உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதல் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 2 ... 1.11. திருவீழிமிழலை பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம் 108 சடையார்புன லுடையானொரு சரிகோவணம் உடையான் படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான் மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான் விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே. 1.11.1 109 ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய் மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய் ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய் வேறாய்உடன் ஆனான்இடம் வீழிம்மிழ லையே. 1.11.2 110 வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய உம்மன்பினோ டெம்மன்புசெய் தீசன்உறை கோயில் மும்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும் விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே. 1.11.3 111 பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும் உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும் மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும் விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே. 1.11.4 112 ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின் தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத் தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர் மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே. 1.11.5 113 கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர் எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப வல்லாய்* எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல் வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே. 1.11.6 * வல்வாய் 114 கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான் புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே. 1.11.7 115 முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப் பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடுங் கொடுத்த மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே. 1.11.8 116 பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை வண்டாமரை மலர்மேல்மட அன்னம்நடை பயில வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே. 1.11.9 117 மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள் இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப் பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன் விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே. 1.11.10 118 வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர் காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும் யாழின்இசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம் ஊழின்மலி* வினைபோயிட உயர்வானடை வாரே. 1.11.11 * ஊழின்வலி திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - வீழியழகர் தேவி - சுந்தரகுசாம்பிகை 1.12. திருமுதுகுன்றம் பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம் 119 மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட தொத்தார்தரு மணிநீள்முடிச் சுடர்வண்ணன திடமாங் கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே. 1.12.1 120 தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன் இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம் மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண் முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே. 1.12.2 121 விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண் டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம் களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே. 1.12.3 122 சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார் அரசார்வர* அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும் முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே. 1.12.4 * அரசாரர 123 அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார் கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில் மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. 1.12.5 124 ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற் கோவாதஇன் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில் சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார் மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. 1.12.6 125 தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடிய* மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில் விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை முழவோடிசை நடமுஞ்செயும்# முதுகுன்றடை வோமே. 1.12.7 * முடியர் # நடமுன் செயும் 127 செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன் கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில் மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா* முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே. 1.12.8 * குறை யில்லா 127 இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன் புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே. 1.12.9 128 அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான் மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார் கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே. 1.12.10 129 முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப் புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும் பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே. 1.12.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம். சுவாமி - பழமலைநாதர் தேவி - பெரியநாயகியம்மை 1.13. திருவியலூர் பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம் 130 குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவப் பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன் அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும் விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே. 1.13.1 131 ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான் ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்* மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள் வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே. 1.13.2 * புலியுடையான் 132 செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும் பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம் உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட வுரைமேல் விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே. 1.13.3 133 அடைவாகிய அடியார்தொழ அலரோன்தலை யதனில் மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங் கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே. 1.13.4 134 எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப் பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க் கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம் விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே. 1.13.5 135 வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான் திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள் விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே. 1.13.6 136 மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம் ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள் தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம் மேனாடிய* விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே. 1.13.7 * மேனாடியர் 137 பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன் கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின் விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே. 1.13.8 138 வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால் அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல் உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம் விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே. 1.13.9 139 தடுக்கால்உடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப் பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர் கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே. 1.13.10 140 விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத் தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன் துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும் விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே. 1.13.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - யோகாநந்தேசுவரர் தேவி - சவுந்தரநாயகியம்மை (சாந்தநாயகியம்மை என்றும் அழைப்பர்) 1.14. திருக்கொடுங்குன்றம் பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம் 141 வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக் கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம் ஆனிற்பொலி யைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத் தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே. 1.14.1 142 மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல் குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம் அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே. 1.14.2 143 மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக் குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம் கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல் வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே. 1.14.3 144 பருமாமத கரியோடரி யிழியும்* விரி சாரல் குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம் பொருமாஎயில் வரைவில்தரு கணையிற்பொடி செய்த பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே. 1.14.4 * யிரியும் 145 மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும் கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம் நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே. 1.14.5 146 கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக் கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம் அம்மானென உள்கித்தொழு வார்கட்கருள் செய்யும் பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே. 1.14.6 147 மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம் அரவத்தொடும் இளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே. 1.14.7 148 முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம் ஒட்டாவரக் கன்றன்முடி ஒருபஃதவை யுடனே பிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே. 1.14.8 149 அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம் மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள் இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே. 1.14.9 150 மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக் குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம் புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப் பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே. 1.14.10 151 கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றைக் கானற்கழு மலமாநகர்த் தலைவன்நல கவுணி ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார் ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே. 1.14.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமி - கொடுங்குன்றேசுவரர் (கொடுங்குன்றீசர் என்றும் அழைப்பர்) தேவியார் - அமுதவல்லியம்மை (குயிலமுதநாயகி என்றும் அழைப்பர்) 1.15. திருநெய்த்தானம் பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம் 152 மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான் கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே. 1.15.1 152 பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும் பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னூர் அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல் நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே. 1.15.2 154 பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான் வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான் தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன் நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே. 1.15.3 155 சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்* கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான் நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே. 1.15.4 * னுறைவிடமாம் 156 நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப் பகராவரு புனற்காவிரி பரவிப்பணிந் தேத்தும் நிகரான்மண லிடுதன்கரை* நிகழ்வாயநெய்த் தான நகரான்அடி யேத்தந்நமை நடலையடை யாவே. 1.15.5 * தண்கரை 157 விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும் உடையார்நறு மாலைசடை யுடையாரவர் மேய புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்தநெய்த் தானம்* அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே. 1.15.6 * சூழ்ந்த நெய்த்தானம் 158 நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத் தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித் தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே. 1.15.7 159 அறையார்கடல் இலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம் இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக் கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே. 1.15.8 160 கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும் சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம் காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும் ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே. 1.15.9 161 மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர் புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின் நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும் சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே. 1.15.10 162 தலமல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன் நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில் பலமல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார் சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே. 1.15.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - நெய்யாடியப்பர் தேவி - வாலாம்பிகையம்மை, இளமங்கையம்மை 1.16. திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம் 163 பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான் போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக் காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில் ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே. 1.16.1 164 மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப் புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக் கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே. 1.16.2 165 கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல் பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச் சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந் துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே. 1.16.3 166 தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம் பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும் அணியார்மணல் அணைகாவிரி யாலந்துறை யதுவே. 1.16.4 167 மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின் கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல் பொத்தின்னிடை ஆந்தைபல பாடும்புள மங்கை அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.5 168 மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில் பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே. 1.16.6 169 முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கைக் கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும் அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.7 170 இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால் விலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப் புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.8 171 செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப் பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.9 172 நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப் போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின் சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே. 1.16.10 173 பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை அந்தண்புனல் வருகாவிரி ஆலந்துறை யானைக் கந்தம்மலி கமழ்காழியுட் கலைஞானசம் பந்தன் சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே. 1.16.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பசுபதிநாதர், ஆலந்துறைநாதர் தேவி - பல்வளைநாயகி, அல்லியங்கோதை 1.17. திருஇடும்பாவனம் பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம் 174 மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த் தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச் சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில் இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.1 175 மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர் கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில் இலையார்தரு பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே. 1.17.2 176 சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும்* எந்தை ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார் கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில் ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே. 1.17.3 * சித்தரவர் சிந்தித்தொழும் 177 பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில் தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில் குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில் எழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.4 178 பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல் செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல் கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில் எந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே. 1.17.5 179 நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக் குறிநீர்மையர் குணமார்தரு* மணமார்தரு குன்றில் எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே. 1.17.6 * குளமார்தரு 180 நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம் பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக்* கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.7 * பாங்காய்க் 181 தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை ஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக் கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.8 182 பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த் தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய் மருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.9 183 தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச் சமண் நடப்பார்* உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும் மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல் இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே. 1.17.10 * சமண்டப்பர் 184 கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல இடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவனத் திறையை அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன் படியாற்சொன்ன* பாடல்சொலப் பறையும்வினை தானே. 1.17.11 * படியார்சொன்ன திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - சற்குணநாதர் தேவி - மங்களநாயகியம்மை 1.18. திருநின்றியூர் பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம் 185 சூலம்படை* சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு# பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக் காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும் நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே. 1.18.1 * சூலப்படை # சாத்துஞ் சுடுநீறு 186 அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார் நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில் நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்* பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே. 1.18.2 * நயந்தானாம் 187 பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில் உறையும்மிறை யல்லாதென துள்ளம் முணராதே. 1.18.3 188 பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத் தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில் ஆண்டகழல் தொழிலல்லது* அறியாரவ ரறிவே. 1.18.4 * தொழலல்லது 189 குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும் நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில் அழலின்வலன் அங்கையது ஏந்தி* யன லாடுங் கழலின்னொலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே. 1.18.5 * எய்தி 190 மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம் சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி யூரன்கழ லல்லாதென துள்ளம் முணராதே. 1.18.6 191 பற்றியொரு தலைகையினில் ஏந்திப்பலி தேரும் பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார் சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும் நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே. 1.18.7 * இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 192 நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான் அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெம் செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே. 1.18.9 193 நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில் மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே. 1.18.10 194 குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன் குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே. 1.18.11 * படியார்சொன்ன திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - மகாலட்சுமீசுவரர் தேவி - உலகநாயகி 1.19. திருக்கழுமலம் - திருவிராகம் பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம் 195 பிறையணி படர்சடை முடியிடைப் பெருகிய புனலுடை யவனிறை இறையணி வளையிணை முலையவ ளிணைவன தெழிலுடை யிடவகை கறையணி பொழில்நிறை வயலணி கழுமலம் அமர்கனல் உருவினன் நறையணி மலர்நறு விரைபுல்கு நலம்மலி கழல்தொழன் மருவுமே. 1.19.1 196 பிணிபடு கடல்பிற விகளறல் எளிதுள ததுபெரு கியதிரை அணிபடு கழுமலம் இனிதம ரனலுரு வினன்அவிர் சடைமிசை தணிபடு கதிர்வள ரிளமதி புனைவனை உமைதலை வனைநிற மணிபடு கறைமிட றனைநல மலிகழ லிணைதொழன் மருவுமே. 1.19.2 197 வரியுறு புலியத ளுடையினன் வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி விரியுறு சடைவிரை புரைபொழில் விழவொலி மலிகழு மலம்அமர் எரியுறு நிறஇறை வனதடி யிரவொடு பகல்பர வுவர்தம தெரியுறு வினைசெறி கதிர்முனை இருள்கெட நனிநினை வெய்துமதே. 1.19.3 198 வினைகெட மனநினை வதுமுடி கெனில்நனி தொழுதெழு குலமதி புனைகொடி யிடைபொருள் தருபடு களிறின துரிபுதை யுடலினன் மனைகுட வயிறுடை யனசில வருகுறள் படையுடை யவன்மலி கனைகட லடைகழு மலம்அமர் கதிர்மதி யினன்அதிர் கழல்களே. 1.19.4 199 தலைமதி புனல்விட அரவிவை தலைமைய தொருசடை யிடையுடன் நிலைமரு வவொரிட மருளினன் நிழன்மழு வினொடழல் கணையினன் மலைமரு வியசிலை தனின்மதி லெரியுண மனமரு வினனல கலைமரு வியபுற வணிதரு கழுமலம் இனிதமர் தலைவனே. 1.19.5 200 வரைபொரு திழியரு விகள்பல பருகொரு கடல்வரி மணலிடை கரைபொரு திரையொலி கெழுமிய கழுமலம் அமர்கன லுருவினன் அரைபொரு புலியதள் உடையினன் அடியிணை தொழவரு வினையெனும் உரைபொடி படவுறு துயர்கெட வுயருல கெய்தலொரு தலைமையே. 1.19.6 201 முதிருறு கதிர்வளர் இளமதி சடையனை நறநிறை தலைதனில் உதிருறு மயிர்பிணை தவிர்தசை யுடைபுலி அதளிடை யிருள்கடி கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர்மழு மலிபடை அதிருறு கழலடி களதடி தொழுமறி வலதறி வறியமே. 1.19.7 202 கடலென நிறநெடு முடியவ னடுதிறல் தெறஅடி சரணென அடல்நிறை படையரு ளியபுக ழரவரை யினன்அணி கிளர்பிறை விடம்நிறை மிடறுடை யவன்விரி சடையவன் விடையுடை யவனுமை உடனுறை பதிகள்தன் மறுகுடை யுயர்கழு மலவியன் நகரதே. 1.19.8 203 கொழுமல ருறைபதி யுடையவன் நெடியவ னெனவிவர் களுமவன் விழுமையை யளவறி கிலரிறை விரைபுணர் பொழிலணி விழவமர் கழுமலம் அமர்கன லுருவினன் அடியிணை தொழுமவ ரருவினை எழுமையு மிலநில வகைதனி லெளிதிமை யவர்விய னுலகமே. 1.19.9 204 அமைவன துவரிழு கியதுகி லணியுடை யினர்அமண் உருவர்கள் சமையமும் ஒருபொரு ளெனுமவை சலநெறி யனஅற வுரைகளும் இமையவர் தொழுகழு மலமம ரிறைவன தடிபர வுவர்தமை நமையல வினைநல னடைதலி லுயர்நெறி நனிநணு குவர்களே. 1.19.10 205 பெருகிய தமிழ்விர கினன்மலி பெயரவ னுறைபிணர் திரையொடு கருகிய நிறவிரி கடலடை கழுமலம் உறைவிட மெனநனி பெருகிய சிவனடி பரவிய பிணைமொழி யனவொரு பதுமுடன் மருவிய மனமுடை யவர்மதி யுடையவர் விதியுடை யவர்களே. 1.19.11 திருச்சிற்றம்பலம் கழுமலம் என்பது சீர்காழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர். தேவி - திருநிலைநாயகி. 1.20. திருவீழிமிழலை - திருவிராகம் பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம் 206 தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொ டடல்அசு ரரொடம ரர்கள்அலை கடல்கடை வுழியெழு மிகுசின விடம்அடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே. 1.20.1 207 தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது வரையன தலைவிசை யொடுவரு திகிரியை அரிபெற அருளினன் உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகு திரைமலி கடல்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே. 1.20.2 208 மலைமகள் தனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர் தலையினொ டழலுரு வனகரம் அறமுனி வுசெய்தவ னுறைபதி கலைநில வியபுல வர்களிடர் களைதரு கொடைபயில் பவர்மிகு சிலைமலி மதில்புடை தழுவிய திகழ்பொழில் வளர்திரு மிழலையே. 1.20.3 209 மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய பெருவலி யினன்நலம் மலிதரு கரனுர மிகுபிணம் அமர்வன இருளிடை யடையுற வொடுநட விசையுறு பரனினி துறைபதி தெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே. 1.20.4 210 அணிபெறு வடமர நிழலினி லமர்வொடு மடியிணை யிருவர்கள் பணிதர அறநெறி மறையொடு மருளிய பரனுறை விடமொளி மணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணி திணிபொழில் தருமணம் மதுநுக ரறுபத முரல்திரு மிழலையே. 1.20.5 211 வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல் விசையன திறன்மலை மகளறி வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து அசைவில படையருள் புரிதரு மவனுறை பதியது மிகுதரு திசையினின் மலர்குல வியசெறி பொழின்மலி தருதிரு மிழலையே. 1.20.6 212 நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை ஒளிமுதல் மலரவை கொடுவழி படுதிறன் மறையவ னுயிரது கொளவரு சலமலி தருமற லிதனுயிர் கெடவுதை செய்தவர னுறைபதி *திலகமி தெனவுல குகள்புகழ் தருபொழி லணிதிரு மிழலையே. 1.20.7 * திலதமிதென 213 அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது கரமிரு பதுநெரி தரவிரல் நிறுவிய கழலடி யுடையவன் வரன்முறை யுலகவை தருமலர் வளர்மறை யவன்வழி வழுவிய சிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதிதிரு மிழலையே. 1.20.8 214 அயனொடும் எழிலமர் மலர்மகள் மகிழ்கண* னளவிடல் ஒழியவொர் பயமுறு வகைதழல் நிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி செயநில வியமதில் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே. 1.20.9 * மகிழ்வண 215 இகழுரு வொடுபறி தலைகொடு மிழிதொழில் மலிசமண் விரகினர் திகழ்துவ ருடையுடல் பொதிபவர் கெடஅடி யவர்மிக அருளிய புகழுடை யிறையுறை பதிபுன லணிகடல் புடைதழு வியபுவி திகழ்சுரர் தருநிகர்* கொடையினர் செறிவொடு திகழ்திரு மிழலையே. 1.20.10 216 சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும் மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள் இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே. 1.20.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - வீழியழகர். தேவி - சுந்தரகுசாம்பிகை. |