உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
2 போர்க்குரலாய் ஒலித்த மின்சார மணியின் ஓசை கேட்டு, உள்ளறைக்குள் இருந்த அபிராமி, புத்தகமும் கையுமாய், வளையல் சத்தத்துடன் கதவைத் திறந்தாள். எதிரே நின்றவர்களைப் பார்த்து அச்சப்படவில்லையானாலும், சிறிது அசந்துவிட்டாள். ஒருவரைப் பார்த்ததும் புன்முறுவலான வாய், எஞ்சிய மூவரைப் பார்த்ததும் தானாய் அடைபட்டது. கால்களோ அகலப்பட்டன. அவளது குடும்பத்துக்கு மிகவும் பழக்கமான சங்கரசுப்பு கூட அசத்தி விட்டார். சாதாரனமாய் பட்டும் படாமலும் திரு நீறு பூசுபவர், அன்று பட்டை அடித்திருந்தார். ஒரு நாளும் இல்லாத சந்தனமும், அதன்மேல் சவாரி செய்த குங்குமமும் அவருக்குப் புதியவை. என்றாலும், அந்த வித்தியாசத்தை, அபிராமி பெரிதாக எடுத்துக் கொள்ளாத வகையில் மீதி மூவரும் காட்சியளித்தார்கள். அவர்களில் ஒருவர் முப்பது; இன்னொருவன் பதினெட்டு வயதுப் பையன்; மூன்றாமவன் நாற்பது வயது நடுத்தரம். எல்லோரும் சொல்லி வைத்ததுபோல் கிட்டத்தட்ட ஒரே நிறம். மண்சிவப்பு நிறம். உச்சி முதல் பாதம் வரை கோணல் இல்லாத ஒரு செங்குத்தான கோட்டை வரையலாம் என்பது போன்ற உடல்வாகுக்காரர்கள். முழங்கால் வரை நீண்ட காக்கி டவுசர்கள். அவற்றை கவ்விக் கொண்டிருப்பது போன்ற வெள்ளைச் சட்டைகள். ஒவ்வொருத்தர் கையிலும் காக்கி நிறத்தாலான ஒரு குண்டாந்தடி. அபிராமி, அவர்களின் 'சண்டியர்'த்தனமான பார்வைக்குச் சிறிது பயந்தவளாய், சங்கரச்சுப்பு மீது மட்டுமே பார்வையை நிலைநாட்டி, அவர்களை வரவேற்பது போல் ஒடுக்கிப் பிடித்த கதவை விசாலப்படுத்தினாள். எட்டு முழ மல்வேட்டிக்காரர் சங்கரசுப்பு, அந்த வீட்டிற்குள் சர்வசாதாரணமாக நுழைந்தபோது, யூனிபாரக்காரர்கள் பூட்சுகளைக் கழற்றக் கீழே குனிந்தார்கள். அந்தக் குனிவு கூட உடற்பயிற்சி போல் தோன்றியது. அபிராமி இனிமையோடு சொன்னாள். “எங்கள் வீட்டிற்குள் வாரதுக்கு, பூட்சைக் கழட்ட வேண்டாம். அப்படியே வாங்க,” அந்த யூனிபாரக்காரர்கள், அவளை தங்கள் இயக்கத்தில் ஒரு பெண் தொண்டராக அங்கீகரித்தது போல், யூனிபார்மாக புன்னகை செய்தபோது, வேட்டி மனிதரான சங்கசுரப்பு, வெட்டி மனிதர் போல் முகம் சுளித்தார். பிறகு உபதேசித்தார். “எதை விட்டாலும் ஆச்சாரத்தை விடப்படாதும்மா. நாம் இப்படி விட்டதாலதான், துலுக்கப்பயலுக இந்த ஆட்டம் ஆடுறானுக.” அபிராமி அவர் முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டதை, சம்சுதீனுக்கு எதிராய் விடப்பட்ட சவாலாய்க் கருதி, நெளிந்தாள். அதனால் லேசாகக் கோபம் கூட வந்தது. ‘காபி வேணுமா’ என்று கேட்கப் போன வாயை உதடுகளால் பூட்டிக் கொண்டாள். ஆனாலும் சங்கரசுப்பு மூச்சு இழுப்பதைப் பார்த்துவிட்டு, சிறிது பரிதாபப்பட்டுச் சொல்ல வந்ததைச் சொன்னாள். “காபி வேணுமா, இல்லே சூஸ் வேணுமா?” “சூஸ் சாப்பிட்டு விட்டு அப்புறம் காபி சாப்பிட்டால் நல்லா இருக்கும். என்ன அப்படி பார்க்கிறீங்க! இது என்வீடு மாதிரி? இந்த ‘பாப்பா’ என் கண்ணு முன்னாலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு. நில்லு அபிராமி, தப்பாச் சொல்லிட்டேன். மொதல்ல காபி கொடு. அப்புறம் சூஸ் கொடு. அப்போதான், தொண்டையும் வயிறும் வெயிலில் இருந்து ஏ.ஸி.க்குள்ள வந்தது மாதிரி இருக்கும்.” அபிராமி சிரித்தாளோ இல்லையோ, அந்த யூனிபாரக்காரர்கள், மாநிறமும் பூஞ்சை உடம்பும் தெத்துப் பற்களும் கொண்ட சங்கரசுப்புடன் சேர்ந்து சிரித்தார்கள். அவர்களுக்கு எதிரே தொலைவில் பூஜை அறையின் நுழைவாயிலில், அன்னை அபிராமி, திரிசூலமும் கையுமாய், சிங்கமும் ஆசனமுமாய் உள்ள திரைச் சீலை ஒதுக்கப்பட்டு, அந்த அன்னை இப்போது துணிக்கோடுகளாய் சுருக்கப் பட்டாள். அப்படி ஒடுக்கிய கையை நிமிர்த்தியபடியே, பழனிவேல் வெளிப்பட்டார். நெற்றி முழுக்க விபூதிக் குவியல், அதில் கலப்படமான குங்குமம். கருமேக நிறம், அதனாலோ என்னவோ, மின்னல் போன்ற பற்கள். முறுக்கேறிய உடம்பு, குத்திட்டு நின்ற முடிகளால், பாசிப்பாறை போன்று தோன்றிய மார்பு, தொப்புளைத் தொட்ட டாலர் செயின். “வாங்க, வாங்க,” என்று சொன்னபடியே அந்தக் குரலுக்கு ஏற்ப அவசரமாய் நடக்காமலும், அவமரியாதையாக நிற்காமலும், அழுத்தம் திருத்தமாய் நடந்து, எதிரேயுள்ள ஒற்றை சோபாவில் உட்கார்ந்தார். அவர் அப்படி உட்காரும் வரை பொறுக்காத சங்கரசுப்பு, சலித்துக் கொண்டார். “நீங்க இப்படி அம்பாளை விழுந்து விழுந்து கும்பிடுறிங்க! நீங்களும் நானும் கும்பிட்டு என்ன பிரயோசனம்? நேற்று ராத்திரி, பஸ் ஸ்டாண்டு பிளாட்பாரத்தில் இருந்ததே ராமர் கோயிலு - அதையும், சொக்கட்டான் குடியிருப்பு பக்கத்துல மாரியம்மன் கோவிலையும், முஸ்லிம் பயல்க உடைச்சுட்டாங்க. நம்ம அபிராமி கோயிலு வாசலுக்குள்ள கூட வந்துட்டாங்க.” பழனிவேல் முகத்தை கோபத்தனம் ஆக்கியபோது யூனிபார நடுத்தரம், அவர் முகத்தைப் பார்த்தபடியே சங்கரசுப்புடன் பேசியது. “நாம பதிலுக்கு என்ன செய்தோம் என்கிறதையும் தலைவர் கிட்ட சொல்லுங்க” தலைவர் என்ற வார்த்தையைக் கேட்டு பழனிவேல், ஆச்சரியமாகத் தலையை நிமிர்த்திய போது, சங்கரசுப்பு சிரிப்பும் கும்மாளமுமாய் சேதி சொன்னார். “சும்மா சொல்லக் கூடாது. ராத்திரி இவங்க தலைமையிலே நம்ம ஆட்கள் தூள் பரப்பிட்டாங்க. அபிராமி கோயிலுக்குள்ள நுழையப் போன துலுக்கனுகள சாத்து சாத்துன்னு சாத்திட் டாங்க... அபிராமி மட்டும் காளியம்மனாய் இருந்திருந்தால். அவனுவள ஆடு, கோழி பலி கொடுக்கிற மாதிரி, அங்கேயே கொடுத்திருபானுக. பின்ன என்னங்க எத்தனை நாளைக்குத்தான் வளையல் போட்டு கிட்டு இருக்கது...நேத்து நம்ம ஆட்களோட ராஜ்ஜியந்தான்.ஒரே வாண வேடிக்கை. அணுகுண்டு மாதிரி வெடி வெடியாய் போட்டாங்க... அதுவும் மசூதிங்களுக்கு முன்னாலேயே போட்டாங்க.. அப்புறமா ஸ்ரீராமர் படத்தை எடுத்துக்கிட்டு ஊர்வலம் போனாங்க. எல்லாரும் கடையை மூடிட்டாங்க. ஆனாலும் எனக்கு ஒரு வருத்தம். முஸ்லிம் பயலுக கடையை மூடுனா மூடுறான். நம்ம இந்துப் பயலுவ எதுக்காக மூடனும்? எப்படியோ நேத்து டவுணுல எல்லா சாய்பு பயலுகளும் பம்மிக் கிடந்தாங்க.” பழனிவேல் மோவாயைச் சொறிந்தபடியே பேசினார்; “இவ்வளவு நடந்திருக்கு; எனக்குத் தெரியாமப் போச்சே. ஆனாலும் இந்துக்களும் கடையை மூடுனதுல தப்பில்ல. எரிற கல்லுக்கு இந்து, முஸ்லிம்னு தெரியுமா? இந்துக் கடையில முஸ்லிம் வேல பாக்கான். அதோடு இந்து யாரு, முஸ்லிம் யாருன்னு கண்டு பிடிக்க முடியாது பாருங்க.” அந்த யூனிபாரக்காரர்கள் முகம் சுளித்தார்கள். பழனிவேலையே ஒரு முஸ்லீமைப் பார்ப்பது போல பார்த்தார்கள். ஆனால் சங்கரசுப்பு சமாளித்தார். “இதுக்குத்தான் இந்துக்களுக்கு ஒரு தனி அடையாளம் வேணுமுன்னு வாதாடுகிறோம். ஒவ்வொரு முஸ்லீமும், ஒரு தொப்பிய வைச்சிருக்கிற மாதிரி, ஒவ்வொரு இந்துவும் சட்டையில ஒரு காவிக் கொடிய குத்திக்கணும்.” “இப்போ எந்த சாய்பு தொப்பி வைக்கான். காலம் ரொம்ப மாறிட்டு.” “நீங்க வேற... நேத்து ராத்திரி பார்த்தீங்கன்னா தெரியும். வீம்புக்கு வச்சது மாதிரி முஸ்லிம் ஒவ்வொருத்தன் தலையிலும் ஒரு தொப்பி.” “அப்புறம் என்ன விசயமாய்...” “விசயமில்லாம வருவோமா?... இந்துக்களான நாம், ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கோம். இங்க கூட ஏதாவது கலாட்டா வரலாம். அதனால, நம்ம முன்னணிக்கு ஒரு வலுவான தலைவர் தேவை. அது நீங்களாகத்தான் இருக்க முடியும்.” “வெளிப்படையா வேண்டாமுன்னு நினைக்கேன். என் தொழிலுல ஆளும் கட்சிக்கு அனுசரணையா போகணும் பாருங்க... ” “நீங்க ஒண்ணு... இப்போ ஆளும் கட்சில கூட ஆதரவு இருக்குதுங்க.” “ஆனாலும்...” “நீங்க மட்டும் முன்னணிக்குத் தலைவராய் இருக்க மறுத்துட்டால், அப்புறம் இந்தப் பகுதியில இந்துக்கள் இருக்கிறதும் ஒண்ணுதான். சாகிறதும் ஒண்ணுதான். பாருங்க... நான் சொல்லி முடிக்கவும் மணி அடிக்கிது பாருங்க... டெலிபோன் மணிதான். ஆனாலும் மணி மணிதான்.” சங்கரசுப்பு பேசப்பேச, குழைவாய் உட்கார்ந்து இருந்த யூனிபாரக்காரர்கள், அந்த யூனிபாரங்களைப் போல் தங்களுக்கும் கஞ்சி போட்டு இஸ்த்திரி செய்யப்பட்டது போல் நிமிர்ந்திருந்தார்கள். அணி வகுப்பு தோரணை உடல் முழுவதும் தெரிந்தது. இதற்குள் பழனிவேல் நிதானமாக எழுந்தபோது மணிச்சத்தம் நின்றது. ஆனாலும் ஒரு இனிமையான சத்தம்... சிங்கி தட்டுவது மாதிரியான சத்தம். அபிராமியின் சத்தம், ‘ஒரு நிமிடம்... அப்பா இருக்கார்,’ என்ற கனிவான சத்தம். சாம்பல் நிற டிரேயில், நான்கு கண்ணாடிக் குவளைகளோடு வந்த அபிராமியும் பழனிவேலும் வராண்டாவின் நடுப்பக்கம் ‘கிராஸ்’ செய்தார்கள். அபிராமி கொடுத்த பழரசத்தை யூனிபாரக்காரர்கள் உற்றுப் பார்த்தார்கள். காவிக்கலர் சூஸ்... ஸ்ரீ ராமனுக்கு கண்களை மூடி நன்றி சொல்லிக் கொண்டார்கள். ஆண்டவன் அற்புதத்தை எப்படிக் காட்டுகிறான். சூஸ் மட்டுமா காவி... அந்தக் கண்ணாடிக் குவளையும் காவி நிறம். இவளுக்கு ஒரு காவிச் சேலை கட்டி விட்டால்... சர்வ பொருத்தம்... அந்தக் கண்ணாடிக் குவளைகளை, அவர்கள் பயபக்தியோடு வாங்கிக் கொண்டபோது, உள்ளறையில் சாதாரணக் குரலில் பேசிய பழனிவேல், போகப் போக உரத்துப் பேசுவது கேட்டது. அப்புறம் அதுவே கத்தலாகி இறுதியில் கசிந்து போனது. சங்கரசுப்பு, உடம்பை நெளித்து ஒரு காதை மேல் நோக்காய்த் தூக்கி ஒட்டுக் கேட்க முயற்சித்தபோது, அபிராமி கண்ணாடிக் குவளைகளை மாறி மாறிப் பார்த்தபடியே, ஆர அமரக் குடிப்பவர்களை எரிச்சலோடு பார்த்தாள். ஒருத்தர் பாதி கிளாசை வைத்த போது, அவர் மிச்சம் வைக்கிறார் என்று அந்தக் குவளையை அவள் எடுக்கச் சென்ற போது அந்த ஆசாமி, இரண்டு கைகளையும் வைத்து, அதைத் தூக்கி வாய்க்குக் கொண்டு போனார். அவள் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டாள். அபிராமியும் பழனிவேலும் மீண்டும் அதே அறையில் கிராஸ் ஆனார்கள். பழனிவேல் அணில்வால் மாதிரி அடர்த்தியான தன் மீசையை வடக்கயிறு மாதிரி முறுக்கிய படியே, தமது இருக்கையில் ஆங்காரமாய் உட்கார்ந்தார். சங்கரசுப்புக்கு விசயத்தை கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. பழனிவேலுவின் உதடுகள் வெடித்தன. அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்ட போது சத்தம் ஏற்பட்டது. “பாருங்க இந்த அநியாயத்தை-உலக வங்கி திட்டத்துல. நம்ம ஆற்றுக் கால்வாயிலே கான்கிரீட் போட்டு... கரையிலும் கார் போகிற அளவுக்கு ரோடு போட விளம்பரம் கொடுத்தாங்க... நானும் டெண்டர் கொடுத்திருந்தேன்... நாலு லட்ச ரூபா டெபாசிட் வேற கட்டுனேன்... மூணுகோடி ரூபாய் திட்டம்... மெட்ராஸ்ல கோட்டை வரைக்கும் சூட்கேஸோட போயிட்டு வெறுங்கையோட வந்தேன். கடைசியில் என்னடான்னா அந்த காண்டிராக்ட, திவான் முகமதுக்கு கொடுத்தாச்சாம். இவ்வளவுக்கும் அவன் டெண்டர் கூடப் போடல, இத நான் விடப் போறதா இல்லை... இவ்வளவுக்கும் நான் கட்சிக்காரன்னு பேரு... அந்த திவான் முகமது முஸ்லீம் லீக்கு...” “இது யாரோட வேலையா இருக்குமுன்னு நினைக்கீங்க?” “எல்லாம் நம்ம மாவட்ட மந்திரி அப்துல்லா இருக்கான் பாருங்க, அவனோட வேலை... இவ்வளவுக்கும் அவன் எலக்ஷன்ல நிக்கும்போது ஒரு லட்ச ரூபா அழுதேன். போஸ்டர் அடிச்சுக் கொடுத்தேன். அவன் தொகுதியில் அடியாட்களை அனுப்பி கள்ள ஓட்டு கூட போட வச்சேன்... இந்த திவான், ஒரு பைசா கூட கொடுக்கல. கடைசில மந்திரி அப்துல்லா அவன் சாய்பு புத்தியக் காட்டிட்டான் பாருங்க... எனக்கு வேண்டிய ஒருத்தர் போய்க் கேட்டால், ‘உங்க ஆளுக்கு இருக்கிற சாராயக் கடைங்க போதாதா... சினிமா தியேட்டருங்க பத்தாதுன்னு திருப்பிக் கேட்கானாம்...” அந்த நீண்ட நெடிய ஆற்றின் கிழக்குப் பகுதியில், இதே உலக வங்கித் திட்டத்தில் கால்வாய்க்கு கான்கிரீட் போட்டு, கரையை சாலையாக்க இன்னொரு பிரமுகர், ஏழு கோடி ரூபாய் டெண்டரில், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாய்ச் செலவழித்து, ஆறுகோடியை அமுக்கி விட்டாராம்... கான்கிரீட் கால்வாயைச் சரி பார்ப்பதற்கு முன்பே, மாமூலாக நடந்த பொறியாளர்களைக் கைக்குள் போட்டும், மனச்சாட்சிப்படி நடந்த அதிகாரிகளைப் பந்தாடியும், கான்கிரீட் போட்டதாக கணக்கு செய்யப்பட்ட கால்வாயில் அவசர, அவசரமாக தண்ணீரைத் திறந்து விடச் செய்துவிட்டாராம். இதனால் கான்கிரீட் போடக் கொட்டப்பட்ட மணல், இப்போது தண்ணிரையே அடைத்துக் கொண்டதால், அந்தக் கால்வாயை தூர் எடுக்க இன்னொரு டெண்டர் விடப் போகிறார்களாம். அதையும் அந்தப் பிரமுகரே எடுக்கப் போகிறாராம். இந்த மேற்குப் பகுதிக் கால்வாயிலும், அவரைப் போலவே நான்கில் மூன்று பங்கு பணத்தை அமுக்குவதற்கு 'புளு பிரிண்டே’ தயாரித்து வைத்திருந்த பழனிவேல், இப்போது இருக்கையில் சோர்ந்து சாய்ந்தார். அவர் கண்கள் மட்டும் தீக்கட்டிகளாய்த் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டிருந்தன... காத்திருந்த உலக வங்கி காண்டிராக்ட்காரியை நேற்று வந்த திவான் தட்டிக் கொண்டு போயிட்டான். யாரை விட்டாலும் அவனை விடக்கூடாது. சங்கரசுப்பு, நிதானமாக எழுந்தார். பழனிவேல் இருக்கைக்குப் பின்பக்கமாய்ப் போய் அவரது முதுகைத் தட்டிக் கொடுத்தார்; தடவிக் கொடுத்தார். பிறகு மீண்டும் தமது இருக்கைக்கு வந்து, யூனிபாரக்காரர்களை ஒரே பார்வையில் வட்டமிட்டு விட்டு, விரக்தியான குரலில் பேசினார். “இதுக்குப் பெயர்தான் ‘இஸ்லாம்’ என்கிறது. நம்ம இந்துக்களுக்கு இருக்கிற பெருந்தன்மை அவங்களுக்குக் கிடையாது. எனக்குத் தெரியும் அந்தக் குல்லாக்காரன் ஜெயிக்கிறதுக்கும், அமைச்சர் ஆகுறதுக்கும் நீங்க என்ன பாடுபட்டீங்கன்னு.” “என்ன பாடுபட்டு என்ன பிரயோசனம்... கடைசில நன்றி கெட்டத்தனமா...” இதுக்குப் பெயர் நன்றி கெட்டத்தனமில்ல... இஸ்லாமுன்னு பேரு!” “இருக்கட்டும்... இருக்கட்டும்... ரெண்டு சாய்பு பயல்களும் எங்க போறாங்கன்னு பார்த்துடலாம்...” “பாக்கனுமுன்னா, இப்பவே பாக்கணும். நம்ம மாவட்டத்துக்கு ஒரு இந்து மந்திரி வேணுமுன்னு நாம் போராடனும். அதற்கு நல்ல சந்தர்ப்பம் இப்ப வந்திருக்கு...” பழனிவேல், எப்படி என்பது போல் புருவங்களை உயர்த்தினார். அவர் வாயைத் திறப்பதற்கு முன்பே யூனிபார நடுத்தர வயதுக்காரர் மார்தட்டிப் பேசினார். “பாபர் மசூதியை இடிச்சதுக்கு, இஸ்லாமியர் கலாட்டா செய்ய ஆரம்பிச்சுட்டாங்க... அப்படியே அவங்க, கலாட்டாவை இடையில் விட்டாலும், நாம அவங்கள விடமுடியாதபடி கலாட்டா செய்யச் செய்யனும். நம்ம டவுனத் தாண்டி தேரிப்பக்கம் இருக்குது பாருங்க... மலைமேலே முருகன் கோவில்... அதுக்குக் கீழே மசூதி இருக்குது பாருங்க. அத நாம இடிச்சாகனும்... அப்ப பதுங்கிக் கிடக்கிற முஸ்லீமும் பாய்ஞ்சி வருவான்... பல தலை உருளும்... உருளட்டுமே... இப்ப என்ன உருளாமலா இருக்குது... படுகளத்துல ஒப்பாரி எதுக்கு... இந்த கொலைக்கெல்லாம் மந்திரி அப்துல்லாதான் காரணமுன்னும், அவன் பதவி விலகணுமுன்னும் ஆர்ப்பாட்டம் செய்வோம்... அப்போ அவன் பதவி விலகித்தான் ஆகனும்... அதுக்குப் பிறகு திவான் முகமது காண்ட்ராக்டை கேன்சல் செய்றது பெரிய காரியமா என்ன...” பழனிவேல் ரசித்துக் கேட்டார். அமைச்சர் அப்துல்லா அப்போதே ராஜினாமா செய்து விட்டது. போலவும், இவருக்கே அந்த காண்டிராக்ட் கிடைத்து விட்டது போலவும், ஒரு சுகமான ஆனந்தக் களிப்பு. அதே சமயம் முருகன் கோவிலுக்கு முன்னாலேயே உருவான மசூதியை இடிப்பதா என்ற மனச்சாட்சியின் சின்னக் குத்தல்... அபிராமி சிறுமியாய் இருக்கும்போது, அவளுக்கு ஆஸ்த்துமா மாதிரியான ஈளை மூச்சு... அந்த மசூதிக்குப் போய்த்தான் சுகமாச்சு... பழனிவேல், எந்த மசூதியை இடித்தாலும், அந்த மசூதியை இடிக்கக் கூடாது என்று கண்டிப்பாக பேசப் போனார். அப்போது ஒரு தபால் இளைஞன் உள்ளே வந்தான். மணியார்டர் பாரத்தையும், ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளையும் அவரிடம் நீட்டினான். அதன் அடிவாரத்தில் எழுதப்பட்ட தகவலைப் படித்ததும் பழனிவேல், அந்த பாரத்தையும், ரூபாய் நோட்டையும் அவனிடமே சுருட்டிக் கொடுத்தார். பிறகு கத்தினார். “அந்த பயல் பணம் அனுப்பினால் நீயும் கொண்டு வந்திடனுமா? வாங்க மறுத்துட்டேன்னு, அவன் மூஞ்சியிலேயே எறி. ஏன் அப்படி பேமுழி முழிக்க... உனக்கும் அழுவுறேன்... இந்தாம்மா தனம், ரெண்டு ரூபா கொண்டு வா.” இந்த மாதிரியான சமயங்களில் மட்டுமே, கணவனிடம் ‘அம்மா’ மரியாதை வாங்கும் தனம்மாள், அந்த மரியாதை உடனடியாக ஏற்றுக்கொள்ளப் படவில்லையானால், அவ மரியாதையாகி விடும் என்பதை உணர்ந்தவள் போல், அவசர அவசரமாக இரண்டு ரூபாயைக் கொண்டு வந்து தபால்காரனின் கையில் வைத்தாள். பழனிவேலுக்கு பற்றி எறிந்தது. எப்படி அவன் கையை இவள் தொடலாம்... என் கையில் கொடுத்தா கொடுக்க மாட்டேனா... திருட்டு முண்ட... பழனிவேல், தன் கோபத்தை, “குனிஞ்சு வாங்கேன்டா”, என்று தபால்காரனிடம் காட்டினார். அந்த இளைஞனுக்கு வாங்க விருப்பமில்லை. ஆனால் வாங்கித்தான் ஆகனும்... மறுத்தால் ‘நான் கொடுத்து நீ வாங்க மாட்டியா...’ என்று அடித்தாலும் அடிப்பார்... போலீசுக்குப் போனால், ‘பெரிய மனுஷனை அடிக்க வச்சுட்டியே’ என்று, அவங்களும் ரெண்டு சாத்து சாத்தலாம்...” தபால் இளைஞன் போனதும் பழனிவேல் குதியாய்க் குதித்தார். “அபிராமி பில்டிங்கில், பத்தி பத்தியாய் கட்டி இருக்கேன் பாருங்க... கடையிங்க... அதுல கடைசி கடைய தெரியாத்தனமாய், காதர் பாட்சா என்கிற சாய்பு பயலுக்கு விட்டேன்.” “முஸ்லீமா இருந்தாலும் குல்லா போடமாட்டானே... உருட்டுக்கட்டை மாதிரி... அவன்தானே.” “அந்தப் பயலேதான்... மற்ற கடைக்கு வாடகை ஏத்துனது மாதிரி அவனுக்கும் ஏத்தினேன்... இவன் என்னடான்னா, அவங்கிட்ட போயி யாருமே அதிக வாடகை கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கான். அவனுக கேட்கல... எல்லோரும் வாடகையக் கூட்டிக் கொடுத்தப்போ... இந்தப் பய பழைய வாடகையை கொடுத்தான்... நான் திருப்பிக் கொடுத்திட்டேன்... இவன் என்னடான்னா எனக்கு அந்த பணத்தை இப்படி மணியார்டர் அனுப்புறான்... அந்த பில்டிங்ல வருசக் கணக்கில் இருக்கிற நம்ம பயலுக சும்மா இருக்கானுங்க... ஆறு மாதத்துக்கு முன்னே வந்த காதர் பய என் கண்ணுலயே விரல்விட்டு ஆட்டப்பாக்கான்...” “இதுக்குப் பேர்தான் ‘இஸ்லாம்’ என்கிறது. இதனால் தான் நம்ம தலைவர் சொல்றார்- இது இந்துக்களோட காலமில்ல... டிசம்பர் ஆறு, அதாவது நேற்றில் இருந்து இந்துக்களோட் பொற்காலம் துவங்கி இருக்குன்னு சொல்றார்.’ “நீங்க சொல்றது... ஒரு வகையில்,.. ஒருவகையில என்ன எல்லா வகையிலயும் சரிதான்... இதனால்தான் எனக்கு மணியார்டர் அனுப்பி இருக்கான்.” இளைய யூனிபாரம் இப்படிச் சொன்னது. “இந்து... இளிச்சவாயன்னு...” இதற்குள் யூனிபாரம் நடுத்த்ரம் ஆவேசித்த்து. “ஏன் கவலைப்படுறீங்க... இப்போ அவங்க என்ன செய்தாங்க என்பது முக்கியமில்ல... நாம் என்ன செய்யுறோம் என்கிறது தான் முக்கியம்... காதர்பாட்சாவோட கையையோ, காலையோ எடுக்க வேண்டியது எங்க பொறுப்பு... விசயத்த எங்ககிட்ட விட்டுருங்க. ஆனால் ஒரு கண்டிசன்... நீங்கதான் நம்ம முன்னணிக்குத் தலைவராய் இருக்கனும்...” பழனிவேல் அப்போதே முன்னணித் தலைவரானது போல ஆணையிட்டார். “டவுனுக்கு வெளியே, முருகன் கோயிலுக்கு கீழ் இருக்கிற மசூதியை தரை மட்டடமாக்குவோம்... அப்போ அந்தப் பயலுக வருவான்க... காதர்பாட்சாவும் வந்துதானே ஆகனும்... அங்கேயே அவனை வெட்டி பொலி போடணும்... இதுக்கு நான் இப்போ என்ன செய்யனுமுன்னு சொல்லுங்க... முன்னணித் தலைவர் என்கிற முறையில் கேட்கேன்.” “அப்பாடா, கேட்கிறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. நீங்க பெரிசா ஒன்னும் செய்ய வேண்டாம். கத்தி, கம்போட ஒரு நூறு ஆட்கள அனுப்புங்க... இப்போதைக்கு ஒரு இருபதாயிரம் ரூபாய்... போலீஸ்ல, இந்து போலீஸ்தான் அதிகமா மாமூல் கேட்கான்... அவங்க கண்ண மூடினாத்தானே, நாம ஏதாவது செய்ய முடியும்.” “சரி, பணமும் ஆளும் வந்துட்டதா நினைங்க.” அவர்கள் எழுந்திருக்கப் போனபோது, ஜோல்னா பையோடு அபிராமி வந்தாள். அவர்கள் கால்களை வளைத்துக் கொள்வதற்காக கண்களால் வளைத்துப் பார்த்தாள். தந்தையைப் போல் வைரப்பட்ட உடம்பு வைராக்கியமான பார்வை. யோசித்துவிட்டுப் பேசாமலும், யோசிக்காமல் பேசாமலும், யோசித்துக் கொண்டே பேசுவது போன்ற லாவகம். மகளை பழனிவேலு வியந்து பார்த்துக் கொண்டே மற்றவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். “இவள் எப்படிப் பிறந்தாள்னு ஓங்களுக்குத் தெரியாது?” சமையலறைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த தனம்மாள் திடுக்கிட்டாள். என்னத்த உளறப் போகிறாரோ என்று பதை பதைத்து, மகளிடம் பேசப் போகிற சாக்கில், அங்கே போய்க் கொண்டிருந்தாள். உடனே பழனிவேல் அவளுக்குப் பார்வையாலேயே கோஷாப் போட்டார். “தேவடியா முண்டை, இங்கென்னடி வேலை” என்று உதடுகளை ஒலி எழுப்பாமல் அபிநயம் செய்து காட்டினார். அந்த அம்மா பயந்து போய் உள்ளே ஓடியபோது, பழனிவேல் மானிட அபிராமி பிறந்த வரலாற்றை விளக்கினார். “எனக்கு கல்யாணமாகி பத்து வருடமாய்க் குழந்தை இல்லை. எங்க மாமியார் கூட கொழுந்தியாளைக் கட்டிக்கச் சொன்னாங்க. நாம என்ன முஸ்லீமா... மூணு பொண்டாட்டி கட்டிக்கிறதுக்கும், தலாக் செய்யுறதுக்கும்... ஆண்டவன் விட்ட வழியின்னு இருந்தேன்... ஆனாலும் மனசு கேட்கல... ஒரு பெரியவர் சொன்னபடி ‘அபிராமி’ கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி போய் அபிராமி அந்தாதியைப் படிச்சேன்... சரியா பத்தாவது மாதம் இவள் பிறந்தாள். இவள் என்னை தந்தையாய்ப் பார்த்தாலும், நான் இவளை அம்மாவாத்தான் பாக்கேன்.” பழனிவேலால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. குரல் தழு தழுத்தது. தவம் செய்து பெற்ற தன்மகள், கல்லூரியில் திவான் முகமது மகனோடு, ‘இஸ்க்கு, தொஸ்க்கா’ நடப்பதாய் ஒரு மொட்டை கடுதாசி வந்ததிலிருந்து, அவர் மனமும் மூளியாய்ப் போனது. சாடை மாடையாய்ப் பார்த்ததில், அது உண்மை போலவும் தோன்றியது. சங்கரசுப்பு, ஒரு போடு போட்டார். “பாப்பா, பாக்கிறதுக்கு அசல் ‘அபிராமி’ மாதிரிதான் இருக்காள்.” அபிராமிக்கும் பெருமை பிடிபடவில்லை. தெய்வ அபிராமியின் ஒரு கூறு, ‘தான்’ என்பதில் ஒரு பெருமிதம். தலைக்கு மேல் ஒரு மஞ்சள் ஒளி வட்டம் இருப்பது போன்ற அனுமானம். மற்ற பெண்களைப் போல் அல்லாமல், தான் ஒரு தெய்வப் பிறவி என்ற நம்பிக்கை... அபிராமி புறப்பட்டாள். அவள் காலடிச்சத்தம் ஒய்ந்ததும், பழனிவேல் சங்கரசுப்புவின் காதுகளில் கிசு கிசுத்தார். “அப்புறம் அவன்... நயினார் முகமதுவின் மகன் சம்சுதீன்னு ஒரு வாத்திப் பயல் இருக்கான். காலேஜ்ல வேல பாக்குற நம்ப இந்துப் பெண்கள் கிட்ட ஏடாகோடமாய் நடக்கானாம். அவனை ஏதாவது செய்வதாய் இருந்தால் இப்பதான் செய்யனும்.” சங்கரசுப்பு பதிலுக்குக் கிசுகிசுத்தார். “முடிச்சுடுவோம், உங்க குடும்ப கெளரவம் தானே எங்க கெளரவம்? அப்ப வரட்டுமா... சம்சுதீனை நாங்க கவனிக்கோம். எதுக்கும் அபிராமிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாய் சீக்கிரம் பாருங்க...” பழனிவேல், வாசலைத் தாண்டியவர்களை வழியனுப்பக் கூடத் தெரியாமல் மரத்து விட்டார். கடைசியில அபிராமி சங்கதி இவனுகளுக்கெல்லாம் தெரிஞ்ச பிறகுதான் எனக்குத் தெரிஞ்சிருக்கு... இந்த பாபர் மசூதியை இடிச்சது சரிதான். அபிராமி என்னத் தலைகுணிய வச்சிடுவாளோ... எப்படி வைப்பாள்... சம்சுதீனின் தலை அவன் கழுத்துல இருந்தாத் தானே... பழனிவேல் கோபமாகக் குமுறி, அதற்கு வடிகால் தேடுவது போல் சமையலறையைப் பார்த்து சத்தம் போட்டபடியே ஓடினார். “ஏண்டி திருட்டு முண்ட மகள வளக்கிற லட்சணமாடி...” |