உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
குருத்து இருபத்திரண்டு “தங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் தயவுசெய்து இன்று மாலை இங்கே வந்து போக முடியுமா?” என்று பார்வதி டெலிபோனில் அழைத்தபோது, சேதுபதி ஒரு கணம் ஒன்றும் புரியாமல் திகைத்தார். ‘எதற்காக அழைக்கிறாள்? அப்படிப்பட்ட முக்கிய விஷயம் என்னவா யிருக்கும்?’ என்ற ஆவலும் பரபரப்பும் அவர் உள்ளத்தில் எழுந்தன. அவரால் இன்னதென்று ஊகிக்க முடியவில்லை. பார்வதியை முதன்முதலாகச் சந்தித்ததிலிருந்து அவர் மன அமைதி இழந்து எந்நேரமும் அவளைப் பற்றியே எண்ண மிட்டுக் கொண்டிருந்தார். அவளை அடிக்கடி சந்திக்கவும் அவளோடு உரையாடிக் கொண்டிருக்கவும் அவர் அந்தரங்கத்தில் அடங்காத ஆர்வம் இருந்து வந்தது. ஆயினும், தம்முடைய இதயத்தில் பொங்கிக் கொண்டிருந்த அந்த உணர்வை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நீறுபூத்த நெருப்பாக மறைத்து வைத்திருந்தார். பார்வதியை நேரில் சந்திக்கும் சமயங்களில் அவருடைய துணிவு, ஆற்றல் அனைத்தும் மறைந்து போய் சின்னஞ் சிறு குழந்தையாகி விடுவார். உள்ளத்தில் பொங்கும் ஆசைகளை யெல்லாம் அடக்கிக் கொண்டு பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டுத் திரும்பி விடுவார். பார்வதி அன்று டெலிபோனில் அழைத்தபோது அவர் உள்ளத்தில் மீண்டும் அந்த ஆசை கொழுந்துவிடத் தொடங்கியது. “ஒரு வேளை இன்று தன் அந்தரங்கத்தை வெளியிடத்தான் அழைக்கிறாளோ?” என்று பரபரப்படைந்தார். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது. சற்றும் தயக்கமின்றி என் இதயத்தை அவள் அறியச் செய்யப் போகிறேன். அவளாகவே சங்கோசமின்றித் தன் எண்ணத்தை எடுத்துக்கூறும் அளவுக்குச் சூழ்நிலையை உண்டாக்கப் போகிறேன். இவ்வாறு முடிவு செய்து கொண்டவராய் “ஓ! வருகிறேன். அவசியம் வருகிறேன்” என்று பார்வதிக்குப் பதில் கூறினார். அன்று மாலை இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது சேதுபதி ஒவ்வொரு கணமும் பார்வதியிடமிருந்து வரப்போகும் அந்த வார்த்தைகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தபடியே அவள் பேச்சைத் தொடங்கினாள். திருமணம் பற்றிய பேச்சுத்தான். ஆனால், அது அவர்களுடைய சொந்தத் திருமணம் பற்றியதல்ல. ராஜா - பாரதியைப் பற்றியது. சேதுபதி ஏமாற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் அவருக்கு அது ஏமாற்றமும் இல்லை. பார்வதியின் அழைப்பு எதற்காக இருக்கும் என்று அவர் பலவாறு யோசித்துப் பார்த்த போதிலும் எந்த ஒரு நிச்சயமான முடிவுக்கும் வந்துவிடவில்லை. ஆகவேதான், திருமணம் விஷயம் என்று பார்வதி கூறியபோது அவர் சிறிதும் பரபரப்படையவில்லை. பார்வதி பின் குரலில் உணர்ச்சியோ பரபரப்போ இல்லாமற் போகவே சேதுபதிக்கு உடனேயே விளங்கி விட்டது. மிக அமைதியாகச் சற்று நேரம் மெளனப் புன்னகையில் ஆழ்ந்திருந்தவர், ‘ராஜா - பாரதியின் சம்மதம் தான் இதில் முக்கியம். திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள் அவர்கள் தானே?’ என்று வெகு சாவதானமாகப் பேச்சை முடித்தபோது பார்வதிக்கு வியப்புத் தாங்கவில்லை. பார்வதி மயக்கமுற்றுக் கீழே சாய்ந்து விட்டாள் என்று செய்தியை ராஜாவின் மூலம் அறிந்த சேதுபதி திடுக்கிட்டு நின்றார். அடுத்த சில நிமிடங்களுக்குள் பார்வதியின் இல்லத்துக்கு வந்துவிட்ட அவர், தமக்குத் தெரிந்த டாக்டர்களை யெல்லாம் டெலிபோனில் அழைத்துப் பார்வதிக்குச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார். “மறுபடியும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார். இந்த பலவீனமான நிலையில் எந்த ஒரு சிறு கவலைக்கும் மனத்தில் இடம் வரக்கூடாது. ரத்தக் கொதிப்பு அதிகமாயிருப்பதால் ரொம்ப எச்சரிக்கையோடு கவனித்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்று கூறிய டாக்டர்கள், மருந்துகளின் பெயரைச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்கள். பார்வதி மயக்க நிலை தெளிந்து கண் விழித்துப் பார்த்த போது மணி இரண்டு. சேதுபதி மெளனமாகத் தன் அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டபோது பார்வதிக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது. கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்தபடியே “நீங்களா?” என்று ஈனமான குரலில் கேட்டாள். அவளுடைய குரலில், பார்வையில் உலகத்துக் காதல் மகா காவியங்களின் சோகமனைத்தும் ஏக்கமனைத்தும் பிரதிபலித்தன. மெலிந்த தன் கரங்களை உயர்த்தி ஏதோ சொல்ல வாயெடுத்தாள்; பேச முடியவில்லை. “நீங்கள் பேசக்கூடாது... மனத்தில் எந்தக் கவலையும் வைத்துக் கொள்ளக்கூடாது...” சேதுபதி அவள் கரங்களைத் தீண்டி அமர்த்தி நிதானமான குரலில் பேசினார். “எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இனி நான் நிம்மதியாக வாழ்வேன். ராஜா - பாரதி திருமணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்.” பார்வதி தட்டுத் தடுமாறிக் கூறி முடித்தாள். “அவர்கள் திருமணத்துக்கு இப்போது என்ன அவசரம்? தாங்கள் பூரணமாகக் குணமடைந்து பழையபடி கல்லூரிக்குப் போகத் தொடங்கியதும் வைத்துக் கொள்ளலாமே” என்றார் சேதுபதி. “தயவு செய்து எந்தக் காரணத்துக்காகவும் ராஜா - பாரதி திருமணத்தைத் தள்ளிப் போடாதீர்கள். என்னுடைய உடல் நலம் சரியில்லாததாலேயே தான் அவர்கள் திருமணத்தை உடனே நடத்திவிட வேண்டுமென்று துடிக்கிறேன்...” இந்தத் திருமணத்தால் தனக்கும் பார்வதிக்கும் ஏற்படக் கூடிய உறவு முறைபற்றிச் சேதுபதி எண்ணிப் பார்க்காமலில்லை. பார்வதியின் மன அமைதிக்காக அவர் தம்முடைய ஆசைகளை யெல்லாம், உள்ளத்தில் நீண்ட காலமாகப் புதைத்து வைத்திருந்த கனவுகளையெல்லாம் தியாகம் செய்துவிடத் தீர்மானித்து விட்டார். “தங்கள் விருப்பப்படியே திருமணத்தைக் கூடிய சீக்கிரம் நடத்தி விடுகிறேன். இன்னும் சில தினங்களுக்குள் இந்த வீட்டிலேயே அவர்கள் திருமணம் நடைபெறும்...” சேதுபதியின் உறுதிமொழி பார்வதிக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. “தாங்கள் இனி எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. நாளைக் காலையில் நான் மீண்டும் வந்து பார்க்கிறேன்... காமாட்சி! நீ பார்த்துக் கொள்கிறாயா? தூங்கிவிடப் போகிறாய்... பாவம்! உனக்குத்தான் சிரமம்” என்று கூறி விட்டுப் புறப்பட்டார் சேதுபதி. திரும்பிச் செல்லும்போது அவர் உள்மனம் அவரைக் கேட்டது. ‘சேதுபதி! அவள் மீண்டும் மயக்கமுற்றுக் கீழே விழுவானேன்? உன்னுடன் ராஜா - பாரதி திருமணம் பற்றிப் பேசியபோது மகிழ்ச்சியோடு தானே காணப்பட்டாள்? அதிர்ச்சிக்கோ, கவலைக்கோ அதில் என்ன இருக்கிறது? உனக்கும் அவளுக்கும் ஏற்பட இருந்த உறவு முறை மாறி விட்டது என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணமோ? அப்படி யானால், ‘அமைதி நிம்மதி’ என்பதெல்லாம் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் பேச்சுத்தானா?’ ஒரு வாரம் கடந்தது. பார்வதியின் உடல் நிலையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. எழுந்து நடக்கவும் சக்தியற்றவளாய்ப் படுத்த படுக்கையாகவே கிடந்தாள் அவள். டாக்டர்கள் மட்டும் வேளை தவறாமல் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஆனால் அவள் உடல் நிலையில் மட்டும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. இந்த நிலையில் திருமணத்தை நடத்துவதற்கு வேண்டிய உற்சாகமோ ஊக்கமோ சேதுபதிக்கு எங்கிருந்து வரும்? ‘திருமணத்தைத் தள்ளிப் போடுவதால் நிலைமை மாறலாம். இதற்குள் பார்வதியின் மனமும் மாறலாம்’ என்ற சபலம் அவர் உள்ளத்தில் ஒரு பக்கம் ஒளிந்து கொண்டிருந்தது. ஆனாலும் பார்வதிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் அவர் சிறிதும் தயக்கம் காட்டவில்லை. திருமண ஏற்பாடுகள் ஜாம் ஜாம் என்று நடந்து கொண்டிருந்தன. “காமாட்சி! அடுத்த வெள்ளிக் கிழமை முகூர்த்தம். நிச்சயம் செய்திருக்கிறேன். இன்னும் ஏழே நாட்கள் தான்... கலியாணத்தை இந்த வீட்டிலேயே நடத்திவிட வேண்டியதுதான். இப்போதுள்ள நிலையில் பார்வதியால் ஓர் அடியும் அப்பால் நகர முடியாது...” என்றார் சேதுபதி. “ஆயிரம் காலத்துப் பயிர்; ஆறஅமர யோசித்துக் கொஞ்சம் நிதானமாகச் செய்யலாமே...” என்றாள் காமாட்சி. “முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் பார்வதியோ அவசரப் படுகிறாள். இந்த விஷயத்தில் அவள் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை. எப்படியும் பாரதியும் ராஜாவும் ஒரு நாளைக்குக் கணவன் மனைவியாக வாழ வேண்டியவர்கள் தானே?... சுப காரியங்களைச் சீக்கிரமே முடிப்பது நல்லது தான்” என்றார் சேதுபதி. “அதுவும் சரிதான்; நீயே மாடிக்குப் போய் சேதியைச் சொல்லிவிடு...” என்றாள் காமாட்சி. சேதுபதி மாடிக்கு ஏறிச் சென்றபோது பார்வதி மிக்க மகிழ்ச்சியுடன் “அடுத்த வெள்ளிக் கிழமையா முகூர்த்தம்? ரொம்ப சந்தோஷம்! முகூர்த்தப் புடவைகளெல்லாம் நானேதான் ‘ஸெலக்ட்’ செய்யப் போகிறேன். பாரதிக்கு நகை நட்டுகளெல்லாம் ரொம்ப வேண்டாம். கலியாணத்தை ஆடம்பரமாகச் செய்ய வேண்டாம். முக்கியமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பினால் போதும். மேளத்தைக் கொட்டித் தாலியைக் கட்டி ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டு விடலாம். அதுவே போதும். பந்தல் கூட ரொம்பப் பெரிதாக வேண்டாம்'' என்றாள் பார்வதி. “எனக்கும் அதே ஐடியாதான். கலியாணங்களின்போது ஆடம்பர முறைகளில் பணத்தை விரயம் செய்வது எனக்கும் கட்டோடு பிடிக்காது.” “பல விஷயங்களில் நாம் இருவரும் ஒரே மாதிரியான கருத்துகளையே கொண்டிருக்கிறோம்...” என்று மறை பொருளாகக் கூறிக் கண் சிமிட்டினாள் பார்வதி. “ஆமாம்; அந்தக் கருத்துகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டுச் சொல்லிக் கொள்ளச் சந்தர்ப்பம் தான் ஏற்படுவதில்லை...” என்று சூட்சுமமாகவே பதில் கொடுத் தார் சேதுபதி. “அண்ணா! ஜவுளிகளை இங்கேயே கொண்டு வர சொல்லு ; பார்வதியே பார்த்து முடிவு செய்யட்டும்...” என்றாள் காமாட்சி. “ஏழெட்டு ஜவுளிக் கடைகளை இங்கு அனுப்பி வைக்கிறேன், போதுமா?” என்று சிரித்துக் கொண்டே புறப்பட்டார் சேதுபதி. கலியாண ஏற்பாடுகள் துரித காலத்தில் நடந்து கொண்டிருந்தன. ராஜாவும் பாரதியும் தாங்கள் மணமக்கள் என்பதைக்கூட மறந்து ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்! “இன்னும் மூன்றே தினங்கள் தான்... இன்னும் இரண்டே நாட்கள் தான்” என்று ஒவ்வொரு நாளும் கவலையோடு சொல்லிக்கொண்டிருந்தாள் காமாட்சி. பார்வதி கட்டிலில் படுத்த வண்ணமே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள். ராஜாவும் பாரதியும் கூட்டாகவே ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்ட அவள், “பாரதி! நாளை மறுதினம் ராஜா உனக்குக் கணவனாகப் போகிறான். ஆகையால் நீ அவனிடம் கொஞ்சம் வெட்கப்படுவதுபோல் நடிக்க வேண்டும்” என்று கேலி செய்தாள். “போங்க அத்தை! எனக்கு வெட்கமாயிருக்கிறது!” என்றான் ராஜா. “இதோ பார்த்தீர்களா, வேஷ்டி சட்டை” என்று கூறிக் கொண்டே கையில் ஜவுளிகளுடன் வந்து சேர்ந்தார் சேதுபதி. “வேட்டி சட்டையா? யாருக்கு? ராஜாவுக்கா?... ரொம்ப சீப்பாக வாங்கி விட்டீர்களே! சிக்கனத்தை மாப்பிள்ளை டிரஸ்ஸிலேயே ஆரம்பித்து விட்டீர்களோ?” என்று கேட்டாள் பார்வதி. “இது மாப்பிள்ளை டிரஸ் இல்லை; வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே, செவிட்டுப் பெருமாள், அவனுக்கு” என்றார் சேதுபதி. பார்வதி சிரித்து விட்டாள். “ஆமாம், திருமணம் நடக்கப்போகிற விஷயம் அவனுக்குத் தெரியுமா?...” “மேளம் வாசிக்கிறபோது என்ன சத்தம் என்று கேட்காமலா இருப்பான்? அப்போது தெரிந்துகொள்கிறான்” என்று கூறிச் சிரித்தான் ராஜா. “நேற்றுப் பந்தல் போடும்போதே, ‘என்ன விசேஷம்!’ என்று கேட்டான். நான் சங்கதியைச் சொன்னபோது அவனுக்கு ஆனந்தம் தாங்கவில்லை” என்றார் சேதுபதி. “பாவம்! ரொம்ப காலமாக நம்ம வீட்டிலேயே கிடக்கிறான்... ஆமாம்; இந்தப் புடவை யாருக்கு? ரொம்ப நன்றாக இருக்கிறதே!” என்று கேட்டாள் பார்வதி. “பிடித்திருந்தால் நீங்கள் தான் கட்டிக் கொள்ளுங்களேன். பனாரஸ் பட்டு - நல்ல கலர்...” என்றார் சேதுபதி. அப்போது பார்வதியின் முகம் வெட்கத்தால் சிவந்து மாறியதைச் சேதுபதி கவனிக்கத் தவறவில்லை. “இம்மாதிரி ஒரு புடவை வாங்கிக் கொள்ள வேண்டுமென்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை...” என்றாள் பார்வதி. “தங்களுக்கு இம்மாதிரி ஒரு புடவை வாங்கித் தர வேண்டுமென்று எனக்கும் தான் ரொம்ப நாளாக ஆசை!” என்று சேதுபதி கூறவில்லை. மனத்தில் எண்ணிக்கொண்டார். ‘இந்தப் புடவை தனக்குப் பிடிக்குமென்று அவருக்கு எப்படித் தெரிந்தது?’ மனத்திற்குள்ளாகவே ஒரு வியப்புக் குறியை எழுப்பிக்கொண்டு யோசிக்கலானாள் பார்வதி. ஹாஸ்டல் திறப்பு விழாவன்று பார்வதி இதே மாதிரி புடவை ஒன்று தான் கட்டியிருந்தாள். அந்தக் கலர் அவள் தேக அமைப்புக்கு மிகவும் பொருத்தமாயிருந்ததைச் சேதுபதி அன்றே குறிப்பாகக் கவனித்து வைத்திருந்தார். இப்போது அதை மறந்துவிட்ட பார்வதிக்குச் சேதுபதி வாங்கி வந்த சேலையைக் கண்டதும் வியப்புத் தாங்கவில்லை. வெள்ளிக்கிழமை காலை குறித்த நேரத்தில் கெட்டி மேளம் முழங்க பெரியோர்கள் ஆசீர்வதிக்க ராஜாவுக்கும் - பாரதிக்கும் அக்னி சாட்சியாகத் திருமண வைபவம் நடந்தேறியது. மாடியில் கட்டிலில் படுத்தபடியே திருமணக் காட்சிகளைத் தன் அகக் கண்ணால் கண்டு களித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோட மானசீகமாக மணமக்களை வாழ்த்திக் கொண்டிருந்தாள் அவள். திருமணச் சடங்குகள் யாவும் முடிந்ததும் ராஜாவும் பாரதியும் சேதுபதியை வணங்கி எழுந்தனர். “முதலில் மாடிக்குச் சென்று அத்தைக்கு நமஸ்காரம் செய்யுங்கள்” என்று கூறி, அவர்களை மேலே அழைத்துச் சென்றார் சேதுபதி. தான் வாங்கிக் கொடுத்த அந்த பனாரஸ் பட்டுப் புடவையை அணிந்து கொண்டு பார்வதி கட்டிலில் படுத் திருப்பதைக் கண்ட சேதுபதிக்கு மெய் சிலிர்த்தது. “அத்தை! நமஸ்தாரம் பண்ணுகிறோம்” என்றான் ராஜா. “தீர்க்காயுசுடன் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வேண்டும்” என்று கூறியபடியே படுக்கையில் சாய்ந்திருந்த பார்வதி எழுந்து உட்கார்ந்து மணமக்களைத் தன் இரு கைகளாலும் தழுவிக் கொண்டாள். “என் ஆசை நிறைவேறி விட்டது; இனி எனக்கு நிம்மதி தான்; இப்படியே கண்களை மூடி விட்டாலும் கவலையில்லை. பாரதி! என் அருகில் வா...” என்று பாரதியின் கரங்களைப்பற்றி அழைத்த பார்வதி, அவள் தலையை அன்போடு வருடி, “நீ இன்று ரொம்ப அழகாக இருக்கிறாய்? என் ராஜா ரொம்ப அதிஷ்டக்காரன்” என்றாள். பாரதியின் மணக் கோலத்தைக் கண்டபோது சேதுபதிக்குத் தமது மனைவி சரஸ்வதியின் ஞாபகம் தோன்றி விடவே துக்கம் நெஞ்சை அடைத்தது. சரஸ்வதியின் சாயலாகவே காட்சி அளித்த தம் மகளைப் பார்த்தபோது சேதுபதியின் கண்களில் நீர் துளித்தது. அவர் கண்கள் கலங்குகுவதைக் கண்ட பார்வதியின் நெஞ்சம் உணர்ச்சி வசத்தால் நெகிழ்ந்தது. |