உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
3 சம்சுதீன், பாபர் மசூதியின் இடிபாடுகள் போலவே முடங்கிக் கிடந்தான். சாதாரணமாக, கழுத்தை நேர்க்கோடாக்கி, தலையை நிமிர்த்தி உட்கார்ந்து இருப்பவன், குடைசாய்ந்து கிடந்தான். நாற்காலியின் முதுகு விளிம்பில் தலையைச் சாய்த்து, கால்களை அகல விரித்துப் போட்டு, உடம்பினை நெளிவு சுளிவுகளாக்கிக் கிடந்தான். மேலே மாரடித்து ஒப்பாரி போடுவதுபோல் சத்தமிட்டுச் சுற்றிய துருப்பிடித்த மின் விசிறியைக் கண்களைச் சுழற்றாமலே பார்த்தான். பாபர் மசூதி இடிபட்டதை விட, கல்லூரி சகாக்கள் நடந்து கொண்ட விதம் அவனை உலுக்கிப் போட்டுவிட்டது. ஆண்டாண்டு காலமாக அந்யோன்யமாய்ப் பழகியவர்கள் கூட, இப்போது தன்னை அந்நியமாய்ப் பார்ப்பது போல் அவனுக்கு ஓர் அனுமானம். ஒரு வேளை அவர்கள் நினைப்பது போல்-சொல்லாமல் சொல்லிக் காட்டுவது போல், தான் இந்தியன் இல்லையோ என்ற சந்தேகம். இந்தியனாக அங்கீகரிக்கவில்லையோ என்ற ஆதங்கம். பொன்விழாக் காலத்தைக் கொண்டாடும் கட்டத்திற்கு வந்து விட்ட கல்லூரி என்பதனாலோ என்னவோ, அந்த ஆசிரிய அறை ஈயமாய் இளித்தது. பித்தளையாய் வெளுத்துக் கிடந்தது. அதன்சுவர்களில் சுண்ணாம்புத் தோல் பிய்ந்துமண் சதைகள் வெளிப்பட்டன. அந்த செவ்வக அறையில் மரக்கோடு கிழித்ததுபோல் இருபக்கமும் பத்தாம்பசலி மேஜைகள். எதிர்ப்பக்கம் தாவர இயல் ஆசிரியர்களுக்கான கையொடிந்த இருக்கைகள். இவன் உட்கார்ந்திருக்கும் பக்கம் விலங்கியல் ஆசிரியர்களுக்கான இருக்கைகள். சுவர் மூலையில் ஒரு தூசி துப்பட்டை ரேக்கு; அவற்றில் பாழடைந்த புத்தகங்கள். சம்சுதீன், கல்லூரிக்கு முன்பாகவே வந்துவிட்டான். அபிராமி அவனுக்காக பஸ் நிலையத்தில் ஒப்புக்கு நிற்பது போல் காத்து நிற்பாள் என்ற உணர்வில்லாமலே வந்து விட்டான். மசூதி பாளையத்தில் இன்னும் கூச்சலும் குழப்பமும் கோபாதாபங்களும் அடங்கவில்லை. போதாக் குறைக்கு டவுன் பக்கம் கோபாதாபத்தோடு போனவர்களில், பலர் தாக்கப்பட்டு ஆங்காங்கே மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கேள்வி. இவற்றையெல்லாம் உள்வாங்க முடியாமல் முன் கூட்டியே வந்தவன், அதற்கு முன்பாகவே ரகுராமன் இருப்பதைப் பார்த்தான். அன்றாடப் பத்திரிகை செய்திகளை அவன் படிக்கத் தேவையில்லை என்பதுபோல், அலசுகிறவர் இந்த ரகுராமன். அந்த ஆசிரியக் கூட்டத்திலே இவன் ஒருவன்தான் அவருக்குக் காது கொடுப்பான். ஆனால் இன்றோ அவனுக்கு வாய்கொடுக்க மறுத்தவர்போல் சும்மா இருந்தார். இவ்வளவுக்கும் செய்திகளுக்குப் பஞ்சமில்லை. பாபர் மசூதி இடிபட்ட மறுநாள் காலை இதுதான். டில்லி, அகமதாபாத், சூரத், பம்பாய் போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் நெருப்பில் வெந்தும், துப்பாக்கிக் குண்டுகளால் துளைபட்டும் சின்னாபின்னமான செய்திகள் நிறையவே உள்ளன. சர்வதேச அரசியலில் இருந்து, அந்தக் கல்லூரி நிர்வாகம் சொந்தக்கார ஜூனியர் ஒருவரைப் புதிய முதல்வராய் நியமித்த உள்ளூர் செய்தி உட்பட அனைத்தையும் அலசும் அறிவுஜீவி ரகுராமன். போஸ்னியாவில் முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படுவது பற்றியும், பாலஸ்தீனத்தில் அரபு மக்கள் நாடோடிகளாகத்திரியும் நிலையையும் சுட்டிக் காட்டும், இதோ இந்த ரகுராமன், இன்று நாடெங்கிலும் சொந்த சோதரர்கள், சோதரிகள் துடிதுடிக்கக் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி அவனிடம் பேச முயற்சி கூடச் செய்யாதது, அவனுக்கு என்னவோ போலிருந்தது. அவள் போட்ட குட்மார்னிங்கைக் கூட மோர்னிங்காக எடுத்தவர்போல் அசைவற்று இருந்தார். இதற்குள் அங்கே வந்த பெரும்பாலான ஆசிரியர்கள் சம்சுதீன் அங்கே இருக்கக்கூடாது என்பதுபோல், திடுக்கிட்டுப் பார்த்துவிட்டு, இருக்கிறானே என்பது போல் மற்றவர்களிடம் கிசுகிசு என்று பேசுகிறார்கள். ஒவ்வொரு முகத்திலும் கிருஷ்ண ஜெயந்தியோ அல்லது ராம நவமியோ வந்தது போன்ற பக்திப் பரவசம்-ஏதோ ஒரு பூரிப்பு-ஆனாலும் அவர்களைச் சும்மா சொல்லக்கூடாது! இந்து மதம் சகிப்புத் தன்மை உள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதுபோல் அவன் அங்கே இருப்பதை சகித்துக் கொண்டார்கள். அதே சமயம், அவன் அங்கு இருப்பதால் மசூதி இடிக்கப்பட்ட மகிழ்ச்சியை, இந்துக்கள் நடத்திய வீர சாகசங்களை பேச முடியவில்லையே என்ற ஆதங்கம், அவர்கள் பார்வையிலிருப்பது போல் சம்சுதீனுக்குப்பட்டது. சிலர் அவனைக் காட்டிக் குறுஞ்சிப்பாய்ச் சிரிப்பது போலவும் தோன்றியது. சம்சுதீன் அவசர அவசரமாய் வெளியேறினான். திரும்பிப் பாராமலேயே, ஆசிரிய அறைகளும், சோதனைக் கூடங்களும் கொண்ட அந்தத் தாழ்வாரம் வழியாய் நடந்து, அதன் முனையிலிருந்து கீழே குதித்துத் தாமரைப்பூ வடிவில் உருவான சிமிண்ட் வேலைப்பாட்டையும், அதற்கு மேல் இருந்த கொடிக்கம்பத்தையும் பார்த்தான். அமாவாசை, பெளர்ணமி, கிறிஸ்துமஸ் போல் சுதந்திர நாள், விடுதலை நாள், தியாகிகள் தினம் போன்ற நாட்களில் மட்டும் தேசக் கொடியை உச்சியில் பூச்சூடலாய்க் கொண்டிருக்கும் அந்தக் கம்பம், இப்போது வெறும் மொட்டையாகத் தெரிந்தது. ஆங்காங்கே அவனுக்கு உயிர்ப்புள்ளதாய்த் தெரிந்த கட்டிடங்கள், இப்போது மயான அமைதியோடு கூடிய சமாதிகளாகத் தோன்றின. ‘குட்மார்னிங் சார்’ என்ற குரல் கேட்டுத் தலை திருப்பினான். குங்குமம் வைத்த இரண்டு பாவாடை தாவணிகள். கூடவே ஒரு விபூதிப் பையன். கிண்டல் செய்கிறார்களோ? மசூதி இடிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டுகிறார்களோ? சம்சுதீன், அவர்களைப் பார்த்து பதிலுக்குப் புன்னகை கூடப்பூக்காமல் நடந்தான். மனம் போன போக்கில் நினைத்து, கால் போன போக்கில் நடந்தவன் தனது கால்களுக்கு இடையே ஒரு பந்து சிக்குவதைப் பார்த்தான். ஓடிவந்த இரண்டுபேர், அவனை ‘எடுத்துக் கொடு’ என்று கூடக் கேட்காமல், அவன் கால்களை பலவந்தமாக அகலமாக்கி அந்தக் கால் பந்தை எடுத்துக் கொண்டு போனார்கள். மரியாதைக்குக் கூட ‘சாரி’ என்ற வார்த்தையில்லை. இதுபோதாது என்று ஆங்காங்கே கூடிக் கூடிப் பேசுகிறார்கள். பாபர் மசூதி இடிபட்டதைத்தானோ...? சம்சுதீனால், அங்கே நிற்க முடியவில்லை. அவனைப் பார்த்தவுடனே ஓடிவரும் உடற்பயிற்சி ஆசிரியரும் என்.சி.சி.மாஸ்டரும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். எதிரே வந்த முத்துலட்சுமி வழக்கம் போல் அவனைப் பார்த்துச் சிரிக்காமல், அவன் எங்கே பேசி விடுவானோ என்று பயந்ததுபோல் வேறு பக்கமாகத் திரும்பி நடக்கிறாள். சம்சுதீன் கூனிக்குறுகி நடந்தான். தள்ளாடிய நாற்காலி நுனியில் அல்லாடியபடியே கிடந்த தாத்தா அப்துல் மஜீத், முன்பு தன்னிடம் முட்டி மோதி ஆற்றொண்ணாத் துயரத்தோடு கதை கதையாய்ச் சொன்ன விவரங்கள் இப்போது விஸ்வரூபமெடுத்து அவன் காதுகளைக் குத்தின. அவன் தாத்தா தீவிர காங்கிரஸ் தொண்டராம். காங்கிரஸ் விடுதலை இயக்க ஊர்வலங்களில் அண்ணல் காந்தியின் படத்தைத் தூக்கிக் கொண்டு முன்னால் போனவராம். ஆனால் அண்ணன்கள் இருவரும் முஸ்லீம் லீக்காம். காங்கிரஸ் ஊர்வலத்திற்குப் போட்டியாக அல்லது முன்னோடியாக ஜின்னாவின் படத்தை எடுத்துக் கொண்டு ஊர்வலமாய்ப் போவார்களாம். நாட்டுப் பிரிவினையும் சுதந்திரமும் ஒருசேர வந்தபோது அவர்கள் பயந்து விட்டார்கள். அதற்கு முன்பே ஒரு புதுக்காங்கிரஸ்காரர் ‘சுதந்திாம் வரட்டும் எங்களுக்கு, அப்போ தெரியும் சேதி’ என்று மிரட்டினாராம். இத்தகைய பயத்தாலோ அல்லது குற்ற உணர்வாலோ அவர்கள் குடும்பத்தோடு பாகிஸ்தான் புறப்பட்டபோது, தாத்தாவையும் கூப்பிட்டார்களாம். இவரோ அவர்களைத் தடுக்கப் பார்தாராம். அவர்கள் மசியாத போது இந்துத் தோழர்களை அனுப்பி, ‘அந்தக் காங்கிரஸ் காரன் மிரட்டினான்னு பயப்படாதீங்க; அவன் இவ்வளவு நாளும் வெள்ளைக்காரனுக்கு வால் பிடிச்சுட்டு, சுதந்திரம் வருமுன்னு தெரிஞ்சு காங்கிரசுக்கு வந்த வியாபாரி. நீங்களோ, தப்போ சரியோ கொண்ட கொள்கையிலே நேர்மையாய் இருந்தவங்க. நீங்க போகக்கூடாது’ என்று சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அண்ணன்கள் பிடிவாதமாய் இருந்திருக்கிறார்கள். என்றாலும், போகும் போது கண்ணீர் மல்கப் பிறந்த மண்ணை முத்தமிட்டுப் போனார்களாம். ஒருபிடி மண்ணை எடுத்து காகிதத்தில் மடித்துப் பையில் வைத்துக் கொண்டார்களாம். அப்படிப் போகும்போது, தமையன்மாரின் பெண் குழந்தைகள் சித்தப்பாவின் காலைக்கட்டி அழுது- உன்னைவிட்டுப் போகமாட்டோம் என்று அரற்றினவாம். ஆண் குழந்தைகள், அவரை ‘வா... வா...’ என்று கைகளைப் பிடித்து இழுத்தனவாம். அண்ணன்மார் ‘ஜாக்கிரதை யாய் இருந்துக்கோடா’ என்று அழதழுது சொன்னார்களாம். தாத்தாவால் தாளமுடிய வில்லையாம். அவர்களை விட்டு எதிர்த்திசையில் ஓடினாராம். வீட்டிற்கு போய் அங்குமிங்குமாய் புரண்டு புரண்டு அழுதாராம். தாத்தா சாவதுவரைக்கும், தமையன்மாரோடு வாழ்ந்த, மசூதிக்குத் தெற்கே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார். அப்போது தாத்தா சொன்னதை கதை மாதிரி எடுத்துக் கொண்ட சிறுவன் சம்சுதீன், இப்போது கண்களைத் துடைத்துக் கொண்டான். தாத்தாவைக் கூட திட்டிக் கொண்டான். மதியாத மண்ணில் எதற்காக இருக்கணும்? இந்நேரம் தாத்தாக்கள் கதை முடிந்திருக்கும். ஆனால் பெரியப்பாக்கள், பெரியம்மாக்கள் இருப்பார்கள். நிச்சயமாக என்னைவிட, என்னை மாதிரியான இங்குள்ள எல்லா முஸ்லிம்களையும் விட சந்தேசமாத்தான் இருப்பாங்க. பேசாம தாத்தாவும் பாகிஸ்தானுக்கு போயிருக்கலாம். அப்படிப் போயிருந்தால் பிறந்த மண்ணிலேயே இப்படிப்பட்ட அந்நியத் தன்மை தந்திருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட, எல்லோரும் வழங்கிக் கொடுக்கும் அந்நியத் தன்மை இருக்கிறதே, அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இந்த நாட்டில் ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு சராசரி இந்தியப் பெண்ணைப் போல; அவர்களுக்குப் பிறந்த வீடு முக்கிய மில்லை. புகுந்த வீடு புகுந்த வீடே. சம்சுதீன், ஒரு அன்னியன் போலவே அந்த அறைக்குள் நுழைந்தான். வழியில் ரஜினிகாந்த் - கமலஹாசன் மகாயுத்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்த மாணவ மாணவியர் கூட பாபர் மசூதி இடிபட்டதற்கு சந்தோச விமர்சனம் செய்வது போலத் தோன்றியது. இது போதாது என்று, கல்லூரிக்கு வெளியே வாண வேடிக்கைகள் - ராமபிரான் அப்போதுதான் உயிர்த்தெழுந்து வந்தது போன்ற கோஷங்கள்... அந்த அறைக்குள், அபிராமி மட்டுமே இருந்தாள். மற்றவர்கள் வகுப்புக்களுக்குப் போயிருக்கலாம். அபிராபி, பின்கழுத்து தெரியாதபடி மூடித்திரை போட்டு, அதன் முனையைக் கைப்பிடிபோல் ஒரு சுருக்காக்கி இருந்தாள். வாசலையே வெறித்துப் பார்த்தவள். வழக்கம்போல் துள்ளிக் குதிக்கவில்லை. பொதுவாக இந்த மாதிரி சமயங்களில், அவன் அவளுக்குத் தெரியாமல் அவள் முடியை ஒரு இழுப்பு இழுத்து, அவள் கன்னங்களில் பள்ளங்களை ஏற்படுத்துகிறவன் - ஆனால், இப்போது அவளை வெறுமனே பார்த்தான். அவளோ- அவனைப் பொய்க் கோபத்தோடு பார்ப்பவள், இப்போது அவனே பொய் என்பதுபோல் பார்த்தாள். அப்பா, சாடை மாடையாகச் சுட்டிக் காட்டியது போல் சம்சுதீனுக்கு வாழ்க்கைப்பட்டு அவன் வீட்டுக்குள் கோஷாபோட்டு இருக்க முடியாது. மூலையில் முடங்கினாலும் முடங்குவாளே தவிர, முக்காடு போட முடியாது. பெயரில் கூட எவள் மூலம் பிறந்தாளோ அந்த அபிராமியின் பெயரில்தான் உயிருள்ளவரை நடமாடுவாளே தவிர... ஒரு சாந்த் பீவியாக... அல்லது நூர்ஜஹானாக இருக்க முடியாது. இருவரும், ஒருவரோடு ஒருவர் பேசவில்லை. அவள் மசூதி இடிக்கப்பட்டதற்கு ஒரு வார்த்தை கூட ஆறுதல் சொல்லவில்லையே என்று சம்சுதீன் குலைந்து போய் உட்கார்ந்தான். அவளுக்கோ, அவன் நேற்று சந்திக்க வராததும், அன்னை அபிராமியின் சித்துவிளையாட்டே என்ற ஒரு நம்பிக்கை. வேறுபக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்- முகத்தை மட்டுந்தான். மனதை அப்படித் திருப்ப முடியவில்லை. ஓராண்டுக்கு முன்பு நடந்த சம்பவங்கள். நெஞ்சில் ஒளியாய் நின்றவை இப்போது நெருப்பாய்ச் சுட்டன. அவற்றை நினைக்க நினைக்க அவளுக்கு மனம் கேட்கவில்லை. அவன் நிலைகுலைந்து கிடந்த விதம் வேறு, அவள் தாய்மையைத் தூண்டிவிட்டது. எதிர்த்திசையில் இருந்து எழுந்து, அவன் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டாள். அந்தக் கணத்தில், தெய்வ அபிராமியை மனதிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கிவிட்டு, தன்னை ஒரு சாதாரண அபிராமியாக்கி அவனிடம் கேட்டாள் “நேற்று ஏன் நீங்க வரலே? ஒங்க மனசிலே என்னதான் நினைப்பு? ஏன் வரலேன்னாவது இப்ப சொல்லலாமில்லே?” சம்சுதீன், அவளை வாயகலப் பார்க்காமல் பல்கடித்துப் பார்த்தான். ‘பாபர் மசூதி இடிபட்டு உலகமே அதைப் பற்றி விமர்சிக்குது. முஸ்லீம் சுமுதாயமே தவியாய்த் தவிக்குது. இவளுக்கு இந்த சமயத்திலே தான் நான் காதலனாய் இருக்கனுமோ? கொஞ்சங் கூட ‘டீசன்ஸி’ தெரியாதவள்!’ “என்ன சம்சுதீன்! உங்க மனசிலே என்னதான் நினைப்பு?” “ரோம் எரியும் போது நீரோ பிடில் வாசிச்சகதை உnகதை; எதுவும் தெரியாதது மாதிரி கேட்கிறியே? பாபர் மசூதி இடிபட்டதற்கு ஒரு ஆறுதல் இல்ல. எங்க வீடே இடிஞ்சு போனது மாதிரி நான் துடிக்கேன், உனக்கென்னடான்னா நான் உன்னைப் பார்க்க வராததுதான் பெரிசாத் தெரியுது.” “என்ன சம்சுதீன்! நான் என்னமோ பாபர் மசூதியை இடிச்சது மாதிரிப் பேசுறிங்க.” “இப்போ கூட உனக்கு அந்த மசூதியை இடிச்சது உறுத்தலயே? நீயும் ஒரு சராசரி இந்துப் பெண் மாதிரி தான் நடந்துக்கிறே?” “டோன்ட் டாக் ஃபர்தர்! எனக்கு சுயமரியாதை இருக்கு! இந்துப் பெண் என்கிறதிலே பெருமைப்படுறேன்.” “கடைசியிலே அல்லா உன்னைக் காட்டிக் கொடுத்துட்டார்.” “ஏன் அபிராமி உங்களையும் காட்டிக் கொடுத்துட்டாள்.” இருவரும், மனதுக்குள் அரும்பிய மதப்பற்றை, பாபர் மசூதி வழியாகவும் அபிராமி வழியாகவும் வெறுப்பாக மாற்றி அந்த வெறுப்பிலேயே தீக்குளித்தார்கள். அபிராமி அவனிடமிருந்து விலகிப்போய் எதிர் வரிசையில் உட்கார்ந்தாள். மனதை வசப்படுத்த அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியை நெஞ்சுக்குள் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். சம்சுதீனோ மேஜையில் தலையைக் குப்புறப் போட்டு, இரண்டு கைகளையும் அதற்கு மேல் வளைத்துப் போட்டு அப்படியே கிடந்தான். முதல் பீரியட் இறந்து, இரண்டாவது பீரியட் பிறந்ததைக் காட்டும் வகையிலோ என்னவோ கல்லூரி மணி இரு வேறுவிதமாய் ஒலித்தபோது... அந்த ஆசிரிய அறைக்குள், ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள். வெள்ளை சபாரி போட்ட ராமானந்தம்; விபூதி குங்கும டாக்டர் முரளி, அந்தக் குங்குமத்தை முறைத்தபடியே பார்க்கும் பகலவன் என்கிற இசக்கி; எலிவால் சடைபின்னிய வாளிப்பான முத்துலட்சுமி, காட்டாமோட்டா சேலைகட்டிய வயதான எலிசபெத்; உதவிப் பேராசிரியனும் மசூதிபாளையத்தைச் சேர்ந்தவனுமான முத்துக்குமார். இவர்கள் தனித்துவங்கள் - அப்படி இல்லாத இன்னும் சிலர் மற்றும் பலர். எல்லோருமே, அப்படிக் கிடந்த சம்சுதீனைப் பார்த்தார்கள். அதற்கான காரணத்தைக் கேட்பது போல் அபிராமியைப் பார்த்தார்கள். அவள் இப்போது முகத்தை ‘பெரிய எழுத்து’ அபிராமி அந்தாதி புத்தகத்தால் மறைத்துக்கொண்டாள். ராமானந்தம், சக ஆசிரியர்களைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு, அபிராமியையும் நோட்ட மிட்டபடியே கேட்டார்; நாற்பது வயதுக்காரர், சம்சுதீனிடம் ஏதோ கடன் கொடுக்கல் வாங்கலில் ‘சில்லறைச்’ சச்சரவுகளை வைத்திருப்பவர். ஆகையாலோ என்னவோ இப்போது அடாவடியாகவும் ஆனந்தமாகவும் கேட்டார். “என்னப்பா சம்சு! ஏன் இப்படி இடிஞ்சு போய்க் கிடக்கிறே?” சம்சுதீன், ஆவேசமாகத் தலையைத் தூக்கினான். முஸ்லீம்களின் பாதுகாப்பு உணர்விற்கே கேடயமாக இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் குத்திக் காட்டுறான். கிண்டல் பண்ணுறான். இவனை விடப்படாது. “நான் எப்படிக் கிடந்தால், உங்களுக்கு என்ன சார்? வேணுமின்னா எங்க மசூதியை இடித்தது மாதிரி என்னையும் இடிச்சுப் போட்டிருங்க, ஆப்டர் ஆல் நான் ஒரு முஸ்லீம், சிறுபான்மைக்காரன், இந்த மண்ணில் பிறந்த அந்நியன்.” ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் குழம்பிப் போனார்கள். மறுபகுதியினர் எவராவது அவனுக்குப்பதில் சொல்லட்டுமே என்பதுபோல் அந்த ‘ஒருவரை’ ஒவ்வொருவர் முகத்திலும் தேடிக் கொண்டிருந்தார்கள். முத்துக்குமார் தனது சொந்த ஊர்க்காரனான சம்சுதீனுக்கு ஆறுதல் சொல்வதற்காக அவன் பக்கமாகப் போகப் போனான். அப்போது டாக்டர் முரளி அவனைத் தன் பக்கமாக இழுத்துப் பிடித்துக் கொண்டு, மேஜை மேல் தலையைப் போட்டு அதை நிமிர்த்திக் காட்டிய சம்சுதீன் தலைக்கு இணையாக தனது தலையையும் தாழ்த்தி வைத்துக்கொண்டு இளக்காரமாய்க் கேட்டார்: “இதுவரைக்கும் வளையல் போட்டிருந்த எங்க ஆட்கள் ஒரு சேஞ்சுக்காக மண்வெட்டியையும், இரும்புக் கம்பியையும் எடுத்தது உனக்குப் பொறுக்கலியா?” முத்துக்குமாரால் தாள முடியவில்லை. டாக்டர் முரளியிடமிருந்து தன்னை விடுவிடுத்துக் கொண்டு, கோபத்தோடு கேட்டான். “அது என்ன சார் எங்க ஆட்கள்? நாம எல்லோருமே ஒரே ஆட்கள் தான்!” “அப்படித்தான் நாம நினைக்கோம்! ஆனா அவங்க நினைக்கலேயே!” “உங்க ‘நாம்ல’ என்னைச் சேர்க்காதிங்க!” டாக்டர் முரளி, அடிக்க வருவதுபோல் பேசிய முத்துக்குமாரிடமிருந்து விலகி, ஒவ்வொரு முகமாகப் பார்த்தார். அனைத்துக் கண்களும் அவர் பார்வையைத் தவிர்த்தன. ஆகையால் அவர் முத்துலட்சுமியைப் புன்னகையோடு பார்த்தார். இதுவரை ‘இன்டெலெக்சுவலான’ அவர், தன்னை அலட்சியப்படுத்தியதையும், இப்போதோ கனிவாய்ப் பார்ப்பதையும் நினைத்து பரவசப்பட்ட முத்துலட்சுமி, ‘நாம்’ என்கிற வார்த்தையில் சங்கமமாகி, தான் ஒரு இந்துப் பெண் என்பதில் பெருமைப்பட்டாள். “மசூதியை இடிச்சது தப்பு தான். அதுக்காக நாம ஒப்பாரி போடணும்னு யாரும் எதிர்பார்க்கப்படாது. பெரியார் கூட பிள்ளையார் சிலையை உடைச்சார். எம்.ஆர்.ராதா, ராமனைக் கேவலப்படுத்தினார். நாம் பொறுத்துக்கலையா?” என்றாள் அபிராமி. சம்சுதீன் மீண்டும் தலையைத் தூக்கினான். அவளை உரிமையோடு கடிந்து கொள்வதாகத்தான் நினைத்தான். பழகிய தோஷத்தில் இந்த சகாக்களின் முன்னாலேயே முன்பு அவளை, எந்த வார்த்தையால் கண்டிப்பானோ அதே வார்த்தையை இப்போதும் சொன்னான்: “அபிராமி பிளிஸ் ஷட் அப்!” அபிராமிக்கு லேசான தெளிவு. மகிழ்ச்சி கூட. எப்படியோ அவன் பேசி விட்டான் என்கிற சந்தோஷம். ஆனால் டாக்டர் முரளி விடுவதாக இல்லை. நாற்பது வயதானலும், அவருக்கு அவள் மேல் ஒரு கண். “ஏய்... சம்சுதீன் உன் மனசுல என்னப்பா நினைப்பு? ஒரு இந்துப் பொண்ணுன்னா, அவ்வளவு இளக்காரமா? அபிராமி சுயமரியாதையும் சுய கருத்தும் கொண்டவள். அவள் என்ன கோஷா போட்டவளா? வாயை மூடிக்கிட்டிருக்க! அவளை ஏன்யா ‘ஷட் அப்’ என்கிற?” சம்சுதீன், திணறிப் போனான். அபிராமியை தனக்காகப் பரிந்துரைக்கும்படி கண்களால் கெஞ்சினான். இதற்குள் ஒரே கத்தல், கூச்சல்; இதனால் வெளியேயிருந்தும் ஆசிரிய, மாணவப் படையெடுப்புக்கள். அபிராமிக்குத் தான் இப்போது ஒரு இந்துப் பெண் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. டாக்டர்முரளி கேட்டது நியாயமாய்ப்பட்டது. ஏதோ காதலிச்சா, அதனாலேயே அடிமைன்னு பட்டா கொடுத்ததா ஆயிடுமா? அபிராமித் தாயே, என் கண்ணைத் திறந்திட்டடி அம்மா! சம்சுதீன் சமாச்சாரமாய் ஒரு முடிவெடுக்க, இன்னைக்கு உன்னைக் கும்பிட்டது வீண்போகல... தாயே... இப்போ... எப்படிம்மா... நான் நடத்துக்கனும் சர்வேஸ்வரி... டாக்டர் முரளியின் முகஉந்துதலுக்கு உட்பட்ட அபிராமி இப்போது சம்சுதீனைப் பார்த்து திருப்பிக்கத்தினாள். “யு ஷட் அப்.” |