உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதல் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 12 ... 1.111. திருக்கடைமுடி பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1196 அருத்தனை அறவனை அமுதனைநீர் விருத்தனைப் பாலனை வினவுதிரேல் ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங் கருத்தவன் வளநகர் கடைமுடியே. 1.111.1 1197 திரைபொரு திருமுடி திங்கள்விம்மும் அரைபொரு புலியதள் அடிகளிடந் திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர் கரைபொரு வளநகர் கடைமுடியே. 1.111.2 1198 ஆலிள மதியினொ டரவுகங்கை கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி ஏலநன் மலரொடு விரைகமழுங் காலன வளநகர் கடைமுடியே. 1.111.3 1199 கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார் மையணி மிடறுடை மறையவனூர் பையணி யரவொடு மான்மழுவாள் கையணி பவனிடங் கடைமுடியே. 1.111.4 1200 மறையவன் உலகவன் மாயமவன் பிறையவன் புனலவன் அனலுமவன் இறையவன் எனவுல கேத்துங்கண்டங் கறையவன் வளநகர் கடைமுடியே. 1.111.5 1201 படவர வேரல்குற் பல்வளைக்கை மடவர லாளையொர் பாகம்வைத்துக் குடதிசை மதியது சூடுசென்னிக் கடவுள்தன் வளநகர் கடைமுடியே. 1.111.6 1202 பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல் அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங் கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர் கடிபுல்கு வளநகர் கடைமுடியே. 1.111.7 1203 நோதல்செய் தரக்கனை நோக்கழியச் சாதல்செய் தவனடி சரணெனலும் ஆதர வருள்செய்த அடிகளவர் காதல்செய் வளநகர் கடைமுடியே. 1.111.8 1204 அடிமுடி காண்கிலர் ஓரிருவர் புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச் சடையிடைப் புனல்வைத்த சதுரனிடங் கடைமுடி யதனயல் காவிரியே. 1.111.9 1205 மண்ணுதல் பறித்தலு மாயமிவை எண்ணிய காலவை யின்பமல்ல ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த கண்ணுதல் வளநகர் கடைமுடியே. 1.111.10 1206 பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர் சென்றடை கடைமுடிச் சிவனடியை நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன இன்றமி ழிவைசொல இன்பமாமே. 1.111.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - கடைமுடியீசுவரர் தேவி - அபிராமியம்பிகை 1.112. திருச்சிவபுரம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1207 இன்குர லிசைகெழும் யாழ்முரலத் தன்கரம் மருவிய சதுரன்நகர் பொன்கரை பொருபழங் காவிரியின் தென்கரை மருவிய சிவபுரமே. 1.112.1 1208 அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப் பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர் வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள் சென்றடி வீழ்தரு சிவபுரமே. 1.112.2 1209 மலைமகள் மறுகிட மதகரியைக் கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர் அலைமல்கும் (*)அரிசிலி னதனயலே சிலைமல்கு மதிலணி சிவபுரமே. 1.112.3 * அரிசில் என்பது ஒரு நதி 1210 மண்புன லனலொடு மாருதமும் விண்புனை மருவிய விகிர்தன்நகர் பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச் செண்பக மலர்பொழிற் சிவபுரமே. 1.112.4 1211 வீறுநன் குடையவள் மேனிபாகங் கூறுநன் குடையவன் குளிர்நகர்தான் நாறுநன் குரவிரி வண்டுகிண்டித் தேறலுண் டெழுதரு சிவபுரமே. 1.112.5 1212 மாறெதிர் வருதிரி புரமெரித்து நீறது வாக்கிய நிமலன்நகர் நாறுடை நடுபவர் உழவரொடுஞ் சேறுடை வயலணி சிவபுரமே. 1.112.6 1213 ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான் பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச் சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே. 1.112.7 1214 எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன் முழுவலி யடக்கிய முதல்வன்நகர் விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே. 1.112.8 1215 சங்கள வியகையன் சதுர்முகனும் அங்கள வறிவரி யவன்நகர்தான் கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ் செங்கனி நுகர்தரு சிவபுரமே. 1.112.9 1216 மண்டையின் குண்டிகை மாசுதரும் மிண்டரை விலக்கிய விமலன்நகர் பண்டமர் தருபழங் காவிரியின் தெண்டிரை பொருதெழு சிவபுரமே. 1.112.10 1217 சிவனுறை தருசிவ புரநகரைக் கவுணியர் குலபதி காழியர்கோன் தவமல்கு தமிழிவை சொல்லவல்லார் நவமொடு சிவகதி நண்ணுவரே. 1.112.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரிநாயகர் தேவி - பெரியநாயகியம்மை 1.113. திருவல்லம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1218 எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத் தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல் விரித்தவன் வேதங்கள் வேறுவேறு தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.1 1219 தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத் தூயவன் தூமதி சூடியெல்லாம் ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ் சேயவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.2 1220 பார்த்தவன் காமனைப் பண்பழியப் போர்த்தவன் போதகத் தின்னுரிவை ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று சேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.3 1221 கொய்தஅம் மலரடி கூடுவார்தம் மைதவழ் திருமகள் வணங்கவைத்துப் பெய்தவன் பெருமழை யுலகமுய்யச் செய்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.4 1222 சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம் நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித் தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.5 1223 பதைத்தெழு காலனைப் பாதமொன்றால் உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.6 * இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.113.7 1224 இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங் ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம் நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.8 1225 பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய அரியவன் அருமறை யங்கமானான் கரியவன் நான்முகன் காணவொண்ணாத் தெரியவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.9 1226 அன்றிய அமணர்கள் சாக்கியர்கள் குன்றிய அறவுரை கூறாவண்ணம் வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ் சென்றவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.10 1227 கற்றவர் திருவல்லங் கண்டுசென்று நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன குற்றமில் செந்தமிழ் கூறவல்லார் பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே. 1.113.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - வல்லநாதர் தேவி - வல்லாம்பிகையம்மை 1.114. திருமாற்பேறு பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1228 குருந்தவன் குருகவன் கூர்மையவன் பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன் கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும் மருந்தவன் வளநகர் மாற்பேறே. 1.114.1 1229 பாறணி வெண்டலை கையிலேந்தி வேறணி பலிகொளும் வேட்கையனாய் நீறணிந் துமையொரு பாகம்வைத்த மாறிலி வளநகர் மாற்பேறே. 1.114.2 1230 கருவுடை யாருல கங்கள்வேவச் செருவிடை ஏறியுஞ் சென்றுநின் றுருவுடை யாளுமை யாளுந்தானும் மருவிய வளநகர் மாற்பேறே. 1.114.3 1231 தலையவன் தலையணி மாலைபூண்டு கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான் கலைநவின் றான்கயி லாயமென்னும் மலையவன் வளநகர் மாற்பேறே. 1.114.4 1232 துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும் பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன் கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற மறையவன் வளநகர் மாற்பேறே. 1.114.3 1233 பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்துக் கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன் விண்ணவர் தானவர் முனிவரொடு மண்ணவர் வணங்குநன் மாற்பேறே. 1.114.4 * இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.114.5 1234 தீதிலா மலையெடுத் தவ்வரக்கன் நீதியால் வேதகீ தங்கள்பாட ஆதியா னாகிய அண்ணலெங்கள் மாதிதன் வளநகர் மாற்பேறே. 1.114.8 1235 செய்யதண் தாமரைக் கண்ணனொடுங் கொய்யணி நறுமலர் மேலயனும் ஐயன்நன் சேவடி அதனையுள்க மையல்செய் வளநகர் மாற்பேறே. 1.114.9 1236 குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங் களித்துநன் கழலடி காணலுற்றார் முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி வளைத்தவன் வளநகர் மாற்பேறே. 1.114.10 1237 அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச் சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார் எந்தைதன் கழலடி எய்துவரே. 1.114.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - மால்வணங்குமீசர் தேவி - கருணைநாயகியம்மை 1.115. திரு இராமனதீச்சரம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1238 சங்கொளிர் முன்கையர் தம்மிடையே அங்கிடு பலிகொளு மவன்கோபப் பொங்கர வாடலோன் புவனியோங்க எங்குமன் இராமன தீச்சுரமே. 1.115.1 1239 சந்தநன் மலரணி தாழ்சடையன் தந்தம தத்தவன் தாதையோதான் அந்தமில் பாடலோன் அழகன்நல்ல எந்தவன் இராமன தீச்சுரமே. 1.115.2 1240 தழைமயி லேறவன் தாதையோதான் மழைபொதி சடையவன் மன்னுகாதிற் குழையது விலங்கிய கோலமார்பின் இழையவன் இராமன தீச்சுரமே. 1.115.3 1241 சத்தியு ளாதியோர் தையல்பங்கன் முத்திய தாகிய மூர்த்தியோதான் அத்திய கையினில் அழகுசூலம் வைத்தவன் இராமன தீச்சுரமே. 1.115.4 1242 தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல் தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப் பாய்ந்தகங் கையொடு படவரவம் ஏய்ந்தவன் இராமன தீச்சுரமே. 1.115.5 1243 சரிகுழல் இலங்கிய தையல்காணும் பெரியவன் காளிதன் பெரியகூத்தை அரியவன் ஆடலோன் அங்கையேந்தும் எரியவன் இராமன தீச்சுரமே. 1.115.6 1244 மாறிலா மாதொரு பங்கன்மேனி நீறது ஆடலோன் நீள்சடைமேல் ஆறது சூடுவான் அழகன்விடை ஏறவன் இராமன தீச்சுரமே. 1.115.7 1245 தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன் படவர வாட்டிய படர்சடையன் நடமது வாடலான் நான்மறைக்கும் இடமவன் இராமன தீச்சுரமே. 1.115.8 1246 தனமணி தையல்தன் பாகன்றன்னை அனமணி அயன்அணி முடியுங்காணான் பனமணி அரவரி பாதங்காணான் இனமணி இராமன தீச்சுரமே. 1.115.9 1247 தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல் அறிவோரால் நாமம் அறிந்துரைமின் மறிகையோன் தன்முடி மணியார்கங்கை எறிபவன் இராமன தீச்சுரமே. 1.115.10 1248 தேன் மலர்க் கொன்றை யோன்........ ........ முந்தமக்கூனமன்றே. 1.115.11* * இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - இராமநாதேசுவரர் தேவி - சரிவார்குழலியம்மை 1.116. திரு நீலகண்டம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1249 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.1 1250 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம் தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.2 1251 முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம் விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர் இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர் சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.3 1252 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.4 1253 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர் கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம் செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.5 1254 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப் பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம் பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.6 * இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.116.7 1255 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம் செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.8 1256 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர் தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம் சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.9 1257 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும் பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார் பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம் தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.10 1258 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான் இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண் திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார் நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே. 1.116.11 திருச்சிற்றம்பலம் இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக் கண்ட சுரப்பிணி நீங்க வோதியருளியது. 1.117. திருப்பிரமபுரம் - மொழிமாற்று பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1259 காட தணிகலங் காரர வம்பதி காலதனிற் தோட தணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர் வேட தணிவர் விசயற் குருவம்வில் லுங்கொடுப்பர் பீட தணிமணி மாடப் பிரம புரத்தாரே. 1.117.1 1260 கற்றைச் சடையது கங்கணம் முன்கையில் திங்கள்கங்கை பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண் டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும் வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே. 1.117.2 1261 கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது தூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம் ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின் பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே. 1.117.3 1262 உரித்தது பாம்பை யுடல்மிசை இட்டதோர் ஒண்களிற்றை எரித்ததொ ராமையை இன்புறப் பூண்டது முப்புரத்தைச் செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்விபன்னூல் விரித்தவர் வாழ்தரு வேங்குரு வில்வீற் றிருந்தவரே. 1.117.4 1263 கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின் மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான் தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே. 1.117.5 1264 சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங் கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும் பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார் பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே. 1.117.6 1265 காலது கங்கை கற்றைச்சடை யுள்ளாற் கழல்சிலம்பு மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர்கொழுங்கோட் டாலது ஊர்வர் அடலேற் றிருப்பர் அணிமணிநீர்ச் சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே. 1.117.7 1266 நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண் மருப்புரு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன் விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறல் மாதவர்வாழ் பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே. 1.117.8 1267 இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலை யின்னாள் கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்துச் சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள் மேவிய தத்துவரே. 1.117.9 1268 அடியிணை கண்டிலன் தாமரை யோன்மால் முடிகண்டிலன் கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர் பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர் கடியணி யும்பொழிற் காழியுள் மேய கறைக்கண்டரே. 1.117.10 1269 கையது வெண்குழை காதது சூலம் அமணர்புத்தர் எய்துவர் தம்மை அடியவர் எய்தாரோர் ஏனக்கொம்பு மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய கொய்தலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே. 1.117.11 1270 கல்லுயர் கழுமல விஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச் சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லைவானவர் தங்களொடுஞ் செல்குவர் சீரரு ளாற்பெற லாம்சிவ லோகமதே. 1.117.12 திருச்சிற்றம்பலம் திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.118. திருப்பருப்பதம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1271 சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறலன் எருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே. 1.118.1 1272 நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில் நீபுல்கு தோற்றமெல்லாம் நினையுள்கு மடநெஞ்சே வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப் பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே. 1.118.2 1273 துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால் இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல் கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும் பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே. 1.118.3 1274 கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான் எங்கள்நோய் அகலநின்றா னெனவரு ளீசனிடம் ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே. 1.118.4 1275 துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச் சிறையொலி கிளிபயிலுந் தேனினம் ஒலியோவா பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே. 1.118.5 1276 சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில் ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல் கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால் பார்கெழு புகழோவா பருப்பதம் பரவுதுமே. 1.118.6 1277 புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத் தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான் படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே. 1.118.7 1278 நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வந் தடையாமைக் கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன் பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே. 1.118.8 1279 மருவிய வல்வினைநோய் அவலம்வந் தடையாமல் திருவுரு அமர்ந்தானுந் திசைமுகம் உடையானும் இருவரும் அறியாமை எழுந்ததோ ரெரிநடுவே பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே. 1.118.10 1279 சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர் மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின் படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே. 1.118.11 1280 வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான் பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்ல ஒண்சொலின் இவைமாலை யுருவெணத் தவமாமே. 1.118.12 திருச்சிற்றம்பலம் இத்தலம் வடதேசத்திலுள்ளது. ஸ்ரீசைலமென்றும் மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது. சுவாமி - பருப்பதேசுவரர் தேவி - பருப்பதமங்கையம்மை. 1.119. திருக்கள்ளில் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1282 முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும் உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே. 1.119.1 1283 ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான் ஓடலாற் கலனில்லான் உறை பதியால் காடலாற் கருதாத கள்ளில் மேயான் பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே. 1.119.2 1284 எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண் பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான் பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே. 1.119.3 1285 பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும் நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான் நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே. 1.119.4 1286 விரையாலும் மலராலும் விழுமை குன்றா உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக் கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான் அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே. 1.119.5 1287 நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல வலனாய மழுவாளும் வேலும் வல்லான் கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான் மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே. 1.119.6 1288 பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங் குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங் கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான் அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே. 1.119.7 1289 திருநீல மலரொண்கண் தேவி பாகம் புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில் கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும் பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே. 1.119.8 1290 வரியாய மலரானும் வையந் தன்னை உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங் கரியானும் அறியாத கள்ளில் மேயான் பெரியானென் றறிவார்கள் பேசு வாரே. 1.119.9 1291 ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர் பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள் மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில் தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே. 1.119.10 1292 திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப் புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே. 1.119.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - சிவானந்தேசுவரர் தேவி - ஆனந்தவல்லியம்மை 1.120. திருவையாறு - திருவிராகம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1293 பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத் துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில் பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண் டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.1 1294 கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப் பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப் போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.2 1295 வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர் எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல் இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.3 1296 வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல் தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம் ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.4 1297 வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன் மானன மென்விழி மங்கையொர் பாகமும் ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.5 1298 முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும் இன்பனை இணையில இறைவனை எழில்திகழ் என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும் அன்பன வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.6 1299 வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில் பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன் அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.7 1300 விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும் அடித்தலத் தால்இறை யூன்றிமற் றவனது முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.8 1301 விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல் எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.9 1302 மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந் தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே. 1.120.10 1303 நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ் அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக் கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே. 1.120.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - செம்பொன்சோதீசுரர் தேவி - அறம்வளர்த்தநாயகியம்மை |