உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
15 ஆண்டியப்பனின் வீட்டிலிருந்து வெளியே வந்த காத்தாயி, சேரிக்குச் சென்று புருஷன் வந்ததும், புருஷனையும் கூட்டிக் கொண்டு வந்து, யாரிடமாவது வண்டி கேட்க வேண்டும் என்று நினைத்தவளாய் நடந்து கொண்டிருந்தாள். கிராமத்திற்கும், சேரிக்கும் இடையே உள்ள 'காவல் சாவடி' போல் காட்சியளித்த சுடலை மாடசாமியின் பாழடைந்த கோயிலுக்கருகே வந்த போது, புதிய சாலைகள் போட்டதாக வெறும் மண்ணை அள்ளிப் போட்டு, அவற்றை பாழ்படுத்தும் மாசானம், யூனியன் அலுவலகத்தில் இருந்தோ அல்லது 'பி.டபிள்யூ.டி' அலுவலகத்தில் இருந்தோ எதிரே வந்து கொண்டிருந்தார். காத்தாயியைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டார். பேச்சில் முந்திக் கொண்டார். "என்ன அம்மாளு, வெயிலுல... வேர்க்க விறுவிறுக்க வாற?" "என்ன பண்றது... யாரயும் தூண்டிவிட்டுட்டு, அப்புறம் எதிரிப் பக்கம் சேர்ந்துக்கிட நான் மேல் ஜாதில பணக்காரியா பிறக்கலிய..." "ஏன் பூடகமாப் பேசுற உடச்சிப் பேசு. பல சமாச்சாரங்களுக்காவ பல வேஷம் போட வேண்டியதிருக்கு. ஆனாலும் இந்த ஆண்டிப்பய மேல எனக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. எங்க சித்தி மவளோட நாத்தினார் சின்ன மச்சானோட பெரியய்யா பேரன் அவன் - நானாடாட்டாலும் சதை ஆடுது." "ஒம்ம பாசத்த வண்டி மாட்ட தந்து காட்டும்." "ஒனக்கில்லாத வண்டி மாடா - என்ன சமாச்சாரம்..." "மீனாட்சி வலில துடிக்குது. ஆஸ்பத்திரில சேக்கணும். என் புருஷன் வந்ததும் அவரயும் கூட்டிக்கிட்டுப் போவணும். ஏன்னா பொட்டச்சிங்க தனியாப் போற காலம் இன்னும் வரலியே." மாசானம் யோசித்தார். அவளோடு 'வினையாக' விளையாட வேண்டும் போலிருந்தது. கொஞ்சம் பயமாயும் இருந்தது. பரவாயில்ல - பட்டும் படாமலும் பேசலாம். வம்பு வந்தால் வேல் கம்பு இருக்கு. அதைவிட கூர்மையான போலீஸ் செல்வாக்குள்ள குமார் இருக்கான். பாத்துப்புடலாம். பிச்சாண்டிப்பய கூட சேர்ந்து தில்லுமுல்லு பண்ணுத சின்னான் பய அக்காவ, நடயா நடக்க வைக்கணும். ஆண்டியப்பன இப்ப பெரிய மனுஷனா பேசுற பிச்சாண்டிப்பய பயப்படும்படியா பண்ணணும். ஆண்டி குடும்பம் சீரழிஞ்சா பிச்சாண்டிப்பய 'திருந்துவான்' - 'பினாமி' நிலம் இருக்கது தெரிஞ்சி போனாலும் பயப்பட்டுப் பேசமாட்டான். பிச்சாண்டிய அடிக்கணுமுன்னா ஆண்டிய அடிக்கணும். ஆண்டிய அவன் தங்கச்சிய வச்சே அடிக்கணும். மாசானம் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டே கேட்டார்: "காத்தாயி ஒன் புருஷன் மேளம் அடிக்கப் போயிருந்தானா..." "இப்ப மேளத்தத்தான் அடிக்கப் போயிருக்காரு. எதுக்குக் கேக்கியரு?" "கோணச் சத்திரத்துல வரச்சில போலீஸ்காரங்க யாரயோ ஒரு மேளக்காரன் குடிச்சதுக்காவ இழுத்துக்கிட்டு போனாங்களாம்." "அய்யய்யோ அது என் புருஷன்தானு ஒமக்கு நல்லாத் தெரியுமா... சீக்கிரமாச் சொல்லுஞ் சாமி." "சட்டாம்பட்டி மேளக்காரன்னு சொன்னாங்க. சாமி கவனிக்கல. பஸ்ல வரச்சில காதுல விழுந்தது." "அட கடவுளே, 'வீட்லதான் போடுறேன் பிள்ள - வெளில போடமாட்டேன்'னு சொன்னவரு... கடைசில... சாமி... நிசமா அவராத்தான் இருக்குமா..." "என் காதுல விழுந்தத ஒன் காதுல போட்டேன். என்னை சத்தியங்கூட பண்ணச் சொல்லுவ போலுக்கே. சரி சீக்கிரமா சின்னான போயி பாக்கச் சொல்லு." "அந்த 'நொறுங்குவான்' தென்காசிலலா வேல பாக்கான். சாயங்காலமாத்தான் வருவான். அட கடவுளே... போலீஸ்காரங்க 'பாவி மனுஷன' என்ன பாடு படுத்துறாங்களோ..." "ஏன் அம்மாளு பேசிக்கிட்டு இருக்க... சீக்கிரமா கொஞ்சம் பணத்த எடுத்துக்கிட்டு போறதப் பார்க்காம? ஒருவேள, கோணச்சத்திரத்தில இல்லாட்டா, ஆலங்குளத்துல போயிப் பாரு. ஏன்னா எனக்கு இந்தப் பேச்சு காதுல விழுந்த சமயம் பஸ், அத்தியுத்துக்கிட்ட நின்னுது. அதனால் அந்தப் பக்கம் இருக்குற ஆலங்குளமா - இந்தப் பக்கம் இருக்க கோணச்சத்திரமான்னு தெரியல." "என்னய்யா நீரு - ஒம்ம ஊர்க்காரன பிடிச்சிருக்கதா கேட்ட பிறவு - கொஞ்சம் தீர விசாரிக்கப்படாதா..." "பிச்சாண்டிக்கு சப்போர்ட்டா ஒன் தம்பி பண்ணுன கூத்துக்கு இதயாவது சொல்லுதேனே - பேச்ச வளக்காமல் ஆகவேண்டியத பாரு பிள்ள! சின்னான் வாரது வரைக்கும் காத்திருக்காத. அதோட அவன் மேல போலீஸ்ல கண்ணு. ஒன் புருஷன் மட்டும் சின்னானோட மச்சான்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, நீ அப்புறம் ஒன் புருஷன உயிரோட பாக்க முடியாது. சீக்கிரமா போ பிள்ள!" காத்தாயி, பயத்திலாடினாள். புருஷன், இதுவரை லாக்கப் போகாதவன். லாக்கப்பில் இருந்தாக்கூட பரவாயில்லை; ஒருவேளை சின்னான் மச்சான்னு தெரிஞ்சு ஏதாவது ஏடாகோடமா பண்ணிப் புட்டாங்கன்னா... அட கடவுளே, இந்த மனுஷன் வேற உயிரோட பாக்க முடியாதுன்னு சொல்லுதான் - 'கரி' வாய் மனுஷன். இவன் சொன்னபடி நடந்திருந்தா, கடவுளே, என் புருஷன உயிரோட பாப்பேனா? காத்தாயி வேகமாகச் சேரிக்குப் போனாள். அக்கம்பக்கத்தில் சொல்லிவிட்டு, துணைக்குப் பெரியப்பாவை கூட்டிக்கொண்டு கோணச்சத்திரத்தைப் பார்த்து ஓடினாள். அங்கிருந்து ஆலங்குளத்திற்கு பஸ்ஸில் ஏறிய பிறகுதான், அவளுக்கு மீனாட்சியின் ஞாபகம் வந்தது. மீனாட்சி அம்மா எப்டி இருக்காவளோ... என் புருஷன் எப்டி இருக்கானோ... இருவரில் யாருக்காக அழுவது என்று தெரியாமல், இறுதியில் தனக்காக அழுபவள்போல் அழுதுகொண்டு, அவள் இருக்கையில் அமர்ந்தாள். பஸ் புகையைக் கக்கிக்கொண்டது. காத்தாயியின் கணவனைப் பற்றி சேரியிலும், 'ஊரிலும்' மக்கள் ஆங்காங்கே நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்கள். 'பெரிய பெரிய ஹோட்டலுல குடிக்கவனுகள பிடிக்கமாட்டாங்க. கூடச்சேந்து வேணுமுன்னா குடிப்பாங்க. மேளக்காரன் மாதிரி ஆள் அகப்பட்டால், உடம்புல மேளம் அடிப்பாங்க. காய்ச்சுறவன கண்டா பல்லக் காட்டுவாங்க." பெரும்பாலும் அனுதாபத்துடன் பேசிக் கொண்டிருந்த 'ஊர்' ஜனங்களில் ஒரு பகுதி, திடீரென்று வாயடைத்துப் போய் நின்றது. ஒரு கட்டை வண்டியில் வெள்ளைத் துணி மூடப்பட்டு அந்த வண்டி வந்து கொண்டிருந்தது. ஊர்க்காரர்கள் ஓடினார்கள். முந்தாநாள் இரவு கருப்பட்டி வண்டி அடித்துக் கொண்டு போன முனியாண்டி பிரமை பிடித்தவனாய் வண்டியில் உட்கார்ந்திருந்தான். பின்னால் குமாரின் தந்தை சின்னத்துரை நடந்து வந்து கொண்டிருந்தார். எல்லோரும் பதறினார்கள். "என்ன மாமா... என்ன நடந்தது..." "என்ன தாத்தா... என்ன இது?" சின்னத்துரை ஏதோ சொல்லப் போனபோது முனியாண்டி 'ஹோ'வென்று கத்திக்கொண்டே வெள்ளைத் துணியை விலக்கினான். இரண்டு ஓலைப்பாய்ச் சுருட்டலில், இரண்டு பிணங்கள் சிதைந்து கிடந்தன. வயதுக்கு வந்த இரண்டு மகளையும் மூன்று சின்னப் பையன்களையும், ஒரு 'செண்டு' நிலத்தையும் வைத்திருந்த ஐம்பது வயது நயினார், முகம் சிதைந்து கிடந்தார். ஒரு வருடத்திற்கு முன்புதான் கல்யாணம் ஆன, சேரி வாலிபன் மூக்கையா, காலுக்கும், முகத்துக்கும் இடைப்பட்ட பகுதி, காணமுடியாத அளவுக்குச் சிதைந்து போயிருக்க, கர்ப்பம் தரித்த மனைவியையும், வயதான தாய் தந்தையரையும் பார்க்க நினைத்தவன் போல், கண்கள் துருத்தி நிற்க, ஏதோ பேசப் போகிறவன் போல் வாய் திறந்து நிற்க, விறைத்துக் கிடந்தான். முனியாண்டி பலமாக புலம்பிக் கொண்டிருந்த போது ஓரளவு அதிர்ச்சி அடைந்திருந்த சின்னத்துரை விளக்கினார். "முந்தாநாள் நயினாரையும், மூக்கையாவையும், கருப்பட்டு வண்டிய அடிச்சிக்கிட்டு, புனலூரப் பார்த்துப் போகச் சொன்னேனா... நான் பஸ்ல சந்தைக்கு முன்னாலயே போயிட்டேன். என்னடா வண்டியக் காணுமேன்னு பழயபடி பஸ் ஏறி வந்தால், செங்கோட்டய தாண்டி மலையாள எல்லைக்குள்ள லாரி மோதி மாடும், இவங்களும் செத்துக் கிடக்காங்க. வண்டிமேல லாரி நிக்குது. அருமயான வண்டி - சுக்குநூறா சிதறிப்போயிட்டு. கதிர்வேல் பிள்ள வண்டிய அடிச்சிக்கிட்டு வந்த இந்த முனியாண்டி, பித்துப் பிடிச்சி உட்கார்ந்திருக்கான்." "அப்புறம்?" "அப்புறம் என்ன... போலீஸ்காரங்க வந்தாங்க. பிரேக் இன்ஸ்பெக்டரு வந்தாரு. ஏதோ கோடு போட்டாங்க. எப்படியோ ஆளுக்குக் கொஞ்சம் கையில தள்ளிட்டு பிணத்த மீட்டிக்கிட்டு வாரேன், எய்யா... என் ஒடம்பு எப்டி நடுங்குது. யாராவது ஒரு சோடா வாங்கிட்டு வாங்கடா..." இதற்குள் நயினாரின் மனைவியும், மகளும் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள். "இந்த வயசில குளிருல போறீரே'ன்னு நான் பாவி சொன்னதையும் கேக்காம - இப்போ ஒரேயடியாய்ப் போயிட்டீரே... போயிட்டியே என் ராசா" என்று நயினார் மனைவி, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள். அவள் மகள் 'அய்யா... அய்யா' என்று சொல்லிக் கொண்டே ஏங்கியவள், அப்படியே மயங்கி விழுந்தாள். உடனே கடையில் இருந்து, சுக்கை வாங்கி, அங்கேயே ஒரு கல்லில் வைத்து இடித்து, அவள் காதில் வைத்து ஊதினார்கள். சின்னத்துரைக்கு சோடா வாங்கிக் கொண்டு வந்தவன், அதை உடைத்து, அவள் முகத்தில் தெளித்தான். நயினார் மனைவி நடப்பது தெரியாமல் புலம்பிக்கொண்டும், அவளின் சின்னப் பையன்கள், "அய்யா... அக்கா" என்று ஏங்கி ஏங்கி அழுதுகொண்டும் இருந்தபோது, சேரிப் பையன் மூக்கையாவின் மனைவி, தலையிலும், முகத்திலும் அடித்துக் கொண்டே ஓடி வந்தாள். ஒரு மின்சாரக் கம்பத்தில், அவள் தலையை வைத்து மோதப் போனபோது, இரண்டு சேரிப் பெண்கள் அவளைப் பிடித்துக் கொண்டார்கள். மூக்கையாவின் வயதான தாய் தந்தையரை, நான்கு பேர் கைத்தாங்கலாகக் கூட்டி வந்தார்கள். சொல்ல முடியாத கூட்டம். சொல் தொடுக்க முடியாத நடுக்கம். பிணத்திற்கருகே வந்ததும், சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்ற மூக்கையாவின் மனைவி, பிறகு அவன் தலையோடு தன் தலையைச் சேர்த்து உருட்டிக் கொண்டே, "என் மவராசா, 'ஒரு ரூபா கொடுத்துட்டுப் போறியே! ஒனக்குல்லாம் எதுக்குப் பொண்டாட்டின்னு' பாவி மொட்ட கேட்டேனே... கேட்டேனே... ஒன்கிட்ட கடைசியா நல்ல வார்த்த சொல்லி வழியனுப்பாம வைது தொலைச்சேனே... கடைசில பொண்டாட்டி நிக்கேன். புருஷன் நீ போயிட்டியே, என் ராசா... என்னை நொந்துக்கிட்டே போனீயா... இல்லன்னு ஒரு வார்த்த சொல்லு ராசா - என் மவராசா... என் மாணிக்கமே... நான் கடைசி வரைக்கும் மஞ்சள் கயிறோட இருப்பேன்னு, நினைச்சேனே மவராசா... ஒனக்கு தங்கத்துல செயினு பண்ணிப் போடறேன்னு சொல்லிட்டு இப்ப இந்த மஞ்சக்கயித்தயும் பறிச்சிட்டியே என் மவராசா..." என்று சொல்லிச் சொல்லிக் கதறினாள். ஓரளவு சுயநினைவுக்கு வந்த நயினாரின் மனைவி மூக்கையவின் மனைவியின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டே, "நானாவது வாழ்ந்து முடிஞ்சவா... நீ அறியாத வயசில வாழ்ற பிள்ளை... வாரிக் கொடுத்திட்டியே. வாரிக் கொடுத்திட்டியேடி" என்று சொல்லிக் கொண்டே அழுதபோது, ஊர் ஜனங்கள் மொத்தமாக அழுதார்கள். ஒரு சிலர் ஆகவேண்டிய காரியங்களுக்காக தங்களைத் திடப்படுத்திக் கொண்டே, கூட்டத்தை அதட்டினார்கள். "சரி, இனும அழுது என்ன பிரயோஜனம்... அவங்க விதி முடிஞ்சி போச்சு." "விதி யார விட்டுது... வீட்ல இருந்திருந்தாலும் சாவு வேற வகையில வந்திருக்கும். அன்னைக்கே தலையில எழுதினத, அடிச்சி எழுத முடியுமா? அவங்க முன்னால போறாங்க; நாம பின்னால போவப் போறோம். அவ்வளவுதான்." "சரி. பிணத்த இறக்குங்கப்பா. சின்னத்துரை சின்னய்யா திடமான ஆளு. எப்படியோ பிணத்த கொண்டு வந்துட்டாரு. வேற ஆளா இருந்தா அங்கேயே புதச்சிட்டு வந்திருப்பாங்க. சரி. கத்தி கத்தி பேசிக்கிட்டிருந்தா எப்படிப்பா... பொம்புளயள விலக்குங்க. உம் சீக்கிரம்... மஞ்ச வெயிலு அடிக்குது பாருங்க..." இதற்குள் தங்கம்மாவும், அவள் அம்மாவும், இதர பெண்டு பிள்ளைகளும் வந்து குவிந்தார்கள். நயினாரின் மனைவி, தங்கம்மாவின் அம்மாவுக்கு பெரியய்யா மகள். தங்கையைக் கட்டிப் பிடித்து அழுதாள். எல்லாப் பெண்களும் கட்டிப் பிடித்து அழ, ஆண்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பிணங்களை இறக்கினார்கள். ஒருவர் எல்லோர் சார்பிலும் சொன்னது ஒப்புக்கொள்ளப்பட்டது. "இந்தக் கோரத்த வீட்டுக்குக் கொண்டு போவாண்டாம்... நேரா சுடுகாட்டுக்குக் கொண்டு போவலாம்!" நயினாரை ஒரு கட்டிலில் வைத்து 'ஜாதி' சுடுகாட்டுக்கும், மூக்கையாவை 'சேரிச்' சுடுகாட்டிற்கும் கொண்டு போகப் போனார்கள். ஒன்றாக மடிந்தவர்கள் தனித்தனியான இடங்களுக்குக் கொண்டு போகப்படும் சமயத்தில், நயினாரின் மனைவி, புருஷன் பின்னாலும், மூக்கையாவின் மனைவி, தன் புருஷன் பின்னாலும் அலறியடித்துக் கொண்டு ஓடியபோது, ஊர் ஜனங்கள் முண்டியடித்து, அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள். மூக்கையாவின் தள்ளாத வயது தந்தை, தன் மனைவியின் கையை எடுத்துத் தோளில் வைத்துக் கொண்டு "இதுக்குப் பொறவும் நாங்க இருக்கப்படாது. எங்க ரெண்டு பேரையும் யாராவது கல்லத் தூக்கிப் போட்டுக் கொல்லுங்க" என்று சொன்னது, எல்லோர் உள்ளத்தையும் கொன்றது. ஆண்டுக்கணக்கில் வாழ்ந்த நயினாரும், மூக்கையாவும் ஒரு மணிக்கணக்கில் புதைக்கப்பட்டார்கள். இவ்வளவு பெரிய கோரத்தை, சமீப காலத்தில் பார்த்தறியாத ஊர்மக்கள், ஒருவருடன் ஒருவர் பேசாமல், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஆறுதல் கொடுப்பவர்கள் போலவும், ஆறுதல் பெறுபவர்கள் போலவும், சோகச் சூன்யத்தில் சோர்வுற்று நின்றார்கள். அப்படியும் இப்படியுமாய் மாலை கடந்து மணி ஏழாகிவிட்டது. எல்லாம் முடிந்து அவரவர்க்கு தம் வீட்டு விவகாரங்கள் நினைவுக்கு வரத் தோன்றியபோது, சின்னான் சேரி மக்கள் அனைவரையும் திரட்டிக் கொண்டு ஊரின் முனைக்கு வந்தான். மூக்கையா மனைவியையும் இரு பெண்கள் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். வட்ட வட்டமாக நின்று கொண்டிருந்த ஊர்மக்கள் சேரிக் கூட்டத்திற்கருகே வந்து சேர்ந்தார்கள். விவரம் புரியாமலும், விவரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூட்டத்தோடு கூடியபோது, சின்னான், ஆசாரிப் பையன் ஆறுமுகத்திடம், "சீக்கிரமா நயினாரம்மாவ கூட்டிக்கிட்டு வாப்பா" என்றான். அவன் முகத்தில் கடுமை. சிநேகிதப் பையன் ஆறுமுகத்திடமும் கடுமையாகத்தான் சொன்னான். கூட்டத்தில் ஒருவர் பேச்சைத் துவங்க நினைத்து "என்ன சின்னான், ஒன் மச்சான போலீஸ் பிடிச்சி வச்சிருக்காம். ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிப்புடப் போறாங்க. காத்தாயி வேற போயிருக்கா... ராத்திரி நேரம் - நீ போயி பாக்கப்படாதா" என்றார். "ஒண்ணுமில்ல சாமி. தென்காசில மச்சான் வந்து மேலாபுரத்துக்கு மேளத்துக்கு போவூதாயும், அக்காகிட்ட சொல்லிடும்படியும் சொன்னாரு. அவளுக்கு செலவுக்குன்னு பத்து ரூபா வேற தந்து விட்டாரு." "ஒரு வேள - அதுக்குப் பிறவு?" "இல்லய்யா. என்னை மச்சான் பஸ் ஸ்டாண்ட்ல வந்து வழியனுப்புனாரு. அப்போ மணி நாலரை. காத்தாயி இங்கிருந்து போவும்போது ரெண்டு மணியாம்." "அப்படின்னா?" "இந்த மாசானம் புரளியக் கிளப்பி விட்டிருக்கான்." "ஏ செறுக்கிமவன். இன்னும் அவனுக்கு குறுக்குசால் விடுறது போகல பாரு! அவன கவனிக்கணும்! ஆனால் இப்போ நீ போயி - காத்தாயியப் போயிப் பாக்காண்டாமா, ராத்திரி நேரம்." "ரெண்டு பேர அனுப்பி வச்சிருக்கேன். ஆலங்குலத்துல எங்க பெரியம்மா வீடு இருக்கு. அங்க தங்கிட்டு காலையில வரச் சொல்லியிருக்கேன். பெரியம்மா, மவனுவள கூட்டிக்கிட்டுதான் போலீஸ் ஸ்டேஷன் போயிருப்பா..." "என்னடா நீ... நீ போறது எப்டி? பிறத்தியார் போறது எப்டி?" "இப்போ எனக்கு இதவிட முக்கியமான வேல இப்பவே இருக்கு. பிச்சாண்டி, போய் நயினாரம்மாவ கூட்டிக்கிட்டு வா. ஆறுமுகம் பேக்கன்." "அந்தா அவளும் பின்னியளும் வாரவ பாரு. அவங்கள எதுக்காவப்பா கூப்பிட்ட..." "சொல்லுறேன்." சொல்லப் போன சின்னான், மேற்கு நோக்கிக் கூர்மையாகப் பார்த்தான். நயினாரைப் புத்தைத்துவிட்டு ஐம்பது அறுபது பேர் வந்தார்கள். மாசானம், பரமசிவம், சின்னத்துரை, முன்ஸீப், கர்ணம், ஜம்புலிங்கம் முதலிய பிரமுகர்கள் வந்து கொண்டிருந்தபோது, இடும்பன்சாமியும், இன்னும் ஒரு சிலரும் கூட்டத்தில் வந்து சேர்ந்து கொண்டார்கள். நயினார் மனைவி, அருகே இருந்த வண்டிச் சக்கரத்தில் சாய்ந்து 'மவராசா... மவராசா...' என்று புலம்பிக் கொண்டிருக்க, தங்கம்மாவின் அம்மா, அவளுக்கு முந்தானை மடிப்பை வைத்து வீசிக் கொண்டிருந்தாள். தங்கம்மா முன்னிலும் அதிக 'மங்கலான' பார்வையுடன் முட்டிக் கால்களைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். மூக்கையாவின் மனைவியையும், மாமனார் மாமியார்களையும் நான்கைந்து பேர் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வண்டியடித்துக் கொண்டு வந்த முனியாண்டி, தங்கம்மாவிடம் போட்டி போடுபவன் போல் பித்துப் பிடித்து, பைத்தியமாய் ஆகப்போகிறவன் போல் நின்றான். என்னமோ நடக்கப் போவுது என்பதை அனுமானித்து கூட்டம் நின்றபோது, நயினாரைப் புதைத்தவர்கள் அங்கே சங்கமமானார்கள். கதிர்வேல்பிள்ளை, "இன்னுமா கலையல? செத்தவங்ககூட சாவ முடியுமா? போயி வேலயப் பாருங்கப்பா" என்று சொன்னபோது - பரமசிவமும், சின்னத்துரையும் சற்று முன்னால் நடந்தார்கள். சின்னான் கத்தினான்: "அங்கேயே நில்லுங்க! ஒங்களத்தான் முதலாளி! ஒரு அடி நகரப்படாது - அங்கேயே நில்லுங்க." பரமசிவமும், சின்னத்துரையும் அதிர்ந்து போய் நின்றபோது, சின்னான் அவர்களை வழிமறிப்பதுபோல் முன்னால் போய் நின்றுகொண்டான். "சின்னத்துரை மொதலாளி! நான் ஒம்மகிட்ட சில கேள்வி கேக்கணும் - அய்யா பதில் சொல்லணும்." சின்னத்துரை வெகுண்டார். "நீ என்னடா கேக்கது - நான் என்ன சொல்றது? வழிய விடுறியா இல்ல..." "மொதலாளி! அப்படிச் சொன்னா எப்டி? நான் நயினாரா மாறி கேக்கேன். மூக்கையாவா மாறி கேக்கப் போறேன். இந்த ஜனங்களோட வேலக்காரனா நின்னு கேக்கேன் மொதலாளி! தர்மதுர... கோபப்படாம பதில் சொல்லணும்." "நடுத்தெருவுல என்னடா கேள்வி?" "ஏன்னா நடுத்தெருவுல ரெண்டு குடும்பம் நிக்குது பாருங்க." சின்னத்துரை சார்பில், பரமசிவம் ஏதோ கோபமாகப் பதில் சொன்னபோது, மாசானம் எப்படிக் கழட்டிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் ஒரு வயதான மனிதர் "அவன் என்ன கேக்கான் என்கிறதத்தான் கேட்டுட்டுப் போங்க" என்றார். சின்னத்துரை தயங்கினார். சின்னான் கேட்டான்: "மொதலாளி! எதிர்த்திசையில வந்த லாரி, பார வண்டி மேல அநியாயமா மோதியிருக்கு. போலீஸ்காரங்க வழக்கு போட்டிருக்காங்களா? நீங்க போலீஸ்ல கம்ளெயிண்ட எழுதிக் கொடுத்தீங்களா? நஷ்ட ஈடு கேட்டியளா?" சின்னத்துரை சீறினார். "இவரு பெரிய வக்கீலு!" கூட்டத்தில் ஒருவர் எதிர்க் கேள்வி கேட்டார். "சபையோட சம்மதத்துலதான் அவன் கேக்கான். ஒழுங்கா பதில் சொல்லுவே!" கதிர்வேல் பிள்ளை புரிந்து கொண்டார். செத்தது அவர் ஆளல்ல. நியாயம் பேசினார். "சின்னத்துரை... நீரும் இப்டி எடக்குமடக்கா பேசப்படாது. பதில் சொன்னா கொன்னா போடுவாவ? அவங்க யாரு.. ஒம்மோட தாயி பிள்ளிய! சொல்லும் - சபை கேக்குதுல்லா..." சின்னான் மீண்டும் கேட்டான்: "கேட்டுட்டேன். இனும நீருதான் பதில் சொல்லணும்." "ஒனக்காவச் சொல்லல. சபைக்காவச் சொல்லுதேன்! லாரி எப்படி மோதிச்சுன்னு தெரியல. இவங்க தூக்கக் கலக்கத்துல வண்டிய குறுக்கா ஓட்டுனதா போலீசுகாரங்க சொன்னாங்க. பிரேக் இன்ஸ்பெக்டர் சொன்னாரு. என் மேல வழக்குப் போடப்போறதா வேற மிரட்டுனாங்க. நான் பிணத்த கொண்டு வந்ததே பெரிய பாடு." "எனக்கும் சட்டம் தெரியும் சாமி! விபத்துல யாராவது இறந்துட்டா போலீஸ் வழக்குப் போடாம இருக்க முடியாது. ஆனால் அந்த வழக்க தோக்கும்படியாயும் போடலாம் - இதனால அவங்களுக்குப் பணம் கிடைக்கும்; செத்தவன் குடும்பத்துக்கு ஒண்ணும் வராது. இது ஒமக்கு தெரிஞ்சி இருக்கணும். ஏன்னா போன வருஷம் ஒம்ம கொளுந்தியா மவன், பிரைவேட் பஸ்ல அடிபட்டுச் செத்தபோது அவங்க குடும்பத்த வழக்குப் போடச் சொல்லி பத்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்திருக்கியரு. அதோட ஏழைங்க மேல 'அர' வட்டிக் கடனுக்கு வழக்குப் போட்டு ஜப்தி பண்ணத் தெரியுற அளவுக்கு கோர்ட் அனுபவமுள்ளவரு... ஒமக்குத் தெரியாதுன்னா, நம்ப முடியாது." "நம்புறதும் நம்பாததும் ஒன் இஷ்டம். நான் நடந்ததச் சொல்லிட்டேன். நானே பிரேக் இன்ஸ்பெக்டருக்கும், போலீஸ்காரங்களுக்கும் அம்பது அம்பது ரூபாய் வாய்க்கரிசி போட்டேன்." திடீரென்று 'பிணவண்டி' ஓட்டிவந்த முனியாண்டி பித்தம் தலைக்கேறியவன் போலவும், பித்தம் தெளிந்தவன் போலவும் கத்தினான். இருபத்தோரு வயதுக்குரிய மென்மைக்கும் திண்மைக்கும் இடைப்பட்ட குரலில் கத்தினான்: "பொய். சின்னத்துரை கிழவன் சொல்றது முழுப் பொய். நான் கண்ணால பாத்தேன். ஏய் கிழட்டு மூதேவி நீ உருப்படுவியாடா..." எல்லோரும் அவனை வியப்போடு பார்த்தபோது முனியாண்டி 'ஹோ' வென்று பேரிரைச்சலை எழுப்பிவிட்டு பிறகு ஏங்கி ஏங்கி அழுதுகொண்டே பேசினான். அந்தச் சமயத்தில் குமாரும், மாணிக்கமும் அங்கே வந்து சேர்ந்தார்கள். முனியாண்டி விக்கி விக்கி திக்கித் திக்கிப் பேசினான். "போலீஸ்காரங்க கோடு கிழிச்சாங்க. லாரி டிரைவர கூட அடிச்சாங்க. கொஞ்ச நேரத்துல லாரி மொதலாளி வந்தாரு. அவருகிட்ட மொதல்ல அதட்டிப் பேசினாங்க. அப்புறம் பிரேக் இன்ஸ்பெக்டர்னு ஒருத்தன் வந்தான். அவனும் லாரி மொதலாளிய மிரட்டுனான். மிரட்டிக்கிட்டே எதையோ எழுதுனான். பிறவு இந்தக் கிழவன் பஸ்ல வந்து இறங்குனான். நான் 'ஓ'ன்னு அழுதேன். இவனும் மொதல்ல லேசா அழத்தான் செய்தான். அப்புறம் போலீஸ்காரங்க இவன தனியா கூட்டிக்கிட்டுப் போய் பேசுனாங்க. பிரேக் இன்ஸ்பெக்டர் எட்டி எட்டிப் பார்த்தாரு. பிறவு லாரி முதலாளி ஒரு ரூபா நோட்டுக் கட்ட இந்தச் சின்னத்துரை கிழவன் கிட்ட குடுத்தான். இவன் உள் சட்டப்பைக்குள்ள வச்சான். பிரேக் இன்ஸ்பெக்டர் எழுதுனத கிழிச்சிப் போட்டுட்டு இன்னொண்ணு எழுதுனாரு. போலீஸ்காரங்க கிழிச்ச கோட்ட அழிச்சிட்டு நடு ரோட்ல குறுக்கா கோடு போட்டாங்க. இவ்வளவையும் நான் கண்ணால பாத்தேன்; ரெண்டு கண்ணாலயும் பாத்தேன்... சத்தியமாய்ப் பார்த்தேன்..." கூட்டத்தில் பயங்கரமான நிசப்தம். எல்லோரும் சின்னத்துரையை எரித்துவிடுவதுபோல் பார்த்தார்கள். கர்ணமும், மணியமும் அவர் பைக்குள்ளே கண்களை விட்டார்கள். சின்னத்துரை குமாரை பரிதாபமாகப் பார்த்தார். சின்னான் அதட்டினான்: "எவ்வளவு வாங்குனியரு? ரெண்டு பிணத்த எவ்வளவு ரேட்டுக்கு வித்தீரு? சீக்கிரமாச் சொல்றது ஒமக்கு நல்லது!" குமாருக்குக் கோபம் கொப்பளித்தது. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பது மூத்தோர் வாக்கு. தன் தந்தை சொன்ன மந்திரச் சொல்லுக்கு, அவர்கள் யந்திரம் போல் கட்டுப்படவில்லையானால் என்ன அர்த்தம்? என்னைப் பார்த்தவுடனேயே தாசில்தார் எழுந்து நிக்காரு. சப்-இன்ஸ்பெக்டர் சலாம் போடுறாரு. கலெக்டர் கை கொடுக்காரு. இந்தக் கேடுகெட்ட பஞ்சப் பராரி பயலுவளுக்கு - அவங்க அப்பா பதில் சொல்லிக்கிட்டு நிக்கதா? இதை அவன் அனுமதிப்பதா? நாட்ல சட்டம் ஒழுங்கு எப்படிக் கெட்டுப் போச்சு... குமார் மேனியாட, விழி ரத்தச் சிவப்பாக, பயங்கரமாய் கத்தினான்: "நீங்க வாங்கப்பா! அவங்க என்ன பண்ணணுமோ பண்ணிக்கட்டும். நாய்க்கும், பேய்க்கும் பதில் சொல்லிக்கிட்டு... வாங்கப்பா!" குமார் சொன்னதை செயல்படுத்துபவன். ஆகையால் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு இழுத்தான். இப்போது சின்னானால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குமாருக்கு இணையாகக் கத்தினான்: "குமார்! சொல்றதைக் கேளு! ஒரு அடி நகர்ந்த - அப்புறம் ஒரேயடியாய் விழுந்திடுவே! ஒப்பன் பிணமாவுறதுக்கு முன்னால நீ பிணமாயிடுவ!" கூட்டத்தில் ஒரு சிலர் கோபமாக எழுந்தபோது, 'பழைய காலத்து' பரமசிவம், தன் ஜாதிக்காரர்கள் தங்களுக்காகத்தான் எழுவதாக நினைத்து, சற்று மிரட்டிப் பேசினார்: "என்னடா சின்னான், ஒன் மனசில என்னடா நினைச்சிக்கிட்ட?" - குமார் வருங்கால மாமனாருக்கு வக்காலத்து வாங்கினான்: "கடைசில - ஒன் பறப் புத்திய காட்டிட்ட பாரு!" சின்னான் இப்போது அமைதியாகப் பேசினான். வகுப்புவாதியை பதிலுக்கு வகுப்பு ரீதியில் பேசி வெறியடையச் செய்யக்கூடாது. "நான் பறையன் தான் குமார்! பறப்புத்தியத்தான் காட்டுறேன். என்னை மாதுரி படிச்ச நீ இப்படிப் பேசையில நான் அனாதயாப் போன ரெண்டு குடும்பத்துக்காவ என் பறப்புத்திய காட்டுறேன்! ஒரு மனுஷன் எவ்வளவுதான் நாகரிகப்பட்டிருந்தாலும், எவ்வளவுதான் மேனா மினுக்கியா இருந்தாலும், அவனுக்கு இயலாமை வரும்போது, அவனோட கச்சாபுத்தி... அதாவது அவனோட நிஜமான 'இவன்' வந்துடுமுன்னு சைக்காலஜி சொல்லுது. அதனால நான் வருத்தப்படல. ஆனால், ஏய் பிச்சாண்டி! நயினாரம்மாவயும், மூக்கையா சம்சாரத்தையும் இங்க கூட்டிவா!" இடும்பன்சாமி, நயினாரம்மாவையும், பிச்சாண்டி மூக்கையாவின் மனைவியையும், மாமன் மாமியாரையும் கூட்டி வந்து, சின்னான் முன்னால் நிறுத்தினார்கள். அவர்கள் அழ அழ சின்னான் கர்ஜித்தான்: "சும்மா மிரட்டி பிரயோஜனமில்ல! இந்த நயினாரம்மா ஒரு மகள கரையேத்தணும். மூணு பையங்கள வளர்க்கணும். இந்த மூக்கையா பெண்டாட்டி நிறைமாத கர்ப்பிணி! இவள் காலத்துக்கும் கண் கலங்கப்படாது! நயினாரும், மூக்கையாவும், சின்னத்துரை 'எசமான்' வீட்டில், வருஷக்கணக்கில் மாடா உழைச்சவங்க! அவங்க பிணத்த வேற வித்துட்டாரு! இவங்களுக்கு வழி பண்ணாம - நீங்க வழி நடக்க முடியாது!" ஜம்புலிங்கம் இடும்பன்சாமியைப் பார்த்ததும் கோப வயப்பட்டுக் கத்தினார்: "ஒரு நயாபைசாக்கூட தரமுடியாது! ஆனதப் பாருங்க! பிணத்துக்கு ரேட்டு பேசுற காலம் வந்துட்டு, என்ன..." இதற்குள் நயினாரம்மா, "சின்னான், நான் என் புருஷனை விக்க வரல. வில பேச வரல. நீ கூப்பிட்டியேன்னு வந்தேன்! என் மவராசனே போயிட்டாரு. இனும பணமா பெரிசு" என்றாள். மூக்கையாவின் மனைவி, "மச்சான் நீ ரூபா வாங்கிக் கொடுக்காண்டாம். அது என் கால் தூசிக்குச் சமம்! ஒன்னால போன புருஷன கொண்டு வர முடியுமா... அது முடியுமுன்னால் செய்யி! ஒனக்குக் கோடி புண்ணியம்" என்று சொல்லிவிட்டு, நயினாரம்மாவின் மார்பில் தலைவைத்து அழ, நயினாரம்மா அவள் முகத்தைத் தடவிவிட்டுக் கொண்டே கதறினாள். சின்னான், அந்தப் பெண்களை பிச்சாண்டியிடமும், ஆசாரிப் பையன் ஆறுமுகத்திடமும் ஒப்படைத்துவிட்டு ஆணித்தரமாக அதட்டினான். "இந்த மாதுரி அழுதழுதே அழ முடியாமப் போன ஜனங்களா போயிடாதிங்கம்மா... சின்னத்துரை என்ன சொல்றீரு?" பரமசிவம் சின்னத்துரைக்குப் பதிலாகப் பேசினார்: "என்னடா சின்னான்... சேரியாட்கள கொண்டு வந்து மிரட்டி வழிமறிக்கிற அளவுக்கு வந்துட்டியா? மேல் ஜாதிக்காரங்கள - அவங்க ஊருக்குள்ள வந்தே மிரட்டுற அளவுக்கு வந்துட்ட இல்ல? மேல் ஜாதிக்காரங்க கையுல வளையல் போட்டிருக்கோமுன்னு நினைக்கியா? எங்க ஆட்கள் சும்மா பேசாம இருக்கிற தைரியமா? பறப்புத்தி என்கிறது..." பரமசிவத்தின் 'ஜாதியாட்களே' இப்போது கம்பீரமாகப் பேசினார்கள். இடும்பன்சாமியையும், பிச்சாண்டியையும் பேசவிடாமல் பேசினார்கள். "யாருல ஒங்க ஆட்கள்... செய்யுறதயும் செய்துப்புட்டு இன்னும் ஆள் சேக்கியாக்கும்..." "ஜாதிய பத்தி பேசுறிய! நம்ம ஜாதி நயினாரையே ஒன் சம்பந்தி வித்துட்டு வந்திருக்கான். அதை ஏன் கேக்க மாட்டக்க? வாய் செத்துட்டா? ஒன் வாய் அழுகாம சாகாது!" ஆண்கள் மட்டும் பேசவில்லை. பெண்கள் பேசினார்கள். தெய்வானை, பரமசிவம் கண்முன்னால் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டே முழங்கினாள்: "ஊருக்கு சொல்லுமாம் பல்லி - காடிப்பானைக்குள்ள விழுமாம் துள்ளி! ஒன் ஜாதி ஏழைவள எப்பவாவது உட்கார வச்சி பேசியிருக்கியா? இந்த கதிர்வேல் பிள்ளய எப்பவாவது நிக்கவச்சி பேசியிருக்கியா? இவன், சின்னான் கால் தூசிக்குப் பெறுவியா? நயினானையும் மூக்கனையும் வித்துட்டு முப்பழி செய்து முதத்துக்கு வந்த பயல விளக்குமாத்தால சாத்தணும்! ஏய் தங்கம்மா! சாணியக்கரச்சி கொண்டாடி - இவன் மூஞ்சில ஊத்தலாம்!" நயினாரின் மகள் கூட்டத்தின் ஆவேசத்தை தொற்றிக் கொண்டவள் போல் பேசினாள்: "நம்மள கெடுக்கதே இந்த ஜாதிதான்! நம்ம ஜாதி மல்லிகாதான் போனவாரம் என்னைப் பார்த்து, 'எச்சக்கல நாயே'ன்னாள். நாம எல்லாரும் குட்டாம்பட்டில உலகம்மா மாதுரி, சேரியாட்களோட சேரணும்! ஏய்யா சின்னத்துரை! எங்கய்யாவ எவ்வளவுக்குப் பேசின? எவ்வளவுக்கு வித்த?" தங்கம்மாவின் அம்மா இப்போது முன்னால் வந்தாள். தலையில் அடித்துக்கொண்டே வந்தாள். "என் புருஷன் ஒங்களுக்கு செருப்பா உழச்சாரு. நில்லுங்கற இடத்துல நின்னாரு. உட்காருங்ற இடத்துல உக்காந்தாரு. அப்படிப்பட்ட மனுஷனையே ஆஸ்பத்திரில அறுத்துப் போட்டுட்ட! அவரு பெத்த மவளுக்கு, நான் பேசுன மாப்பிள்ள அய்யா, ஒன்கிட்ட விசாரிச்சா... நான் பெத்த மவள கள்ளப்பிள்ள கழிச்சதா, ஒன் தங்கச்சி சரோஜா சொல்லியிருக்கா. ஏய்யா பரமசிவம்! இவ்வளவு செய்துபுட்டும் இன்னும் பேசுறியாக்கும் பேச்சு! என் மவள் கல்யாணம் நின்னது மாதுரி, ஒன் மவள் கல்யாணம் நின்னா எப்படிக் கலங்குவ?" இடும்பன்சாமி ஆதரவு சொன்னார்: "ஏன் சித்தி அழுவுற... நீயும் கையில வெண்ணெய் வச்சிக்கிட்டு நெய்க்கி அலயப்படாது. சின்னான், பிச்சாண்டி - இவங்கள மரத்துல வச்சி கட்டுனாங்க. ஆண்டிப்பயல நாயா அலக்கழிச்சாங்க. இந்த பச்ச மதல தங்கம்மாவ அரப் பைத்தியமாக்கிட்டாங்க. என்ன வேற சஸ்பெண்ட் பண்ணுறாங்க. இவங்கள இப்படியே விடப்படாது! இப்போ பிணத்த வித்தாங்க - நாளைக்கி நம்மளயே உயிரோட விப்பாங்க! கட்டுங்கடா... கயிறு எங்கடா..." பரமசிவத்தின் பங்காளிகளில் ஒரு சில ஏழைகளுக்கு மனது கேட்கவில்லை. என்னதான் இருந்தாலும் இப்படியா பேசுறது. அதுவும் பால்பவுடர் வித்த இடும்பன். "சரி. பைசல் பண்ணுங்க. பெரிய மனுஷங்கள ஒரேயடியா அவமானப்படுத்தப்படாது. அதுவும் சேரிக்காரங்க முன்னால." சின்னான் அமைதியாகவே பேசினான்: "அளகேசன்! நீரு என்னைக் குத்திக் காட்டிட்டதா நினைச்சா - ஏமாந்து போயிட்டீர்னு அர்த்தம்! பணக்காரங்க ஒண்ணும் முடியாட்டா ஜாதியயாவது தொழிலயாவது கேவலமா காட்டிப் பேசுறது இயற்கை. நான் பேசுனதால, பறையன்னு சொன்னாங்க. இதையே நீரு சொல்லியிருந்தா 'பனையேறிப் பயலா இப்டி பேசுறது'ன்னு சொல்லுவாங்க... குட்டாம்பட்டி பனையேறி மாயாண்டியோட வீட்டயே சமாதியா ஆக்குனவங்க பணக்காரங்க. அதனால கொஞ்சம் பாத்துப் பேசும். உலகம்மைன்னு ஒரு வீரப்பொண்ணு சேரில வந்து சேர்ந்திருக்காள் சாமி. நீரும் சேரணும்." சண்முகக் கோனார் சமாதானம் சொன்னார். "அவன் கிடக்கான் லூஸுப் பய - விட்டுத் தள்ளு சவத்துப் பயல." கதிர்வேல் பிள்ளை குழைந்தார்: "சரி, ஆனது ஆச்சு, போனது போச்சு. நேரு சீரா முடிவு பண்ணுங்க." சின்னான் இறுதியாகப் பேசுகிறவன் போல் பேசினான். "ஒரு ஏழையோட உடம்பு, பணக்காரனோட உடம்ப விட அதிக மதிப்புள்ளது. ஏன்னா பணக்காரன் செத்தாலும் அவன் பணம் குடும்பத்தக் காப்பாற்றும். ஆனால் ஒரு ஏழை, தன் உடம்ப மட்டுமே மூலதனமா வச்சிப் பிழைக்கிறவன். அவன் செத்தால் ஒரு குடும்பத்தோட மூலதனமே போயிட்டுதுன்னு அர்த்தம். அதனால இவங்களுக்கு ஒரு வழி பண்ணாம எவனும் நகர முடியாது. இன்னைக்கு நயினாருக்கும், மூக்கையாவுக்கும் வந்தது, நாளைக்கு இங்கே இருக்கிற யாருக்கு வேணுமுன்னாலும் வரலாம்! யார் பிணத்த வேணுமுன்னாலும் விற்கிற நிலைமை வரலாம்! இந்த நிலைமை இன்னையோட போகணும்!" குமாருக்குக் கோபம் வந்தது. செல்லாக் கோபத்தை பொறுமையாக்கிக் கொண்டான். மாணிக்கம் மல்லிகாவைப் பார்க்க நேரமாகிறதே என்று தவித்தான். மாசானம், 'கழட்ட முடியலியே' என்று கலங்கினார். ஜம்புலிங்கம், இடும்பன்சாமியை பயத்தோடு பார்த்தார். சின்னத்துரை, 'சின்னத்தனம் வெளிப்பட்டதில்' நிலை குலைந்தார் என்றாலும் இவர்கள் எல்லோரையும் விட, அதிகமாகக் கலங்கிப் போனவர் பரமசிவம். அளகேசன் சொன்னதுக்கு சிலர் தலையாட்டியது வாஸ்தவந்தான். ஆனால் அவங்க கூட ஆட்ட வேண்டிய அளவுக்கு ஆட்டலியே! இந்த அளகேசன் கூட இப்போ பேசமாட்டக்கானே! ஒவ்வொரு பயலும் முகத்த எப்படி வச்சிருக்கான். இந்த சின்னத்துரையால நாமளும் சின்னத்தனமா ஆயிட்டோம்! இதுக்கு இந்த சின்னான் பயகூட காரணம் இல்ல. அஸ்திவாரம் போட்டதே இந்த ஆண்டிப்பயதான். செறுக்கிமவன விட்டிருப்பாங்களோ... சின்னான் இறுதி எச்சரிக்கை விடுத்தான்: "ரெண்டுல ஒண்ணு சொல்லுங்க. கொடுக்க முடியாதுன்னாவது சொல்லுங்க!" கதிர்வேல் பிள்ளை அங்குமிங்கும் கண்களைச் சுழலவிட்டுக் கொண்டே பேசினார்: "சின்னத்துரையும் அப்படிப் பண்ணியிருக்கக் கூடாது. அந்த ரெண்டு குடும்பமும் வாழணும். சின்னத்துரை... நீ கொஞ்சம் கொடுக்கணும்." சின்னத்துரை அழாக்குறையாகக் கேட்டார்: "பணம் எங்கய்யா இருக்கு?" யாரோ ஓர் ஆசாமி பின்னாலிருந்து குரல் கொடுத்தான். "பிணத்த வித்த காசு இருக்கும். குமார வித்த பன்னிரெண்டாயிரம் ரூபாய் காசு இருக்கும்." கதிர்வேல்பிள்ளை சின்னானின் கைகளைப் பிடித்துக் கொண்டார். "சின்னான் நான் சொல்றதக் கேளு. குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொல்லுதேன் - வாங்கிக்கொடு ராஜா!" "ஆமாம்பா... பிள்ள பொதுப்பிள்ள. நாமும் விட்டுக் கொடுக்கணும் கொஞ்சம் - அவங்கதான் புத்தி கெட்டத்தனமா..." இன்னொரு பின் குரல்: "எவன்யில, புத்தி கெட்டதனமாப் பேசுறது? ஒப்பன் செத்திருந்தா இப்போ இப்டி பேசுவியால..." சின்னான் சிறிது யோசித்துவிட்டுச் சொன்னான். "சரி ஒங்க முகத்துக்காவ வாங்கிக்கிறோம்! ஆனால் இது அட்வான்ஸ்தான்! ஆனால் ஒரு கண்டிஷன். லாரிக்காரன் மேல வழக்குப் போடணும். நஷ்ட ஈட்டை ரெண்டு குடும்பத்துக்கும் கொடுத்துடணும். வழக்குக்கு ஆகுஞ் செலவ - எவ்வளவு ஆனாலும் சின்னத்துரை ஒத்துக்கணும். ஒருவேள இவரு அங்க பண்ணிட்டு வந்த கோளாறுல, வழக்குத் தோத்துட்டா இவரு குடும்பத்துக்கு மூவாயிரம் வீதமாவது கொடுக்கணும். சம்மதமான்னு கேட்டுச் சொல்லும்..." "என்ன சின்னத்துரை சொல்லுத..." சின்னத்துரை தயங்கியபோது குமார் அவருக்கு மட்டும் தெரியும்படி கண்ணடித்தான். சின்னத்துரை தலையாட்டிவிட்டு, பைக்குள்ள இருந்த ஆயிரம் ரூபாயை சின்னானிடம் நீட்டிவிட்டு, "மீதிய நாளைக்கி தாரேன்! நம்பிக்க இருக்கா!" என்ற போது சின்னான், "இப்பவே ஒரு அக்ரிமெண்ட் எழுதி கையெழுத்துப் போடுவோம்" என்றான். இதற்குள் ஒரு சிலர், "அக்ரிமெண்ட் எதுக்கு - கொடுத்த வாக்க மீறிட்டு அந்த ஆளு ஊர்ல வாழ்திடுவாரா..." என்றார்கள். சின்னான் தான் சொன்னதை வற்புறுத்தவில்லை. பரமசிவம் வகையறாக்கள் போய்விட்டார்கள். திரும்பிப் பார்த்துக் கொண்டு போன மாசானத்தை, பிச்சாண்டி போய், அவர் சட்டையைப் பிடித்துக் கொண்டு, "ஏய் மாசானம், பொறளிய கிளப்பி விட்டுட்டு போறியாக்கும்... யாரு லாக்கப்புல இருந்தது? வந்து சொல்லிட்டுப் போ" என்று சொல்லி, பிடரியில் இரண்டு போட்ட போது, பரமசிவம் வகையறாக்கள் பொறி கலங்கி நின்ற போது, கூட்டத்தில் ஒரு சிலர் "கெடுவான் கேடு நினைப்பான். விடு. அவனும் லாக்கப்புக்குப் போற காலம் வரும். விடு" என்றார்கள். பிச்சாண்டி விட்டுவிட்டான். மாசாணம் பிய்த்துக் கொண்டார். அடிபட்டதை விட வலித்ததே அவருக்குப் பெரிய அவமானமாக இருந்தது. 'நான் கேள்விப்பட்டதைத்தான் சொன்னேன். அதுல என்ன தப்பு' என்று மாசானம் சொல்ல நினைத்தார். 'கூட்டம் நம்பாது' என்று உள்ளுணர்வு உணர்த்தியதை நம்பினார். உடம்பைத் தூக்கிக் கொண்டு ஓடினார். கூட்டம் போகப் பார்த்தது. கிணறு வெட்டும்போது கையொடிந்தவர்கள், பார வண்டியில் காலொடிந்தவர்கள் சின்னானைச் சூழ்ந்து கொண்டார்கள். சூழ்ந்தவர்களில் ஒருவர் "சின்னான் எங்களயும் கவனிக்கணும். நஷ்டைஇடு வாங்கித் தரணும். நஷ்ட ஈடுன்னு ஒண்ணு இருக்கதே இப்பதான் எங்களுக்குத் தெரியும்" என்றார்கள். சின்னான் கண்களைச் சிமிட்டிக் கொண்டே பதிலளித்தான். "வாங்கலாம்! ஆனால் ஊரு சரியா இல்லியே! ஒவ்வொரு கம்பா ஒடிச்ச அண்ணன் தம்பிங்க, ஒரு கட்டுக் கம்ப ஒடிக்க முடியாமப் போனதை பள்ளிக்கூடத்துல படிச்சோம் - புள்ளிக்கு உதவலியே!" "அப்படிச் சொல்லாத. இப்ப நாங்க ஒன் பின்னால நிக்கலியா... எதுலயும் துரோகிப் பயலுவ இருப்பாங்க. அவங்கள கணக்குல சேக்காத..." "என்னாத்த சேத்து என்ன பண்ண... ஆண்டியப்பன் லாக்கப்புல இருக்கானாம். கோபால போலீஸ் மதுரையில மடக்கி லாக்கப்புல போட்டிருக்காம்." "அட கடவுளே... இத விடப்படாது சின்னான். பரமசிவம் இருக்கும்போது மட்டும் சொல்லியிருந்தே அவன பிச்சி எடுத்திருப்போம்! ஊரோட முதல் மானஸ்தன் ஆண்டியப்பன். சின்னான், சின்னான் - நீதான் ஏதாவது பண்ணணும்." "சரி. கலெக்டருக்கு ஒரு மனு எழுதுவோம். கையெழுத்துப் போடுங்க. இப்பவே ஒரு லாரியப் புடிச்சி ஆலங்குளத்துல எங்க அக்காவப் பார்த்துட்டு, காலையில திருநெல்வேலிக்குப் போயிட்டு, மதுரைக்கும் போயிட்டு வாரேன். நயினாரம்மா, ராமாயி, இந்தாங்க பணத்த வாங்கிக்கங்க. பிச்சாண்டி, இதக் கொடு." பிச்சாண்டி இரண்டு அமங்கலிகளின் கைகளிலும் பணத்தை வைத்தபோது, இடும்பன்சாமி, சின்னன் சொல்லச் சொல்ல எழுதினார். எழுதி முடித்ததும் சின்னான், தங்கம்மாவின் அம்மாவைப் பார்த்து, "நீங்க மொதல்லே போடுங்க. ஒங்க மருமகன் சந்தேகப்படுவார்" என்றான். "கையெழுத்துப் போடத் தெரிஞ்சிருந்தா என் தலையிலயே நான் கொள்ளி வைப்பனா..." "பரவாயில்ல. இப்டி வாங்க." சின்னான் கிழவியின் பெருவிரல் ரேகையைப் போட்டான். தங்கம்மா இரண்டாவதாகக் கையெழுத்துப் போட்டாள். பழ கிழவிகள் 'கீறலுக்கு' காகிதத்தைக் கீறுவது போல் தேய்த்தார்கள். எல்லோரும் கையெழுத்துப் போட்டார்கள். சண்முகக் கோனார் கடைப்பக்கம் நின்றவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து கையெழுத்து வாங்கினார். சின்னான் மனுவை எடுத்து, பைக்குள் வைத்துக் கொண்டு, ஆசாரிப் பையன் ஆறுமுகத்தை, "கோணச்சத்திரம் வரைகும் சைக்கிளில் விடுறியா" என்றபோது பையன் வீட்டுக்கு ஓடினான் - யார் சைக்கிளையோ உருட்டி வர. சின்னான் ஆசாரிப் பையன் சைக்கிளில் ஏறிக் கொண்டான். "விடப்படாது என்ன ஆனாலுஞ் சரி" என்றது கூட்டத்தில் பல குரல்கள். தங்கம்மா, சின்னானை அர்த்தத்தோடு பார்த்தாள். 'நான் பழைய தங்கம்மாவாய் மாறிட்டேன்னு சொல்லு' என்று சொல்ல நினைத்தாள். சொல்ல முடியுமா? நாணமோ, அழுகையோ ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. கூட்டத்தோடு கூட்டமாக நடந்து, அம்மாவுடன் வீட்டுக்கு வந்த தங்கம்மா, மீனாட்சியைப் பார்க்க நினைத்தாள். இதற்குள் நயினாரம்மாவுக்கு ஆறுதல் சொல்வதற்காக, கிழவி அவளைத் தன்னுடன் கூப்பிட்டாள். நயினாரம்மா வீட்டில் இருந்த தங்கம்மாவிற்கு, அந்தக் குடும்பத்தின் சோகக் கதையுடன், தன் கதையும் நினைவுக்கு வந்தது. ஊரே தன்னை நிரபராதியாக நினைப்பதை உணர்ந்ததும், தான் நடந்து கொண்டது உரைத்தது. 'அவரு மனசு என்ன பாடுபட்டிருக்கும். மீனாட்சி அண்ணிய, ஒரு நாளைக்கு நாலு தடவ பாக்குற நான், நாலு மாதத்துல ஒரு தடவ கூட பாக்கலியே! என்னால எப்டி இருக்க முடிஞ்சது... அண்ணி என்ன நினைப்பாள். அவரு லாக்கப்புல என்ன பாடுபடுறாரோ... அண்ணிக்குத் தெரியுமோ தெரியாதோ...' திடீரென்று தங்கம்மா எழுந்தாள். குற்றவுணர்வில் ஓடினாள். இரவு மணி இரண்டு இருக்கும். ஆண்டியப்பனின் வீட்டுக்குப் போனதும் 'ஊரே' அதிரும்படி கத்தினாள். |