குருத்து இருபத்தி நான்கு

     ராஜா அத்தையைத் தாங்கி அணைத்துக் கீழே கொண்டு போய் விட்டான். பார்வதிக்கு மூச்சுத் திணறியது. எப்படியோ காரில் ஏறிப் பின் சீட்டில் சாய்ந்துகொண்டாள்.

     வாசல் கேட்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கிடப்பது கார் வெளிச்சத்தில் பளிச்செனத் தெரிந்தது.

     “அத்தை! இவனுக்கு உன்னைப் பார்க்க வேண்டுமாம். மாடிக்கு ஏறி வர முடியவில்லையாம். 'அம்மாவுக்கு உடம்பு ஏப்படி இருக்கிறது?' என்று என்னைத் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறான்...”

     “நீ என்ன சொன்னாய்?”

     “‘இப்போது பரவாயில்லை’ என்று அவனிடம் சொல்லி விட்டேன். இல்லையென்றால் அவன் இருக்கிற நிலையில் மாடிப் படியேறி வந்து எங்காவது விழுந்து வைப்பானே!” என்றான் ராஜா.

     “பாவம், நன்றியின் சின்னம் இவன்!” என்று இரக்கப் பட்டாள் பார்வதி.

     கார், கல்லூரிக் காம்பவுண்ட் கேட்டை நெருங்கிய போது பார்வதி சுற்றுமுற்றும் பார்த்தாள். மிஸஸ் அகாதா ஒற்றைக் காலை விந்தி விந்தி நடந்து வருவது போலவும் பார்வதியைக் கண்டதும் வலது கையை உயர்த்தி, ‘ஹல்லோ குட்மார்னிங்’ என்று கூறுவது போலவும் ஒரு பிரமை தோன்றியது அவளுக்கு. ‘மிஸஸ் அகாதா - பாவம் மிக நல்லவள்; கடமை தவறாதவள்’ என்று எண்ணிக் கொண்டாள்.

     அடுத்த நிமிஷம் கார் பார்வதியின் ஆபீஸ் அறைக்கு முன்னால் போய் நின்றது. ஓடி வந்து கதவைத் திறப்பதற்கு அங்கே அட்டெண்டர் ரங்கசாமி இல்லை. ஆனாலும் அந்தக் காட்சியைத் தன் கற்பனையால் கண்டு மகிழ்ந்து கொண்டாள் பார்வதி.

     “ராஜா! என்னைக் கொண்டு போய் என் அறையில் விடு!”

     ராஜா அவளைத் தூக்கிக்கொண்டு போய் மெதுவாக நாற்காலியில் உட்கார வைத்துவிட்டான்.

     இழந்ததெல்லாம் திரும்பி வந்துவிட்டது போன்ற ஒரு பெருமிதம் ஏற்பட்டது அவளுக்கு. ஆசையோடு டெலிபோனைத் தொட்டுப் பார்த்தாள். அதைத் தன் கையால் எடுத்துப் பேசி எத்தனை நாளாயிற்று! அதன்மீது புழுதி படிந்து கிடப்பதைக் கண்டு தானே அதைத் துடைக்கப் போனாள். இதற்குள் ராஜா டஸ்ட்டரை எடுத்து வந்து அதைத் துடைத்துவிட்டான்.

     பார்வதி மேஜை மீதிருந்த காலிங் பெல்லைத் தட்டி விட்டு அதன் ஒலியைக் கேட்டுச் சிறு குழந்தை போல் சிரித்துக் கொண்டாள். பின்னர், அறை முழுவதையும் ஒருமுறை கண்ணோட்டமிட்டு அனுபவித்துவிட்டு, “ராஜா! புதிய ஹாஸ்டல் மண்டபத்துக்குப் போகலாம் வா” என்று கூறியவள் அவன் தோளைப் பற்றிக்கொண்டாள்.

     ராஜா அத்தையை ஹாலுக்குத் தூக்கிச் சென்றான்.

     பொன் விழாவன்று அந்த ஹாலில் சேதுபதி பேசிய பேச்சு, தன்னுடைய சொற்பொழிவு, அவருக்குப் பக்கத்து ஸீட்டில் தான் அமர்ந்திருந்தது, மூக்குக் கண்ணாடியை அவர் மறந்து சென்றது, அதை விமான கூடத்தில் கொண்டு போய்க் கொடுத்தது எல்லாம் கண்முன் ஒவ்வொன்றாகத் தெரிந்தன. அவள் கண்களை நீர் மறைத்தது. கடைசியாக அந்த இடத்தைவிட்டு எழுந்து கல்லூரியின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று அங்குள்ள ஜடப் பொருள்கள் ஒவ்வொன்றுடனும் மானசீகமாக உரையாடிவிட்டு மனத்திருப்தியோடு மகிழ்ச்சியோடு காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

     வாசலில் இருந்த வேப்பங்கன்று அவள் பார்வையில் விழுந்தது. “ராஜா! காரைக் கொஞ்சம் நிறுத்து” என்று கூறி அந்தச் செடியைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

     “நான் வைத்த கன்று. இப்போது எவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டது! இதற்கு யாராவது தண்ணீர் ஊற்றுகிறார்களோ இல்லையோ?” என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டவள், “ம்... புறப்படு போகலாம்” என்றாள்.

     கார் வீட்டை அடைந்தது. ராஜாவுக்கு ஒரே திகில் அத்தையை நல்லபடி கொண்டு சேர்த்துவிட்டான். மேலே கொண்டுபோய்க் கட்டிலிலும் படுக்க வைத்தாகி விட்டது. அப்புறம் தான் அவனுக்கு மூச்சு வந்தது.

     ஞானத்தை ஹார்லிக்ஸ் கொண்டுவரச் சொல்லி அத்தையின் களைப்புத் தீரக் குடிக்கச் சொன்னான். அவளால் ஒரு வாய்க்கு மேல் அருந்த முடியவில்லை. அன்றிரவெல்லாம் அவள் “வேப்பங்கன்று... அகாதா!...'' என்று ஏதோதோ வாய் பிதற்றிக் கொண்டிருந்தாள்.

     காலையில் பொழுது விடிந்தபோது அவள் பேசக்கூடச் சக்தியற்றவளாய்ப் படுத்துக் கிடந்தாள்.

     நல்ல வேளையாக அன்று அகாதாவே அவளைப் பார்க்க வந்துவிட்டாள். விடுமுறையைக் கழிக்க பங்களூருக்குப் போயிருந்தவளுக்குப் பிரின்ஸிபாலைப் பார்க்கவேண்டும் போல் தோன்றவே, ஒரு வாரம் முன்னதாகவே திரும்பி வந்துவிட்டாள்.

     “அத்தை! அகாதா வந்திருக்கிறார்” என்று ராஜா கூறுயதும், பார்வதி கண் விழித்துப் பார்த்தாள். அகாதாவைக் கை ஜாடை காட்டி அருகில் அழைத்து அமரச் சொன்னாள். அகாதாவுக்கு உணர்ச்சி பொங்கித் துக்கம் நெஞ்சை அடைத்தது.

     “அகாதா! நேற்றெல்லாம் உன் ஞாபகமாகவே இருந்தேன், நீயே வந்துவிட்டாய்! கல்லூரியை நீ தான் கவனித்துக் கொள்ள வேண்டும்.” பார்வதியால் அவ்வளவுதான் பேசமுடிந்தது. மூச்சு முட்டித் திணறவே கண்களை மூடிக் கொண்டாள்.

     “ரெஸ்ட் எடுத்துக் கொள்ளட்டும்; அவரை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம்” என்று கூறிவிட்டு, அகாதா விடை பெற்றுக்கொண்டாள்.

     அன்று மாலை சேதுபதி வந்தபோது மணி மூன்று இருக்கும்.

     கீழே அவர் ராஜாவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு பார்வதி எழுந்து உட்கார்ந்து கொண்டாள். அவளுக்கு அவரைக் காணவேண்டும் போலிருந்தது. மெதுவாகக் கட்டிலை விட்டு இறங்கி அறைக்கு வெளியே வந்து நின்றாள்.

     “அத்தை... அத்தை ! எதுக்காக எழுந்து வந்தீங்க?” என்று கூவியபடியே ராஜா அவளைத் தாங்கிக்கொள்ள ஓடி வந்தான்.

     “ராஜா! என்னைக் கீழே படுக்க வை. எனக்கு ஏதோ மாதிரி இருக்கிறது. நெஞ்சை வலிக்கிறது. அவர் வந்திருக்கிறாரா?” இவ்வளவுதான் அவளால் பேச முடிந்தது. சேதுபதி அவள் எதிரில் வந்து நின்றபோது பார்வதி அவருடன் ஏதோ பேச முயன்றாள். ஆனால் முடியவில்லை, அவள் கண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. “எனக்கு ஒரு குறையுமில்லை. தங்களுடன் பூரணமாக வாழ்ந்துவிட்ட நம்மதியுடன் நான் போகிறேன்.” அந்தப் பார்வையின் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

     அவ்வளவுதான், அடுத்த சில மணி நேரத்துக்குள், பார்வதியின் கதை முடிந்து விட்டது.

     “அத்தை!” வீறிட்டு அலறிவிட்டான் ராஜா. ஊரே பார்வதியின் இல்லத்தில் கூடித் தலை குனிந்து நின்றது.

     ‘பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது. அதற்காக நான் எதையும் இழக்கத் தயார்’ என்று கூறிய சேதுபதி பச்சைக் குழந்தை போல் ஒரு மூலையில் விசும்பிக் கொண்டிருந்தார்.

     கண்ணுக்கு லட்சணமாகக் காட்சி அளிப்பதைத் தவிர, விசிறி வாழையினால் யாருக்கும் எவ்விதப் பயனும் கிடையாது. பார்வதியின் வாழ்வும் அத்தகையதுதான். அவள் கடைசிவரை கன்னியாகவே, கண்ணுக்கு லட்சணமான காட்சிப் பொருளாகவே வாழ்ந்துவிட்டுப் போய் விட்டாள். அவளுடைய சொந்த வாழ்க்கை விசிறி வாழையைப்போல், காட்டில் காய்ந்த நிலவைப்போல், பயனற்ற ஒரு வாழ்க்கையாக முடிந்துவிட்டது.

     சாரதாமணிக் கல்லூரி, விடுமுறை முடிந்து திறக்கப்பட்டதும், மாணவிகளும் ஆசிரியைகளும் பிரார்த்தனை மண்டபத்தில் கூடி நின்றார்கள். பார்வதியின் ஆத்மா சாந்திக்காக அவர்கள் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டுக் கலைந்தனர். சில தினங்களுக்கெல்லாம் கஸ்தூரி பிரார்த்தனை மண்டபத்துக்கெதிரில் பார்வதி துளசிச் செடியாக வந்து வளர்ந்து கொண்டிருந்தாள்.

     சேதுபதியின் இல்லத்தில் முன் வாசல் கூடத்தில் பார்வதியின் படம் மாட்டப்பட்டிருந்தது. அதன் முன்னால் கைகட்டி நின்று கொண்டிருந்தார் அவர். அந்த இடத்தில் தான் பார்வதி டியூஷன் சொல்லிக் கொடுப்பது வழக்கம்.

     ஆம்; அவர் கரத்தால் தீண்டிய சரஸ்வதியின் படம் சேதுபதியின் ஆபீஸ் அறையை அலங்கரித்தது. கருத்தால் தீண்டிய பார்வதியின் படம் முன் வாசல் ஹாலை அலங்கரித்தது.