உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முடிவுரை “ஒரு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா?” உற்சாகமாகப் பேச்சைத் தொடங்கினார் நண்பர். “சொல்லுங்கள்” என்று நானும் ஆர்வத்துடன் கதை கேட்கத் தயாரானேன். “நான் கூறப்போவது ஒரு புதுமையான காதல் நவீனம். மற்றக் காதல் கதைகளோடு இதை ஒப்பிட முடியாது. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த கதை. இதில் வரும் கதாநாயகிக்குக் கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு வயதாகிறது. கதாநாயகருக்கு அவளைக் காட்டிலும் ஏழெட்டு வயது கூட இருக்கும். ஒருவரை ஒருவர் அந்தரங்கமாக நேசிக்கிறார்கள். அதன் விளைவாக மனப் போராட்டங்களுக்கும் கொந்தளிப்புகளுக்கும் ஆளாகிறார்கள். இறுதியில் கதாநாயகி இறந்து விடுகிறாள். அவர்களிடையே தோன்றும் உணர்வு, அதைக் காதல் என்றே கூறலாம் - அமரத்துவம் பெற்று விடுகிறது. இதுதான் கதை. எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். மிகச் சிறந்த கதை என்று பதில் கூறிவிட்டுக் கதையைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி விட்டேன் நான். கதை சொன்னது யார் தெரியுமா? கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளைக் கதாபாத் திரங்களாகக் கொண்டு தொடர்கதைகள் எழுதுவதில் வல்லமையும் புகழும் பெற்றுள்ள ‘சேவற்கொடியோன்’ தான், காதலுக்குரிய வயதைக் கடந்துவிட்ட கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இவர் கதை எழுத முற்படுவானேன்? சந்தேகம் ஏற்பட்டது. ஆயினும் அதை உடனேயே சொல்லவிட விருப்பமின்றி, “மிக உயர்ந்த கதை எழுதுவதற்கு மிகுந்த ஆற்றலும் அனுபவமும் வேண்டும்” என்றேன். “இந்தக் கதையை நான் எழுதுவதாக உத்தேசமில்லை. அதற்கு வேண்டிய அனுபவமோ ஆற்றலோ என்னிடம் இருப்பதாகவும் நான் எண்ணவில்லை. இக் கதையைத் தாங்களோ அல்லது ஜெயகாந்தனோதான் எழுத வேண்டும்” என்று மிகவும் தன்னடக்கத்தோடு கூறினார் அவர். கதையும், அதன் புதுமையும் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தன. அந்தக் கவர்ச்சி காரணமாக நானே கதையை எழுதுவதாகக் கூறினேன். ஆயினும் ‘இதை வெற்றிகரமாக எழுதி முடிக்கும் ஆற்றல் எனக்கு உண்டா? என் திறமையில் சேவற்கொடியோன் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற முடியுமா?’ என்ற பயம் இருக்கத்தான் செய்தது. கதையைக் குட்டிச்சுவராக்கி என் பெயரைக் கெடுத்துக் கொள்வதுடன் அவர் பெயரையும் கெடுத்து விடுவோமோ என்ற அச்சமும் இருந்தது. மீண்டும் மீண்டும் அந்தக் கதையை அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் புதுப்புதுக் கருத்துகளும் கற்பனைகளும் வந்துகொண்டே இருந்தன. முழு உருவம் பெறாமலிருந்த கதை,சொல்லச் சொல்ல, முழுமை பெற்றது. எழுதிவிடலாம் என்ற துணிவும் நம்பிக்கையும் ஏற்பட்ட போதிலும் கூடவே இன்னொரு,சந்தேகமும் தோன்றியது. அப்போதுதான் வாஷிங்டனில் திருமணம் என்னும் நகைச்சுவைத் தொடரை எழுதி முடித்திருந்தேன். ஆதலால் இந்தக் கதையும் அம்மாதிரி நகைச்சுவை பொருந்தியதா இருக்கும் என்று வாசகர்கள் எதிர் பார்க்கக் கூடுமல்லவா? எனவேதான் முன்னெச்சரிக்கையோடு முன்னுரையில்‘இது ஒரு புதுமையான காதல் நவீனம். இந்தக் கதையைப் படிக்கும் வாசகர்களில் யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவார்களானால், அதையே இந்தக் கதையின் வெற்றியாகக் கொள்வேன்?’ என்று குறிப்பிட்டிருந்தேன். அத்துடன் முடிவுரையில் நேயர்களுக்காக ஒரு முக்கிய விஷயம் காத்திருப்பதாகவும் சொல்லியிருந்தேன். இப்போது, இந்த இதழுடன், கதை முற்றுப் பெறுகிறது. இருபத்து மூன்று இதழ்களாக இதைத் தொடர்ந்து படித்து வந்த வாசகர்கள் அனைவருக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல வாசகர்கள் கதையைப் பாராட்டிக் கடிதங்கள் எழுதியிருப்பதுடன் பல இடங்களில் உணர்ச்சி வசமாகிக் கண்ணீர் பெருக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். கதையின் வெற்றிக்கு யாராவது ஒரு வாசகர் ஒரு சொட்டுக் கண்ணீர் பெருக்கினாலே போதும் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு இப்போது ஒரு குடம் கண்ணீர் கிடைத்துவிட்டது. அது போதும்! இந்த அருமையான கதையையும் இதில் அடங்கியுள்ள பல உயர்ந்த கருத்துகளையும் எனக்குத் தந்து உதவிய திரு சேவற்கொடியோன் அவர்களுக்கு நன்றி செலுத்துவதுடன், இந்தக் கதையின் மூலமாக எனக்குக் கிடைத்துள்ள புகழையெல்லாம் அவரிடமே சேர்த்து விடுகிறேன். கடைசியாக ஒரு வார்த்தை. இந்தக் கதை எந்தத் தனிப் பட்டவர்களின் வாழ்க்கையையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதல்ல. வணக்கம். - சாவி |