உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
குருத்து இருபத்தொன்று ‘திருமண விஷயம்’ என்று தான் கூறியதும், அந்த விஷயத்தை அறிந்து கொள்ள சேதுபதி மிகுந்த ஆர்வம் காட்டுவார் என்று பார்வதி எதிர்பார்த்தாள். ஆனால், விஷயம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தபோதிலும் நிதானமிழந்து பரபரப்புக் காட்டுவது அவருடைய சுபாவமல்லவே! சேதுபதி கூறப்போகும் பதிலை எதிர்பார்த்தவளாய், அவர் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி. சற்று நேரம் புன்முறுவலோடு மெளனமாகவே அமர்ந்திருந்த சேதுபதி, “எனக்கு இதில் துளியும் ஆட்சேபணை இல்லை... ஆனால்...” என்று பாதியில் பேச்சை நிறுத்திக் கண்களை மூடிக்கொண்டார். “தேவி இவர் மனத்தில் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறார். ஒரு வேளை நான் கூறுவதை விபரீதமாகப் புரிந்து கொண்டு விட்டாரோ?” பார்வதியின் உள்ளத்தில் திக் கென்றது. “ராஜா, பாரதியின் சம்மதம் தான் இதில் முக்கியம். திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள் அவர்கள் தானே” என்று பேச்சை முடித்தார் சேதுபதி. நிதானம், உறுதி, மன ஆழம் இம்மூன்றையும் மீறி நின்றது அவருடைய அறிவுக் கூர்மை! ‘திருமண விஷயம் என்றதும், அது ராஜா - பாரதி திருமணம் பற்றியதுதான் என்பதை எவ்வளவு எளிதில் ஊகித்து விட்டார். ஊகித்ததோடு மட்டுமின்றி, தம் யூகத்தில் சந்தேகமே இல்லாதவர்போல் தீர்மானமாக ‘அவர்கள் இரண்டு பேர் சம்மதம்தானே இதில் முக்கியம்?’ என்றல்லவா கூறுகிறார்? ராஜா - பாரதி திருமணம் பற்றித் தான் நான் பேசுவேன் என்பதை அவர் எவ்வாறு அறிந்து கொண்டார்? ஒருவேளை என் உள்ளத்தில் மறைந்து கிடக்கும் ரகசியங்களை யெல்லாம் கூடத் தெரிந்து கொண்டு தெரியாதவர் போல் நடித்துக் கொண்டிருப்பாரோ?’ அவருடைய அறிவை, ஆற்றலை, நெஞ்சத்தின் ஆழத்தை அளக்கும் சக்தி பார்வதிக்கு இல்லை. வியப்புக் காரணமாகச் சிறிது நேரம் பேசவே இயலாமல் கிடந்த பார்வதி, கடைசியாகக் கேட்டாள்: “ராஜா - பாரதி திருமணம் பற்றித்தான் நான் பேசப் போகிறேன் என்பதைத் தாங்கள் எப்படி ஊகித்தீர்கள்? என்னால் உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை...!” உணர்ச்சி வசப்பட்டிருந்த பார்வதியின் குரலில் வியப்பும் தடுமாற்றமும் கலந்திருந்தன. “எனக்குத் தெரியும், பாரதியைத் தாங்கள் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருவதை நான் அறிவேன். அவள் ராஜாவுடன் நெருங்கிப் பழகத் தாங்கள் இடமளித்திருப்பதும் தெரியும். பாரதியிடம் தாங்கள் கொண்டுள்ள அன்பு உள்ளத்தோடு ஒட்டியது. எவ்வளவோ தொந்தரவுகளுக்கும் கவலைகளுக்குமிடையில் பாரதியின் எதிர்காலத்தைப்பற்றி மிகுந்த அக்கறை காட்டி வருகிறீர்கள். ஒரு கல்லூரியின் பிரின்ஸிபாலாக இருந்தும், அவளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க முன்வந்தீர்கள். இப்போது உடல் நிலை சரியில்லாத போதும் அவளைத் தங்களுடனேயே வைத்துக்கொண்டு, தங்களுக்குப் பக்கத்திலேயே படுக்கச் சொல்லி அன்பு பாராட்டி வருகிறீர்கள். இதுக்கெல்லாம் என்ன காரணம் இருக்க முடியும்? தங்களுடைய அந்தரங்கத்தைப் புரிந்து கொண்டுதான் பாரதியும் ராஜாவும் நெருங்கிப் பழகுவதை நான் ஆட்சே பிக்கவில்லை.” “அப்படியானால் தங்களுக்கு இத்திருமணத்தில் பூரண சம்மதம் என்று சொல்லுங்கள்...” “அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதால் நம் எதிர்கால வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும் என்றே நினைக்கிறேன்...” ‘ஐயோ! என் உள்ளத்தில் இருக்கும் ரகசியத்தை இவர் ஞான திருஷ்டியால் அறிந்தது போலல்லவா சொல்கிறார்?’ பார்வதிக்கு வியப்புத் தாங்கவில்லை. உண்மையில் அவள் எண்ணிக் கொண்டிருந்ததும் அது தானே? ‘ராஜாவை, அவனுடைய குழந்தைப் பருவம் முதல் சொந்தத் தாயைப்போல் அன்புடன் சீராட்டி வளர்த்து வருகிறேன். ராஜாவுக்கு அவன் தாய் தந்தை இருவரையுமே தெரியாது. அவனை என் மடியிலே போட்டு அமுதூட்டி வளர்த்திருக்கிறேன். அவன் நோயுற்ற காலங்களில் தோளிலே சுமந்து சென்று சிகிச்சை செய்து வந்திருக்கிறேன். ராஜா இன்று பெரியவனாக வளர்ந்து, படித்து, பாஸ் செய்து திருமணம் செய்து கொள்ளும் பருவத்தை அடைந்துவிட் டான். ராஜாவின் திருமணமும் நடந்துவிட்டால் என் வாழ்க்கையின் லட்சியம் பூர்த்தியாகிவிடும். ஆனால் இந்த நேரத்தில், காலம் கடந்த காலத்தில், பருவமற்ற பருவத்தில் என் உள்ளத்தில் வீண் சபலத்துக்கு இடமளித்து விட்டேன். திருவாளர் சேதுபதியைச் சந்தித்தபோது என் இதயத்தில் தோன்றிவிட்ட உணர்வு, காலம் கடந்த உணர்வு தான். அந்த வித்து முளைவிட்டு, இலைவிட்டுச் செடியாகி இப்போது பெரிய மரமாகவே வளர்ந்துவிட்டது. முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய செடியை மரமானபின் வாள் கொண்டு அறுக்க முற்பட்டிருக்கிறேன்.’ ‘சோடாபுட்டியின் நெஞ்சுக்குள்ளே புகுந்து ஊசலாடும் கண்ணாடிக் கோலியைப்போல் அந்த உணர்வு என் உள்ளத்தில் புகுந்து அழித்துக் கொண்டிருக்கிறது. இதை என்னால் விழுங்கி ஜீரணம் செய்து கொள்ளவோ, வெளியே துப்பவோ முடியவில்லை. இப்படி எத்தனைக் காலத்துக்கு அந்த உணர்வை என்னுள்ளேயே வைத்து மறுகுவேன்? இதற்கு முடிவே கிடையாதா?’ ‘என் அந்தரங்கத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்தச் சேதியை அவரிடம் வெளிப்படையாக எடுத்துச் சொல்லிவிட வேண்டும் என்று நானும் எத்தனையோ முறை முயன்று பார்த்துவிட்டேன். ஆனால் அதற்குரிய தைரியம் எனக்கு வரவேயில்லை. அவரை நேரில் காணும்போது என் தைரியமெல்லாம் பறந்து போய் விடுகிறது. உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் ஆற்றலையே இழந்து விடுகிறேன். அவர் நினைவாகவே, அந்த நினைவின் பயனாக ஏற்பட்ட கவலையின் விளைவாகவே உள்ளம் திடம் குலைந்து, உடல் பலவீனமுற்று மயக்கமாகக் கீழே சாய்ந்து விட்டேன்.’ ‘அன்று முதல் படுத்த படுக்கையாகவே கிடக்கிறேன். இந்த நிலையிலும் என் நெஞ்சம் அவருடைய நேசத்தை மறக்க மறுக்கிறது. அவரும் என்னை மறந்துவிடுவார் என்று தோன்றவில்லை. அவர் மன ஆழத்தை என்னால் காணவே முடியவில்லை தான். ஆனாலும் அவர் உள்ளம் எனக்குப் புரிகிறது. அவர் அன்பு உள்ளத்தில் எனக்கு இடமளித்திருக்கிறார் என்பதை நான் அறிவேன். இருவருமே ஒருவரை யொருவர் நேசிக்கிறோம். அந்த நேசத்தை வாய்விட்டுக் கூற முடியாத நிலையில் பழகி வருகிறோம். இந்த நிலை இனியும் நீடிக்கக் கூடாது. அதற்குள்ள ஒரே வழி ராஜா - பாரதியின் திருமணம்தான். பாரதி அவருடைய சொந்த மகள். ராஜா என்னுடைய சொந்த மகனைப் போல் வளர்ந்தவன். அதாவது ராஜாவுக்கு நான் தாய். பாரதிக்கு அவர் தந்தை. பாரதிக்கும் ராஜாவுக்கும் திருமணத்தை நடத்தி விட்டால் எங்களிருவருக்குமிடையே உள்ள உறவு மாறிவிடும். அவர் எனக்குச் சம்பந்தியாகி விடுவார். அப்புறம்? அவர் மகளுக்கும் என் மகனுக்கும் கலியாணம் செய்து வைத்துவிட்ட பிறகு, எங்களிருவருக்குமிடையே வளர்ந்து வரும் அந்த உணர்வுக்கு இடமில்லாமல் போய்விடுமல்லவா? ராஜா திருமணத்தின் மூலமாகத்தான் என் உள்ளப் போராட்டத்துக்கு முடிவு காண முடியும்? அப்புறம் தான் நானும் அவரும் அமைதியாக வாழ முடியும். சஞ்சலமின்றிப் பழக முடியும்.’ இதுதான் பார்வதியின் திட்டம். நீண்ட சிந்தனைக்குப் பிறகு ஏற்பட்ட முடிவு. இப்போது சேதுபதியிடம் விஷயத்தைச் சொல்லியும் விட்டாள். ராஜா - பாரதி திருமணத்தின் அடிப்படையில், பார்வதியின் அந்தரங்கமான திட்டம் மறைந்து கிடப்பதை சேதுபதி அறிவாரா? அவர் சர்வ சாதாரணமாக, பாரதி - ராஜா திருமணத்தால் ஏற்படப் போகிற உறவை எண்ணிப் பாராமலேயே, ஒப்புக்கொண்டு விட்டாரா? ‘பார்வதியும் அவரும் வெகு தூரத்துக்கு வெகுதூரம் மீண்டும் நெருங்க முடியாத அளவுக்குப் பிரிந்து போய்விடப் போகிற சூழ்ச்சியை அறியாமல் தான் இந்தச் சம்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டாரா? அல்லது அறிந்து தான் ஒப்புக்கொண்டாரா?’ சலனமற்ற அவர் முகத்திலிருந்து, அமைதியான பதில் விருந்து. பார்வதியினால் எதையுமே விளக்கிக் கொள்ள முடியவில்லை. அவர் பச்சைக் குழந்தை போல் கள்ளம் கபடமின்றிச் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். பார்வதியைப் பொறுத்தவரை பெரும்பாரம், நீண்ட நாட்களாகச் சுமந்து கொண்டிருந்த இதயச்சுமை அந்தக் கணமே கீழே இறங்கிவிட்டத்தைப் போல் தோன்றியது. “அடுத்த வாரத்திற்குள்ளாகவே திருமணத்துக்கு முகூர்த்தம் வைத்து விடுகிறேன்... எனக்கும் கூடப் பாரதியின் திருமணத்தைச் சீக்கிரமே முடித்துவிட வேண்டுமென்ற ஆசைதான். ராஜா, என்ஜினியரிங் படித்திருக்கிறான். என்னுடைய தொழிற்சாலையின் முழுப்பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு நான் வெளிநாடுகளுக்குச் சென்று வரப் போகிறேன். நாளைக்கே திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன். கலியாணத்தைக் கூட இந்த வீட்டிலேயே நடத்திவிடலாம். தங்களுக்கு உடல் நலம் சரியில்லாததால் தாங்கள் இங்குமங்கும் அலையக் கூடாது. தாங்கள் இருக்குமிடத்திலேயே திருமணத்தை நடத்துவதுதான் நல்லது...” “பாரதியும் காமாட்சியும் இந்த வீட்டுக்கு வந்த வேளை நல்லவேளை தான்...” என்றாள் பார்வதி உற்சாகத்தோடு. “ஆமாம்; தங்களுக்கும் உடம்பு குணமாகி விட்டால் அப்புறம் எல்லாம் சந்தோஷமாக முடிந்துவிடும். நேரமாகிறது... நான் போய்விட்டு நாளைக்கு வருகிறேன். தாங்கள் இரவு நிம்மதியாகத் தூங்குங்கள்” என்று கூறி விட்டுப் புறப்பட்டார் சேதுபதி. சேதுபதி காரில் ஏறிச் செல்லும் வரை அவரையே கண் கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. அவளுடைய மனவேதனையும் நெஞ்சத்தின் நீங்காத நிழலும் அகன்று உள்ளம் லேசாகிவிட்ட உணர்வு, சேதுபதியின் மீது தோன்றிய இரக்க உணர்வு, ராஜா பாரதிக்குத் திருமணம் என்கிற மன நிறைவு. இவ்வளவும் கதம்பமாக அவளைக் குழப்பி உணர்ச்சி வசமாக்கிவிட்டன. கார் மறைந்ததும், அவள் மெதுவாகத் திரும்பி நடந்தாள். உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றித் தோன்றி அவளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தின. அவள் மெதுவாக அடிமேல் அடி வைத்து நடந்தாள். கால்கள் தள்ளாடின. கண்களில் லேசாக இருள் கவிந்து மின்மினிப் பூச்சிகள் பரக்கத் தொடங்கின. பார்வதிக்கு எதுவுமே தெரியவில்லை. மாடிப் படிகள் வரை சென்று படிகளைக் கடந்து மேலேயும் போய் விட்டாள். தாழ்வாரத்தை நெருங்கிய போது ஒரேயடியாக இருட்டிக் கொண்டு வந்தது. தாழ்வாரத்துச் சுவர், படிகள் அனைத்தும் சுழன்று சுழன்று வந்தன. “ராஜா!” என்று சத்தமிட்டுக் கூப்பிட எத்தனித்தாள். நாக்குத் தடுமாறி நெஞ்சு உலர்ந்து வார்த்தைகள் வெளி வர மறுத்துவிட்டன. அடுத்த கணமே, தான் கீழே விழுந்துவிடப் போகிறோம் என்கிற உணர்வு தோன்றவே, மாடிப் படிகளின் கைப்பிடியை ஆதாரமாகப் பிடித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தபோதே அவள் மயக்க முற்றுச் சாய்ந்து விட்டாள். “அத்தை! அத்தை” என்று அலறிக்கொண்டே ஓடி வந்த ராஜா, பார்வதியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். அதே சமயம் பாரதி, காமாட்சி, ஞானம் மூவரும் பரபரப்புடன் ஓடிவந்து பார்வதியைக் கட்டிலுக்குத் தூக்கிச் சென்றனர். அடுத்த கணமே டாக்டருக்கும், சேதுபதிக்கும் தகவல் கொடுக்க போனுக்கு ஓடினான் ராஜா. |