குருத்து ஐந்து

     ஓங்கி உயர்ந்து கொண்டிருந்த உதய சூரியனின் அழகைப் பலகணியின் வழியாகப் பார்த்து ரசித்தபடியே சிந்தனையில் மூழ்கியிருந்தாள் பார்வதி.

     நேற்று முன்தினம் சேதுபதியை அவருடைய இல்லத்தில் கண்டு பேசிவிட்டு வந்தது முதலே, அவள் உள்ளப் போக்கு அடியோடு மாறுபட்டிருந்தது. இதற்கு முன் அனுபவித்தறியாத அபூர்வ உணர்வும், ஆனந்தப் பரவசமும் அவளை ஆட்கொண்டிருந்தன.

     தினம் தினம் தான் அவள் சூரியோதயத்தின் அழகைக் காண்கிறாள்; அந்திவேளைச் சூரியனின் அமைதியைப் பார்க்கிறாள். ஆயினும் என்றும் காணாத புதுமையும் கவர்ச்சியும் இன்று மட்டும் தோன்றுவானேன்? எங்கோ, எப்போதோ படித்திருந்த சில வரிகள் அவன் கவனத்துக்கு வந்தன.

     “காலையில் சூரியன் உதிக்கும் அழகைக் கண்டு களிக்கிறோம். மாலையில் அஸ்தமனத்தின் அற்புதத்தைக் கண்டு ஆனந்தமடைகிறோம். அதே சமயத்தில் நம்முடைய வாழ் நாளில் ஓர் ஏடு கிழிந்து விட்டது என்பதை எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறோம்.”

     இந்தக் கருத்து, பார்வதியின் வயதைச் சுட்டிக் காட்டிச் சிந்திக்க வைத்தது.

     ‘நாற்பத்தாறு ஆண்டுகள் வீணாகப் போய்விட்டனவா? இனி எனக்கு வாழ்வே கிடையாதா? இளமைப் பருவத்தின் எல்லையைக் கடந்து விட்டேனா வயோதிகத்தின் முதல் படியில் காலடி எடுத்து வைத்து விட்டேனா?’

     தன் உருவத்தை ஒருமுறை பார்த்துக் கொள்ள விரும்பியவளாய் நிலைக்கண்ணாடியின் முன் சென்றாள். அங்கே தலையைச் சாய்த்துச் சாய்த்து, தன் மூக்கினால் கண்ணாடியைக் குத்திக் குத்தி, அதில் தெரிந்த தன் உருவத்தைப் பல கோணங்களில் ரசித்துக் கொண்டிருந்த குருவி ஒன்று பார்வதியைக் கண்டதும் சட்டெனப் பறந்து விட்டது.

     பார்வதியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. தலையில் தெரிந்த நரை தன்னைக் கண்டு பரிகசிப்பது போல் தோன்றவே, அந்த எண்ணம் அவள் உள்ளத்தை உறுத்தியது. அவள் சொல்லிக் கொண்டாள்: ‘அப்படி ஒன்றும் எனக்கு வயதாகி விடவில்லை. இதோ என் கழுத்து, தாழங் குருத்து போல் எத்தனை அழகாயிருக்கிறது!’ என்று, பிடரியைத் தன் இரு கைகளாலும் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

     புன்முறுவல் ஒன்றின் மூலமாகத் தன் மனக்குறையை ஜீரணித்துக் கொண்டவளாய் நாற்காலியில் போய் அமர்ந்து, மேஜை மீது கிடந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டினாள்.

     ‘மக்களுக்குத் தொண்டு புரியும் மகான்கள், சமூக சேவையில் ஈடுபட்ட தலைவர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆகியோர் ‘ஸில்வர் ஓக்’ என்னும் மரங்களுக்கு ஒப்பானவர்கள். இந்த மரம் தனக்கென வாழ்வதில்லை. இதற்கெனத் தனிப்பட்ட ஆசாபாசங்களும் கிடையா. தேயிலைச் செடிகள் வளர்வதற்கு இவற்றின் லேசான இளம் நிழல் பயன்படுகிறது. இந்த மரங்களின் கிளைகள் அடர்ந்து படர்ந்து வளரும்போது நிழல் அதிகமாகிவிடும் என்பதற்காக அவற்றை வெட்டி விடுவார்கள். ஸில்வர் ஓக் மரத்தைப் போல், ஆசாபாசங்களை அவ்வப்போது வெட்டிக்கொண்டு வாழ்பவர்கள் தான் சமூக சேவையைச் சரிவரச் செய்ய முடியும்.’

     ‘நானும் ‘ஸில்வர் ஓக்’ மரத்தைப் போல் ஆசாபாசங்களை வெட்டிக் கொண்டு வாழவேண்டியவள் தானா? எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாதா?’

     கீழே ராஜாவின் சீட்டிக் குரல் மணி ஒன்பதாகி விட்டது என்பதை அறிவித்தது.

     ‘இன்று திங்கட்கிழமை. சீக்கிரமே கல்லூரிக்குப் போய் அலுவல்களை முடித்துக் கொள்ள வேண்டும். இன்று மாலை கல்லூரி முடிந்ததும் பாரதியின் வீட்டுக்குச் சென்று கணக்குப் பாடத்தைத் தொடங்கிவிட வேண்டியதுதான்.’

     சனிக்கிழமை மாலையே போக வேண்டுமென்றுதான் முதலில் நினைத்தாள். ஆனாலும் ஒப்புக்கொண்ட உடனேயே அவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு போய்விடக் கூடாதென்பதற்காக, இரண்டு தினங்கள் தள்ளிப் போட்டாள். இந்த இரண்டு நாட்களாக எத்தனைக் கெத்தனை அமைதியோடு இருக்க வேண்டுமென்று எண்ணினாளோ, அவ்வளவுக்கு அவள் உள்ளத்தில் ஒருவிதப் பரபரப்பு அலைந்து கொண்டிருந்தது.

     “ஞானம்! சமையலாகி விட்டதா? சாப்பிட உட்காரலாமா?” என்று கேட்டுக் கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டாள் பார்வதி.

     தினந்தோறும், மணை போட்டு, இலை போட்டு, ராஜா வந்து உட்கார்ந்துகொண்டு ‘அத்தை அத்தை’ என்று அலறிய பிறகே கீழே இறங்கி வருவதுதான் பார்வதியின் வழக்கம். வழக்கத்துக்கு மாறாக ராஜாவுக்கு முன்னால் வந்து விட்ட பார்வதி, “ராஜா, சாப்பிட வரவில்லையா? ஏன் லேட் இன்றைக்கு உனக்கு?” என்று கேட்டது, ஞானத்துக்குப் பெரும் வியப்பாயிருந்தது.

     “நான் லேட் இல்லை அத்தை; நீங்கதான் எர்லி” என்று சிரித்துக் கொண்டே வந்து உட்கார்ந்தான் ராஜா.

     ‘நான் எர்லியா? நாற்பத்தாறு வயது என்பது எர்லியா?’ தனக்குள்ளாகவே எழுந்த கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருந்தது அவள் உள்ளம்.

     “அத்தை! பால்காரச் சின்னையனுக்குக் கல்யாணமாம். அடுத்த மாதம் முகூர்த்தம் வைத்திருக்கிறானாம். இரு நூறு ரூபாய் முன் பணம் வேண்டுமென்கிறான்!” என்றான் ராஜா.

     “அவனுக்கு இதுவரை கலியாணமே ஆகவில்லையா? வயசு ஐம்பதுக்கு மேல் இருக்கும் போலிருக்கிறதே!”

     “நான் கூட அதைத்தான் சொன்னேன். ‘இப்போது என்னடா அவசரம் வந்து விட்டது? வயசு ஐம்பது தானே ஆகிறது! இன்னும் பத்து வருஷம் போகட்டுமே’ என்றேன்” என்று ராஜா சிரித்துக் கொண்டே கூறினான்.

     “ராஜா! சின்னையனுக்கு அப்படி என்ன வயசாகிவிட் டது? மிஞ்சினால் ஐம்பது இருக்கும். அது ஒரு வயசா? சாப்பிட்டு முடிந்ததும் செக்குப் புத்தகத்தைக் கொண்டு வா, கையெழுத்துப் போட்டுத் தருகிறேன். உடனே அவனுக்குப் பணத்தைக் கொடுத்தனுப்பு” என்றாள் பார்வதி.

     “வயதாகிவிட்ட பிறகும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் மேல் நாடுகளில் தான் உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். வர வர நம் நாட்டிலும் இது சகஜமாகி விட்டது...” என்று முணுமுணுத்தான் ராஜா.

     “உனக்கு இதில் என்ன ஆட்சேபனை...?” பார்வதி கேட்டாள்.

     “எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. தங்களுடைய வயதுக்கேற்ப இன்னொரு வயதான மங்கையாகப் பார்த்து ஜோடி சேர்த்துக் கொள்ளாமல், இளம் பெண்களின் வாழ்வைப் பாழாக்கி விடுகிறார்களே என்பதை எண்ணும் போது தான்...”

     ‘அவரவர்கள் வயதுக்கேற்ற முறையில் ஜோடி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அவ்வளவுதானே?' ராஜாவின் பதில் பார்வதிக்குத் திருப்தியை அளித்தது. சேதுபதியின் வயதோடு தன் வயதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டாள். சரியான பொருத்தம்தான். அவருடைய ஆழ்ந்த அறிவு, கண்ணியமான தோற்றம், அடக்கமான குணம், வார்த்தைகளை நிறுத்துப் போட்டுப் பேசும் தன்மை, குற்றமற்ற குழந்தைச் சிரிப்பு - எல்லாமே தனக்குப் பொருத்தமாக அமைந்திருப்பதாகத் தோன்றியது அவளுக்கு.

     “கல்லூரிக்கு நேரமாகி விட்டது; நான் புறப்படுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வாசலுக்குச் சென்ற பார்வதி, பகவான் பரமஹம்சரையும் தேவியையும் வணங்கி விட்டுக் காரை எடுத்தாள். அவள் உள்ளத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருக்க முயன்ற போதிலும் அவளால் முடியவில்லை.

     கார், வாசலைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் வழக்கம்போல் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினான். ஆனால் அவன் ஏதோ மாதிரியாகத் தன்னைக் கவனிப்பது போல் பட்டது அவளுக்கு.

     கார் கல்லூரி காம்பவுண்ட் வாசல் திருப்பத்தை அடைந்தபோது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்! அதோ, காலை விந்தி விந்தி நடந்து வரும் அகாதாவும் வந்துவிட்டாளே!

     “ஹல்லோ, குட் மார்னிங்” என்று புன்சிரிப்போடு கூறினாள் அந்தப் பிரெஞ்சு மாது. அகாதாவின் புன்சிரிப்பில் ஏதோ அர்த்தம் இருப்பது போல் தோன்றியது பார்வதிக்கு. கல்லூரி போர்டிகோவில் கொண்டு போய்க் காரை நிறுத்தியதும், அட்டெண்டர் ரங்கசாமி கார்க் கதவைத் திறக்க ஓடிவந்தான். அவன் கூடத் தன்னை ஏதோ மாதிரியாகப் பார்ப்பதுபோல் தோன்றியது அவளுக்கு.

     தினந்தோறும் தன் அறைக்குள் சென்று நாற்காலியில் உட்கார்ந்ததும் மள மளவென்று அலுவல்களை முடிக்கும் பார்வதிக்கு, அன்று ஏனோ எந்த வேலையுமே ஓடவில்லை. எதுவும் முக்கியமாகவும் படவில்லை. ‘சாயந்திரம் எப்போது மணி ஐந்தடிக்கப் போகிறது, கல்லூரி முடியப் போகிறது; சேதுபதியின் வீட்டுக்குப் போகலாம்’ என்பதையே எண்ணிக் கொண்டிருந்தாள் அவள்.

     இதுவரை நேரம் போதவில்லையே என்பதுதான் பார்வதியின் குறை. இன்று நேரம் போகவில்லையே என்பது அவள் குறையாக இருந்தது!

     கெடியாரத்தின் முள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது.

     பார்வதிக்குத் தன்னுடைய கடந்தகால வாழ்க்கை நினைவுக்கு வரவே, கண்களை மூடியபடியே, தான் கல்லூரியில் படித்த நாட்களை எண்ணிப் பார்த்தாள். அப்போது டியூஷனுக்குச் சென்ற நிலைமைக்கும், இப்போதைய நிலைமைக்கும் எத்தனை வித்தியாசம்!

     அப்போது அவள் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி, முன்னேற முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இன்டர்மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பார்வதி, தன் சக மாணவிகள் சிலருக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்துகொண்டு, அதில் வந்த வருமானத்தின் மூலம் தன் ஒரே அண்ணனையும், நோய்வாய்ப் பட்டிருந்த தன் தாயாரையும் காப்பாற்ற வேண்டிய தாயிற்று.

     டியூஷன் சொல்லித் தரும் பணியை ஒரு கட்டாயக் கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் அப்போது அவள் இருந்தாள்.

     இன்று முற்றிலும் மாறுபட்ட நிலை. வறுமையின் வற்புறுத்தலோ, கடமையின் கட்டாயமோ இப்போது இல்லை.

     எந்தக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றாளோ, அதே கல்லூரிக்கு இன்று அவள் தலைவி. பல பட்டங்களைப் பெற்றவள். அந்தக் கல்லூரிக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு, தன்னையும் தன் எதிர்காலத்தையும் மறந்து வாழ்பவள். தன் உழைப்பின் பயனாக, தான் எடுத்துக்கொண்ட பெருமுயற்சி காரணமாகக் கல்லூரி அடைந்துள்ள உன்னத நிலையைக் கண்டு பெருமிதப்படுபவள். ‘கல்லூரியின் ஐம்பதாம் ஆண்டும் வெற்றிகரமாகப் பூர்த்தியாகி விட்டது. இனி ஒரு குறையுமில்லை’ என்ற திருப்தியுடன், மகிழ்ச்சிப் பெருமிதத்துடன் இருக்கும் போதுதானா அவள் அந்தரங்கத்தில் ஒரு சிறு கீறல் தோன்றவேண்டும்? அந்தக் கீறல் சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதாக வேண்டும்?

     அது தானாகவே அழிந்து போகிற கீறல் அல்ல; அவளாக அழித்துவிடக் கூடியதும் அல்ல. அவள் இதயத்தின் பூவிதழ் போன்ற பட்டுத் துகிலில் அந்தக் கீறலைப் போட்டவர் வேறு யாருமல்ல; திருவாளர் சேதுபதி அவர்கள் தான்.

     மணி ஐந்தடித்ததுதான் தாமதம். கல்லூரி மாணவிகள் அனைவரும் பட்டாம் பூச்சிகளைப்போல் தெரு வாயிலை நோக்கிப் பறந்து கொண்டிருந்தார்கள்.

     பாரதி மட்டும் உற்சாகமின்றிப் பிரின்ஸிபால் பார்வதியின் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

     காரணம், கல்லூரி முடிந்ததும், தன்னுடைய அறைக்கு வந்துவிட வேண்டும் என்பது பார்வதியின் கட்டளை.

     பாரதியைக் கண்டதுமே, “என்ன புறப்படலாமா?” என்று கேட்டாள் பிரின்ஸிபால்.

     ‘கணக்கில் வீக்! கல்லூரி ஹாஸ்டல் தோழியுடன் படித்துக் கொண்டிருந்தேன்’ என்று தந்தையிடம் கூறிய ஒரு சின்ன பொய், இவ்வளவு விபரீதத்தில் கொண்டுவிடும் என்று பாரதி கனவிலும் கருதவில்லை.

     போலீஸ் காவலுடன் சிறைக் கூடத்துக்குச் செல்லும் கைதியைப் போல், மெளனமாகக் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் பாரதி. அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அந்தக் கார் சேதுபதி அவர்களின் பங்களாவில் போய் நின்றது.

     காரை விட்டுக் கீழே இறங்கும்போதே அவ்விருவர் கண்களும் ‘அவர் இருக்கிறாரா’ என்று அறிந்துகொள்ளும் ஆவலில் சேதுபதியின் அறையைத் துழாவின. இருவருடைய ஆவலும் இரு வகையானவை. ‘அவர் இருக்கமாட்டாரா?’ என்ற ஆவலில் பார்த்தாள் பார்வதி. ‘அவர் இருக்கக் கூடாதே!’ என்ற கவலையுடன் நோக்கினாள் பாரதி! வித்தியாசம் அவ்வளவுதான்!

     “அப்பாவின் அறையில் உட்கார்ந்து கொள்ளுங்கள் மேடம். இதோ வந்து விடுகிறேன்...” என்று கூறிச் சென்றாள் பாரதி.

     தனிமையில் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்த போது, ஒரு கோயிலின் கர்ப்பக் கிரகத்துக்குள் செல்வது போல் அச்சம் ஏற்பட்டது பார்வதிக்கு.

     அறைக்குள்ளிருந்த திருவாளர் சேதுபதி அவர்களுடைய மனைவியின் திருவுருவப் படம், அமைதி நிறைந்த அந்த அழகு வடிவம், பார்வதியைப் பார்த்துக் கேட்டது! ‘என்னுடைய கணவரின் அன்புக்குப் பாத்திரமாகப் பார்க்கிறாயா, அம்மா?’

     உருவம் பேசவில்லை. அப்படி ஒரு பிரமை பார்வதிக்கு. சட்டென அவ்வறையை விட்டு வெளியேறிய பார்வதியின் முகத்தில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக அரும்பி யிருந்தன.

     “ஏன் மேடம், உங்களுக்கு இப்படி வியர்த்து விட்டது. விசிறியின் ஸ்விட்சைப் போடட்டுமா” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் பாரதி.

     “நாம் இருவரும் இங்கேயே இந்த ஹாலிலேயே உட் கார்ந்து கொள்ளலாம்” என்றாள் பார்வதி.

     கணக்குப் பாடம் ஆரம்பமாயிற்று. முதல் நாள் என்பதால் மிகவும் சுலபமான கணக்குகளையே கொடுத்துப் போடச் சொன்னாள் பார்வதி. அரைமணி நேரம் கழிந்தது.

     “சரி, இன்று இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்...” என்று கூறிய பார்வதி, அமைதியின்றி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே இருந்தாள். அந்தரங்கமாக ஓர் ஆசை, அவர் ஒரு வேளை வந்தாலும் வரலாமென்று. அதே சமயம் வாசலில் கார் வரும் ஓசை கேட்டது. ஆமாம், அதிலிருந்து சேதுபதிதான் இறங்கி வந்தார்.

     ‘அவரை எப்படியும் சந்திக்கலாம்’ என்று பார்வதியின் உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது வீண் போகவில்லை. பார்வதி புறப்படுவதற்குத் தயாராக எழுந்து நின்று கொண்டிருப்பதைக் கண்ட சேதுபதி, “உட்காருங்கள் போகலாம். வந்து வெகு நேரமாயிற்றா? பாரதி, எங்கள் இருவருக்கும் காப்பி கொண்டுவா...” என்று கூறியபடியே சோபாவில் சாய்ந்தவர் “ம்... பாரதி கணக்கில் எப்படி இருக்கிறாள்!” என்று கேட்டார்.

     “பரவாயில்லை. நான் வந்து அரை மணி நேரம்தான் ஆயிற்று. முதல் நாளே எல்லாக் கணக்குகளையும் கொடுத்து அவளைத் தொந்தரவு படுத்த விரும்பவில்லை. எடுத்த எடுப்பிலேயே மூளையைக் குழப்பிவிடக் கூடாதல்லவா? பொதுவாகவே குழந்தைகள், தினம் மூன்று மணிநேரம் படித்தால் போதும் என்பதுதான் என் அபிப்பிராயம். ஆடு மாடுகள் புல்லை மேய்கின்றன. மேலோடு மேய்கின்றன. புல் திரும்பவும் செழிப்பாக வளர்கிறது. வேர் வரையில் தின்று விட்டால் என்னவாகும்? புல்லே அழிந்துவிடும் அல்லவா? அதே மாதிரிதான் குழந்தைகளையும் வருத்தக் கூடாது” என்றாள்.

     “பேஷ்! என்னுடைய கருத்தும் இதேதான். ஏறக்குறைய நம் இருவருடைய எண்ணங்களும் ஒன்றாகவே இருக்கும் போலிருக்கிறது” என்று சிரித்துக்கொண்டே கூறினார் சேதுபதி.

     “நம்முடைய சிறு வயதில் கொண்டிருந்த அபிப்பிராயங்களுக்கும் இப்போதுள்ளவற்றுக்கும் எவ்வளவோ வித்தியாசம். முன்பெல்லாம் மாணவிகள் ஓயாமல் படித்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்துடையவளா யிருந்தேன். இப்போது முற்றிலும் மாறாக எண்ணுகிறேன். வயது ஆக ஆக, அனுபவம் முதிர்ச்சி அடைய அடைய, நம்முடைய கருத்துகளும் மாறிக்கொண்டே போகின்றன...” என்றாள் பார்வதி.

     “அதுதான் இயற்கை, அறிவின் வளர்ச்சிக்கு அடையாளம். மாவடுவாக இருக்கும்போது துவர்க்கிறது. அதுவே காயாகும்போது புளிக்கிறது. பின்னர் பழமாகும்போது இனிக்கிறது. ஆகவே, இவை மூன்றும் வெவ்வேறு பழ வகைகள் என்று கூறுவது சரியில்லை யல்லவா?”

     சேதுபதி இந்த உவமையைக் கூறியதும் பார்வதி, “மிகப் பொருத்தமான உதாரணத்தின் மூலம் நான் கூற வந்ததைத் தெளிவாக்கி விட்டீர்கள்!” என்று கூறி வியந்தாள்.

     அவளால் அதற்குமேல் பேச முடியவில்லை. ஏதேதோ பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த தெல்லாம், அந்த உவமையைக் கேட்ட வியப்பில் அடிப்பட்டுப் போய் விட்டன. அவரை நேரில் காணும்போது பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தெல்லாம், இப்போது பேசத் தகுதியற்ற விஷயங்களாகி விட்டன. அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருக்கிறார்!

     பாரதி காப்பி கொண்டு வந்து வைத்தாள். காப்பியை அருந்தியபடியே “தாங்கள் தினமும் இங்கு வரப்போவதாகச் சொன்னீர்கள் அல்லவா?” என்று கேட்டார் சேதுபதி.

     “ஆமாம்” என்றாள் பார்வதி.

     “அவசியம் வந்து போய்க் கொண்டிருங்கள். நேரம் கிடைக்கும் நாட்களில் நானும் வந்துவிடுகிறேன். பொதுவாகச் சில விஷயங்களைப்பற்றி இருவரும் பேசிக் கொண்டிருக்கலாம். உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்றார் சேதுபதி.

     பார்வதி தலையைக் குனிந்து கொண்டாள். அது அடக்கத்தின் அறிகுறியா? வெட்கத்தின் விளைவா?

     வாசலில் ஸ்கூட்டர் வரும் ஓசை கேட்டது. “பாரதி, யார் என்று பார்த்துவிட்டு வா” என்றார் சேதுபதி.

     பாரதி வெளியே போய்ப் பார்த்தாள். ராஜா வந்து கொண்டிருந்தான்.

     அவனைக் கண்டதும் பாரதியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. ‘ராஜா இப்போது எதற்காக இங்கே வருகிறார்? அவருடன் ஏதேதோ பேச வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருந்தாள், பாரதி. ஆனால் அப்பாவும் பிரின்ஸிபாலும் இருக்கும்போது எப்படிப் பேசுவது?’

     “எங்கே வந்தீர்கள் ராஜா?”

     அவளுக்கு ராஜா பதில் கூறிக் கொண்டிருக்கும்போதே, அப்பாவும் பிரின்ஸிபாலுமே வாசலுக்கு வந்து விட்டார்கள்.

     “அத்தை! எங்கள் கல்லூரி பிரின்ஸிபால் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் அல்லவா! இன்று நம் வீட்டுக்கு வந்து காத்திருக்கிறார்” என்றான் ராஜா.

     “அப்படியா? இதோ வருகிறேன்” என்று ராஜாவுக்குப் பதில் கூறிய பார்வதி, சேதுபதியிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.

     சேதுபதிக்கும் பார்வதிக்கும் இன்னும் வெகு நேரம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது.

     பேசுவதற்கு வேண்டிய விஷயங்களும் அவர்களிடம் இருந்தன. சந்தர்ப்பமும் அதற்கு இடமளித்தது. அவர்கள் பேசினார்கள். ஏதேதோ பேசினார்கள். ஆனால் இருவரும் தங்கள் இதய ஆழத்தில் புதைந்து கிடந்த ஓர் எண்ணத்தை மட்டும் வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். சூழ்நிலையும் சந்தர்ப்பமும் இடமளித்த போதிலும், ஏதோ ஒரு பெரிய சுவர் அவர்களுக்குக் குறுக்கே நின்றது. வயதாகி விட்டது என்ற காரணமே அந்தச் சுவராயிருக்குமோ?