14

     மத்தியான வேளை, சூரியன் நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தான். அக்கினிக் கட்டிகள் ஆங்காங்கே விழுவதுபோல் ஆண்டியப்பனின் வீட்டுக்கு வெளியே கட்டாந்தரை பொசுங்கிக் கொண்டிருந்தது. வீட்டுக்கூரை தீப்பிடிப்பதுபோல் சிவந்து கொண்டிருந்தது. வலியைக் கடிப்பதுபோல் மீனாட்சி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள். காத்தாயி, அவள் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒட்டடைக் கம்பு மாதிரி உடம்பும், அந்தக் கம்பு முனையில் உள்ள குஞ்சம் போல தலையும் கொண்ட குழந்தை, காத்தாயியின் மார்பு முனையை, பசுமாட்டின் மடுவை முட்டி முட்டிக் குடிக்கும் கன்றுக்குட்டி போல, லேசாக தலையைத் தூக்கியது. பிறகு வலுவிழந்ததுபோல, தலையைக் காத்தாயியின் வலது கை மடிப்பில் சாய்த்துக் கொண்டது. அந்தக் குழந்தையையே பார்த்துக் கொண்டு, அதன் பரட்டைத் தலையைச் செல்லமாகத் தடவிவிட்டுக் கொண்டே, காத்தாயி, "எம்மாடி... ரெட்டப்பிள்ள பெத்தவளுவ என்ன பண்ணுவாளுவ" என்றாள். மீனாட்சி பதிலுக்கு ஏதோ பேசப்போனாள். மார்பு வலி அவளோடு பேசாமல் திணறிக் கொண்டிருந்ததால், அவளைப் பார்த்துச் சோகமாகச் சிரித்தாள். விளக்கினாள்:

     "பாலு இல்ல போலுக்கு - ஒங்க மகன் கடிக்கான். ஆ... என்னமா வலிக்கு. பொறுத்துக்க மவராசா! வீட்ல போயி சாப்புட்டுட்டு வாரேன். ராத்திரிக்கு ஒனக்கு நல்லா பாலு கிடைக்கும். ஏன் ராசா அப்டிப் பாக்க? பாலு இல்லியா? இல்லியா கண்ணு... ராத்திரி வரைக்கும் பொறுத்துக்க மவராசா. சேரில ஒன் சவலப்பாடியும் இப்படித்தான் கடிச்சான். நம்மள மாதுரி ஏழைக்கு உடம்புகூட துரோகம் பண்ணுதப்பா. பொறுத்துக்கடா என் மவராசா... என்ன? ராத்திரி வரைக்கும் பொறுக்க முடியாதா... இன்னும் கொஞ்ச நேரத்துல என் வூட்டுக்காரரு வந்துடுவாரு. காசு வாங்கி பாலு வாங்கிட்டு வாரேன் கண்ணு."

     மீனாட்சியின் கண்களில் தோன்றி, கன்னத்தில் உருண்டு மார்பை நனைத்த நீரைப் பார்த்து காத்தாயி திடுக்கிட்டாள்.

     "எதுக்கும்மா அழுவிறிய?"

     "ஒண்ணுமில்ல. எதையோ நினைச்சேன். என்னமோ வருது."

     "அழாத ராசாத்தி! ஆயுசு முழுவதும் அழுதவியளும் இல்ல. சிரிச்சவியளுமில்ல. வேணுமுன்னா பாருங்க இன்னும் கொஞ்ச நாளையில ஒனக்கு ஒரு கொறயும் இருக்காது. இருக்கிற கஷ்டமுல்லாம் பறந்துடப் போவுது பாரு..."

     "எப்ப விடியுமோ, என் தலயில என்ன எழுதியிருக்கோ..."

     "ஒன் அம்மா படுத பாட்ட பாத்தியாடா என் ராசா. பால் கொடுக்க வேண்டியவ கண்ணீர கொடுக்கிறத பாத்தியாடா என் ராசா! இருக்க வேண்டியது இல்லாம, இல்லாமப் போகவேண்டியது இருக்கத பாத்தியாடா கண்ணு. இந்தா, அம்மா கண்ணீர துடடா - அம்மாவ அழாதன்னு சொல்லுடா..."

     காத்தாயி, குழந்தையின் கையை எடுத்து மீனாட்சியின் கன்னத்தில் வைத்துத் துடைத்தாள். தாய்க்காரி குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பிடித்தபடி சிறிது நேரம் அப்படியே லயித்திருந்தாள். பிறகு, "எம்மா... எய்யா... ஏ அண்ணாச்சி... மார்புல வலிக்கே! வலி தாங்க முடியலியே! தாங்க முடியலியே..." என்றாள்.

     காத்தாயி குழந்தையை எடுத்து, பாயில கிடத்திவிட்டு, மீனாட்சியின் தலையைத் தூக்கி, தன் மடியில் வைத்துக் கொண்டாள். சிறிது நேரம் மௌனம். பின்னர் அந்த மௌனமே வலித்ததால் காத்தாயி ஆதரவாகப் பேசினாள்.

     "இனுமயும் பொறுக்கதுல அர்த்தமில்ல. என் வீட்டுக்காரரு மேளத்துக்கு போயிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு. இருக்கிற பணத்த பிடுங்கிக்கிட்டு அவரையும் கூட்டிக்கிட்டு வாரேன். எந்தப் புண்ணியவான் கிட்டயாவது வண்டிய கேட்டு, ஒன்ன ஆஸ்பத்திரில சேத்துடுறோம். கவலப்படாத கண்ணாட்டி! அதுக்குள்ள ஒன் அண்ணாச்சியும் வந்துடுவாரு. இந்த சின்னான் நொறுங்குவான காணுமே..."

     "அண்ணாச்சிய காணுமே காத்தாயி - ஏதாவது..."

     "அவரு சீக்கிரமா வந்தாத்தான் தப்பு. நேரமாவுதுன்னா என்ன அர்த்தம்... அதிகாரிமாரு நல்லா விசாரிக்காவன்னு அர்த்தம்! பாரேன் வேணுமுன்னா மவராசன் மாட்டோடு வந்து நிக்கப் போறாரு - அப்போ நான் போயிட்டு 'செத்த' நேரத்துல வந்துருதேன்."

     மீனாட்சி தலையாட்டி விடை கொடுத்தாள். அப்படித் தலையாட்டியதில் மார்பு வலிக்க முதுகை வளைத்தாள். அவளையே இமை தட்டாது சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த காத்தாயி, அவளை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தவளாய் மடமடவென்று வெளியே போனாள்.

     நெருப்பைக் கக்கும் சூரியன், செந்தணல் நிறத்தோடு, மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. குழந்தை பசி மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆறுமாதப் பிள்ளை, அறுபது வயது கிழத்தோற்றத்தில் அப்படியே கிடந்தது.

     மீனாட்சி அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் கணவன் வேர்க்க விறுவிறுக்க நின்று கொண்டிருந்தான். அவன் அம்மாக்காரி இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு, மகனையும், மருமகளையும் ஒருசேர மிரட்டிக் கொண்டிருந்தாள். அவர்களைப் பார்த்ததும் மீனாட்சி விம்மினாள். விம்மலுடன் தொண்டை சிக்க, வலியுடன் மார்பு சிக்கியது. மாமியார்க்காரி மகனைப் பார்த்து, "கேளேமில... வாயில கொளுக்கட்டயா வச்சிக்கிட்டு இருக்கே. இந்தா பாரு, தாலியக்கூட வித்துத் தின்னுப்புட்டான். நீ உயிரோட இருக்கும்போதே, இவா அறுத்தவா மாதிரி கிடக்கா பாரு. ஒன்ன சீரழிக்கணுமுன்னே வந்து தொலைச்சிருக்கா பாரு..."

     தனக்குப் பிறந்து தொலைத்த பிள்ளையை பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்த சிங்காரம் - அதுதான் மீனாட்சியின் புருஷன் - அம்மாவின் பாசத்தால் உந்தப்பட்டு, "ஒங்கண்ணன் எங்கழா போயிட்டான்? செறுக்கி மவன ரெண்டு கேள்வி கேக்கணுமுன்னு வந்தேன்! நான் போட்ட தாலிய எங்கழா - சொல்றியா... நெஞ்சில மிதிக்கட்டுமா" என்றான்.

     மீனாட்சி அவனை மிரள மிரளப் பார்த்தாள். கண்ணில் நீர் வரவில்லை. காதில் ஏதோ இரைவது மாதிரி இருந்தது. அவர்களைப் பார்த்ததும் ஆளுதவி கிடைத்ததாக நினைத்தவள், இப்போது பட்டமரம் போல் அப்படியே படுத்திருந்தாள். அதை அலட்சியமாய் நினைத்த மாமியார்க்காரி, "இவா சரியான நீலி! கேக்குறத கேளுல! இந்த வீட்ல எவ்வளவு நேரம் நிக்கது?" என்றாள்.

     சிங்காரம், 'கேட்க வேண்டிய' கேட்கக் கூடாததைக் கேட்டான்.

     "நான் இப்ப சொல்லுததுதான் - எப்ப சொல்லததும். இன்னும் பத்து நாளையில, எல்லா நகையோடயும் பொங்கலுக்கு வரவேண்டிய செப்புக் குடத்தோட வீட்டுக்கு வரணும். இல்லன்னா, தாலியயாவது யாருக்கிட்டயாவது கொடுத்துடணும். ஆமாம். சொல்லுறதச் சொல்லிப்பிட்டேன்."

     மீனாட்சியின் மேனி குலுங்கியது. உலகத் துயரையெல்லாம் ஒன்றாகச் சுமந்தவள்போல், நெற்றிப் பொட்டை ஆள்காட்டி விரலால் அழுத்திவிட்டுக் கொண்டே, பிள்ளையையும், அதைப் பிறப்பித்தவனையும் மாறிமாறிப் பார்த்தாள். 'தாலிய வேணுமுன்னா தந்துடுதேன். இந்தப் பிள்ளய கொண்டு போயி காப்பாத்தும்' என்று சொல்ல நினைத்து, அவனைப் பார்க்க நினைத்தபோது, மாமியாரின் குறுக்குப் பார்வை அவள் கண்ணில் முட்டியது. சொல்ல வந்தது நெஞ்சுக்குள்ளேயே நின்றது. இதற்குள், "ஜாலமாழா போடுத. கைகேயி, மூளி, என் பிள்ள என்னைக்கு ஒன் கையப் பிடிச்சானோ - அன்னைக்கே அவன் 'கொலுக்கா' போயிட்டானே. செத்ததுலயும் கணக்கில்லாம, வாழ்ந்ததுலயும் கணக்கில்லாமப் போயிட்டானே" என்று ஒப்பாரி வைத்தபோது, அம்மா, 'மருமகள் கொடுமை' தாங்க முடியாமல் புலம்புவதாக நினைத்த சிங்காரம் "நீ ஏம்மா அழுவுற? ஒன்னத்தாமுழா! ஒன்னால பத்து நாளையில வர முடியுமா - இல்ல இன்னொரு கல்யாணம் பண்ணிக்கட்டுமா" என்றான்.

     மீனாட்சியின் வெறுமை, வலியை வென்றது. கையைத் தூக்கி வாயைப் பேச வைத்தது.

     "நீ கல்யாணம் செய்தாலுஞ் சரி - கருமாதி செஞ்சாலுஞ் சரி. இன்னையோட நான் தாலியறுத்துட்டேன். மொதல்ல போ, போ..."

     சிங்காரம் திகைத்துத் திணறியபோது, மாமியார்க்காரி "இன்னுமால நிக்க... வா போவலாம். என்ன பேச்சு பேசிட்டா பாரு. கழுத, களவாணி முண்ட" என்று சொல்லிக்கொண்டே மீனாட்சியை சூடாகப் பார்த்தாள். பிறகு மகனை, முதுகைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே வெளியேறினாள்.

     சூரியன் சாய்ந்து கொண்டிருந்தது போல், மீனாட்சியும் சாய்ந்து கொண்டிருந்தாள்.

     ஊருக்குள்ளேயே வீடு இருந்தாலும் இப்போது அது தன்னந்தனியான காட்டில் சின்னஞ்சிறிய புதராக மீனாட்சிக்குத் தோன்றியது. மரணப் பாம்புக்குப் பயப்படும் எலிபோல, அவள் மல்லாந்து படுத்தவண்ணம், தன் மேனியைத் தானே நகர்த்திக் கொண்டிருந்தாள். தாளமுடியாத வலி. மீளமுடியாத மார்புப் பாரம். மீட்க வராத ஆட்கள். எலிதான் தோண்டியெடுத்து, மண்ணுக்குள் வளையமாக வைத்து வாசம் செய்யும் இருப்பிடத்திற்குள்ளேயே வந்து நிற்கும் பாம்பைப் பார்த்து, தப்பிக்கத் துள்ளுவதாக நினைத்து, பாம்பின் வாய்க்குள்ளேயே விழுவது போல், அவள் தன்னையறியாமலேயே, தன் உடம்பை நகர்த்தி, நகர்த்தி உயிருக்கு விடை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

     திருநெல்வேலிக்குப் போன அண்ணன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. என்ன ஆனானோ என்ன செஞ்சாவளோ... திடீரென்று வீட்டுக்கு வெளியே ஆசாரிப் பையன் ஆறுமுகமும், சண்முகக் கோனாரும் பேசிக்கொண்டு போவது கேட்டது.

     "அநியாயத்த பாத்தியாடா - காலம் கலிகாலமாப் போச்சு. ஆண்டி, திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட்ல நிக்கும் போது - போலீஸ்காரங்க அடி அடின்னு அடிச்சி, கையில விலங்கு போட்டுக் கொண்டு போயிருக்காங்க பாரு!"

     "போலீஸ்காரங்க போடல கோனாரே! ஆண்டிக்கு விலங்கு போட்டது நாமதான். நம்மளால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நினைச்சிதான், அவரு கையில விலங்கு போட்டிருக்கானுவ. நாமளே விலங்க போட்டிருக்கது வரைக்கும், இப்படிப் பல அநியாயம் நடக்கும் சாமி!"

     "வா, இந்த சின்னானைப் பாத்து ரெண்டுல ஒண்ண கேப்போம்!"

     மீனாட்சி எழுந்திருக்கப் பார்த்தாள். காலை மடக்கிப் பார்த்தாள். கைகளை ஊன்றிப் பார்த்தாள். தலையை அழுத்தித் தாவப் பார்த்தாள். உருண்டு உருண்டு, சுருண்டு சுருண்டு, வெளியே போகப் பார்த்தாள். பேசிக்கொண்டு போனவர்களை அங்கிருந்தபடியே குரல் கொடுத்து, 'இங்க வாங்க... என் அண்ணாச்சிய என்ன பண்ணுனானுவ... சொல்லுங்க... சொல்லுங்க...' என்று சொல்லப் பார்த்தாள். கண்களைக் கழட்டி, அண்ணாச்சி இருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டு வருவதற்கு அனுப்பப் போகிறவள் போல் விழிதெறிக்கப் பார்த்தாள். அவள் விலங்கை உடைக்கப் போகிறவள் போல் கைகளை தரையில் அடித்தாள். அவனை உதைத்தவர்களை உதைக்கப் போகிறவள் போல், கால்களை வெட்டினாள். கழுத்தை ஆட்டினாள். உடம்பு அவள் நினைத்தபடி கேட்கவில்லை. அந்த உடம்பைத் தண்டிப்பவள் போல கைகளை எடுத்துத் தலையில் அடித்தாள். தலைமுடியைப் பிய்த்தாள். முன் நெற்றியில் அடித்தாள். தலையைத் தூக்கித் தூக்கித் தரையில் மோதினாள். கையைத் தூக்கித் தூக்கி முகத்தில் அடித்தாள். அடித்த கையை மீண்டும் தூக்கி, மார்பில் அறைந்தாள். மாறி மாறி அறைந்தா. தலை பொறுத்துக் கொண்டது. முகம் சகித்துக் கொண்டது. முன் நெற்றி விட்டுக் கொடுத்தது. ஆனால் மார்புப் புண் - மார்பகத்தில் தோன்றியிருந்த அந்த எமக்கட்டிகள் -

     அவை விட்டுக் கொடுக்கத் தயாராகவில்லை. அவைகளுக்கும் விடுதலை வேண்டும் போல் தோன்றியிருக்க வேண்டும். எத்தனை நாளைக்கு இந்த ஏழைப் பிராணியிடம் தங்கியிருப்பது? எத்தனை நாளைக்கு மருந்து மாயம் செய்யாமல் தங்களை சீந்தாமல் இருக்கும் இந்த வீட்டில் இருப்பது? தங்களின் முக்கியத்துவத்தை அறியாத அந்த வீட்டில், தங்கள் முக்கியத்துவத்தைக் காட்ட விரும்பின. அவைகளுக்கு ரோஷம் ஏற்பட்டுவிட்டது. ஆவேசமான ரோஷம். அவளைத் தங்களுடன் அப்படியே தூக்கிக் கொண்டு போக நினைத்த துவேஷமான ஆவேசம்!

     உச்சி இரவு - அவளுக்கு உச்சகட்டமான நரகம்.

     நெஞ்சு பிளப்பதுபோல மீனாட்சி துடித்தாள். எமக்குத்தின் இறுதி நிலையில் தவித்தாள். காத்தாயியைக் காணுமே என்று தவித்தாள். அண்ணனுக்குப் பதிலாக அந்த அக்காளைப் பார்த்துவிட்டாவது கண் மூடலாம் என்பதுபோல், கண்களை உயிர்ப்புடன் வைத்திருந்தாள்.

     குழந்தை லேசாக அழுதது. வாயை மேலுங் கீழுமாகக் கொண்டு வந்தது. 'ஏதாவது கொடு' என்பது போல் அவளை ஏக்கத்தோடு பார்த்தது. பால் வார்க்க வேண்டிய குழந்தை, அவளை பாலுக்காகப் பார்த்தது.

     ஒரு ஓரத்தில் துடித்துக் கொண்டிருந்த மீனாட்சி, குழந்தையை நோக்கி ஆவேசப்பட்டவளாய், அணுஅணுவாக நகர்ந்து வந்தாள். மல்லாக்கப் படுத்துக் கொண்டே இரண்டு கால்களையும் கொஞ்சங் கொஞ்சமாக நகர்த்தி, தலையை லேசு லேசாக அசைத்து, முதுகை மெள்ள மெள்ளச் செலுத்தி, குழந்தைக்கருகே நெருங்கினாள். குழந்தையை நெருங்கியதும், லேசாக ஒருக்களித்தவாறு படுத்துக் கொண்டு, ஒரு கையை குழந்தையின் முதுகில் போட்டபோது, கண்ணில் இருந்து, கன்னக்கதுப்பு வழியாக வந்த கண்ணீர், அவள் கழுத்துப் பகுதியில் துளித்துளியாக வந்து தேங்கியது. அந்தப் பிள்ளை - அவள் பெற்ற பிள்ளை, அந்தக் கண்ணீரை, பாலாக நினைத்து உதடுகளை லேசாகக் குவித்துக் குடித்தது. குடித்து முடித்துவிட்டு 'இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும்' என்பது போல் அவளை ஏக்கத்தோடு பார்த்தபோது -

     மீனாட்சி மார்புப் புண்ணின் வலியை வென்றவள் போல், பாசத்தைத் தின்றவள் போல், கைகள் விறைக்க, கண்கள் புடைக்க, நெற்றி சுருங்க, மூக்கில் மூக்குத்திக்குப் பதிலாக, ஒரு சொட்டுக் கண்ணீர் தங்கம்போல் மினுமினுக்க, வலியால் துடிக்காமல் அசைவற்றுக் கிடந்தாள்.