குருத்து இரண்டு

     முதல் உதவிப் பெட்டியை எடுத்து வர ஓடிய பெண்கள் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் திரும்பி வராமற் போகவே, ராஜாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த பாரதியை வெட்கம் சூழ்ந்து கொண்டது. அதுவரை அவளுக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையில் நின்று கொண்டிருப்பதின் விபரீதம் புரியவில்லை. நேரமாக ஆகத்தான் அவள் அதை உணர்ந்தாள். நெஞ்சு படபடக்க, அவர்கள் வருகிறார்களா என்று கவலையோடு திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள். ராஜாவும்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வந்துவிடப் போகிறார்களே என்ற கவலையோடு!

     அப்போது அந்த ஹாலில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருமே இல்லை.

     ராஜா பாரதியிடம் ஏதாவது பேச வேண்டுமெனத் துடித்தான். ஆனால் என்ன பேசுவதென்று புரியவில்லை.

     சினிமாக்களில் வரும் காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் நேரங்களில் என்ன பேசிக் கொள்வார்கள் என்று யோசித்துப் பார்த்தான். தமிழ்ப் படங்களாயிருந்தால், தத்துப் பித்தென்று ஏதோ பேசிக் கொண்டிருப்பார்கள்; அல்லது ‘டூயட்’ பாடியபடியே ஒருவரை யொருவர் துரத்திப் பிடிப்பார்கள். அவர்கள் தங்கள் இரட்டை நாடிச் சரீரத்தைச் சுமந்து கொண்டு அந்தப் பாட்டு முடியும்வரை காடு மேடெல்லாம் ஓடிக் களைத்து வியர்த்துப் போகும் நேரத்தில் ‘இன்டர்வல்’ விட்டுவிடுவார்கள். ஹிந்தி நடிகர்களாயிருந்தால், அவர்கள் பேசுகிற பாஷையே நமக்குப் புரியாது. ஆங்கிலப் படமாயிருந்தாலோ காதலன் காதலியின் முகத்தருகே தன்னுடைய முகத்தைக் கொண்டுபோய் ரகசியக் குரலில், ‘ஐ லவ் யூ’ என்பான். அவளும் அவனது இரு தோள்களைப் பற்றிக்கொண்டு அதே வார்த்தையைத் திருப்பிக் கூறுவாள். இதற்குள் அவர்கள் ஒரு டஜன் முத்தங்களைப் பறிமாறிக் கொண்டிருப்பார்கள். இவ்வளவுக்கும் பிறகு ‘ஐ லவ் யூ’ என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் கூறித் தங்களுடைய காதலைப் பிரகடனப்படுத்துவார்கள்.

     இந்த முறைகள் எதுவுமே ராஜாவுக்குப் பிடிக்கவில்லை. பேச்சே வேண்டாம். பாரதியின் மாந்தளிர் போன்ற விரல்கள் தன் கையைப்பற்றிக் கொண்டிருப்பதே அவனுக்குச் சுகமாயிருந்தது. பாரதியும் தானும் அதே நிலையில், அதே போஸில், சிலையாக மாறிக் காலமெல்லாம் அப்படியே நின்று கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால், அடுத்த கணமே ‘ஊஹும்; கூடாது; சிலையாக மாறி விட்டால் உணர்ச்சியில்லாமல் அல்லவா போய்விடும்?’ என்று எண்ணினான்.

     பாரதிக்கு ராஜாவிடம் அந்தரங்கத்தில் அன்பு இருந்த போதிலும், அவனுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைந்த போதிலும், தனிமையில் அவனுடன் இருப்பது தன் பெண்மைக்கு இழுக்கு, நாலு பேர் கண்டால் கேலிக்கு இடம் என்பதை அவள் மனம் குத்திக் காட்டிற்று.

     அந்த நிலையில் ராஜாவின் கையை அப்படியே விட்டுச் செல்லத் துணிவின்றித் தவித்தபோது, சட்டென உதித்த யோசனையைச் செயல்படுத்துவதுபோல் தன் இடுப்பில் செருகியிருந்த மெல்லிய கைக்குட்டையை எடுத்து, ஃபயர் பக்கெட்டிலிருந்த தண்ணீரில் நனைத்துப் பரபரவென்று அவன் கட்டை விரலைச் சுற்றிக் கட்டிவிட்டு, “இதோ இங்கேயே இருங்கள். நான் போய் முதல் உதவிப் பெட்டியை எடுத்து வருகிறேன்” என்று கூறிக்கொண்டு ஓட்டமாக ஓடிவிட்டாள்.

     ராஜாவின் கையில் பட்டது இலேசான அடிதான். ஆயினும் அவன் கத்திக் கூச்சலிட்டுப் பாரதியுடன் நெருங்கிப் பேசுவதற்கும் பழகுவதற்கும் அதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டான்.

     பாரதி அந்த இடத்தை விட்டு நகர்ந்ததுதான் தாமதம், அடுத்த கணமே அவன் அந்தக் கைக்குட்டையை எடுத்து மடித்துத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான்.

*****

     கல்லூரியின் பொன் விழாவுக்குத் தலைமை தாங்கப் போகும் பிரதம நீதிபதி அவர்களையும், ஹாஸ்டலைத் திறந்து வைக்க அன்புடன் இசைந்துள்ள திருவாளர் சேதுபதி அவர்களையும் சிறந்த முறையில் வரவேற்பதற்கான திட்டங்களை மானசீகமாக வகுத்துக் கொண்டிருந்தாள் பார்வதி.

     வாசலில் அவர் காரில் வந்து இறங்கும்போது இரண்டு மாணவிகள் விரைந்து சென்று காரின் கதவைத் திறந்து வரவேற்க வேண்டும். அவர் கீழே இறங்கி வரும்போதே இன்னொரு மாணவி பன்னீர் தெளித்துச் சந்தனமும் கற்கண்டும் வழங்க வேண்டும். வேறொருத்தி ஒற்றை ரோஜா மலரை எடுத்து அவரிடம் தரவேண்டும். அப்போது டேப் ரிக்கார்டரிலிருந்து ஒலிப்பரப்பாகும் ராஜரத்தினம் பிள்ளையின் தோடி ஆலாபனை இலேசாகக் காற்றில் மிதந்து வர வேண்டும். வாசலில் வாழை மரங்களுடன் கூடிய வரவேற்பு வளைவுகளும், மாவிலைத் தோரணங்களும், காகிதப்பூக் கொடிகளும் கட்டிவைக்க வேண்டும். மரங்களில் சின்னஞ்சிறு மின்சார விளக்குகள் பழுத்துக் குலுங்குவது போல் ஒளி வீச வேண்டும்.

     வாசல் கேட்டிலிருந்து விழா நடைபெறப் போகும் புதிய ஹாஸ்டல் கட்டடம்வரை வழிநெடுகத் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டு வைக்க வேண்டும். பாதைக்கு இரண்டு பக்கங்களிலும் மாணவிகள் மஞ்சள் நிற யூனிபாரத்தில் வரிசையாக அணிவகுத்து நிற்கவேண்டும்.

     விழா ஆறரை மணிக்குத் தொடங்கப் போவதால், அவர் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து விடுவார். ஏறக்குறைய நீதிபதியும் அதே நேரத்துக்குள் வந்து விடலாம்.

     திருவாளர் சேதுபதி அவர்கள் வந்ததும் புன்சிரிப்போடு என்னைப் பார்த்துக் கைகூப்புவார். நானும் கார் அருகில் சென்று அவரை வணங்கி வரவேற்று உள்ளே அழைத்துச் செல்வேன். மேடையில் போய் அமர்ந்ததும் ஜட்ஜுக்கும் அவருக்கும் ராஜாவைக் கொண்டு மாலை சூட்டுவேன். சமயத்தில் மாலையைக் காணாமல் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. விழா முடிந்ததும் அவர்களிருவடைய மாலைகளையும் ஞாபகமாகக் கொண்டுபோய்க் காரில் வைக்கவேண்டும். இந்த ஏற்பாடுகளை யெல்லாம் பார்த்துவிட்டு அவர் ‘அரேஞ்ச் மென்ட் ரொம்ப கிராண்ட்’ என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

     பார்வதியின் சிந்தனையை டெலிபோன் மணி கலைத்த போது ‘யாராயிருக்கும்? ஒருவேளை...’ என்று யோசித்தவளாய் ரிஸீவரைக் கையில் எடுத்தாள்.

     ‘நாளை இரவு பத்தரை மணிக்குப் புறப்படும் விமானத்தில் அவசரமாகப் பம்பாய் செல்ல வேண்டியிருப்பதால், நாளை விழாவின் இடையிலேயே தங்களிடம் விடைபெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. கலை நிகழ்ச்சியில் கடைசி வரை உட்கார்ந்திருக்க முடியாமலிருப்பதற்காக மன்னிக்க வேண்டும்.’ இப்படிப் பேசியது திருவாளர் சேதுபதி அல்ல; அவருடைய அந்தரங்கக் காரியதரிசி.

     பார்வதிக்கு இந்தச் செய்தி பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அவள் என்னென்னவோ கோட்டைகள் கட்டி வைத்திருந்தாள். விழா முடிந்த பிறகு அவரை ஆபீஸ் அறைக்குள் அழைத்துச் சென்று கொஞ்ச நேரமாவது அவருடன் உரையாடிக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் குறைந்த அவகாசத்தில் எதைப்பற்றியெல்லாம் பேசுவது என்பது பற்றி முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தானே அதிகமாகப் பேசி விடாமல் அவரைப் பேசத் தூண்டி, அவர் பேசுவதைக் கேட்கவேண்டும்.

     முதலாவது, அவருக்கு எந்த சப்ஜெக்டில் நாட்டமிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது முக்கியம். பிறகு அந்த சப்ஜெக்டிலேயே பேச்சைத் தொடரவேண்டும். அவரைத் திருப்திப் படுத்துவதற்காக, அதில் நமக்குள்ள எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அவர் சொல்வதற்கெல்லாம் ‘ஆமாம்’ போட்டுவிடக் கூடாது. அரசியலாயிருந்தால் ‘பிளாட்டோ’ விலிருந்து சில ‘கொடேஷன்’களையும், ‘பிலாஸபி’ யாயிருந்தால் விவேகானந்தரின் சிகாகோ ஸ்பீச்சிலிருந்து சில பகுதிகளையும் எடுத்துச் சொல்லவேண்டும்.

     டெலிபோனில் வந்த செய்தி இவ்வளவையும் தகர்த்து விட்டது.

     கண்களை மூடிய வண்ணம் சிந்தனையில் மூழ்கியிருந்த பார்வதியை “அத்தை! அத்தை!” என்று அழைத்துக் கொண்டு வந்த ராஜாவின் குரல் விழிப்படையச் செய்தது.

     “என்ன ராஜா! தோரணங்களைக் கட்டி முடித்து விட்டாயா?”

     “ஆணியெல்லாம் ரொம்ப ‘வீக்’ அத்தை! கார்ப்பென்ட்டரை எதிரில் பார்த்தேன். தோரணம் கட்டும் வேலையை அவனிடமே ஒப்படைத்து விட்டேன். மூன்று மணிக்கு எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கிறது. நான் போய் விட்டு ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுகிறேன்” என்றான்.

     “அந்த முக்கிய வேலை என்னவென்று எனக்குத் தெரியும். மாடினி சினிமாதானே?” என்று கேட்டாள் அத்தை.

*****

     திருவிழாக் கோலம் பூண்டு துலங்கிய அந்தக் கல்லூரி யெங்கிலும் மிதந்து கொண்டிருந்த நாதஸ்வர இசை காற்றிலே கரைந்து கொண்டிருந்தது.

     புதிய ஹாஸ்டல் மண்டபத்துக்கு எதிரே வரிசையாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் நகரத்தின் முக்கிய பிரமுகர்களும் சீமாட்டிகளும் கல்லூரியைச் சேர்ந்த புரொபஸர்களும், லெக்சரர்களும் அமர்ந்திருந்தனர். இடை வெளியில், கல்லூரி மாணவிகள் அணி அணியாகவும் அலங்காரமாகவும் உட்கார்ந்திருந்தனர்.      கனம் நீதிபதியும், திருவாளர் சேதுபதியும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். மேடையின் பின்னணியில் பரமஹம்சரும் தேவியாரும் காட்சி அளித்துக் கொண்டிருந்தனர். அடர்ந்த ஊதுவத்தியின் நறுமணம் ஹாலைப் புனிதமாக்கிக் கொண்டிருந்தது. ராஜா, மேடையின் ஓரத்தில் அடக்கமாக நின்றுகொண்டிருந்தான்.

     சபையிலுள்ளவர்கள் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தபோது சங்கோசமும் கூச்சமும் அவனைச் சூழ்ந்துகொள்ளவே, திரைக்குப் பின்னால் மறைந்து கொண்டான்.

     முதலில், டாக்டர் குமாரி பார்வதி - சாரதாமணிக் கல்லூரியின் தலைவிதான் மேடைமீது பிரசன்னமானாள். பின்னோடு நீதிபதியும் சேதுபதியும் தொடர்ந்து வந்து நாற்காலியில் அமர்ந்தார்கள்.

     ‘இறை வணக்கம்’ என்று பார்வதி நிகழ்ச்சி நிரலை எடுத்துப் படித்ததும், பாரதியும் இன்னொரு மாணவியும் மேடைமீது வந்து பாடத் தொடங்கியதும் எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

     அடுத்தாற்போல் தலைவர்களுக்கு மாலை போடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஒரு சின்னக் காரியத்துக்காக ராஜா, தன்னைக் காலையிலிருந்தே தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான். கடைசியில் பிரின்ஸிபால் பார்வதி பேசுவதற்காக எழுந்து நின்றபோது, சபையில் எழுந்த கரகோஷ ஆரவாரம் அடங்க ஐந்து நிமிஷ நேரம் ஆயிற்று.

     “இவ்விழாவுக்குத் தலைமை தாங்க இசைந்துள்ள நீதிபதி அவர்களே! ஹாஸ்டலைத் திறந்து வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள திருவாளர். சேதுபதி அவர்களே!” என்று பேசத் தொடங்கியபோது மாணவிகள் மீண்டும் கை தட்டி மகிழ்ந்தனர்.

     முதலில் தலைவரைப்பற்றி நாலே வார்த்தைகளில் சுருக்கமாகப் பேசி அறிமுகப்படுத்தி முடிந்ததும், சேதுபதியைப்பற்றி ஆரம்பித்தாள். அவருடைய பெயரை உச்சரிக்கும்போதே பார்வதியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

     “திருவாளர் சேதுபதியைப் பற்றி நான் அதிகம் கூறத் தேவையில்லை. இந்த அழகான ஹாஸ்டலைக் கட்டிக் கொடுத்த பெருமை அவரையே சேரும். முதன்முதலில் நான் கொடை விஷயமாக நான் அவரைக் காணச் சென்றபோது அவர், ‘இப்போது எனக்கு நேரமில்லை. பின்னால் அவகாசம் கிடைக்கும்போது கூப்பிட்டு அனுப்புகிறேன்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். பெரிய மனிதர்கள் வழக்கமாகக் கூறும் பதில் இது தான் என்பது என்னைப்போல் நன்கொடை வசூலிக்கச் செல்பவர்களுக்கு நன்கு தெரியுமாகையால், அவர் கூறிய பதிலில் நம்பிக்கை இழந்தவளாய்த் திரும்பி வந்துவிட்டேன். அப்புறம் அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பவே இல்லை. அதைப்பற்றி நான் ஆச்சரியப்படவும் இல்லை. நாளை என்பதும் அப்புறம் என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம் என்று எண்ணிக்கொண்டேன். உண்மையாகச் சொல்கிறேன்; இவரும் அந்தப் பழமொழிக்கு விலக்கல்ல என்றே எண்ணியிருந்தேன்.

     ஆனால், நான் சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்த வாரமே எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்துடன் ஒரு செக்கும் இணைக்கப்பட்டிருந்ததைக் கண்டபோது, எனக்கு வியப்புத் தாங்கவில்லை.

     ‘தங்கள் கல்லூரியில் கட்டப்போகும் ஹாஸ்டலுக்காக இத்துடன் ஒரு சிறு தொகைக்குச் செக் அனுப்பியுள்ளேன். இதைக் கொண்டு ஹாஸ்டல் கட்டட வேலையைத் தொடங்கவும். மேற்கொண்டு ஹாஸ்டலை முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு ஆகும் செலவு எதுவானாலும், அது என்னுடைய தாகவே இருக்கட்டும்’ என்று அதில் எழுதியிருந்தது. அன்று அவர் அனுப்பியிருந்த அந்தச் சிறுதொகை எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் ரூபாய்தான்!”

     எவ்வளவோ கூட்டங்களில் பேசிப் பழக்கப்பட்ட பார்வதி, இந்த இடத்தில் மாணவிகள் பலமான கரகோஷம் செய்வார்கள் என்பதை எதிர்பார்த்து, தன் பேச்சைச் சற்று நேரம் நிறுத்திக் கொண்டாள். அவள் எதிர்பார்த்தபடியே கைதட்டல் ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று. அவள் மீண்டும் பேசத் தொடங்கினாள்.

     “திருவாளர் சேதுபதியைப் பற்றி நான் புகழப் போவதில்லை. காரணம், ஏற்கெனவே அவரைப்பற்றி அறிந்து கொண்டுள்ள நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகத் தோன்றாது. அத்துடன் இப்போது அவரைப் புகழ்ந்தால், அவர் கொடுத்த நன்கொடைக்காகப் புகழ்வதாகத்தான் என்று எண்ணத் தோன்றும். ஒருவன் தன் தாயாரை தன்னைப் பெற்றவள் என்பதற்காக மதிப்புக் கொடுக்காமல், அவள் லேடீஸ் கிளப் பிரஸிடென்டானவுடன் புகழ்வதைப் போலாகும்!”

     பார்வதி அதற்கு மேல் அதிகம் பேசாமல் சேதுபதி அவர்களை அழைத்துக் கட்டடத்தைத் திறந்து வைக்கும்படி கேட்டுக்கொண்டாள்.

     திருவாளர் சேதுபதி, காலஞ்சென்ற தமது மனைவி சரஸ்வதி அம்மாளின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துத் தமது கடந்த கால வாழ்க்கையில் நேர்ந்த அனு பவங்களை உருக்கமாகவும் சுருக்கமாகவும் கூறி முடித்து - “என்னுடைய துன்பகரமான நாட்களை யெல்லாம் பகிர்ந்து கொண்டு எனக்காகவே தன் வாழ்வைத் தியாகம் செய்த அந்த உத்தமியின் பெயரால் அமைந்துள்ள இந்த ஹாஸ்டலைத் திறந்து வைப்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். இது அவளுடைய இரண்டாவது ஞாபகச் சின்னம். முதலாவது சின்னம் சற்று முன் இங்கு வந்து இறைவணக்கம் பாடிய என் ஒரே மகளான பாரதி.

     இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளாகிய உங்களுக்கு நான் அதிகம் எதுவும் கூறப்போவதில்லை.

     கல்வி என்பது தலை மீது பெரிய அறிவு மூட்டையாகச் சுமப்பது அல்ல. அப்படியானால் பெரிய துணி மூட்டையைச் சுமக்கின்ற கழுதையை நல்ல உடை அணிந்திருப்பதாகக் கூற முடியுமா? இல்லை. ஒழுக்கத்தோடும் பண்போடும் வாழ்வதுதான் உண்மையான கல்வி. அத்தகைய கல்வியைத் தான் இக் கல்லூரி அளித்து வருகிறது. மற்றக் கல்லூரிகளுக்கு இது ஒரு வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது. நீங்கள் எல்லோரும் ஒளவையைப் போல் கல்வி அறிவு பெற்றவர்களாகி, உயர்ந்த பண்புடையவர்களாய்த் திகழவேண்டும் என்பது என் அவா. ஆனால், ஓளவையைப்போல் திருமண வாழ்க்கையே வேண்டாமென்று கூறிவிடக்கூடாது! (சிரிப்பு. - கரகோஷம் - ஆரவாரம்.)

     குடும்பக் கலை பற்றி எனக்குத் தெரியாது. நான் பழைய தலைமுறையைச் சேர்ந்தவன். நமது நாகரிகம் எல்லாத் துறைகளிலும் நாலடி உயர்ந்திருக்கிறது. முன்னெல்லாம் பாயில் படுத்து உறங்கினோம். இப்போது நாலடி உயரமான கட்டிலில் படுத்து உறங்குகிறோம். முன்னெல்லாம் மணையில் உட்கார்ந்து சாப்பிட்டோம். இப்போதோ மேஜைக்கு முன்னால் நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிடுகிறோம். நாற்காலியும் மேஜையும் போட்டுப் பிரசங்கங்கள் செய்கிறோம். இவ்விதம் எல்லாக் காரியங்களையுமே உயர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவையெல்லாம் உண்மையான உயர்வாகா. முக்கியமாக நமது பாரத நாட்டின் பண்பு உயர வேண்டும். அந்தப் பண்பை வளர்ப்பது குடும்பத்தின் தலைவிகளாகப் போகிற பெண்கள் கையில்தான் இருக்கிறது” என்று கூறி முடித்தார்.

     சொற்பொழிவு நிகழ்ச்சி முடிந்து, கலை விழா ஆரம்பமாவதற்குள் மணி எட்டரை ஆகிவிட்டது. பிரின்சிபால் பார்வதி முன்வரிசையில் போடப்பட்டிருந்த சோபாக்களில், தலைவர்களை அமரச் சொல்லித் தானும் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

     கலை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சேதுபதி அடிக்கடி தம் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்வதி கவனிக்கத் தவறவில்லை. மணி ஒன்பதுக்கு சேதுபதி இருக்கையை விட்டு எழுந்து வெளியே புறப்பட்டபோது, குழுமியிருந்தவர்கள் அத்தனை பேருடைய பார்வையும் அவர் மீதே பதிந்தது.

     பின்னோடு எழுந்த பார்வதி வாசல் வரை சென்று அவரை வழி அனுப்பிவிட்டு வந்தாள்.

     அவர் போன பிறகு விழாவே சாரமற்ற ஒரு சடங்காகப் போய்விட்டது அவளுக்கு. திரும்பி வந்து பழையபடியே தன் இருக்கையில் அமர்ந்தாள். நிலைகொள்ளவில்லை. பாரதியின் குறத்தி நடனம் நடந்து கொண்டுதானிருந்தது. ஆயினும் பார்வதியின் நினைவெல்லாம் அவரைப் பற்றியே சுழன்று கொண்டிருந்தது. அவர் சொற்பொழிவில் குறிப்பிட்ட கருத்துக்களை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தாள். ‘எவ்வளவு உயர்வான பேச்சு! எத்தகைய பெருந்தன்மையான நோக்கம் அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும்போது நாமே இமாலயம் போல் உயர்ந்து விட்டதாக அல்லவா எண்ணுகிறோம். அவர் எழுந்து சென்றதும், எவ்வளவு சிறியவர்களாகி விட்டோம்?’

     அவர் அமர்ந்திருந்த, இப்போது காலியாக வெறிச் சோடிக் கிடந்த அந்த நாற்காலியைப் பார்த்தாள் பார்வதி. சட்டென அவள் முகத்தில் வியப்புக்குறி தோன்றியது. அடுத்த கணம் அவள் இதழ்களில் தவழ்ந்த புன்முறுவல் மாயமாய் மறைந்தது. அவள் உள்ளம் உடனே விமான நிலையத்தை அடைந்தது.

     அரை மணி நேரத்திற்கெல்லாம் விழா முடிவு பெற்றது. தலைமை தாங்கிய கனம் நீதிபதியும் விடைபெற்றுக்கொண்டு விட்டார். கூட்டத்தினர் ஒவ்வொருவராக வந்து பார்வதியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்கள்.

     அமைதியற்ற நிலையில், பரபரக்கும் உணர்ச்சியுடன், தவித்துக்கொண்டிருந்த பார்வதி, அவர்களுக்கெல்லாம் இயந்திரம் போல் பதில் கூறி அனுப்பிவிட்டு, அவசரம் அவசரமாகத் தானே காரை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தை நோக்கி வேகமாகச் செலுத்தினாள். போகும் போது அவள் மனம் எண்ணமிட்டது.

     ‘இப்போது நான் விமானக்கூடத்தில் அவரைச் சந்திப்பேன் என்று அவர் எதிர்பார்க்கவே மாட்டார். என்னைக் கண்டதும் என்ன நினைத்துக் கொள்வார்! நானும் எங்காவது வெளியூருக்குப் போவதாக எண்ணிக் கொள்வாரோ? அல்லது, என்னைக் கண்டதும் வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக இருந்து விடுவாரோ? நானே அவரை அணுகி விஷயத்தைக் கூறிய பிறகு நிச்சயம் அவர் முகம் மகிழ்ச்சியால் மலரும். ‘ரொம்ப தாங்ஸ்’ என்று குறைந்தது நாலைந்து முறையாவது கூறாமல் இருக்க மாட்டார்.’

     அவள் விமானக் கூடத்தை அடைந்த சமயம் மணி பத்தேகால் தான். விமானம் புறப்படுவதற்கு இன்னும் பதினைந்து நிமிஷ நேரம் இருந்தது.

     பார்வதி உள்ளே போய் அவரைத் தேடிய போது, அவர் லெளஞ்சின் ஒரு மூலையிலிருந்த சோபாவில் அமர்ந்து தமது காரியதரிசியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

     பார்வதி அவர் எதிரில் போய் நின்றபோது அவர் வியப்பை வெளிக் காட்டாமல் லேசாகப் புன்முறுவல் பூத்தபடி “வாருங்கள்! நீங்களும் எங்காவது வெளியூர்...” என்று விசாரித்தார்.

     “தங்களைப் பார்க்கத்தான்...” என்று கூறினாள் பார்வதி.

     ‘அப்படி என்ன முக்கிய விஷயம்? இத்தனை நேரம் கல்லூரியில் தானே இருந்தேன்? அங்கேயே பேசியிருக்கலாமே?’ என்று மனத்திற்குள் யோசித்து எண்ணிக்கொண்டாலும், “என்னைப் பார்க்கவா? அப்படி என்ன முக்கிய விஷயம்?” என்றவர், “அடேடே, நிற்கிறீர்களே! இப்படி உட்காருங்கள்” என்று சோபாவைத் தன் கையினால் தட்டிப் பார்வதியை அமரச் சொன்னார்.

     மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்ட பார்வதி, தன் பையிலிருந்த அவர் மூக்குக் கண்ணாடியை எடுத்து, “இதோ இதை மறந்து வந்து விட்டீர்கள்! இது ரொம்ப அவசியமல்லலா? வெளியூருக்குப் போகுமிடத்தில் இது இல்லையென்றால் முக்கிய காரியமே தடைப்பட்டுப் போகும். வேறு எதை மறந்தாலும் பரவாயில்லை. வேறொன்று வாங்கிக் கொள்ளலாம். மூக்குக் கண்ணாடியை நினைத்த நேரத்தில் வாங்கிவிட முடியாதே! அதற்காகத்தான் நானே எடுத்துக்கொண்டு அவசரமாக வந்து சேர்ந்தேன்!” என்றாள்.

     மூக்குக் கண்ணாடியை மறந்து வந்து விட்ட விஷயம் சேதுபதிக்கு அப்போது தான் புரிந்தது.

     “அடாடா! மிக்க நன்றி! நாளைக்கு முக்கியமான டாகுமென்ட்டுகளையெல்லாம் படித்துக் கையெழுத்துப் போட வேண்டும். அந்த நேரத்தில் இது இல்லையென்றால் ரொம்பத் தடுமாற்றமாய்ப் போயிருக்கும். இதன் முக்கியத்தை உணர்ந்து தாங்கள் இவ்வளவு அக்கறையோடு இதைக் கொண்டு வந்து கொடுத்ததற்குத் தங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை” என்றவர், “...ம்... விழா ரொம்பச் சிறப்பாக நடந்தது. ஏற்பாடு அதைக் காட்டிலும் சிறப்பாயிருந்தது” என்றார்.

     “தங்கள் பேச்சு விழாவுக்கே சிகரம் வைத்தது போல் அமைந்து விட்டது” என்று பார்வதி பதில் கூறினாள்.

     அவர்களிடைய சம்பாஷணை இரண்டு அல்லது மூன்று நிமிடமே நீடித்தது. இதற்குள் “பம்பாய் செல்லும் பிரயாணிகள் விமானத்துக்குச் செல்லவும்” என்ற அசரீறி அறிவிப்பு ஒலித்தது.

     “நான் வரட்டுமா?” என்று எழுந்து நின்று கைகூப்பி வணங்கி விட்டு விமானத்தை நோக்கி நடக்கலானார் சேதுபதி. பார்வதியின் முகம் ஏன் ஒளியிழந்து உற்சாகமிழந்து போயிற்று?

     விமானத்தில் போய் அமர்ந்து கொண்ட சேதுபதி, கண்ணாடிப் பலகணியின் வழியாகப் பார்வதியையே பார்த்துக் கொண்டிருந்தார். உறுதி உறைந்த அந்த உள்ளத்தை ஏதோ ஒன்று அசைத்தது. பார்வதியுடன் சிறிது நேரம்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆயினும் அவளை விட்டுப் பிரியும்போது வெகு நாள் பழகிவிட்ட ஒருவரைப் பிரிந்து செல்வதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது அவருக்கு

     ஆறுமாதங்களுக்கு முன் முதல் தடவையாக அவள் தன்னைப் பேட்டி காண வந்தது, தன்னிடம் சுற்றி வளைக்காமல் விஷயத்தைச் சட்டென்று தொடங்கிச் சுருக்கமாகப் பேசியது, இன்று மேடையில் தன்னை அறிமுகப் படுத்தியது, முன் யோசனையுடன் மூக்குக் கண்ணாடியை எடுத்து வந்து கொடுத்தது எல்லாமே அவர் உள்ளத்தில் இனிமையான, பசுமையான நினைவுகளாகப் பதிந்து விட்டன. தன்னை அறியாமலே அவளிடம் தன் மனம் லயித்திருப்பதை உணர்ந்தார். ‘அது ஏன்?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டார். அது அவருக்கே புரியவில்லை.

     விமானம் வெகு உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. தன்னை மறந்த நிலையில் அந்த விமானத்தையே பார்த்துக் கொண்டு சிலையாக நின்றாள் பார்வதி.