே! நான் விளையாட்டாகக் கேட்டதை நிஜமாகவே நம்பிவிட்டாயா?’ என்று கூறி மழுப்பிவிட்டுப் போய்விட்டான்.” “அப்புறம்...” “அப்புறம் என்னிடம் கலியாணப் பேச்சே எடுப்பதில்லை. எப்போதாவது பேசினாலும் பொதுவாகப் பேசி விட்டுப் போய் விடுவான். யாரைப்பற்றியும் அதிகம் பேசமாட்டான். ஆனால் உங்க கல்லூரியைப் பற்றியும் உங்களைப்பற்றியும் பேச ஆரம்பித்து விட்டால் மணிக்கணக்கில் பேசிக்கொண் டிருப்பான்...” இதைக் கேட்டபோது பார்வதியின் இதயம் மகிழ்ச்சியில் திளைத்தது. “அப்படியா... அவர் வாயால் புகழக் கூடிய அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன்?” சேதுபதி தன்மீது அளவற்ற அன்பு கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த பிறகு பார்வதியின் உள்ளத்தில் நிம்மதி பிறந்தது. அந்த நிம்மதியுடன் மன அமைதியுடன் அன்றிரவு தூங்கி எழுந்தாள் பார்வதி. மறுநாள் காலை, பார்வதி கட்டிலில் படுத்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் உள்ள ஜன்னல்களையும் கதவுகளையும் என்ன தான் மூடி வைத்தாலும் காற்று உள்ளே வராமல் இருக்கிறதா? மனத்தை எவ்வளவு உறுதிப்படுத்திக் கொண்டாலும் பலவீனமான சிந்தனைகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அவரை மறந்துவிட அவள் எவ்வளவோ முயன்றுதான் பார்த்தாள். ஆனால் முடியவில்லை. பூவின் நிறத்தையும் அழகையும் எளிதில் மறந்துவிடலாம். ஆனால் அதனுடைய மணத்தை மறக்க முடிவதில்லையே! “அம்மா, கல்லூரியிலிருந்து ஏழெட்டுப் பேர் வந்திருக்கிறார்கள் தங்களைப் பார்க்க வேண்டுமாம். கீழே வராந்தாவில் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தாள் ஞானம். “மாணவிகள் மட்டுமா, புரொபஸர்களும் கூடவா?” என்று கேட்டாள் பார்வதி. “அதெல்லாம் எனக்குத் தெரியவில்லை” என்றாள் ஞானம். பார்வதியின் நெற்றியில் சுருக்கம் கண்டது. “சரி, நீ போய் அவர்களை மேலே வரச் சொல்...” |