குருத்து பதினெட்டு

     சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள் மேலே வந்தார்கள். “இரண்டு நாட்களாக வேலை சரியாயிருந்தது. அதனால் தங்களை வந்து காண முடியவில்லை. மன்னிக்கவேண்டும்” என்றனர்.

     “இப்போது மணி என்ன தெரியுமா?” பார்வதி கேட்டாள்.

     “பதினொன்று...”

     “இப்போது கல்லூரி நடக்கும் நேரத்தில், வகுப்புக்குப் போகாமல் இங்கே வந்திருக்கக் கூடாது...”

     “தங்களை இரண்டு நாட்களாகக் காணாமல் இருந்ததே தவறு.”

     “கல்லூரி நேரத்தில் வகுப்பை விட்டு வந்தது அதை விடப் பெரிய தவறு. உங்களுடைய முதல் கடமை படிப்பு தான். படிப்பையும் பரீட்சையையும் விட்டுவிட்டு இங்கே வந்திருக்கக் கூடாது. இந்தச் சின்ன விஷயம் மாணவிகளாகிய உங்களுக்குத்தான் தெரியவில்லை யென்றால், ஆசிரியைகளாவது உங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். சரி; நேரத்தை வீணாக்காமல் புறப்படுங்கள் ” கொஞ்சம் கடுமையாகவே பேசி முடித்தாள் பார்வதி. பிரின்ஸிபாலின் கண்டிப்பு அவர்களுக்குத் தெரிந்ததே! ஆகவே, “போய் வருகிறோம்” என்று தாழ்ந்த குரலில் விடை பெற்றுக் கொண்டு உடனே புறப்பட்டு விட்டார்கள் அவர்கள்.

     அவர்கள் சென்றதும், “பாவம், கண்டிப்பாகப் பேசி அனுப்பி விட்டேன். கொஞ்சங் கூடப் பண்பில்லாதவள் நான்” வருத்தத்துடன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் பார்வதி.

     ஆயிற்று; பார்வதி படுக்கையாகப் படுத்து விளையாட்டாகப் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. காமாட்சியும் ஞானமும், பார்வதியின் உடம்பைத் தேற்றுவதற்கு இரவு பகலாகக் கண் விழித்துப் பாடுபட்டும் அவள் உடம்பு தேறாமல் நாளுக்கு நாள் கேவலமாகிக் கொண்டேயிருந்தது. உள்ளத்தில் வேதனைகள் புகுந்து அரித்துக் கொண்டிருக்கும் போது உடலை எவ்வளவு போஷித்தும் என்ன?

     சேதுபதியின் அன்பைப் பார்வதி என்று மறந்துவிடத் துணிந்தாளோ அன்று முதல் அவளுக்கு நிம்மதியே இல்லை. அவருடைய அன்பை அவளால் மறக்கவோ மறுக்கவோ முடியாமல் உள்ளத்தில் வலி கண்டு, அந்த வலியே அவள் உடலை இளைக்கச் செய்து கொண்டிருந்தது.

     பார்வதி கண்களை மூடிப் படுத்திருந்தாள். பழரசத்துடன் மெதுவாகக் கட்டிலின் அருகே வந்து நின்றாள் பாரதி.

     கண் விழித்த பார்வதி, “பாவம்! என்னால் உங்களுக்கெல்லாம் சிரமம்...”

     “பரீட்சையெல்லாம் சரியாக எழுதியிருக்கிறாயா, பாரதி! ராஜாவை எங்கே காணோம்?”

     “அவன் எப்படி எழுதியிருக்கிறானாம்?” என்று கேட்டாள்.

     “இரண்டு பேருக்குமே நேற்றோடு பரீட்சை முடிந்து விட்டது. நன்றாகவே எழுதியிருக்கிறோம்...” என்றாள் பாரதி.

     “ரொம்ப சந்தோஷம். ராஜாவை இங்கே வரச் சொல்லு...”

     “கூப்பிட்டீங்களா அத்தை!” என்று கேட்டுக் கொண்டே வந்து நின்றான் ராஜா.

     “பரீட்சையில் எப்படி எழுதியிருக்கிறாய் என்று கேட்கத் தான் கூப்பிட்டேன்... லீவு விட்டு விட்டார்கள் அல்லவா? இனிமேல் உன்பாடு குஷிதான். ஒரு படம் கூடத் தவற மாட்டாய்!” என்றாள் பார்வதி.

     “இல்லை அத்தை!” என்று தலை கவிழ்ந்தபடியே கீழே இறங்கிச் சென்று விட்டான் ராஜா. அப்போது எதிரில் வந்த பாரதியைப் பார்த்து, அத்தை நல்ல மூட்லே இருக்கிறாள். சினிமாவுக்குப் போக ‘பர்மிஷன்’ வாங்கிவிடு. இது தான் நல்ல சமயம். இன்று மாலை மூன்று மணிக்கு நான் காலேஜிலிருந்து வந்து விடுவேன். எங்க காலேஜுக்கு எதிரில் காந்தி மண்டபம் இருக்கிறது. மூணு மணிக்கு நீ அங்கே வந்துவிடு. அதற்குப் பக்கத்தில் பெரிய காடு இருக்கிறது. அந்தக் காட்டில் நிறைய மான்கள் இருக்கின்றன. அந்த இடத்தைச் சற்று நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு ஆறரை மணி ஷோவுக்குப் போகலாம்” என்றான்.

     “சினிமாவுக்குப் போவதாகச் சொன்னால் பிரின்ஸிபால் என்னை வெளியே அனுப்பவே மாட்டாங்களே!”

     “சிநேகிதிகளொடு போவதாகச் சொல்லு. சரிம்பாங்க... பயித்தியமாயிருக்கிறாயே! இதெல்லாம் கூடவா நான் சொல்லிக் கொடுக்கணும்...?”

     மணி மூன்றடித்ததோ இல்லையோ, கல்லூரியை விட்டுப் புறப்பட்டு விட்டான் ராஜா. காரை எடுத்துக்கொண்டு நேராகக் காந்தி மண்டபம் போய்ச் சேர்ந்தான். ஆனால் அங்கே பாரதியைக் காணவில்லை. ஒருவரையுமே காண வில்லை. நல்ல வெயில் நேரமானதால் நாலைந்து காகங்கள் - கரைந்து கொண்டிருந்தன. ஐந்து நிமிஷம், பத்து நிமிஷம், பதினைந்து நிமிஷமும் கடந்தன. வருகிற போகிற வண்டிகளை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜா. பாரதி வந்தபாடில்லை. கடைசியில் சற்றுத் தூரத்தில் ஒரு டாக்ஸி வருவது தெரிந்தது. பாரதி அதில் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் ராஜாவின் முகம் மலர்ந்தது.

     “ரொம்ப நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று சிரித்தபடியே டாக்ஸியை விட்டுக் கீழே இறங்கி வந்தாள் பாரதி.

     அவளுக்காகத் தான் காத்துக் கொண்டிருந்ததாகச் சொல்வது மதிப்புக் குறைவு என்று எண்ணிய ராஜா, “இல்லையே; நான் இப்போதுதான் வந்தேன்” என்றான்.

     “சரி, மான்கள் எங்கே?” என்று கேட்டாள் பாரதி.

     “இப்பதானே சகுந்தலை வந்திருக்கீங்க? இனிமேல் தான் மான்களும் வரும்.”

     “துஷ்யந்த மகாராஜாவே! எனக்கு உடனே மான்களைக் காட்டப் போகிறீர்களா, இல்லையா?” சிரித்துக்கொண்டே கேட்டாள் பாரதி.

     “ஆமாம்; வீட்டை விட்டுப் புறப்படும்போது பிரின்ஸிபாலிடம் சொல்லிக் கொள்ளாமல் தானே வந்தாய்?”

     “அதை உங்களுக்கு யார் சொன்னது?”

     “உன் தலை!”

     “என் தலையா?” என்று தன் தலையைத் தொட்டுப் பார்த்தாள் பாரதி.

     “ஓகோ! இந்த மாதிரிக் கொண்டை போட்டுக்கொண்டு பிரின்ஸிபால் எதிரில் போயிருக்க மாட்டேன்னுதானே கேட்டீங்க? பிரின்ஸிபால்கிட்டே சொல்லிட்டுத்தான் வந்தேன்.”

     “அப்ப, பிரின்ஸிபாலிடம் சொன்ன பிறகு கொண்டை போட்டுக் கொண்டிருப்பாய்!”

     “சரி, காட்டுக்குப் போகலாம் வாங்க...”

     ராஜா அவளைக் கிண்டி எஸ்டேட் வனத்துக்குள் அழைத்துச் சென்றான்.

     “ரொம்ப அழகாயிருக்கே இந்த இடம்” என்றாள் பாரதி.

     “நீ கூட இன்று ரொம்ப அழகாயிருக்கே. உன்னை இந்த இடத்தில் இப்போது ஒரு படம் எடுக்கப் போகிறேன். இந்தக் காடு ஓர் ஆசிரமம் மாதிரி இருக்கிறதா? பக்கத்திலே மான்கள் வேறு சஞ்சரிக்கிறதா? நீயும் ரிஷி குமாரி மாதிரி வந்திருக்கிறாயா? இந்தச் சூழ்நிலையிலே உன்னைப் படம் எடுத்தால் அசல் சகுந்தலை மாதிரியே இருக்கும்!”

     “ஏன் ஒரு சினிமாவே எடுத்துடுங்களேன்...!”

     “ஐயோ, வேண்டாம்; புராணிக் பிச்சராயிடும். எடுத்தால் ஸோஷல் எடுக்கணும்.”

     “சரி சரி, போட்டோ எடுங்க.”

     ராஜா காமிராவை எடுத்துச் சரி செய்து கொண்டான்.

     “எங்கே! இப்படிக் கொஞ்சம் என்னைப் பாரு! லிட்டில் ஸ்மைல்!... வெரி குட்! ஒன், டூ, த்ரீ! தாங்க்ஸ்” என்றான் ராஜா.

     “ஒரு மானைப் பிடித்து வந்தால் அதோடு சேர்ந்து ஒரு படம் எடுத்துக் கொள்ளலாம்...” என்றாள் பாரதி.

     “நான் ராமன் இல்லை. மானைத் துரத்திக்கொண்டு போவதற்கு - துஷ்யந்தன்...!” என்று கூறிச் சிரித்தான் ராஜா.

     “இல்லை” என்றாள் பாரதி.

     “வேறு யாராம்?” என்று கேட்டான் ராஜா.

     “துஷ்யந்த மகாராஜா!” என்று திருத்தினாள் பாரதி!

     “நேரமாகிறது, புறப்படலாமா?” ராஜா கேட்டான்.

     “எங்கே ?”

     “லைப்ரரிக்கு...”

     “அப்புறம்?”

     “ஓட்டலுக்கு.”

     “அப்புறம்? சினிமாவுக்கு!” இருவரும் காரை நோக்கி நடந்தனர்.

     திடீரென்று பாரதி “ஐயோ!” என்று கூறிக்கொண்டே கீழே குனிந்தாள்.

     “என்ன பாரதி!” பதறிப் போனான் ராஜா.

     “காலில் முள் தைத்துவிட்டது.”

     ராஜா மெதுவாக அவள் வலது காலைத் தூக்கி அருகிலிருந்த ஒரு பெரிய கல் மீது வைத்தான். பிறகு அவள் காலிலிருந்த முள்ளை அப்புறப்படுத்தினான். முள்ளை எடுத்து இடத்திலிருந்து ரத்தம் பெருகியது. உடனே அவன் தன் கைக்குட்டையால் அவள் காலில் ஒரு கட்டுப் போட்டு அவள் கையைப் பிடித்துக் காருக்கு அழைத்துச் சென்றான். போகும் போது “அன்று ஹாஸ்டலில் ஆணி அடிக்கும்போது பாணிக் கிரகணம் ஆயிற்று. இன்று வலது காலைத் தூக்கி அம்மிக் கல்லில் வைத்தாயிற்று” என்று சிரித்தான் ராஜா. அதைக் கேட்டுப் பாரதியும் சிரித்துவிட்டாள்!