உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
குருத்து ஒன்பது ‘வணக்கம்’ என்று சொல்லிக்கொண்டே சேதுபதியின் அறைக்குள் பிரவேசித்த பார்வதி, கலக்கமும் பரவசமும் கலந்த உணர்ச்சி வசப்பட்டவளாய், தெய்வ சந்நிதியில் மெய்ம்மறந்து நிற்கும் ஒரு பக்தனைப்போல் தன்னை மறந்த நிலையில் அசைவற்று நின்று கொண்டிருந்தாள். அதே நிலைதான் சேதுபதிக்கும். பார்வதியைக் கண்டதும் வழக்கமாகக் கையைக் காட்டி அமரச் சொல்லும் அவர், அன்று உண்மையிலேயே ஒரு தெய்வச் சிலைபோல் உட்கார்ந்திருந்தார். இந்த மௌன நிலை இரண்டு நிமிடங்கள் நீடித்தது. பார்வதி தானாகவே உட்கார்ந்திருக்கலாம், அல்லது சேதுபதியாவது அவளை உட்காரச் சொல்லியிருக்கலாம். ஆனால் இருவருமே ஒருவரில் ஒருவர் லயித்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ஒருவருடைய இதய ஆழத்தின் அடிவாரத்தில் புதைந்து கிடக்கும் இரகசியத்தை மற்றவர் ஊடுருவி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் வாயடைத்துப் போன ஊமைகளாகி, மெளன மொழியில் சம்பாஷித்தபடியே, தத்தம் உணர்ச்சிகளை, ஆசைகளை உள்ளத்தில் புதைந்து கிடக்கும் எண்ணங்களை வெளியிட முயலும் நடிப்புக்கலையில் இரண்டு நிமிடங்களைக் கழித்து விட்டனர். கடைசியில், சுயஉணர்வு பெற்று, “உட்காருங்கள்” என்று கூறிய சேதுபதி பார்வதியைப் பார்த்தபோது, அவள் நாற்காலியில் அமர்ந்துவிட்டிருப்பதைக் கண்டார். “மன்னிக்க வேண்டும்; தாங்கள் எது பற்றியோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்...” சேதுபதி சிரித்தார். அது பொருளற்ற ஒரு வறட்டுச் சிரிப்பு! அவர் உள்ளம் எதையோ எண்ணிக் கொண்டிருந்த நிலையில் உதடு சிரிப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. “தாங்கள் காலையில் வரப்போவதாகப் பாரதி சொல்லிக் கொண்டிருந்தாளே, ஏன் வரவில்லை?” என்று சேதுபதி ஆவலுடன் கேட்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பார்வதிக்கு அவர் ஒன்றுமே கேட்காதது மிக ஏமாற்றத்தை அளித்தது. அடுத்த கணமே, ‘தன்னிடம் அவருக்கு அவ்வளவு அக்கறை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன அசட்டுத்தனம்?’ என்று எண்ணிக் கொண்டாள். உதட்டில் தவழ்ந்த புன்சிரிப்புக்கும் உள்ளத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த உணர்ச்சிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இன்றிச் சிந்தனையில் மூழ்கியிருந்த சேதுபதி, பார்வதியை மறந்துவிட்டவரைப் போல் காணப்பட்டாலும், அவருடைய எண்ணமெல்லாம் அவளைப் பற்றியதாகவே இருந்தது. அவர் அவளைக் கவனிக்காதது போல் பார்த்துக் கொண்டிருந்தார். அவளை மறந்துவிட்டவர்போல் அவளையே எண்ணிக் கொண்டிருந்தார். சாந்தமே வடிவமாக, ஆனால் சலனமே இதயமாக அவர் எதிரில் உட்கார்ந்திருந்த பார்வதிக்குப் பேசத் தோன்றவில்லை; என்ன பேசுவது என்றும் புரியவில்லை. இருவரும் ஒரே மாதிரி எண்ணிக்கொண்டு, பார்த்துக் கொண்டு, சிந்தித்துக் கொண்டு, என்ன பேசுவது என்று தோன்றாமல் திகைத்துக்கொண்டு அப்படியே, அதே நிலையில், எப்போதும், என்றென்றும், இருந்துவிடவே விரும்பினார்கள். அந்த மெளன நிலையில் அவர்கள் இருவருக்குமே அத்தனை இன்பமும் சுகமும் இருந்தன. அப்படி ஒரு சுகம் இருப்பதை இருவருமே தனித்தனியாக உணர்ந்து அனுபவித்தார்கள். ஆனால் வாய்விட்டுச் சொல்லிக் கொள்ளவில்லை. இருவர் உள்ளங்களும் நெருங்கிய நிலையில் உறவாடிக் கொண்டிருந்த போதிலும், இருவருக்கும் தங்கள் ஆர்வத்தை வெளியிட முடியாத நிலை! அது ஓர் அபூர்வ நிலை! வயது ஐம்பத்திரண்டு கடந்து விட்ட பிறகு, இன்னொருத்தியின் துணையை, உறவை நாடுகிறது அவருடைய உள்ளம். இதைக் காதல் என்று கூறமுடியாது; காதலுக்கும் உடலுறவுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆசை இது. பார்வதிக்கு வயது நாற்பத்தாறு ஆகிவிட்டது. இத்தனைக் காலமும் கன்னியாகவே வாழ்ந்துவிட்ட அவள், திருமண வாழ்க்கையை என்றுமே விரும்பியதில்லை. தன் கன்னிப் பருவத்தை, இளமையின் பைசாச உணர்ச்சிகளுக்குப் பலியாக்கி விடாமல் புனிதமாகப் பாதுகாத்துக்கொண்டு வாழ்ந்து விட்ட பின்னர், இத்தனைப் பிராயம் கடந்து இப்படி ஒரு விசித்திரமான ஆசை! சேதுபதியின் உறவை அவள் விரும்புகிறாள். ஆயினும் அந்த எண்ணம் தற்கால இலக்கியங்களில் சர்வ சாதாரணமாக வர்ணிக்கப்படும் காதல் அல்ல. அவரிடம் அவளுக்கு ஏற்பட்டுள்ள அன்புக்கு, ஆசைக்கு, பரிவுக்குக் காரணம் அறிவுபூர்வமான தொடர்பேயாகும். சேதுபதியின் அறைச் சுவரைப் பெரிய உலகப்படம் ஒன்று அலங்கரித்தது. உலகத்திலுள்ள தேசங்கள், தீவுகள், கடல்கள், மலைகளெல்லாம் அதில் வரையப்பட்டிருந்தன. இன்னொரு புறம் உலக மகா மேதைகள் எழுதிய அறிவு நூல்கள் கண்ணாடி அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மூலையில் வெண்கலத்திலான புத்தர் சிலை, மேஜை மீது உருண்டை வடிவமான சுழலும் உலகத்தின் கோளம் ஒன்று. சுற்றியுள்ள படங்களும், அறிவு நூல்களும் வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல; சேதுபதியின் அறிவு விசாலத்துக்குச் சாட்சியம் கூறிக்கொண்டிருக்கும் உன்னதப் பொக்கிஷங்கள் அவை. ‘தான் ஓர் அறிவாளி; கல்வி கேள்விகளில் வல்லமை வாய்ந்த ஓர் இலக்கிய மேதை’ என்ற பெருமை பார்வதிக்கு உண்டு. ஆயினும் அந்தப் பெருமையை அவள் அகம்பாவமாக்கி விடவில்லை. அடக்கமும் பண்புமே கற்றதன் பயன் என்பதை நன்கு உணர்ந்திருந்த அவள் நீறுபூத்த நெருப்பாக அடக்கமே உருவாக இருந்தாள். சேதுபதியின் அறிவாற்றல், ஆழ்ந்த படிப்பு, உலக அனுபவம், எந்த விஷயத்திலும் அவருக்குள்ள ஒப்பற்ற ஞானம் - இவைகளைக் காணும்போது அவள் தன்னை மின் விளக்கின் அருகில் பறக்கும் கேவலம் ஒரு மின்மினிப் பூச்சியாகவே கருதிக் கொண்டாள். அந்தச் சுழலும் உலகத்தைத் தன் விரல்களால் அசைத்து உருட்டியவாறே அவள் மௌனத்தில் மூழ்கியிருந்தாள். அந்த மௌனம் அவளுக்கே வேதனையைத் தந்தது. சேதுபதியிடம் ஏதேனும் பொதுவாகப் பேச வேண்டும் போல் இருந்தது. பேசினாள்; “யுத்தம், அணுகுண்டு, துப்பாக்கி இவையெல்லாம் இல்லாமலே இந்த உலகம் இயங்க முடியாதா?” - பார்வதியின் குரல் அசாதாரணமாகவே ஒலித்தது. “இதோ இயங்கிக் கொண்டிருக்கிறதே!” என்று சொல்லிவிட்டுப் பார்வதியையும் சுழன்று கொண்டிருந்த அந்தக் கோளத்தையும் மாறி மாறிப் பார்த்தார் சேதுபதி, உதட்டில் புன்னகை தவழ... “உலக மக்கள் யுத்த அபாயம் இன்றி வாழவே வழியில்லையா?” பார்வதி மீண்டும் கேட்டாள். சேதுபதி சிரித்துக் கொண்டே சொன்னார்! “தங்கள் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட முடியாது. ஆனாலும் சுருக்கமாகச் சொல்கிறேன். எறும்புப் புற்றைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதில் கோடிக் கணக்கான எறும்புகள் எவ்வளவு ஒழுங்காகச் சண்டை சச்சரவில்லாமல் தங்கள் காரியங்களைச் செவ்வனே நடத்துகின்றன. அவற்றுக்கு மகாத்மாக்களோ, ஞானிகளோ யாரேனும் உபதேசம் செய்கிறார்களா? இந்த உலகம் பெரிய எறும்புப் புற்றுதான். இதில் நாம் அனைவரும் எறும்புகள் போல் வாழ்க்கையைச் சண்டை சச்சரவின்றி ஒழுங்காக நடத்தினால், அணுக்குண்டு, யுத்தம் எதுவுமே இருக்காது. நமக்குள் தத்துவங்களும் தலைவர்களும் உள்ளவரை சண்டையும் சச்சரவும் இருந்து கொண்டுதான் இருக்கும். பகுத்தறியும் சக்தியோ, தலைமையோ தத்துவங்களோ இல்லாத எறும்புகளையும் வீட்டின் ஜாலங்களையும் பாருங்கள். எவ்வளவு ஒற்றுமையாகச் சண்டை சச்சரவின்றி வாழ்கின்றன...” சேதுபதியின் பதில் பார்வதியை வியப்பில் ஆழ்த்தி விட்டது. ‘அடாடா! எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு தெளிவாக விளக்கி விட்டார்!’ - அவளுடைய வியப்புத் தீரு முன்னரே, சேதுபதி இன்னொரு முறையில் அவள் கேள்விக்குப் பதில் அளித்தார். “மனிதன் உள்ளத்தில் ஓர் ஆசை உண்டாகிறது. அதைத் தீர்த்துக் கொண்டால் பிறகு சுகமாக இருக்கலாம் என்று எண்ணுகிறான். அதற்காகப் படாத பாடெல்லாம் படுகிறான். ஆனால் ஆசையின் படிகளுக்கோ ஒரு முடிவே இல்லை...” எல்லாமே விளங்கிவிட்டது போல் தன்னுடைய சந்தேகங்கள் அனைத்துக்குமே விடை கிடைத்துவிட்டது போல் நிறைவு ஏற்பட்டது அவளுக்கு. எப்படியும் தன் எண்ணத்தை - நீண்ட நாளைய விருப்பத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்ற முடிவுடன் வந்திருந்த பார்வதி, அவருடைய பேச்சில் மயங்கி தன்னை மறந்தவளாய் அவருடன் பேசிக் கொண்டிருப்பதிலேயே பெரு மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற்றவளாய் உட்கார்ந்திருந்தாள். டெலிபோன் மணி ஒலித்தது. சேதுபதி ரிஸீவரை எடுத்துப் பேசினார். அந்தக் குழலில் வந்த செய்தியைக் கேட்டதும் அவர் முகம் மாற்றமடைந்ததைப் பார்வதி கவனித்தாள். “என்ன, பஞ்சுத் தொழிற்சாலையில் தீயா? இரண்டு லட்சமா? உயிர்ச்சேதம் ஒன்றுமில்லையே?” என்று கேட்ட சேதுபதி ரிஸிவரைக் கீழே வைத்துவிட்டு, “நல்ல வேளை! உயிர்ச்சேதம் ஒன்றும் இல்லையாம்! இரண்டு லட்சம் ரூபாய் சேதமாம்! பரவாயில்லை; இன்ஷூர் செய்யப்பட்டிருக்கிறது...” என்று சர்வ சாதாரணமாகக் கூறினார். தீ என்ற சொல் கேட்டுத் துணுக்குற்ற பார்வதி, “தீயா? யாருடைய பஞ்சாலையில்?” என்று விசாரித்தாள். “என்னுடைய பஞ்சாலையில் தான்” என்றார் சேதுபதி மிக அமைதியாக. இரண்டு லட்சம் என்ற வார்த்தை அவரை அசைக்க வில்லை. ‘உயிர்ச் சேதம் உண்டா?’ என்றுதான் விசாரித்தார். உயிரின் மதிப்புக்கும் பொருளின் மதிப்புக்கும் உள்ள வித்தியாசம் அவருக்குப் புரிந்திருந்தது. அதனால் தான் பொருள் நஷ்டத்தை அவர் பெரிதாக மதிக்கவில்லை. பார்வதி சிரித்தாள். அதைக் கண்ட சேதுபதி அவள் சிரிப்பதன் காரணத்தைப் புரிந்துகொண்டு புரியாதவர் போல், “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார். “எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஒரு பஞ்சாலையே தீப்பற்றி எரிந்து போய்விட்டது என்று அறிந்தும் தாங்கள் கொஞ்சம் கூடப் பரபரப்படையவில்லை. இரண்டு லட்சம் நஷ்டம் என்று தெரிந்தும் சர்வ அலட்சியமாக ‘இன்ஷூர் செய்யப்பட்டிருக்கிறது...’ என்று கூறிப் பேசாமலிருந்து விட்டீர்களே! அந்த நஷ்டம் இன்ஷூரன்ஸ் கம்பெனியைச் சேர்ந்தது என்பதால் தானே, இல்லையா?” என்று கேட்டாள். “இல்லை; நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய அந்த இன்ஷூரன்ஸ் கம்பெனியும் என்னுடையதுதான்” என்றார் சேதுபதி. பார்வதி திகைத்தாள். “ஒரு பஞ்சாலை தீப்பிடித்து எரிந்து போய்விட்டதென்றால், அந்த நஷ்டத்தைத் தேசிய நஷ்டம் என்றுதான் கூற வேண்டும். இந்தத் தேசத்தின் உற்பத்தியில் ஒரு சிறிதளவு நஷ்டமாகிவிட்டது என்பதுதான் அதன் பொருள். பஞ்சாலைக்கோ இன்ஷாரன்ஸ் கம்பனிக்கோ நஷ்டமாகாது” என்றார் சேதுபதி. பார்வதி திகைப்புடன் அவரைப் பார்த்தாள். “உங்கள் திகைப்பு எனக்குப் புரிகிறது. அதாவது, இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு நஷ்டம்தானே? அந்த இன்ஷூரன்ஸ் கம்பெனி எனக்குச் சொந்தமாயிருந்தும் அந்த நஷ்டத்தை நான் பெரிதாகக் கருதவில்லையே என்றுதானே யோசிக்கிறீர்கள்?” என்றார் சேதுபதி. பார்வதி தலையசைத்தாள். “அதைத்தான் நான் இல்லை என்கிறேன். பஞ்சாலைக்கு நஷ்டமில்லை என்பதைத் தாங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். நஷ்டம் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கும் இல்லை என்று நான் கூறுகிறேன். அது எப்படி என்பதையும் சொல்கிறேன். எல்லா வியாபாரங்களையும் போல் இன்ஷூரன்ஸ் கம்பெனியும் ஒரு வியாபாரம். ஒரு வியாபாரம் என்றால், அதற்கு வரவு - செலவு இரண்டும் உண்டு. நான் ஒரு தொழிற்சாலை நடத்துகிறேன். அந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்வது எனக்குச் செலவு. அவற்றை விற்பனை செய்வது வரவு இல்லையா...” தலையசைத்தாள் பார்வதி. “அதைப் போலவே இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கும் வரவு செலவுக் கணக்கு உண்டு. இன்ஷூர் செய்து கொள்ளுகிறவர்கள் கட்டும் பாலிஸிப் பணமெல்லாம் வரவு என்றால், இம்மாதிரிக் கொடுக்கப்படும் நஷ்ட ஈடுகள் எல்லாம் அவர்களுடைய செலவாகும். நஷ்டஈடு கொடுத்தது போக, மிச்சமிருப்பது லாபம். இப்போது புரிகிறதா? இது இன்ஷூரன்ஸ் கம்பெனியின் செலவுக் கணக்கில் தான் வரும். நஷ்டக் கணக்கில் வராது. அதனால் தான் இந்த நஷ்டத்தை தேசிய நஷ்டம் என்று மட்டும் கூறுகிறேன்.” இருட்டறைக்குள் மின் விளக்கைப் போட்டதும், பளிச் சென்று ஒளி தோன்றி, இருள் முழுவதும் விலகி விடுமே அப்படி இருந்தது பார்வதிக்கு. வியப்போடு சேதுபதியையே மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் பேசாததை யெல்லாம் அவள் கண்கள் பேசின. அந்தப் பார்வையில் ஏதேதோ பொருள்கள் பொதிந்து கிடந்தன. பார்வையின் முன்னால் ஞான விளக்காக ஓங்கி உயர்ந்து வானை முட்டுவது போன்ற விசுவரூபம் எடுத்துக் காட்சி அளித்தார் சேதுபதி. அவரைப்பற்றி அவள் எவ்வளவோ உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தாள். இன்று அந்த உயர்வுக்கெல்லாம் உயர்வாக இமயமாக வளர்ந்து காட்சி அளித்தார் அவர். அந்த இமயமலைக்கு முன்னால் அவள் ஒரு சிறு குன்று! சின்னஞ்சிறு குன்று! அப்படித்தான் எண்ணினாள் அவள். “அப்பா!” என்று அழைத்துக்கொண்டே அறைக்குள் நுழைந்த பாரதியின் குரல், பிரன்ஸிபாலை விழிப்புறச் செய்தது. இரண்டு கோப்பைகளில் காப்பியைக் கொண்டுவந்து வைத்த பாரதி, பிரின்ஸிபாலைப் பார்த்து, “ப்ளீஸ்...” என்றாள். “உனக்கு இன்று பர்த் டே அல்லவா? மிக்க மகிழ்ச்சி; இப்போது உன் வயது என்ன?” என்று கேட்டாள் பார்வதி. “இருபது” என்றாள் பாரதி. “ஓ, டீன் ஏஜ் முடிந்துவிட்டதென்று சொல்?” சிரித்துக் கொண்டே கூறினாள் பார்வதி. பதில் கூறாமல் வெட்கத்துடன் நின்ற பாரதி, “அப்பா, நான் கொஞ்சம் வெளியே போய் என் பிரண்டைப் பார்த்து விட்டு வரப்போகிறேன்” என்று தன் தந்தையிடம் ஆங்கிலத்திலேயே பேசி உத்தரவு கேட்டாள். ‘அந்த பிரண்ட் கர்ல் பிரண்டா, பாய் பிரண்டா?’ என்று சேதுபதி கேட்கவில்லை. அப்போது இருந்த மன நிலையில் அவருக்கு அதெல்லாம் கேட்கத் தோன்றவில்லை. பார்வதிக்குத் தன்னுடைய ‘டீன் ஏஜ்’ பருவம் பற்றிய நினைவு தோன்றிவிடவே, அந்தச் சிந்தனையில் மூழ்கிப் போனாள். “ம்... இளமைப் பருவத்துக்குள்ள மகிழ்ச்சியும் உற்சாகமுமே தனி!” என்று பெருமூச்சுடன் கூறினாள் பார்வதி. “ஆமாம்; குழந்தைப் பிராயம், வாலிபப் பருவம் என்பதெல்லாம் ஒன்வே டிராபிக், போன்றது. ஒரு வழிப் பாலத்தில் ஒரு முறை போகத்தான் முடியுமே தவிர, திரும்பி வர முடியாது. திரும்பி அந்த வழியில் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டாலும் முடியாது. திரும்பி வருவதற்கு மனம் இருக்கலாம். ஆனால் செயல்படுத்த முடியாது!” என்றார் சேதுபதி. இப்படிச் சொன்னவர் சட்டென்று ஏதோ நினைத்துக் கொண்டவர்போல் பேச்சை நிறுத்திக் கொண்டு, ‘இந்த உதாரணத்தை ஏன் சொன்னோம்’ என்று எண்ணி மனத்திற்குள்ளாகவே வருத்தப்பட்டார். அவர் கூறிய வார்த்தைகள் பார்வதிக்குச் ‘சுருக்’ கென்றன. ‘உனக்கு வயதாகிவிட்டது. இளமைப் பருவத்தைக் கடந்துவிட்டாய். மீண்டும் அதை அடைய முடியாது. ஒரு வழிப் பாலத்தில் மீண்டும் செல்ல ஆசைப்படாதே!’ என்று அவர் மறைமுகமாகச் சொல்கிறார் என்றே தோன்றியது அவளுக்கு. அதே சமயத்தில் அவர், ‘நானே அந்த ஒரு வழிப் பாலத்தில் திரும்பிச் செல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு மட்டும் வயதாகவில்லையா? என் உள்ளத்தில் புகுந்திருக்கும் ஆசைக்கும் அந்தரங்கமாக ஊசலாடும் உணர்வுக்கும் என்ன பொருள்? ஒரு வழிப் பாதையில் திரும்பிச் செல்ல விரும்புகிறேன் என்பதுதானே பொருள்?’ என்று எண்ணிக் கொண்டார். பார்வதியின் அறிவு குழம்பியது. உள்ளத்தில் ஆசைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தத் தீயைச் சற்றும் எதிர்பாராத நேரத்தில் நெருப்பணைக்கும் இயந்திரம் ஒன்று வந்து அணைத்து விட்டதைப்போல் இருந்தது சேதுபதியின் பதில். நான் ஒரு வழிப் பாதையில் திரும்பிச் செல்ல ஆசைப் படுகிறேன் என்பதைச் சேதுபதி அறிந்து கொண்டுதான் இம்மாதிரி கூறி எச்சரிக்கிறாரோ? சொல்ல வேண்டும், சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த தன் எண்ணத்தை, ஆசையை அடக்கிக் கொண்டவளாய் கலங்கிய உள்ளத்துடன் நாற்காலியை விட்டு எழுந்திருக்க முயன்றாள் பார்வதி. ஹால் கடிகாரத்தில் மணி ‘டங்’ என்று ஒரே முறை அடித்து மணி ஏழரை என்பதை அறிவித்தது. கை கூப்பி வணங்கியபடியே, “தங்களிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டேன். நேரம் போனதே தெரிய வில்லை... மன்னிக்கவும்” என்று விடை பெற்றுக்கொண்ட பார்வதி, குமுறி வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டவளாய் பாறையாகக் கனக்கும் இதயத்துடன் போய்க் காரில் ஏறிக் கொண்டாள். காரின் வேகத்தில் உள்ளே புகுந்து வந்த காற்று, பார்வதியின் மனப் புழுக்கத்துக்குச் சற்று இதமாக இருந்தது. வீட்டுக்குச் சென்றவள், நேராக மாடி அறைக்குப் போய்ப் பலகணியின் வழியாகச் சற்று நேரம் தெளிந்த வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது நிர்மலமாக இருந்தது. அவளுக்கு எதிலுமே மனம் ஓடவில்லை. மனச்சுமை அவளை ஆழ்த்தியது. சோர்வும் விரக்தியும் அமைதியின்மையும் அவள் உடலையும் உள்ளத்தையும் உற்சாகமிழக்கச் செய்திருந்தன. நாற்காலியில் அமர்ந்தவள், கண்களை மூடியவாறே மேஜை மீதே கவிழ்ந்து கொண்டாள். சற்று நேரத்துக்கெல்லாம் அப்படியே அயர்ந்து விட்டாள். |