உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
குருத்து பத்தொன்பது “அடுத்தாற்போல் எங்கே போகலாம்?” என்று கேட்டாள் பாரதி. “சொர்க்கத்துக்கு...” என்றான் ராஜா. “அந்த ‘ரூட்’டுக்கு நம்ம வண்டிக்கு பர்மிட் இல்லீங்க!...” என்றான் டாக்ஸி டிரைவர் சிரித்துக்கொண்டே. ராஜாவும் பாரதியும் சிரித்து விட்டனர். “டிரைவர்! நீங்க ரொம்பத் தமாஷாகப் பேசறீங்களே! சில டாக்ஸி டிரைவருங்க மூஞ்சியை ‘உம்’ மென்று வைத்துக் கிட்டிருப்பாங்க. அவங்களைக் கண்டால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது...” என்றான் ராஜா. “எப்பவும் சந்தோஷமா இருக்கத் தெரியணுங்க. எந்த நேரமும் கவலைப் பட்டுக்கிட்டு இருக்கிறவங்களை வாழத் தெரியாதவங்கன்னுதான் சொல்லணும்...” என்றான் டிரைவர். “பலே, பலே! நீ என் கட்சி!” என்றான் ராஜா. “எந்தப் பக்கம் போகணுங்க?...” டிரைவர் கேட்டான். “மவுன்ட் ரோடு பக்கம் தான்...” “ஆறரை மணிக்குத்தானே சினிமா? இன்னும் ரொம்ப நேரம் இருக்குதே!” என்றாள் பாரதி. “அத்தை லைப்ரரியிலிருந்து புத்தகம் வாங்கி வரச் சொல்லியிருக்காங்க. அங்கே அரை மணி நேரம். அப்புறம் ஓட்டல்லே முக்கால் மணி நேரம்... ஆமாம்; நீ அத்தை கிட்டே சினிமாவுக்குப் போறதாச் சொல்லிட்டு வந்தாயா?...” “...ம்...” “அத்தை என்ன சொன்னாங்க?...'' “யாரோடு சினிமாவுக்குப் போகப் போகிறாய் என்று கேட்டாங்க... சிநேகிதிகளோடு போகப் போறதாச் சொன்னேன். ‘சரி’ன்னுட்டாங்க...” “நான் சொல்லலையா? இன்றைக்கு அத்தை நல்ல மூட்லே இருக்காங்க. நீ போய்க் கேளு. உடனே பர்மிஷன் கொடுத்துடுவாங்கன்னு...” “ஆமாம்; நீங்க இன்றைக்கு லேட்டாக வீட்டுக்கு வந்தால் பிரின்ஸிபால், எங்கே போயிருந்தேன்னு கேட்பாங்களே!...?” “கேட்கட்டுமே...” “நீங்க என்ன பதில் சொல்லுவீங்க?” “எங்க கல்லூரியிலே இன்றைக்கு ஆண்டு விழான்னு ஒரு ‘டூப்’ அடிச்சுட்றேன்...” “என்னை மட்டும் சினிமாவுக்குப் போறதாக நிஜம் சொல்லச் சொல்லிவிட்டு நீங்க பொய் பேசலாமா?” என்று கேட்டாள் பாரதி. “இது பொய் இல்லை,பாரதி!” “பின் என்னவாம்?” “புளுகு!” “புளுகுக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம்!” “புளுகிலே பிறத்தியாருக்குத் தீங்கு கிடையாது... பொய்யிலே அது உண்டு...” “அப்படின்னா நான் சிநேகிதிகளோடு சினிமாவுக்குப் போறதாச் சொன்னது பொய்தானே?” “இல்லை; புளுகு...” “எனக்கென்னவோ பயமாயிருக்குது... நாம் ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டுச் சினிமாவுக்குப் போயிருக்கோம்னு பிரின்ஸிபாலுக்குத் தெரிஞ்சுதானா?...” “ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நீ தான் பர்மிஷன் வாங்கியிருக்கியே!” “நீங்க வாங்கலையே!” “நான் சினிமாவுக்குப் போகலையே. கல்லூரி ஆண்டு விழாவில் இருந்தல்லவா வர்றேன். அதனாலே லேட்!” “சுத்தப் பொய்!” “மறுபடியும் பார்த்தாயா! புளுகுன்னு சொல்லு!” “எல்பின்ஸ்டனுக்குப் போறீங்களா?” டிரைவர் கேட்டான். “முதல்லே லைப்ரரிக்குப் போ. அதோ தெரியுது பார் ! அந்தக் கட்டடத்துக்கு முன்னாலே நிறுத்து...” என்றான் ராஜா. டாக்ஸி அங்கே போய் நின்றதும் ராஜாவும் பாரதியும் இறங்கி லைப்ரரிக்குள் சென்றனர். “என்னை அனுப்பிடுங்க ஸார்! வெயிட்டிங்லே போடாதீங்க. சம்பாதிக்கிற நேரம்” என்றான் டிரைவர். “அதுவும் சரிதான்!” என்று கூறிய ராஜா, அவனுக்கு மீட்டருக்கு மேல் அதிகப்படியாகவே ஒரு ரூபாய் கொடுத்தனுப்பினான். “ரொம்ப சந்தோஷங்க” என்று கூறிச் சென்றான் டிரைவர். அரை மணி நேரம் கழித்து ராஜாவும் பாரதியும் வெளியே வந்து டாக்ஸிக்காகக் காத்திருந்தபோது அதே டாக்ஸி அருகில் வந்து நின்றதும் பாரதிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “நீயே வந்து விட்டாயா?” என்றான் ராஜா. “ஆமாங்க. இதுக்குள்ளே மாம்பலத்துக்கு ஒரு சவாரி கிடைச்சுது. போயிட்டு வந்தேன். ஏறிக்குங்க... ஓட்டலுக் குத்தானே?...” “ஆமாம்...” “எந்த ஓட்டலுக்கு?” என்று கேட்டான் டாக்ஸி டிரைவர். “முன்னொரு நாள் திறந்த வெளி மாடியில் சாப்பிட்டோமே - அந்த ஓட்டலுக்கே போகலாம்” என்றாள் பாரதி. டாக்ஸியை அந்த ஓட்டலுக்கு விடச் சொன்னான் ராஜா. “பக்கத்திலே தான் சினிமா. நாங்கள் நடந்தே போய் விடுகிறோம். நீ காத்திருக்க வேண்டாம்” என்று கூறிய ராஜா, டிரைவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பினான். பிறகு இருவரும் அந்த ஓட்டலுக்குச் சென்று திறந்த வெளி மாடிக்குப் போய் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த வட்ட மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டனர். “என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் ஸர்வர். அவனிடம் இரண்டு மசாலா தோசைக்கு ஆர்டர் கொடுத்தான் ராஜா. “எனக்கு மசாலா தோசை பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று கேட்டாள் பாரதி. “எனக்குத் தெரியாது; மசாலா தோசைக்குச் சொன்னால் அது வருகிற வரைக்கும் கொஞ்சம் பொழுது போகுமே என்பதற்காகச் சொன்னேன்...” என்றான் ராஜா. பாரதி சிரித்துக்கொண்டே அந்த லைப்ரரி புத்தகத்தை எடுத்துப் புரட்டினாள். “மசாலா தோசை வருவதற்குள் நீ இதைப் படித்தே முடித்துவிடலாம்” என்றான் ராஜா. “ரொம்ப ட்ரை ஸப்ஜெக்ட்! பிலாஸபி இதைப் போய் வாங்கி வந்தீர்களே!” என்றாள் பாரதி. “இது உனக்கல்ல; அத்தைக்கு. இந்த மாதிரி ட்ரை ஸப்ஜெக்ட்தான் அவங்களுக்குப் பிடிக்கும்...” சற்று நேரத்துக்கெல்லாம் மசாலா தோசை இரண்டைக் கொண்டு வந்து வைத்தான் ஸர்வர். பாரதி தோசையின் முறுகலான பாகங்களை மட்டும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள். “மசாலா தோசையைக் கண்டுபிடித்தானே அவனுக்கு ஒரு சிலை கட்டி வைக்க வேண்டும்...” என்றான் ராஜா. “ஐஸ்க்ரீம் கண்டுபிடித்தவனுக்கும் தான்” என்றான் பாரதி. “இப்போது ஐஸ்க்ரீம் வேணும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாயா?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தான் ராஜா. “இல்லை, இல்லை” என்றாள் பாரதி. ஸர்வரைக் கூப்பிடுவதற்காக ராஜா திரும்பிப் பார்த்த போது வேறொரு மூலையில் அவனுடைய காலேஜ் பிரின்ஸிபால் உட்கார்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அவன் ‘திருதிரு’வென்று விழிப்பதைக் கண்ட பாரதி, “ஏன் ராஜா! ஏன் இப்படி இஞ்சி தின்ற மாதிரி விழிக்கிறீங்க...?” என்று கேட்டாள். “நிஜமாகவே இந்த மசாலாவிலே இருந்த ஓர் இஞ்சித் துண்டைத் தின்னு விட்டேன். அதுதான்...” என்று கூறி மழுப்பினான் ராஜா. “பொய், பொய்! எதையோ என்னிடம் சொல்லாமல் மறைக்கப் பார்க்கிறீங்க...” “எங்க பிரின்ஸிபால் வந்திருக்காரு. நாம ரெண்டு பேரும் அவர் பாக்கறதுக்கு முந்தி எழுந்து போயிடணும்...” “அவர் சினிமாவுக்கும் வந்து சேர்ந்தால்?...” “வர மாட்டார். சினிமான்னா அவருக்குப் பிடிக்காது...” அடுத்த நிமிடம் இருவரும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு விட்டனர். “இன்னும் ஆறு மாத காலத்துக்குப் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். காலையிலும் மாலையிலும் சற்று நேரம் தோட்டத்துக்குள் உலாவும் நேரம் தவிர, வெளியில் எங்குமே செல்லக்கூடாது” என்று கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தாள் டாக்டரம்மாள். அறைக்குள்ளாகவே கட்டுப்பட்டுக் கிடக்கும் கொடுமையைப் பார்வதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கல்லூரிக்குப் போகாமல், கல்லூரியைக் காணாமல், கல்லூரி மாணவிகளுடன் பேசாமல், கல்லூரியில் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றாமல் இருப்பதை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அந்தக் கல்லூரியிலேயே படித்து, அங்கேயே உத்தியோகத்தில் அமர்ந்து, அங்கேயே புரொபஸராகி, கடைசியில் அந்தக் கல்லூரிக்கே பிரின்ஸிபாலும் ஆகிவிட்டாள் அவள். படித்த காலத்தில் கூரை வேய்ந்த சிறு சிறு ஷெட்டுகளே வகுப்பறைகளாக இருந்தன. இப்போது அந்தப் பழைய தோற்றமே அடியோடு மாறிப் புதிய புதிய கட்டடங்களாக உயர்ந்து நிற்கின்றன. அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லும், அவளுடைய முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஊக்கத்துக்கும் சான்று கூறிக் கொண்டிருக்கின்றன. புறத் தோற்றத்தில் மட்டும் அந்தக் கல்லூரிக்குக் கவர்ச்சி தேடித் தரவில்லை அவள். அங்கே படித்துத் தேறிய மாணவிகளில் பெரும்பாலோர் இன்று பல்வேறு துறைகளில் புகழுடன் விளங்கி வருகின்றனர். பண்புக்கும், ஒழுக்கத்துக்கும் உறைவிடமாகத் திகழும் அந்தக் கல்லூரியை அவள் ஒரு தெய்வத் திருக்கோயிலாகவே போற்றி நடத்தி வருகிறாள். மற்ற கல்லூரித் தலைவர்கள் பார்வதியிடம் மிக்க மதிப்பும் மரியாதையும் கொண்டு ஒருவித அச்சத்துடனேயே பழகி வந்தனர். பார்வதியின் உடல் நிலையைப்பற்றி விசாரித்துவிட்டுப் போக இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தினமும் பலபேர் வந்து போய்க்கொண்டிருந்தனர். கல்வித் துறையில் புகழ்பெற்ற நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், வேதாந்திகள், டாக்டர் பட்டம் பெற்ற அறிவாளிகள், பழைய மாணவர்கள், இதரக் கல்லூரித் தலைவர்கள் எல்லோருமே வந்தனர். நம் நாட்டுக்கேற்ற வகையில் கல்வித் துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிப் பார்வதி அவர்களிடம் விவாதித்தாள். அவளுடைய பேச்சைக் கேட்ட பிறகு, அவர்களுக்குப் பார்வதியிடமிருந்த மதிப்புப் பன்மடங்காக உயர்ந்தது. அன்று, கார்னேஷன் கல்லூரி பிரின்ஸிபால் வேதாந்தம் வந்திருந்தார். தூய தமிழிலேயே அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பார்வதி, அவர் புறப்படும் நேரத்தில் ஞாபகமாக, “மீனா - கோபாலன் நட்பு இப்போது எந்த மட்டில் இருக்கிறது?” என்று கேட்டாள். வேதாந்தம் சிரித்துக் கொண்டே, “நல்ல முறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. தாங்கள் கூட மீனாவின் தந்தைக்குக் கடிதம் எழுதியிருந்தீர்களாம். அவளுடைய தந்தை என்னைக் காண வந்திருந்தபோது கூறினார். கோபாலனைப்பற்றி எல்லா விவரங்களையும் விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனையும் நேரில் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார். அநேகமாகத் திருமணத்துக்கு ஏற்பாடானாலும் வியப்பதற்கில்லை” என்றார். “அவர்கள் இருவருக்கும் என் மனப்பூர்வமான ஆசிகள்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினாள் பார்வதி. இரவு மணி ஒன்பதரை இருக்கலாம். பார்வதி கண்களை மூடியபடியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. “ஒருவேளை சேதுபதியாயிருக்குமோ?” என்று யோசித்தாள். ஞானத்தை அழைத்து “வாசலில் கார் சத்தம் கேட்டதே, யார் வருகிறார்கள் என்று பார்” என்றாள். “பாரதி...” என்றாள் ஞானம். “ராஜா இன்னும் வரவில்லையா?” பார்வதி கேட்டாள். “இன்னும் இல்லை...” “சரி; சாப்பிட்டு முடிந்ததும் பாரதியை இங்கே வரச் சொல்!” என்று கூறி அனுப்பினாள் பார்வதி. முதலில் பாரதியை டாக்ஸியில் கொண்டுவந்து விட்ட ராஜா பத்து நிமிடம் கழித்து அதே டாக்ஸியில் வந்து இறங்கினான். அவன் வந்து இறங்கியபோதும் கார் சத்தம் கேட்கவே, “ராஜாவாகத்தான் இருக்கவேண்டும்” என்பதைப் பார்வதி எளிதில் ஊகித்துக்கொண்டாள். பாரதி சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஹார்லிக்ஸுடன் பரம சாதுவாக மாடிக்குச் சென்றாள். பாரதியைக் கண்ட பிரின்ஸிபால் “என்ன பாரதி! சினிமா நன்றாயிருந்ததா? என்ன படம் யாரெல்லாம் போயிருந்தீங்க?” என்று அன்போடு விசாரித்தாள். “இங்கிலீஷ் பிக்சர் மேடம்! அன்னாகரீனா!” என்றாள் பாரதி. “டால்ஸ்டாய் எழுதினது. ரொம்ப நல்ல கதையாச்சே! லவ் ஸ்டோரிதான்... ஆமாம்... ராஜா வந்து விட்டானா?” “இப்பத்தான் வந்திருக்கிறார்...” “அவனைக் கூப்பிடு இங்கே...” “கூப்பிட்டீங்களா அத்தை!” என்று இறைந்து சத்தமிட்டபடியே மாடிப்படிகள் அதிர ஏறி வந்தான் ராஜா. தான் எதுவுமே தவறு செய்யாதவன் போல் காட்டிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே அவசியமின்றி உரத்துச் சத்தமிட்டுக் கொண்டு வந்தான் அவன். “ஏண்டா இவ்வளவு நேரம் உனக்கு?” “இன்றைக்கு எங்க காலேஜிலே ஆண்டு விழா அதனாலே லேட்” என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான். “ஓகோ! ஆண்டு விழாவா? ரொம்ப ஜோராக நடந்திருக்குமே! டீ பார்ட்டி உண்டா? பிரின்ஸிபால் என்ன பேசினார்?” “ஆமாம்; ரொம்ப கிராண்ட்! பிரின்ஸிபால் ரொம்ப நல்லாப் பேசினாரு...” என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான். “அப்புறம் டீ பார்ட்டியிலே என்னடா ஐட்டம்?” “... ம்... மசாலா தோசை!...” “என்னடா உளறுகிறாய்?... டீ பார்ட்டியிலே மசாலா தோசையா?” “ஆமாம், அத்தை! மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கேட்டுக் கொண்டோம், மசாலா தோசை வேண்டும் என்று...” என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான். “சரி; லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் வாங்கி வரச் சொன்னேனே, வாங்கி வந்தாயா?” “ஓ!” என்று கூறிய ராஜா, லைப்ரரிப் புத்தகங்களை எடுத்து அத்தையிடம் கொடுக்க வந்தான். அப்போது அந்தப் புத்தகம் ஒன்றிலிருந்து இரண்டு சினிமா டிக்கெட்டுகள் கீழே உதிர்ந்தன. “இதென்னடா சினிமா டிக்கெட்?” “யாரோ இதுக்கு முன்னாலே இந்தப் புத்தகத்தை லைப்ரரியிலிருந்து வாங்கிக் கொண்டு போனவங்க சினிமாவுக்குப் போயிருப்பாங்க. அவங்க இந்தப் புத்தகத்திலே அந்த டிக்கெட்டுகளை வைத்திருப்பாங்க” என்றான் ராஜா. பார்வதிக்கு எல்லாம் புரிந்து விட்டது. அவள் புன்முறுவலோடு அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அந்தப் பார்வையிலும் சிரிப்பிலும் ‘ஏன் பொய் சொல்கிறாய்?’ என்ற கேள்வி பொதிந்து கிடந்தது. “ராஜா! உங்க கல்லூரிப் பிரின்ஸிபாலுக்குத் துளிக்கூட கடமையுணர்ச்சி என்பதை கிடையாது?” “ஏன் அத்தை அப்படிச் சொல்றீங்க. அவர் எதிலேயும் ரொம்ப கரெக்ட் ஆச்சே!” “இல்லே... கல்லூரியிலே ஆண்டு விழா நடக்கிறபோது அங்கே இல்லாமல், என்னைப் பார்க்க வந்து விட்டாரே. இன்று மாலை இங்கே வந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாரே!” என்றாள் பார்வதி. ‘அடப்பாவி மனுஷா! இங்கேயும் வந்து விட்டாரா?’ என்று எண்ணிக்கொண்ட ராஜா, இஞ்சி தின்ற மாதிரித் திருதிருவென விழித்தான். |