குருத்து இருபத்து மூன்று

     வாசலில் காட்டியிருந்த வாழை மரங்களும், மாவிலைத் தோரணங்களும் வாடி வதங்கிச் சருகாகிக் கொண்டிருந்தன. திருமணம் நடந்த வீட்டில் காணக் கூடிய குதூகலம், ஆரவாரம், விருந்து வைபவம், விருந்தாளிகள் நடமாட்டம் எதுவுமே அங்கு இல்லை.

     பார்வதியின் நிலை வரவர மோசமாகிக் கொண்டே போயிற்று. இப்போதெல்லாம் அவள் மாடியை விட்டுக் கீழே இறங்கிச் செல்லவும் சக்தியற்றவளாகிப் படுத்த படுக்கையாகவே கிடந்தாள். ராஜாவும் பாரதியும் எந்நேரமும் அவள் அருகிலேயே இருந்து பணிவிடை புரிந்து கொண்டிருந்தனர். சேதுபதி பெரிய பெரிய டாக்டர்களை அழைத்து வந்து, பார்வதிக்குச் சிகிச்சை அளிக்கச் செய்து, அவளைப் பழைய நிலைக்கு மீட்டு விடுவதில் முனைந்திருந்தார்.

     “பார்வதி குணமடைந்து பழையபடி சந்தோஷமாக வாழவேண்டும்” - இதுதான் அவருடைய லட்சியமாக இருந்தது. அவளுடைய உயிருக்காக, வாழ்வுக்காக அவர் எதையுமே தியாகம் செய்யத் தயாராயிருந்தார்.

     கண்களை மூடியபடியே சேதுபதியைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருந்த பார்வதிக்கு வியப்புத்தான் மேலிட்டது. என் மீது அவர் ஏன் இத்தனை அக்கறை காட்டவேண் டும்? அன்று அவர் எனக்காக ஆசையோடு வாங்கி வந்த மாதுளம் பழங்களை நான் ஏறிட்டுப் பாராமல் அலட்சியம் செய்ததைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை! எவ்வளவு பெருந்தன்மையான குணம்? நான் பண்பற்றவள். அவரோடு ஒப்பிடும்போது மிக மிக அற்பமானவள். அவருடைய பெருந்தன்மையோடு உயர் குணத்தோடு நற்பண்போடு என்னை நான் ஒப்பிட்டுப் பார்க்கவே தகுதியற்றவள்... எனக்காக அவர் எதையும் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறார். என் மகிழ்ச்சிக்காக, மன அமைதிக்காகத் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் சித்தமாயிருக்கிறார்.

     ‘ராஜா - பாரதி திருமணத்தை உடனே முடிக்கவேண்டு மென்று நான் கேட்டுக் கொண்டபோது சற்றும் தயங்காமல் யோசிக்காமல், தாமதிக்காமல் ‘ஆகட்டும்; முடித்து விடுகிறேன்’ என்று பதில் கூறினாரே? தம்முடைய ஒரே மகளின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிச் சிறிதேனும் சிந்தித்துப் பாராமல் திருமணம் செய்துவைக்க இசைந்தாரே! இதற்கெல்லாம் என்ன காரணம்?’

     ‘அந்த உத்தமரை நான் அலட்சியம் செய்யவில்லை. என் இதயக் கோயிலில் அவரை நிரந்தரத் தெய்வமாக்கிப் போற்றிக் கொண்டிருக்கிறேன். அவரிடம் நான் கொண்டுள்ள மாசற்ற அன்பு காரணமாகவே சில சமயங்களில் தவறு இழைத்து விட்டுப் பின்னர் அதைப்பற்றி எண்ணி எண்ணி வேதனைப் படுகிறேன். தேவி! என்னை நீதான் மன்னிக்க வேண்டும் என்று அன்னையை வேண்டிக் கொள்கிறேன். அன்று அவர் ஆசையோடு வாங்கி வந்த மாதுளம் பழங்களை நான் அலட்சியம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்தான். ஆயினும் அந்தக் குற்றத்தை அவர் பெருந்தன்மையோடு மறந்து விட்டார். மீண்டும் அம்மாதிரி அவர் ஏதேனும் எனக்காக வாங்கி வரும்போது அதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சந்தர்ப்பம் எனக்கு விரைவிலேயே கிடைத்துவிட்டது. திருமணத்தின்போது அவர் எனக்காக வாங்கி வந்த பனாரஸ் பட்டுப் புடவையை நான் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டேன். அந்தப் புடவையை நான் உடுத்தியிருப்பதை கண்டதும் அவர் கண்களில் வீசிய ஒளி, என்னை மெய் சிலிர்க்கச் செய்தது. என் வாழ் நாள் முழுவதும் நினைவில் வைத்துக் குதூகலப்படுவதற்கு அந்த ஒரு நிகழ்ச்சியே போதும் எனக்கு.’

     “அத்தை தங்கள் பெயருக்குத் திருமண அழைப்பிதழ் ஒன்று வந்திருக்கிறது...” என்று கூறிக்கொண்டே விரைந்து வந்தான் ராஜா.

     “யாருக்குத் திருமணம்?... படித்துச் சொல்லு?” ஆவலுடன் கேட்டாள் பார்வதி.

     “மீனாட்சிக்கும் - கோபாலனுக்கும் வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று மதுரையில் திருமணமாம். அது யார் அத்தை மீனாட்சி? மதுரை மீனாட்சி அம்மனுக்குத்தான் ஏற்கெனவே திருமணம் நடந்தாகி விட்டதே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் ராஜா.

     “எங்கே? அழைப்பிதழை இப்படிக் காட்டு பார்க்கலாம்...” என்று கேட்டாள் பார்வதி.

     “வேண்டாம் அத்தை! உங்களால் படிக்க முடியாது. நானே முழுதும் படிக்கிறேன்” என்று கூறிப் படிக்கத் தொடங்கினான் ராஜா.

     “மீனா என்கிற மீனாட்சிக்கும்” என்று அவன் தொடங்கிய போதே “ஓகோ, நம்ம மீனாவுக்கா?” என்றாள் பார்வதி.

     “யார் அத்தை அது மீனா?”

     “என் காலேஜில் வாசித்துக் கொண்டிருந்த பெண். டென்னிஸ் நன்றாக விளையாடுவாள். சரி... சரி... இப்போது எல்லாம் புரிந்துவிட்டது. ரொம்ப சந்தோஷம். வருகிற ஞாயிற்றுக்கிழமையன்றா முகூர்த்தம்... ம்... இந்தக் கலியாணத்துக்கு நான் நேரில் போகவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உன் கலியாணத்தையே கீழே வந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு...” என்று பெருமூச்செறிந்தாள்.

     “ராஜா ! இவர்களுக்கு என் பெயரால் ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பிவிடுகிறாயா?”

     “ஆகட்டும் அத்தை?” ராஜா கீழே போய்விட்டான்.

     பார்வதிக்கு மூச்சுத் திணறியது. ‘ரத்தக் கொதிப்புள்ளவர்கள் உடம்பையோ, மனசையோ அலட்டிக் கொள்ளக் கூடாது. மூச்சு விடாமல் பேசவும் கூடாது’ என்று டாக்டர்கள் கூறிய வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன.

     அன்றிரவு சேதுபதி பார்வதியைக் காண வந்தபோது மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. காமாட்சி மாடி வராந்தாவில் தூங்கிக் கொண்டிருந்தாள். உள்ளே எட்டிப் பார்த்தபோது கட்டிலில் பார்வதி அசைவற்றுப் படுத்துக் கொண்டிருப்பது நிழலாகத் தெரிந்தது. சேதுபதி மெதுவாக நடந்து போய், கட்டிலுக்கருகில் நின்று பார்வதியைக் கவனித்தார். மூச்சு லேசாக இழையோடிக் கொண்டிருந்தது. பலவீனமாகத் திராணியற்றுக் கிடந்த அவள் நிலையைக் கண்ட சேதுபதியின் உள்ளம் வேதனைக்குள்ளாயிற்று. மெளனமாகவே, சந்தடியின்றி வராந்தாவுக்குத் திரும்பி வந்தவர், “காமாட்சி!”என்று மெதுவான குரலில் அழைத்தார்.

     பகலெல்லாம் உழைத்துக் களைத்துப் போயிருந்த காமாட்சிக்குச் சேதுபதியின் குரல் எங்கோ பாதாளத் திலிருந்து ஒலிப்பது போல் கேட்டது. அவள் திரும்பிப் படுத்துக் கொண்டாள். மீண்டும் “காமாட்சி!” என்று சேதுபதி அழைத்த பிறகே, அவள் விழிப்படைந்து எழுந்து உட்கார்ந்தாள்.

     “ரொம்ப நேரமாயிற்றா அண்ணா நீ வந்து...”

     “இல்லை, காமாட்சி! இப்போது தான் வந்தேன்... பார்வதி ஏதாவது ஆகாரம் சாப்பிட்டாளா? அவளுக்கு இப்போது எப்படி இருக்கிறது?”

     “எதுவுமே சாப்பிடவில்லை. சாயந்திரம் கொஞ்ச பழரசம் பிழிந்து கொடுத்தேன். அதில் பாதியைக் குடித்து விட்டுப் பாதியை அப்படியே வைத்து விட்டாள். எனக்கென்னவோ அவள் நல்லபடி பிழைத்தெழுந்திருக்க வேண்டுமே என்று ஒரே கவலையாயிருக்கிறது, அண்ணா!”

     “நம்மால் முடிந்ததையெல்லாம் செய்து பார்த்து விடலாம் காமாட்சி! எப்படியும் அவள் பிழைத்து விடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

     “நீயும் பணத்தைப் பணம் தான்று பாராமல் தான் செலவழித்துக் கொண்டிருக்கிறாய்! மூன்று மாதமாக இதே கவலை தான் உனக்கு. நல்ல படியாக அவள் பிழைத்தெழுந்திருக்க வேண்டும்.” பெருமூச்சு விட்டாள் காமாட்சி.

     “நீ உடலால் உழைக்கிறாய். நான் பொருளைத்தானே செலவழிக்கிறேன்? உயிருக்கு விலை கிடையாது. பணம் இன்று வரும். நாளை போகும். பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது. அவள் உயிரைக் காப்பாற்ற நான் எதையுமே இழந்துவிடத் தயாராயிருக்கிறேன். பார்வதியைப் போன்ற ஓர் அறிவாளியை, உத்தமியை, உழைப்பாளியை அபூர்வமாகத்தான் காண முடியும்...”

     கண்களை மூடியபடியே கட்டிலில் சாய்ந்து கிடந்த பார்வதிக்குச் சேதுபதியின் வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அவள் கண்களில் நீர் மல்கியது.

     “உயிருக்கு விலை கிடையாது. பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது” என்ற வார்த்தைகள், அவள் இதயத்தை நெகிழ வைத்தன. அன்றொரு நாள் தொழிற்சாலை தீப்பற்றி எரிந்துவிட்டதென்ற செய்தியைக் கேட்டபோது கூட, அவர் பரபரப்புடன் “உயிர்ச்சேதம் உண்டா?” என்று கேட்டது அவள் நினைவுக்கு வந்தது. ‘பணத்தைக் காட்டிலும் உயிரை அவர் எவ்வளவு உயர்வாக மதிக்கிறார்?’ அவருடைய குரல் மீண்டும் கேட்கவே பார்வதி அவர் பேச்சை ஆவலோடு கவனித்தாள்.

     “காமாட்சி! இந்தக் கலியாணத்தை முடிப்பதில் நான் அவசரப்பட்டு விட்டதாக உன் நினைப்பு அல்லவா? நான் அப்போது சொன்ன காரணம் உனக்கு அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும். உண்மைக் காரணத்தை இப்போது சொல்கிறேன், கேள்.

     நான் சரஸ்வதியை மணக்கு முன் ஒரு நாள் பார்வதியைப் பெண் பார்க்கப் போயிருந்தேன். மாமாவும் மாமியும் என்னோடு வந்திருந்தார்கள். பார்வதி அப்போது சாம்பசிவம் என்ற பெரியவர் ஒருவருடைய ஆதரவில் இருந்து வந்தாள். நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது தூளியில் படுத்திருந்த குழந்தை ஒன்று வீறிட்டு அழத் தொடங்கியது. பார்வதி ஓடிச்சென்று அந்தக் குழந்தையை எடுத்துத் தன் இடுப்பிலே வைத்துக் கொண்டாள். மாமாவுக்கும் மாமிக்கும் இந்தச் சம்பந்தத்தில் அவ்வளவாகத் திருப்தி இல்லை. எனவே, ‘பின்னால் தெரியப்படுத்துகிறோம்’ என்று கூறிவிட்டு வந்து விட்டார்கள். எனக்குப் பார்வதியைப் பிடித்திருந்த போதிலும், அவளையே மணந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருந்த போதிலும், மாமாவின் விருப்பத்துக்கு மாறாகப் பேசும் நிலையில் அப்போது நான் இல்லை. எனவே மெளனமாகத் திரும்பி விட்டேன். அப்புறம் தான் சரஸ்வதிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. பின்னர், சரஸ்வதியின் மூலமாகப் பார்வதியைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டேன். அவளுடைய அன்பிலும் ஆதரவிலும் அப்போது வளர்ந்து கொண்டிருந்த குழந்தை வேறு யாருமல்ல. அவளுடைய அண்ணன் மகன் ராஜாவேதான் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

     அன்று முதல், பார்வதியின் எதிர்கால வாழ்வுக்கு இடையூறு செய்துவிட்ட பெரும் குற்றம் என் உள்ளத்தை அரித்து கொண்டேயிருந்தது. அந்தக் குற்றத்துக்குப் பிராயச்சித்தமாக ஏதேனும் ஒருவகையில், என்றாவது ஒருநாள், ஏதாவது ஒன்றைச் செய்துவிட வேண்டுமெனச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தை ஆண்டவன் எனக்கு இப்போதுதான் ஏற்படுத்திக் கொடுத்தார். பாரதியை ராஜாவுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவள் வெளியிட்ட போது நான் சற்றும் யோசிக்காமல், தயங்காமல், தாமதிக்காமல் சட்டென ‘ஆகட்டும்’ என்று பதில் கூறியதற்கு இதுவே காரணம்.”

     சேதுபதி பேச்சை முடித்தார். இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, ‘ஓகோ, பெண் பார்க்க வந்த விஷயத்தை இவர் இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறாரா? மறந்துவிட்டார் என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன்?’ என்று தனக்குள் வியந்து கொண்டாள்.

     “நான் வருகிறேன் காமாட்சி! நேரமாகிறது... பாரதியை எங்கே காணோம்?” சேதுபதி விசாரித்தபடியே புறப்பட்டார்.

     “அவளும் ஞானமும் கீழே படுத்திருக்கிறார்கள் அண்ணா! ராஜா வெளியே போயிருக்கிறான். அவனுடைய நண்பர்களெல்லாம் சேர்ந்து கொண்டு அவனுக்கு ‘டீ பார்ட்டி’ வைத்திருக்கிறார்களாம்...”

     “அப்படியா?” சேதுபதி கீழே இறங்கிப் போய் விட்டார்.

     கோடை விடுமுறை தீர இன்னும் ஏழெட்டு நாட்களே இருந்தன. சாரதாமணிக் கல்லூரி அடுத்த திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டுவிடும். பார்வதிக்குக் கல்லூரியைப் பற்றிய கவலை வந்துவிட்டது. விளையாட்டுப் போல் மூன்று மாதங்கள் ஓடி மறைந்துவிட்டன. இந்த இடைக்காலத்தில் எத்தனை மாறுதல்கள்!

     தான் பூரண குணமடைந்து, மறுபடியும் கல்லூரிக்குச் செல்லும் நாளை அவள் கற்பனை செய்து பார்த்துக்கொண்டாள். அந்த நினைப்பில் அவள் உடலெங்கும் ஓர் இன்பம் பரவியது. மூன்று மாத இடைவேளை மிகக் குறுகிய காலம் தான். அதிலும் இரண்டு மாதங்கள் விடுமுறையில் கழிந்து விட்டன. ஆனாலும் அதுவே அவளுக்கு மூன்று யுகங்களாகத் தோன்றி, மீண்டும் கல்லூரியைக் காண்போமா என்ற ஏக்கமே பிறந்துவிட்டது. இதற்கு முன் அவள் கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் தங்கிய நாளே கிடையாது. கல்லூரிக்குப் போய் ஒரு முறை அதைக் கண்ணால் பார்த்துவிட்டு வர வேண்டும் என்னும் பேராவல் அவள் உள்ளத்தை உந்தியது.

     ‘மணி என்ன இருக்கும்?’ என்று அவள் யோசித்த போதே, கீழே முன் வாசல் ஹாலில் மாட்டப்பட்டிருந்த பிரெஞ்சு நாட்டுக் கெடியாரம் மணி பத்தரை என்பதைக் குளுமையாக ஒலித்து அறிவித்தது.

     அப்போதே ராஜா ஸ்கூட்டரில் வரும் ஒலியும் கேட்டது. அவன் வந்ததும் வராததும் வேகமாக மாடிக்கு ஏறி வந்து, “அத்தை எடம்பு எப்படி இருக்கிறது?” என்று பரிவோடு விசாரித்தான்.

     “நான் அதிக நாள் பிழைத்திருப்பேன் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது ராஜா!” என்று பார்வதி கூறியதும் ராஜா துக்கம் தொண்டையை அடைக்க “அப்படியெல்லாம் சொல்லாதீங்க அத்தை! நீங்கள் செளக்கியமாகப் பிழைத்து எழுந்து பழையபடி ‘ஜம்’மென்று காலேஜுக்குப் போகப் போறீங்க. நான் உங்களைக் காரில் கொண்டுவிடப் போறேன், இது நிச்சயம்” என்றான்.

     “ம்... என்னவோ பார்க்கலாம்” எனக் கூறிய பார்வதி சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு “ராஜா” என்று அழைத்தாள்.

     “என்ன அத்தை!”

     “எனக்குக் கல்லூரியைப் பார்க்க வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது. தயவுசெய்து என்னைக் காரில் அழைத்துக் கொண்டு போகிறாயா?”

     “என்ன அத்தை இது! மணி பதினொன்று அடிக்கப் போகிறது. இராத்திரி வேளை. உங்க உடம்பு இருக்கிற நிலையிலே வெளியிலே போவதா?”

     “தடங்கல் சொல்லாதே ராஜா! நான் இப்போதே போய்ப் பார்க்க வேண்டும். நீதான் உதவி செய்யவேண்டும். உன் தோளைப் பற்றிக்கொண்டு நான் மெதுவாகக் கீழே இறங்கி வந்து விடுகிறேன்...”

     “அத்தை எனக்குப் பயமாயிருக்கிறது. சேதுபதிக்குத் தெரிந்தால் என்னைக் கோபித்துக் கொள்ளுவார். நான் வர மாட்டேன்...”

     “நீ வரமாட்டாயா ராஜா? கண்டிப்பாய்க் கேட்கிறேன். ஒரே வார்த்தைதான்; சொல்லி விடு. முடியாதா?”

     ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தயங்கினான், கடைசியில் அத்தையின் பேச்சைத் தட்ட முடியாமல் “சரி அத்தை புறப்படுங்க...” என்றான்.

     அடுத்த கணமே பார்வதி கட்டிலை விட்டு மெதுவாக எழுந்தாள். ஞானத்தைத் தவிர, வீட்டில் எல்லோருமே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

     பார்வதி ஞானத்தை அழைத்து, “கல்லூரிக்குப் போய் விட்டு அரை மணியில் திரும்பி வந்து விடுகிறேன். வீட்டைப் பார்த்துக்கொள்” என்று புறப்பட்டாள்.

     ஞானம் தடுக்கவில்லை. வெளியில் புறப்படும்போது தடையாக எதுவும் சொல்ல விரும்பாததால் மெளனமாகத் தலையசைப்பதைத் தவிர, அவளால் வேறு ஒன்றும் செய்ய முடிய வில்லை.