உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
குருத்து நான்கு கல்லூரி ஆண்டு விழா முடிவுற்று ஐந்து நாட்கள் கூட ஆகவில்லை. பாரதியும் ராஜாவும் இதற்குள் மூன்று முறை சந்தித்து விட்டதுமன்றி வெகுநாளைய சிநேகிதர்களைப் போல் பழகவும் தொடங்கிவிட்டனர். அவர்களுடைய சந்திப்புகள் முன் கூட்டியே பேசி வைத்துக்கொண்டவை அல்ல. ரகசியமானதும் அல்ல. இயற்கையாக, சகஜமாக அவர்களே எதிர்பாராமல் ஏற்பட்டவை தான். ஒருவரையொருவர் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் அவர்கள் உள்ளத்தில் இருந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் அதற்காக அவர்கள் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. வெள்ளிக்கிழமையன்று கூட வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு, வெளியே போக வேண்டுமெனப் பாரதி எண்ண வில்லை. அப்படிச் செல்வது அவள் வழக்கமுமில்லை. அன்று அவளைத் தூண்டி இழுத்தவள் அதே கல்லூரியில் வேறொரு பிரிவில் படிக்கும் அவளுடைய சிநேகிதி மிஸ் டூலிப்தான். அந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கு அன்று பிறந்த தினமாகையால், பாரதியை அவள் ஐஸ் கிரீம் பார்லருக்கு வர வேண்டுமென்று கட்டாயப்படுத்தினாள். “இன்று என்னுடைய ‘பர்த்டே’; உனக்கு ஆல்மண்ட் க்ரீம் வாங்கித் தரப்போகிறேன். அப்புறம் இரண்டு பேருமாகச் சினிமாவுக்குப் போகலாம்” என்றாள் டூலிப். ஐஸ்கிரீம் ஆசை எந்தப் பெண்ணைத்தான் விட்டது? ‘ஆல்மண்ட் க்ரீம்’ என்றதுமே பாரதி நாக்கில் ஜலம் ஊற, “ஹய்யா... வெரிகுட்!” என்றாள். அப்புறம் சினிமாவுக்கும் போகலாம் என்று டூலிப் கூறிய போது, “என்ன பிக்சர்?” என்று கேட்டாள் பாரதி. “லவ் ஆன் தி ஹவாய் பிரிட்ஜ்,” என்றாள் டூலிப். படத்தின் பெயர் கவர்ச்சிகரமாகத்தான் இருந்தது. ஆனாலும் பிரின்ஸிபாலுக்குத் தெரிந்துவிட்டால் என்பதை எண்ணியபோது பாரதிக்குப் பகீர் என்றது. “எனக்கு இப்போது ஜாக்ரபி க்ளாஸ் இருக்கு டூலிப்! எக்ஸ்க்யூஸ்மி” என்றாள் பாரதி. “பரவாயில்லை; ப்ளீஸ்;... ப்ளீஸ்!” என்று மன்றாடியபடியே பாரதியின் கரங்களைப் பற்றி இழுத்தாள் டூலிப். “அப்படியானால் ஒரு கண்டிஷன். சினிமாவுக்கு நான் தான் டிக்கெட் வாங்குவேன்” என்றாள் பாரதி. “ஓ எஸ்” என்று ஒப்புக் கொண்டாள் டூலிப். இருவரும் பார்லருக்குச் சென்று ஆளுக்கு இரண்டு கப் ஐஸ்க்ரீமைத் தீர்த்துக் கட்டிய பிறகு, அடுத்தாற்போலிருந்த சினிமாத் தியேட்டருக்குள் நுழைந்தார்கள். பாரதி தான் டிக்கெட் வாங்கினாள். உள்ளே போனபோது ‘ஏர் கண்டிஷன்’ குளுமையும், ‘கம் ஸெப்டம்பர்’ கானத்தின் இனிமையும் அவர்களை வரவேற்றன. இருவரும் ஒரு மூலையாகப் போய் அடக்கமாக உட்கார்ந்து கொண்டார்கள். மிஸ் டூ லிப் மட்டும் உற்சாக மிகுதியில் தன் கால்களால் தரையைத் தட்டித் தாளம் போட்டபடியே, “ஐ லவ் திஸ் ஸாங் வெரி மச்!” என்றாள். யாராவது தன்னைக் கவனித்துவிடப் போகிறார்களே என்ற திகிலில் உட்கார்ந்திருந்த பாரதி, “எனக்கு ரொம்பவும் பயமாயிருக்கு டூலிப்” என்றாள். “பயப்படாதே! ஹிச்காக் படம் தான் பயப்படணும். மர்டர், மிஸ்டரியெல்லாம் வரும். இது முழுக்க முழுக்க லவ் ஸ்டோரியாச்சே!” என்றாள் டூலிப். சற்று நேரத்துக்கெல்லாம் விளக்குகள் அணைக்கப்பட்டுப் படம் ஆரம்பமாயிற்று. இருவரும் ஆளுக்கொரு சுவிங்கத்தை வாயில் போட்டுச் சுவைத்தபடியே படத்தை ரசிக்கத் தொடங்கினர். நேரம் ஆக ஆகத் தியேட்டரில் நிலவிய இருட்டுக்குள்ளேயே ஒரு தெளிவு பிறந்தது. அத்தெளிந்த இருட்டில் தனக்குத் தெரித்தவர்கள் யாராவது வந்திருக்கிறார்களா என்று பாரதி சுற்றுமுற்றும் கண்ணோட்டமிட்ட போது. ஆமாம் - ராஜா சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்தான்! அவனைக் கண்டதில் அவளுக்கு மகிழ்ச்சி தான். ஆனாலும் தான் படம் பார்க்க வந்திருக்கும் விஷயம் அவனுக்குத் தெரிந்துவிடப் போகிறதே என்று கவலைப்பட்டாள். காரணம், இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் பாரதியைச் சந்தித்தபோது, “படம் பார்க்க வருகிறாயா?” என்று அழைத்தான். அவள் செல்ல மறுத்துவிட்டாள். இப்போது மட்டும் தான் வந்திருப்பதைக் கண்டால், ராஜா என்ன நினைத்துக் கொள்வான்? இடைவேளையில் தற்செயலாகப் பின்புறம் திரும்பிய ராஜா, அங்கே பாரதி உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்து போனான். ஆயினும் படம் முடியும்வரை அவன் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. பாரதிக்கு அது மிகவும் திருப்தியாக இருந்தது. எங்கே தன்னைக் கண்டதும் பாய்ந்து வந்துவிடுவானோ என்று பயந்த அவளுக்கு, அவனுடைய பெருந்தன்மையான போக்கு நிம்மதியை அளித்தது. பாரதி, லேசாகத் தன் கண் இதழ்களை உயர்த்தி அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தாள். அவன் தேநீரைச் சுடச்சுடக் குடித்துவிட்டு நாக்கைச் சுட்டுக் கொண்டு திணறினான். ‘ராஜா எதிலுமே கொஞ்சம் அவசரப் புத்திக்காரர். அன்று அவசரப்பட்டு ஆணி அடிக்கும்போது கையை நசுக்கிக் கொண்டார். இன்று அவசரப்பட்டு நாக்கைச் சுட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று எண்ணியபோது அவளுக்கு அவன் மீது இரக்கமே உண்டாயிற்று. இன்னொரு நாள் அவன் வாணலியில் வெந்து கொண்டிருந்த கோஸ் கறியைப் புகையப் புகைய வாயில் போட்டுக்கொண்டு தவித்த தவிப்பு பாரதிக்குத் தெரியாது. படம் சீக்கிரமே முடிந்துவிட்டது. நன்றாயிருக்கிறதோ, இல்லையோ இங்கிலீஷ் படங்களில் இது ஒரு பெரிய செளகரியம். ராஜா எல்லோருக்கும் முன்னால் எழுந்து வெளியே செல்வதைப் பாரதி கவனிக்கத் தவறவில்லை. அவன் தியேட்டர் வாசலில் போய் ஒரு புறமாக ஒதுங்கி நின்றுகொண்டான். பாரதியாகவே தன்னைக் கண்டுவிட்டுப் பேசினால், தானும் பேசுவது. இல்லையென்றால் பேசாமலேயே விட்டுக்குப் போய்விடுவது என்ற முடிவுடன் அவன் காத்திருந்தான். வெளியே வந்த டூலிப்பும் பாரதியும் பஸ் ஸ்டாண்டில் போய் நின்று கொண்டனர். டூலிப்பின் சுருள் சுருளான பொன்னிற மயிர்க் கற்றைகள் அவன் கவனத்தை ஈர்த்தன. இந்த ஆங்கிலோ இந்தியப் பெண்களுக்குத்தான் ஆண்டவன் எப்படி ஞாபகமாகப் பொன்னிறக் கூந்தலைப் படைக்கின்றானோ என வியந்து கொண்டான். நல்ல வேளையாக முதலில் டூலிப்பின் பஸ் வந்துவிடவே, “நான் வருகிறேன் பாரதி! பை, பை!” என்று சொல்லிக் கொண்டே அவள் பஸ் ஏறிச் சென்றுவிட்டாள். அடுத்த கணமே பாரதியின் கண்கள் ராஜாவைத் தேடின. அவன் தான் அவசரக்காரன் ஆயிற்றே! பாரதி அவனை அழைக்கும் வரை காத்திருப்பானா? “என்ன பாரதி ! படம் எப்படி இருந்தது. டைடில் பிரமாதம் இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் நெருங்கி வந்துவிட்டான். “டைடில் தான் பிரமாதம். படம் சுமார்தான். ஒரே போர். தலைவலி” என்றாள் பாரதி. “அதோ அந்த ஓட்டலுக்குள் சென்று காப்பி சாப்பிடலாம், வா. தலைவலி பறந்து விடும்” என்று சற்றுத் தூரத்தில் தெரிந்த ஓட்டலைக் காட்டினான் ராஜா. “நேரத்தில் வீட்டிற்குப் போக வேண்டும்” என்றாள் பாரதி. “டாக்ஸியில் போய் விடலாம், கவலைப்படாதே” என்றான் ராஜா. இருவரும் அந்த ஓட்டலுக்குள் புகுந்து திறந்த வெளி மாடிக்குப் போய் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த வட்ட மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டனர். “அதென்ன புத்தகம் ராஜா?” எனக் கேட்டாள் பாரதி. “ஏதோ ‘பிலாஸபி’யாம். லைப்ரரியிலிருந்து வாங்கி வரச் சொல்லியிருந்தாள் அத்தை” என்று கூறிச் சலிப்புடன் அப்புத்தகத்தை மேஜை மீது போட்டான் ராஜா. பாரதி அதை எடுத்துப் புரட்டினாள். “நாம் இருவரும் சினிமா பார்த்துவிட்டு வருகிறோம் என்று தெரிந்தால், எங்க அப்பாவும் உங்க அத்தையும் என்ன செய்வாங்க தெரியுமா?” “என்ன செய்வாங்க? படம் எப்படி இருக்கிறது என்று கேட்பாங்க! நன்றாயிருக்கிறது என்று சொன்னால் அவங்களும் போய்ப் பார்ப்பாங்க” என்றான் ராஜா. “பார்ப்பாங்க, பார்ப்பாங்க! நம்ம ரெண்டு பேரையும் வீட்டை விட்டே துரத்தப் பார்ப்பாங்க.” “நீ கவலைப்படாதே! பிரின்ஸிபால் எங்க அத்தை தானே!” இச்சமயம். சர்வர் வந்து ‘என்ன வேண்டும்?’ என்று விசாரித்தான். “நீ என்ன சாப்பிடுகிறாய் பாரதி?” “'வெறும் காப்பி போதும்.” “வேறு ஏதாவது சாப்பிட்டேன். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு.” “உங்களுக்கு எது பிடிக்குமோ, அதையே கொண்டு வரச் சொல்லுங்க” என்றாள் பாரதி, “எனக்கா? எனக்குப் பிடிக்காதது இந்த உலகத்திலே ஒண்னே ஒண்ணுதான்” என்றான் ராஜா. “என்ன அது?” “பயித்தியம் தான் பிடிக்காது” என்றான் அவன். டம்ளரிலிருந்த தண்ணீரைக் குடிக்க இருந்த பாரதி பகீரெனச் சிரித்துவிட்டாள். “நல்ல வேளை! இந்த ஜோக்கை நீ தண்ணீர் குடிக்கும்போது சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்!” என்றான் ராஜா. “கால் டம்ளர் தண்ணீர் நஷ்டமாகியிருக்கும்” என்று சொல்லிச் சிரித்தாள் பாரதி. சர்வரைப் பார்த்து, “உனக்குப் பிடித்தமானதைக் கொண்டு வாப்பா!” என்றான் ராஜா. “எனக்கு இந்த ஓட்டலில் போடுவது எதுவுமே பிடிக்காது ஸார்!” என்றான் சர்வர். “சரி; அப்படியானால் இரண்டு கப் காப்பி மட்டும் கொண்டு வா, போதும்” என்றாள் பாரதி. காப்பி வருகிறவரை பாரதியின் ஜாக்ரபி புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான் ராஜா. காப்பி வந்ததும் அதை அருந்தியபடியே அவன் வானத்தைப் பார்த்தபோது, வானமெங்கும் கருமேகங்கள் கவிந்து கொண்டிருந்தன. “இறுக்கமாக இருக்கிறது. மழை வந்தாலும் வரலாம்” என்றாள் பாரதி. “வந்தாலும் என்ன? வந்து கொண்டே இருக்கிறது” என்றான் ராஜா. அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே படபடவென்று மழைத்துளிகள் மேஜை விரிப்பின் மீது சிதறின. இருவரும் அவசரம் அவசரமாகப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு தெருவுக்கு விரைந்து போய் ஒரு டாக்ஸியைப் பிடித்துக் கொண்டனர். தான் மட்டும் தனியாகப் பஸ்ஸில் போய்விடலாம் என்றுதான் பாரதி முதலில் திட்டமிட்டிருந்தாள். மழையும் ராஜாவும் சேர்ந்து சதி செய்ததுபோல் அவள் எண்ணத்தையே மாற்றி விட்டார்கள். டாக்ஸி பாரதியின் வீட்டு வாசலில் போய் நின்றபோது மழை சோவெனக் கொட்டிக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக அவள் ராஜாவுடன் வந்து இறங்கியதை ஒருவரும் கவனிக்கவில்லை. அப்போது மணி ஏழு ஆகிவிடவே, நன்கு இருட்டிப் போயிற்று. டாக்ஸியிலிருந்து இறங்கிய பாரதி பங்களாவுக்குள் போவதற்குள் லேசாக நனைந்து விட்டாள். நெஞ்சு பட படக்க அவள் உள்ளே செல்லும்போதே அப்பா அவருடைய அறையில் இருக்கிறாரா என்று கவனித்துக் கொண்டாள். அறைக் கதவு ஒரு பென்ஸில் கனத்துக்கு லேசாகத் திறந்திருப்பது தெரிந்தது. திறந்த கதவின் இடுக்கு வழியாக வெளிப்பட்ட மின் ஒளி தாழ்வாரத்தில் படிந்திருந்தது. உள்ளே மின் விசிறி சுழன்று கொண்டிருப்பதையும், அப்பா ஏதோ வேலையில் மூழ்கியிருப்பதையும் கண்டபோது அவள் திடுக்கிட்டாள். அப்பாவுக்குக் காது ரொம்பக் கூர்மை. வாசலில் டாக்ஸி வந்து நின்றபோது அவர் கட்டாயம் அதைக் கவனித்திருப்பார். தன்னை அழைத்து ‘ஏன் இத்தனை நேரம்? எங்கே போயிருந்தாய்?’ என்று விசாரித்தால் என்ன பதில் சொல்லுவது என்ற திகிலுடன் மெதுவாகப் பூனை போல் நடந்து சென்றாள். “பாரதி!” சேதுபதிதான் அழைத்தார். அவர் குரலில் எப்போதுமே நயம் இருந்ததில்லை. இன்று வழக்கத்தைக் காட்டிலும் சற்று கடுமையாகவே ஒலித்தது. பரம சாதுவைபோல் அவர் எதிரில் போய் நின்றாள் பாரதி. “இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?” சேதுபதி கேட்டார். “காலேஜில் தான் இருந்தேன் அப்பா! ஹாஸ்டலில் ஒரு பெண்ணிடம் கணக்குப் பாடம் கற்றுக்கொண்டிருந்தேன்” என்று துணிந்து பொய்யைச் சொன்னாள் பாரதி. சேதுபதி ஒரு முறை அவளை ஏற இறங்கப் பார்த்தார். அவள் பொய் சொல்கிறாள் என்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்து விட்டது. அதைப் புரிந்து கொண்ட சேதுபதி அவளுடைய பொய்யை அம்பலமாக்க விரும்பவில்லை. தான் அதை அறிந்து கொண்டதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. காரணம், அப்படிச் செய்வதால் தன்னிடம் அவளுக்குள்ள பயமும் மரியாதையும் குறைந்துவிடும் என்பது தான். “கணக்கில் ‘வீக்’ என்றால் என்னிடம் சொல்லுவதற்கென்ன? உடனே டியூஷன் வைப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பேன் அல்லவா? சரி; இனிமேல் இம்மாதிரி நேரம் கழித்து வீட்டுக்கு வரக்கூடாது, தெரிந்ததா? இதற்கு முன்னால் கூட இரண்டு நாள் நீ நேரம் கழித்து வந்திருக்கிறாய்” என்றார். ‘தான் இரண்டு நாட்கள் லேட்டாக வந்தது அப்பாவுக்கு எப்படித் தெரிந்தது? இவ்வளவு கணக்காகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாரே!’ பாரதி சிந்தித்தாள். “சரி; நீ போகலாம்” என்று கூறி அனுப்பினார் சேதுபதி. மறுநாள் காலை, சேதுபதி தம்முடைய அறையில் உட்கார்ந்து பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தபோது, டெலிபோன் மணி அடிக்கவே அவர் பாரதியை அழைத்து, “டெலிபோனில் கூப்பிடுவது யாரென்று பார்” என்றார். பாரதி டெலிபோன் ரிஸீவரைக் கையில் எடுத்துக் கேட்டபோது, “பிரின்ஸிபால் பார்வதி பேசுகிறேன்” என்று பதில் வந்தது. தன் குட்டு வெளிப்பட்டு விட்டதோ என்று பாரதி நடுங்கிப் போனாள். “அப்பா வீட்டில் இருக்கிறாரா?” பார்வதி கேட்டாள். “கொஞ்சம் வேலையாக இருக்கிறார். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அடக்கமாகக் கேட்டாள் பாரதி. “நான் இப்போது வந்தால் அவரைச் சந்திக்க முடியுமா என்று கேட்டுச் சொல்.” “கொஞ்சம் இருங்கள் மேடம்! இதோ கேட்டுச் சொல்கிறேன்...” பாரதி தன் தந்தையிடம் ஓடிப்போய், “அப்பா, பிரின்ஸிபால் உங்களைச் சந்திக்க வேண்டுமாம். இப்போது வரலாமா என்று கேட்கிறார்... நீங்கள் கொஞ்சம் வேலையாக இருப்பதாகச் சொன்னேன்...” “ஆமாம், இப்போது எனக்கு நேரமில்லை, அப்புறம் பார்க்கலாம்” என்று அப்பா பதில் கூறிவிடுவார் என்று அவன் எதிர்பார்த்தாள். ஆனால் சேதுபதியோ அப்படிக் கூறாமல், “வரச் சொல்லேன்” என்றார். ஏதேனும் ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு சேதுபதியைச் சந்திக்க விரும்பினாள் பார்வதி. நேற்று பாரதி ஜாக்ரபி வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டுப் போனதில் பிரின்ஸிபாலுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி! அதையே காரணமாக வைத்துக் கொண்டு அவரைச் சந்தித்து விடலாமல்லவா! திருவாளர் சேதுபதியின் உள்ளத்திலும் பார்வதியைக் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளுறக் கனிந்து கொண்டிருந்தது. பாரதிக்கு டியூஷன் ஏற்பாடு செய்யச் சொல்லும் சாக்கில் பார்வதியை வீட்டுக்கு அழைக்கலாமா என்றுகூட அவர் எண்ணியதுண்டு. ஆனால் எந்த ஒரு எண்ணத்தையும் செயலுக்குக் கொண்டு வருமுன் அதைப்பற்றி ஆயிரம் முறை சிந்திப்பது அவருடைய வழக்கமாயிற்றே! அப்போது பார்வதியே போன் செய்து வரட்டுமா என்று கேட்கவே அவர் மிக்க மகிழ்ச்சியுடன் ‘வரச் சொல்லேன்’ என்று கூறிவிட்டார். யாருடைய வரவையும் அவ்வளவு ஆவலுடன் எதிர்பார்க்காத அவருக்கு, பார்வதி வரப் போகிறாள் என்னும் செய்தி மட்டும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அது சேதுபதிக்கே வியப்பாக இருந்தது. பார்வதி அறைக்குள் நுழையும்போதே “ஓ! வாருங்கள்” என்று வரவேற்று, எதிரிலுள்ள நாற்காலியில் அமரச் சொன்னார். முகத்தில் புன்சிரிப்புத் தவழ, பார்வதி அடக்கமாக அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டான். சில விநாடிகள் அந்த அறைக்குள் ஓர் அசாதாரணமான அமைதி நிலவியது. எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று பார்வதி யோசித்தாள். எடுத்த உடனேயே பாரதியைப் பற்றி அவரிடம் புகார் கூறுவது அவளுக்கே பிடிக்கவில்லை. எனவே, அவரே முதலில் பேசட்டும் என்று காத்திருந்தாள். எவ்வளவு நேரம்தான் சும்மா உட்கார்ந்திருக்க முடியும்? அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த அவருடைய மனைவியின் படத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். பாரதியின் ஜாடையாகவே காணப்பட்ட அந்த உருவத்தைக் கண்ட போது, பார்வதியின் கண்கள் கூசின. சேதுபதி இலேசாகக் கனைத்துக் கொண்டு, ”ஏதாவது விசேஷம் உண்டா?” என்று கேட்டார். “ஆமாம்” என்று பதிலளித்த பார்வதி, தான் கூறவந்த விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று சற்றுத் தயங்கிவிட்டு, “ஒன்று மில்லை; பாரதியைப் பற்றிச் சொல்லி விட்டுப் போகத்தான் வந்தேன். அவள் நேற்று மூன்று மணிக்கு யாருடைய அனுமதியுமின்றி காலேஜிலிருந்து வெளியே போயிருக்கிறாள்...” என்றாள். “அப்படியா!” வியப்புடன் ஒலித்தது சேதுபதியின் குரல். “ஆமாம், அனுமதியின்றி அவள் வகுப்பை விட்டுப் போவது இதுதான் முதல் தடவை. ஆகவே, இதை ஒரு பெரிய புகாராகத் தங்களிடம் சொல்ல வேண்டாமென்று தான் முதலில் நினைத்தேன். மாணவிகளின் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. ஆகவே இம்மாதிரி தவறுகளை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி விடுவது நம்முடைய கடமையல்லவா? தங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமென்பதற்காகவே இதைச் சொன்னேன். அவள் நல்ல பெண்தான். யாராவது சிநேகிதிகளுடன் சேர்ந்து கொண்டு சினிமாவுக்குப் போயிருப்பாளோ என்பது என் சந்தேகம்...” என்றாள் பார்வதி. “ஆமாம், அப்படித்தான் இருக்கும். அவள் நேற்று நேரம் கழித்து வந்த விஷயம் எனக்கும் தெரியும். உடனே கூப்பிட்டு விசாரித்தபோது தான் கணக்கில் வீக் என்றும் யாரோ ஒரு ஹாஸ்டல் பெண்ணிடம் கணக்குக் கற்றுக் கொண்டிருந்ததாகவும் என்னிடம் துணிந்து ஒரு பொய்யைச் சொன்னாள்...” என்றார் சேதுபதி. தம்முடைய மகள் மீது அவர் கொண்டுள்ள கோபத்தைத் தணிக்க எண்ணிய பார்வதி தமாஷாகச் சிரித்துக் கொண்டே, “இல்லையே, பாரதி கூறியது பொய்யில்லையே?” என்றாள். “பொய்யில்லையா? அவள் சினிமாவுக்குப் போயிருப்பாள் என்று தாங்களே சற்று முன் கூறினீர்களே!” “ஆமாம்; அவள் கணக்கிலே ‘வீக்’ என்று கூறியது பொய்யில்லை என்றுதான் சொல்ல வந்தேன்.” சிரித்தபடியே கூறினாள் பார்வதி. தம் மகளிடம் பார்வதி எடுத்துக் கொண்டுள்ள அக்கறையைச் சேதுபதியால் புரிந்து கொள்ள முடிந்தது. எவ்வளவு நாசூக்காகச் சிரித்துக் கொண்டே விஷயத்தைக் கூறிவிட்டாள் என்று தனக்குள்ளாகவே வியந்து கொண்டார். “அப்படியானால் அவளுக்கு யாராவது ஒரு புரொபஸ்ரைக் கொண்டு டியூஷன் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்ய முடியுமா?” சேதுபதி கேட்டார். “யாராவது ஒரு புரொபஸர் என்ன? உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நானே வந்து சொல்லித் தருகிறேன்” என்றாள் பார்வதி. “பாரதி விஷயத்தில் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு வந்தது பற்றி மிக்க நன்றி. தங்களுக்குள்ள வேலைகளுக் கிடையில் தாங்களே டியூஷனுக்கு வருவது...” என்று இழுத்தார் சேதுபதி. “அதனால் பரவாயில்லை; ஒழிவு நேரங்களில் தான் வரப் போகிறேன்.” சேதுபதிக்கு அந்தச் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. பார்வதியை இனி அடிக்கடி சந்திக்கலாம் என்பதை நினைக்கும்போது, அவர் உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது. அவளைச் சந்திப்பதில், அவளைக் காண்பதில், அவளுடன் பேசுவதில், அவளைப்-பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதில் தனக்கு ஏன் இத்தனைக் குதூகலம்? அதற்கு என்ன காரணம்? அவருக்கே அது விளங்கவில்லை. |