உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 5 ... 2.41. திருச்சாய்க்காடு பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம் 437 மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங் கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும் விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே. 2.41.1 438 போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச் சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும் வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே. 2.41.2 439 நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார் சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே. 2.41.3 440 கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய் மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே. 2.41.4 441 கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப் பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதியந் தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ் ஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே. 2.41.5 442 சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன் தீந்தாகம் எரிகொளுவச் செற்றுகந்தான் திருமுடிமேல் ஓய்ந்தார மதிசூடி ஒளிதிகழும் மலைமகள்தோள் தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே. 2.41.6 443 மங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான் கொங்குலா வரிவண்டி னிசைபாடு மலர்க்கொன்றைத் தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே. 2.41.7 444 தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ணப் படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந் தடவரையால் தடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை இடவகையா லடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே. 2.41.8 445 வையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும் ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை தையலார் பாட்டோ வாச் சாய்க்காட்டெம் பெருமானைத் தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே. 2.41.9 446 குறங்காட்டு நால்விரற் கோவணத்துக் கோலோவிப்போய் அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர்தூற்றுந் திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின் புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே. 2.41.10 447 நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார் அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழிச் சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும் எம்பந்த மெனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே. 2.41.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - சாயாவனேசுவரர் தேவி - குயிலுநன்மொழியம்மை 2.42. திருஆக்கூர் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம் 448 அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந் தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான் புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.1 449 நீரார வார்சடையான் நீறுடையான் ஏறுடையான் காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில் கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்திற் தாராமல் காக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.1 450 வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தைத் தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில் வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந் தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.3 451 கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப் பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில் அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.4 452 வீக்கினான் ஆடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென் பாக்கினான் பலகலன்க ளாதரித்துப் பாகம்பெண் ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடைத் தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.5 453 பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான் கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில் விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடந் தண்ணொளிசேர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.6 454 வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில் பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள் தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.7 455 கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில் பொன்னடிக்கே நாடோ றும் பூவோடு நீர்சுமக்குந் தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.8 456 நன்மையான் நாரணனும் நான்முகனுங் காண்பரிய தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில் இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந் தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.9 457 நாமருவு புன்மை நவிற்றச் சமண்தேரர் பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில் சேன்மருவு பங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை தாமருவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 2.42.10 458 ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி மாடம் அமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல் பாடலிவை வல்லார்க் கில்லையாம் பாவமே. 2.42.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - சுயம்புநாதேசுவரர் தேவி - கட்கநேத்திரவம்மை 2.43. திருப்புள்ளிருக்குவேளூர் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம் 459 கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே. 2.43.1 460 தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும் ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம் மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப் பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.2 461 வாசநலஞ் செய்திமையோர் நாடோ றும் மலர்தூவ ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம் யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.3 462 மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம் ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண் போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.4 463 கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.5 464 திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம் மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப் புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.6 465 அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்திப் பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம் பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.7 466 பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம் எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப் புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.8 467 வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச் சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம் ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும் போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.9 468 கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம் விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப் புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 2.43.10 469 செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான் பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக் கடியார்ந்த பொழில்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல் மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே. 2.43.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது சுவாமி - வைத்தியநாதர் தேவி - தையல்நாயகியம்மை 2.44. திருஆமாத்தூர் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம் 470 துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன் பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே. 2.44.1 471 கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில் மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம் பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே. 2.44.2 472 பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர் தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான் ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன் சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே. 2.44.3 473 கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள் பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும் ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே. 2.44.4 474 பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான் ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன் வேட நெறிநில்லா வேடமும் வேடமே. 2.44.5 475 சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையாற் காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான் யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானத் தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே. 2.44.6 476 மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை வேறாக நில்லாத வேடமே காட்டினான் ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே. 2.44.7 477 தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன் நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால் ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே. 2.44.8 478 புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர் உள்ளு மவன்பெருமை ஒப்பளக்குந் தன்மையதே அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மானெம் வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே. 2.44.9 479 பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக் கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான் அச்சந்தன் மாதேவிக் கீந்தான்றன் ஆமாத்தூர் நிச்ச னினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே. 2.44.10 480 ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக் கோட லிரும்புறவின் கொச்சை வயத்தலைவன் நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன் பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே. 2.44.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமி - அழகியநாதேசுவரர் தேவி - அழகியநாயகியம்மை. 2.45. திருக்கைச்சினம் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம் 481 தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான் மையுலா மணிமிடற்றன் மறைவிளங்கு பாடலான் நெய்யுலா மூவிலைவே லேந்தி நிவந்தொளிசேர் கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.1 482 விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான் படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான் நடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான் கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே. 2.45.2 483 பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ் சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும் ஆடலான் அங்கை அனலேந்தி யாடரவக் காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.3 484 பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ் சுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த விண்டவர்கள் தொன்னகரம் மூன்றுடனே வெந்தவியக் கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.4 485 தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன் வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான் சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடல்*நஞ் சுண்டனங்கைக் காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.5 * நஞ்சுண்டு--அனங்கை எனப்பிரித்து, அனங்கை என்பதினுக்கு அனங்கனையெனப்பொருள் கொள்க. 486 மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான் அங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான் திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேற் கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.6 487 வரியரவே நாணாக மால்வரையே வில்லாக எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான் பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர் கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.7 488 போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல் மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன் நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடுங் காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.8 489 மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும் எண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான் பண்ணிசையா லேத்தப் படுவான்றன் நெற்றியின்மேற் கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே. 2.45.9 இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 2.45.10 490 தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன் கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப் பண்ணிசையா லேத்திப் பயின்ற இவைவல்லார் விண்ணவரா யோங்கி வியனுலக மாள்வாரே. 2.45.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - கைச்சினநாதர் தேவி - வேள்வளையம்மை 2.46. திருநாலூர்த்திருமயானம் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம் 491 பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான் நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே. 2.46.1 492 சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக ஆடும் பறைசங் கொலியோ டழகாக நாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தைப் பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே. 2.46.2 493 கல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன் றெல்லா அறனுரையும் இன்னருளாற் சொல்லினான் நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச் சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே. 2.46.3 494 கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான் நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான் ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்திற் சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே. 2.46.4 495 கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன் பிறையார் வளர்சடையான் பெண்பாகன் நண்பாய நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம் இறையானென் றேத்துவார்க் கெய்துமாம் இன்பமே. 2.46.5 496 கண்ணார் நுதலான் கனலா டிடமாகப் பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே. 2.46.6 497 கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான் பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான் நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை எண்பாவு சிந்தையார்க் கேலா இடர்தானே. 2.46.7 498 பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால் வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான் நத்தின் ஒலியோவா நாலூர் மயானத்தென் அத்தன் அடிநினைவார்க் கல்லல் அடையாவே. 2.46.8 499 மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய் மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள் நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம் பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே. 2.46.9 500 துன்பாய மாசார் துவராய போர்வையார் புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள் நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே இன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே. 2.46.10 501 ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான் நாலு மறையோது நாலூர் மயானத்தைச் சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக் கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே. 2.46.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பலாசவனேசுவரர் தேவி - பெரியநாயகியம்மை 2.47. திருமயிலாப்பூர் - பூம்பாவைத்திருப்பதிகம் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம் 502 மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.1 503 மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.2 504 வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.3 505 ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக் கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.4 506 மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.5 507 மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் அடலானே றூரும் அடிக ளடிபரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.6 508 மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.7 509 தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான் கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள் கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.8 510 நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும் உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக் கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான் பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.9 511 உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும் இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில் கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான் பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.10 512 கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான் ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார் வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே. 2.47.11 திருச்சிற்றம்பலம் இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம். இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - கபாலீசுவரர் தேவி - கற்பகவல்லியம்மை 2.48 திருவெண்காடு பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம் 513 கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே. 2.48.1 514 பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. 2.48.2 515 மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும் பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன் விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே. 2.48.3 516 விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின் மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக் கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே. 2.48.4 517 வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ் மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன் மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர் ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே. 2.48.5 518 தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன் ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில் பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே. 2.48.6 519 சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே. 2.48.7 520 பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில் கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே. 2.48.8 521 கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள் ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான் வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென் றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே. 2.48.9 522 போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும் பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின் வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென் றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே. 2.48.10 523 தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன் விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப் பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார் மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே. 2.48.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - சுவேதாரணியேசுவரர் தேவி - பிரமவித்தியாநாயகியம்மை 2.49. சீகாழி பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம் 524 பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறும் கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழிப் பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு மானை யெம்பெரு மானென் றென்றுன்னும் அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே. 2.49.1 525 மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் மோதி மீதெறி சங்கம் வங்கமுங் கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி வண்ட லம்பிய கொன்றை யானடி வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே. 2.49.2 526 நாடெ லாமொளி யெய்த நல்லவர் நன்று மேத்தி வணங்கு வார்பொழிற் காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழி தோடு லாவிய காது ளாய்சுரி சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும் வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே. 2.49.3 527 மையி னார்பொழில் சூழ நீழலில் வாச மார்மது மல்க நாடொறுங் கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி ஐய னேயர னேயென் றாதரித் தோதி நீதியு ளேநி னைப்பவர் உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே. 2.49.4 528 மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர் வந்து வந்தொளிர் நித்தி லம்விழக் கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி வலிய காலனை வீட்டி மாணிதன் இன்னு யிரளித் தானை வாழ்த்திட மெலியுந் தீவினை நோயவைமே வுவர்வீடே. 2.49.5 529 மற்று மிவ்வுல கத்து ளோர்களும் வானு ளோர்களும் வந்து வைகலுங் கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி நெற்றி மேலமர் கண்ணி னானைநி னைந்தி ருந்திசை பாடுவார் வினை செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே. 2.49.6 530 தான லம்புரை வேதி யரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில் கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற வாகி நின்றவொ ருவனே யென்றென் றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே. 2.49.7 531 மைத்த வண்டெழு சோலை யாலைகள் சாலி சேர்வய லார வைகலுங் கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி அத்த னேயர னேய ரக்கனை யன்ற டர்த்துகந் தாயு னகழல் பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே. 2.49.8 532 பரும ராமொடு தெங்கு பைங்கத லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள் கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழி திருவின் நாயக னாய மாலொடு செய்ய மாமலர்ச் செல்வ னாகிய இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே. 2.49.9 533 பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி யாது வண்டுகி லாடை போர்த்தவர் கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழித் தொண்டை வாயுமை யோடுங் கூடிய வேடனே சுட லைப்பொ டியணி அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே. 2.49.10 534 பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும் உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ் கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி நயன டன்கழ லேத்தி வாழ்த்திய ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை உயரு மாமொழி வாருலகத் துயர்ந்தாரே. 2.49.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 2.50 திருஆமாத்தூர் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம் 535 குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில் வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே தென்ற லார்மணி மாட மாளிகை சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல் அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே. 2.50.1 536 பரவி வானவர் தான வர்பல ருங்க லங்கிட வந்த கார்விடம் வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே கரவின் மாமணி பொன்கொ ழித்திழி சந்து காரகில் தந்து *பம்பைநீர் அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே. 2.50.2 * பம்பை என்பது ஒரு நதி. 537 நீண்ட வார்சடை தாழ நேரிழை பாட நீறுமெய் பூசி மாலயன் மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென் பூண்ட கேழல்ம ருப்பரா விரி கொன்றை வாளரி யாமை பூணென ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே. 2.50.3 538 சேலின் நேரன கண்ணி வெண்ணகை மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத் தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென் பாலின் நேர்மொழி மங்கை மார்நட மாடி யின்னிசை பாட நீள்பதி ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே. 2.50.4 539 தொண்டர் வந்துவ ணங்கி மாமலர் தூவி நின்கழ லேத்து வாரவர் உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம் வண்ட லார்கழ னிக்க லந்தும லர்ந்த தாமரை மாதர் வாண்முகம் அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே. 2.50.5 540 ஓதி யாரண மாய நுண்பொருள் அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென் சோதியே சுடரே சுரும் பமர் கொன்றை யாய்திரு நின்றி யூருறை ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே. 2.50.6 541 மங்கை வாணுதன் மான்ம னத்திடை வாடி யூடம ணங்க மழ்சடைக் கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம் பங்க யமது வுண்டு வண்டிசை பாட மாமயி லாட விண்முழ வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே. 2.50.7 542 நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை யாத வண்ணம்நி னைந்து ளத்திடை வென்றடர்த் தொருபால் மடமாதை விரும்புதலென் குன்றெ டுத்தநி சாசரன் திரள் தோளி ருபது தான் நெரிதர அன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே. 2.50.8 543 செய்ய தாமரை மேலி ருந்தவ னோடு மாலடி தேட நீண்முடி வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென் தைய லாளொடு பிச்சைக் கிச்சைத யங்கு தோலரை யார்த்த வேடங்கொண் டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே. 2.50.9 544 புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென் முத்தை வென்ற முறுவ லாளுமை பங்க னென்றிமை யோர் பரவிடும் அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே. 2.50.10 545 வாடல் வெண்டலை மாலை யார்த்தும யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம் ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானைக் கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற் கொச்சை யாரிறை ஞான சம்பந்தன் பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே. 2.50.11 திருச்சிற்றம்பலம் ஆமாத்தூர் என்பது பசுக்களுக்குத் தாயகமானவூர் என்றும், ஆமாதாவூர் எனற்பாலது ஆமாத்தூர் என மருவி நின்ற தென்றும் பெரியோர்களாற் சொல்லக் கேள்வி. ஆ - பசு. இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமி - அழகியநாதேசுவரர் தேவி - அழகியநாயகியம்மை |