குருத்து எட்டு

     முதல் நாள் இரவு வெகு நேரம் வரை கண் விழித்துப் படித்துக் கொண்டிருந்த பார்வதி அன்று பொழுது புலரும் நேரத்தில் சற்று அதிகமாகவே தூங்கி விட்டாள், தூக்கம் கலைந்து அவள் படுக்கையை விட்டு எழுந்தபோது கடிகாரத்தில் மணி ஏழடித்துக் கொண்டிருந்தது. அறைக்குள் சில புத்தகங்கள் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. ‘துன்பத்துக்கும் இன்பத்துக்கும் இடையே’ என்பது அவற்றுள் ஒன்று. ‘வித் லவ் அண்ட் ஐரணி’ என்பது இன்னொன்று. அந்தப் புத்தகங்களைக் கண்டபோது அவள் இதழ்களில் இலேசான புன்முறுவல் தோன்றி நெளிந்தது.

     அந்தப் புன்னகைக்குள் ‘ஏதோ ஒன்று’ ஒளிந்து கொண்டிருப்பதை பார்வதியைத் தவிர வேறு எவருமே அறியமாட்டார்கள்.

     ‘இத்தனைக் காலமும் இல்லாமல் இப்போது என்னுள் புகுந்துள்ள அந்த உணர்வுக்கு என்ன காரணம்? நான் ஏன் அவரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறேன்? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?’

     ‘சேதுபதியின் மகள் பாரதியினிடத்தில் நிஜமாகவே எனக்கு அக்கறை இருக்கிறதா? அவளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு ஏன் இத்தனை ஆர்வம்? அவளுக்குப் பாடம் சொல்லித் தரும் நேரங்களில் என் மனம் ஏன் அமைதியின்றி அலைய வேண்டும்? அவரைக் காண வேண்டுமென்ற ஆவலில் என் கண்கள் ஏன் அங்குமிங்கும் சுழல் வேண்டும்? இதற்கெல்லாம் என்ன பொருள்?’

     சேதுபதியின் கண்ணியமான, கம்பீரமான தோற்றம் அவள் கண்ணெதிரில் வந்து நின்றது. ‘இந்தத் தோற்றத்தில் அப்படி என்ன கவர்ச்சி இருக்கிறது? என்னைக் கவர்ந்திழுக்கும் மாய சக்தி இதற்கு எங்கிருந்து வந்தது?’

     ஆம்; சேதுபதியைக் காட்டிலும் கவர்ச்சி மிக்க, அழகு வாய்ந்த ஆடவர்களைப் பார்வதி சந்தித்திருக்கிறாள். வெளி நாடுகளில், எத்தனையோ அறிவாளிகளை, ஆராய்ச்சியாளர்களை, கல்வித் துறையில் புகழுடன் விளங்குபவர்களை, பட்டம் பெற்றவர்களைப் பார்த்துப் பேசியிருக்கிறாள். கருத்து அரங்குகளில் அவர்களுடன் வாதாடி இருக்கிறாள். ஆயினும் அவர்களிடமெல்லாம் காண முடியாத கவர்ச்சி, காந்த சக்தி சேதுபதியிடம் இருந்தது. அந்தக் கவர்ச்சி, ஆண் - பெண் உறவு சம்பந்தமான உடற் கவர்ச்சி அல்ல. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட அறிவு பூர்வமான ஒரு சக்தி அது! அதை அவளால் விளக்க முடியவில்லை. விளங்கிக் கொள்ளவும் முடிய வில்லை.

     இரண்டாகப் பிரிந்து குப்புறக் கீழே வீழ்ந்து கிடந்த புத்தகத்தை எடுத்தபோது அதில் இரவு படித்த சில வரிகள் அவள் கவனத்துக்கு வந்தன.

     ‘உலக வாழ்க்கை ஒரு பாதாளக் கிணறு போன்றது. குழந்தை அதன் பக்கத்தில் நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்தால் என்ன சொல்லுவோம்? ‘அங்கே நிற்காதே! எட்டிப் பார்க்காதே! தூர நில்’ என்போம். அவ்வாறே யாகும் வாழ்க்கையின் அபாயங்கள். கிணற்றில் வீழ்ந்து விட்டால் மீள்வது துர்லபம்.’

     நான் அந்தப் பாதாளக் கிணற்றின் அருகில் நிற்கும் ஒரு குழந்தையா? ஒருநாளுமில்லை.

     இத்தனை ஆண்டுகளும் நான் கலியாணம் செய்து கொள்ளாமலே, கணவனோடு வாழாமலே இல்லறத்தின் இன்ப துன்பங்களை அனுபவிக்காமலே வாழ்ந்து விட்டேன். என் கன்னிப் பருவம் முழுமையும் தாய்மைக் கோலம் பூண்டு, குழந்தை ராஜாவை வளர்ப்பதிலேயே கழித்து விட்டேன். இனி?...

     பார்வதிக்கு இந்த உலக வாழ்க்கை தெரிந்திருந்தது. பெண்மையும் பெண்மைக்குரிய ஆசாபாசங்களும் தெரிந்திருந்தன, ஆனால் அந்தப் பெண்மை தனக்கும் உண்டு என்பதை அவள் உணர்ந்ததில்லை. அவள் வாழ்க்கை தெரிந்தவள். ஆனால் அந்த வாழ்க்கை தனக்கும் உண்டு என்பதை அறியாதவள்.

     கீழே ராஜாவின் சீட்டிக் குரல் ஒலித்தது. காலைப் பத்திரிகையைப் படித்தபடியே யோசித்துக் கொண்டிருந்த பார்வதி, மணி ஒன்பதாகி விட்டது என்பதை அப்போது தான் உணர்ந்தாள்.

     ‘வெகு நேரம் தூங்கி விட்டிருக்கிறேன். என்றுமே இப்படித் தூங்கியதில்லை. கல்லூரிக்கு நேரமாகி விட்டது’ என்று எண்ணிக்கொண்டே அவசரமாக எழுந்து போய் தேதிக் காலண்டரின் முதல் நாள் தாளைக் கிழித்தெறிந்தாள். அப்போதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது. ‘ஓ ! இன்று பாரதிக்குப் பிறந்த நாளல்லவா? என்னைச் சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறாளே! போகலாமா, வேண்டாமா?’ என்று யோசிக்கலானாள்.

     ‘இப்போது ஒருவேளை சேதுபதி வீட்டில் இருந்தாலும் இருக்கலாம். பாரதி என்னை அழைத்திருக்கும் செய்தி அவருக்குத் தெரிந்திருக்கலாம். இப்போது அங்குச் சென்றால் அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்’ என்று முதலில் எண்ணினாள்.

     அடுத்தாற்போல், ‘கூடாது; இப்போது போகக் கூடாது. போகாமலிருந்தால், ஒரு வேளை அவர் தன்னைப் பற்றிப் பாரதியிடம் ஏன் வரவில்லை?’ என்று விசாரித்தாலும் விசாரிக்கலாம். மாலையில் என்னைச் சந்திக்கும்போது ‘காலையில் ஏன் வரவில்லை?’ என்று கேட்டாலும் கேட்கக் கூடும். அவர் என்னைப் பற்றி விசாரிக்கும் பெருமையை இப்போது போவதால் இழந்துவிடக் கூடாது’ என்று தீர்மானித்தவளாய் டெலிபோனை எடுத்து, “பாரதி! எனக்கு இப்போது கொஞ்சம் அவசர வேலையிருக்கிறது. மாலையில் வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கீழே இறங்கிச் சென்றாள்.

     அவசர அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு பகவான் பரமஹம்சரையும் தேவியையும் வணங்கி விட்டுக் காரை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குப் புறப்பட்டாள். கார், வாசல் கேட்டைத் தாண்டும்போது செவிட்டுப் பெருமாள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினான். கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கிய போது, சொல்லி வைத்தாற்போல் பிரெஞ்சு ஆசிரியை மிஸஸ் அகாதா காலை விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள்! அகாதாவைக் கண்டதும் பார்வதி கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்!

     காரைத் தன் அறைக்கு வெளியே கொண்டு போய் நிறுத்தியபோது அட்டெண்டர் ரங்கசாமி வழக்கம்போல் காரின் கதவைத் திறக்க ஓடி வந்தான்.

     குறித்த நேரத்தில் கல்லூரிக்கு வந்துவிட்டதில் பார்வதிக்குப் பரம திருப்தி! அதில் அவள் எப்போதுமே உஷார்!

     உள்ளே போய், நாற்காலியில் அமர்ந்ததுதான் தாமதம், இயந்திரகதியில் இயங்கத் தொடங்கி விட்டாள்.

     எல்லா வேலைகளையும் முடித்தானதும் அன்று வந்த தபால்களை ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்கத் தொடங்கினாள். அந்தக் கடிதங்களில் கல்கத்தா ராமகிருஷ்ண மடத்திலிருந்து வந்திருந்த அழைப்புக் கடிதமும் ஒன்று. உலகத்து அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு விவாதிக்கப் போகும் வேதாந்த விசாரணையில் பார்வதியும் பங்கு பெறவேண்டு மென்பது அழைப்பாளர்களின் விருப்பம்.

     வேறொரு சமயமாயிருந்தால், பார்வதி அந்த அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருப்பாள். தனக்குக் கிடைத்த ஒரு பெருமையாகவும் எண்ணியிருப்பாள். ஆனால் இன்று இப்போது அவள் உள்ளப் போக்கு அடியோடு மாறியுள்ள இந்த நேரத்தில் அவளால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

     மாலை வேளைகளில் சேதுபதியைச் சந்தித்துப் பேசுவதில் அவள் பேருவகையடைந்தாள். அதைக் காட்டிலும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் இந்த உலகத்தில் வேறு ஒன்று இருப்பதாகவே அவளுக்குத் தோன்றவில்லை. எனவே, ‘மன்னிக்கவும்’ என்று பதில் கடிதம் எழுதிப் போட்டு விட்டாள்.

     மணி மூன்றடிப்பதற்குள் தன்னுடைய வேலைகளை யெல்லாம், கடமைகளை யெல்லாம் முடித்துக் கொண்டு விட்ட பார்வதி, ‘மணி எப்போது ஐந்தடிக்கப் போகிறது’ என்று எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள்.

     மணி ஐந்து அடித்தது.

     சேதுபதியைச் சந்திக்கும் ஆவலில் அவள் உள்ளம் துடித்துக் கொண்டிருந்த போதிலும், பாரதி வந்து அழைத்த போது, “எனக்கு இப்போது ரொம்ப வேலை இருக்கிறது. நீ போகலாம். நான் ஆறு மணிக்கு வருகிறேன்” என்று சொல்லி அனுப்பிவிட்டாள்.

     கல்லூரி முடிந்தவுடன் பாரதியையும் காரில் அழைத்துக் கொண்டு டியூஷனுக்குப் புறப்பட வேண்டும் என்பதுதான் பார்வதியின் திட்டம். ஆனால் பாரதி வந்து அழைத்த போது ஏனோ அவள் மனம் மாறிவிட்டது.

     பாரதி அப்பால் சென்றதும், ‘ஆறு மணிக்கு வருவதாக ஏன் சொல்லியனுப்பினேன்? இதென்ன பயித்தியக்காரத்தனம்?’ என்று தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள் பார்வதி.

     அடுத்த ஒரு மணி நேரமும் அவள் தன்னுடைய அறையிலேயேதான் உட்கார்ந்திருந்தாள். ஒரு மணி நேரம் தான் என்றாலும், அந்த நேரத்தில் அது ஒரு யுகமாகத் தோன்றியது! அறை அவளுடைய சொந்த அறைதான் என்றாலும், அந்த நேரத்தில் அது சிறைக் கூடமாகத் தோன்றியது. பார்வதி ஏதேதோ யோசித்தாள். கடந்து போன தன் பழைய வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை யெல்லாம் எண்ணிப் பார்த்து அசை போடலானாள்.

     சிறுவயதில் தாய் தந்தையரைப் பிரிந்து அனுபவித்த துன்பங்கள், தன் சகோதரனுடன் கிராமத்தை விட்டு வந்த சம்பவம், அவனுக்குத் திருமணம் செய்து வைக்கத் தான் பட்டபாடு, தான் காலேஜில் சேர்ந்து படிப்பதற்கும், அண்ணன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கும் வேண்டிய பொருளாதார வசதி இல்லாமல் மாணவிகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தது, அண்ணன் மனைவியின் மறைவு, அந்தத் துயரம் தாங்காமல் அண்ணன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றது, குழந்தை ராஜாவுடன் கிழவர் சாம்பசிவத்தின் ஆதரவில் வாழ்ந்தது, சேதுபதி தன்னைப் பெண் பார்க்க வந்தது, காரணம் கூறாமலே தன்னை நிராகரித்தது, தந்தைபோல் அன்பு பாராட்டிய சாம்பசிவம் தன்னை அநாதையாக்கி விட்டுப் பிரிந்து சென்றது, பல இன்னல்களுக்கிடையே படித்துப் பட்டம் பெற்றது, பின்னர் இதே கல்லூரியில் படிப்படியாக முன்னுக்கு வந்து, கடைசியில் பிரின்ஸிபால் ஆனது வரை எல்லா நிகழ்ச்சிகளையும் எண்ணிப்பார்த்து வியந்து கொண்டாள்.

     மணி ஆறு அடித்துக் கொண்டிருக்கும்போதே பார்வதியின் கார் திருவாளர் சேதுபதியின் பங்களாவுக்குள் போய் நின்றது. வெகு நேரமாக மரத்தடி ஊஞ்சலில் உட்கார்ந்து பார்வதியின் வரவை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்த சேதுபதி, அவள் வருவதற்குச் சற்று முன்புதான் உள்ளே எழுந்து போனார்.

     அறைக்குள் அமர்ந்திருந்த சேதுபதிக்கு வாசலில் கார் வரும் ஓசை கேட்டபோது ‘ஒருகணம் எழுந்து போய் பார்வதியை வரவேற்கலாமா?’ என்று தோன்றியது. அடுத்த கணமே, ‘சே! கூடாது; தனக்கு அவளிடம் உள்ள அந்தரங்க ஆவலை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது. பாரதிக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்த பிறகு பார்வதியாகவே தன்னைத் தேடி தன்னுடைய அறைக்கு வருவாள். அதுதான் வழக்கம். வழக்கப்படி இன்றும் அவளாகவே வரட்டும். அதற்குள் நான் ஏன் அவசரப்படவேண்டும்?’ என்று எண்ணியவராய் அறைக்குள்ளேயே இருந்துவிட்டார்.

     அன்று டியூஷன் முடிவதற்கு வழக்கத்தைக் காட்டிலும் கால் மணி நேரம் அதிகமாயிற்று. பாடம் நடந்துகொண்டிருந்தபோது பார்வதியின் உள்ளத்தில் அமைதி இல்லை. சேதுபதியையே எண்ணி எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தது.

     ‘இன்று அவருடைய அறைக்குச் சென்று அவருடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். பேச்சுக் கிடையில் தன் உள்ளத்தில் சஞ்சலமிட்டுக் கொண்டிருக்கும் எண்ணத்தை, வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டும். அவர் என் அந்தரங்கத்தை அறிய நேரிட்டால் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்...? அவர் என்னிடம் கொண்டுள்ள மதிப்பை மாற்றிக்கொண்டு விடுவாரோ?’

     அடுத்த கணமே, ‘மாற்றிக் கொள்ளட்டும்; எதை வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும். மனத்திற்குள்ளாகவே, எண்ணி எண்ணிப் புழுங்கிப் புழுங்கி வேதனைப் படுவது என்னால் இனி முடியாத காரியம். அவருடைய உறவை, அறிவு பூர்வமான நட்பை என் உள்ளம் நாடுகிறது. அதை நான் அவரிடம் கூறியாக வேண்டும். என் எண்ணத்தை, என்னுள் புகுந்துள்ள அபூர்வ உணர்வை, என்னுள்ளேயே எத்தனைக் காலத்துக்கு மறைத்து வைத்துக்கொண்டிருப்பேன்...?

     புயலில் சிக்கி அலையும் துரும்பைப் போல் எந்த முடிவுக்கும் வரமுடியாமல் அலைந்து கொண்டிருந்தது பார்வதியின் உள்ளம்.

     அதே நேரத்தில் பார்வதி அனுபவித்துக் கொண்டிருந்த வேதனைகளை யெல்லாம் அறைக்குள் உட்கார்ந்திருந்த சேதுபதியும் அனுபவித்துக் கொண்டிருந்தார். ‘பார்வதி தன் அறைக்குள் வந்து பேசிக் கொண்டிருக்கும்போது, எப்படித் தன் விருப்பத்தை வெளியிடுவது, விஷயத்தை எப்படித் தொடங்குவது, எவ்வாறு கூறி முடிப்பது?’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். ‘தம்முடைய அந்தரங்கத்தை அறிய நேரிட்டால், அவள் தன்னைப்பற்றி என்ன நினைப்பாளோ? நினைக்கட்டும். அதற்காக எத்தனைக் காலம் சொல்லாமலேயே இருக்கமுடியும்?’

     இரண்டு உள்ளங்களும், உணர்ச்சி அலைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. டியூஷன் முடிந்தது. பார்வதி தயங்கியபடியே சேதுபதியின் அறையை நோக்கி மெதுவாக நடந்தாள். அவள் இதயத்தில் பெரும் புயல் வீசிக்கொண்டிருந்தது. கால்கள் தடுமாறின. குழம்பிய உள்ளத்துடன் கனத்த இதயத்துடன் சேதுபதியின் அறைக் கதவுகளைத் தள்ளிக் கொண்டு “வணக்கம்” என்று கைகூப்பியபடியே உள்ளே பிரவேசித்தாள். அதே சமயத்தில், “வாருங்கள்” என்று அழைத்த சேதுபதியின் குரலில் வழக்கமாகக் காணும் கம்பீரம் இல்லை; தடுமாற்றம் தொனித்தது.