உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
17 ஆண்டியப்பனுக்கு சிந்தனை அனைத்தும் ஒருங்கிணைந்து வீட்டை நோக்கியது 'தங்கச்சிக்கு ஏதாவது ஆகியிருக்குமோ... குழந்தைக்கு ஏதாவது... அடக்கடவுளே, என் தங்கச்சியை நிராதரவாய் விட்டுட்டு வந்துட்டனே... இப்போ என்ன ஆகியிருக்குமோ... கடவுளே, அப்படியே ஏதாவது ஆகியிருந்தால்... அது குழந்தையா இருக்கட்டும். தங்கச்சியாய் இருக்கப்படாது! அய்யோ குழந்தை என்ன பாவம் பண்ணிச்சுது. கடவுளே, யாருமே சாவப்படாது... யாருமே சாவப்படாது...' அவனுக்கு - அங்கேயே தாவி தன் வீட்டில் குதிக்க வேண்டும் போல் தோன்றியது. அங்கேயே செத்து தன் வீட்டில் ஆவியாகப் போய் நிற்க வேண்டும் போல் தோன்றியது. சட்டாம்பட்டியில் உள்ள தன் வீட்டையே தான் விடும் பெருமூச்சால் இழுத்து, அங்கேயே கொண்டு வர வேண்டும் போல் தோன்றியது. உடலெல்லாம் ஒரே அலுப்பாய் மாறியதுபோல் சுருண்டு நின்றான். பிறகு அங்கேயே நின்றுகொண்டு, தன் வீட்டில் இப்போது என்ன நடக்கும் என்பதைப் பார்க்கிறவன் போல், விஸ்வரூபம் எடுத்தவன் போல், எட்டிப் பார்த்தான். இந்நேரம் அங்கே என்ன நடந்திருக்குமோ - எது துவங்கியிருக்குமோ - எது முடிந்திருக்குமோ! இதற்குள், தென்காசி பஸ் உறுமியது. அப்போதுதான் ஆண்டிக்கு சுயநினைவு வந்தது. வீட்டிற்குப் போக வேண்டுமானால், பஸ்சில் ஏறித்தான் போயாக வேண்டும். பறக்க முடியாது. தன்னையறியாமல் சட்டைப் பைக்குள் கைவிட்ட ஆண்டி துணுக்குற்றான். இருந்த ஐந்து ரூபாயில் நான்கு ரூபாயை ஹோட்டல் 'பில்' சாப்பிட்டுவிட்டது. பேச்சுவாக்கில் கோபாலிடம் கேட்க மறந்துவிட்டான். இப்போது என்ன செய்வது? பஸ்சுக்குள் ஏறி கண்டக்டரிடம் நிலைமையைச் சொல்லி கெஞ்சலாமா... உள்ளே இருப்பவர்களிடம் கேட்கலாமா... வேண்டாம். பிறர் வேதனையை, தன் வேதனையாகக் கருதும் காலம் இன்னும் வரவில்லை. எல்லோரும் சிரிப்பார்கள். அதோ ஹோட்டலில் இருந்து போகிறாரே, உறவினர் - அவரிடம் ஓட்டமாய் ஓடிப்போய் கேட்கலாமா... கடனாக ரெண்டு ரூபாய் கேட்கலாமா... வேண்டாம் - வேண்டாம். அடுத்த தெருவில் - அதுவும் பங்காளி வீட்டில் நோயா, நொடியா என்பதையோ, நோயாளி, தாயா பிள்ளையா என்பதையோ தெரிந்து கொள்ள விரும்பாத இவனிடம் காசு வாங்கி, சீக்கிரமாய் வீட்டுக்குப் போறதைவிட, போகாமல் இருப்பதே மேல். அப்படிப் போனால் என் தங்கச்சி ஆன்மா சாந்தியடையாது. அய்யோ! என் தங்கச்சி செத்திருப்பாளோ... தென்காசி பஸ் நகர்ந்து ஓடியது. அதன் பின்னால் ஓடிய ஆண்டியின் கண்களில் புழுதியை வாரி இரைத்துக் கொண்டே அது ஓடியது. அடுத்த பஸ் கண்டக்டர் பனியனுடன் நெளித்துக் கொண்டு நின்ற தோரணையைப் பார்த்தால், இன்னும் அரைமணி நேரம் ஆகும். என்ன செய்யலாம்? ஆண்டியப்பன் அந்த நாற்பது கிலோமீட்டர் தூரத்தையும் காலாலேயே கடப்பது என்று தீர்மானித்தான். ஓட்டமும், நடையுமாகப் போனான். எல்லாம் முடிந்திருக்குமோ என்ற முடிவில்லாத் துயரத்தில் நடந்தான். கண்முன்னால் நடக்கும் அக்கிரமத்தையும், அதன் காரணகர்த்தாக்களையும் ஓட்ட முடியாமல் போனதற்குப் பிராயச்சித்தம் செய்பவன் போல் ஓடினான். எதிரே வரும் பஸ்களும், லாரிகளும் ஒதுங்கட்டும் அல்லது தன்னை ஒழிக்கட்டும் என்பது போலவும், தான் மோதினால் அவைகளால் தாங்க முடியாது என்பது போலவும் அவன் தாவி நடந்தான். என்னதான் ஓடினாலும், என்னதான் நடந்தாலும், உடலமைப்பு என்று ஒன்று இருக்கிறதே... அவனால் ஓட முடியவில்லை. சிறிது இளைப்பாறினான். மாறாந்தை என்ற ஊரைக் கடந்தபோது ஒரு புளிய மரத்திற்கு அருகே சிறிது நின்றான். எதிரே வரும் பஸ்களுக்கு முன்னால் போய் விழலாமா என்பது போலக் கூட நினைத்தான். அந்த மரத்திலேயே துண்டைக் கட்டி, தூக்குப் போட்டுச் சாகலாமா என்பது போலவும் எண்ணினான். பிறகு, மூச்சை இழுத்துப் பிடித்து, நிதானமாக விட விட, அவனுள் ஒரு வைராக்கியம் ஏற்பட்டது. தங்கச்சிக்கு ஏதாவது ஆகியிருந்தால், குறைந்தது இரண்டு பேரையாவது தீர்த்துக் கட்டியாகணும். அவள் மட்டும் இறந்திருந்தால், அவனுக்கு, ஊரே திறந்தவெளிச் சிறைச்சாலையாகிவிடும். அதைவிட, தன் குடிசை வீட்டைவிட, வலுவான சுவர்களைக் கொண்ட, இரும்பு கிராதிக் கதவுகளைக் கொண்ட கட்டடம் எவ்வளவோ மேல். ஆண்டியப்பன் மீண்டும் நடந்தான். கால்களே - பஸ் சக்கரங்களாக, கைகளே - 'ஸ்டேரிங்காக' அவன் தன் உடம்பை ஓட்டிக் கொண்டு, மகாத்மா காந்தி தண்டி யாத்திரையில் நடந்தது போல் நடந்தான். எண்சாண் உடம்புக்குள், எண்ணங்கள் சிறைபட, அந்த எண்ணங்களே உடம்பை யந்திரப் பொறியாக்க, யந்திரம் போல, ஆலங்குளத்தைத் தாண்டி, அத்தியூத்தைக் கடந்து, சாலைப்புதூரை நெருங்கும்போது, பிற்பகல் மூன்றூ மணியாகிவிட்டது. ஊரை நெருங்க நெருங்க அவனை உள்ளம் நெருக்கிக் கொண்டே இருந்தது. இதற்குள் தென்காசியில் இருந்து நெல்லை நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஒரு பஸ்சில் இருந்து, 'ஆண்டி ஆண்டி' என்று சத்தம் கேட்டது. உலகில் தன்னைக் கூப்பிட யாரும் கிடையாது என்பது போல, வேறு யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று நினைத்தவனாக, அவன் நடந்து கொண்டிருந்த போது, இரண்டு பேர் மூச்சிரைக்க ஓடிவந்து, அவன் தோளைப் பிடித்தார்கள். ஆண்டி நிமிர்ந்து பார்த்தான். ஒருவன் சேரிவாசி கோவிந்தன். இன்னொருவன், அவனுடன் மரம் வெட்டும் மாடசாமி. இருவர் கண்களிலும் சோகம் மண்டி, சாம்பல் நிறம் பூத்திருந்தது. ஆளை எரித்தால் கிடைக்கும் அஸ்தியைப் போல ஆண்டியப்பன், அவர்களைப் பார்த்தவுடன், அவர்கள்தானா என்று நிச்சயப்படுத்திக் கொள்பவன் போல் சிறிது உற்று நோக்கிவிட்டு, பிறகு படபடப்பாக "யாருக்கும் எதுவும் இல்லியே" என்று சொல்லிவிட்டு வெறித்துப் பார்த்தான். மாடசாமி இழுத்தான். "அப்படில்லாம் ஒண்ணுமில்ல..." "ஒங்களுக்குக் கோடி புண்ணியம்... சொல்லுங்கப்பா - காலுல வேணுமுன்னாலும் விழுறேன்; உயிருக்கு ஏதாவது..." "உயிருக்கு ஒண்ணும் இல்ல; அப்படியே ஆனால்தான் என்ன செய்ய முடியும்." "தங்கச்சிக்கா... இல்ல..." "மீனாட்சிக்குத்தான்! பிழைச்சிக்கிடுவாள். சரி. பஸ் வருது ஏறு!" பஸ்சில், அவர்கள் ஆண்டியப்பனிடம், ஊரில் நடந்ததை விளக்கினார்கள். மீனாட்சியைப் பற்றி மட்டும் விளக்கமாகச் சொல்லாமல், மற்றவற்றை விளக்கமாகச் சொன்னார்கள். ஆண்டியப்பன், மாடசாமியையும், கோவிந்தனையும் பார்த்த பத்து நிமிடத்திற்குள்ளேயே புரிந்து கொண்டான். என்றாலும், அவர்கள் வாயால் அவன் கேட்கக் கொதிக்கும் அந்த வார்த்தையை வரவழைக்க விரும்பவில்லை. உண்மையை எதிர்நோக்கப் பயம்! தங்கை உயிருடன் இருந்தாலும் இருக்கலாம் என்கிற நப்பாசை! ஊர் போய்ச் சேரும் வரைக்காவது, அவள் உயிரோடு இருப்பதாக நினைக்கத் தூண்டிய வினோதமான எண்ணம்! அந்த மூவரும் கோணச்சத்திரத்தில் இருந்து, சட்டாம்பட்டியை நோக்கி நடந்தார்கள். ஊருக்குள் வந்ததும், ஊரில் பெரும்பகுதியினர், தாங்கள் கையெழுத்துப் போட்டதால் தான் ஆண்டியப்பன் விடுதலையானான் என்ற பெருமிதத்தோடு, அவனைப் பார்த்தார்கள். அந்தப் பெருமிதம் கொடுத்த நெருக்கத்தில், அவன் வீட்டில் நடக்கும் சோகம், தத்தம் வீடுகளில் நடப்பது போலவும் நினைத்தார்கள். தெருக்களில் நின்றவர்கள் அனைவரும், அவன் பின்னால் நடந்தார்கள். ஊருக்குள் வந்தவுடன், ஆண்டியப்பனிடம் மீனாட்சி இறந்ததைப் பற்றி, யாரும் சொல்லவேண்டிய அவசியமில்லை. நாவிதர் ஊதிய இழவுச்சங்கின் ஒலி, அவன் காதுகளுக்குள் ஓலமிட்டது. பெண்களின் அழுகைக் குரல், மரங்களிலும் மண்சுவர்களிலும் இருந்த பறவைகளை சிலிர்க்க வைத்தது. டீ கடைகளில், வழக்கமான வாடிக்கைச் சிரிப்பு இல்லை. ஒவ்வொருவர் முகத்திலும் எள் விதைத்தது போன்ற விரக்தி. அவன் சோகத்திற்கும், மீனாட்சியின் மரணத்திற்கும் தாங்களே காரணம் என்பது போன்ற ஒருவித குற்றவுணர்வு. ஒரு வயோதிகரால் தாள முடியவில்லை. ஆண்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டே, "பாவிப் பயலே, ஒரு அற்ப மாட்டுக்காவ, ஆசத் தங்கசியை பறிகொடுத்திட்டியடா" என்றார். "அற்ப மாட்டால இல்ல மாமா! அற்பப் பயலுவளால அவள் அற்பாயுசுல போயிட்டாள். இனும எதுக்காவ மறச்சிப் பேசணும்" என்றார், அவனை எதிர்நோக்கி வந்த இடும்பன். ஆண்டிக்கு - ஊரின் புதிய போக்கு தோன்றவில்லை. தனக்குப் பின்னால் தோன்றி, முன்னால் போய்விட்ட தங்கையை நினைத்துக் கொண்டே, அவன் ஓடினான். மீனாட்சி, வீட்டு வாசலுக்கு மேல் ஆகாயத்தில் நின்று கொண்டு அவனை, 'அண்ணாச்சி - அண்ணாச்சி' என்று சொல்வது போன்ற பிரமை. தான் காண்பதும், கேட்பதும் கனவு என்பது போலவும், இப்போது அந்தக் கனவு முடியப் போகிறது என்பது போலவும், அருமை உடன்பிறப்பு அருகாமையில் பாயில் படுத்துத் தூங்குவது போன்றும் ஒரு பாசாங்கு எண்ணம். நடந்ததை நிராகரிப்பவன் போல அவன் வீட்டு முகப்புக்குள், கண்கொள்ளாக் கூட்டத்தினுள்ளே ஊடுருவிப் போனபோது - மீனாட்சி குளிப்பாட்டப்பட்டு, புதுச்சேலை கட்டப்பட்டு, நெற்றியில் திலகமிடப்பட்டு, வெளித் திண்ணையில் ஒரு மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்தாள். சுற்றிலும் பெண்கள் கூட்டம். மாரடித்து அழும் பெண்கள், தலையில் அடித்துக் கொள்ளும் தாய்மார்கள். "கட்டையில போற பயலுவளால நீ கட்டையாய் போயிட்டியே என் மொவளே" என்ற ஒப்பாரி. "அநியாயக்காரப் பாவியளால, நீ அநியாயமாய் போயிட்டியே" என்ற தாய்மார்களின் கேவல்கள். தங்கம்மா, சத்தம் போடத் திராணி இல்லாமல், அண்ணியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அம்மா, ஆண்டியப்பனைப் பார்த்ததும், அவன் தன்னை வெளியே போகச் சொல்லுவான் என்று நினைத்தவள் போல் வெளியேறிக் கொண்டிருந்தாள். அழுது விட்டு ஓய்ந்திருந்த காத்தாயி, ஆண்டியைப் பார்த்ததும் அழுது புரண்டாள். "நான் பாவிய்யா, பாவி... மேளத்துக்குப் போன என் புருஷனை சாராயம் குடிச்சிட்டு போலீஸ் பிடிச்சிக்கிட்டுப் போனதா இந்த மாசானம் நொறுங்குவான் சொன்னான். நான் அறிவுகெட்ட ஜடம்! புத்திகெட்ட பொம்புளை - புருஷனைத் தேடி போலீஸ் ஸ்டேஷன் - ஸ்டேஷனாய் தேடி அலைஞ்சேன். நேற்று ராத்திரி வரல. என் ராசாத்தி மார்புல வலி தாங்க முடியலன்னு சொல்லிச் சொல்லி அழுதது. அவளை நான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போறதாய் ஏற்பாடு. இதைத் தெரிஞ்சிக்கிட்டு அந்த மாசானம் நொறுங்குவான் வீண் புரளியாக கிளப்பிட்டான். இதனால என் ராசாத்தி போயிட்டாள். எம்மா என் ராசாத்தி, இன்னா... ஒன் அண்ணாச்சி வந்திருக்கார். ஒன்னை பார்வைக்குப் பார்வை பார்க்கிற, பேச்சுக்குப் பேச்சுப் பேசுற, ஒன் செல்ல அண்ணாச்சி வந்திருக்கார் பாரும்மா - கண்ணைத் திறந்து பாரும்மா... ஒரு தடவையாவது பாரும்மா. என் ராசாத்தியே! என் தங்கமே! பார்க்க மாட்டியா? ஒன்னைத் தாய்க்குத் தாயா வளத்த அண்ணாச்சிய பாக்க மாட்டியாம்மா - பாருடி என் ராசாத்தி!" காத்தாயியின் புலம்பலால், எல்லாப் பெண்களும் கூப்பாடு போட்டார்கள். தங்கம்மா என்ன செய்கிறோம் என்பது புரியாமலே ஆண்டியப்பனின் கழுத்தில் கை கோர்த்துக் கொண்டு அழுதாள். பிறகு அவன் தோளிலேயே மயங்கி விழுந்தாள். நான்கைந்து பெண்கள் அவளைத் தாங்கிப் பிடித்து முந்தானைச் சேலைகளால் முகத்தில் வீசினார்கள். ஆண்டியப்பனுக்கு யார் பேச்சும் கேட்கவில்லை. எந்த உருவமும் தெரியவில்லை. மூலையில் மூலையாய், கண் மூடித் தூங்குபவன் போல், 'வந்திட்டியா அண்ணாச்சி' என்று கேட்பதுபோல் உதடுகள் பிரிந்திருக்க, 'சாப்பாடு போடுறேன் வா' என்று சொல்லி எழுந்திருக்கப் போகிறவள் போல், வலது கை தரையில் ஊன்றப்பட்டிருப்பது போன்ற லாவகத்துடன், 'எனக்கு நல்ல மருந்தா கிடச்சுட்டுது; இனிமேல் மார்புல வலிக்காது அண்ணாச்சி' என்று இடது கையை, உள்ளங்கை தெரியும்படி அபிநயமாய் காட்டுபவள் போல் தோன்றிய தங்கையையே வெறித்துப் பார்த்தான். அப்போதுதான் பிறந்த குழந்தை போலவும், படிப்படியாக வளர்வது தெரியாமல் வளர்ந்த சிறுமி போலவும், இளம்பெண் போலவும், தான் பார்த்த பல உருவங்கள் கொண்ட, தன் ஒரே ஒரு தங்கையைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு பாளை அரிவாள் இருக்கும் இடம் நினைவுக்கு வந்தது. கைகளை நெறித்துக் கொண்டு, கன்னக்கதுப்பின் உட்புறங்களைக் கடித்துக் கொண்டு, அவன் கரங்கள் துடித்தபோது - இரண்டு போலீஸ்காரர்கள் கிராம முன்சீப்பான மல்லிகாவின் தந்தையோடு உள்ளே வந்தார்கள். பழைய சப்-இன்ஸ்பெக்டர், "இது தற்கொலை கேசுன்னு - ரிப்போர்ட் வந்திருக்கு. பிணத்த பரிசோதனை பண்ணணும். ஆஸ்பத்திரிக்கு தூக்குங்கய்யா" என்று அதட்டினார். கிராம முன்சீப் கம்பீரமாகத் தலையாட்டினார். அவ்வளவுதான்! இழவுக்கு வந்த கூட்டம் தினவெடுத்து நின்றதுபோல் சிலிர்த்து எழுந்தது. "என்னடா நினைச்சிக்கிட்டிங்க... ஆம்புளைங்கன்னா பிணத்த தூக்குங்கடா பார்க்கலாம்! கொடுமைக்கும் ஒரு அளவு வேணுமுய்யா! பிணத்துக்கிட்ட போங்க பார்க்கலாம்! ஒங்க காக்கிச் சட்டைய கழத்தாட்டா என்னென்னு கேளுங்க..." "போலீஸ்காரங்க என்னடா பண்ணுவாங்க... எல்லாம் இந்த முன்சீப் பாவியால வந்தது. தேவடியாமவனுக்கு இன்னொரு பாடை கட்டுங்கடா..." |