உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
10 'முத்துசாமி உயர்நிலை ஆரம்பப் பள்ளிக்கூடம்' என்று போர்ட் பெரிதாக இருந்தாலும், அந்தப் பள்ளிக்கூடத்தின் பெஞ்சுகள், கையிழந்து காலிழந்து கிடந்தாலும் பரவாயில்லை. பெரும்பாலான ஆசிரியர்களும், உறுப்புக் குறைவு இல்லாமலே, ஊனமாகக் கிடக்கிறார்கள். ஒரு வகுப்புக்கும், இன்னொரு வகுப்புக்கும் இடையே இருந்த ஓலைத் தட்டியில் கம்புகள் இருந்தனவே தவிர, காய்ந்து போன ஒரு தென்னந்தட்டி கூடக் கிடையாது. ஒன்றாவது வகுப்பில் படிக்கிற பயல்கள், பாடத்தைக் கவனிக்காமல், இரண்டாவது வகுப்பில் பிரம்பால் அடிபடும் பையன்களை ரசனை கலந்த அச்சத்தோடு பார்ப்பார்கள். ஐந்தாவது வகுப்பு ஆசிரியர் 'முதல் பானிபட் போர் எப்போண்டா நடந்தது?' என்று கேட்கும் போது, ஆறாவது வகுப்பில் படிக்கும் பையன்கள் 'நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்' என்ற ஔவையார் பாட்டை ஒப்பாரி வைப்பார்கள். அந்த ஒப்பாரி, முதல் பானிபட் போரில் அடிபட்டுக் கிடந்தவர்களின் கூப்பாடு மாதிரி, ஐந்தாவது வகுப்பில் கேள்வி கேட்ட ஆசிரியருக்குப் பதிலாக வரும். பயல்களுக்கு, பதிலளிக்க வேண்டிய அவசியமிருக்காது. இதுபோல், ஏழாவது வகுப்பில் 'எழுவாய் என்றால், என்னவென்றால் எழுவாய்' என்று ஒரு ஆசிரியர், திக்கித் திணறிப் பாடஞ்ச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, எட்டாவது வகுப்பு மாணவர்கள், ஆசிரியர் தங்களைத்தான் எழுந்திருக்கச் சொல்கிறார் என்று நினைத்து, இடுப்பு நிஜார்களைப் பிடித்துக் கொண்டே நிற்பார்கள். இப்படி 'நெருக்கமான' பள்ளிக்கூடம் அது. நூறு மாணவர்களுக்காகக் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தில், ஐந்து வகுப்புகளுக்காகக் கட்டப்பட்ட அந்தப் பாடாதிக் கட்டடத்தில், இப்போது ஐந்நூறு மாணவர்கள்; எட்டு வகுப்புகள். இந்த இலட்சணத்தில் ஒரு சில வகுப்புகளுக்குப் பல செக்ஷன்கள். இவ்வளவுக்கும் மானேஜர் ஜம்புலிங்கம், புதிய கட்டடம் கட்டியிருப்பதாகவும், பீரோ, விஞ்ஞானக் கருவிகள், சாய்வுப் பெஞ்சுகள் இருப்பதாகவும் கணக்குக் காட்டி, அரசாங்கத்திடம் இருந்து 'கிராண்ட்' வாங்குகிறவர். ஆகையால், தமது சுழல் நாற்காலி சிம்மாசனத்தில் 'கிராண்டாக' உட்கார்ந்து கொண்டு, இரண்டு ரிஜிஸ்டர்களைக் கையிலேந்திக் கொண்டிருந்த கண்ணாடி ஆசிரியை ஒருத்தியை விளாசிக் கொண்டிருந்தார். "ஏம்மா, கொஞ்சமாவது ஒனக்கு புத்தியிருக்கா?" அந்த ஆசிரியை அவரை நிமிர்ந்து பார்க்காமலே, மருவினார். இந்த ஜம்புலிங்கத்திற்கும், பாடஞ் சொல்லிக் கொடுத்தவர் அந்தப் பெண்மணி. அப்போது, இவரது அப்பாவும், முத்துச்சாமியின் மகனுமான தங்கச்சாமி மானேஜர். ஜம்புலிங்கத்திற்கு, அரிச்சுவடி சொல்லிக் கொடுத்ததே, இந்தக் கண்ணாடி ஆசிரியைதான். புத்தியிருக்கான்னு கேக்குறான். அதுவும், 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்று சொல்லிக் கொடுத்த ஆசிரியையிடமே! கண்ணாடி ஆசிரியையான அந்த குருவுக்கு, இப்போது தெய்வமாக விளங்கும் ஜம்புலிங்கம், ரிஜிஸ்டர்களைப் பிடுங்கிக் கொண்டு, பக்கங்களைப் புரட்டிக்கொண்டே, ஆள்காட்டி விரலால் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்: "ஏம்மா, மாடக்கண்ணுக்கு வகுப்பு அட்டெண்டென்ஸ் ரிஜிஸ்டர்ல ஆப்ஸண்ட் போட்டிருக்கிங்க. அதே சமயம் நண்பகல் உணவு ரிஜிஸ்டர்ல பிரஸண்ட் போட்டிருக்கிங்க. வகுப்புக்கு வராம அவன் எப்படி சாப்பிட முடியும்?" ஆசிரியை மென்று விழுங்கினார். 'பேப்பர்ல சாப்பாடு போடுறபோது வராதவன், சாப்பிட்டிருப்பான். போடாத சாப்பாட்டுக்கு, வராதவன் வந்தா என்னப்பா' என்று கேட்டுப் பார்ப்பதுபோல் கற்பனை செய்து கொண்டார். அறுக்கப் படுகிற ஆடு மாதிரி மானேஜரை பரிதாபமாகப் பார்த்தார். ஜம்புலிங்கம் நாற்காலியில் இருந்து சிறிது 'ஜம்ப்' செய்து கொண்டே தீர்ப்பளித்தார். "வகுப்புக்கு வாரவன சாப்பிடாதவனா காட்டுனால் ஒண்ணுமில்ல. வராதவன வந்தவனா காட்டுனா பெரிய தப்புமா." "எப்போதாவது சாப்பாடு போட்டிருந்தாதான இந்த இழவு தெரியும்." வாய்தவறி வார்த்தையை விட்டுவிட்ட ஆசிரியை, மானேஜரை, வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் பார்ப்பது போல் பரிதாபமாகப் பார்த்தார். அதிர்ந்து போன ஜம்புலிங்கம், சிறிது நேரம் தன் முந்நாளைய குருவைக் கூர்ந்து பார்த்தார். நிதானமாகக் கேட்டார்: "ஒங்களுக்கு ரிட்டயர்ட் ஆக எத்தனை வருஷம் இருக்கு டீச்சர்?" ஆசிரியை, ஆபத்தைப் புரிந்து கொண்டார். ஜம்புலிங்கம் யாரையும் மரியாதையாக அழைக்கிறார் என்றால், அது ஆபத்து. ஆசிரியை, அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டவாறே, "வயசாக வயசாக எனக்கு மூளை குழம்பிப் போயிட்டுது. நீங்க தான் பெரிய மனசு பண்ணி..." ஆசிரியை மேற்கொண்டு பேச முடியாமல் திணறிய போது, மானேஜர் மேஜையில் இருந்த 'பேப்பர் வெயிட்டை' உருட்டிக் கொண்டே, மௌனமாக இருந்தார். ஐந்து நிமிடம் வரைக்கும், அவரிடம் நல்வாக்கை எதிர்பார்த்து நின்ற கண்ணாடி ஆசிரியை, மருவிக் கொண்டே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே, நடந்தார். அப்படி அவர் இறுதியாகத் திரும்பிய போது, "இடும்பன்சாமிய வரச் சொல்லுங்க. நீங்க எப்படிப் போட்டாலும் கவலைப்பட மாட்டேன். மிஞ்சி மிஞ்சிப் போனால், டெப்டி இன்ஸ்பெக்டருக்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கும். அவ்வளவுதான். சரி, போய் இடும்பன்சாமியை வரச் சொல்லுங்க" என்றார். கண்ணாடி ஆசிரியை, காலில் கண்ணாடி குத்திவிட்டதுபோல் துடித்துக் கொண்டே நடந்தார். இடும்பன்சாமியைக் கூப்புடுறானே - டிஸ்மிஸ் ஆனால் பென்ஷன் கிடைக்காதே! கண்ணாடி ஆசிரியை சொன்னதும், இடும்பன்சாமி, மானேஜரின் அறைக்குள் வந்தார். இந்த சாமிக்கு நாற்பத்தைந்து வயது. ஆஜானுபாகுவான தோற்றம். இடும்பன், மலைகளைத் தூக்கினான் என்றால், இவர் ஜம்புலிங்கம் சார்பில், தென்காசிக்கு, பால்பவுடர் டின்களையும், கோதுமை மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு போகிறவர். அந்தக் காலத்தில் 'சிலம்பு' விளையாடியவர். "கூப்பிட்டிங்களா... மீசைக்காரன் வண்டி போவுது. கோதும மூட்டய ஏத்தட்டுமா? சின்னான் பய ஊர்ல இல்ல." ஜம்புலிங்கம், அவரை உட்காரும்படி சைகை செய்தார். அதற்கு முன்பாகவே சாமி உட்கார்ந்தார். உச்சி வெயில், 'சிலபஸ்', ஆண்டியப்பன், சின்னான், டெப்டி இன்ஸ்பெக்டர் முதலியவர்களைப் பற்றிப் பேசிவிட்டு, கூட்டுறவு விவகாரத்தை ஜம்புலிங்கம் 'தற்செயலாகக்' கேட்பவர் போல் கேட்டார். "ஆமாஞ் சாமி, நீரு கூட்டுறவுத் தலைவர் கிட்டே ஏதோ தகராறு பண்ணுனியராம்..." "நான் பண்ணல. அவருதான் பண்ணாரு. செத்த மாட்டுக்கு எவன் ரூபா கொடுப்பான்?" "வாங்கும் போது சாகல இல்லா?" "மாடு வாங்கும் போது சாகல. நான் உறுப்பினராயும் ஆகல. சட்டப்படி அவரு என்ன செய்யணுமோ செய்துக்கட்டும்!" "அப்படிச் சொன்னா எப்படி? ஒமக்காவ எங்க பெரியய்யா மகன் நஷ்டப்பட முடியுமா? நீரு சொல்லுதல ஒரு நியாயம் இருக்காண்டாமா?" "பின்ன என்ன... அந்த கருமயில, இவன், கன்னையா கிட்ட இருக்கே, அந்த மாட்ட கேட்டேன். அது இப்போ கல்லு மாதிரி இருக்கு. கேட்ட மாட்ட தராம, கேளாத மாட்ட தந்தாரு. திட்டம் போட்டே சாவுற மாட்ட தந்துட்டாரு." "அவரு அப்படி நினைச்சிருந்தா, ஒமக்கு சட்ட விரோதமா தந்திருப்பாரா? எப்படியோ நேரு சீரா போகணும்." "நேரு சீருன்னா?" "பணத்தைக் கட்டணும்." "சொல்லப்போனால், அவரு தான் மாட்டுக்குப் புண்ணாக்கு வாங்கிப் போட்டதுக்குக் காசு தரணும்." "கடைசியா நீரு என்ன சொல்றீயரு?" "நீங்க என்ன சொல்றிய?" "பணத்தக் கட்டுமுன்னு சொல்லுதேன்!" "கட்ட முடியாதுன்னு சொல்லுதேன்!" "நான் சொன்னாக்கூடவா?" "கடவுளே சொன்னாலும்..." "இந்தப் பாரும்... இது நல்லா இல்ல!" "சரி. வேற பேச்சுப் பேசலாம்." "ஏன்?" "இது ஒங்களுக்கு சம்பந்தமில்லாத பேச்சு." "சம்பந்தம் இருக்கு. நீரு கோலத்துக்குள்ள குதிச்சா, நான் புள்ளிக்குள்ள குதிப்பேன். கூட்டுறவு சங்கத்தில மெம்பர் ஆகாமலே கடன் வாங்கி, சர்க்கார ஏமாத்தி, மோசடி செய்ததுக்காக, மானேஜர் என்கிற முறையில ஒம்மை நான் சஸ்பெண்ட் பண்ணலாம், தெரியுமா?" "பொய் சர்டிபிக்கட் கொடுத்தது - இருந்த 'பீ.ஸீய' கிழிச்சிப் போட்டது - கோதுமய வித்தது - பால் பவுடர டீக் கடைக்கு வித்தது - இவ்வளவையும் நான் எழுதிப் போடலாம் தெரியுமா?" "சரி, நீரு ஒம்மால ஆனதப் பாரும்! நான் என்னால ஆனத பாக்கிறேன்!" "இப்பவேயா? அப்புறமா? எப்போன்னாலும் நான் ரெடி!" ஜம்புலிங்கமும், இடும்பன்சாமியும் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டார்கள். யார் முதலில் கண்ணை எடுப்பது என்ற போட்டியில், விழியாடாமல் விழி விலகாமல் பார்த்தார்கள். அந்தச் சமயத்தில், ஒரு இளம் ஆசிரியை அங்கே வந்தாள். "இதயும் எழுதிப் போடுறேன். இங்க பள்ளிக்கூடத்துக்குப் பதிலா தேவதயா குடி நடக்கும்" என்று சொல்லிக் கொண்டே இடும்பன்சாமி வெளியேறினார். இடும்பன்சாமியை, எல்லா ஆசிரியர்களும் மொய்த்துக் கொண்டார்கள். 'அவன் ஆம்புளன்னா சஸ்பெண்ட் பண்ணிப் பார்க்கட்டும்' என்று இடும்பன்சாமி விடுத்த சவால் மூச்சு, ஜம்புலிங்கத்திற்கு நன்றாகக் கேட்டது. சும்மா சஸ்பெண்ட் என்று மிரட்டிப் பார்க்க நினைத்த மானேஜர், இப்போது பெரியப்பா மகனான கூட்டுறவுத் தலைவருக்கு மாட்டுப் பணம் கிடைக்க வேண்டும் என்பதைவிட, தான் ஆம்பிளை என்பதை நிரூபிப்பதற்காக, வேறு வழியில்லாமல், ஒரு காகிதத்தை எடுத்து எழுதினார். தப்பு. எழுதியது அந்த இளம் ஆசிரியை. கையெழுத்துப் போட்டது ஜம்புலிங்கம். கொடுக்கப் போனது பியூன். இடும்பன்சாமி சஸ்பெண்ட் காகிதத்தை கையில் வைத்துக் கொண்டே ஜம்புலிங்கத்திடம் வந்தார். கால் கையெல்லாம் ஆடியது. கர்ஜித்தார். "முதல்ல, என்கிட்ட நீங்க விளக்கம் கேக்கணும். அப்புறம்தான் சஸ்பெண்ட் பண்ண முடியும். சட்டந் தெரியாத பயலுவ மானேஜரா வந்தா..." "யோவ்... மரியாதி கொடுத்து மரியாதி வாங்கு! நான் பண்ண வேண்டியத பண்ணிட்டேன்! நீ இனிமே செய்ய வேண்டியத செய்துக்க!" இடும்பன்சாமி 'செய்ய வேண்டியதைச்' செய்தார். நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஜம்புவின் தலையைப் பிடித்துக் கொண்டு, மேஜையிலே குத்தினார். மேஜை கீழே விழுந்தது. அதற்குமேல் மானேஜர் விழுந்தார். இடும்பன்சாமி விடவில்லை. ஜம்புலிங்கத்தின் இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு, அந்தரங்கத்திற்குக் கொண்டு வந்தார். இதற்குள் சத்தங் கேட்டு, ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். மானேஜர், பள்ளிக்கூடத்தை 'குடும்பப் பாசத்தோடு' நடத்துபவர். ஆகையால் அவரது நெருங்கிய உறவினர்களான பல ஆசிரியர்கள், இடும்பன்சாமியின் இடுப்பில் கால்களை வைத்தார்கள். இது, உறவினரல்லாத ஆசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை. பலர் குரலிட்டனர். "அவங்க சண்டைய விலக்கித் தீர்க்காம, இடும்பன எதுக்குய்யா அடிக்கிய?" "ஏய், அருணாசலம்... இடும்பன விடுறியா... ஒன் இடுப்ப ஒடிக்கட்டுமா?" "அவன் எப்படிய்யா எங்க மச்சான அடிக்கலாம்?" "ஒங்க மச்சான் எப்படிய்யா அவர சஸ்பெண்ட் பண்ணலாம்? வாத்தியார்னா கிள்ளுக்கீரையோ? எப்டிய்யா சஸ்பெண்ட் பண்ணலாம்?" இடும்பன்சாமி, இடுப்பைத் தடவிவிட்டுக் கொண்டே, தன் பக்கம் பேசிய ஆசிரியர் குழாத்தின் மத்தியில் நின்று கொண்டார். ஒரு ஆசிரியர், "இப்பவே நம்ம மாநில செகரட்டரிக்குத் தந்தி அடிக்கணும். இவரு வகுப்புக்குப் போகாம நாம போகப் போறதில்ல. பார்த்திடலாம்." கண்ணாடி ஆசிரியை, கீழே இருந்து இன்னும் எழுந்திருக்காத ஜம்புலிங்கத்தைப் பார்த்தார். "வரவர சின்னவங்க பெரியவங்க என்கிற மரியாத இல்லாமப் போயிட்டு" என்றார் பொதுப்படையாக. கழுத்தில் கிடந்த சிலுவைக் குறியைத் தொட்டு, இயேசுநாதருக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார். இதற்குள் ஊர்க்காரர்கள், அங்கே கூடிவிட்டார்கள். இடும்பன்சாமியும் சொந்தபந்தம் உள்ளவர். ஆள்பலம் ஓரளவு உள்ளவர். ஆகையால் ஊர்க்காரர்கள், இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்தார்கள். பெரிய கோஷ்டி ஜம்புவிற்கு' 'ஜே' போட்டது. சின்னது இடும்பனுக்கு. "சஸ்பெண்ட் வாபஸ் வாங்காட்டா பள்ளிக்கூடம் நடக்காது." "பள்ளிக்கூடம் நடக்காட்டால் ஊர் இருக்காது." இதற்குள் கூட்டுறவுத் தலைவர் ஓடிவந்தார். ஜம்புலிங்கத்தின் கை கால் இரண்டையும் பிடித்துக் கொண்டே, "அப்பா புண்ணியவான், பங்காளி வீட்ல தீப்பிடிக்கும் போது, காலக் கட்டி அழுத கதையா பண்ணிட்டியே! இரகசியமா தீர்க்க வேண்டிய விவகாரத்த சஸ்பெண்ட் பண்ணி பெரிசாக்கி, என்னையும் நடுத் தெருவுக்குக் கொண்டு வந்துட்ட... இப்ப ஒனக்குத் திருப்திதானே" என்றார். ஜம்புலிங்கம் வெளுத்துப் போனார். பெரியய்யா மகனா இவன்? இவனுக்காக நான் சஸ்பெண்டும் செய்து, உதையும் தின்னுருக்கேன் - நன்றியில்லாமப் பேசறான் பாரு... ஒரு மணி நேரத்திற்குள் போலீஸ் வந்தது. இடும்பன்சாமியை இழுத்தார்கள். எதிர்ப்புத் தெரிவித்த சக ஆசிரியர்கள் இருவரையும், சின்னக் கோஷ்டியின் மூன்று ஆசாமிகளையும் ஜீப்புக்குள் போட்டார்கள். ஊரில், சில பகுதிகளில் 'கெட்ட வார்த்தைகள்' திட்டுத் திட்டாகக் கேட்டன. |