உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
குருத்து மூன்று மாடிப் படிகளின் மீது வேகமாக வந்து விழும் காலைப் பத்திரிகையின் சலசலப்பு, பக்கத்து வீட்டுப் பசுமாட்டின் கனிந்த குரல், பால் டிப்போ சைக்கிள் மணி ஓசை, பார்வதி வீட்டுக் கடிகாரம் மணி ஆறடிக்கும் சுநாதம் - இவை யாவும் ஒரே சமயத்தில், சற்று முன்பின்னாக நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகள். அந்தப் பிரெஞ்சு நாட்டுக் கடிகாரத்தின் ஒலி பார்வதிக்குப் புதிதல்ல. ஆனால் இன்று மட்டும் அதன் ஒலி அவள் செவிகளுக்கு இனிமையாகவும், இதயத்துக்கு இதமாகவும் இருப்பானேன்? அந்தக் கடிகாரத்தைக் காணும் போதெல்லாம் பார்வதிக்குத் தன் கல்லூரியில் நீண்ட காலமாகப் பிரெஞ்சு மொழி ஆசிரியையாகப் பணியாற்றி வரும் மிஸஸ் அகாதாவின் உருவம் நினைவில் தோன்றும். உடனே, அவள் குடையைப் பிரித்துக் கொண்டு இடது காலை விந்தி விந்தி நடக்கும் காட்சிதான் கண்ணெதிரில் நிற்கும். இந்தக் கடிகாரத்தைப் போலவே தன் கடமையைத் தவறாமல் செய்து வரும் அகாதாவினிடத்தில் பார்வதிக்குத் தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் உண்டு. பார்வதி ஏதோ ஓர் உணர்ச்சிக்கு வசமாகி, அமைதி இழந்த நிலையில் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தாள். ...முதல் நாள் இரவு விமானக் கூடத்துக்கு விரைந்து சென்று மூக்குக் கண்ணாடியைச் சேதுபதியிடம் கொடுத்த போது ‘அடாடா, மிக்க நன்றி’ என்று மலர்ந்த முகத்துடன் அவர் வாங்கிக் கொண்டதும், ‘தங்கள் பேச்சு விழாவுக்கே சிகரம் வைத்தது போல் அமைந்து விட்டது’ என்று அவள் கூறியதும், அவர் ‘தங்கள் ஏற்பாடு மிக மிகச் சிறப்பாயிருந்தது’ என்று அவளைப் புகழ்ந்ததும்... பார்வதியின் உள்ளத்தில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கி இருந்தது. உள்ளத்தில் புகுந்துவிட்ட அந்தப் புதுமையான உணர்வை, நெஞ்சத்தை அலைக்கும் சஞ்சலத்தை ஆரம்பத்திலேயே அழித்துவிட முயன்றாள். ஆனால் முடியவில்லை. சோடா புட்டியின் நெஞ்சுக்குள்ளே புகுந்து ஊசலாடும் கண்ணாடிக் கோலியைப்போல் அந்த உணர்வு - அவளை யறியாமல் அவள் இதயத்தில் புகுந்து அழைத்துக் கொண்டிருந்தது. அதை அவள் விழுங்கி ஜீரணம் செய்து கொள்ளவோ, வெளியே துப்பி விடவோ முடியாமல் தவித்தாள். கண்ணாடியின் முன் சென்று அதில் பிரதிபலித்த தன் உருவத்தையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் பிம்பத்தை அதில் கண்டபோது பார்வதியின் வேதனை அதிகரித்தது. உண்மையாகவே தனக்கு வயதாகி விட்டதா? அதோ இடது காதின் ஓரமாக இரண்டொரு நரைகூடத் தெரிகின்றனவே! மெதுவாகத் தன் இடது காதுப் பக்கமாகத் தடவிப் பார்த்துக்கொண்டாள். ‘ஓ! கண்ணாடியில் இடது புறம் என்றால், தனக்கு அது வலது புறம் அல்லவா?’ - மெத்தப் படித்த பார்வதிக்கு, டாக்டர் குமாரி பார்வதிக்கு B.A., B.Ed. PhD (Lonodon) Dip in Anthropology போன்ற நீண்ட பட்டங்களைப் பெற்றிருந்த அறிவாளி பார்வதிக்கு அப்போதிருந்த மனநிலையில் இந்தச் சின்ன விஷயம்கூடத் தெரியாமற் போயிற்று! தனக்குத் தானே அனுதாபத்துடன் ஒரு முறை சிரித்துக் கொண்டவளாய், மேஜை மீதிருந்த காலைப் பத்திரிகையை எடுத்துப் புரட்டினாள். அதிலிருந்த எழுத்துகள் நீரிலே கரைந்தவை போல் தெளிவின்றித் தெரிந்தன. ‘ஓ! கண்ணாடி அணிந்து கொள்ளாமல் அல்லவா படிக்கிறேன்?’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு கண்ணாடியை எடுத்துப் போட்டுப் பார்த்தபோது எழுத்துகள் மணி மணியாய்ப் பளிச்சிட்டன. ‘நிஜமாகவே எனக்கு வயதாகி விட்டதா? இல்லை; இல்லவே இல்லை. வயது, வாலிபம் வயோதிகம் என்பதெல்லாம் நாமாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒரு வரம்பு தானே?’ மேஜை மீது கிடந்த ஸ்கேல் ஒன்று அவள் கண்ணில் படவே, அதைக் கையில் எடுத்துத் தன் இடது உள்ளங்கையை அதனால் தட்டியபடியே, ‘இதோ இந்த அங்குலம் காட்டு மரச் சட்டத்தில் நாமாகவே கோடுகளைப் போட்டு இதை ஸ்கேல் என்று கூறுகிறோம். இந்தக் கோடுகள் நாம் போட்டவை, இவை இல்லையென்றால் இது வெறும் மரச் சட்டம்தானே?’ ‘அதைப் போலவே நாமாகவே நம் ஆயுளை வயதுகளால் வகுத்து வரம்பு கட்டிக் கொண்டிருக்கிறோம். அந்த வரம்புகள் இல்லையென்றால், நாம் நாமாகவே தான் இருப்போம். வயதாகி விட்டது என்பதை நாம் எப்போது உணர்கிறோம். நம் வயதைப் பற்றிச் சிந்திக்கும்படியான காரியங்கள் குறுக்கிடும்போதுதான். இப்போது ஏதோ ஓர் உணர்வு என் உள்ளத்தில் புகுந்திருக்கிறது. அந்த உணர்வே என் வயதைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது. இத்தனை காலமும் அந்த உணர்வு என்னிடம் இல்லாததால் என் வயது பற்றிய எண்ணமே எனக்குத் தோன்றவில்லை. கோலி விளையாடும் ஏழு வயதுச் சிறுவனைக் காணும்போது தெருவில் நடந்து செல்லும் வாலிபன் தனக்கு வயதாகி விட்டதாக எண்ணுகிறான். கல்லூரியில் படிக்கும் மாணவனைப் பார்க்கும்போது காரியாலயத்தில் வேலை செய்யும் குமாஸ்தா தனக்கு வயதாகி விட்டதென்று கருதுகிறான். ஆகவே, ஏதோ ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் வயது பற்றிய சிந்தனை நமக்கு ஏற்படுகிறது.’ புத்தகப் படிப்பிலேயே இதுகாறும் இரண்டறக் கலந்து கிடந்த பார்வதிக்குத் தன் வயது பற்றிச் சிந்திக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை. படிப்புக்கும், ஆராய்ச்சிக்கும் வயது இடையூறாக இருப்பதில்லை. உண்மையில் வயது ஆக ஆகத்தான் அறிவு விசாலமடைகிறது. அறிவின் விசாலம் ஆராய்ச்சிக்கு உதவுகிறது. எனவே வயதாகிறதே என்ற எண்ணமே தோன்றுவதில்லை. சுருதி சுத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பார்வதியின் வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறுக்கிடவே இப்போது அவள் விழிப்படைந்து வயதைப்பற்றி எண்ணுகிறாள். பார்வதி மீண்டும் யோசிக்கத் தொடங்கினாள். “நீங்கள் ஒளவையைப் போல் அறிவாளிகளாக விளங்க ஆசைப்பட வேண்டும். ஆனால் ஒளவை மாதிரி கலியாணமே வேண்டாம் என்று சொல்லி விடக்கூடாது.” இந்த வார்த்தையை அவர் மாணவிகளுக்கு மட்டும்தான் கூறினாரா? அல்லது என்னையும் மனத்தில் வைத்துக்கொண்டு மறைமுகமாகக் கூறினாரா? அப்படியானால் அதன் உட் கருத்து?... பார்வதிக்கு விளங்கவில்லை. கீழே, லதா மங்கேஷ்கரின் பாட்டு ஒன்றை ராஜா சீட்டிக் குரலில் இனிமையாகப் பாடிக் கொண்டிருப்பது பார்வதியின் காதில் விழுந்தது. அதிலிருந்தே அவன் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பார்வதி ஊகித்துக் கொண்டாள். குளிக்கும்போதுதான் அவனுக்குக் குஷியாகப் பாட வரும். ராஜாவின் சீட்டி அன்று அவளுக்குப் பிடித்திருந்தது. ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிப்பதன் மூலம் அமைதியைப் பெற எண்ணிய பார்வதி புத்தக அலமாரியைத் திறந்து கைக்கு வந்த ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்தாள். சீனப் பேரறிஞர் லின்யுடாங் எழுதிய ‘புயலில் ஓர் இலை’ என்னும் புத்தகம் வந்தது. அதைக் கண்ட பார்வதி, ‘ஏறக் குறைய என் உள்ளமும் இப்போது புயலில் சிக்கிய இலையாகத்தான் இருக்கிறது’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டாள். புத்தகத்தைப் பிரித்தாள். அது எந்த இடத்தில் பிரிந்ததோ அந்தப் பக்கத்திலிருந்த வரிகளைப் படிக்கத் தொடங்கினாள். ‘மனிதனுடைய முதல் நாற்பது ஆண்டுக்கால வாழ்க்கையில் சோதனைகள் நடக்கின்றன. அடுத்த நாற்பது ஆண்டு வாழ்க்கை அவற்றைப் பரிசீலித்து மார்க்குப் போடுகிறது!’ பார்வதி சிரித்துக் கொண்டாள். ‘எனக்குப் பரீட்சையே இப்போதுதானே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பரிசீலித்து மார்க்குப் போட நான் மறுபிறவிதான் எடுத்தாக வேண்டும்.’ அவள் பலகணியின் வழியாக வாசலை எட்டிப் பார்த்த போது விசிறி வாழை குளுகுளு வென்று அழகாக ஓங்கி வளர்ந்து காற்றிலே அசைந்தாடிக் கொண்டிருந்தது. ராஜா பெரிய கத்தரிக்கோல் ஒன்றால் அதன் இலைகளைத் துண்டித்துக் கொண்டிருந்தான். “ராஜா ! ஏன் அந்த இலைகளை வெட்டுகிறாய்?” பார்வதி கேட்டாள். “இதில் இரண்டு இலைகள் மட்டும் பழுத்து மரத்தின் அழகையே கெடுக்கிறது, அத்தை!...” என்றான் ராஜா. பார்வதி துணுக்குற்றவளாய் நரைத்துப் போன தன் கூந்தல் இழைகளைத் தடவிப் பார்த்துக்கொண்டாள். அடுத்த கணமே அவருடைய கெளரவமான தோற்றம், முகத்தில் நிலவிய அமைதி, உள்ளத்தில் உறைந்த உறுதி, கலகலவென்ற குழந்தைச் சிரிப்பு எல்லாம் நினைவில் தோன்றி நெஞ்சத்தை நிறைத்தன. கீழேயிருந்து வந்த சாம்பிராணிப் புகையின் தெய்விக் மணம், மணி ஒன்பதரை ஆகி விட்டது என்பதை உணர்த்தியது. பார்வதி கீழே இறங்கிச் சென்று அவசரம் அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, பகவான் பரம ஹம்சரையும் தேவியையும் வணங்கிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு கலாசாலைக்குப் புறப்பட்டாள். கார் கேட்டைத் தாண்டும் போது அங்கு உட்கார்ந்திருந்த செவிட்டுப் பெருமாள் வழக்கம்போல் எழுந்து நின்று மரியாதை செலுத்தினான். அவளுடைய கார் கலாசாலையின் காம்பவுண்ட் கேட்டை நெருங்குவதற்கும் பிரெஞ்சு மொழி ஆசிரியை மிஸஸ் அகாதா ஒற்றைக் காலை ‘விந்தி விந்தி’ நடந்து கேட்டுக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை யாரேனும் காண நேரிட்டால் தங்கள் கைக் கடியாரத்தில் மணி பத்து அடிக்க ஐந்து நிமிஷமா என்று பார்ப்பார்கள். இல்லையேல் திருத்திக் கொள்வார்கள். பார்வதியைக் கண்டதும் சற்று உடலைச் சாய்த்து “ஹல்லோ குட்மார்னிங்” என்று கையை ஆட்டியபடியே கூறினாள் மிஸஸ் அகாதா. பார்வதியும் பழக்கப்படி “வெரி குட்மார்னிங்” என்று பதில் வணக்கம் தெரிவித்து விட்டுக் காரைக் கொண்டுபோய்த் தன் அறைக்கு நேராக நிறுத்தினாள். அப்போது அங்கே தயாராக நின்று கொண்டிருந்த அட்டெண்டர் ரங்கசாமி வழக்கம் போல் காரின் கதவைத் திறக்க ஓடி வந்தான். கடந்த பத்தாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சி இது. கல்லூரி எங்கிலும் நிரம்பியிருந்த மாணவிகளின் பேரிரைச்சல், காரின் குழல் ஒலி கேட்டதும், மந்திர சக்திபோல் அப்படியே அடங்கியது. ஆபீஸ் அறையில் பார்வதியின் வரவை எதிர்பார்த்துப் பல வேலைகள் காத்துக் கிடந்தன. அவ்வளவையும் செய்து முடிக்க அவளுக்கு ஒரு நாள் போதவில்லை. அடுத்த நான்கு நாட்கள் வரை அவள் ஓய்வு ஒழிவு இல்லாமல் உழைத்தாள். தான் செய்ய வேண்டிய பணிகளை அவள் எப்போதுமே தள்ளிப் போட்டதில்லை. கடமையினின்று வழுவுவதைப் பெரும் குற்றமாகக் கருதுபவள் ஆயிற்றே அவள். இடையில் ஒரு மாத காலமாக விழா சம்பந்தமான வேலைகள் குறுக்கிட்டு விட்டதால், அவளால் வழக்கமான கல்லூரி அலுவல்களைச் சரிவரக் கவனிக்க முடியாமற் போய் விட்டது. இதற்கு ஓரளவு அவளுடைய மன நிலையும் காரணமாயிருந்திருக்குமோ என்னவோ? தன்னைப் போலவே தன் கல்லூரி மாணவிகளும் நல்லொழுக்கங்களையும் நற்பண்புகளையும் கடைப் பிடித்து நடக்க வேண்டுமென அவள் விரும்பினாள். அந்த உன்னத லட்சியத்துக்காக அவள் கல்லூரி மாணவிகளிடையே மிகவும் கண்டிப்பாக நடந்து கொண்டாள். மாணவிகள் நேரம் கழித்து கலாசாலைக்கு வருவது, கலாசாலைக்குள் இங்குமங்கும் நின்று பேசிக்கொண்டிருப்பது, படிக்க வேண்டிய நேரத்தில் அரட்டை அடிப்பது, வகுப்புக்கு வராமல் மட்டம் போடுவது போன்ற நேர்மையற்ற காரியங்களைக் காண நேரிடும் போதெல்லாம் அத்தகைய மாணவிகளை அழைத்துக் கடுமையாக எச்சரித்து அனுப்புவாள். ‘சாரதாமணிக் கல்லூரி மாணவிகள் படிப்பிலே திறமையில்லாதவர்கள்’ என்று பெயர் எடுப்பதை அவள் பொறுத்துக் கொள்ளத் தயாராயிருந்தாள். ஆனால் அவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று பெயரெடுப்பதை அவள் ஒருபோதும் அனுமதித்ததில்லை. பார்வதி வெளிப் பார்வைக்கு எவ்வளவு கடுமையாகத் தோன்றிய போதிலும் அவ்வளவுக்கு அவளுடைய இதயம் மிகவும் இளகியதாயிருந்தது. ஏழை மாணவிகளிடம் அன்பும் ஆதரவும் காட்டி சிற்சில சமயங்களில் அவர்கள் கல்லூரிச் சம்பளம் கட்ட முடியாமல் தவிக்கும் போது அவர்களுக்குப் பொருளுதவி செய்யவும் அவள் தயங்கியதில்லை. அன்று வெள்ளிக்கிழமை. வழக்கத்தைக் காட்டிலும் சீக்கிரமே எழுந்து விட்ட பார்வதி, காலைப் பத்திரிகையின் வரவுக்காகக் காத்திருந்தாள். அப்புறம்தான் பக்கத்து வீட்டுப் பசுமாடு கத்தியது. பால் டிப்போ சைகிள் மணி ஓசை கேட்டது. பின்னோடு காலைப் பத்திரிகையும் வந்தது. முதல் காரியமாக அதைப் பிரித்துக் குறிப்பாக ஒரு பகுதியைத் தேடினாள். அவள் எதிர்பார்த்த அந்தச் செய்தி அந்தப் பகுதியில் இருந்தது. ‘சேதுபதி பம்பாயிலிருந்து திரும்பி விட்டார்’ என்னும் அச்சேதியைப் படித்தபோது பார்வதியின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. தினப் பத்திரிகைகளில் எத்தனையோ காலமாகத்தான் அந்தப் பகுதி வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை அப்படி ஒரு பகுதி அந்தப் பத்திரிகையில் வந்து கொண்டிருப்பதை அவள் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. இப்போது மட்டும் அந்தப் பகுதியில் என்ன கவர்ச்சி வந்து விட்டது! அவர் வந்து விட்டார் என்பதில் தனக்கு ஏன் அத்தனை மகிழ்ச்சி? அன்று காலை கல்லூரிக்குச் சென்றதும் பூகோளப் பாடம் நடத்தவேண்டிய ஆசிரியைக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தது. எனவே, அன்று அந்த ஆசிரியை நடத்த வேண்டிய வகுப்புக்குத் தானே போவதென்று முடிவுசெய்து கொண்டாள். சரியாக மூன்று மணிக்கு, குறிப்பிட்ட நேரத்தில் பி.எஸ்ஸி, வகுப்புக்குள் நுழைந்தாள் பார்வதி. நாற்காலியில் அமர்ந்தவள் யாரையோ தேடுவது போல் ஒரு முறை கண்ணோட்டமிட்டாள். அந்த ஒரு பார்வையிலேயே பாரதி வகுப்புக்குள் இல்லை என்பதை அறிந்து கொண்டாள். ஆனால் அவள் ஏன் வரவில்லை என்று மாணவிகளை விசாரிக்கவில்லை. அதற்குப் பதிலாக ரிஜிஸ்தரை எடுத்து அதற்கு முந்திய வகுப்பில் பாரதி ஆஜராகியிருக்கிறாளா என்று பார்த்துக் கொண்டாள். அவள் பூகோள வகுப்புக்கு மட்டுமே மட்டம் போட்டுவிட்டுப் போயிருக்கிறாள் என்பதை அறிந்த போது பார்வதிக்கு உள்ளூறக் குமுறியது. “பாரதியை எங்கே காணோம்?” மிடுக்குடன் ஒலித்தது பார்வதியின் குரல். “‘தலைவலி’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள் மேடம்” என்றாள் ஒரு மாணவி. ‘ஓகோ, ஜாக்ரபி பிரொபஸர் வர மாட்டாள் என்று தெரிந்ததும் தலைவலி வந்து விட்டதோ? இன்று வெள்ளிக் கிழமையல்லவா? புதுப் படம் பார்க்கப் போயிருப்பாள். சரி சரி, நாளைக்கு அவள் வரட்டும், சரியான முறையில் பாடம் கற்பிக்கிறேன்’ என்று மனத்திற்குள்ளாகவே கறுவிக் கொண்டாள் பார்வதி. |