உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
குருத்து ஆறு அகத்திக் கீரையைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பசு மாட்டுக்குக் கொடுத்துக் கொண்டே, அதன் கழுத்தைத் தடவியபடி, கடமையற்ற, கல்லூரிக்குச் செல்ல வேண்டிய அவசரமற்ற ஞாயிற்றுக்கிழமையின் விடுமுறை நிதானத்தைச் சாவகாசமாக அசை போட்டுக் கொண்டிருந்தாள் பார்வதி. வாரம் முழுவதும் கல்லூரி அலுவல்களில் ஆழ்ந்து விடும் அவளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் ஓய்வுத் தினம். ஆயினும் விடுமுறை நாட்களில் கூட அவள் வீண் பொழுது போக்குவதில்லை. ஓய்வு நாட்களில் வீட்டிலேயே இருந்து கவனிக்க வேண்டிய வேலைகளுக்கு முதல் நாளே திட்டம் போட்டு வைத்துக் கொள்வாள். அன்று ஞாயிற்றுக்கிழமை. பத்து மணிக்கெல்லாம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு மாடிக்குச் சென்று பீரோவில் அடைந்து கிடக்கும் காகிதக் குப்பைகளையும், பழைய கடிதங்களையும் எடுத்து வெளியே போட்டு, வேண்டாதவற்றை ஒதுக்கி, வேண்டியவற்றை மட்டும் ஒழுங்காக அடுக்கி வைக்கவேண்டும் என்று முதல் நாளே திட்டம் போட்டு வைத்திருந்தாள். கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளாகவே இந்த வேலையை அவள் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள். காரணம், முப்பது ஆண்டுகளாகச் சேர்ந்துள்ள குப்பைகளைக் கிளறும்போது தன்னுடைய கடந்த கால வாழ்க்கை விநோதங்களெல்லாம், தான் அனுபவித்த இன்ப துன்பங்களெல்லாம் நினைவில் தோன்றி சஞ்சலப்படுத்துமல்லவா? மணி ஒன்பது இருக்கும். கல்லூரி மாணவிகள் இருவர் பிரின்ஸிபால் பார்வதியின் பேட்டிக்காக வாசலில் காத்திருந்தனர். பார்வதி, உள்ளே சமையலறையில், ஞானத்துக்கு உதவியாகக் காய்களைத் திருத்திக் கொடுப்பதில் முனைந்திருந்தாள். அவளுடைய ஞாயிற்றுக்கிழமை திட்டங்களில் அதுவும் ஒன்று! காய்கள் திருத்துவதில் பார்வதிக்கு எப்போதுமே பிரியம் அதிகம்! வாழைப்பூவின் இதழ்களை ஒவ்வொன்றாகப் பிய்த்து அதன் நீள நீளமான பூக்களைத் தனித்தனியாகப் பிரித்து எடுத்து, அந்தப் பூக்களின் இதயத்தில் ஒளிந்திருக்கும் 'கள்ளனை'க் கண்டு பிடித்து அகற்றுவது ஒரு பெரிய கலை, அன்று அதை ஒரு விளையாட்டுச் சிறுமிபோல் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் பார்வதி. வாழைப்பூ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பார்வதி தன் வாழ்க்கையை எண்ணிப் பார்த்துக் கொண்டாள். ‘என் இதயத்தில் புகுந்திருக்கும் கள்ளனைக் கண்டு பிடித்து அகற்றும் சக்தி எனக்கு உண்டா?’ இந்தக் கேள்விக்கு அவளால் விடை காண முடியவில்லை. கை, பூவிலுள்ள கள்ளர்களைக் களைந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் மனம் தன் இதயக் கள்ளனைக் களையும் மார்க்கம் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தது. “அத்தை! வாசலில் யாரோ இரண்டு மாணவிகள் உங்களைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள்” என்று ராஜா கூறிய வார்த்தைகள் அவள் சிந்தனையைக் கலைத்தன. பார்வதி எழுந்து வாசலுக்குச் சென்றபோது அங்கு உட்கார்ந்திருந்த மாணவிகள் இருவரும் மரியாதையோடு எழுந்து நின்று வணக்கம் செய்தனர். “ஓ, நீங்களா!... ஒரு வாரமாக நீங்கள் வகுப்புக்கு வருவதில்லை என்று கேள்விப்பட்டேன்... ஏன்?... சம்பளம் கட்ட முடியவில்லை என்றால் என்னிடம் வந்து சொல்லியிருக்கலாமே... நான் கூட ஒரு காலத்தில் உங்களைப்போல் சம்பளம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டவள்தான். வறுமை, உங்கள் படிப்புக்குத் தடையாயிருக்கக் கூடாது. உங்கள் தாய் தந்தையரை எனக்குத் தெரியாது. அதனால் பரவாயில்லை... உங்களிருவருடைய சம்பளத்தையும் நான் கட்டி விடுகிறேன். நாளையிலிருந்து வகுப்புக்கு வந்து விடுங்கள். சரி... நீங்கள் போகலாம். இதைச் சொல்லுவதற்குத்தான் உங்களிருவரையும் வரச் சொல்லியிருந்தேன்'' என்றாள் பார்வதி. நன்றிப் பெருக்கின் உணர்ச்சியில் அந்தச் சகோதரிகள் இருவரும் கண்களில் கண்ணீர் மல்கப் பேசமுடியாமல் மௌனிகளாக நின்றனர். அந்தப் பெண்களின் மௌனத்தில் கள்ளன்களைப்போல் மறைந்து கிடந்த ஆயிரம் நன்றிகளைப் பார்வதி கண்டு கொண்டாள். “நீங்கள் போகலாம்” என்று இதமான மிதமான தனது மொழிகளால் அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிய பார்வதி உள்ளே போகும்போது, “பாவம் நன்றாகப் படிக்கிற குழந்தைகளின் குடும்பம் வறுமையால் வாடுகின்றன. வசதியுள்ள குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளோ நன்றாகப் படிப்பதில்லை” என்று தனக்குத்தானே வாய்விட்டுச் சொல்லிக்கொண்டு போனாள். பார்வதியால் எதையும் பொறுத்துக்கொள்ள முடியும். சம்பளம் கட்ட முடியாமல் எந்த மாணவியும் படிப்பை நிறுத்தி விடுவதை மட்டும் அவளால் சகிக்க முடிவதில்லை. சாப்பிட்டு முடிந்ததும் திட்டப்படி மாடி அறைக்குச் சென்று பீரோவைத் திறந்து அதிலிருந்த பழைய குப்பைகளை எடுத்து வைத்துக் கொண்டாள் பார்வதி. ஒவ்வொரு காகிதமாக எடுத்துப் படித்துக் கொண்டே வந்தபோது, அவளுடைய கடந்த கால வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவில் தோன்றி அவள் கண்களைப் பனிக்கச் செய்தன. அந்தக் குப்பைகளுக்கிடையே பளிச்சிட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று அவள் கவனத்தைக் கவர்ந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன் அவளுடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவள் தோழி சரஸ்வதியின் திருமணப் பத்திரிகை அது. பார்வதி ஆவலுடன் அதைப் பிரித்துப் பார்த்தாள். சௌபாக்கியவதி சரஸ்வதிக்கும், சிரஞ்சீவி சேதுபதிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட மேற்படி திருமண சுபமுகூர்த்தம் இனிது நடந்தேறி இன்று முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. சேதுபதி! - அந்தப் பெயரை வாசித்தபோது அவள் நெஞ்சத்தில் ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. சரஸ்வதி! - சேதுபதியின் அறையில் மாட்டப்பட்டுள்ள அவருடைய மனைவியின் உருவப் படம் இந்தச் சரஸ்வதியினுடையதுதானோ? முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பழகிய தன்னுடைய கல்லூரித் தோழி சரஸ்வதியின் முகத்தை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த முகத்துடன் படத்திலுள்ள முகத்தை ஒத்திட்டுப் பார்க்க முயன்றாள். ஊஹும் முடிய வில்லை. பால்ய சிநேகிதி சரஸ்வதியின் முகம் அவளுக்கு மறந்தே போய்விட்டது! படத்திலுள்ள சரஸ்வதிக்கு வயது முப்பது அல்லது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம். கல்லூரித் தோழி சரஸ்வதியை அவள் பதினெட்டு வயது கன்னிப் பெண்ணாயிருந்தபோது கண்டதுதான். எனவே, அடியோடு மறந்து போன ஒரு முகத்தை, முப்பத்தைந்து வயதான ஒரு சுமங்கலியின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, அந்தச் சரஸ்வதிதானா இவள் என்பதை நிச்சயப்படுத்துவது அவளால் இயலாத காரியமாயிருந்தது. எண்ணங்கள் சுழன்றன. ஏதேதோ குழப்பங்களும், ஆசைகளும், கவலைகளும் கற்பனைகளும் பார்வதியின் நெஞ்சத்தில் புகுந்து புயலாகப் பரிணமித்துச் சுழன்று கொண்டிருந்தன. முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள், பார்வதிக்கு அப்போது பதினெட்டு வயது இருக்கலாம். இதே சாரதாமணிக் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தந்தை பலராம் வாத்தியார் எலிமென்டரி பாடசாலையில் நீண்ட காலம் ‘எழுத்தறிவிக்கும் இறைவனாக’ இருந்து வயிற்றைக் கழுவி விட்டுத் தன் மகள் பார்வதியையும், மகன் சிவராமனையும் பால்ய வயதிலேயே அநாதைகளாக்கிச் சென்றுவிட்டார். பலராம வாத்தியாரின் நண்பர் சாம்பசிவம் பார்வதியையும், அவள் அண்ணனையும் தன் வீட்டோடு அழைத்து வந்து ஆதரவு காட்டி வளர்க்கலானார். உரிய காலத்தில் சிவராமனுக்குத் திருமணம் நடந்தது. மறு வருடமே அவன் மனைவி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துத் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். அந்தத் துயரம் தாங்காமல் சிவராமன் பார்வதிக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வடநாட்டுக்கு யாத்திரை கிளம்பிப் போய்விட்டான். போனவன் போனவன் தான், அப்புறம் திரும்பவேயில்லை. அன்றே அண்ணனுக்குப் பிறந்த ஆண் மகவைக் காப்பாற்றும் பொறுப்பு பார்வதியின் தலையில் விழுந்தது. கன்னிப் பருவத்தைக் கட்டிக் காக்க வேண்டிய கடமை, வறுமையின் கொடுமை, இவற்றுக்கிடையே குழந்தையை வளர்க்க வேண்டிய கடமையும் சேர்ந்து நிலை தடுமாறி நின்ற பார்வதிக்கு ஆதரவாக இருந்து பரிவு காட்டியவர் சாம்பசிவம்தான். அவருக்குக் காது சற்று மந்தம். செவிச் செல்வத்தைத் தவிர மற்ற செல்வங்களை யெல்லாம் பெற்று வாழ்க்கையின் இன்பங்களை யெல்லாம் ஆண்டு அனுபவித்து ஏகாங்கியாக வாழ்பவர் அவர். உற்றார் உறவினர்களிடம் ஒட்டுதல் இன்றி, பற்றற்ற ஞானிபோல் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த வயோதிகருக்கு ஆண்டவன் இப்படி ஒரு பொறுப்பை அளித்திருந்தான். ஆனாலும் பார்வதி அவருக்கு ஒரு பாரமாக இருக்க விரும்பவில்லை. காலையிலும் மாலையிலும் தன் கல்லூரித் தோழிகள் சிலருக்கு டியூஷன் சொல்லித் தந்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். விசித்திரமான தன் வாழ்க்கையை எண்ணிப் பார்த்தபோது பார்வதிக்கே வேடிக்கையாக இருந்தது. ‘எங்கேயோ பிறந்தேன். எங்கேயோ வளர்கிறேன். நான் ஓர் அநாதை. கன்னிப் பெண்; கலியாணமாகாதவள். என்னிடம் இன்னொரு அநாதைக் குழந்தை! இந்தக் குழந்தைக்கும் எனக்கும் ஆதரவு சாம்பசிவம்.’ ‘நான் கன்னிப் பெண்ணாக இருந்து கொண்டே, குழந்தைக்குத் தாயாகவும் இருக்க வேண்டும். படித்துக் கொண்டே பணமும் சம்பாதிக்க வேண்டும். தெருவில் செல்லும் வாலிபர்களின் கண் பார்வையிலிருந்து தப்பி வாழவேண்டும். படித்துக் கொண்டே, படித்தபடி பணம் சம்பாதித்துக் கொண்டே, அநாதையாக இருந்து கொண்டே, அநாதையை வளர்த்துக் கொண்டே, கன்னியாக இருந்து கொண்டே, கலியாணம் ஆனவளைப் போல் வாழ்ந்து கொண்டே, தேவி!.. இதென்ன விசித்திர வாழ்க்கை ! யாருக்காக நான் வாழ்கிறேன்? எதற்காக வாழ்கிறேன்?’ ‘அப்பா, நான் டியூஷனுக்குப் போகிறேன்’ என்று குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு புறப்பட் டாள் பார்வதி. சாம்பசிவம் சிரித்தார். அந்தச் சிரிப்பிலே வேதனையும் வருத்தமும் கலந்திருந்தன. “போகிற இடங்களுக் கெல்லாம் இந்தக் குழந்தையையும் கூடக் கூடத் தூக்கிக் கொண்டு போகிறாயே, இதைத் தொட்டிலில் விட்டுச் சென்றால் நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா?” சாம்பசிவம் கேட்டார். “தங்களுக்கு எதற்குச் சிரமம், அப்பா! கையோடு இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போவது எனக்கு ஒரு விதத்தில் செளகரியமாகவே இருக்கிறது. தெருவில் செல்லும் வாலிபர்கள் என்னைப் பார்க்கும்போது ஒரு தாயைப் பார்ப்பதுபோல் மரியாதை காட்டுகிறார்கள். அவர்களுடைய பார்வை குற்றமில்லாமல் இருக்கிறது. ஆகையால், என் ராஜா என் கன்னிப் பருவத்துக்கு ஒரு கவசமாக இருந்து உதவுகிறான்...” “நீ ஒரு வேடிக்கையான பெண்!” என்றார் சாம்பசிவம். “ஆமாம், இராமலிங்க சுவாமிகள் சரித்திரம் நீங்கள் படித்ததில்லையா? அவர் முற்றும் துறந்த முனிவராகப் பற்றற்று வாழ்ந்த காலத்திலும் தன் இடுப்பில் ஒரு சாவிக் கொத்தைச் செருகி வைத்துக் கொண்டிருப்பாராம். வீடோ, வாசலோ, பெட்டியோ எதுவும் இல்லாமல் வெறும் சாவிக் கொத்தை மட்டும் வைத்துக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம் தெரியுமா? மற்றவர்கள் தன்னை உயர்வாக, முற்றும் துறந்த முனிவராக எண்ணிவிடக்கூடாது என்பதற்காகத்தான். என் கதையும் ஏறக்குறைய அப்படித்தான். கன்னிப்பெண் என்று என்னை யாரும் எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே எங்கே போனாலும் இந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அலைகிறேன். என்னைப் பார்க்கிறவர்கள், என்னை ஒரு தாயாகப் பார்ப்பார்கள் அல்லவா?” என்று கூறிச் சிரித்தாள். “இனிமேல் உனக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்காது. இன்று மாலை நான்கு மணிக்கு எனக்குத் தெரிந்தவர்கள் உன்னைப் பெண் பார்க்க வரப்போகிறார்கள். நான் தான் ஏற்பாடு செய்திருக்கிறேன். பெரிய பணக்கார இடம். பையன் பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறான். ராஜா மாதிரி கண்ணுக்கு லட்சணமாக இருப்பான். நீ என் பேச்சைத் தட்ட மாட்டாய் என்ற நம்பிக்கையில் அவர்களை வரச் சொல்லியிருக்கிறேன். கலியாணமே வேண்டாம் என்று சொல்லக்கூடாது. சொன்னால் இன்று முதல் நான் உன்னுடன் பேசவே மாட்டேன்...” பலமான பீடிகையுடன் பார்வதி மறுத்துக்கூற முடியாதபடி விஷயத்தைச் சொல்லி முடித்து விட்டார் சாம்பசிவம். அன்று மாலையே சாம்பசிவத்துக்குத் தெரிந்த நண்பரும் அவருடைய மனைவியும் ஒரு வாலிபனுடன் பார்வதியைப் பார்க்க வந்திருந்தார்கள். “இவன் என்னுடைய சகோதரியின் மகன். இவனுக்குத் தாயார் தகப்பனார் இல்லை. என் சொத்தெல்லாம் இவனுக்குத்தான் எழுதி வைக்கப் போகிறேன். பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறான். பெயர் சேதுபதி...” என்றார் பிள்ளைக்கு மாமா. பலகாரங்களையும் தானே தயாரித்த காப்பியையும் கொண்டுவந்து அவர்கள் மூவருக்கும் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்தாள் பார்வதி. “இவள் என் வளர்ப்பு மகள். ரொம்பக் கெட்டிக்காரி; பெயர் பார்வதி...” என்று பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்தார் சாம்பசிவம். “பெண் அடக்கமாக இருக்கிறாள்” என்றார் பிள்ளைக்கு மாமா. “பிராப்தம் இருந்தால் நடந்துவிடுகிறது” என்றாள் பிள்ளைக்கு மாமி. பிள்ளையும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தரங்கமான மெளன மொழியில் பேசிக் கொண்டார்கள். அந்த ஒரு விநாடியிலேயே ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டார்கள் என்று கூடக் கூறலாம். “காப்பி முதல் தரமாயிருக்கிறது” என்று பையன் நாசுக்காகத் தன் உள்ளத்தைச் சொல்லி விட்டான். பார்வதி உள்ளே போய் மறைவாக நின்று கொண்டு அந்த வாலிபனுடைய அழகிய வடிவத்தை, கம்பீரத்தைப் பார்த்து ரசித்தாள். ‘அவன் தனக்குப் புருஷனாக வாய்ப்பானா?’ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டாள். பிள்ளைக்கு மாமா, பார்வதி கொண்டுவந்து வைத்த கோதுமை அல்வாவை ருசித்தபடியே தம் மனைவியைப் பார்த்து, “நீயும் அல்வா செய்கிறாயே! இந்த அல்வாவைப் பார்! எவ்வளவு ருசியாயிருக்கிறது!”என்றார். “ஏன், உங்கள் மனைவி செய்யும் அல்லவா இவ்வளவு நன்றாக இருக்காதோ?” என்று கேட்டார் சாம்பசிவம். “என் மனைவி செய்யும் அல்வாவைச் சாப்பிட்டால் அப்புறம் அபிப்பிராயமே கூறமுடியாது” என்றார் பிள்ளைக்கு மாமா கண் சிமிட்டியபடி! “அதென்ன அப்படி?” என்று வியந்தார் சாம்பசிவம். “அது அப்படித்தான். அந்த அல்வாவைச் சாப்பிட்டதும் நாக்கும் அண்ணமும் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொண்டு பேச முடியாமல் போய்விடும்” என்றார் பிள்ளைக்கு மாமா. பார்வதி உட்பட எல்லோரும் சிரித்து விட்டார்கள்! “சரி, நேரமாகிறது; நாங்கள் போய் இரண்டு நாட் களில் தகவல் சொல்லி அனுப்புகிறோம்...” என்று கூறிப் புறப்பட்டனர் அந்தப் பெரியவர்கள். அதுவரை தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை, அவர்கள் புறப்படும்போது ‘வீல்’ என்று அழத் தொடங்கியது. “இது யாருடைய குழந்தை?” வியப்புடன் கேட்டார் பிள்ளைக்கு மாமா. “இந்தப் பெண்ணுக்கு ஓர் அண்ணன் இருக்கிறான். அவனுடைய குழந்தை. அது ஒரு தனிக்கதை” என்றார் சாம்சிவம். நாலைந்து நாட்கள் கழிந்தன. ஏனோ தெரியவில்லை. இந்தச் சம்பந்தத்தில் எங்களுக்கு இஷ்டமில்லை என்று தகவல் அனுப்பி விட்டார்கள் அந்தப் பெரியவர்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பார்வதியிடம் கலியாணம் என்ற பேச்சை எடுக்கவே பயந்து விட்டார் சாம்பசிவம். பார்வதியும் தன் திருமணத்தைப் பற்றி அன்றோடு மறந்து விட்டாள். காலம் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் சாம்பசிவமும் கண் மூடிவிட்டார். இதெல்லாம் நிகழ்ந்து இன்று முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. பார்வதி தன் கையிலிருந்த சரஸ்வதி - சேதுபதியின் திருமணக் கடிதத்தை இன்னொரு முறை படித்துப் பார்த்து விட்டு, ‘அன்று தன்னைக் காணவந்த வாலிபன் தான் சேதுபதியா? சரஸ்வதிதான் அவருடைய மனைவியா? சேதுபதியின் வீட்டில் மாட்டப்பட்டுள்ள திருவுருவப் படம் என் தோழி சரஸ்வதியினுடையதுதானா?’ என்று யோசித்தாள். அன்று மாலை சேதுபதியின் வீட்டில் பாரதிக்கு டியூஷன் சொல்லிக் கொண்டிருந்த போது பார்வதி கேட்டாள்: “பாரதி! உன் அம்மா பெயர் என்ன?” “சரஸ்வதி!” என்றாள் பாரதி. கன்னியாகவே ஐம்பது வயதைக் கடந்து விட்ட பார்வதிக்கு, என்றுமே, யாரிடமுமே ஏற்படாத பந்தமும் பாசமும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு சேதுபதியிடம் ஏற்படுவானேன்? விட்ட குறை தொட்ட குறை என்பார்களே, அது தானோ? - பார்வதி நீண்டதொரு பெருமூச்செறிந்தாள். |