உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
16 'லாக்கப்' குடித்தனம் மூன்றாவது நாள். அன்றும் அவனை உதைத்தார்கள். போலீஸ் நெருப்பில் ஆண்டியப்பன் கரியவில்லை. மாறாக புடம் போட்ட தங்கம் போல் மின்னினான். அந்த 'அடி நெருப்பு, அவனைச் சூடாக்கியதே தவிர, சுடவில்லை. வைரப்படுத்தியதே தவிர, வதக்கவில்லை. அவனில் ஒரு வைராக்கியம் பிறந்தது. நெருப்பு, எதையாவது பிடித்துக் கொண்டுதான் நிற்குமே தவிர, அதனால் தனித்து நிற்க முடியாது. இதுபோல் தனித்து நிற்க முடியாமல், தன்னையே பிடித்துக் கொண்டிருந்த நியாய நெருப்பில் தன் மேனியில் விழுந்த அடிகள், நியாயத்தின் மீதே பட்டதாக அவன் பாவித்துக் கொண்டதாலும், 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே' என்று 'அடிக்கொரு' தடவை, அவன் பாரதியாரின் அடிகளைப் பற்றிக் கொண்டதாலும், போலீஸ்காரர்களின் கைகள் தான் ஓய்ந்தன. உதைத்த பூட்ஸ் கால்களில் தான் 'சுளுக்கு' ஏற்பட்டது. சூடு சூட்டைத் தணிக்கும் என்பது போல், போலீஸ்காரர்களின் கோப நெருப்பு, அவனது நெஞ்சில் அனலாகி, கண்களில் சூடான நெருப்பை குளிர்வித்தது. போலீஸ்காரர்களும் புரிந்து கொண்டார்கள். அடிக்கிறபடி அடித்து, உதைக்கிறபடி உதைத்து, குத்துகிறபடி குத்தினால் திருடாதவன் கூட, 'அய்யோ சாமி... நான் திருடினது வாஸ்தவந்தான். அடிக்காதிங்க சொல்லுதேன்' என்று சொல்லிவிடுவான். ஆனால் இவனை வாயில் ரத்தங் கொட்டும்படி குத்தியும், லத்திக் கம்புகளில் ரத்தத் துளிகள் படும்படி முதுகில் அடித்தும், முடியை இழுத்தும், முன் நெற்றியை சுவரிலே மோத வைத்தும், கால்கள் இரண்டையும் நீட்டவைத்து அவற்றின் மேல் ரூல் தடியை பலங்கொண்ட மட்டும் அழுத்தியும், தாக்குதலுக்கு முன்னாலும், பின்னாலும், "சொல்லுடா ஒன் கூட்டாளி கோபால் கள்ளக்கடத்தல் செய்யுறத சொல்லு, ஒன்ன விட்டுடுறோம்! இல்லன்னா ஊமைக்காயத்தாலயே சாவப் போற" என்று அதட்டிய போதும், அவன் ஊமைபோலவே உதடுகளைக் கடித்துக் கொண்டு ஒன்றும் பேசவில்லை. அவனை அடித்த களைப்புத் தீர, 'டீ' குடித்த போலீஸ்காரர்கள் அவனுக்கும் 'டீ' வாங்கிக் கொடுத்தார்கள். ஆண்டியப்பன் 'டீ' கோப்பையை பணிவாக வாங்கிக் கொள்வதுபோல் வாங்கி, பிறகு அதை வெளியே வீசியெறிந்தான். அந்தக் கோப்பையை, பரமசிவமாக, குமாராக, மாணிக்கமாக, மாசானமாக நினைத்துக் கொண்டு வலது கையை உயர்த்தி, கோப்பையைத் தூக்கி, பின்பு அதை - போலீஸ் சின்னமாக நினைத்துக் கொண்டு அது சின்னாபின்னமாகும்படி வீசியெறிந்தான். அவன் அப்படி வீசும்போது அந்த லாக்கப் அறைக்குள்ளே குடித்தனம் நடத்துவதுபோல் தோன்றிய இரண்டு வாலிபர்களும், ஒரு நடுத்தரத் துண்டு மீசைக்காரரும், அவனைப் பிடித்துக் கொண்டார்கள். போலீஸ்காரர்கள் அடித்துவிடக்கூடாதே என்பதுபோல், அவனை மறைத்துக் கொண்டார்கள். ஒரு லாக்கப் வாசி அவனை தனது சகலையாக நினைத்து உரிமையுடன் அதட்டினான். "அவங்க ஆசையோட வாங்கிக் கொடுக்கிறத இப்படி எறியலாமாடா... இது அவங்களேயே தூக்கி எறியுறது மாதுரி. அவங்க ஒன்ன வீசுனா கேக்குறதுக்கு யார் இருக்காங்க? விடுங்க சார். முட்டாப் பயல் - அனுபவம் இல்லாத பயல். அடுத்த தடவ வரும்போது இப்படிப் பண்ணமாட்டான்." ஆண்டியப்பன் கோபமாக எழுந்து, படுகோபமாக உட்கார்ந்த போலீஸ்காரரைப் பார்த்தான். சக லாக்கப் வாசிகளை கொட்டக் கொட்டப் பார்த்தான். ஒருவன் சிதறிய கோப்பைத் துண்டுகளை பொறுக்கிக் கொண்டிருந்தான். இன்னொருவன் அங்குமிங்குமாகப் பரவிய தேநீர்த் துளிகளை கால்களால் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தான். அவர்களைப் பார்க்கப் பார்க்க ஆண்டியப்பனுக்கு அனுதாபமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்தது. இதற்குள் இன்னும் கோபம் தீராமல் இருப்பதுபோல் தோன்றிய போலீஸ்காரரை, தாஜா செய்யும் நோக்கத்தோடோ என்னவோ, கோப்பைத் துண்டுகளைப் பொறுக்கிய ஆசாமி, "போங்க சார், ஒரு அஞ்சு நிமிடம் லேட்டா வந்திருந்தா நான் சைக்கிள மேட்டுப்பாளையத்துல வித்திருப்பேன். நானும் எத்தனையோ போலீஸ்காரங்கள பாத்திருக்கேன். ஆனால் ஒங்கள மாதுரி கண்குத்தி பாம்ப பாக்கல சார்! நீங்க இங்க இருக்கது வரைக்கும் எங்க தொழிலு உருப்படாது சார்! சைக்கிள அக்குவேறு ஆணிவேறு ஆக்குமுன்னால நீங்க எங்கள அப்டி ஆக்கிடுவிய... இல்லியா மச்சான்... சொல்லுடே..." போலீஸ்காரர், தன் தோள்பட்டை நம்பரை பெருமையோடு பார்த்தபோது, இதுவரை எதுவும் பேசாமல் இருந்த ஆண்டியப்பன் குரல் வெடியாக, குரல்வளையே துப்பாக்கியாக, வாய்வழியாக வார்த்தை ரவைகளை குறி பார்த்துப் போட்டான்: "நீங்கல்லாம் மனுஷங்களா... புண்ணக்குப் பயலுவளா! ஏழைன்னு தெரிஞ்சதும் காரணமில்லாமலே, எப்டி வேணுமுன்னாலும் அடிக்கலாமுன்னு ஆயிப்போன காலத்துல - நாம காரணத்தக் கொடுக்கலாமா? நம்மள மாதுரி ஒரு சில ஏழைங்க, சைக்கிள் திருடுறதுனால பணக்காரங்க கள்ளப் பணத்துல கார் வாங்கி ஓட்டுறது தெரியாமப் போவுது. நாம கோழி திருடுறதுனால, அவங்க தேசத்தையே பட்டப் பகலுல கொள்ளையடிக்கது யார் கண்ணுக்கும் தெரியமாட்டக்கு. நாம லாக்கப்பையே வீடா நினைக்கதுனால, நம்ம குடும்பம் வீட்டையே லாக்கப்பா நினைக்குது. நாமும் மனுஷங்கப்பா! நம்மளயும் எவனும் 'நீ நான்னு' பேசுறதுக்கு உரிமை கிடையாது. நாம அந்த உரிமையை கொடுக்கப்படாது. ஒங்களால ஏழை எளியவங்க எல்லோருக்குமே கெட்ட பேரு. சைக்கிள் கடத்துறதுல காட்டுற சாமர்த்தியத்த, உன் ஊர்லயே மோசடி பண்ணுறவங்கள, கடத்துறதுல காண்பிக்கணும். கத்தரி வச்சு, பாக்கெட்ட வெட்டுறதுல இருக்கிற திறமையை, ஏழபாளைகளோட வயித்துல அடிக்கிறவனோட வயிறு கிழிக்கிறதுல காட்டணும். அநியாயக் காரங்கள எதிர்க்கிறதுல இருக்கிற திருப்தி வேற எதுலயும் இருக்க முடியாது. இன்னைக்கி நாட்ல நடக்கிற அநியாயத்துக்கு நாமளும் காரணம். நம்மளோட சின்னச் சின்ன தப்பால பணக்காரங்களோட பெரிய பெரிய தப்புங்க மறையுது! மறைக்கப்படுது!" போலீஸ்காரர் ஆண்டியை அதிர்ச்சியுடன் பார்த்தார். இவன் நக்ஸலைட்டாக இருப்பானோ? தெலுங்கானாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு தலைமறைவா வந்திருக்கானாமே சுப்பாராவ் - அந்த ராவா இருக்குமோ? இன்ஸ்பெக்டர் வந்ததும் தனது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுபோல், அவர் பயத்துடனும், ஏதோ ஒரு அவார்ட் கிடைக்கப் போகிற திருப்தியுடனும், நெளிந்து கொண்டிருந்த போது, கோணச் சத்திரத்துல, 'டீ சாப்புடுறியாடா' என்று ஆண்டியைக் கேட்ட ஹெட் கான்ஸ்டபிள் அங்கே தோன்றினார். ஆண்டியைப் பார்த்துவிட்டு, "என்ன ஆண்டி இன்னும் வம்பு தும்ப விடலியா" என்றார். "இனுமேத்தான் ஆரம்பிக்கப் போறேன்! நீங்க எப்படி இங்க வந்திய?" "ஒன்னை லாக்கப்புல இருந்து விட்ட மறுநாளே எனக்கு அஸிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டரா புரமோஷன் வந்துட்டு, இங்கதான் டூட்டி." "அப்படின்னா நான் கைராசிக்காரன்னு சொல்லுங்க. எனக்கும் புரமோஷன் வந்துட்டு. முன்னால பட்டிக்காடு டவுனுல லாக்கப்பு. இப்போ ஜில்லா தலைநகர்லேயே லாக்கப் கிடச்சிருக்கு. சீக்கிரமா மெட்ராசுக்கும் புரமோஷன் வந்துடும். இல்லியா ஸார்..." முன்னாளைய ஹெட் கான்ஸ்டபிளும், இன்னாளைய அஸிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டரும் அவனை அதிர்ந்து பார்த்தார். வன்முறையாளன் பிறக்கவில்லை; உருவாக்கப் படுகிறான். அன்றிரவு எல்லோருக்கும் இட்லி வடை கொடுக்கப் பட்டது. ஆண்டியப்பன் தனக்குக் கொடுக்கப்பட்டதை வாங்க மறுத்தான். அஸிஸ்டெண்ட் 'எஸ்.ஐ' எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். லாக்கப் வாசிகள், தங்களுடைய இட்லி வடைகளைக் கூட அவன் வாயில் ஊட்டினார்கள். ஆண்டி உதடுகளைக் குவித்துக் கொண்டான். "என்னை எதுக்காக அடிச்சாங்கன்னு தெரியுமுன்னால, இனிமேல் நான் சாப்பிடப் போறதில்ல" என்று ஆண்டி, அந்தப் பெயருக்கில்லாத தோரணையுடன் சொல்லிவிட்டான். போலீஸ்காரர்கள் உட்பட எல்லோருமே வாயடைத்துப் போனார்கள். மறுநாள் காலையிலும், அவன் 'டீ' குடிக்க மறுத்துவிட்டான். எட்டு மணிக்கு வந்த இன்ஸ்பெக்டரிடம், விவகாரம் சொல்லப்பட்டது. அவர் உள்ளூர அதிர்ந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், "எத்தனை நாளைக்கு இருக்கான்னு பார்ப்போம்! இவனை இப்போ அடக்காட்டால் எப்பவும் அடக்க முடியாது. பயங்கரவாதியாய் மாறுற அறிகுறி முகத்துல நல்லா தெரியுது" என்று போலீஸ்காரர்களிடம் சொல்லிவிட்டு, எங்கேயோ புறப்படப் போனார். குறுக்கே, மாட்டு விவகாரத்தை 'விசாரணை' செய்த மாவட்ட அதிகாரி ஓடிவந்தார். இதே இந்த இன்ஸ்பெக்டரின் அந்தஸ்துள்ள அதிகாரி அவர். இருவரும் ஒரே அந்தஸ்தில் இருந்ததால், யார் யாருக்கு முதலில் 'விஷ்' செய்வது என்ற சீனியாரிட்டிப் பிரச்சினை உள்ளத்தின் 'ஈகோவாக' பல பொது நிகழ்ச்சிகளில் ஒருவரை ஒருவர் 'கண்டுக்காமல்' இருந்திருக்கிறார்கள். இப்போது விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டரை 'கண்டுக்க' வந்துவிட்டார். காலில் விழாத குறையாகக் கேட்டார். "இன்ஸ்பெக்டர் சார்! ஆண்டியப்பன் மேல சார்ஜ்ஷீட் போட்டுட்டிங்களா?" "போடல; இன்னைக்குப் போடப்போறேன். நீங்க சாட்சி சொல்ல வேண்டியதிருக்கும்." "இன்ஸ்பெக்டர் சார்! விவகாரம் வெறும் லா அண்ட் ஆர்டர் இல்ல! கோர்ட்டுக்குப் போனால், எதுக்காக மிரட்டுனான்னு கேள்வி வரும். அந்தக் கேள்வியில் பசுமாடு வரும். கூட்டுறவுச் சங்க விவகாரம், பேப்பர்ல வரும். இப்போ நாறுற நாத்தம் போதாதா? அதனால தயவு செய்து எனக்காக அவனை அரட்டி மிரட்டி விட்டுடுங்க. பாழாப் போற இந்த வேலையிலே சேர்ந்தேன் பாருங்க... ஒங்க வேலை எவ்வளவோ தேவலை." இன்ஸ்பெக்டர் தன் வேலை தேவலை என்பதை அங்கேயே நிரூபிப்பதுபோல் பேசினார்: "நீங்க நினைக்கது மாதிரி விவகாரம் லைட்டா இல்ல. ஊர்ல போய் மிஸ்டர் குமாரை கொலை பண்ணிட்டான்னு வச்சுக்குவோம்; குமாரோட பெண்டாட்டி தாலியறுப்பாளோ என்னவோ - நான் தாலியறுக்க வேண்டியதிருக்கும். இது எக்ஸ்பிளாஸிவ் இஷ்ஷூ! நீங்க தலையிடாமல் இருக்கது பெட்டர்!" "அய்யோ நான் தலையிடாவிட்டால் என் தலை போயிடும் சார்! தயவு செய்து நான் சொல்றதைக் கேளுங்க. நாம ரெண்டுபேரும் கவர்மெண்ட் செர்வண்ட்ஸ். ஒருவருக்கொருவர் அட்ஜெஸ்ட் பண்ணாட்டால் எப்படி சார்?" "எந்தெந்த பன்னிப் பயலுங்க கூட எல்லாம் அட்ஜெஸ்ட் பண்றேன்! ஒங்க கூடவா பண்ணமாட்டேன். இது ஸீரியஸ் கேஸ். அதனாலதான்..." "கோர்ட்ல எல்லாம் அம்பலமாகும். நீங்க பஸ் நிலையத்துல அவன் கையைக் கட்டுனதும் வெளில வரும். ஏற்கெனவே இவனோட ஆட்கள் என்கிட்ட வந்துட்டு எங்க எஸ்.பி.கிட்ட போயிருக்காங்க." "இப்போ என்ன பண்ணலாமுன்னு சொல்றீங்க?" "அவனை விட்டுடுங்க." "சரி. அப்புறம் ஒரு ஹவுஸிங் சொஸைட்டி அமைக்கலாமுன்னு நினைக்கோம்! நாளைக்கு ஒங்க ஆபீசிற்கு வரட்டுமா?" "நோ - நோ - நானே வாரேன்!" விசாரணை அதிகாரி போய்விட்டார். அவரைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டரும், தனது ஜீப்பில் ஏறப்போனார். எஸ்.பி.யிடம் போயிருக்கும் ஆட்களை நோட்டம் விடுவதற்காக. இதற்குள் ஒரு டெலிபோன் 'கால்' வந்தது. இன்ஸ்பெக்டர் அலட்சியமாகப் போனை எடுத்துவிட்டு, முகம் அசிங்கமாகும்படி பேசினார். "சார்... சார்... எஸ் சார்! ஆண்டி சார்! எஸ்டர் டேய் சார்! பஸ் ஸ்டாண்ட் சார்! பிரிவண்டிவ் அரெஸ்ட் சார்! நோ சார்! சார்... சார்... எக்ஸ்யூஸ் மீ சார்! எஸ் சார்! எஸ் சார்!" பேயறைந்தவர் போல் இன்ஸ்பெக்டர் டெலிபோனை வைத்தார். கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். பிறகு ஆண்டியப்பனைப் பார்த்தார். எஸ்.பி.யிடம் பறிகொடுத்த ஆங்காரத்தில் பத்து சதவிகிதம் மீண்டும் வந்தது. "யோவ் ஆண்டி, ஒன்னை விட்டுடுறேன் - இனிமேல் ஒழுங்கா இருப்பியா?" ஆண்டி அமைதியாகப் பதிலளித்தான்: "நீங்க விடவும் வேண்டாம் - நான் ஒழுங்கா இருக்கவும் வேண்டாம்!" "இந்த மாதுரில்லாம் உளறப்படாது! நீ உண்டு; ஒன் வேல உண்டுன்னு இருக்கணும். இல்லன்னா 'பைண்ட் ஓவர்ல' போட்டோமின்னால், வாரத்துக்கு நாலு தடவை கோணச்சத்திரத்தில் போய் போலீஸ் ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட வேண்டியதிருக்கும். இனிமேலாவது பக்குவமாகப் பேசி, பக்குவமா நடந்துக்கோ! சரி, திரும்பிப் பாராமல் ஓடு!" ஆண்டியப்பன் திரும்பிப் பாராமல் பேசினான். பக்குவமாகப் பேசியவரைப் பாராமல் பேசினான்: "நான் இந்த நாட்டோட பிரஜை! வாக்காளர் பட்டியலில் என் பெயர் இருக்கு. நான் தெத்தல! திருடல! கள்ளச்சாராயம் காய்ச்சல! என்னை அப்படியிருந்தும் கையைக் கட்டிக்கொண்டு வந்திங்க! அடி அடின்னு அடிச்சிங்க! மிதி மிதின்னு மிதிச்சிங்க! நியாயத்த கேட்டவனுக்கு அநியாயத்த தந்திங்க! என்னை எதுக்காக அடிச்சிங்கன்னு தெரியுமுன்னால நான் நகரப் போவது இல்ல... தயவு செய்து... நீங்க எதுக்கு எனக்கு தயவு செய்யணும்? என்னை கோர்ட்ல நிறுத்துங்க - பேச வேண்டியதைப் பேசிக்கிறேன்!" "அப்படின்னா நீ..." "போகச் சொன்னாலும் போகப் போறதாய் இல்ல." இப்போதுதான், அவனும் மனிதன் என்பதுபோல் பார்த்த இன்ஸ்பெக்டர் அதிர்ந்து போனார். உடம்பில் வீங்கியிருந்த இடங்களையும், கீறியிருந்த பகுதிகளையும் ஊதிக் கொண்டே - எல்லோரையும், எல்லாவற்றையும் ஊதுகிறவன்போல், ஆண்டியப்பன் அமைதியாக, கால்களை விரித்துப் போட்டு, கைகளைப் பரப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் போகாததால் தானும் போக முடியாமல், இன்ஸ்பெக்டர் அங்கேயே இருந்தார். அவனை, 'தாஜா' செய்தால், கான்ஸ்டபிள்களுக்கு இளக்காரம். அனுப்பி வைக்காமல் போனால், எஸ்.பி. தாளித்துவிடுவார். என்ன செய்யலாம்? இன்ஸ்பெக்டர் யோசித்துக் கொண்டிருந்த போது கையில் ஒரு காகிதத்துடன் உள்ளே நுழைந்த சின்னான், "என்ன சார், எஸ்.பி. சொல்லி ஒன் அவர் ஆகுது. இன்னுமா ஆண்டிய விடல" என்று எரிச்சலோடு கேட்டான். இதுவரை அமைதியாக - அதுவே ஆணவமாகத் தெரியும்படி இருந்த ஆண்டி, சின்னானைப் பார்த்ததும் கண் கலங்கினான். சின்னான் அவனருகே வந்து அவனைத் தூக்கி நிறுத்தி, மார்புடன் அணைத்தபோது, ஆண்டியப்பனால் விம்மாமல் இருக்க முடியவில்லை. "சின்னான், இப்போதான் ஒனக்கு கண்ணு தெரிஞ்சுதா சின்னான். நாம ஒண்ணா சாப்பிட்டு, ஒரே பாயில படுத்து, ஒரு தாய் மகன்க மாதுரி இருந்ததை மறந்துட்டியே, சின்னான் மறந்துட்டியே... நான் என்ன தப்பு பண்ணுனேன் சின்னான்! எல்லாப் பயலுவட்டயும் பேசுற நீ என்கிட்ட பேசாம இருந்தியே! நான் பாவிதான் - ஆனால் நீ பேசக்கூடாத அளவுக்குப் பாவியா சின்னான்... சொல்லு சின்னான்!" சின்னானின் கண்களும் கலங்கின. பாசம் இருவரையும் வேதனைப் பாட்டுடன் தாலாட்டிக் கொண்டிருந்தபோது, புதுவிதமான ஏழையைச் சந்தித்த அதிர்ச்சியில் இருந்து மீளாத இன்ஸ்பெக்டர், சின்னானைத் தனியாகக் கூப்பிட்டு, விவகாரத்தை விளக்கினார். சின்னான் மீண்டும் ஆண்டியிடம் வந்து, அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு காலேஜ் வாத்தியார் மாதிரி பேசினான்: "போலீஸ்காரங்க நம்ம எதிரியில்ல! இன்றைய அசிங்கமான சமூக நிஜத்தின் நிழல்தான் போலீஸ்! நிஜத்த தொட்டால்தான் நிழலுல தெரியும். நிழல பிடிச்சு நிஜத்தப் பிடிக்க முடியாது! சரி புறப்படு!" ஆண்டியும் சின்னானும் வெளியே வந்தார்கள். சின்னான் அவசர அவசரமாகப் பேசினான். "ஆண்டி, நீ மொதல்ல ஊருக்குப் போ! நான் வர்றது வரைக்கும் வாயையும் கையையும் கட்டிக்கிட்டு இருக்கணும். கோபால மதுரையில போலீஸ் புடிச்சு வச்சிருக்காங்களாம். நான் மதுரைக்குப் போயிட்டு அவனைக் கூட்டிக்கிட்டு வாரேன்... சரி சீக்கிரமா போ! இனிமேல் நீதான் சின்னான்... நான் தான் ஆண்டி... மறந்துடாதே?" சின்னான் போய்விட்டான். தனித்து விடப்பட்ட ஆண்டியப்பன், பஸ் நிலையத்திற்கு வந்தான். அங்கே, அவனிடமிருந்து எல்லா வகையிலும் தூரமாய்ப் போன நெருங்கிய உறவினர் ஒருவர், அவனிடம் ஒரு தகவலைச் சொன்னார். "ஆண்டி, ஒன் வீட்ல ஒரே அழுகைச் சத்தமா கேட்டுது. ஒன் தங்கச்சிக்கோ பிள்ளைக்கோ ஜன்னி வந்து உயிருக்கு ஏதோன்னு பேசிக்கிட்டாங்க. அங்கே போட்ட அழுகைச் சத்தம், பரமசிவம் வீட்டு ரேடியோ சத்தத்துல, சரியா காதுல விழல. எதுக்கும் சிக்கிரமா போடே." |