12

     ஆண்டியப்பனுக்கு மாட்டுப் பிரச்சினையோடு வீட்டுப் பிரச்சினையும் வந்தது. அவன் புறம்போக்கு நிலத்தை 'ஆக்ரமித்து' வீடு கட்டியிருப்பதாகவும், அதை ஏன் இடிக்கக்கூடாது என்றும் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். கோபால், பதிலெழுதிக் கொடுத்திருந்தான். தலைமுறை தலைமுறையாக இருக்கும் வீட்டை இடித்து, அந்த இடத்திலிருந்து தன்னை வெளியேற்ற அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்று அவன் எழுதிய காகிதத்தில் கையெழுத்துப் போட்டு, தாசில்தாருக்கு, கோணச்சத்திரம் போய் தபாலில் போட்டான். ஒரு வாரத்திற்குப் பிறகு, நோட்டீஸிற்கு ஏன் பதிலளிக்கவில்லை என்று தாசில்தார் மீண்டும் கடிதம் போட்டிருந்தார். ஆண்டி, மீண்டும் கோபால் மூலம் பழைய கடிதத்தின் நகலோடு, புதிய கடிதத்தையும் எழுதி, தாலுகா அலுவலகத்திற்கு நேராகச் சென்று, அங்கே இருந்த கிளர்க்கிடம் கொடுத்துவிட்டு வந்தான். நேற்று என்னடாவென்றால், ஒரு நோட்டீஸிற்கும், இரண்டு ரிமைண்டர்களுக்கும் அவன் பதில் போடவில்லை என்றும், நாளைக்கு மறுநாள் விசாரணை என்றும், அவன் போகவில்லையானால், அதற்கு அவனே பொறுப்பென்றும் தாசில்தார் குசலம் விசாரித்து கடிதம் போட்டிருந்தார். அதிர்ஷ்டத்தைப் போல், விசாரணையும் விசாரணையோடுதான் வரும் போலும். தாசில்தாரின் இறுதிக் கடிதம் வந்த அதே நாளில், மாவட்டக் கூட்டுறவு அதிகாரியிடம் இருந்து ஒரு விசாரணைக் கடிதம் வந்திருக்கிறது. அதாவது நாளைக்கு மறுநாள் மாடு சம்பந்தமாக விசாரணை இருப்பதாகவும், அவன் மாட்டின் உரிமைக்கான சகல தஸ்தாவேஜுகளுடனும் நெல்லைக்கு வர வேண்டும் என்றும் கடிதம் வந்திருக்கிறது.

     வீடு 'போகமல்' இருக்கப் போவதா? மாடு வருவதற்குப் போவதா? இல்லாததை வரவழைக்க, இருப்பதை விட வேண்டியிருக்குமோ... மாடு பெரிசா? வீடு பெரிசா? ஆண்டியப்பன் தீவிரமாக யோசித்து யோசித்து குழம்பிக் கொண்டிருந்த போது, கோபால் ஒரு யோசனை சொன்னான். அதன்படி, திருநெல்வேலியில் நடக்கும் விசாரணையை ஆதாரம் காட்டி, வீட்டு விசாரணையை ஒத்திப் போடும்படி வட்டாட்சித் தலைவரை 'பணிவன்புடன்' கேட்டுக் கொள்ளும் மனுவை எழுதிக் கொண்டு தாலுகா அலுவலகத்திற்குப் போனான். கோபால் அவனுடன் போகவில்லை. போக வேண்டிய தேவையும் இல்லை. இப்போதெல்லாம் ஆண்டிக்கு 'தாலுகா மட்டத்தில்' தனியாகப் போகும் தெளிவு ஏற்பட்டுவிட்டது. மாவட்ட மட்டத்திற்குத்தான் கோபால் தேவை.

     தாசில்தாரைப் பார்த்துவிட்டு, அப்படியே அரசாங்க ஆஸ்பத்திரியில் சிடுசிடுக்காத ஒரு டாக்டரைப் பார்த்து, கையில் காலில் விழுந்து, தங்கையின் மார்புப் புண்ணுக்கு ஏதாவது மருந்து வாங்கிக் கொண்டு வர நினைத்தான். தங்கையைக் கவனிக்காமல் போனதற்காகத் தவித்தான். இன்னும் இரண்டு நாட்களில், அவளைத் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு போயாவது, ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

     தாலுகா அலுவலகம், 'இழவு வீடு' மாதிரி தலைவிரி கோலமாகக் கிடந்தது. முன்பு தன்னிடம் கடிதத்தை வாங்கிய கிளார்க்கை அடையாளம் கண்டுகொண்டு ஆண்டி, "ஸார், நான் பத்து நாளைக்கு முன்னால ஒரு காகிதம் கொடுத்தேன். தாசில்தார்கிட்ட கொடுத்தியளா?" என்றான்.

     கிளார்க், அவனை 'சம்திங்காகப்' பார்த்தான். பிறகு 'நத்திங்காக' நின்ற ஆண்டியை முறைத்துப் பார்த்துக் கொண்டு 'நீ யாருய்யா?' என்றான்.

     "ஆண்டி."

     "பெரிய கவர்னரு... பேரச் சொன்னதும் ஞாபகம் வந்துடும்..."

     ஆண்டி, ஏதோ சொல்லப் போனான். சொல்லவில்லை. கிளார்க் வந்தது தெரியாமல் போய்விட்டான். அரசாங்கம் என்பது தான் ஒருவனே என்பது மாதிரி, அங்கே எல்லா ஆசாமிகளும் நடந்து கொண்டார்கள். ஆண்டியப்பன் காத்திருந்தான், காத்திருந்தான் - தாசில்தாரைப் பார்க்க முடியவில்லை. பார்க்கப் போனால், 'டாலிக்காரன்' விடுவதாக இல்லை. "என்னவே, தாசில்தார வெறுங்கையோட பார்க்கிறதுன்னா அவ்வளவு லேசா? பையில இருக்கத கொடுத்தா, கையில இருக்கதயும் பார்க்கலாம்..."

     ஆண்டியப்பன் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய அவசரத்தில், தான் கொண்டுவந்த கருணை மனுவை, பியூனிடமே கொடுத்துவிட்டு மடமடவென்று ஆஸ்பத்திரிக்குப் போனான். 'பிஸியயே டிஸ்ஸீஸாகக்' கொண்ட டாக்டர்களிடம் பேச அவனுக்குக் கூச்சமாக இருந்தது. எப்படியோ ஒருவரைப் பார்த்துக் கேட்டான். அவர், "யோவ்... பேஷண்ட் பார்க்காம எப்டிய்யா மருந்து கொடுக்க முடியும்" என்று கோபமாகச் சொல்லிவிட்டு, அருகே இருந்த ஹவுஸ் சர்ஜனிடம், "இன்னும் கிராமம் திருந்தலன்னு சொன்னா நம்பமாட்டேன்னு சொன்னீங்க. இப்போ ஓட் இஸ் யுவர் ரிப்ளை" என்றார். பிறகு இருவரும் ஆங்கிலத்தில் எதையோ பேசி, சிரித்தார்கள். ஆதார மனிதனாக இருக்க வேண்டிய ஆண்டி, அங்கே 'ஆதாரமாக்'கப்பட்டான்.

     ஆஸ்பத்திரி என்ற அந்த மயான பூமியில் இருந்து, கூனிக்குறுகி ஆண்டியப்பன் வெளியே வந்தான். விடுவிடென்று நடந்தான்.

     கோணச்சத்திரத்தைத் தாண்டி ஊர்ப்பக்கம் வந்த போது, தங்கம்மா தலையில் புல்லுக்கட்டுடன் போய்க் கொண்டிருந்தாள். ஆண்டியப்பன் வேக வேகமாக நடந்து அவளோடு இணையாக நடந்தான். தங்கம்மா வேறுபுறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள்.

     "தங்கம், என்கூட நடக்கக்கூடப் பிடிக்கலியா? ஏன் பேசமாட்டக்கே தங்கம்?"

     "தங்கம்மா, அப்பனோட செத்துட்டாள். இப்ப இருக்கவா - இன்னொருத்தி."

     "செத்தவ, என்னையும் சாகடிச்சிட்டு செத்திருக்கலாம்."

     தங்கம்மா பதிலளிக்கவில்லை. முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. துக்க எள், துளிர் விட்ட முகம், மங்கலான பார்வை, பிணத்தில் உயிர் ஒன்று, வெறும் ஜட இயக்கத்துக்காக மட்டுமே இருப்பது போன்ற அசைவுகள். கோபப்படப் போன ஆண்டி, அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டுப் பேசினான்.

     "தங்கம், ஒனக்குக் கல்யாணமுன்னு கேள்விப்பட்டேன். நிசமா சொல்லு தங்கம்?"

     "அம்மா..."

     "சொல்லு."

     "அம்மா ஏதோ துப்புப் பார்த்துக்கிட்டு இருக்கா..."

     "ஒனக்கு இதுல சம்மதந்தானா?"

     "எங்கய்யா, என் சம்மதத்தோடயா இறந்தாரு? எல்லாம் நம்ம சம்மதப்படியா நடக்கு? நடக்கதுல்லாம் சம்மதமுன்னு நினைச்சாத்தான் வாழ முடியும்!"

     "அப்படின்னா ஒம்மா சொல்லுத மாப்பிள்ளைக்கி கழுத்த நீட்ட தயாரா இருக்க... அப்படித்தான?"

     "அய்யாவக் கொன்னவ நான். அவர கொன்ன ஊர்ல இருக்கப்படாது. இந்த ஊர விட்டு எங்கேயாவது ஓடிப் போவணும்; எப்டி ஓடிப் போனாலும் சம்மதந்தான்!"

     "அப்படின்னா ஒண்ணு செய்! வீட்டுக்குப் போய் ஒரு அருவாள கொண்டு வாரேன் - ஒன் கையால என்ன வெட்டிடு."

     "எனக்கு நேரமாவுது. அம்மா தேடுவாள். அய்யாவோட சமாதில போயி தங்கரளிப்பூவ வைக்கணும். இன்னைக்கி செவ்வாக்கிழம."

     "என் சமாதிக்கும் ஒரு தடவயாவது வந்து... ஒரு பூவ வச்சிட்டுப் போ! முடியுமுன்னால் ஒன் புருஷனோட வேணுமுன்னாலும் வா."

     ஆண்டியப்பன் வெறிபிடித்தவன் போல் நடந்தான். தங்கம்மா புல்லுக்கட்டை அங்கேயே போட்டுவிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அசையாமல் ஸ்தம்பித்து உட்கார்ந்து இருப்பது தெரியாமல், அவளைத் திரும்பிப் பாராமலே நடந்தான்.

     ஆவேசம அனலாக, மனம் போன போக்கில் நினைத்து, கால் போன போக்கில் நடந்து, கண் நோக்கிய காட்சிகளைக் காணாமல், நடந்து கொண்டிருந்த ஆண்டியப்பன், திடீரென்று, லேசாக நடையைத் தளர்த்தினான். அவன், அமைச்சர் கரம் பட வாங்கிய, அந்த ஜெர்ஸி இன கலப்புப் பசுமாடு, அவனைப் பார்த்துத் தலையைச் சற்றே நிமிர்த்தி, 'ம்மா... ம்மா...' என்றது. பழைய மீசைக்காரன், அதன் மடுவைப் பிசுக்கி, பால் கறந்து கொண்டிருந்தான்.

     அருகே மல்லிகாவும், பரமசிவத்தின் புத்திரிகளும் வாயளந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, அந்தப் பக்கமாக வராத ஆண்டியப்பன் அப்போது அங்கே நடந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு ஓரளவு பயந்து வாயடைத்து நின்றார்கள். பரமசிவத்தின் வீட்டு மாடியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த குமாரும், மாணிக்கமும் கீழே வரப் போவதை நினைத்து, அந்தப் பெண்கள் ஓரளவு ஆறுதலடைந்தபோது, அந்தப் புறநானூற்றுப் போர்வீரர்கள், இறங்கிய படிக்கட்டில் அப்படியே நின்றார்கள். ஆண்டி ஏதாவது பண்ணிவிட்டால்...

     'தோள் கண்டார் தோளே கண்டார்' என்று கம்பன் சொன்னதுபோல், ஆண்டியின் கண்களில் அந்தப் பசுமாடு மட்டுமே விழுந்தது. சொந்தமாகி, சொந்தமில்லாமல் போன அந்த மாட்டை, அவன் பார்த்துக் கொண்டே நின்றபோது, மாட்டின் வால் நுனியைப் போல் மீசை வைத்திருந்த அதே மிசைக்காரன், மாட்டை அவிழ்த்துக் கொண்டு வீட்டின் பின்பக்கமாகப் போனான்.

     இப்போது அந்தப் பெண்களும், மெல்ல நடந்து, பிறகு வேகமாக நடந்து மாடிப்படியில் ஏறி, அங்கே நின்ற மன்மதர்களோடு சேர்ந்து கொண்டார்கள். மணப்பெண்கள், மாப்பிள்ளைகளுடன் திருமணத்திற்கு முன்பு சேர்ந்து நிற்கக்கூடாது என்ற மரபை மீறி, ஆபத்துக்கும் ஆண்டிக்கும் தோசம் இல்லை என்பது போல் 'அவர்கள்' அங்கே போனார்கள்.

     ஆண்டியப்பன், அந்த மனிதப் பிறவிகளை நினையாமல், மாட்டுப் பிறவியை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்ததால், பிறவி எடுத்ததன் பொருள் புரியாதவன் போல் வீட்டுக்கு வந்தான்.

     அவன் தனது வெறுங்கைகளைப் பின்னிக் கொண்டு விழிகளை உருட்டி, வழி புரியாமல் தவித்தபோது, தரையில் தலைவிரிகோலமாய், மார்புக் கட்டிகளின் குத்தூசிக் குத்தலில் பல்லுடன் முனங்கலையும் சேர்த்துக் கடித்துக் கொண்டிருந்த மீனாட்சி, அண்ணனின் சொல்லாத நிலையை, கேளாமல் கேட்டவள் போல், தன் கைகளை மார்புப் பக்கம் கொண்டு போனாள். பிறகு, "ஒரு மஞ்சத் துண்டு தா" என்றாள்.

     தங்கை ஏதோ மருந்து கேட்கிறாள் என்று நினைத்து, அவன் செல்லரித்துக் கிடந்த 'அஞ்சறைப் பெட்டிக்குள்' அதைவிட அதிகமாகச் செல்லரித்துப் போன, மஞ்சள் துண்டை எடுத்து, தங்கையிடம் மவுனமாக நீட்டினான். ஐந்து நிமிடம் கழித்து மீனாட்சி, "இத வச்சிக்க" என்று சீட்டுக்கட்டில் உள்ள 'ஆட்டியன்' வடிவத்தில் இருந்த மாங்கல்யத்தை நீட்டினாள். அதிர்ந்துபோன ஆண்டி, தங்கையையே உற்றுப் பார்த்தான். மார்புச் சேலைக்கு மேலே கிடந்த மஞ்சள் கயிற்றுக்கடியில், அந்த மஞ்சள் துண்டு தொங்கியது.

     எதுவும் புரியாமல், எங்கேயோ இருப்பது போல், யாரோ யாருக்கோ, எதையோ கொடுப்பது போல், அவன் கண்ணிருந்தும் பார்க்க முடியாதவன் போல் பார்த்தான். மீனாட்சி, அவனின் கோர மவுடீகத்தை, தன் வீரப் பேச்சால் குலைத்தாள்.

     "வெண்ண திரளும்போது தாழிய உடைக்கப் படாது அண்ணாச்சி. நாளைக்கி நீ விசாரணைக்குப் போய் ஆகணும். இப்போ நான் கொடுக்கிறது நீ - நியாயத்துக்குக் கட்டப்போற தாலி! கட்டுறத கட்டு. அப்புறம் நியாயம்... 'அறுதலியா' நின்னா நிக்கட்டும். அப்டி நிக்காது. இப்போ நான் ஒன்கிட்ட கொடுக்கிற இந்தத் தாலி, அநியாயக்கார பாவியளோட தாலிய அறுக்காம விடாது. ஏன் அண்ணாச்சி கலங்குற? நம்மகிட்ட ரெண்டு இருக்கு. முதல்ல நியாயத்தை வச்சி அடிப்போம்! அது முடியாட்டால்... அருவாள் எங்கே போயிட்டு! இவனுவள எரிக்காம என் சடலம் எரியாது!"

     ஆண்டியப்பன் அவளை பயத்தோடும், பயங்கலந்த வியப்போடும் பார்த்தான். சடலம் கிடலுமுன்னு பேசுறாளே! எதுக்கெடுத்தாலும் அழுகிறவள், இன்னைக்கி ஏன் இப்டிப் பேசுறாள்? முகம் ஏன் இப்டி காளியாத்தா மாதுரி கோரமா இருக்கு? கண்ண ஏன் இப்டி உருட்டுறாள்?

     "வாங்குறியா... இல்லையா?"

     மீனாட்சியின் அதட்டலுக்குப் பயந்தவன் போல், அவன் மறுமொழி கூறாமல், அந்தத் தாலியை பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான். கால்பவுன் தங்கம். அவள் கழுத்துக்கு வேலியாக இருந்த லிங்கம் பொறித்த அந்தத் தாலி, வேலிக்குள் அடைபட்ட நீதியை, அந்நீதிக்குள் அடைபட்ட மாட்டை மீட்கும் சூலாயுதம் போல் அவனுக்குத் தோன்றியது. என்ன சொல்வதென்று புரியாமல், தன்னையே நோக்கிய தங்கையை, தானும் நோக்கி, அவளின் இதுவரை காணாத அசாத்தியமான பார்வைக் கூர்மையால் பட்டை தீட்டப்பட்டவன் போல், அவன் கண்கள் ஜொலித்தபோது காத்தாயி வந்தாள்.

     "இந்தாரும் பத்துரூபா... சின்னான உருட்டி மிரட்டி வாங்குனேன். அதிகாரிவளப் பாத்து பயப்படாதயும்! முக்கால்வாசிப் பேர ஒரு கோழி முடியக் காட்டி மிரட்டினாக் கூட பயந்துடுவாங்கன்னு சின்னான் கிறுக்கன் சொல்லுதான். அநியாயக்காரங்களுக்கே பயப்படுறவங்க, நியாயக்காரனுக்கு நிச்சயமா பயப்பட்டுத்தான் ஆகணும். சும்மா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசும். ஏன் பணத்தை வாங்காம பாக்கியரு..."

     ஆண்டி, அந்த பத்து ரூபாயை வாங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டான். மீனாட்சியை அர்த்தத்துடன் பார்த்த போது, அவள், "என் கழுத்துக்குக் காவலா இருந்தது. ஒன் கைக்குக் காவலா இருக்கட்டும்" என்றாள்.

     பொழுது புலர்ந்தது. எஞ்சினீயரிங் டிப்ளமாக்காரன் கோபால் காலையிலேயே பெட்டி படுக்கைகளோடு வந்தான். "உம், புறப்படு டயமாயிட்டு" என்றான்.

     "பெட்டி படுக்கையோடு வந்திருக்கே!"

     "அப்புறமா பேசலாம். புறப்படுப்பா... நாம ஆபீஸருங்களுக்குக் காத்திருக்கலாம். ஆபீஸருங்க நமக்காகக் காத்திருக்க மாட்டாங்க."

     ஆண்டியப்பன் தங்கையிடம் கண்களால் விடைகேட்டான். மீனாட்சி, விழிகளை ஆட்டி, ஆகாயத்தில் இருக்கும் சாமியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்ட போது, "இன்னைக்கு மட்டும் பொறுத்துக்க. நாளைக்கு அண்ணாச்சி, ஒன்ன எப்டியும் ஆஸ்பத்திரியில சேத்துடுதேன்" என்று சொல்லிவிட்டு, சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். கோபால், அவன் கையை ஆதரவாகப் பிடிக்க, இருவரும் புறப்பட்டார்கள்.

     பள்ளிக்கூடத்தின் அருகே வந்த ஆண்டியப்பன் மீண்டும் தங்கையைப் பார்த்துவிட்டு வர நினைத்தவன் போல் நின்று, திரும்பப் போனான். இதற்குள் அங்கே இடும்பன்சாமியும், பிச்சாண்டியும், இன்னும் சிலரும் ஆசாரிப் பையன் ஆறுமுகமும் வந்தார்கள். சஸ்பெண்டிலேயே இன்னும் காலத்தைக் கழிக்கும் இடும்பன்சாமி, சத்தம் போட்டுக் கத்தினார்.

     "விட்டுக் கொடுத்துடாதடா... செறுக்கி மவனுவள செருப்பால அடிக்கணும்."

     "ஒம்ம விஷயம் என்னாச்சி?"

     "எனக்காவ சப்போர்ட் பண்ணுன ரெண்டு பேரையும் நேத்து சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்களாம். பாத்துப்புடலாம். இத விடப் போறதில்லை. நீயும் விடப்படாது. மாட்ட வாங்கித்தான் ஆகணும். போன வருஷம் பிச்சாண்டி பேர்ல வாங்குன மாட்ட இவன்கிட்டயே திருப்பிக் கொடுத்துட்டேன். வேணுமுன்னால், இவங்கிட்டேயே கேளு. ஏல... பிச்சாண்டி, நல்லது செய்ததையும் சத்தம் போட்டுச் சொல்லணுமில்ல."

     பிச்சாண்டி சத்தம் போட்டே சொன்னான்.

     "சின்னய்யா சொன்னது வாஸ்தவந்தான். இதே மாதிரி ஒன் மாடும் வீட்டுக்கு வரணும். தேவடியா மவனுவ தாஜா பண்ணப் பாப்பாங்க. நம்பிடாத. நான் நம்பி மோசம் போனேன்! எனக்கு வெள்ளாமையில முக்கால் பங்கு தாரதா பரமசிவம் 'விலக்கு'த் தீர்த்தான். கடைசில இருபது மூட்ட நெல்ல பத்து மூட்டயா கணக்குக் காட்டி முக்கால் பங்க வாங்கிக்கச் சொல்லுதாணுவ. கொல நடக்கப் போவுது பார்."

     ஆசாரிப் பையன் ஆறுமுகமும், தன் பங்குக்கும் பேசினான்:

     "குமாரு பரமசிவம் வகையறா திருநெல்வேலிக்கு டாக்ஸியில போறானுவ! செறுக்கி மவனுவள ஒரே வெட்டா வெட்டணும். அவனுங்களோட எங்க தட்டாசாரியயும் தீயில போட்டு புடம் போடணும்."

     இதற்குள் கூட்டம் கூடிவிட்டது. பரமசிவம் சொந்தக்காரர் ஒருவர், ஆசாரிப் பையனைப் பார்த்து "ஏல ஆசாரி! வார்த்தய அளந்து பேசுல! இல்லன்னா செருப்படி படுவ - படுவாப் பயல! யாரல செறுக்கி மவன்னு சொல்லுத? இன்னொரு தடவை சொல்லு பார்க்கலாம்!"

     கூட்டத்தில் நின்ற இன்னொருவன் இடும்பன்சாமியைத் தடுத்துவிட்டுப் பேசினான்:

     "நான் சொல்லுதேன்! பரமசிவம் செறுக்கி மவன்! குமார் தேவடியா மவன்! இப்போ உன்னால ஆனதப் பாரு."

     சொன்னவர், "நான் எதுக்கு சொன்னேமின்னால்..." என்று இழுத்தபோது, இடும்பன்சாமியை இப்போது, ஒரு நடுத்தரப் பெண்மணி - தெய்வானை தடுத்துவிட்டு, "ஏல, சுடல! மரியாதியா போ! இல்லன்னா நானே ஒன் தலையில சாணியக் கரச்சி ஊத்துவேன்! ஒன் பரமசிவம் ஊர குத்தகையால எடுத்திருக்கான்? பிச்சாண்டிக்கு சொன்னபடி கொடுத்தானா? இந்த ஆண்டிப்பயல என்ன பாடு படுத்துறான் பாத்தியா? மரியாதியா போ - இல்லன்னா..."

     ஆண்டியப்பன் அவர்களை நேராகப் பார்த்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டான். கோபால் மட்டும் கூனிக் குறுகி நிற்பது போல் தோன்றியது.

     இருவரும் ஊரைக் கடக்கும்போது, சிநேகித பாவமான முகங்கள் தெரிந்தன. டீக் கடைக்காரர் ஒருவர் "டீ சாப்புடுங்கடா" என்றார்.

     ஆண்டியும் கோபாலும் கோணச்சத்திரம் வந்து, 'கட்டபொம்மனுக்'குள் புகுந்தார்கள்.

     'கூட்டுறவே நாட்டுயர்வு' என்ற போஸ்டர் பளபளப்பான பளபளப்புடன் ஜொலிக்க, சன்மைக்கா போட்ட மேஜை, வழவழப்பான வழவழப்புடன் மினுக்க, வல்லவர்களுக்கு 'யெஸ்' போட வேண்டும் என்பதாலோ என்னவோ ஆங்கில 'எஸ்' எழுத்தின் வடிவத்தில் அமைந்த நாற்காலியில், மாவட்ட அதிகாரி உட்கார்ந்திருந்தார்.

     எதிரே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் 'பழைய பஞ்சாயத்து' பரமசிவம், கூட்டுறவு சங்கத் தலைவர், குமார், மாணிக்கம், மாசானம் உட்கார்ந்திருந்தார்கள்.

     "நீங்கதான் மினிஸ்டர்கிட்ட சொல்லி, எனக்கு..." என்று பேசிய அதிகாரி, ஆண்டியப்பனும், கோபாலும் அங்கே வந்து நிற்பதைப் பார்த்துவிட்டு, தனது 'டெபுடேஷன்' முயற்சி, அங்கேயே அவுட்டானதுபோல், கண்களை இமைகளுக்கு வெளியே அவுட்டாகி அவர்களை அதட்டினார்.

     "நீங்க யாரு?"

     "என் பேரு கோபாலு! இவரு ஆண்டியப்பன் - விசாரணைக்கு வந்திருக்கார்."

     "ஒங்களைப் பார்த்தா படிச்சவர் மாதுரி தெரியுது. மானேர்ஸ் வேண்டாம். முதல்ல வெளில போய் நில்லுங்க. சீட்டுக் கொடுத்து அனுப்புங்க. கூப்பிட்ட பிறகு வாருங்க!"

     ஆண்டியப்பனும், கோபாலும் வெளியே போய் நின்று கொண்டார்கள். உள்ளே கிரஷ் பாட்டல்கள் உடைக்கும் சத்தம் கேட்டது. குடிக்கும்போது ஏற்பட்ட 'விக்கல்' கேட்டது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் உள்ளே அழைக்கப்பட்டார்கள். மாவட்ட அதிகாரி விசாரணையைத் துவங்கினார்.

     "நீங்க கோபாலா? உங்களை நான் கூப்புடலியே... வெளியே போங்க."

     'இவங்க மட்டும் எப்படி வரலாம்' என்று கேட்கப் போன கோபால், கோபத்தை அல்லது பயத்தை அடக்கிக் கொண்டு, ஆண்டியப்பனுக்கு மட்டும் கேட்கும் வகையில், "நான் பஸ் ஸ்டாண்ட்ல நிக்கேன். நீ வா" என்று சொல்லி விட்டு வெளியேறினான். அவன் வெளியேறுவது வரைக்கும் பேசாமல் இருந்த அதிகாரி விசாரணையைத் துவக்கினார்.

     "ஏய்யா... இவருதான் ஒன் மாட்ட பிடிச்சாரா?"

     ஆண்டி அவர்களை நோட்டம் விட்டான். விசாரணையின் பிரதிவாதி உட்கார்ந்திருக்கிறார். வாதி நிற்கிறான். அநியாயம் அமர்ந்திருக்க நியாயம் நிற்கிறது. அவன் கோபத்தை அடக்கிக் கொண்டே பதிலளித்தான்:

     "இவரு அதுதான் இந்தப் பரமசிவம்..."

     "கேள்விக்கு பதில் சொல்லுய்யா... மாட்டப் பிடிச்சது யார்?"

     "இவரு ஆள் வச்சி..."

     பரமசிவம் எகிறினார்.

     "இவனும் இவன் மாமனும் சண்டை போடுறது மாதுரி போட்டு, மாட்டை எங்கேயோ வித்துட்டு என் மேல பழியை போடுறான். இவனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்ட பாவத்துக்காவ நான் கூட்டுறவு சங்கத்துல பணத்தக் கட்டி தொலைக்கேன். இனிமேல இவன் இவ்வளவு பேசுன பிறகு நான் பணம் கட்டுறது, அபராதம் கட்டுறது மாதுரி கட்ட மாட்டேன் - கட்டவே மாட்டேன்! சர்க்கார் கடனை ஏப்பம் விடப் பாக்குறான்."

     அதிகாரி பரமசிவத்தை கையமர்த்தி, அபயம் அளித்துவிட்டு, ஆண்டியை, அபாயமானவன் போல் பார்த்துக் கொண்டு அதட்டினார்.

     "மாட்டைப் பிடிச்சது யாரு?"

     "அடைக்கலசாமி!"

     "அவர் எங்கே?"

     "செத்துட்டார்."

     "டெத் சர்ட்டிபிகேட் கொண்டு வந்திருக்கியா..."

     "எங்க ஊரு தலைவருங்க இதோ இருக்காங்க கேளுங்க."

     "இது ஆபீசா... வீடா... எனக்கு அடைக்கலசாமி இறந்துட்டார்னு ரிக்கார்ட் வேணும். அப்புறந்தான் மேற்கொண்டு விசாரிக்க முடியும். அதோட இவருதான் மாட்ட பிடிக்கச் சொன்னார்னு நீ நிரூபிக்காவிட்டால், இவரு ஒன்மேல மானநஷ்ட வழக்குப் போட்டால், நான் பொறுப்புல்ல. நாலையும் யோசித்து அடுத்த மாசம் மூணாந் தேதி வா!"

     ஆண்டியப்பனால் மேற்கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை.

     ஆறுமாத காலமாக அடக்கி வைத்திருந்த ஆவேசம், இன்னொரு ஆண்டியப்பனாக உருவெடுத்தது. பழையவன் செத்து புதியவன் பிறந்தான். அங்கே செத்துக் கொண்டிருந்த நீதி இவனுள் வந்து துடித்தது.

     "அட நிறுத்துய்யா... நீயும் ஒன் விசாரணையும்! ஒன்னை மாதுரி பொட்டப்பயலுவ ஆபீஸரா ஆனதால தான், இப்போ நியாயமும் பொட்டையாயிட்டு! ஊர்ல வந்து விசாரிக்காம, மின்சார விசிறிக்குக் கீழே நீதி வழங்குற ஒங்கள மாதுரி அயோக்கியங்களால... இப்போ யோக்கியனும் - அயோக்கியனாய் ஆகலாமான்னு யோசிக்கான். நல்லா கேளுய்யா... என்னை இந்த சட்டத்துல நம்பிக்கை இல்லாம பண்ணிட்டிய! சட்டத்துல இருக்கற ஓட்டையில அயோக்கியன் தப்பிக்கிறான். ஏழை அந்த ஓட்டையில கட்டி இருக்கிற விசாரணை என்கிற தூக்குக் கயிறுல தொங்குறான். ஒம்மகிட்டப் பேசிப் பிரயோஜனம் இல்ல! ஒம்ம பேச வெக்கிறவங்கள, பேச முடியாத இடத்துக்கு அனுப்பிட்டால் நீரும் பேசாமல் இருப்பியரு. ஏய், மாசானம், பரமசிவம் ஒங்களத்தாண்டா... குமார், மாணிக்கம், நீங்கல்லாம் ஊருக்கு வாங்க! அங்கே ஒங்களுக்கு நான் இழவு எடுக்காட்டால் - என் பேரு ஆண்டி இல்லடா... அசிங்கம் பிடிச்ச பயலுவளா!"

     "போலீஸ்! போலீஸ்!" என்று அதிகாரி சன்னமான குரலிலும், மற்றவர்கள் 'வழியில் மடக்குவானோ' என்று நடுங்கிக் கொண்டும் இருந்த போது, ஆண்டியப்பன் ஆவேச வடிவாகி, அதற்குத் தன் உருவமே உயிராகி, அனைத்துமே தூசாகி, அந்த மனிதத் தூசிகளைத் தட்டிவிடுபவன் போல், வேட்டியில் படர்ந்த தூசியைத் தட்டிவிட்டுக் கொண்டே வெளியேறினான்.

     "போலீஸ்ல உடனே சொல்லணும்" என்று குமார் எழுந்தான். எல்லோருமே எழ முடியாமல் எழுந்தார்கள்.