உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
11 சாமக்கோழி கூவிய சமயம். பிச்சாண்டியும், இன்னும் நான்கைந்து பேர்களும், மாசானம், 'கண்ணு தெரியாத' கிழவிகிட்ட வாங்கிப் போட்ட வயலில், பன்னருவாளும் கையுமாக நின்றார்கள். வயல், நெற்பயிர்களாலும், நெற்பயிர்கள் நெல் மணிகளாலும் மோனமாகப் பேசிக் கொண்டிருந்தன. பிச்சாண்டிக்கு, பெயருக்கேற்ற அளவுக்குத்தான் சொத்து. அதுவும் புஞ்சை. மானாமாரி கிணற்றை நம்பும் மங்கலமில்லாத காடு. அதனால் தான், மாசானம் நிலத்தை குத்தகைக்கு எடுத்தான். முப்பது வயதிருக்கும். கல்யாணம் ஆனபிறகுதான், தனக்கும் பணம் வேண்டுமென்று நினைத்தான். மாசானத்திடம் வயலைக் கேட்டபோது, அவரும் தட்டாமல் கொடுத்தார். குத்தகை ரேட்டுப் பேசவில்லை. பேச வேண்டிய அவசியமிருப்பதாக இருவரும் நினைக்கவில்லை. பன்னருவாளுடன் அவனும், அவன் ஆட்களும் குலை சாய்க்க நுழைந்தபோது, மாசானம், காண்டிராக்ட் ஆட்களுடனும், குமாரின் சொந்தக்காரர்களுடனும், அங்கே வந்தார். ஒவ்வொருவரும் வேல்கம்பு வைத்திருந்தார்கள். ஒரு சிலரிடம் பன்னருவாட்கள் வேறு. கதிர்வேல் பிள்ளை கைங்கர்யம்! பிச்சாண்டி அப்பாவித்தனமாகக் கேட்டான்: "என்ன மாமா! வேட்டைக்குப் போறியளா?" மாசானம், தன் கையாட்களை யோசித்துப் பார்த்து, சமரச சன்மார்க்க சீலத்திற்கு வந்துவிடக்கூடாதே என்பதற்காக, அவர் எடுத்த எடுப்பே பெரிய எடுப்பு. "வயலுக்குள்ள போவாத..." "ஏன் மாமா?" "போவாதன்னா போவாத!" "ஏன் மாமா?" "கதிர்வேல் பிள்ளகிட்ட என்ன சொன்ன?" "ஒண்ணுஞ் சொல்லலியே!" "வெள்ளாமையில முக்கால்வாசி ஒனக்குன்னு சொல்லல?" "ஆமாம், சொன்னேன். நாற்பது அறுபதுன்னு இருந்தத சர்க்கார் எழுபத்தஞ்சு - இருபத்தஞ்சுன்னு போட்டிருக்கு. வேணுமுன்னால் கிராம சேவக்கக் கேட்டுப் பாரும்." "நான் எதுக்குல கேக்கணும் - செறுக்கி மவன." "மாமா, வார்த்தய விடாதயும்." "ஏமுல விடமாட்டேன்? பாதிக்குப் பாதின்னு எல்லாரும் பயிரிடயில, ஒனக்கு மட்டும் கொம்பால முளைச்சிருக்கு?" "ஆமாமா உரிம என்கிற கொம்பு இப்ப முளைச்சிருக்கு." "இந்தக் கொம்ப சீவிவிட்ட சின்னான் பயலயும் சீவுறனா இல்லியான்னு பாரு. இந்தா பேச்சிமுத்து, காடசாமி, வயல அறுங்கப்பா - தேவடியாமவன் என்ன பண்ணுதான்னு பாப்போம்!" பிச்சாண்டிக்கு அதற்குமேல் தாள முடியவில்லை. "வயலுல இறங்குனா கொல நடக்கும்!" பிச்சாண்டி சொல்லி முடிக்குமுன்பே, இரண்டு பேர், அவனை விலாவில் குத்தினார்கள். பிச்சாண்டியின் ஆட்களில் பாதிப்பேர் ஓடிவிட்டார்கள். மீதிப்பேர் பன்னருவாட்களை தூக்குவதற்கு முன்பே வேல்கம்புகளால் குத்தப்பட்டார்கள். பிச்சாண்டியையும், எஞ்சிய ஐவரையும் இழுத்துக் கொண்டு போய், அருகே இருந்த தென்னை மரங்களில் கட்டிவைத்தார்கள். பிச்சாண்டி தான் பயிரிட்ட வயலில், தான் விதைத்த நெல்லை, மாசானம் ஆட்கள் அறுப்பதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னையே அறுப்பது போல் அவன் துடித்தான். இருட்டில் கண்மூடி திறப்பதற்குள், நடந்துவிட்ட கதை. அக்கம் பக்கத்து வயல்களுக்கு ஆட்களே வரவில்லை. பொழுது விடிந்த போது, நெற்பயிர் கட்டுக் கட்டாக கட்டப்பட்டு, குளத்தங்கரைக்குக் கொண்டு போகப்பட்டது. பிச்சாண்டியால் பிரமிப்பில் இருந்து விடுபட முடியவில்லை. இப்படியும் நடக்குமா... இப்படியும் நடக்குமா? இதற்குள், கருப்பட்டி காபி போட்டு அதை ஈயப் பாத்திரத்தில் கொண்டு வந்த அவன் மனைவி, புருஷனைப் பார்த்துவிட்டு, 'கோ'வென்று கதறினாள். அவனைக் கட்டிப்பிடித்து அழுதாள். அவள் அழுதபோதும், பொழுது முழுதாகப் புலராத சமயம். சத்தங்கேட்டு, அக்கம் பக்கத்தில் வயல் வேலைக்காக வந்திருந்தவர்கள், யாரோ கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக நினைத்து, அங்கே ஓடி வந்தார்கள். வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஹரிஜன விவசாயக் கூலிகள். பிச்சாண்டியையும், அவன் தோழர்களையும் கட்டுகளை அவிழ்த்து விட்டார்கள். அந்த அறுவரும் குன்னிப்போய் நின்றார்கள். ஒரு ஹரிஜன விவசாயக் கூலி அதட்டினான். இன்னொருவன் சின்னானைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக ஓடினான். "என்ன மாசானம் மொதலாளி, நீரு பண்ணுனது நல்லதுக்கா, இல்ல கெட்டதுக்கா?" "நீ எப்டி எடுத்துக்கிட்டாலும் சரிதான்." "எதுக்குய்ய அவங்களை மரத்திலே கட்டிவச்சியரு?" "அவங்ககிட்டயே கேளும்." "மொதலாளி இப்டிப் பேசப்படாது. அப்புறம் தங்கப்பல்லு கட்ட வேண்டியதிருக்கும்." "ஏல பறப்பயல..." ஒரு 'ஜாதி' விவசாயக் கூலி, மாசானத்துக்குப் பதிலளித்தான். "பறப்பய கிறப்பயன்னு பேசுனா, பல்ல ஒடச்சி கையில கொடுப்பேன்! எதுக்குவே அவங்கள கட்டி வச்சியரு? ஏண்டா, கூலிப்பயலுவளா - நாளைக்கி ஒங்களையும் இவன் இப்டி கட்டி வைக்கமாட்டான் என்கிறது என்ன நிச்சயம்? ஒங்க கண்ணையே நீங்க குத்திக்கலாமாடா?" மாசானம் ஆட்கள் கைகலப்புக்குத் தயாராக வேல் கம்புகளைத் தரையில் குத்திப் பார்த்தார்கள். ஆனால் மாசானம் விட்டுக் கொடுப்பது போல் பேசினார். கோர்ட் வழக்குன்னு எவன் அலைவான். இவனுகள குளோஸ் பண்றது தெரியாம பண்ணனும். சிமெண்ட்ல கலக்கது தெரியாம கலக்கது மாதுரி. "நான் மாடா ஒழைத்து, இந்த நிலத்த வாங்கிப் போட்டிருக்கேன். கடன் வாங்கி நிலம் வாங்கியிருக்கேன். வாங்குன கடனுக்கு வட்டிகூட கொடுக்க முடியல. இவன் வெள்ளாமையில முக்கால்வாசி கேக்கான். நியாயமா? நீங்க சொல்லுங்க! ஏல, வேல் கம்புவள கீழ போடுங்கல. பயித்தியக்காரப் பய மவனுவளா... சொல்லுங்கப்பா..." "நியாயமோ, அநியாயமோ? நீரு எப்டி அவங்களை கட்டி வைக்கலாம்?" நிலைமையை எப்படிச் சமாளிக்கலாம் என்று மாசானம் யோசித்துக் கொண்டிருந்த போது, குமாரும், மாணிக்கமும் வந்து, மாசானம் பக்கத்தில் வந்து நின்று கொண்டார்கள். பரமசிவமும், ஜம்புலிங்கமும், கதிர்வேல் பிள்ளையும் கூடிவிட்டார்கள். சின்னான், நான்கைந்து சேரி ஆட்களுடன் அங்கே வந்தான். பிச்சாண்டிக்கு, குமாரைப் பார்த்ததும், தன் தம்பியைப் பார்ப்பது போல் இருந்தது. படித்த பையன். வார்த்தைக்கு வார்த்தை, 'சித்தப்பா சித்தப்பா' என்பவன். ஒரு தடவை, 'ஒரு நல்ல சிலாக் சட்டயா வாங்கிப் போடும் சித்தப்பா' என்று சொன்னவன். பிச்சாண்டியால் விம்மலை அடக்க முடியவில்லை. கேவிக்கொண்டே முறையிட்டான். "குமார் நீயே சொல்லுப்பா! எங்கள அடி அடின்னு அடிச்சி இந்த மரத்துல கட்டிவச்சிட்டாரு. நீ கூட அன்னிக்கி மேடையில பேசும்போது, 'சர்க்காரோட நிலச் சீர்திருத்தத்த அமல் பண்ணணுமுன்னு பேசலியா? சர்க்கார் கொடுக்கச் சொன்னத கேட்டது தப்பா? நீயே சொல்லு குமார்! நீ என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன்!" குமார் பிச்சாண்டியைக் கடுமையாகப் பார்த்தான். பார்த்துக்கொண்டே கேட்டான்: "ஒமக்கு இது பத்தாது. கலகக்காரப் பயலுவ பேச்சக் கேட்டு ஆடுற ஒம்மை... என்ன பண்ணுனாலும் தகும்!" பிச்சாண்டி, அதிர்ச்சியோடு குமாரைப் பார்த்தான். இந்த மாதிரியான கடுமையை அவன் எதிர்பார்க்கவில்லை. அப்படியானால், வழியில் பார்க்கும் போதெல்லாம், தன்னை அவன் 'சித்தப்பா சித்தப்பா' என்று அழைத்ததெல்லாம் தாசி, தன்னிடம் வருபவனை, 'அத்தான்'னு சொல்றது மாதுரியா? பிச்சாண்டி, குமாரை அதிர்ச்சியோடயே பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான். சின்னான் பவ்யமாகப் பேசினான்: "பிச்சாண்டி மொதலாளி, அவரு இப்போ தலைவரு... ஒன்கிட்ட ஒரு ஓட்டுதான் இருக்கு." குமார், அனல் கக்க சின்னானைப் பார்த்துக் கத்தினான்: "சின்னான், நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டேன். எல்லையை மீறுற. ஒங்க ஜனங்கள கெடுத்துட்டு, எங்க ஜனங்களையும் கெடுக்கப் பாக்றது ஒனக்கு நல்லதா முடியாது!" "எங்க ஜனங்கன்னா என்ன அர்த்தம் குமார்! இந்த பிச்சாண்டி ஒங்க ஜனம்! அவரக் கட்டிவச்சது ஒங்க ஜனம்! விடுவிச்சது எங்க ஜனம்! பிச்சாண்டி முதலாளி இப்போ சொல்லும். நீரு எங்க ஜனமா? அவங்க ஜனமா?" நிலைமையை கதிர்வேல் பிள்ளை வேறு திசைக்குத் திருப்பப் பார்த்தார். "சேரி ஜனங்க பேச்சக் கேக்காதியடா. பள்ளுப் பறையங்களுக்கு இடங் கொடுக்காதியடா. அப்புறம் நரிக்கு நாட்டாம கொடுத்தால் கிடைக்கு ரெண்டாடு கேட்ட கதயா முடியும். ஏ, மாசானம்! ஒனக்கு அறிவிருக்கா? அவன இப்படியா கட்டி வைக்கது? சீ... நீயில்லாம் மனுஷனா..." பரமசிவமும் தன் பாட்டுக்குப் பேசினார்: "மாப்புள்ளக்கி முன்யோசனையே கிடையாது. இந்தப் பிச்சாண்டி யாரு? நம்ம பல்லையே நாம குத்தி நாத்தம் பாக்கலாமா? நீரு பண்ணுன அக்கிரமத்துக்கு கோயிலுக்கு ரெண்டு தேங்கா அபராதம் போட்டிருக்கு." கதிர்வேல் பிள்ளை, புதிர்வேல் பிள்ளையாகப் பேசினார்: "வீடு ரெண்டுபட்டா கூத்தாடிக்குத் தொக்குடா. எல்லாத்தையும் ஊர்ல போயி கேட்டுக்கலாம். வெள்ளாமய எப்டிப் பிரிக்கதுன்னு ஊர்ல போயி தீத்துக்கிடலாம்." ஜாதி விவசாயக் கூலிகளில் ஒரு சிலர், கொஞ்சம் சத்தம் போட்டே கேட்டார்கள். "அதெப்டி, வயலு விவகாரம் வயலுலயே தீரணும். எங்க ஜனம் - ஒங்க ஜனமுங்ற கத வேண்டாம். சின்னான் சொன்னதுல தப்புல்ல. ஒங்க ஜனம் - எங்க ஜனங்குறதுல்லாம் ஊர ஏமாத்துற வேல." பெரும்பாலான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பேசாமல் நின்றார்கள். பிரச்சினை வகுப்புவாதமாகி விடக்கூடாது என்பதற்காக, சின்னானும் விட்டுக் கொடுத்துப் பேசினான். "சரி போகட்டும். மாசானம் பிச்சாண்டிய கட்டி வச்சதுக்காக வெள்ளாமையில அவருக்குக் கால்வாசி தான் கொடுக்கணும். மீதி பிச்சாண்டிக்குப் போகணும். இல்லன்னா வம்புதான்." கதிர்வேல் பிள்ளை கறாராகப் பேசினார். இந்தப் பள்ளுப்பறை எதிர்ப்பை மாசானம் - பரமசிவம் வகையறாக்களால் தாங்க முடியும். நம்மளால முடியுமா? ஒத்த வீட்டுக்காரன்... இவனுவளயும் நாம பைக்குள்ள போட முடியாட்டாலும், கைக்குள்ள போட்டுக்கணும். "சரி மாசானம், நீ விட்டுக் கொடு. கடவுள் ஒனக்குக் காண்டிராக்ட்ல கொடுப்பாரு." மாசானம், மௌனச் சம்மதத்தோடு இருந்தார். பரமசிவம் பொதுப்படையாகப் பேசினார்: "ஆமாம். கதிர்வேல் பிள்ள சொன்னது மாதுரி - மாப்பிள்ள செய்திடணும். பிச்சாண்டி, ஒமக்கு முக்கால் பங்கு நெல்லு வர மச்சான் ஜவாப்பு. சரி, எல்லாரும் போயி வேலயப் பாருங்க. என்ன சின்னான், நீயும் ஒரு நஞ்சை வாங்கிப் போடப்படாதா..." சின்னான் வினயனானான். "எனக்காக வாங்காட்டாலும், பிறத்தியாருக்காக வாங்கணுமுன்னு தான் இருக்கேன். நேரம் வராண்டாமா?" அவன் சொன்னதை பரமசிவம் புரிந்து கொண்டது போலவோ, புரியாதது போலவோ காட்டிக் கொள்ளவில்லை. சிரித்துக் கொண்டார். பெரும்பாலானவர்கள் போய்விட்டார்கள். சின்னானைச் சுற்றிப் பல விவசாயக் கூலிகள் சூழ்ந்தார்கள். ஒரு ஜாதிக் கூலி, திட்டுவது மாதிரி பேசினான். "ஒனக்கு தைரியம் போதாது சின்னான். குமார் பயல நாக்கப் பிடுங்கிச் சாகிற மாதிரி கேட்டிருக்கணும். நாங்க உயிரோட இருக்கிற வரைக்கும் ஒன் மேல ஒரு துரும்புகூட விழாது!" சின்னான் லேசாகச் சிரித்தபோது, இன்னும் குன்னிப் போய் நின்ற பிச்சாண்டி, சின்னானின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விம்மினான். சின்னான், அவனுக்கு ஆறுதல் சொன்னான். "அழாதிங்க. நாம் அழ வைக்கிறவங்கள அழ வைக்கிறதுக்காவ பிறந்தவங்க. நாமே அழுதால் எப்படி?" பிச்சாண்டி தன் கண்ணீரை, வெட்டரிவாள் வீச்சுப் போல் சுண்டிவிட்டான். |